ஜெர்மனி நாட்டில் மலங்கரை கத்தோலிக்க மக்கள்
ஜெர்மனி நாட்டில் மலங்கரை மக்கள்
பத்து மறை மாவட்டங்களால் பாரெங்கும் பரந்து விரிந்து நிற்கும்
மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை மக்கள் விசுவாச வாழ்விலும், ஆன்மீக வாழ்விலும் சிறந்து விளங்குகின்றனர் என்பது பல்வேறு விதங்களில்
வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய முறையில் எல்வாறு மலங்கரை கத்தோலிக்க
மக்கள் நம் நாட்டு கலாச்சாரத்தை விட்டு வெளிநாட்டு மக்களிடையே அந்நிய
கலாச்சாரத்திற்கு மத்தியில் நம் விசுவாச ஆராதனை வாழ்வை வாழ்ந்து காட்டுகிறார்கள்
என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவ்வாறு பிற மொழி கலாச்சாரம் கொண்ட ஜெர்மனி
நாட்டில் நமது மலங்கரை கத்தோலிக்க மக்கள் எவ்வாறு விசுவாச வாழ்வை வாழ்ந்து
காட்டுகிறார்கள் என்பதையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் சற்று உங்கள் முன்
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1960-ஆம் ஆண்டில் உலக நற்கருணை தினம்
ஜெர்மனி நாட்டில் வைத்து கொண்டாடப்பட்ட போது குரு மாணவர்களை பயிற்சி பெற
அனுப்பவும், பல ஜெர்மானிய ஆயர்களோடு உறவு மேம்படவும் நமது
மலங்கரை கத்தோலிக்க ஆயர்களுக்கு
வாய்ப்புகள் பெற்றுக்கொண்டனர். இவ்வாறு திருவனந்தபுரம் மற்றும் திருவல்லா
மறை மாவட்டங்களிலிருந்து குரு மாணவர்களை அனுப்ப ஜெர்மனி நாட்டுக்கு பயிற்சிக்காக
அனுப்பத் தொடங்கினர். இறையியல் கற்பதற்காக
கோனிக்ஸ்டைன் என்ற இடத்திற்கு வந்த குரு மாணவர்களால் தான் மலங்கரை
கத்தோலிக்க மக்களின் பிரசன்னம் ஜெர்மனியில் ஆரம்பமானது.
திருவல்லா மறை மாவட்ட மல்லப்பள்ளியை
சார்ந்த லீலாம்மா என்பவர் தான் ஜெர்மனி வந்த முதல் மலங்கரை கத்தோலிக்க விசுவாசி.
1962-ல் வந்த அவர் இரண்டே வருடத்தில் இங்கே இறையடி சேர்ந்தார். 1963-ம் ஆண்டில்
தோமஸ் இலவுங்கல் மற்றும் தொடர்ந்து ஜோசப்தடத்தில், தோமஸ்
படியங்குளம், ஜோண் வர்கீஸ் ஈஸ்வரன்குடியில், மாத்யூ கறவாட்டு ஆகியோர் இறையியல் கற்பதற்காக திருவனந்தபுரம் மற்றும் திருவல்லா
மறைமாவட்டங்களிலிருந்து வந்தனர்.
இவ்வேளையில் பேராயர் மார் கிரிகோரியோஸ்
மற்றும் ஆயர் மார் அத்தனாசியோஸ் ஆகியோர் வத்திக்கான் திருச்சங்கத்தில் கலந்து
கொண்ட போது மேலும் பல ஜெர்மன் நாட்டு ஆயர்களையும் குருக்களையும் சந்திக்க
நேர்ந்தது. அவர்களது தனிப்பட்ட
அழைப்புக்கேற்ப நமது ஆயர்கள் பல ஜெர்மன் நாட்டு மறைமாவட்ட பங்குகளை
சந்தித்தனர்.
பேராயரின் இந்த உறவின் வாயிலாக ஏறக்குறைய
500 நபர்கள் ஜெர்மன் நாட்டு முதியோர் இல்லத்தில் பணிபுரிவதற்காக "முதியோர்
பராமரிப்பு" பயிற்சியைப் பெற வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ஐந்நூறு நபர்களை
தேர்ந்தெடுத்து அவர்களுக்கான தயாரிப்பு முகாம் இந்தியாவிலே நடத்தப்பட்ட பின்னர் பல
குழுக்களாக ஜெர்மனியில் பதினைந்து இடங்களுக்கு மேற்படிப்பு படிக்க
அனுப்பப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பலர்
தங்கள் சொந்த முயற்சியால் செவிலியர் படிப்பிற்காக சொந்த செலவில் ஜெர்மனி
வந்தனர். இவ்வாறு வந்த மலங்கரை மக்கள்
உடல், உள்ள, கலாச்சார, மொழி, உணவு, தனிமை போன்ற
பல்வேறு சவால்களை சந்திக்க நேர்ந்தது.
நம் இந்திய நாட்டு சமூக கலாச்சாரம்
போலன்றி ஜெர்மானியர்கள் தனிநபர் சுதந்திர கலாச்சாரத்தோடு வாழ்கின்றனர். ஜெர்மானிய
மொழி கற்பதற்கு எளிய மொழியன்று. ஆனால்
ஜெர்மானியர்கள் தங்கள் மொழியை பிறர் படிப்பதை அதிகமாக விரும்புகின்றனர். எனவே
ஆரம்ப காலங்களில் பிழையோடு குறைவாகப் பேசினாலும் நம் இயலாமையை புரிந்து கொண்டு
நம்மை கேலி செய்யாமல் நீ நன்றாகப் பேசுகிறாய் என உற்சாகப்படுத்துவார்கள்.
ஜெர்மனி நாட்டின் காலநிலை மிகப்பெரிய
சவாலாகும். நமது நாட்டு தட்பவெப்ப நிலைக்கேற்ப நம் உடல் கட்டமைப்பு உள்ள போது, குளிர்ந்த கால நிலையை தாங்கும் உடல் நிலை நம்மில் பலர்க்கும்
இருப்பதில்லை. காய்ச்சல், ஒவ்வாமை, இருமல்,
சளி, ஜலதோஷம் போன்ற நோய்களால் அவதிப்படுவோர்
ஏராளம். உறவினர்கள் அருகில் இல்லாததால்
உண்டு பேசி, மகிழ வாய்ப்பு இல்லாமல் தனிமையில் அவதிப்படுவோர்
பலர். இதைப் போன்றே அன்றாட வாழ்க்கைச்
செலவு மிக அதிகம். ஒரு யூரோவுக்கு 70 ரூபாய் என கணக்கிடும் போது இரயிலில் 100 கி:
மீ பயணம் செய்ய 1500 ரூபாய் ஆகும். ஆன்மீக
வாழ்விலும் சவால்கள் ஏராளம் உள்ளன. நம் நாட்டு குருக்கள் அல்லது கன்னியர்கள்
பக்கத்தில் வாழ்வது இல்லை தொலைதூரங்களில் வாழ்ந்து வருகின்றர். மலங்கரை மக்களும்
தங்கள் வேலைக்கேற்ப தொலை தூரங்களில் தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.
சோதனைகள் நிறைந்த இக்காலத்தில் சமூக ஆர்வலர்கள் பலர் இவர்களை பெரிதும் மன
அளவில் வலுப்படுத்தினர். மனம் சோர்வடைந்து தனிமையில் வாடிய இம்மக்களை
திருச்சங்கங்களில் கலந்து கொள்ள ரோமாபுரி வந்த நம் நாட்டு ஆயர்கள் பலர் சந்தித்து
ஆறுதல் வார்த்தைகள கூறி ஊக்கமூட்டினர். ஆயர் மார் அத்தனாசியோல் ஆவர்கள் அனைத்து
நபர்களையும் ஒல்வொரு குழுவாக சந்தித்து நற்கருணை ஒப்புக் கொடுத்து விசுவாச
வாழ்வில் வலுப்படுத்தியதை இன்றும் நன்றியோடு இம்மக்கள் நினைவு கூர்கின்றனர். அக்காலத்தில் ரோமாபுரியில் படித்து வந்த
குருக்கள் இம்மக்களுக்கு அருளடையாள வாழ்வில் வாழ, குறிப்பாக
தங்கள் தாய் மொழியிலேயே ஒப்புரவு அருளடையாளத்தை பெறவும் உதவினர். அவர்களுள் நம்
மறைமாவட்ட முதல் ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்களை இம்மக்கள் பெரிதும் நன்றியோடு
இப்போதும் நினைவு கூருகின்றனர்.
இவ்வாறு குழுவாக வாழ்ந்த இவர்கள் பல
இடங்களிலாக வேலை பெற்று சிதறி வாழத் தொடங்கினர். பலர் இறையடி சேர்ந்ததையும்
கண்ணீரோடு நினைவு கூருகின்றனர். "முதியோர் பராமரிப்பு" பயிற்சியை
முடித்த பின்னர் பல்வேறு காரணங்களால் சிலர் தாய் நாடு திரும்பினர். ஒரு சிலர் அமெரிக்கா
சென்றனர். பலர் ஜெர்மன் நாட்டிலேயே தங்கள் பயிற்சிக்கேற்ற வேலைகளை கண்டுபிடித்து
தங்கள் வாழ்வைத் தொடர்ந்தனர். இத்தகையோர் திருமணம் வாயிலாக புது குடும்பவாழ்வை
ஏற்படுத்தினர். பல குடும்பங்களும் இரு நாடுகளிலாக கண்ணீரும் கவலையுமாக வாழ்ந்து
வந்தனர். எனினும் இவர்கள் தொடர்ந்து
விசுவாச வாழ்வில சிறந்தே விளங்கினர்.
பின்னர் பெதனி துறவற
சபையை சார்ந்த அருட்கன்னியர்களும், மேரி மக்கள் கன்னியர்
சபையை சார்ந்த அருட்கன்னியர்களும், மற்றும் பல துறவற
அருட்கன்னியர்கள் இங்கே வந்து முதியோர் பராமரிப்பு பயிற்சி பெற்று முதியோர்
இல்லங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இத்தகையோருள் டோர்ட்டுமுண்டு டேர்ணே
என்ற பகுதியில் வாழும் மரியாவின் புதல்வியர் (DM) சபையின் அருட்கன்னியர்களின் வருகை
குறிப்பிடத்தக்கது.
டோர்ட்டுமுண்டு என்பது ஜெர்மனியின்
பெரிய நகரங்களில் ஒன்றாகும். டேர்ணே என்பது டோர்ட்டுமுண்டு நகரத்தின் வடக்குப்
பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரப் பகுதியாகும். இப்பகுதியில் முற்காலத்தில் புனித
சூசை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பின்னர் இது புனித சூசை முதியோர் இல்லமாக
மாற்றப்பட்டது. பிரான்சிஸ்கு சபை துறவியர்கள் 1974 வரை இந்நிறுவனத்தை கவனித்து
வந்தனர். பின்னர் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் வரை துறவியர்கள் இல்லாமலேயே
செயல்பட்டு வந்தது. இக்காலத்தில் அருட்கன்னியர்களின் சேவைகளைப் பற்றிய தேவை
கட்டாயமான ஒன்றாக நிர்வாகிகளின் மனத்தில்
நிலைத்து நின்றது.
1992 ஆம் ஆண்டு அருட்பணியாளர் பீட்டர்
அவர்கள் மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயரான சிறில் மார் பசேலியோஸ்
அவர்களிடம் புனித சூசை முதியோர் இல்லத்தில் அருட்கன்னியர்களின் சேவைகளின் தேவை
பற்றி எடுத்தியம்பினார். இவ்வாறு ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க 1993 ஆம் ஆண்டு
செப்டம்பர் 30 ஆம் நாளில் Sr.
Nirmala, Sr.Grace, Sr.Kusumam, Sr. Mary Paul, Sr. Evangelin Francis ஆகிய ஐந்து பேர்களும் ஜெர்மனி நாட்டுக்கு பயணமாகினர். அன்று முதல் இன்று
வரை 25 ஆண்டுகளாக மரியாவின் புதல்வியர்கள் சபை (DM) டேர்ணே
மற்றும் பல பகுதிகளில் பணி புரிந்து வருகின்றனர்.
தாங்கள் பணிபுரியும் முதியோர்
இல்லத்தில் மட்டுமன்றி மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இவர்களது பணி
நினைவுகூரப்பட வேண்டியதாகும். முதியோர் இல்லப் பணிகளுக்குப் பின்னர்
டோர்ட்டுமுண்டில் நடைபெறும் மலங்கரை திருப்பலிக்கு சென்று அதன் ஆயத்தப் பணிகளை
செய்து வருகின்றனர். மறு ஒன்றிப்பு விழா, மார் இவானியோஸ் விழாக்கள் நடைபெறும் போது
தொடர்வண்டியில் நெடுந்தூர பயணம் மேற்கொண்டு மலங்கரை மக்களின் ஒன்றிப்பில் இணைந்து
செயல்படுகின்றனர்.
அன்றாட
வேளைச்செபங்களும் குருக்களின் வருகைக்கேற்ப திருப்பலியும் முக்கிய திருவிழாக்களும்
மலங்கரை வழிபாட்டு முறையிலேயே நடைபெற்று வருகின்றன. மலங்கரை ஆயர்களுள்
டேர்ணே கன்னியர் மடத்திற்கு வராதவர்கள் இல்லை எனவே கூறலாம். மலங்கரையின்
குருக்களும் டேர்ணே கன்னியர்களுக்கு தேவைக்கேற்ப ஆன்மீகத் தேவைகளை பூர்த்தி செய்து
வருகின்றனர்.
அனைவரும் இக்கன்னியர்களைப் பற்றிக்
கூறும் ஒரே வார்த்தை என்னவென்றால் „டேர்ணே சிஸ்டேர்ஸ் நல்ல
சிஸ்டேர்ஸ்“.
அன்போடு பேசும் இக்கன்னியர்களை புகழ்ந்து பேசாதவர்கள் இல்லை.
இக்கன்னியர்களின் அன்பும், விருந்து உபசரிப்பும் தானாகவே அனைவரையும் இவர்களை புகழத் தூண்டும். தம் சொந்த கலாச்சாரத்தை மறக்காமல் ஆண்டுதோறும் தங்கள் ஓணப்பண்டிகையை பழமைக்கு
மாற்றம் ஏற்படாதவாறு நணபர்களோடு இணைந்து உண்டு கொண்டாடுவதும் மிகவும் பெருமையான
ஒன்றாகும்.
மார்த்தாண்டம் புனித
சூசை மாகாணத்தைச் சார்ந்த மரியாவின் புதல்வியர் சபையைச் சார்ந்த அருட்கன்னியர்கள்
இரண்டு கன்னியர் மடங்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாண்டு ஜூபிலி விழா
காணும் டேர்ணேயில் Sr. Sibia, Sr. Sherly Sam, Sr. Naveena Rose,
Sr. Alphy Rose, Sr.pavithra Therese ஆகிய ஐந்து பேர்களும்
ஜெர்மனியில் தென்பகுதியில் உள்ள ஓபர்ஸ்டவுபனில் Sr.Evangelin, Sr.Vinaya ஆகியோரும் உள்ளனர்.
1980-ம் ஆண்டுகளில்
மலங்கரை மக்களை ஒருங்கிணைக்க அவை ஒன்று அமைக்கப்பட்டு
இரண்டு இடங்களில் வழிபாட்டு முறைகள் நடத்தப்பட்டு வந்தன. இன்று படிப்படியாக
ஒருங்கிணைப்பாளராக தந்தை. ஜாண் வர்கீஸ் ஈஸ்வரன்குடியில் நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து பெதனி துறவற சமூக தந்தையர்கள் இவர்களை வழிநடத்தினர்.
இவர்களுள் தந்தை விஜயானந்த அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
பின்னர் அப்போஸ்தோலிக
சந்திப்பாளர்களாக தற்போதைய உயர் பேராயர் மார் கிளீமிஸ், தற்போதைய பத்தேரி ஆயரான ஜோசப் மார் தோமஸ்,
அமெரிக்க மறை மாவட்ட ஆயரான மார் எவுசேபியோஸ் ஆகியோர் பணியாற்றினர்.
தற்போது ஆயர் யூஹானோன் மார் தியோடோசியஸ் ஜெர்மனி மலங்கரை மக்களின் திருத்தூதுவ
சந்திப்பாளராக திகழ்கிறார்.
இங்கு
வாழும் அனைவரும் மலையாள மொழியை தாய்மொழயாக கொண்டமையால் மலங்கரை வழிபாட்டுமுறைகள்
அனைத்தும் மலையாள மொழியிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. ஆறு பணித் தளங்களிலாக
மாதத்திற்கு ஒரு முறை திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய திருவிழாக்களின்
வழிபாட்டு நிகழ்வுகளில் கத்தோலிக்கர் மற்றும் கத்தோலிக்கரல்லாத மக்களும்
பங்கேற்கின்றனர். வருடத்திற்கு ஒரு முறை மறுஒன்றிப்பு
விழாவானது ஒரு ஆயரின் தலைமையில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.
வழிபாட்டுமுறைகள் நடத்தப்படும்
இடங்கள்: பிராங்பர்ட்டு, கொலோன்,
கிரேபெல்டு, டோர்ட்டுமுண்டு, ஸ்டுட்கார்ட்டு போன்ற இடங்களாகும். கொலோனில்
எழுபது குடும்பங்களும், ஃப்ராங்பர்ட்டில் எழுபது
குடும்பங்களும், ஸ்டுட்கார்ட்டில் ஐம்பது குடும்பங்களும்,
டோர்ட்டுமுண்டில் ஐம்பது
குடும்பங்களும், கிரேபெல்டில் அறுபது குடும்பங்களும் உள்ளன. திருப்பலி முடிந்த பின்
அனைவரும் ஒன்றாக கூடி பேசி தேநீர் அருந்திய பின் மட்டுமே செல்கின்றனர். இவர்களிது
வீடுகளில் மாதத்திற்கு ஒரு முறை அருள் வாழ்விய கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 2005-ம் ஆண்டில் 23 உறுப்பினர்கள் கொண்ட Pastoral
Council நிறுவப்பட்டது.
மார்த்தாண்டம்
மறைமாவட்டத்தை சார்ந்த இரண்டு அருட்தந்தையர்கள் இங்கே மேய்ப்புப் பணி செய்து
வருகின்றனர். மொத்தம் பல்வேறு மறை மாவட்டங்களிலாக 18 அருட்தந்தையர்களும்,
12 பெதனி துறவற சபையைச் சார்ந்த அருட்தந்தையர்களும் ஜெர்மன் நாட்டு
ஆலயங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த மக்கள் ஜெர்மனி
நாட்டு முறைப்படி இங்கே பணிபுரியவும் தங்கள் குடும்பங்களுக்கும் திருச்சபைக்கும்
உதவிகள் பல புரிந்தும் வருகின்றனர். இவர்கள் மேற்கொள்ளும் சவால்கள் ஏராளம்.
திருச்சபையின் வளர்ச்சி என்பதை புதுப்புது இடங்களில் பணித்தளங்கள் உருவாவதைக்
கொண்டும் வெளிநாட்டு புதுப் பணித்தளைங்களைக் கொண்டும் கணக்கிட்டு ஒவ்வொருவரும்
மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் மகன் அல்லது மகள் என்பதை எண்ணி பெருமிதம்
அடைகின்றோம். ஆனால் ஒவ்வொரு பணித்தளங்களும் உருவாக்கப்பட்ட பின்னணியை வருங்காலத்
தலைமுறையினர் மறந்தே விடுகின்றனர்.
இதன் உருவாதலுக்கு அயராது உழைத்த
இறைமக்கள் ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைவுகூர வேண்டியது நம் கடமையாகும்.
திருச்சபை என்பது கிறிஸ்துவை வாழ்க்கை நெறியாய் கொண்டு வாழும் விசுவாசிகளின்
கூட்டமைப்பு ஆகும். எனவே இறைமக்கள் என்ற உணர்வோடு அனைவரையும் நினைவு கூர்ந்து வாழ
முற்படுவோம்.
மரிய
ஜாண்
Comments
Post a Comment