திருச்சிலுவைப்பாதை (By: Fr. மரிய ஜாண்)
திருச்சிலுவைப்பாதை
பீடத்தின் முன்
ஆண்டவரே அருள் செய்தருளும்
உம் திருப்பாடின் பா-தையிலே
எங்கள் வாழ்வின் துயர்களையும்
தாங்கிடும் வரமருளெங்-கட்-காய்
இறைவா
கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா
தயை செய்வீ- ரன்பால்
சிலுவை வழியே மானிடரும்
மீட்பைத் தம்பால் கொண்டனரே
வாழ்வின் முன்னே உமைக்கண்டு
உன்னடி தொடர வர - மருளும்.
இறைவா
கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா
தயை செய்வீரன்பால்
இறைவார்த்தைப் பகுதி (ச.உ 3: 1 – 8, 11)
வழிநடத்துபவர்
: சபை உரையாளர் நூலிலிருந்து.
அனைவரும்
: ஞானியரின் கடவுளுக்குப் புகழ் அவரது அருள்வரங்கள் என்றென்றும் நம்மோடு
இருப்பதாக.
ஒவ்வொன்றுக்கும்
ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு.
பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு
ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்;
கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம்; இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்;
அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்;
துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி
மகிழ்தலுக்கு ஒரு காலம்; கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம்,
அரவணையாதிருக்க ஒரு காலம்; தேடிச்
சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம், தூக்கியெறிய ஒரு காலம்; கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம்,
பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; அன்புக்கு ஒரு
காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு
ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம். கடவுள் ஒவ்வொன்றையும்
அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய
உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள்
தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.
உத்தம
மனஸ்தாப செபம்
எல்லாவற்றையும்
விட அன்பிற்கு தகுதியுடையவராகிய என் இறைவா, உமக்கு எதிராக நான்
பாவம் செய்ததால் துக்கப்படுகிறேன். நான் உம்மை அன்பு செய்கிறேன், எனது பாவங்களால் எனது ஆன்மாவை நான் களங்கப்படுத்தியதாலும் விண்ணகப்
பேரின்பத்தை இழந்து நரகத்திற்கு தகுதியுடையவனாதலாலும் நான் வேதனைப்படுகிறேன். உமது
அருள்வரத்தின் உதவியால் இனிமேல் பாவம் செய்யமாட்டேன் என்று தீர்மானித்து பாவச்
சூழ்நிலைகளை விட்டுவிடுகிறேன். இன்னும் ஏதாவது பாவங்களை செய்வதற்கு முன்னால்
இறந்து விட தயாராயிருக்கிறேன். என்னை ஆசீர்வதித்தருளும். ஆமென்.
பரலோகத்தில்
இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜியம் வருவதாக. உம்முடைய
சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு
வேண்டிய அப்பத்தை இன்று எங்களுக்குத் தந்தருளும். எங்கள் கடன் காரர்களுக்கு
நாங்கள் மன்னித்தது போல, எங்கள் கடன்களையும் பாவங்களையும் மன்னித்தருளும். எங்களைச் சோதனையில்
புகவிடாதேயும். தீயோனிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். ஏனெனில் இராஜியமும்
வல்லமையும் மகிமையும் என்றென்றும் உம்முடையனவே. ஆமென்.
அருள்
நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே;
உம்முடைய
திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே.
தூயமரியே,
இறையன்னையே
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண
நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
வழிநடத்துபவர்
: திவ்விய இயேசுவே, உமது சிலுவைப் பயணத்தை பின்பற்றுகிறவர்களுக்கு
கிடைக்கக்கூடிய அருள் வரங்களை எங்களுக்கும் இறந்தோர்களுக்கும் நீர் தந்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில்
பதியச் செய்தருளும்.
முதல் நிலை -
அநீதி
தீர்ப்பிடாதே நீ -யென மொழிந்தார்
தீர்ப்பைத் தன்பால் கொண்டாரே
மானிடர் பாவம் தமக்காக
குற்றம் செய்தோரா - கினீரே.
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
பாவத் - தின் சம்பளம் சாவை
பாவ - மற்றோன் தானேற்றார்
துன்பங்கள் தன் மத்தியிலே
இன்பம் காண அருள்புரியும்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் முதல் நிலை: இயேசு அநீதியான பொய்த்தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறார்
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்,
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப் பகுதி (மத்தேயு
27;1-2, 22-24, 26)
பொழுது விடிந்ததும்
தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள்
யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி
இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்பவித்தனர். பிலாத்து அவர்களிடம்,
"அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய
வேண்டும்?" என்று கேட்டான். அனைவரும், "சிலுவையில் அறையும்" என்று பதிலளித்தனர். அதற்கு அவன், "இவன் செய்த குற்றம் என்ன?" என்று கேட்டான்.
அவர்களோ, "சிலுவையில் அறையும்" என்று இன்னும்
உரக்கக் கத்தினார்கள். பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின்
முன்னிலையில் தண்ணீரை எடுத்து, "இவனது இரத்தப்பழியில்
எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறித் தன்
கைகளைக் கழுவினான். அப்போது அவன் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை
செய்தான் இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.
சிந்தனை :
நீதியின் மறு வடிவமே இறைவன். நீதிக்கு
அரசனே இறைவன். நீதியை உருவாக்கியவனே இறைவன். நீதியைக் கொண்டோன் இன்று நீதிக்கு
எதிராக தீர்ப்பிடப்படுகின்றான். அவர் செய்த குற்றம் தான் என்ன? இவ்வுலகில் மனிதத்தை வாழ்ந்து காட்ட
முனைந்தது மட்டுமே. இறைவனை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தியதே மிகப்பெரும் குற்றமாக
கணக்கிடப்படுகிறது. வெள்ளியன்று
படைக்கப்பட்ட மனிதன் இதோ இந்த வெள்ளிக்கிழமையில் தன்னை படைத்தவனையே குற்றவாளியாக
தீர்ப்பிடுகின்றான். தனக்கு எதிராக பொய்க் குற்றங்களை சுமத்தி
பொய்ச் சாட்சியங்கள் கூறப்பட்ட போது இயேசுகிறிஸ்து மௌனமாக கத்தரிப்போன்
முன்னிலையில் செம்மறி ஆட்டைப் போன்று நிற்கின்றார். நான் நிரபராதி என்று
அவர்களிடம் சொல்லி வீண் விவாதங்களுக்குத் துணியவில்லை. இறைத் திட்டத்திற்கு
கீழ்ப்படிந்த நீதியின் இறைவன் இதோ அநீதியான தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத்
தயாராகின்றார்.
இன்று அநீதியை
நீதியாக்குகின்றார்கள். அநீதியை மெய்ப்பிக்க பொய்ச்சாட்சியங்கள்
உருவாக்கப்படுகின்றன. பொய்ச்சாட்சிகளின் பொய்மையையும் அவற்றை உருவாக்கியோரையும்
தண்டிக்க அதிகாரிகள் தவறி விடுகின்றனர். பொய்ச்சாட்சிகளுக்காக உண்மைகள் வளைத்து
முறிக்கப்படுகின்றன. மாற்றுத் தீர்ப்புக்களால் உறவுகளையும் நட்புக்களையும்
இழந்தோர் பலர்.
செபம் : எங்களுக்காக
பொய்த்தீர்ப்பை ஏற்றுக்கொண்ட ஆண்டவரே, நீதித்துறையில் பணிபுரிகின்ற நீதிபதிகளையும்
வழக்கறிஞர்களையும் அவர்களது உடன்பணியாளர்களையும் ஆசீர்வதித்தருளும். உண்மையான
சாட்சியங்களை தேடிக் கண்டறிவதற்கான பகுத்தறியும் தன்மை நீதித் துறையின்
பணியாளர்களுக்கு வழங்கிடுவீராக. பொய்த்தீர்ப்புக்களால் நாங்களும்
குற்றவாளிகளாக்கப்படும் போது உம்மைப் போன்று அவற்றை ஏற்றுக் கொள்ளும் வரமருளும்
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில்
பதியச் செய்தருளும்.
இரண்டாம் நிலை -
கொடுமை
பாரச்- சிலுவை தனைப் பாரீர்
இயேசுவின் வேதனை தனைப் பாரீர்
அவரின் தியாகம் தனைப் பாரீர்
நன்மையின் முகத்தைப் பாரீரே
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
உம்மைப் போன்றே நாங்களும்
சிலுவை ஏற்க வரமருளும்
இடர்வரின் சோர்வு கொள்ளாமல்
மகிழ்வாய் ஏற்க வரமருளும்.
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் இரண்டாம் நிலை: இயேசு கொடுமையின் சிலுவையை தோளில் சுமக்கின்றார்.
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப்
பகுதி (யோவான் 19 ; 6, 15-17)
அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும்
காவலர்களும், "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று
கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், "நீங்களே இவனைக்
கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத்
தெரியவில்லை" என்றான். அவர்கள், "ஒழிக! ஒழிக!
அவனைச் சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம்,
"உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா?
என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், "எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை" என்றார்கள். அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு
அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு "மண்டை
ஓட்டு இடம்" என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா
என்பது பெயர்.
சிந்தனை : ஒரு
சராசரி மனிதனின் உயரம் 6 அடி. கடற்பஞ்சு கோர்க்கப்பட்ட கோலின் உயரம் 3 அடி
இருந்திருக்கலாம். ஆக சிலுவையின் மொத்த உயரம் ஏறக்குறைய 12 அடிக்கு குறையாமல்
இருந்திருக்கலாம். அதனுடைய இரு கைகளும் 5 முதல் 7 அடி நீளம் உடையதாக
இருந்திருக்கலாம். அப்படியாயின் அதனுடைய மொத்த எடை ஏறக்குறைய 130 கிலோ
இருந்திருக்கலாம் என்று விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர். கடினமான சிலுவை. இவ்வளவுக்கும் மிகப்பெரிய பெருஞ்சுமையை
இயேசுவின் தோளில் சுமக்கச் செய்ய தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் யூத
பிரமாணிகளும் எவ்வளவு நாட்களாக சதித்திட்டம் தீட்டி காத்திருந்தனர். காரணம் வேறு
ஒன்றும் இல்லை. யூதர்களுக்கு இயேசுவோடிருந்த போட்டி மனப்பான்மையும் பொறாமைக்
குணமும் இயேசுவை எவ்வாறேனும் குற்றவாளியாக்க வேண்டும் என்ற வஞ்சக குணமும் தான்.
இன்றைய சமூகத்தில் பல்வேறு போட்டி
எண்ணங்கள் தங்களுக்கிடையே இருப்பது தங்கள் திறமைகளை வளர்ப்பதற்கு உகந்ததாகக்
கருதப்படுகிறது. ஆனால் இஃது பொறாமை குணத்திற்கும் இட்டுச் செல்கின்றன. இவ்வாறு
உருவாகும் பொறாமை என்னும் மனநிலை நாட்கள் கடந்து செல்லச் செல்ல வஞ்சகத் தன்மையாக
மாறிவிடுகிறது. ஒவ்வொரு நொடிப்பொழுதும் சின்னஞ்சிறு காரணங்களுக்காக வஞ்சிக்கப்படுவோர்
ஏராளமானவர்கள். சதித் திட்டங்களால் தம் தலையில் மிகப்பெரிய சுமையை தூக்க வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டது என்று புலம்பி அழுகின்றவர்களும் பலர். தங்கள் சுகத்திற்காக
பிறர் நலனையும் சுரண்டுகின்ற பிறர் நலமற்ற சமூகச் சிந்தனைகள் மேலோங்கி வருகின்றன.
செபம் : எங்களுக்காக தோளில் சிலுவை சுமந்த ஆண்டவரே, உமக்கு
ஏற்பட்ட வஞ்சக சூழ்ச்சி போன்று நாங்களும் பல நேரங்களிலும் அகப்பட்டுக் கொண்டு
இருக்கின்றோம். இறைவா பல்வேறு பிரச்சினைகள் எங்கள் வாழ்வில் நுழைந்து
கொண்டிருக்கின்றன. தினம் தினம் இந்தத் துன்பங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. ஒன்று
மாறிவிடுகின்றது இன்னொன்று புகுந்து விடுகின்றது. இவற்றை தாங்கிக் கொள்ளும்
மனவலிமையும் உடல் வலிமையும் தந்தருளும்.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில்
பதியச் செய்தருளும்.
மூன்றாம் நிலை - இடறல்
சிலுவையோடுனது முதல் வீழ்ச்சி
மண்ணுக்களித்த முதல் முத்தம்
வாழ்வின் இடறலால் வீழ்ந்திடினும்
அரவணைப்போடு காத்தருளும்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
எம்பாவங்கள் உமை வீழ்த்த
நாங்களும் வெட்கித் தலை தாழ்த்த
தோல்விகள் தினமும் நமை வீழ்த்த
அவர் கரம் வருமே பிடித் - துயர்த்த
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் மூன்றாம் நிலை: இயேசு கால்கள் இடற முதல் முறை கீழே விழுகின்றார்
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப்
பகுதி (புலம்பல் 1;14, 16-17)
என்
குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது். அவை பிணைக்கப்பட்டு, என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன. அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்.
நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்பவித்தார். இவற்றின்
பொருட்டு நான் புலம்புகின்றேன். என் இரு கண்களும் கண்ணீரைப் பொழிகின்றன. என்
உயிரைக் காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில் உள்ளார். பகைவன் வெற்றி
கொண்டதால் என் பிள்ளைகள் பாழாய்ப் போயினர். சீயோன் தன் கைகளை உயர்த்துகின்றாள்.
அவளைத் தேற்றுவார் யாருமில்லை. சூழ்ந்து வாழ்வோர் யாக்கோபுக்கு
எதிரிகளாயிருக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார். எருசலேம் அவர்களிடையே
தீட்டுப்பொருள் ஆயிற்று.
சிந்தனை : முந்தைய நாள் இரவு பாஸ்கா விருந்தின் போது கைது செய்யப்பட்டவர். பல்வேறு இடங்களில் அழைத்து செல்லப்படுகிறார்.
விசாரணைகளுக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்படுகிறார். கைதிக்கு யார் தான் தூங்கும்
வசதி செய்து கொடுப்பவர். தூக்கம் இல்லாத கண்கள். ஓய்வு இல்லாமையால் உடல் சோர்வு.
நிச்சயமாக காலை உணவு உண்பதற்கு வாய்ப்பே இல்லை. மலையோரப் பாதைகள் இயல்பாகவே கற்கள்
நிறைந்தவையாக இருக்கும். கரடு முரடான பாதை வழியே பாரமான சிலுவையை
தூக்கிக்கொண்டு துயரமான ஒரு பயணம். இகழ்வோர் கூட்டமும் அவர் முன்னே. மகிழ்வோர்
கூட்டமும் அவர் பின்னே. வழியில் உடல் சோர்ந்து விட்டது. உடல் தெம்பு இல்லை.
இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலை. உடலும்
உள்ளமும் சோர்வுற்றதால் கால்கள் இடற கற்கள் நிறைந்த பாதையில் சிலுவையோடு
விழுந்துவிட்டார்.
நமது வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய
பணிகளை கண்ணும் கருத்துமாக செய்கின்ற போதும் உடல் சோர்வு காரணமாக இடறி விழுவது
இயல்பு. இயேசுவுக்கு ஏற்பட்டதோ வஞ்சனையால் ஏற்பட்ட இடறல். ஆனால் பலர் இத்தகைய
வஞ்சனைகளாலும் சூழ்ச்சிகளாலும் இடறி பாதிக்கப்பட்டவர்களாக நம் சமூகத்தில் உள்ளனர்.
இயேசுவைப் போன்று இறைத் திட்டத்திற்காக இடறல்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள
முயல்வோம்.
செபம் : எங்கள்
தீச்செயல்களால் இடறி விழுந்த அன்பு ஆண்டவரே இரவு காலம் முழுவதும் விழித்திருந்து
பிறர் நலத்திற்காக தங்கள் பணிகளை பொறுப்புடன் செய்கின்ற சகோதர சகோதரிகள் பலர். அத்தகைய மருத்துவத்
துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை போன்ற பல்வேறு பணியாளர்களை நாங்கள்
உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். தூக்க மயக்கத்தில் இருந்த பின்னரும் பெரும் சுமையை
சுமக்க நீர் தயாரானது போன்று இவர்களும் பொதுநலத்திற்காக விழித்திருந்து பணி
செய்வதற்கான வலிமையும் அருளும் கொடுத்தருளும்.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில்
பதியச் செய்தருளும்.
நான்காம் நிலை -
தாய்ப்பாசம்
மரியா தன்மக - னருகேகி
உள்ளம் நொந்து அழுதாளே
ஆறுதல் மொழியும் மனத்தோடாய்
விழிகள் நான்கும் சந்தித்தன
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
ஒடுக்கப் - பட்டோர் உரிமைக்காய்
போய் வா மகனே வென்றிடுவாய்
தன்னா - சீரை விழிவழியாய்
கண்ணீ- ரொழுக அழுதாளே
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் நான்காம் நிலை: இயேசு தனது தாய்ப்பாசத்தை சந்திக்கின்றார்
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப்
பகுதி (புலம்பல் 2;13, 15, 18)
மகளே!
எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு
ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை
இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப்போல்
விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்? அவ்வழியாய்க்
கடந்து செல்வோர் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்! மகள் எருசலேமை
நோக்கித் தலையை ஆட்டிச் சீழ்க்கையடித்தனர்! "அழகின் நிறைவும் மண்ணுலகின்
மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா?" என்றனர்.
அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது் மகள் சீயோனின் மதிலே!
இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஒய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல்
நீ இருக்க வேண்டாம்!
சிந்தனை : பாசத்தோடு போற்றி வளர்த்த தனது ஒரே மகன். ஊர் மக்களுக்கெல்லாம் பிணிகளை நீக்கி நற்போதனைகளை பகிர்ந்தளித்தவர்.
நன்மையின் மனித வடிவத்தை பிறருக்கு காண்பித்தவர். பிறரை
அன்பு செய்து இறைவனை காணத் தூண்டியவர். இதோ இவர் செய்த பாவம் என்ன? இவன்
செய்த கொலைக்குற்றம் தான் என்ன? தன் மடியில் கிடத்தி
வளர்த்திய தனது ஒரே மகன் ஊராரால் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இழுத்துச்
செல்லப்படுகின்றார். தாயின் கண்கள் கண்ணீரை வார்த்தன. ஐயோ எனது கண்மணியே, இன்று
உனக்கு நேர்ந்ததென்ன? என மனதில் அடக்க முடியாத
மனவருத்தத்தோடு புலம்பி அழுகிறார். இயேசு நோக்குகின்றார். தனது தாய் கண்ணீர் மல்க
வருந்தும் வருத்தமான பரிதாபக்காட்சி. தாய்ப்பாசம் முக்கியமா? இறைத்திட்டம் முக்கியமா? தந்தைக் கடவுளுக்கு
கீழ்ப்படிந்தேயாக வேண்டும். இறை விருப்பத்தை நிறைவேற்றிக் கொள், என அந்த வீரத்தாய்
அன்னை மரியா கண்களோடு பேசுகின்றாள். நீ போய் வா மகனே!
வீரத்தோடு செல்! புறமுதுகு காட்டி ஓட வேண்டாம்! என்ற ஆறுதல் கலந்த திடப்படுத்தும் சொற்கள் கண்களில் தென்படுகின்றன. எந்த
ஒரு தாயும் சிந்திக்காத ஒரு மாற்று
வீரத்தாய் தான் அன்னை மரியா.
அன்பான
ஆண்டவரே முதுமைக் காலத்தில் இன்று தாய்மை வெறுக்கப்படுகிறது. இந்த உலகிலேயே
மிகப்பெரிய அன்புக்கு அடையாளம் தாய்ப்பாசம் ஆகும். முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை
கூடிவருகிறது. பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரை கவனிக்க மறுத்து பல்வேறு காரணங்களை
உருவாக்கிக் கொள்கிறார்கள்.
செபம் : முதியோர்
பராமரிப்பு இல்லங்களில் வாழ்கின்ற முதியவர்களை ஆண்டவரே ஆசீர்வதித்தருளும். அவர்களை
பராமரிக்கின்ற மற்றும் வழிநடத்துகின்ற பொறுப்பாளர்களையும் ஊழியர்களையும் அன்பின்
வடிவத்தை காண்பிப்பதற்காக நல்ல அருளை அவர்களுக்கு வழங்கியருளும். இறுதிக்
காலத்தில் தங்களுடைய சொந்தப் பிள்ளைகளிடமிருந்து கிடைக்கப் பெறாத அன்பை இத்தகைய
பணியாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வரத்தை வழங்குவீராக.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில்
பதியச் செய்தருளும்.
ஐந்தாம் நிலை -
உதவிக்கரம்
சீரேனே ஊரான் சீமோன்
தோள் கொடுக்கும் தோழனானார்
மானிடர் தீமை -கள் அழுத்த
சீமோன் நன்மை தாங்கியதே
இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
கண் கால் கை - கள் என்றிருந்தும்
குருடர் ஊனர் முடவர்களாய்
செயலற்-றிருக்கும் தீயோர்க்கு
நன்மை செய்யும் வரமருளும்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் ஐந்தாம் நிலை: இயேசுவின் சிலுவை சுமக்க சீமோன் உதவிக்கரம் நீட்டுகிறார்.
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப்
பகுதி (லூக்கா 23;26)
அவர்கள்
இயேசுவை இழுத்துச் சென்று கொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து
வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை
வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச்
செய்தார்கள். (மத்தேயு 16;24) பின்ப இயேசு தம் சீடரைப்
பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பம் எவரும் தன்னலம் துறந்து
தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்றார். (மத்தேயு
11;29-30) இயேசு, "நான் கனிவும்
மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம்
கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
ஆம், என் நுகம் அழுத்தாது என் சுமை எளிதாயுள்ளது"
என்றார்.
சிந்தனை : சிரேன்
ஊரினனான சீமோன் சோர்வடைந்து தளர்ந்த இயேசுவை உதவுவதற்காக வருகின்றான். சிரேனே
என்பது வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவின் கிரேக்க காலனி ஆகும். இப்பகுதியில்
இருந்து மனித குடியேற்றத்தின் காரணமாக எருசலேமில் தங்கி வாழ்ந்த சீமோன் இயேசுவின் போதனைகளைக்
கேட்க அதிக ஆர்வம் காட்டியவன் என
குறிப்பிடப்படுகிறது. படைவீரர்கள் அவரை சிலுவை சுமக்குமாறு கட்டாயப்படுத்தினர்
என்று ஒத்தமை நற்செய்தி நூல்கள் குறிப்பிடுகின்றன. இயேசுவோடு கொண்ட அன்பின் காரணமாக
படைவீரர்களின் கட்டாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள அவர் தயாராகிறார். பாதிக்கப்பட்டு
சோர்வடைந்த இயேசுவுக்கு சீமோன் செய்த சிறு உதவி பேருதவியாக அமைந்தது.
அன்பு
நமது வாழ்க்கையில் பல்வேறு தடைகளும் சுமைகளும் நமது வாழ்க்கை நிலைகள் வழியாக நம்மை
கீழே விழச் செய்கின்றன. ஒருவேளை பிறருடைய இத்தகைய ஒரு சிறு உதவி அல்லது சிறிய
ஆறுதல் வார்த்தைகள் ஒருவேளை அவர்களோடு கூட இருக்கக்கூடிய உடனிருப்பு பிறருக்கு
அத்தியாவசியமான உதவியாக அமையும்..
செபம் : சீமோனின்
உதவியை நன்றியோடு ஏற்றுக்கொண்ட ஆண்டவரே தன்னந்தனியாக ஒதுக்கப்பட்ட அகதிகளிடையே
பணிபுரிபவர்களின் மத்தியிலும் இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்டு
தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உதவியாக செயல்படுகின்ற பேரிடர் பாதுகாப்பு வீரர்களையும்
திருக்கரத்தில் சமர்ப்பிக்கின்றோம். எவ்வளவு கடினமான பணி என்றிருந்தும் பிறரின்
உதவிக்காக பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு உயிருக்கு மதிப்பு
அளித்துக்கொண்டு பணிபுரிகின்ற இப்பணியாளர்களை ஆசீர்வதித்தருளும்.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில்
பதியச் செய்தருளும்.
ஆறாம் நிலை -
ஆறுதல்
முகத்தை பதித்தீர் துணிதனிலே
வேரோ - ணிக்காள் உதவிடவே
உதவிடும் மாதை குணமதனை
தாரும் எமக்கும் எந்நாளும்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
பங்கம் என்று இகழ்வாரோ
பாவி எனக்கல் - லெறிவாரோ
எப்படி - யவரை உதவிடுவேன்
வீரப்பெண்- ணாய் முகம் துடைத்தாள்
இறைவா கனிந்தருள்வீ'. ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் ஆறாம் நிலை: வெரோணிக்காள் இயேசுவின் திருமுகத்தை துடைத்து ஆறுதல் கூறுகின்றாள்.
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப்
பகுதி (திருப்பாடல்கள் 94; 17-21)
ஆண்டவர் எனக்குத் துணை நிற்காதிருந்தால், என் உயிர் விரைவில் மௌன உலகிற்குச்
சென்றிருக்கும்! 'என் அடி
சறுக்குகின்றது' என்று நான்
சொன்னபோது, ஆண்டவரே! உமது
பேரன்பு என்னைத் தாங்கிற்று. என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல்
மகிழ்விக்கின்றது. சட்டத்திற்குப் புறம்பாகத் தீமை செய்யும் ஊழல்மிகு ஆட்சியாளர்
உம்மோடு ஒன்றாக இணைந்திருக்க முடியுமோ? நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க
அவர்கள் இணைகின்றனர்; மாசற்றோர்க்குக்
கொலைத்தீர்ப்பு அளிக்கின்றனர்.
சிந்தனை : படைவீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பயந்து பலர் ஒதுங்கி
நிற்கிறார்கள். இயேசுவின் பரிதாப நிலை கண்டு உதவ வேண்டும் என விரும்பியவர்களும்
படைவீரர்களுக்கு பயந்து விலகி நின்றனர். ஆனால் வெரோனிக்கா என்ற வீரப்பெண்மணி
இயேசுவின் தாயின் அழுகுரலைக் கண்டவாறு பரிதாபமுற்று சிரேன் ஊரானாகிய சீமோனின்
உதவியைக் கண்டவாறு தானே இயேசுவுக்கு ஆறுதலாக அவரது முகத்தில் வழிந்த வியர்வையை
துடைத்து மாற்றிட முன்வருகிறார். அந்தப் பெண்மணியின் மிகப்பெரிய தைரியம் ஆண்டவர்
இயேசுவுக்கு மிகப் பெரும் ஆறுதலாக அமைந்தது. இவ்வாறு தான் செய்த உதவிக்கு கைமாறாக
தனது முகத்தின் வடிவத்தை வெரோனிக்கா அத்துணியில் பெற்றுக்கொண்டதாக மரபுகள்
நம்புகின்றன. வெரோனிக்கா என்பவர் யார்? இயேசுவின் போதனைகளால் மனமாற்றம் அடைந்த சக்கேயுவின் மனைவி எனவும்
பிற்காலங்களில் இயேசுவுக்கு மிகப்பெரும் சாட்சியாக கிறிஸ்தவம் பரப்பத் துணிந்தவர்
எனவும் மரபுகள் விளக்குகின்றன. இயேசுவின் முகம் பதித்த இத்துணியைக் காண இப்போதும்
வந்து கூடும் விசுவாசிகளின் எண்ணிக்கை
ஆயிரங்கள்.
வெரோனிக்காவைப்
போன்று தைரியமான வீரப்பெண்மணிகள் இவ்வுலகில் எத்தனை பேர். பிறருடைய வீண
பேச்சுக்களுக்கு பயந்து, அதிகாரங்களுக்கு பயந்து தான் செய்ய வேண்டிய நன்மைகளை
செய்ய இயலாமல் ஒதுங்கி நிற்க கூடிய நபர்கள் ஏராளமானவர்கள். இருப்பினும் எப்போது
நன்மை செய்ய வேண்டும் என்ற ஒரு ஆர்வம் நம் உள்மனதில் தோன்றுகிறதோ அப்போதே
வீரப்பெண்மணியான வேரோணிக்காவைப் போன்று தடைகளையும் தாண்டி முன்னேறி நன்மை செய்யத்
தயாராக வேண்டும்.
செபம் : தன்
முகத்தை வேரோணிக்காவின் துணியில் பதியச் செய்த ஆண்டவரே, பிறர் நலப்பணிகளில்
ஈடுபட்டிருக்கும் சமூக ஆர்வலர்களையும் சமூகப் பணியாளர்களையும் உம் அருட்கண்
பார்வையில் கொண்டு வருகின்றோம். சமூக நலனுக்கான அவர்களது ஒவ்வொரு முயற்சிகளையும்
பிறர் நலனுக்காக, மனிதத்தை வளர்த்துக் கொள்ளும் முறையில் அமைய வேண்டி
மன்றாடுகிறோம். அரசியல் சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருப்போரை உம் திருக்கரங்களில்
சமர்ப்பிக்கின்றோம். கருத்து வேற்றுமைகள் பல வந்தாலும் மக்கள் பணியே ஆண்டவன் பணி
என்ற முறையில் பிறர் பணியை செவ்வனே செய்வதற்கான
அருளைக் கொடுக்க உம்மை மன்றாடுகின்றோம்.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில்
பதியச் செய்தருளும்.
ஏழாம் நிலை – உடல் சோர்வு
சிலுவையின் பாரம் உடலழுத்த
கற்கள் பாதங்களைத் துளைக்க
உடலின் பலமும் வலுவிழக்க
இரண்டாம் முறையும் வீழ்கின்றார்
இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
இயேசுவி - னுடலும் சோர்ந்திடவே
சிலுவையின் பாரம் வீழ்த்திடவே
தீண்டி -யோரை பொறுக்கின்றார்
தானா -யெழும்பிட முயல்கின்றார்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் ஏழாம் நிலை: இயேசு சிலுவையோடு உடல் சோர்ந்து இரண்டாம் முறை தரையில் விழுகின்றார்
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப்
பகுதி (எசாயா 53;3-6)
அவர்
இகழப்பட்டார். மனிதரால் பறக்கணிக்கப்பட்டார்.
வேதனையுற்ற மனிதராய் இருந்தார். நோயுற்று நலிந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார். அவர் இழிவுபடுத்தப்பட்டார். அவரை நாம்
மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார். நாமோ அவர்
கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப்படுத்தப்பட்டவர்
என்றும் எண்ணினோம். அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு
நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர் தம்
காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம். நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம். ஆண்டவரோ நம் அனைவரின்
தீச்செயல்களையும் அவர் மேல் சுமத்தினார்.
சிந்தனை : மனிதனுக்கு உண்மையைக் கண்டடையக் குறைந்தது
இரண்டு சாட்சிகள் தேவை. இருவர் இருவராக நற்செய்திப் பணியாற்றுவதற்காக அவரே தன்
சீடர்களை அனுப்புகின்றார். இரண்டு என்பது உண்மை நிலையை விளக்கிக் கூறுகின்றது. யாருக்காக
இம்மண்ணைப் படைத்தானோ அவனுக்காக அவனாலேயே மண்ணில்
விழுகின்றார். இயேசுவின் இரண்டாவது முறை வீழ்ச்சி சற்று அதிகமான வலியைச்
சுட்டுகின்றது. மரியா வீர வார்த்தை கூறுகின்றார். சீமான் உதவுகின்றார். வேரோணிக்கா
முகத்தை சீர் செய்கின்றார். மீண்டும் இரண்டாவது முறை வீழ்ச்சி என்பது முற்றிலும்
கடினமானது. முதல் வீழ்ச்சியை விட வேதனை மிகுந்தது அவரால் முடியவில்லை. உதவிகள்
இருந்தும் ஆறுதல் வார்த்தைகள் பல இருந்தும் அவரால் ஒரு அடிகூட எடுத்து வைக்க
முடியவில்லை. உடல் சோர்வே அவரது இரண்டாம் வீழ்ச்சிக்கு காரணம். இருமுறை விழுந்தாலும்
தனது இறைத்திட்டத்தை முடிவடையச் செய்ய வேண்டும் என்ற மனநிலை முடிவு இயேசுவுக்கு
இருந்தது. எனவே தனது குறிக்கோளை அடைவதற்காக மீண்டும் எழும்புகின்றார்.
நம்
வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நோய் வரும்போது மனத்தளர்ச்சி அடைகின்றோம். அதன் பக்க
விளைவாக இரண்டாவது நோயையும் உணர்கின்றோம். அப்போதே வருந்தி மீண்டும் மீண்டும்
பலவித நோய்கள் உருவாகக் காரணமாகின்றோம். இவ்வாறு தொடர்ந்து வருகின்ற துன்பங்களால்
சோர்ந்து விழுந்த பின்னர் எழும்ப முடியாமல் தவிப்போர் எண்ணிலடங்காதோர்.
செபம் : எங்களுக்காக
இரண்டாம் முறையும் வீழ்ச்சியுற்ற ஆண்டவரே,
துன்பங்கள் மேலும் மேலும் வருகின்றபோது வீழ்ச்சியடைகின்ற எங்களுக்கு நீரே
சுமைதாங்கியாக இருந்தருளும். இறைத்திட்டத்தின் குறிக்கோளை அடைவதற்கான எண்ணத்தோடு துன்பங்களைக்
கண்டு துவண்டு விடாமல், துன்பங்களால் தயங்கிக் கீழே விழாமல் மீண்டும் எழும்பி
முன்னோக்கி செல்வதற்கான இறையருளை எங்களுக்குத் தந்தருளும்.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில்
பதியச் செய்தருளும்.
எட்டாம் நிலை - பரிதாபக்குரல்
அழுது புலம்பும் மாதையரோ
வருந்தி ஓலமிட் -டழுதனரே
எம்மால் இப்படி ஆகினதோ
அறியாமல்லழுகின் - றனரே
இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
உம் பிள்ளைக்காய் அழுதிடுவீர்
உங்களுக்கா - கவுமழுதிடுவீர்
பச்சைமரமிதன் நிலை காணீர்
பட்டமரத்தை நினைத்துப் பாரீர்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் எட்டாம் நிலை: இயேசு எருசலேம் பெண்களின் பரிதாபக் குரல்களுக்கு பதிலளிக்கின்றார்
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப்
பகுதி (லூக்கா 23;27-31)
பெருந்திரளான மக்களும் அவருக்காக
மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு
அப்பெண்கள் பக்கம் திரும்பி, "எருசலேம்
மகளிரே, நீங்கள்
எனக்காக அழவேண்டாம்; மாறாக
உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது
"மலடிகள் பேறுபெற்றோர்" என்றும் "பிள்ளை பெறாதோரும் பால்
கொடாதோரும் பேறு பெற்றோர்" என்றும் சொல்வார்கள். அப்போது அவர்கள் மலைகளைப்
பார்த்து, "எங்கள்
மேல் விழுங்கள்" எனவும் குன்றுகளைப் பார்த்து, "எங்களை மூடிக்கொள்ளுங்கள்"
எனவும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே
இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!"
என்றார்.
சிந்தனை :
இயேசுவின் துயரத்தைக் கண்டு, தாங்க முடியாமல் எருசலேம் நகரத்து பெண்கள் மாரடித்து
அழுது புலம்புகின்றனர். நன்மைகள் பல செய்து ஓடி நடந்த ஆரோக்கியமான இவருக்கா
இந்நிலை, என பரிதாபப்படுகின்றனர். இந்த பரிதாபக் குரல்கள் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் உடல் வலிக்கு சிறு ஆறுதலாக அமைந்தது. „நீங்கள் எனக்காக அழவேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்காக அழுங்கள்“ என இறைத்திட்டத்திற்கு கீழ்ப்படிந்தவாறு தனது நன்மை நிறைந்த இதயத்தோடு
அவர்களது பரிதாப குரல்களுக்கு விடையளிக்கிறார். தான் மிகப்பெரிய பாடு
அனுபவிக்கின்ற போதும் பிறருக்காகவே ஆறுதல் வார்த்தைகளை எடுத்தியம்புகின்ற
இயேசுவின் ஒரு நல்லிதயம். இப்போதும் மக்களின் மீட்பே அவரது முக்கிய குறிக்கோளாக
அமைந்திருந்தது.
இன்றைய
வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இத்தகைய பரிதாபக் குரல்களை பல நேரங்களிலும் வெளிப்படுத்த
வேண்டியதை அறிந்தும் அறியாமலும் தவிர்த்து விடுகின்றோம். ஒருவன் பாடுகளை
சந்திக்கின்ற போது அல்லது வீழ்ந்து கிடக்கின்ற போது அவனோடு சேர்ந்து செல்பி
எடுப்பதற்கும் அதனை மிகப்பெரியச் செய்திகளாக மாற்றுவதற்கும் துணிகிறது நம் சமூகம்.
எருசலேம் பெண்களின் பரிதாபக் குரலை நம் சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் மனப்பூர்வமாக
பிறர் வாழ்விலும் காண்பிக்க நாம் முயல்வோம்.
செபம் : பரிதாப்பட்ட
பெண்களுக்கே ஆறுதல் வார்த்தைகள் கூறிய ஆண்டவரே, பிறருக்கு பரிதாபக் குரல் அளிக்குமாறு
தங்களுடைய வாழ்க்கையின் மிக முக்கிய கருத்தாகக் கொண்டு வழிநடக்க எங்களுக்கு
வரமருளும். செய்திகளாக்க அல்ல பிறரைக் கண்டு பரிதாபப்பட்டு பிறருக்கு உதவி
புரியும் நற்செயல்களே மனிதனுக்குத் தேவை என்பதை புரிந்து கொள்ள எங்கள்
ஒவ்வொருவருக்கும் அருள் தாரும். குறிப்பாக ஊடகப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்
அன்பர்கள் ஒவ்வொருவரையும் இத்தகைய மனநிலையோடு நற்பணி புரிய வரம் அருள
வேண்டுகிறோம்.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில்
பதியச் செய்தருளும்.
ஒன்பதாம் நிலை -
வீழ்ச்சி
அலகையின் சோதனை மூன்றுமுறை
இயேசுவின் வீழ்ச்சியும் மூன்றுமுறை
எதையும் தாங்கும் இதயத்தால்
துயரால் வெற்றி - யடைகின்றார்.
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
தொட்டில் முதல் கல்-லறை வரையும்
ஏக்கத்தோடு அழுகின்றான்.
உம்மைப் போன்றே மானிடர்க்கும்
தாங்கிடும் வரம்தனை எமக் - கருளும்
இறைவா கனிந்தருள்வீ ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் ஒன்பதாம் நிலை: இயேசு மூன்றாம் முறையாக தரையில் விழுகின்றார்
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப் பகுதி (திருப்பாடல்கள் 22: 1, 6-11)
என்
இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில்
இருக்கின்றீர்? நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின்
நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு
உள்ளானேன். என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்"; என்கின்றனர். என்னைக் கருப்பையினின்று வெளிக்கொணர்ந்தவர்
நீரே; என் தாயிடம்
பால்குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்துவரும் நீரே! கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன்
நீரே! என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்; ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது; மேலும், உதவி
செய்வார் யாருமில்லை.
சிந்தனை :
இறையியலில் எண் மூன்று முழுமையைக் குறிக்கின்றது. மூன்றாம் முறை இவ்வுலகின்
இறைவன் மனித நிலையில் உடல் சோர்ந்து வீழ்ந்தபோது இறைத்திட்டத்தின் முழுமையின் முக்கியத்துவத்தை பெறுகின்றார். மீண்டும் ஒரு
அடிகூட எடுத்து வைக்க முடியாமல் சிலுவையின் பாரத்தால் அவருக்கு ஏற்பட்ட
வீழ்ச்சிக்கு காரணம் பூவுலகத்து மனிதர்களின் பாவங்களே. நம் தீச்செயல்களே அவரை குப்புற
விழச் செய்து தலைகுனிய வைத்தன. இல்லாமலிருந்த நம்மைப் படைத்து பராமரித்தற்கு
மனிதனின் நன்றிக்கடன் இதுதானோ. பரிதாபக் குரல்களும் உதவிகளும் கிடைத்தன என்றாலும்
உடல் சோர்வும் மனச்சோர்வும் அவரை தளர்த்தின. உடல் சோர்வு ஒருபுறம். மனச்சோர்வு
மறுபுறம். சிலுவையின் பாரம் ஒரு புறம். பகைவர்களின் இகழ்ச்சி மறுபுறம். இதோ
மூன்றாம் முறை சற்றும் முடியாமல் மீண்டும் வலியால் துடிக்க நடக்க முடியாமல் கீழே
விழுகின்றார்.
அறிந்தும் அறியாமலும் இடர்கள் பல வரின் மக்கள் சோர்ந்து
போகின்றனர். „பாவி செல்கின்ற இடமெல்லாம் பாதாளம்“ என்ற
பழமொழிக்கு ஏற்றச் செயல்களையே தங்களுடைய எண்ணத்தில் வைத்துக்கொண்டு தாங்களாகவே
விழுந்துவிடும் எளிய மக்கள் நம் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். இத்தகைய
மக்களை கரையேற்றும் பொறுப்பு கிறிஸ்தவர்களாகிய நமக்கு மட்டுமே. ஆண்டவரே
இறைத்திட்டத்திற்கு ஏற்ப மூன்று முறைகளாக வீழ்ச்சியை அனுபவித்தார் என்றால்
மனிதர்களாகிய நாம் கட்டாயமாக பலமுறை இடறி விழும் சூழல்கள் ஏற்படலாம்.
செபம் : மூன்றாம்
முறையும் எங்களுக்காக வீழ்ச்சியடைந்த ஆண்டவரே, தீமைகளை
மட்டுமே சிந்தித்துக் கொண்டு சமூகத்தில் கிறிஸ்துவுக்கு எதிரான வாழ்க்கையை நாங்கள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். துன்பங்களின் தாக்கத்தால் ஆதரவற்ற எளியவர்களுக்கு ஆறுதல் அளிப்பீராக.
பெரும் துன்பங்களின் தாக்கத்தால் மன உளைச்சலுக்குள்ளாகி கருக்கொலை, ஆணவக்கொலை, தற்கொலை
போன்ற பல்வேறு தீச்செயல்களுள் ஈடுபடும் எளியோரை திடப்படுத்தி தைரியத்துடன் உயிரின்
மாண்பை அறிந்திடச் செய்வீராக.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில்
பதியச் செய்தருளும்.
பத்தாம் நிலை -
வெறுமை
குருதியில் ஒட்டிய ஆடையினை
வலியால் துடிக்க அகற்றினரே
இரத்தம் வழியும் காயங்களால்
யாவையும் இழந்து நின்றாரே
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ"- ரன்பால்
உடைகள் உரிந்திட உமைத் தந்தீர்
உம்மையே வெறுமை ஆக்கினீர்
அவமானத் -தோடு தலைகுனிந்தீர்
பெருமையினாலே எமைமீட்டீர்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் பத்தாம் நிலை: இயேசு ஆடைகளின்றி வெறுமையாக்கப்படுகின்றார்
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப் பகுதி (திருப்பாடல்கள் 22; 17-21)
என்
எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; அவர்கள்
என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள். என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்
கொள்கின்றனர்; என் உடையின்மேல்
சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே!
என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என்
வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக்
காத்தருளும்; இந்த நாய்களின்
வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்; இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்; காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக்
காத்தருளும்.
சிந்தனை : வெறுமைக்கும் வறுமைக்கும்
மிகப்பெரிய தொடர்பு உண்டு. வெறுமையே வறுமை. வறுமையே வெறுமை. மனிதனின் அடிப்படைத்
தேவைகளில் ஒன்றுதான் உடை. தனது தாயின் சொந்த கையால் இணைப்பு இல்லாமல் நெய்யப்பட்ட மேலங்கியை
படைவீரர்கள் உரிந்தெடுத்து அத்தாயின் முன்னிலையில் வளால் கிழித்து பங்கிட்டுக்
கொள்கிறார்கள். இவ்வுலகில் அவருக்கு சொந்தமாக எதுவுமே இருந்ததில்லை. உடைகள்
மட்டுமே அவருக்கு சொந்தமாக இருந்தன. இதோ அந்த உடையும் இல்லாதவாறு அவரது உடல் வெறுமையாக்கப்படுகிறது.
அவரது உடலிலிருந்து உரிந்தெடுத்தது மேலங்கி மட்டுமல்ல. அந்த மேலங்கி உடலில்
ஏற்பட்டிருந்த காயங்களிலிருந்து வழிந்த இரத்த்தோடு உலர்ந்து ஒட்டியிருந்நது.
அங்கியோடு அவரது தோலும் உரித்து எடுக்கப்படுகிறது. என்ன கொடுமை. கொடுமையிலும்
கொடுமை. ஊருக்கெல்லாம் ஊருணியாய் பிறரன்புப் பணிகள் செய்தவர் எதுவும் செய்யும் தெம்பு
இல்லாமல் இதோ, வெறுமையாக நிற்கின்றார்.
ஏழைகளைச் சுரண்டி அவர்களை வெறுமையாக்கி தன்னையே
நிறைவாக்க முனைபவர்கள் ஏராளம். எதுவுமே இல்லாதவனிடமிருந்து இருப்பதையும் எடுத்துக்
கொள்வது தான் வஞ்சகர்களின் இலட்சியம். ஒன்றும் இல்லாதவன் ஏதாவது கிடைக்குமா என்று
ஏங்குவது இயல்பு. ஆனால் இந்த ஏழ்மை நிலையை கூர்ந்து கவனித்தவாறு கடின இதயத்தோடு
பிறரை ஏமாற்றும் தலைமுறை மாற்றம் அடைய வேண்டும்.
செபம் : எங்களுக்காக தன்னையே
வெறுமையாக்கிய ஆண்டவரே கடன் தொல்லைகளால் அவதிப்படுகின்ற எளியோரைப் பாதுகாத்தருளும்.
கந்து வட்டித் தொல்லைகளால் ஏமாற்றப்படுவோருக்கு தகுந்த நேரத்தில் நல்ல ஆலோசனைகளை வழங்குகின்ற
உதவியாளர்களை பெருகச் செய்தருளும். எல்லாமே வெறுமையாக்கி வறுமையோடு ஒருவேளைச்
சோற்றுக்கு பாடுபடும் எளியோரின் சகிப்புத்தன்மைக்கு நீர் கைமாறு வழங்கிடுவீராக.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில்
பதியச் செய்தருளும்.
பதினொன்றாம் நிலை - தியாகம்
இரு கைகளும் ஈராணியதால்
இரு கால்களும் ஓராணியதால்
கழுமரம் என்ற சிலுவையிலே
அறையப்பட்டார் என்னிறைவன்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீரன்பால்
வாழ்வின் பல தீமைகளாலே
ஆணிகளாலின் றறைகின்றோம்
வரமருளிறைவா வரமருளும்
திருந்திட எமக்கு வருமருளும்
இறைவா கனிந்தருள்வி. ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் பதினொன்றாம் நிலை: இயேசு தியாகப் பலிக்காக சிலுவையில் அறையப்படுகின்றார்
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப் பகுதி (திருப்பாடல்கள் 22; 13-16)
என்னைவிட்டுத்
தொலையில் போய்விடாதேயும்; ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது; மேலும், உதவி செய்வார் யாருமில்லை. காளைகள்
பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன; பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன. அவர்கள் என்னை
விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; இரை தேடிச் சீறி முழங்கும்
சிங்கம்போல் பாய்கின்றார்கள். நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்; என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின; என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று; என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப்
போயிற்று. என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; என் நாவு மேலண்ணத்தோடு
ஒட்டிக்கொண்டது; என்னைச் சாவின்
புழுதியிலே போட்டுவிட்டீர். தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து
கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.
சிந்தனை : தியாகப்பலி
ஆரம்பமாகிறது. கல்வாரி மலை உச்சியில் அவரே சுமந்து சென்ற சிலுவையில் இயேசுவைக்
கிடத்தினார்கள். படைவீரர்களுள் இருவர் இயேசுவின் இரு கரங்களையும் இரு
பக்கங்களிலுமாக இழுக்கின்றார்கள். ஒருவன்
கால்களை கீழ்நோக்கியவாறு இழுத்துப் பிடிக்கின்றான். கூரிய முள் கொண்ட இரண்டு
ஆணிகளால் இயேசுவின் இரண்டு உள்ளங்கைகளிலும் ஓராணியால் இரு கால்களையும் இணைத்தவாறு
ஆணிகளால் அறையப்படுகின்றார். ஏற்கனவே உடல் சோர்ந்து காணப்பட்டார். ஆணிகளால்
அறையப்பட்ட வலியினால் மீண்டும் இயேசு துடிக்கின்றார். இரத்தம் பீறிட்டு
வழிந்தோடுகிறது. இரக்கமற்ற படைவீரர்களும் தலைமைக் குருக்களும் புடைசூழ வலியால்
துடிக்கின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்து இதோ சிலுவை மரத்தில் ஆணிகளால் கட்டுண்டவாறு
வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். ஊராருக்கு ஆசி வழங்கிய கைகளும் நன்மைகள்
செய்ய பயணித்த கால்களும் இதோ இன்று ஆணிகளால் அறையப்பட்டு கட்டப்பட்டுள்ளன
இன்றைய
சமூகத்தில் பலர் அதிகார வர்க்கத்தினரின் கொடுமைகளாலும் போட்டிகளாலும்
பொறாமைகளாலும் சிலுவையில் அறையப்படுகின்றார்கள். திருச்சபைக்காக பணிபுரியும்
மறைபணியாளர்கள் பலரும் கருத்து வேறுபாடுகளாலும் தப்பெண்ணங்களாலும் இயேசு
கிறிஸ்துவை போன்றே மூன்று ஆணிகளால் அறையப்பட்டவாறு வலியால் துடித்துக்
கொண்டிருக்கின்றனர். இத்தகையோரின் தியாகப் பணிகள் தான் திருச்சபைக்கு
அழகூட்டுகின்றன.
செபம் : எங்களுக்காக
தியாகப்பலியான அன்பான ஆண்டவரே உமது திருச்சபைக்காக பணிபுரிகின்ற மறைபணியாளர்களை
ஆசீர்வதித்தருளும். உமது நற்செய்தியை அறிவித்து மனிதத்தை பறைசாற்றி பிறரன்புப்
பணிகளை வாழ்ந்து காட்டி தங்கள் வாழ்க்கையையே உமக்காக சமர்ப்பிக்கத் துணிந்து
செயல்படுகின்ற துறவியரையும் குருக்களையும் திருச்சபையின் பல்வேறு இயக்கங்களிலும்
செயல்படும் தன்னார்வப் பணியாளர்களையும் அரவணைத்து
காத்திடுவீராக.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில்
பதியச் செய்தருளும்.
பன்னிரண்டாம்
நிலை - இழப்பு
நாற்றிசையுலகின் நல்லவனோ
என்னிறைவா என்னிறைவா
ஏனென்னை நீர் கைவிட்டீர்
என்றே கூவி உயிர் துறந்தார்.
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
எமக்காய் நல்லுயிர் ஈந்தவரே.
எமக்காய் தன்னையே தந்தவரே
எமக்காய் சிலுவையில் இறந்தவரே
உமக்காய் எங்களை தந்திடுவோம்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் பன்னிரண்டாம் நிலை: இயேசு சிலுவையில் தன் உயிரை இழக்கின்றார்
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப்
பகுதி (யோவான் 19; 28-36)
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற
தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர்
தம் சீடரிடம், "இவரே
உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு
அளித்து வந்தார். இதன்பின், அனைத்தும்
நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, "தாகமாய் இருக்கிறது" என்றார்.
மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம்
நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து
ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள். அந்த இரசத்தைக்
குடித்ததும் இயேசு, "எல்லாம்
நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும்
இருந்தது. படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவருள் ஒருவனுடைய
கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள்
இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை
முறிக்கவில்லை. ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார்
உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
சிந்தனை : உறவுகளையும்
நட்புகளையும், அனைத்தையும் இழந்து விட்டார். „என்
இறைவா என் இறைவா ஏன் என்னை கைவிட்டீர்“ என தந்தையாகிய கடவுளை
நோக்கிய கூக்குரலோடு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர் உடலை விட்டு செல்கின்றது.
இயற்கையோ துக்கத்தால் அழுகிறது. கதிரவன் தன் கதிர்களை மறைத்துக் கொள்கின்றான்.
வானம் இருண்டு காணப்படுகிறது. ஆலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது. இதோ உலகையே
ஆள்பவனுக்காக உலகமே துயரப்படுகிறது. பல ஆண்டுகளாக ஒன்றாக பயணங்கள் பல மேற்கொண்டு
பயிற்சி பெற்ற திருத்தூதர்கள் எங்கே? அவரால் அனுப்பப்பட்ட 72 சீடர்கள் எங்கே? அவரால் நலன் பெற்ற நோயாளர்கள்
எங்கே? அவரால் பேயின் கொடுமைகளிலிருந்து
விடுவிக்கப்பட்டவர்கள் எங்கே? அவரது உரைகளை கேட்க கூட்டம்
கூட்டமாக அலையடித்து கூடியவர்கள் எங்கே? அவரிடமிருந்து
நன்மைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பின்தொடர்ந்தவர்கள் எங்கே? அனைவரும் இயேசுவின் இறப்பைக் கண்டு ஓடி மறைந்தனர். வாழ்ந்த போது கூட்டமாக
பின்தொடர்ந்தனர். இறந்தபோது கூட்டம் கூட்டமாக திரும்பிச்சென்றனர்.
சமூகத்தில்
இவ்வாறாகவே கைவிடப்பட்டு எல்லாமே இழந்த நிலையில் பராமரிப்பின்றி தெருக்களிலும்
மரநிழல்களிலும் தங்கி வாழ்ந்து ஆறுதல் அடைவோர் ஏராளம். இவர்களை கண்டும் காணாமல்
செல்வோர் பலர். இவர்களை ஏளனமாக பார்ப்போர் பலர். இவர்களை துன்புறுத்த முனைவோரும்
பலர்.
செபம் : சிலுவையில் தன்னுயிரையே
இழந்த ஆண்டவரே, எங்கள் சமூகங்களில் நோய்களினாலும் விபத்துக்களாலும் பராமரிப்பின்றி
தன்னந்தனியாக கடின வேதனையை சகித்துக்கொண்டு இறப்போர் இவ்வுலகில் ஏராளம். அவர்களுக்கு
பணிவிடை புரிகின்ற தொண்டர்களை நீரே வலுப்படுத்தி நற்பணிகள் செய்யும் நற்கொடையை
வழங்க வேண்டி மன்றாடுகின்றோம்.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது இதயத்தில் பதியச் செய்தருளும்.
பதிமூன்றாம்
நிலை - பிரியாவிடை
மழலையாய் மடியில் கிடத்தியவர்
மகவாய் அன்புடன் வளர்த்தியவர்
அவனியின் மீட்பாய் வந்தவரை
உடலாய் மடியில் கிடத்துகிறார்.
இறைவா கனிந்தருள்வீ". ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
துயருடன் துடித்தாள் அன்னை மரி
உற்றுப் பார்த்தாள் கண்ணீரோடு –
வியாகுல அன்னை மடி துயிலும்
விண்ணவரே எமைக் காத்தருளும்
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் பதிமூன்றாம் நிலை: இயேசுவின் திருவுடல் கீழிறக்கி தாயின் மடியில் பிரியாவிடைக்காக கிடத்துகின்றனர்.
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப்
பகுதி (செக்கரியா 12; 10-14)
நான் தாவீது குடும்பத்தார்மேலும், எருசலேமில் குடியிருப்போர்மேலும்
இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன். அப்போது அவர்கள்
தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்; அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப்
பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக்
கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள். அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம்
மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப்போலப் பெரிதாயிருக்கும். நாடு
முழுவதும் குடும்பம் குடும்பமாக புலம்பிக் கொண்டிருக்கும்; தாவீது குடும்பத்தாரின் குடும்பங்கள்
ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய
பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், நாத்தான் குடும்பத்தாரின் குடும்பம் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம்
தனித்தும், எஞ்சியுள்ள எல்லாக் குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பமும்
தனித்தனியேயும் அவற்றிலுள்ள பெண்கள் தனித்தனியேயும் புலம்பி அழுவார்கள்.
சிந்தனை : சிறுவயதிலிருந்தே
தாலாட்டுப் பாடி வளர்த்திய மடியில் இதோ ஒரு சடலமாக இயேசுவின் உடலை மரியா
தாங்குகிறார். இதோ நான் ஆண்டவரின் அடிமை என்று இறைத்திட்டத்திற்கு கீழ்ப்படிந்த
தன்னையே அர்ப்பணித்த மரியா இன்று தனது மகனையும் இறைத்திட்டத்திற்கு தந்தைக்
கடவுளிடம் ஒப்படைக்கும் விதத்தில் மடியில் கிடத்தியிருக்கின்றார். இவ்வன்னையின்
கண்ணீருக்கு யார்தான் பொறுப்பு. வேறு யாருமில்லை. நாம் செய்த செயல்கள் தான் அதற்கு
காரணம். நாம் செய்த ஒவ்வொரு பாவங்களும் இயேசுவுக்கு துயரத்தைக் கூட்டின. மரியாவின்
இதயத்திற்கும் துயரத்தைக் கூட்டி விழிகள் கண்ணீரைக் கொட்டின.
இன்று
எத்தனையோ தாய்மார்கள் தனது பிள்ளைகளுக்காக பல்வேறு சிரமங்களை ஏற்றுக்
கொள்கின்றார்கள். தன்னுடைய பிள்ளைகளின் தீச்செயல்களால் இகழ்நிலையை அனுபவிக்கின்றார்கள்.
பிள்ளைகள் இருந்தும் இல்லாதவர்களைப் போன்றே வாழ்ந்து வருகின்றனர். நாம்
ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்கவேண்டும். நான் அல்லது எனது செயல்கள் எனது தாய்க்கு
பெருமையைக் கூட்டினவா, இல்லை வெறுப்பைக் கூட்டினவா. ஒரு தாய் தான் ஒவ்வொரு
மனிதனின் வெற்றிக்கும் புகழ்களுக்கும் ஆர்வத்தோடு மனப்பூர்வமாக ஆசைப்படுபவள்.
செபம் : தாயின் மடியில்
துயில்கொள்ளும் ஆண்டவரே, தாய்மார்களின் அன்பிற்கும் கீழ்ப்படிதலுக்கும் எதிராக
செயல்படுகின்ற பிள்ளைகளுக்கு நல்வழி காட்டுவீராக. தன் பிள்ளைகள் வழிதவறுகின்ற போது
அன்னை மரியாவைப் போன்று எதையும் தாங்கும் நெஞ்சத்தைப் பெற்றிட வரமருளும். தாய்மார்களின்
துயரத்தைக் கூட்டுகின்ற செயல்கள் தங்கள் துணைவரிடமிருந்து அனுபவிக்க நேர்ந்தால்
அவற்றையும் உமக்காக தாங்கிக்கொள்ளும் மனவலிமையை தாய்மார்களுக்குத் தந்தருள
வேண்டுகின்றோம்.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது ! இதயத்தில்
பதியச் செய்தருளும்.
பதினான்காம்
நிலை . முற்றுப்புள்ளி
ஒளியின் இறையாய் வந்தவர்
இருளின் கல்லறை செல்கின்றார்
இருளை வென்று ஒளி கொண்டு
உயிருடன் உம் வருகை என்றோ?
இறைவா கனிந்தருள்வி. ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
நிறைவின் இருப்பிடமே இறைவா
கல்லறையுள்ளே உமைக் கொண்டிர்
இருளை வென்று ஒளி கொண்டு
உயிருடன் உம் வருகை என்றோ
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
திருப்பாடுகளின் பதினான்காம் நிலை: இயேசு மண்ணுலக வரலாறு கல்லறையில் முற்றுப்புள்ளி ஆகின்றது
வழிநடத்துபவர்
: இயேசு மெசியாவே, உம்மை நாங்கள் வணங்கி ஆராதித்து புகழ்கின்றோம்.
அனைவரும்
: ஏனென்றால் உமது திருச்சிலுவையால் நீர் உலகத்தை மீட்டீர்.
இறைவார்த்தைப்
பகுதி (மத்தேயு 27; 57-60)
மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச்
சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும்
இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக்
கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான். யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப்
பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை
உருட்டி வைத்துவிட்டுப் போனார். அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே
கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.
சிந்தனை : இதோ
இயேசுவின் இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வந்துவிட்டது. அரிமத்தியா யோசேப்பு
இயேசுவின் இரகசிய சீடராக இருந்தவர். யூதர்களுக்கு அஞ்சி வெளிப்படையாக தன்னை
கிறிஸ்துவை பின்தொடர்பவராக வெளிப்படுத்தாமல் மறைவாக கிறிஸ்துவின் போதனைகளை
கடைபிடித்து வாழ்ந்தவர். இவர் யூதர்களின் தலைமைச் சங்கத்தில் மதிப்புக்குரிய
முக்கிய பதவியை வகித்தவர். ஆனால் மேசியாவின் வருகையை எதிர்பார்த்து
காத்திருந்தவர். அவ்வாறே நிக்கதேமும் இயேசுவின் சீடராக ஆனால் பரிசேயர் குலத்தைச்
சார்ந்த யூதத் தலைவர்களுள் முக்கியமானவராக இவரும் இருந்து வந்தார். யூதர்களின்
முறைப்படியாக புதுக்கல்லறையில் இயேசுவை நறுமணப்பொருட்களுடன் அடக்கம்
செய்கிறார்கள். எல்லாமே முடிந்துவிட்டது. இவ்வாறு கல்லறை ஒரு முற்றுப்புள்ளி
ஆகிவிட்டது. அவரது உறவினர்கள் இதோ எல்லாவற்றையும் தாய் மரியாவுடன் உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கல்லறை நம் வாழ்வுக்கும் ஒரு முற்றுப்புள்ளி.
முற்றுப்புள்ளி எனும்போது எல்லாவற்றுக்கும் முடிவு என்பதை விட முற்றுப்
புள்ளியுடன் அடுத்த ஒன்று ஆரம்பமாகிறது என்பதையும் நாம் எதிர்நோக்குகிறோம்.
கிறிஸ்துவின் வாழ்வு கல்லறையோடு முற்றுப்புள்ளி அடைவது அல்ல என்பதை அவரது போதனைகள்
எதிர்நோக்கைத் தந்திருக்கின்றன. நமது வாழ்வு கல்லறையோடு முடிந்து விடுவது அல்ல.
விண்ணகப் பேரின்பத்தை அடைய வேண்டும் என்பது தான் நமது குறிக்கோள். நம் உற்றார் உறவினர்களின்
பிரிவால் நாமும் மனம் வருந்தாமல் விண்ணகப் பேரின்பத்தை எதிர் நோக்கி நாமும்
காத்திருப்போம்.
செபம் :
கல்லறையில் துயில் கொள்ளும் ஆண்டவரே விண்ணகப் பேரின்பத்தை பெறுவதற்காக
எங்களிடமிருந்து இறந்து போன எங்கள் அன்பர்களும் உறவினர்களுமான முன்னோர்களை உம்
பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். எங்கள் பாவங்களே உம்மை கல்லறைக்குள் புகுத்தின
என்பதை எண்ணி கோபம் கொள்ளாமல் நாங்களும் எங்கள் கிறிஸ்தவ வாழ்வின் குறிக்கோளான
விண்ணகப் பேரின்பத்தை அடையும் பாக்கியத்தை தந்தருள்வீராக.
வழிநடத்துபவர்
: ஆண்டவரே ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: எங்களை ஆசீர்வதித்தருளும்.
அனைவரும்
: புனித இறையன்னையே, உமது திருமகனின் திருக்காயங்களை எனது. இதயத்தில்
பதியச் செய்தருளும்.
பீடத்தின் முன்
வாழ்வைத் தந்தீர் உம-திறப்பால்
நாங்கள் பெற்றோம் புது வாழ்வை
கல்லறையுள்ளில் துயின்றவரே
இறந்தோர்க்கருளிடுவீர் அருளை
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
தந்தையாம் இறைவா நீர் போற்றி
மகனாம் இறைவா நீர் போற்றி
ஆவியாம் இறைவா நீர் போற்றி
மூவோரிறைவனாம் நீர் போற்றி
இறைவா கனிந்தருள்வீ- ரென்மேல்
நாதா தயை செய்வீ- ரன்பால்
சிந்தனை :
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தவை
அநீதியான தீர்ப்பும், கொடுமையான தண்டனையும் ஆகும். இவை இரண்டும் நம் ஆண்டவரை
மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதித்தன. தன்னுடைய துயரப் பயணத்தின் போது தனது
அம்மாவின் தாய்ப்பாசமும், சிரேனே ஊரானாகிய சீமோனின் உதவும் மனமும், வெரோனிக்காவின்
ஆறுதல் தரும் செயல்களும், எருசலேம் மகளிரின் பரிதாபமான பார்வைகளும் அழுகுரல்களும்
அவரது மனச் சோர்வுக்கும் உடல் சோர்வுக்கும் சற்று ஆறுதலாக அமைந்திருந்தன.
இருப்பினும் கால்களின் தடுமாற்றத்தால் ஏற்பட்ட இடறல் மற்றும் சிலுவையின்
பெருஞ்சுமை போன்றவை அவரது மூன்று முறை வீழ்ச்சிக்கு காரணமாயின.
ஆனால் இறைத்திட்டத்திற்கு கீழ்ப்படிந்து நம் பாவங்களால்
உருவான கொடுமைகளின் தாக்கத்தின் காரணமாக தன்னையே வெறுமையாக்கி தியாகப் பலியாக்க
தானே தயாராகிறார். எல்லாவற்றையும் இழந்து விட்டார். எல்லாம் முடிவுற்றது.
சிலுவையிலே தன்னுயிரை நீத்து விட்டார். தாயின் மடியில் பிரியாவிடைக்காக
கிடத்தப்பட்ட போது வியாகுல மரியாவின் வலி எவ்வளவு துயரம் மிகுந்தது.
எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளியாக அவர் கல்லறைக்குள் அனுப்பப்படுகிறார்.
செபம் :
அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவரே துயரங்கள் பல விதம். இயல்பான துயரங்களும்
பிறரால் ஏற்படுகின்ற துயரங்களும் இவ்வுலகில் ஏராளமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு
வீழ்ச்சியின் போதும் சோர்ந்து விடுகின்றோம். எத்தனையோ நபர்கள் உதவுவதற்காகவும்
ஆறுதல் கூறுவதற்காகவும் நம்மோடு சார்ந்து இருக்கிறார்கள். எனினும் துயரத்தின் வலி
நம் மனதை அழுத்திக் கொண்டே இருக்கிறது. அன்பு இறைவா துயருறுவோரைக் காத்தருளும்.
துயருறுவோர் பேறுபெற்றோர் என்பதன் பொருளை உம் திருப்பாடுகளின் வழியாக புரிந்து
கொள்ள எங்களுக்கு வரமருள்வீராக.
பரலோகத்திலிருக்கிற...
அருள் நிறைந்த...
தந்தை மகன்...
பாடல்களின்
இசையைக் கேட்க தொடர்புக்கு
https://youtu.be/M0zpuhb3PDQ
முடிந்தது
Comments
Post a Comment