2022 மார்ச் 5 சனி செக் 7:8-14; உரோ 12:9-21; மத் 7:21-29



2022 மார்ச் 5 சனி செக் 7:8-14; உரோ 12:9-21; மத் 7:21-29 மார் எஃப்ரேம், மார் தியடோர் ஆகியோரின் சிறப்பு நினைவு மோறான் மார் பசேலியோஸ் கிளீமீஸ் காதோலிக்கோஸ் ஆண்டகை பதவியேற்ற நாள் (2007)


உரோ 12:9-21; 

9 உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள்.

10 உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்.

11 விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்.

12 எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள்.

13 வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்.

14 உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்; ஆம், ஆசி கூறுங்கள்; சபிக்க வேண்டாம்.

15 மகிழ்வாரோடு மகிழுங்கள்; அழுவாரோடு அழுங்கள்.

16 நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்; உயர்வுமனப்பான்மை கொள்ளாமல் தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள். நீங்கள் உங்களையே அறிவாளிகளெனக் கருதிப் பெருமிதம் கொள்ள வேண்டாம்.

17 தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள்.

18 இயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள்.

19 அன்பார்ந்தவர்களே! பழிவாங்காதீர்கள்; அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். ஏனெனில், மறைநூலில் எழுதியுள்ளவாறு, "பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன" என்கிறார் ஆண்டவர்.

20 நீயோ, "உன் எதிரி பசியாய் இருந்தால், அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடு இருந்தால், அவன் குடிக்கக் கொடு. இவ்வாறு செய்வதால், அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்."

21 தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!

மத் 7:21-29

21 என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?" என்பர்.

23 அதற்கு நான் அவர்களிடம், "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன்.

24 ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.

25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.

27 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது."

28 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர்.

29 ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்


Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை