2022 மார்ச் 13 ஞாயிறு முசறியோ ஞாயிறு (முடக்குவாத நோயாளியை குணமாக்குதல்) தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு
முசறியோ ஞாயிறு (முடக்குவாத நோயாளியை குணமாக்குதல்)
தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு லூக் 5:17-26; இச 31:19-30; சீஞா 9:10-18; எசே 33:23-33; எசா 5:18-25; திப 5:12-16; உரோ 5:1-11; மாற் 2:1-12
வின்சென்ட் மார் பவுலோஸ், தோமஸ் மார் அந்தோணியோஸ், சாமுவேல் மார் ஐரேனியூஸ், பிலிப்போஸ் மார் ஸ்தேபானோஸ் ஆண்டகையரின் ஆயர் திருநிலைப்பாடு (2010)
உரோ 5:1-11;
1 ஆகையால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்.
2 நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது.
3 அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும்,
4 மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம்.
5 அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
6 நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.
7 நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம்.
8 ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்.
9 ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?
10 நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ!
11 அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.
மாற் 2:1-12
1 சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.
2 பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.
3 அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர்.
4 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.
5 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
6 அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?
7 இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.
8 உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?
9 முடக்குவாதமுற்ற இவனிடம் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்பதா? "எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?
10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி,
11 "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ" என்றார்.
12 அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

Comments
Post a Comment