2022 மார்ச் 20 ஞாயிறு கினானைத்தோ ஞாயிறு (கானானியப் பெண்ணின் மகளைக் குணப்படுத்துதல்) தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு மாற் 7:24-30; விப 16:1-12; 1 சாமு 7:10-17; சீஞா 10:6-18; எசா 56:1-7; திப 20:22-32; உரோ 7:13-25; மத் 15:21-28
2022 மார்ச் 20 ஞாயிறு கினானைத்தோ ஞாயிறு
(கானானியப் பெண்ணின் மகளைக் குணப்படுத்துதல்) தவக்காலத்தின் நான்காம்
ஞாயிறு மாற் 7:24-30; விப 16:1-12; 1 சாமு
7:10-17; சீஞா 10:6-18; எசா 56:1-7;
திப 20:22-32; உரோ 7:13-25; மத் 15:21-28
உரோ 7:13-25;
13 அவ்வாறாயின், நல்லது என் சாவுக்குக் காரணமாக மாறிவிட்டதா? ஒருபோதும் இல்லை. எல்லாம் பாவத்தின் வேலைதான்! பாவம் தன் இயல்பை வெளிப்படுத்துவதற்காக நல்லதொன்றைக் கொண்டு எனக்குச் சாவை விளைவித்து, இவ்வாறு கட்டளையின் வழியாகப் பாவம் தன் கொடிய இயல்பை அளவுகடந்த முறையில் வெளிப்படுத்தியது.
14 திருச்சட்டம் ஆவிக்குரியது என்பது நமக்குத் தெரிந்ததே; ஆனால் நான் ஊனியல்பினன்; பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன்.
15 ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்.
16 நான் விரும்பாததைச் செய்கிறேன் எனில் சட்டம் நல்லது என நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்றாகிறது.
17 ஆனால் அவ்வாறு செய்வது என்னுள் குடிகொண்டிருக்கும் பாவமே; நான் அல்ல.
18 ஏனெனில், என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை.
19 நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன்.
20 நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.
21 நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல் முறையை என்னுள் காண்கிறேன்,
22 நான் கடவுளின் சட்டத்தைக்குறித்து உள்;ர மகிழ்ச்சியடைகிறேன்.
23 ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது.
24 அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?
25 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்; அவருக்கு நன்றி! சுருங்கச் சொல்லின், என் மனத்தால் கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கும் நானே என் ஊனியல்பினால் பாவத்தின் சட்டத்திற்கும் கட்டுப்பட்டிருக்கிறேன்.
மத் 15:21-28
21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.
22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார்.
23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, "நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர்.
24 அவரோ மறுமொழியாக, "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.
25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்" என்றார்.
26 அவர் மறுமொழியாக , "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார்.
27 உடனே அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்றார்.
28 இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

Comments
Post a Comment