25.3.2022 வெள்ளி மங்கள வாழ்த்துத் திருநாள் (இறைமக்களுக்கான திருப்பலி) யோவா 1:14-16; தொநூ 3:8-19; நீத 13:2-14; செக் 4:1-7; எசா 64:1-7; 1 யோவா 3:1-10; எபி 6:13-20; லூக் 1:26-38

மங்கள வாழ்த்துத் திருநாள்

(இறைமக்களுக்கான திருப்பலி)

யோவா 1:14-16;

தொநூ 3:8-19; நீத 13:2-14; செக் 4:1-7; எசா 64:1-7;

1 யோவா 3:1-10; எபி 6:13-20; லூக் 1:26-38


எபி 6:13-20;

13 ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக்கூற இயலாததால் தம் மீதே ஆணையிட்டு, 14 "நான் உன்மீது உண்மையாகவே ஆசிபொழிந்து, உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்" என்றார். 15 இதன்படி அவரும் பொறுமையோடு காத்திருந்து, பின் கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார். 16 தங்களைவிடப் பெரியவர் ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். அம்முடிவை ஆணை உறுதிப்படுத்தும். 17 அவ்வாறே, கடவுளும் தம் வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத் தம் திட்டத்தின் மாறாத் தன்மையை மிகவும் தெளிவாகக் காட்ட விரும்பி, ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிபடுத்தினார். 18 மாறாத் தன்மையுடைய இவை இரண்டையும் பொறுத்தவரையில் கடவுள் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது. அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும். 19 இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான, நங்கூரம் போன்றுள்ளது. இது கோவிலின் திரைச்சீலைக்கு அப்பால் சென்று சேர்ந்திருக்கிறது. 20 நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து இயேசு அங்குச் சென்று சேர்ந்திருக்கிறார். மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு என்னும் நிலையில் நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார்.


லூக் 1:26-38
26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.
27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. 28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். 29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். 30 வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். 31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். 32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். 34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார். 35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். 36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். 37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார். 38 பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை