பெதனிமலைக்கு பிரியாவிடை - பேராயர் மார் இவானியோஸ்


பெதனிமலைக்கு பிரியாவிடை

ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டவைகளாக இருந்தாலும் வேறுபட்ட இரண்டு விடயங்களே மனத்திடனும் மனமாற்றமும். (Conviction is one thing but conversion is another thing). கத்தோலிக்கத் திருஅவையின் புனிதரான பெரும் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு தனது உரையில் கூறினார். I can convince many but I cannot convertt one”. என்னால் பலருள் மனத்திடனை உருவாக்க முடியும். ஆனால் ஒருவனை மனமாற்ற என்னால் முடிவதில்லை.

கத்தோலிக்க திருச்சபையே கிறிஸ்து நிறுவிய ஒரே உண்மை திருச்சபை எனவும், அதனில் உறுப்பினராக வேண்டியது எனது ஆன்மாவின் மீட்புக்கு உறுதியான வேண்டுதலாக உள்ளது எனவும் மனத்திடன் கொண்டதால் கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்தார் எனவும் கூற முடியாது.

உண்மையை கண்டறிய தேவையான அறிவும் சிந்திக்கும் திறனும் ஒருவனில் மனத்திடனை உருவாக்கும் என்பது தெளிவு. ஆனால் இந்த மனத்திடன் அதாவது இறையருளின் ஊற்றாகிய வல்லமை பெற்ற செயலாகத் தான் இறுதியாக கத்தோலிக்க திருச்சபையோடு இணையும் நிலையை உருவாக்கியது.

 கட்டாயப்படுத்தப்பட்ட கடிதங்கள்

கத்தோலிக்கத் திருச்சபையோடு ஒன்றிணைவதற்கான செயலில் காலதாமதம் ஏற்படுத்துதல் ஆகாது. நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற வேண்டுதல்களோடு ஏராளமான கடிதங்களை மார் இவானியோஸ் பெற்றுக் கொண்டார். இவ்வாறு எழுதப்பட்ட இரண்டு கடிதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1926ல் மறுஒன்றிப்பு நிகழ்வுக்கு முன்னால் உண்மை கண்டறியும் நிலைக்கு துணை நின்ற பத்தனந்தட்டை மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் கத்தோலிக்க மறைப்பணித் தளங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த அருட்தந்தை கீவர்கீஸ் பீடிகயில் அவர்கள் பெதனிக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பி இருக்கின்றார்.

அருட்தந்தை கீவர்கீஸ் பீடிகயில் அவர்களது கடிதம்

Fr. Geevarghese Peeddikayil Omalloor

Pathanamthita Po

Travancore 18.1.1930

My dear Lord,

பெதனிக்கு வந்து ஆயர் அவர்களை நேரடியாக நான் கண்டு பேசியதில் மிகவும் மகிழ்கிறேன்.

திருச்சபை சம்பந்தமான ஒரு சில விடயங்கள் எனது அறிவுக்கு தெரிந்தாலும் அவற்றுக்காக நான் இது வரையிலும் துணிந்து முன்னேறவில்லை. ஆயர் அவர்கள் கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணையப் போவதான செய்திகள் இரண்டு ஆண்டு காலமாக பரவி வருகின்றன.

தற்போது திருத்தூதுவப் பீடத்திலிருந்து அதற்கான அனுமதி பெற்று கடைபிடிக்க வேண்டிய திருவழிபாட்டு முறையும் பெற்றுக் கொண்டதில் இன்புற்று துள்ளி மகிழ்கிறோம். ஆனால் ஒரு பெரிய கூட்டத்தினர் தற்போது உண்மையை புரிந்து கொள்ளாமல் எதிர்வலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து இடங்களிலும் பக்தியும் கீழ்ப்படிதலும் கொண்ட உண்மை யாக்கோபாயர்கள் பதனியோடு இணைந்து நிற்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆயர் அவர்களோடு உமது பாதச்சுவடுகளை பின்பற்றி நடப்பர் என்பது நிச்சயம்.

ஆயர் அவர்களின் ஒன்றிணைவதற்கான காலதாமதத்தை பலரும் பொறுமை இன்றி காண்கின்றனர். ஆயர் அவர்கள் அறிவிக்க வேண்டியவற்றை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். காலதாமதம் ஏற்படுவதனால் ஆயர் அவர்கள் உங்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடிய நிலை ஏற்படுகிறது.

இப்போது ஒவ்வொருவரும் உங்களையே அவர்கள் மிரட்டி வருகின்றார்கள். தங்களுக்கு துணை புரியும் ஆயர்களையும் இவ்வாறு மிரட்டுவது வருத்தமான காரியம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.                                          

எனவே இனியும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தைரியத்தோடு உதயசூரியனைப் போல மகிழ்வோடு வீரத் தலைமுறையாக அல்ல அவர்களுள் ஒரு தலைவராக மாறி தாகத்தோடு காத்திருக்கும் எங்களுக்கு இறைஅருள் வழங்கிட வேண்டுகிறேன்..

இங்கிலாந்து நாட்டில் கர்தினால் நியூ மான் என்பவருடைய மனமாற்றத்தைப் போன்று இவ்விடத்து கத்தோலிக்கர்களும் ஆயர்களும் கருதியுள்ளனர். கொல்லம் ஆயர் அவர்களும் அவ்வாறே கருதியுள்ளார்.

யாக்கோபாயர்களில் பலர் ஆயர் அவர்களுக்கு எதிர்வலை வீசிக்கொண்டு இருந்தாலும் ஆயர் அவர்களுடைய காலத்திலேயே ஆயர் அவர்கள் கூறியவை அவர்களுக்கு பெதனியும் புளிப்புச் சுவையூட்டும் புளிப்புமாவாக அமையும். உண்மைக்கு எதிராக நிற்க யாராலும் முடிவதில்லை.

பேதுருவின் தலைமைப் பொறுப்பும் மெசியாவின் இறை மனித குணங்களும் பற்றிய யாக்கோபா திருச்சபையின் தப்பறைகளை சீக்கிரமாக தெளிவிக்க வேண்டிய உண்மைகளாகும்.

ஆயர் அவர்கள் மறுஒன்றிப்படைந்தவுடன் உடனடியாக பெதனிக்கு சொந்தமாக சத்திய தீபம் போன்ற ஒரு நாளிதழையும் சில நூல்களையும் வெளியிட வேண்டும். ஆங்காங்கே கத்தோலிக்கக் கோட்பாட்டு விளக்க கருத்தரங்குகள் நடத்த வேண்டும்.

முதலாவது கருத்தரங்கினை நான் தங்கி இருக்கும் ஆலயத்திலேயே நடத்துமாறு வேண்டுகிறேன். அழகான ஆலயமும் அழகான ஆலய முற்றமும், தங்கும் வசதி படைத்த கட்டிடமும் கொண்ட இவ்விடத்தில் ஆயர் அவர்கள் மறுஒன்றிப்படைந்து வருகின்ற புண்ணிய நாளை நான் மிகவும் பேரார்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

இவையெல்லாம் நடந்து உடனடியாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டுகிறேன். அத்துடன் பெற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து ஆக்கமும் ஊக்கமும் உடனடியாக பெற்றுக் கொள்வீர்கள்.

ஆயர் அவர்கள் இன்னும் தாமதிப்பது ஆயரின் சொந்த நிலைக்கும் செயல்களுக்கும் நல்லதல்ல என ஒரு முறை கூட வேண்டுகிறேன்.

தங்களது உடல் நலனுக்காக வேண்டுகிறேன்.

தங்களது எளிய தாசன்

அருட்தந்தை கீவர்கீஸ் பீடிகயில்

 

முனைவர் ஆயர் பென்சிகரின் கடிதம்

நமது கதாநாயகரின் மறுஒன்றிப்பு உடனடியாக நடப்பதற்காக ஜெபங்களாலும் உபதேசங்களாலும் கடிதப் போக்குவரத்துக்களாலும் முயன்று கொண்டிருந்த கொல்லம் ஆயர் முனைவர் பென்சிகர் அவர்கள் இறுதியாக மார் இவாணியோஸ் அவர்களுக்கு அனுப்பிய கடிதம் பதனி மலையிலிருந்து உடனடியாக வெளியேறுவதற்கும் கத்தோலிக்க திருச்சபையை இணைந்து செயல்பட தூண்டுவதற்கும் தூண்டுகோலாக இருந்தது.

கொஞ்சம் காலதாமதத்தோடு மற்று ஆர்த்தோடக்ஸ் திருச்சபையின் குருக்களோடும் பொதுமக்களோடும் பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி அதிகமான மக்களோடு கத்தோலிக்க திருச்சபையில் இணைவது நல்லது என மார் இவாணியோஸ் அவர்கள் முனைவர் பென்சீகர் அவர்களுக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தின் பதிலுரையாக ஆயர் வெண்சிகர் அவர்கள் எழுதியுள்ளார்.

தங்கள் தலைவரோடு இணைந்து ஒரு கூட்டம் மக்கள் ஓரிடத்திற்காக பயணம் மேற்கொள்கின்றபோது பயணத்தின் இடையே அனைவருமாக ஒரு பெரிய குழிக்குள் விழுந்து விட நேர்கிறது. அக்கூட்டத்தின் தலைவருக்கு இந்த மக்களோடு கூறி அனைவரையும் குழியிலிருந்து வெளியேறச் செய்வதற்கு வழி நடத்த ஆசைதான். ஆனால் குழியிலே கிடக்கின்ற தலைவர் எப்படி தன்னையும் தன்னோடு வந்தவரையும் பாதுகாப்பாக மீட்க முடியும்? ஆனால் தலைவர் எவ்வாறேனும் கரைக்கு வந்த பின்னர் அக்குழிக்கு கயிறு அல்லது ஏணி அனுப்பி மற்று நபர்களையும் மீட்க முடியும்.

எனவே ஆயர் அவர்கள் உடனடியாக பெதனி மலையிலிருந்து உறவுகளோடு இணைந்து வெளியேறி கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணையுமாறு வேண்டுகிறேன். அதன் பின்னர் அகத்தோலிக்க திருச்சபையினரை கத்தோலிக்க திருச்சபைக்கு கொண்டு வருவதற்கு ஆயர் அவர்களால் கட்டாயமாக முடியும் என நம்புகிறேன்

கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிணைவது உறுதிப்படுத்திக் கொண்டும் வேகப்படுத்திக் கொண்டும் உள்ள ஒரு கடிதமாக மார் இவானியோஸ் ஆண்டகைக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இரு அருட்பணியாளர்களின் மறுஒன்றிப்பு

பெதனி ஆசிரமத்தின் உறுப்பினர்களாக இருந்த திருத்தொண்டர் ஒருவரும் குருவானவர் ஒருவரும் மனசாட்சியின் தூண்டுகோலால் கத்தோலிக்க திருச்சபையை விரும்பி பின்பற்றிட துவங்கினர்.

துவக்க காலத்தில் ஆசிரமத்தின் உறுப்பினராக இணைந்த சூரநாடு என்னுமிடத்தைச் சார்ந்த  கோசி என்னும் பெயர் கொண்ட திருத்தொண்டர் மற்றும் செங்கன்னூர் என்னுமிடத்தைச் சார்ந்த  அருட்தந்தை கி வர்கீஸ் ஆகியோர் கத்தோலிக்கத் திருச்சபையோடு இணயும் மிகப்பெரும் பேற்றினை பெற்றுக் கொண்டனர்.

 கோசி என்ற திருத்தொண்டர் ஆசிரமத் தலைவரின் அனுமதியோடு அங்கிருந்து வெளியேறி கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்து சாமுவேல் என்னும் பெயரை பெற்றுக்கொண்டு கர்மலித்தா துறவு சபையின் ஒரு உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

 பத்து ஆண்டுகளுக்கு மேலாக பெதனி ஆசிரமத்தின் பல்வேறு பொறுப்புகளால்அதனை நிர்வகித்து வந்த அருள்தந்தை கீவர்கீஸ் மனசாட்சியின் தூண்டுதலால் பெதனி ஆசிரமத்தை விட்டு சங்கனாசேரி மறைமாவட்ட தலைமையகத்திற்கு சென்று 1929 செப்டம்பர் 25ஆம் தேதி ஆயர் முனைவர் காலாசேரி அவர்களுடைய முன்னிலையில் நம்பிக்கை அறிக்கையை அவர் எடுத்துக் கூறி கத்தோலிக்கத் திருச்சபையின் உறுப்பினராக மாறினார்.

இவ்விருவரும் பெதனையாசிரமத்தில் இருந்து வெளியேறி கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து கொள்வதற்கு ஆசிரமத் தலைவராகிய மார் இவானியோஸ் அவர்கள் எந்த விதமான தடையாகவும் நிற்கவில்லை என்பது தெளிவு. “சற்று கால தாமதத்தோடு இருங்கள்! நாம் அனைவரும் இணைந்து கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து கொள்ளலாம்” என அடிக்கடி உபதேசமாக அவர்களோடு கூறி இருந்தார்.

கத்தோலிக்க திருச்சபையோடு இணைய வேண்டும் என்ற ஒரு பேரார்வத்தினால் அவர்கள் காலதாமதத்தை பார்த்துக் கொள்ளாமல் தாங்களாகவே கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து கொண்டார்கள்.

 புனித குழந்தை தெரேசாவின் பரிந்துரை

பெதனியில் நடைபெற வேண்டிய இப்பொண்ணிய செயலான மறுஒன்றிப்பு செயல் வடிவங்கள் முடிந்த அளவுக்கு சீக்கிரமாக நடக்கவிருப்பதை உலக மக்கள் பலர், பல ஆயிரங்கள் தினம் தோறும் ஜெபித்துக் கொண்டே இருந்தார்கள். மறைப்பணிகளின் பாதுகாவலரான புனித குழந்தை தெரேசாவின் பரிந்துரை வேண்டி இறைவனிடம் ஏராளமானவர்கள் ஜெபிக்கத் துவங்கினர்.

கத்தோலிக்க திருச்சபையை விரும்பி ஏற்றுக் கொண்ட அருட்தந்தை கி வர்கீஸ் சங்கனாசேரி செத்திப்புழ ஆசிரமத்தின் ஒரு துறவியாக வாழ்ந்திருந்த அருட்தந்தை மன்சிலினோஸ் டி ஓ சி டி வழியாக புனித குழந்தை தெரசாவின் சகோதரியான மதர் ஆக்னஸ் அவர்களுக்கு மறுஒன்றிப்பு சிறப்புற செப உதவி வேண்டி  ஒரு கடிதத்தை அனுப்பினார்.

பெதனி ஆசிரமத் தலைவர்களான ஆயர்களின் மறுஒன்றிப்புக்காக தினந்தோறும் புனித குழந்தை தெரசாவின் பரிந்துரை வேண்டி ஜெபிக்க வேண்டும் என்று மதர் ஆக்னஸ் அவர்களுக்கு பதில் கடிதம் அனுப்பி இருந்தார். மதர் ஆக்னஸ் மற்றும் அங்கு வசித்து வந்த அருட்கன்னியர்களும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் நடத்தக்கூடிய நவநாள் ஜெபங்களை இணைந்து வழிநடத்தினார்கள்.

தொடர்ந்து  1930 ஆகஸ்ட் மாதத்தில் அவர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

We believe that our little Saint will obtain grace for those two Prelates to enter the fold very soon.

திருச்சபையின் தொழுவத்துக்குள் நுழைய வேண்டிய ஆர்வத்தைக் கொண்டிருக்கும் இந்த இரண்டு தலைமை குருக்களுக்கும் நமது குழந்தை தெரசா அதிவேகமாக இளறைவனிடமிருந்து அருள் வரங்களை வாங்கி அருள்வார் என நாங்கள் விசுவசிக்கின்றோம்.

மதர் ஆக்னஸ் அவர்களும் குழுவினரும் நவநாள் ஜெபங்களை செபிக்கத் துவங்கி ஒரு மாதம் முடிவடைவதற்கு முன்னாலேயே புனித குழந்தை தெரசாவின் பரிந்துரை வழியாக பலனை அனுபவிக்கத் தொடங்கினோம் என்பது அற்புதமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

 வளைந்த சிலுவை சபதம் மேற்கொண்ட கயிற்றை உடைத்த கண்ணீர்த் துளிகள்

 கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்த பின்னர் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்களுக்கு கோதமங்கலத்தில் வைத்து கத்தோலிக்கர்கள் ஆடம்பரமான மிகப்பெரிய வரவேற்பு நல்கினார். அன்று நடந்த வாழ்த்துரை கூட்டத்தில் அப்பங்கின் பங்குத்தந்தை நடத்திய வரவேற்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

1653 நமது ஆயர்களில் சிலர் மட்டாஞ்சேரி வளைந்த சிலுவையில் கட்டிய கயிறு அறுக்கப்பட்டது இன்று தலைமை பீடத்தில் அமர்ந்திருக்கும் மேதகு ஆயர் அவர்கள் ஆவார் என நான் மகிழ்வுடன் அறிக்கை விடுகின்றேன்”.

இத்தகைய வாழ்த்துரையை கேட்டுக் கொண்டிருந்த மார் இவானியோஸ் ஆண்டகை அவர்கள் தனது பதில் உரையில் இவ்வாறு கூறினார்.

“வளைந்த சிலுவையின் கயிற்றை உடைக்கச் செய்தது தான் என்றே பங்குத்தந்தையின் வாழ்த்துரை கூறியதை கூறியிருந்தார். ஆனால் அவர் தவறாக கூறியதாக நான் மன்னிப்பு கேட்கிறேன். வளைந்த சிலுவை சபத்தின் கயிற்றை உடைத்தது நான் இல்லை. ஆனால் பல ஆயிரம் விசுவாசிகளின் கண்ணீர்த் துளிகள் தான். 1653 க்கு பின்னர் கேரளா கிறிஸ்தவர்களிடையே ஏற்பட்ட பிளவு அதாவது பல தப்பறைகளுக்கு பரிகாரம் உண்டாக்கவும் வளைந்த சிலுவை சபதத்தில் அகப்பட்ட புத்தன்கூர் மக்களை தாய் திருச்சபையோடு கத்தோலிக்க திருச்சபையில் திருப்பி கொண்டு வர வேண்டி உலகத்தின் நான்கு திசைகளிலும் தனிப்பட்ட முறையில் மலங்கரையில் உள்ள பல ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் இறை சன்னதியில் மனமுருகி கண்ணீரோடு ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கண்ணீர்த் துளிகள் தான் வளைந்த சிலுவை சபதத்தின் கயிற்றின் மீது பல ஆண்டுகளாக விழுந்து கொண்டிருந்தது. அதன்படியாக அக்கண்ணீரினால் பாதிப்படைந்த கயிறு இறுதியில் 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி தானாகவே அறுந்து போய்விட்டது. ஆகையால் வளைந்த சிலுவை சபதத்தில் நாள் கட்டப்பட்ட கயிறு உடைக்கப்பட்டது நான் என்பது அல்ல பல ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் துளிகள் தான்” என்பதை எடுத்துக்கூறினார்.

பெதனியின் மறுஒன்றிப்பும் கேரளத்தின் மறுஒன்றிப்பு இயக்கமுமான புதுக்குழந்தை பல ஆயிரக்கணக்கான மக்களின் ஜெபத்தின் பலனாக பிறந்தது என மேதகு ஆயர் அவர்கள் ஐயமின்றி தெளிவாக எடுத்துக் கூறினார்.

 ஆசிரமத்திற்கு உள்ளே நடந்த எதிர்ப்பலை

இறையருளாலும் நமது கதாநாயகனின் இடைவிடாத தீவிர முயற்சியாலும் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைவதற்கான சூழல் பலராலும் ஏற்புடையதாகவே அமைந்திருந்தாலும் பதனி ஆசிரமத்தின் உள்ளறையில் உள்ள பலருடைய எதிர்ப்பலை துவக்க காலம் முதலே இருந்தது.

ஆயர் அவர்களோடு வலங்கையாக துவக்க காலம் முதல் பெதனியின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த அருட்தந்தை அலக்ஸியோஸ் (பின்னர் ஆர்த்தோடக்ஸ் திருச்சபையின் மார் தேவோதோசியோஸ் ஆயர்) பெதனி ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை வகித்திருந்தார். ஆசிரமவாசிகளான குருக்களும் துறவிகளும் (சாதுக்கள் எனவும் அழைக்கப்படுவர்) அருட் கன்னியர்களும் மொத்தமாக தன்னைத் தொடர்ந்து கத்தோலிக்கத் திருச்சபையோடு மறுஒன்றிப்படைவர் என்ற திட நம்பிக்கை நமது கதாநாயகனுக்கு இருந்தது.

மறுஒன்றிப்பு பற்றிய ஆலோசனைகளும் கடிதப் போக்குவரத்துக்களும் நடந்து கொண்டிருந்த சூழலில் தனக்கு சார்பாக பேசவும் செயல்படவும் செய்திருந்ததனால் தனக்கெதிரான எதிர்ப்பலைகள் கொண்டவர்கள் ஆசிரமத்தில் காணப்படவில்லை என ஆயர் அவர்கள் நம்பியிருந்தார்கள். கனவிலும் கூட தனக்கு எதிரான எதிர்ப்பலை ஆசிரமத்திற்கு உள்ளே ஏற்படும் என்று அவர் எண்ணவில்லை.

பெதனி ஆசிரமத்தை வழிநடத்த பண உதவி பெற்றிட வேண்டி சிங்கப்பூருக்கு அருட்தந்தை அலக்சியோஸ் ஆசிரமத் தலைவரால் அனுப்பப்பட்டார். எதிர்பாராத விதமாக எந்தவிதமான பண உதவியும் பெற்றுக்கொள்ள முடியாமல் ஒரு மாத காலத்திற்கு மேலாக உடல்நிலை பாதித்ததனால் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தன்னால் எந்த விதமான நன்கொடையும் வசூலிக்க முடியவில்லை நோயினால் திரும்பி வந்தேன் என்று மார் இவானியோஸ் அவர்களுக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார். இவ்வாறு திரும்பி வந்த அவர் திருவல்லாவில் திருமூலம் என்னும் இடத்தில் மார் இவானியோஸ் ஆண்டகையை சந்தித்தார்.

அப்போதும் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைகின்ற விடயங்களைப் பற்றி பேசிய போது அதற்கு ஏற்ற கருத்துடைய சம்மதமே என்ற முறையில் அருள்தந்தை அலெக்ஸ் அவர்களும் ஆயர் அவர்களோடு பதிலளித்திருந்தார். எந்தவிதமான எதிர் கருத்துக்களும் அவர் பேசவில்லை.

நோயினால் பாதிக்கப்பட்டு பயணக் களைப்பு இருப்பதனால் பெதனி ஆசிரமத்திற்கு சென்று ஒரு சில தினங்கள் ஓய்வெடுக்கவும்  அன்புக் கட்டளையிட்டார். இவ்வாறு பெதனிக்கு செல்வதற்கு முன்னால் தனது தந்தையின் சகோதரன் அருட்தந்தை அலெக்ஸ் அந்தரையோஸ் மட்டக்கில் என்பவரை சந்திக்க கோட்டயம் பழைய குருத்துவ பயிற்சியகத்திற்கு சென்றார். அத்துடன் ஆயர் வட்டசேரில் அவர்களையும் அவர் சந்தித்தார்.

மறுஒன்றிப்பு முயற்சிகளுக்கு எதிரிகளாயிருந்த இவ்விருவரும் அருட்தந்தை அலக்சியோஸ் அவர்களோடு மறுஒன்றிப்பு பற்றி எதிராக பேசவும் ஒருபோதும் மறுஒன்றிப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கவோ அவருக்கு சார்பாக பேசவோ அவரோடு கூட செயல்படவோ வேண்டாம் என அறிவுரையும் வழங்கினர்.

“எனது மகனே இந்த முதிர்ந்த வயதில் என்னை விட்டுப் போகாதே!” என தனது தந்தையின் சகோதரர் கண்ணீரோடு கூறிய வார்த்தைகள் அருட்தந்தை அலக்சியோஸ் அவர்களுடைய இதயத்தை தொட்டது. மட்டுமல்ல வட்டச்சேரில் ஆயர் அவர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருடைய அறிவுரைகளும் வேண்டுதல்களும் ஆசிரமத் தலைவரான மார் இவானியோஸ் அவர்களின் கட்டளைகளுக்கு எதிரான ஒரு மனநிலையை அருள்தந்தை அலெக்ஸ் அவர்களுடைய உள்ளத்தில் ஏற்படுத்தியது.

இவ்வாறு எதிர்மறை நிலையோடு பெதனி ஆசிரமத்திற்கு வந்தடைந்த அருட்தந்தை அலக்சியோஸ் ஆசிரமத் தலைவரின் கட்டளைக்கு ஏற்ப ஓய்வெடுப்பதற்கு மாறாக மறுஒன்றிப்பு இயக்கத்தைப் பற்றிய முயற்சிகளுக்கு எதிரான கருத்துக்களை பரப்பத் துவங்கினார்.

துறவிகள் யாரும் மார் இவானியோஸ் ஆண்டகையோடு கத்தோலிக்க திருச்சபையில் இணைய வேண்டாம். சுறியானித் துறவியர்களை உரோமாத் திருச்சபையோடு இணைக்கின்ற முயற்சிக்கு யாரும் முன் வர வேண்டாம் என பேசத் துவங்கினார். தாய்த் திருச்சபையான யாக்கோபாயா திருச்சபையை விட்டுச் செல்வது மிகப்பெரிய பாவம் என அருட்தந்தை அலக்சியோஸ் துறவிகளோடு கற்பிக்கத் துவங்கினார். இத்தகைய எதிர் கருத்துக்களை ஆசிரமத் துறவியர்கள் ஒரு சிலர் நம்பி ஏற்றுக் கொள்ளவும் செய்தனர்.

இவ்வாறு ஆசிரமத்தில் உள்ள பலருடைய உள்ளங்களிலும் தனது எதிர்ப்பலை கருத்துக்களை பரப்பியதை வரவேற்கப்பட்டதாக்க் கொண்டு தொடர்ந்து ஆசிரமத்திற்கு வெளியே உள்ள பல ஆலயங்களிலும் தங்கி இருந்த குருக்களோடு கடிதம் மூலமாக மறுஒன்றிப்புக்கு எதிரான கருத்துக்களை விளக்கமாக அனுப்பவும் செய்தார்.

புறமற்றம் என்னும் ஆலயத்தில் தங்கியிருந்த அருட்தந்தை பர்ஸ்லிபா மற்றும் மங்கலம் ஆலயத்தில் தங்கியிருந்த அருட்தந்தை ஜோப் ஆகியோருக்கு மறுஒன்றிப்பு முயற்சி ஒரு ஏமாற்று வேலை எனவும் ஒருபோதும் மார் இவானியோஸின் கருத்துக்களோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டாம் எனவும் கடிதப் போக்குவரத்து நடத்தினார். திருமூலம் என்னும் இடத்தில் தங்கி இருந்த ஆயர் மார் இவானியோஸ் மேற்குறிப்பிட்ட குருக்களிடமிருந்து இத்தகைய வருத்தமூட்டும் செய்திகளை அறிந்து கொண்டார்.

ஓய்வெடுப்பதற்காக ஆசிரமத்திற்கு அனுப்பப்பட்ட அருட்தந்தை அலக்சியோஸ் இவ்வாறு தன்னுடைய கருத்துக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை அறிந்து மிகவும் வருந்தினார்.  உடனடியாக மறுநாளே மார் தியோபிலோஸ் அவர்களோடு இணைந்து பெதனி ஆசிரமத்திற்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தார்.

மார் இவானியோஸ் ஆண்டகை அவர்களும் மார் தியோபிலோஸ் ஆண்டகை அவர்களும் பெதனி ஆசிரமத்தை வந்தடைந்ததுடன் அருட்தந்தை அலக்சியோஸ் அவர்களின் வெளிப்படையான எதிர்ப்பலைகளின் வலிமை குறையத் துவங்கியது. வெளிப்படையான எதிர்ப்பறை கருத்துக்களை பரப்புவதை நிறுத்தி இரகசியமாக ஒவ்வொரு தனி நபரோடும் அறிவுரைகளை வழங்கி எதிர்ப்பலைகளை பரப்பிக் கொண்டிருந்தார்.

ஆனால் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்கள் திருச்சபை சார்ந்த விடயங்களை பற்றிய பயிற்சிகள் நடத்தவும் ஆசிரம வாசிகளோடு சந்தேகங்களை கேட்கச் செய்து அவற்றிற்கு உடனடியாக பதில்களை வழங்கியும் திருச்சபை விடயங்களை கற்பித்து வந்தார். அருட்தந்தை அலெக்ஸ்யோசும் ஓரிரு துறவியரும் தவிர மீதியனைவரும் இத்தகைய வகுப்புகளில் கலந்து கொண்டு இருந்தனர். ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆசிரமவாசிகள் கத்தோலிக்க திருச்சபை விடயங்களை அறிந்து கொண்டு தனக்கேற்ற கருத்து நிலைப்பாடு அடைந்து கொண்டனர் என ஆயர் அவர்கள் அறியத் துவங்கினார்.

அருட்தந்தை அலெக்ஸ்யூஸ் மற்றும் குழுவினர் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பலைகளை ரகசியமாக பரப்பிய வண்ணம் செயல்பட்டனர். இச்செயல் ஆசிரமத் தலைவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது என்றாலும் எதிர்த்து நிற்கும் குழுவினரோடு அன்பு கலந்த நிலையால் உறவில் நிலைத்திருந்தார். தொடர்ந்தும் தங்களுடைய முயற்சிகள் இறைவிருப்பத்தின் படியாக வெற்றி பெற வேண்டி இரண்டு ஆயர்களும் இறைவனின் திருசன்னதியில் ஜெபித்துக் கொண்டே இருந்தனர்.

அவ்வாறு பெதனி மலையிலிருந்து வெளியேற வேண்டிய நாள் மற்றும் நேரம் போன்றவற்றை மதிப்புக்குரிய ஆயர்கள் தீர்மானித்து விட்டனர். 1930 ஆகஸ்ட் 20ஆம் தேதி (1106 சிங்கம் 4) அன்று ஆசிரமத்தில் இருந்து வெளியேறி படகு வழியாக பம்பா ஆற்றை கடந்து கோழஞ்சேரி என்னுமிடத்தை அடைந்து அவ்விடத்திலிருந்து பேருந்து மூலமாக திருவல்லாவுக்கு வந்து வாடகைக் கட்டிடம் ஒன்றில் தங்கியிருந்து பணிகள் செய்திட அவர்கள் தீர்மானித்து இருந்தனர். திருவல்லாவில் தங்குவதற்குள்ள கட்டிடம் வாடகைக்காக பெற்றுக்கொள்ளவும் குறிப்பிட்ட நாளில் கோழஞ்சேரி என்னும் இடத்திற்கு பேருந்து அனுப்புவதற்கும் கிளீலேத்து சாக்கோ என்ற நபரிடம் ஒப்படைத்து திருவல்லாவுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தனர்.

ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி மாலை மன்றாட்டைத் தொடர்ந்து சிற்றாலயத்தில் வைத்து ஆசிரமத் தலைவர் ஒரு சிறிய உரை ஒன்று நிகழ்த்தினார். அதனுடைய கடைசி பகுதி இவ்வாறாக இருந்தது. “இந்த பெதனி மலையிலிருந்து நாளை காலையில் நாங்கள் வெளியேறுகின்றோம் என தீர்மானித்து விட்டோம் என்பதை உங்களிடம் அறிவித்துக் கொள்கிறேன். எங்களோடு இவ்விடத்திலிருந்து வெளியேறி கத்தோலிக்கத் திருச்சபையோடு மறுஒன்றிப்படைய விருப்பமுடைய நபர்கள் இரவு 12 மணிக்கு முன்னரே எங்களை தெரிவிக்க வேண்டுகிறேன். எங்களோடு இணைந்து வருவதற்கும் வராமல் இருப்பதற்கும் உங்களுக்கு பரிபூரண சுதந்திரம் ஆசிரமத் தலைவராகிய நான் வழங்குகின்றேன். இரவு 12 மணி வரை நாங்கள் இச்சிற்றாலயத்தில் அமர்ந்திருப்போம்.

இச்சூழலில் ஆசிரமவாசிகளான அருட்தந்தை அலக்சியோஸ், திருத்தொண்டர் அலெக்சாண்டர் மற்றும் 3 துறவியர்கள் தவிர மீதி அனைவரும் இரவு 11:30 மணிக்கு முன்பாக ஆசிரமத் தலைவரின் முன்னிலையில் வந்து நாங்கள் உங்களோடு பெதனி மலையிலிருந்து வெளியேறி உங்களை பின்தொடரத் தயாராக இருக்கிறோம் என அறிவித்தனர். ஆனால் தன்னோடு பெதனி மலையிலிருந்து வெளியேறி கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைவேன் என எதிர்பார்த்திருந்த திருத்தொண்டர் அலெக்சாண்டர் (பின்னர் அருட்தந்தை செராபியோன்) இரவு 11.30 மணி ஆன பிறகும் காணாமல் இருந்ததனால் நமது கதாநாயகன் கூடுதலாக வருந்தினார். மீண்டும் திருத்தொண்டார் அவர்களுடைய மனமாற்றத்திற்காக தொடர்ந்து இறைவனோடு ஜெபித்துக் கொண்டிருந்தார். இறை விருப்பத்தால் 11.45 மணியளவில் இறைத் திட்டத்திற்கு ஏற்றபடியாக திருத்தொண்டர் அலக்சாண்டர் அவர்கள் சிற்றாலயத்தில் வந்து ஆயர் அவர்களுடைய முன்னிலையில் முழந்தாட்படியிட்டு தானும் பெதனி மலையிலிருந்து வெளியேறி கத்தோலிக்க திருச்சபையில் மறுஒன்றிப்படைய தயாராக உள்ளேன் என அறிவித்தார். இவ்வாறு தான் எதிர்பார்த்த அனைவரும் தன்னோடு உள்ளனர் என்ற மனதிருப்தியோடு இறைவனுக்கு நன்றி கூறினார்.

 “பெதனி மலையே புஷ்பஸ்லோமோ”

பெதனி மலையிலிருந்து ஆசிரமத் தலைவரும் துறவியர்களும் வெளியேறிய நிகழ்வினை அருட்தந்தை பர்சலிபா ஓ ஏ சி அவர்கள் “பெதனையிட சரித்திரத்தில்” அதாவது  “பெதனியின் வரலாற்றில்” என்ற கையெழுத்துப் பிரதியின் ஒரு பகுதியில் வர்ணனைகளால் அவர் எழுதியுள்ளார்.

பெருநாட்டின் முண்டன் மலையில் அமைந்துள்ள பெதனி ஆசிரமமும் கட்டிடங்களும் விட்டொழிந்து அதனை நிறுவியவரான மார் இவானியோஸ் ஆண்டகையும் அவரது சீடர்களாகிய துறவியர்களும் அவ்விடத்து அருட்தந்தை அலெக்சியோஸ் மற்றும் ஆசிரமவாசிகளோடும் பிரியாவிடை கூறுகின்ற நாள் வந்துவிட்டது.

துறவியர்களின் உபயோகத்திற்கான பொருட்களை மட்டும் கைகளில் எடுத்தால் போதும். மீதி உள்ளவை எல்லாமே இங்கே இருக்கட்டும் என்ற ஆயரின் கட்டளைக்கு ஏற்ப அனைவரும் அவரவருடைய பொருள்களை மட்டும் எடுத்து வெளியே வைப்பதற்கான பணிகளை செய்கின்ற போது ஆசிரமத்துக்கு வெளியே ஆலயங்களில் தங்கி இருந்த பங்குத்தந்தைகளான அருட்தந்தை பர்ஸ்கீப்பாயும் அருட்தந்தை பர்சலிபாயும் அவ்விடத்திற்கு எதேச்சையாக வந்தடைந்தனர்.

அவர்களும் துறவியர்களோடு கூட இணைந்து ஒவ்வொருவருடைய பொருள்களையும் வெளியேற்றினர். அனாதை பிள்ளைகளின் மிகவும் வயது குறைந்தவர்களை மட்டுமே அழைத்துக் கொண்டு செல்வதற்கு தீர்மானித்தனர். பொருட்களை படகில் கொண்டு செல்வதற்கு வசதியாக ஆற்றங்கரை ஓரத்திற்கு கொண்டு செல்ல வேலையாட்கள் தயார் ஆயினர். ஆயர்களும் துறவியர்களும் ஆசிரமவாசிகளும் பிரியா விடை  கூறுவதற்கான நேரம் பக்கத்தில் வந்தது. அதுவும் வந்து விட்டது.

“நாம் அனைவரும் சிற்றாலயத்திற்கு செல்வோம்” என்று ஆயர் அவர்கள் கட்டளையிட்டார். வருந்தும் இதயங்களோடு, அதனால் வெளியேறுகின்ற கண்ணீர்த் துளிகள் ஒவ்வொருவருடைய கன்னங்களிலும் வழிந்தோட ஆயர் அவர்களின் காலடிகளைத் தொடர்ந்து அனைவரும் சிற்றாலயத்திற்குள் நுழைந்தனர்.

இரவு பகலாக நற்கருணைப் பேழையில் பள்ளி கொள்ளும் அன்புத் தலைவன் சன்னிதியில் தலை குப்புற வீழ்ந்து வணங்கி ஒவ்வொருவரும் தங்களுடைய துயரத்தை கண்ணீரோடு இதயம் நொறுங்கிய ஜெபங்கள் வழியாக காணிக்கையாகினர். சற்று நேரத்திற்குப் பின்னால் துடிக்கின்ற இதயத்தோடும் விறைக்கின்ற உதடுகளோடும், “நாம் அனைவரும் எழும்புவோம்” என ஆயர் கூறினார்.

“நாம் யாவரும் எதுவும் இல்லாதவராக இங்கே வந்தோம்! இதோ இப்போது எதுவுமே இல்லாதவர்களாக வெளியேறுகின்றோம்! “ தொண்டையில் இருந்து வெளியேறிய இத்தகைய வருந்தும் சொற்கள் அடங்கிய வார்த்தைகள் மிகப்பெரிய கூட்ட அழுகைக்கு மீண்டும் காரணமாக்கியது.

துயரத்தால் இதயத்தில் அணையாக கட்டிப் பாதுகாக்கப்பட்டிருந்த கண்ணீர்த்துளிகள் விழிகளின் துளைகள் வழியாக வெளியேறி ஒழுகத் துவங்கியது. அந்த நேரத்துச் சூழலை எடுத்துரைப்பது மிகவும் கடினமே. கொஞ்ச நேரம் அமைதியாக அனைவரும் துயரத்தை மனதில் ஒதுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தபோது “நாம் அனைவரும் வெளியேறுவோம்” என ஆயர் அவர்கள் எடுத்துரைத்தார். இப்போதும் பலர் துயரத்தால் தங்களது அழுகையின் குரலை வெளிக்காட்டினார். இந்நாள் வரை ஆன்மீக வலிமை தந்திருந்த நற்கருணை நாதரை இன்னும் எங்களால் இங்கே காண முடியாது, தொடர்ந்து கத்தோலிக்க ஆலயத்தில் நற்கருணையில் அவரை நாங்கள் காண்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு ஒருமுறை கூட அவரோடும் பிரியா விடை வாங்கி இரு கைகளை கூப்பியவாறு அனைவரும் வெளியேறினார்கள்.

அருட்தந்தை அலெக்சியோஸ் இவற்றையெல்லாம் கண்டவாறு மனம் வருந்தி திருப்பி தனது அறைக்குள் சென்றார். இங்கு நடந்த நிகழ்வுகளுக்கு எதிலுமே எதிர்ப்பு காட்டியதைப் போன்று செயல்பட்டிருந்தார். இருப்பினும் பன்னிரு ஆண்டுகள் ஒரே இடத்தில் சகோதர உறவால் நிலைத்திருந்த சகோதரர்களின் பிரியா விடை அவருடைய மனதிலும் அவருடைய இதயத்திலும் மிகுந்த வருத்தத்தை உருவாக்கி துவங்கியது. மார் இவானியோஸ் ஆண்டகை அவர்களும் அவரது சீடர்களும் சிற்றாலயத்திலிருந்து இறங்கி மனம் ததும்புகின்ற இதயத்தோடும் கண்ணீர் ஒழுகுகின்ற கன்னங்களோடும் அருள்தந்தை அலக்சியோஸ் அவர்களோடு பிரியா விடை கூறுவதற்காக அவரது அறைக்குச் சென்றனர்.

அவரது அறைக்குச் சென்றபோது அவரும் மிகப்பெரிய பிரிவின் வேதனையை அனுபவிப்பதாக கட்டிலில் சோர்ந்து படுத்திருந்ததாக அவரை கண்டனர். தன்னால் அனைவரும் இவ்வாறு பிரிந்து செல்கின்றனர் என அவர் வருந்தினார். என்ன செய்வதென்று அறியாமல் அவ்விடத்திலேயே அனைவரும் திகைத்து நின்றனர். இருப்பினும் மனவேதனையால் துடிக்கின்ற அவருக்கு பணிவிடை செய்வது தர்மம் அல்லவோ. அவர் நம்மோடு வெறுப்பு காட்டினாலும் அவரோடு நாம் அன்பில் குறைவும் வெறுப்பும் காட்டக்கூடாது என அனைவரும் அவருக்கு பணிவிடைகளை செய்யத் துவங்கினர்.

ஒரு சிலர் அவருடைய கால்களை அசைத்து தேய்த்துக் கொடுக்கின்றனர். சிலர் கைகளை அசைத்து தேய்த்துக் கொடுக்கின்றனர். ஒரு சிலர் விசிறியால் காற்று கிடைக்கச் செய்கின்றனர். சற்று கலக்கமான ஒரு சூழல். மன வேதனையால் தான் அத்தகைய நிலை ஏற்பட்டது என அனைவருக்கும் தெரியும். சற்று நேரத்திற்கு பின் அனைத்துமே சீரானது.

ஆயர் அவர்கள் அவரை அழைத்தார். உடனடியாக கண்களை திறந்தார். அனைவரையும் ஒருமுறை தனது வருந்தும் கண்களால் உற்று நோக்கினார். ஆயர் அவரது தலையில் கை வைத்து ஜெபித்தார். அசைய வலுவின்றி அப்படியே கட்டிலில் படுக்கையில் இருந்தார். ஆயர் அவர்கள் தனது கைகளில் அணிந்திருந்த றிஸ்ட் கைக்கடிகாரம் ஒன்றை அவிழ்த்து அருட்தந்தை அவர்களுக்கு வழங்கி “இதோ எனது கடைசி பரிசு. நாங்கள் செல்கிறோம்”. இது மட்டுமே அவரால் கூறுவதற்கு முடிந்தது. வேறு யாருக்கும் எந்த ஒரு வார்த்தையும் பேசுவதற்கு முடியவில்லை.

தற்காலிகமாக ஏற்பட்ட உடல்நிலை பாதித்த சூழலில் அவரை தனியாக அங்கு அமர்த்தி விடுவது நல்லதல்ல. அது மனிதத்துவம் அல்ல என சிந்திக்கின்றார். அருட்தந்தை அலெக்ஸ்சியோஸ் அவர்கள் அவரது உடல் சீராகும் நிலை வரையிலும் அருள்தந்தை ஜோஸ்வா அவர்கள் அவரோடு கூட இருந்து கவனிக்க வேண்டும் என அன்பு கட்டளையிட்டு ஒவ்வொருவரும் தங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு மன வருத்தத்தோடு மெதுவாக நடந்தே நுழைவு வாயிலை அடைகின்றனர்.

அனைவரும் தங்களுடைய பொருள்களை கீழே வைத்துக் கொள்ளுங்கள் ஜெபித்து விட்டு செல்வோம் என்பதன் படியாக கீழே அனைவரும் தங்களுடைய பொருட்களை வைத்தனர். ஆயர் அவர்கள் ஜெபித்தார். அனைவரும் பதிலுரை மன்றாட்டுக்களைச் சொல்லினர்.  

(பெதனியின் வரலாறு கையெழுத்துப் பிரதி பக்கம் 109 முதல் 111 வரை)

 வெண்ணிக்குளம் நோக்கிய பயணமும்  வசித்தலும்

இவ்வாறு முண்டன் மலையிலிருந்து தங்களது கைகளில் தங்களுக்கு சொந்தமான பொருள்களையும் சுமந்தவாறு கீழ்நோக்கி வரிசையாக வெளியேறிய ஏறக்குறைய இருபது துறவியர்களின் இப்பயணம் ஒரு திருப்பயணம் மேற்கண்டதைப் போன்ற அனுபவமாக இருந்தது. எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு - பாலைவனத்தில் இருந்து விளை நிலத்திற்கு - வன்முறைகளிலிருந்து சமாதானத்தின் துறைமுகத்திற்கு - யாக்கோபாயா திருச்சபையிலிருந்து கத்தோலிக்க திருச்சபை நோக்கி – மார் இவானியோசின் தலைமையில் புறப்பட்ட கிறிஸ்துவின் படைவீரர்களின் திருப்பயணமாக அமைந்திருந்தது அது.

ஆசிரமத்திலிருந்து வெளியேறி தெருவுக்கு வந்ததுதம் கூட்டத்திலிருந்து துறவி ஒருவர் தலைவரிடம் சென்று கேட்டார். “தந்தையே நாம் எங்கே செல்கிறோம்?” அப்போது மார் இவானியோஸ் அவர்கள் சாந்தமான குரலில் பதிலளித்தார், “மகனே எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வார்”.

இவ்வாறு மெதுவாக நடைபயணம் மேற்கொண்ட திருப்பயணிகள் மடத்துமூழி எனப்படும் ஆற்றுக்கடவில் வந்தடைந்தனர். அவ்விடத்தில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த மூன்று சிறிய படகுகளில் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் வைத்துக்கொண்டு ஆயர்களும் துறவியர்களும் கிளம்பினர். வெண்ணிக்குளத்திலிருந்து முந்தின நாள் பெதனிக்கு வந்திருந்த மேடையில் பாப்பி என்பவரும் சுருளுகுழியல் ஸ்கரியா என்பவரும் ஆக மொத்தம் 25 நபர்கள் படகுகளில் பயணம் மேற்கொண்டார்கள். பாறைக் கூட்டங்கள் நிறைந்த கக்காட்டாற்றில் கடினமான பயணம் செய்து படகு வடசேரிக்கரை என்னும் இடத்தை சென்றடைந்தது.

ஆயரின் நெருங்கிய தோழராக இருந்த பனச்சிமூட்டில் மி. மாணி என்பவர் அனைவரும் அமர்ந்து செல்வதற்கு வசதியான சற்று பெரிய படகு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த படகில் அனைவரும் ஏறினர். இவ்வாறு பம்பா ஆற்றைக் கடந்து கோழஞ்சேரி நோக்கி படகு புறப்பட்டது..

பயணத்திற்கிடையே ராந்நி என்னும் இடத்தை அடைந்தபோது அருள்தந்தை பர்ஸ்கீப்பா பின்வரும் வேண்டுகோளை ஆயர் அவர்களிடம் சமர்ப்பித்தார். “ஆயர் அவர்களே நாம் திருவல்லாவுக்கு சென்று தங்குவதாக இருந்தால் பலவிதமான கடினமான சூழல்களை அனுபவிக்க வேண்டியது வரும். முதலாவதாக 22 பேருக்கு தங்குவதற்கான இட வசதி கிளிலேத் மேனேஜர் வாடகைக்கு எடுத்த கட்டிடத்தில் இல்லை. இரண்டாவதாக திருவல்லாவில் உள்ள கிறிஸ்தவர்கள் நமது மறுஒன்றிப்பு முயற்சிகளோடு ஒத்துழைப்பவர்களும் அல்ல. அவர்களிடம் இருந்து நமக்கு ஒத்துழைப்புக்குப் பதிலாக பாதிப்புகளே அதிகமாக வரும். மூன்றாவதாக உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே திருவல்லா செல்ல வேண்டும் என்ற முடிவு நல்லதல்ல என தெரிவிக்கின்றேன். ஆனால் வெண்ணிக்குளம் செல்வோம் என்றால் இத்தகைய கடின அனுபவங்கள் எதுவுமே நாம் நேரிட வேண்டிய சூழல் உருவாகாது. நமக்கென ஒரு பள்ளிக்கூடமும் ஆலயமும் அங்கே உள்ளது. அங்குள்ள கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவரல்லாதவர்களும் நம்மோடு ஒத்துழைப்புக்கு தயாராக உள்ளவர்கள் மட்டுமே. அவர்கள் நமக்கு பலவிதமான உதவிகள் செய்வார்கள். எனவே வெண்ணிக்குளம் நோக்கி சென்று தங்குவது நல்லது” என்றார்.

அருட்தந்தை பர்ஸ்கீப்பா என்பவர் கத்தோலிக்கத் திருச்சபையோடு மறுஒன்றிப்படைய வேண்டும் என்ற திட நம்பிக்கையோடு தான் திருப்பயணிகளோடு இணைந்து பெதனியிலிருந்து பயணம் புறப்பட்டார். ஆனால் அருள்தந்தை அலக்ஸியோஸ் மற்றும் மறுஒன்றிப்புக்கு எதிராக செயல்பட்ட பலருடைய கட்டாயப்படுத்தலால் ஆர்த்தடோக்ஸ் திருச்சபையில் தொடர்ந்தார். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஆர்த்தடோக்ஸ் திருச்சபையில் இருந்து வெளியேறி யாகோபாய சபையில் சேர்ந்து ரம்பான் திருப்பட்டம் பெற்றுக் கொள்ளவும் செய்தார்.

ஆயர்களும் துறவியர்களும் அருட்தந்தை பர்ஸ்கீப்பா கூறிய கருத்துக்கள் நல்லது என அறிந்து கொள்ளவே கோழஞ்சேரிக்கு செல்லும் வழியிலிருந்து படகை ராந்நி என்னும் இடத்திற்கு செல்லுமாறு பணித்தனர். இவ்வாறு ராந்நி என்னும் இடத்திலிருந்து மீண்டும் பேருந்து ஒன்றில் பயணித்து மாலையில் வெண்ணிக்குளம் என்னும் இடத்துக்கு  சென்றடைந்தனர். தங்குவதற்கு தேவையான வசதிகள் பெரிதாக இல்லாமல் இருந்தாலும் மேமலா என்னமிடத்தில் அமைந்திருந்த துவக்கப் பள்ளி ஒன்றி இரவு திருப்பயணக் குழுவினர் தங்கினர்.

பெதனியின் ஆயர்களும் துறவியர்களும் ஆசிரமத்திலிருந்து வெளியேறி மேமலா துவக்கப் பள்ளியில் வந்து தங்கி உள்ளனர் என்ற செய்தி காட்டுத்தீப் போல வெண்ணிக்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவியது. மறுநாள் அதிகாலையில் பல மதத்தைச் சார்ந்த மக்கள் திருப்பயணக் குழுவின் தலைவரை சந்திக்கவும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் என்ன என கேட்டு பெற்றுக் கொடுக்கவும் அவர்கள் தயாராகினார்.

சிறிய துவக்கப் பள்ளியில் துறவிகள் அனைவருக்கும் தங்குவதற்கு போதுமான வசதி இல்லாமல் இருந்ததால் அவ்விடத்தைச் சார்ந்த ஒரு முக்கிய நபர் ஒருவர் காஞ்ஞிரத்துமூட்டில் குட்டி தான் தங்கி இருந்த கட்டிடத்தை திருப்பயணக் குழுவினருக்காக காலியாக்கி கொடுத்தார். அவ்வாறு மறுநாள் துறவியர்கள் தங்களுடைய தங்கும் இடத்தை அவருடைய வீட்டிற்கு மாற்றினர். ஆசிரமத்தின் தலைவரோ திருமூலபுரத்திற்கு சென்று தங்கவும் அடிக்கடி வெண்ணிக்குளம் வந்து ஆசிரம துறவியர்களின் விபரங்களை கேட்டு அறியவும் செய்து கொண்டிருந்தார்.

திரிசங்கு சொர்க்கத்தில் அனுபவங்கள்

கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு நமது கதாநாயகனும் பெதனி ஆசிரமத்தின் துறவியர்களும் பெதனி மலையிலிருந்து வெண்ணிக்குளம் நோக்கி வந்து தங்கத் துவங்கினர்.

கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படையவும் முடியவில்லை. பெதனி ஆசிரமத்தில் இருந்து வெளியேறவும் செய்தோம்.  இவ்வாறு ஆயர்களும் துறவியர்களும் ஏறக்குறைய ஒரு மாத காலம் “திரிசங்கு சொர்க்கம்” என்ற நிலையில் வெண்ணிக்குளத்தில் தங்கி இருந்தனர். இக்காலத்தில் பலவிதமான சிரிப்பூட்டும் மற்றும் சங்கடமூட்டும் பல அனுபவங்கள் அவர்களால் அனுபவித்து வாழ வேண்டிய சூழலும் ஏற்பட்டிருந்தது.

ஆர்த்தோடக்ஸ் திருச்சபைச் சமூகத்தை சார்ந்த பலர் தங்களுடைய பங்குகளிலிருந்து பிடி அரிசி, டப்பி பிரிவு மற்றும் காணிக்கை சேகரிப்பு போன்ற உதவிகளை பெதனியின் துறவியர்களுக்கு உதவி செய்யுமாறு கொண்டு வந்திருந்தனர். ஆனால் இத்தகைய உதவிகளை தொடர்ந்து மக்கள் நல்க வேண்டாம் என்று வட்டசேரில் மார் திவன்னாசியோஸ் ஆயர் அவர்கள் அனைத்து ஆலயங்களுக்கும் திருமடல் அனுப்பியதை முன்னிட்டு இத்தகைய மக்களின் உதவிகளும் நிறுத்தலாகிவிட்டது.

கத்தோலிக்க திருச்சபையில் இணையாமல் கத்தோலிக்க மக்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதும் சாத்தியமானது அல்ல. இத்தகைய சூழலில் ஆசிரமத் தலைவர் மிகவும் வேதனைப்பட்டார். ஒருநாள் துறவிகள் அனைவரையும் அழைத்து இவ்வாறு அவர்களோடு பேசினார். “மக்களே ஒரு மிகப்பெரிய கொள்கையை இலட்சியமாக்கி வெளியேறிய நாம் பலவித தியாகங்களும் கடின அனுபவங்களும் சந்திக்க வேண்டியதாக இருக்கின்றது. நாளை முதல் நாம் அனைவரும் பட்டினி கிடப்போம் என்பதுதான் அத்தகைய அனுபவம். பங்குகளிலிருந்து நாம் பெற்றுக் கொண்ட பிடியரிசி போன்ற உதவிகள் எதுவும் செய்ய வேண்டாம் என வட்டச் சேரில் ஆயர் அவர்கள் அவர்களுக்கு வழிமுறை வழங்கி இருக்கின்றார்கள். ஆகையால் துறவியராகிய நீங்கள் அனைவரும் நம்மோடு இணைந்து பட்டினி கிடப்போம் என நான் நம்புகிறேன்”.

ஆசிரமத் தலைவனின் இத்தகைய அறிவுரைக்கு பதில் உரையாக துறவியர்கள் இவ்வாறு கூறினர். ஆயர் அவர்களே பட்டினி கிடப்பது பற்றி தாங்கள் வருந்த வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் உங்களோடு இணைந்து பட்டினி கிடக்கவும் தயாராக வந்தவர்களே. ஆண்களாகிய எங்களுக்கு பிச்சை எடுத்தாவது ஏதேனும் பெற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் கன்னியர் மடத்தில் தங்கி இருக்கும் அருட்சகோதரிகளுக்கு இத்தகைய ஒரு கடின சூழல் வராமல் இருப்பது நல்லது. ஏதேனும் கிடைப்பதாக இருந்தால் அவர்களுக்கு நீவிர் கொடுக்க வேண்டும். அவர்கள் பெண்கள், எனவே மடத்திலிருந்து வெளியேறவும் அவர்களுக்கு சுதந்திரம் இல்லையே” என்றனர். தன்னோடு தியாகங்களை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்த துறவியர்களின் இத்தகைய மனநிலையைக் கண்டு ஆயர் அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்.

துறவியரோடு கூறிய அதே வார்த்தைகளை ஆயர் அவர்கள் மறுநாள் திருமூலபுரம் மடத்தில் தங்கி இருந்த அருட்கன்னியர்களோடும் கூறினார். அவர்களது மறுமொழி இவ்வாறாக அமைந்திருந்தது.

“தந்தையே ஏதேனும் உதவிகள் கிடைப்பதாக இருந்தால் அருட்தந்தையர்களுக்கு நீங்கள் வழங்குங்கள். நாங்கள் கன்னியர் மடத்திற்கு உள்ளே இருப்பவர்கள். பட்டினி கிடப்பதனால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அருட்தந்தையர்களோ வெளியே வந்து பணிகள் செய்ய வேண்டியவர்கள் ஆவர். பட்டினி கிடப்பதாக இருந்தால் அவர்களுக்கு வேலை செய்ய முடியாத சூழல் வரும். எனவே அவர்களை பட்டினிக்குப் போடாமல் இருக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுதல்” என்றனர்.

இரு கூட்டத்தினரும் கூறிய பதிலுரையால் திருப்தியடைந்த ஆசிரமத் தலைவர், யாருக்காக நாம் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்கிறோமோ, யாருக்காக நாம் வெளியேறினோமோ அந்த எல்லாம் வல்ல இறைவனிடம் எல்லாவற்றையும் சமர்ப்பித்து ஜெபித்தார். தன்னால் ஒரு நாள் கூட யாரையும் பட்டினி கிடக்க வேண்டிய சூழல் வருவதில்லை. இறையன்பு நிறைந்து இருக்கின்ற போது அவரில் சார்ந்து இருக்கும் ஒருவரையும் ஒரு நாளும் அவர் கைவிடமாட்டார் என்பதற்கு எடுத்துக்காட்டு இது.

மார் இவானியோஸ் மற்றும் துறவியர்களும் வெண்ணிக்குளம் வந்து தங்குவதாகவும் உதவிகள் தேவைப்படுகிறது எனவும் அறிந்த பெதனியின் பல்வேறு ஆதரவாளர்களுள் ஒருவரும் பிற்காலத்தில் கத்தோலிக்கத் திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்த காலேக்காட்டில் தோமஸ் அருட்தந்தை அவர்களும் நமது ஆயர் அவர்களை சந்தித்து இவ்வாறு கூறினார். “ஆயர் அவர்களே வட்டசேரில் ஆயரின் மிரட்டல்களால் தாங்கள் வருத்தம் அடைய வேண்டாம். ஆசிரமத்திலோ மடத்திலோ அரிசியோ பொருள்களோ இல்லாத சூழல் வருகின்ற போது ஒரு காளை வண்டியை எங்களது வீட்டிற்கு அனுப்பினால் போதும். தேவையானவை எல்லாம் நாங்கள் கொடுத்து அனுப்புவோம். அதுபோல பணம் தேவைப்படுகின்ற சூழலில் தெரிவித்தால் போதும். எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் வங்கியிலிருந்து ஆயர் அவர்களுக்குத் தருவதற்கு எங்களுக்கு எந்த விதமான தடையும் இல்லை. நீங்கள் வருத்தப்பட வேண்டாம்”

 இவ்வாறு கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களல்லாத நல்லுள்ளம் கொண்ட பல நபர்கள் நமது ஆயரின் நற்பணிகளுக்குத் தேவையான பண உதவிகளை கொடுத்து வந்தனர். வெண்ணிக் குளத்திற்கு அருகே புல்லாடு எனப்படும் இடத்தைச் சார்ந்த ஒரு பழமையான இந்து குடும்ப உறுப்பினரும் சமூக சேவை செய்பவருமான வரிக்கண்ணாமல நாராயணன் வைத்தியன் பெதனி துறவியர்களின் துயர் நிலையை கண்டு வருந்தி அவருக்கு சொந்தமான பணத்திலிருந்து நான்கரை ஏக்கர் நிலத்தை துறவியர்கள் தங்குவதற்காக வெண்ணிக்குளம் பகுதியில் வாங்கி தானமாக வழங்கினார்.

இத்தகைய சூழலில் ஆயருக்கு பல்வேறு விதமான நம்பிக்கையூட்டும் ஒத்துழைப்புக்களை தந்து கொண்டிருந்த பல நல் உள்ளங்களின் பெயர்களை இவ்விடத்தில் இந்நூலில் குறிப்பிடுவது என்பது சாத்தியமானது அல்ல. புலிக்கோட்டு ஜோசப் ரம்மான், சேப்பாற்று பிலிப்போஸ் ரம்பான், பிலிப்போஸ் எம் ஏ பி எல், கே வி சாக்கோ பி ஏ எல் டி, மேளாம்பறம்பில் உம்மன், மேடையில் பாப்பி, துண்டியில் பிலிப், கிளிலேத் சாக்கோ மற்றும் பனங்கோட்டத்து உம்மன் போன்றோர் பல்வேறு விதமான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நல்கி வந்தனர். இவர்களுடைய நல்லெண்ணத்தை மறுஒன்றிப்பு நிகழ்வின் வரலாற்று நாளிதழில் குறிப்பிடப்பட வேண்டும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

பெதனி மலையோடு பிரியாவிடை கூறி பயணம் மேற்கொண்டு ஒரு மாத காலம் கடந்த பின்னர் தான் நமது கதாநாயகன் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைய நேர்ந்தது. அதைப் பற்றிய விவரங்களை அடுத்த அதிகாரத்தில் காண்போம்.

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை