ஆயர் லாறன்ஸ் மார் எஃப்ரேம் - By: அருட்தந்தை மரிய அற்புதம்
ஆயர் லாறன்ஸ் மார் எஃப்ரேம்
ஆசிரியர் : அருட்தந்தை மரிய அற்புதம்
நூல்
விவரம்
தலைப்பு : ஆயர் லாறன்ஸ் மார் எஃரேம்
ஆசிரியர் : அருட்தந்தை மரிய அற்புதம் V.
முதற்பதிப்பு :
08.04.1998
இரண்டாம் பதிப்பு : 08.04.2022
உரிமை : ஆசிரியருக்கு
வெளியீடு : ஆயர் இல்லம்,
மார்த்தாண்டம்
பக்கங்கள் : 233 + X
அச்சிட்டோர் :
விலை :
ரூபாய்
கிடைக்குமிடங்கள் :
உள்ளே
1. கருவிலே திருவானார்
2. தலைக் கிறிஸ்மஸ்
3. இளங்குருமட அதிபர்
4. தொழுநோயாளிகளின் தந்தை
5. HOM திட்டம்
6. நலிவுற்ற மக்களின்
நம்பிக்கை நட்சத்திரம்
7. கிராத்தூர் பங்குத்
தந்தை
8. நாகர்கோவிலில்
மறைபரப்புப் பணி
9. ஆயர் அபிஷேகம்
10. பரந்த மறைபரப்புக்
கண்ணோட்டம்
11. மார்த்தாண்டத்தில்
ஆயர்
12. இயற்கைச் சூழலில்
இறைவழிபாடு
13. வரம்புகளை கடந்த தோழமை
14. தனிநபர் மீது காட்டிய
அக்கரை
15. திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட
பரிபாலகர்
16. பலரின் பார்வையில்
17. மறைமாவட்ட உதயமும்
ஆயரின் உறைதலும்
நான் சந்தித்த மகத்துவத்தை நீங்களும்
சந்தியுங்கள்
மருந்துவாழ்மலை
மகத்துவமிக்க அரிய மூலிகைகள் நிறைந்த,,
பல மகான்களின் பரிசம் பட்ட புண்ணிய
பூமி ஆகும். அங்கு ஒரு நாள் காலை மலங்கரை கிறிஸ்தவ இயக்கத்தின் ஆசிரமத்திற்கு
சென்றேன். நல்ல வெயில், அங்கு ஒரு அருட்தந்தை தலையில் பூத்தூவாலையினை கட்டிக் கொண்டு
கடினமான வேலைகளை தனியாக செய்து கொண்டிருந்தார். நான் அருகில் சென்று, 'ஆயரை சந்திக்க
வந்தேன். ஆயர் எங்கே? எனக் கேட்டேன். சிரித்துக் கொண்டே தனது வேலையினை
நிறுத்திவிட்டு, வாருங்கள் நிழலில் அமர்ந்து பேசுவோம் என்று அழைத்துச்
சென்றார்.
நிழலுக்கு குடையாக
முட்கள் நிறைந்த உடை மரத்தினை தேர்வு செய்து அதன் அடியில் உட்கார வைத்து பேச்சினை தொடர்ந்தார்கள்.
என்னை யார் என்றும் கேட்கவில்லை. தண்ணீர் பருக தனது தண்ணீர் குப்பியிலிருந்து
பருகச் செய்து தானும் பருகிவிட்டு என்னை யார் என்று கேட்டார்கள். சொன்னேன். உடனே
ஆனந்த சிரிப்புடன் எழுந்து என்னை இறுகத் தழுவிக் கொண்டு நான் தான் ஆயர் என்று
சொல்லி விட்டு, கொஞ்சும் தமிழில் மலையாள மண் வாசனை கலந்து இனிமையாக
பேசினார்கள்.
வெகு நாட்களாக ஒருவரை
ஒருவர் கேள்விப்பட்டு சந்திக்க ஆவலுடன் இருவருமே இருந்திருக்கிறோம். யாருடைய
அறிமுகமும் இன்றி அன்பில் இணைந்து கொண்டோம்.
ஒரு புல்லைக் கூட
நோகடிக்கக் கூடாது என்ற பண்பு, எளிமை, ஆன்மீக வாதிக்கு அதுவே அணிகலன். அவரை அணி செய்தது அவரது
எளிமையே இல்லாமை எளிமை ஆகாது. அவருக்கு திருஅவை எல்லாமே அனுமதித்திருந்தது. ஆனால்
அவர் எளிமையை மட்டுமே ஏற்று எடுத்துக் கொண்டார்.
எனது அன்பு குடிலுக்கு
காலை வேளை வந்தார். தனது வண்டி மற்றும் செயலர் அனைவரையும் அனுப்பிவிட்டு மாலை
வந்து சேரச் சொன்னார். என் இல்லத்து ஒருவராய் என் தாயை தன் தாயாய் பாவித்து எனது
மூத்த சகோதரராய் எதுவும் ஒரு விருந்தினருக்கு செய்வது கூடாது என்று அன்புக் கட்டளையிட்டு
அன்புவனத்தின் அன்னத்தையே மதியம் உண்டு பலமுறை என்னோடு தேனீர் அருந்தி, அவருக்கு சர்க்கரை
கூடாது அன்பில் அதை மறந்து விட்டார். மாலைவரை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அய்யாவைப்பற்றி எமது
வழி முறைகள் பற்றி அனைத்தையும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்கள். தொடர்ந்து எங்கள்
சொந்தம்.
காந்தியை சந்திக்க
அவகாசம் எனக்கிருந்ததில்லை. காந்தியின் சாயலை பல செயல்களில் இம்மனிதரிடம் கண்டேன்.
காமராஜர் கருமவீரர்
என்று கேள்விப்பட்டதுண்டு. இவரிடம் செயல் வீரத்தை நேரில் கண்டேன்.
போராடி பெறுவதல்ல
ஆன்மீகப்பதிவு, பொறுமையால் பெற வேண்டியது அது. பொறுத்தே பெற்றார் பதவியை.
ஆனால் போதாது காலம் நமக்கும் தான்! அவரது பயனை பயன்படுத்து முன் இறை அழைத்துக்
கொண்டது.
அவர் நமக்கு பல பணிகளை
செய்ய பயிற்றுவித்துள்ளார். அவரது பாணியில் நாம் தொடர்வது ஒன்றே தான் அவருக்கு
நாம் செய்யும் அஞ்சலி ஆகும். செயலால் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். அவரது
நினைவுகள் ஆயிரம் பக்கங்களை நிறைக்கும். ஆனால் அன்புக்கு ஆயிரம் மலர்கள் வேண்டாம்
சில இதழ்களே போதும்.
மகத்துவங்கள்
மாய்வதில்லை. நூற்றாண்டு வாழ வேண்டிய மகத்துவம் நூற்றாண்டை எட்டாமல் இறையோடு
உறைந்தாலும் அவர் காட்டிய மாண்புகள் ஆயிரம் ஆண்டு நிலைக்கும்.
நம் காலத்து நம்மோடு
வாழ்ந்த ஒரு மகத்துவர் ஆயர் மார் எஃப்ரேம் அவர்கள். அவரது வாழ்வே அவர் உங்களுக்கு
காட்டும் செய்தி. அவரது வாழ்வின் வரலாற்று ஏட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம்
படிக்க பலப் படிப்பினைகள் உள்ளன. படிப்பினைகள் படிப்பதற்கு மட்டுமல்ல
பயன்படுத்துவதற்கே. ஏழைகளிடம் அவர் காட்டிய பரிவு, மதங்களை கடந்து அவர்
வளர்த்த மனித நேயம், உழைப்பு ஏழைகளுக்கு மட்டும் உரியதல்ல எல்லோருக்கும் உரியது.
போதனைகள் மட்டுமல்ல ஆச்சாரியர்களின் கடமை. போதித்த வழி நடந்து சாதித்து
காட்டுவதும் கடமை. ஆன்மீக சிந்தனையில் தெளிவு கொண்ட ஆயர் அவர்களின் வாழ்வின்
செய்திகளை படித்து அனைவரும் பயன்பெற வேண்டி நான் அறிந்த ஆயரின் அன்பை அனைவருக்கும்
சமர்ப்பிக்கிறேன். அள்ளி பருகி ஆனந்தம் காண்க.
- பூஜித குரு பாலபிரஜாபதி அடிகளார்
என்னுரை
மார்த்தாண்டம்
மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் இம் மண்ணக
வாழ்வை முடித்துவிட்டு விண்ணக வாழ்வை ஆரம்பித்து 8-4-1998 அன்று ஒரு
ஆண்டு நிறைவு பெறுகிறது. அவரைப் பற்றிய நினைவுகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனதில்
நிறைந்து நிற்பதில் வியப்பொன்றும் இல்லை. அவரது வாழ்வின் ஒவ்வொரு முகங்களையும்
அறிந்தவர்கள் இதை நன்கு புரிந்து கொள்வார்கள். மனிதன் ஏற்படுத்தியிருக்கும்
வரம்புகளுக்கு அப்பாற் சென்று மனிதரில் இறைவனை மெய்யாகவே தரிசித்தவர். மனித
நேயத்தை வளர்த்தவர் அவர். அவர் ஆற்றிய பணிகள் இதற்கு சான்று. இந்த ஆயருக்கு
கடமைப்பட்டிருக்கும் வெவ்வேறு வாழ்க்கை நிலையிலிருக்கின்ற ஏராளமான மக்களில் நானும்
ஒருவன். எனவே தான் பலரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமான
ஒரு புத்தகமாக அவரது முதலாண்டு நினைவு நாளிலே வெளியிட்டு என் இதய அஞ்சலியை அவருக்கு
காணிக்கையாக்கிக் கொள்கிறேன்.
இந்நூல் வெளி
வருவதற்கு எனக்கு பெரும் துணையாக நின்றவர்கள் ஏராளம், சகோதரக் குருக்கள், துறவியர், பொது நிலையினர் அத்தனை
பேருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு பின்னால் கடுமையாக
உழைத்த அருட்தந்தை வற்கீஸ் நடுதல, துணை நின்ற திரு. ஜெரோம், கையெழுத்துப் பிரதி
எடுக்க உதவிய செல்வி. பிரேமா, செல்வி. சுசீலா, செல்வி. டோரா, துணை நின்ற சகோ. ஜாண்றோஸ், பொறுமையாக இருந்து
அச்சுப்பிழை திருத்திய அருட்சகோதரி. எமிலியானா, வாழ்த்துரை வழங்கிய
பேராயர் சிறில் மார் பஸேலியோஸ், முன்னுரை வழங்கி சிறப்பித்த பூஜித குரு பாலபிரஜாபதி அடிகளார், மேரா அச்சக உரிமையாளர்
திரு. அ. பெல்லார்மின் ஜோஸ் மற்றும் அச்சக பணியாளர்கள் அனைவருக்கும் என் இதயம்
கனிந்த நன்றிகள்.
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
அவர்கள் செய்த செயல்களுக்கு எல்லாம் விளக்கம் கொடுப்பதைவிட, செய்த செயல்களில்
சிலவற்றை அப்படியே இங்கு எடுத்துக் கூறியுள்ளேன். ஏனெனில் அந்த ஒவ்வொரு
நிகழ்ச்சிகளும் அவரது பண்பை செயல்பாடுகளை ஏராளம் பேச போதுமானவை.
அவரைப் பற்றி
கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் நான் நேரடியாக கண்டறிந்தவை ஏராளம். ஆனால் நான்
பிறரிடமிருந்து கேட்டறிந்தவை அதைவிட ஏராளம்.
ஆபத்திலும்
வறுமையிலும், வேதனையிலும் இருந்த மக்களுக்கு உதவ அவருக்கு பெருமளவில் முறை
சார்ந்த அமைப்புகள் தேவைப்படவில்லை. மாறாக அன்றாட வாழ்க்கை சூழ்நிலைகளிலேயே பிறர்
அறியப்படாமலேயே அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர். எனவே தான் அவரது ஆளுமையின் ஆழத்தை
இந்த சமுதாயம் போதுமான அளவு புரிந்து கொள்ளவில்லை.
அடுக்கடுக்காக ஆயிரம்
நிகழ்ச்சிகளை கொடுப்பது வழியாக, இவர் இத்தனை செயல்களை செய்து விட்டாரே என்று உங்கள்
கவனத்திற்கு கொண்டு வருவது என் நோக்கமல்ல. வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை அவர்
கொண்டிருந்த பற்றுறுதியும், மனித நேயமும், இலட்சியத்தூய்மையும், அவர் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மனப்பூர்வமாக
அடங்கியிருந்தது என்ற உண்மையை கோடிட்டுக் காட்டுவதே என் நோக்கம்.
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேமுடன்
நேரடித் தொடர்புடைய ஆயிரக்கணக்கான மக்கள் குமரி மாவட்டத்திலும் வெளியிலும் உண்டு.
அவர்களில் அதிக மக்களுக்கு அவரோடுள்ள உறவை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும்
அனுபவங்களும் உண்டு. ஆனால் அத்தனை நிகழ்ச்சி களையும் அத்தனை நபர்களின்
பெயர்களையும், இந்த சிறு வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் எழுதுவது எளிதல்ல.
அது என் நோக்கமும் அல்ல. எனவே, இவ்வரலாற்றில் வரும் பலரது பெயர்கள் அந்த தனி நபர்களை
பெருமைபடுத்தும் நோக்கத்துடன் அல்ல. மாறாக ஆயரது பணிகளின் உண்மை நிலையை உணர்த்தும்
நோக்கம் மட்டுமே!
ஆயர் மார் எஃப்ரேம்
தன் வாழ்வில் சாதித்த சாதனைகளை விட சந்தித்த வேதனைகள்தான் ஏராளம். ஆனால் அந்த
வேதனைகள் மக்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி மிகப் பெரியது.
சூழ்நிலைகளுக்கு ஏற்ப
தங்களையே விரைவாக மாற்றிக் கொண்டு சுயலாபம் தேடும் மக்கள் அதிகரித்து வரும்
இச்சமூகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறுதிவரை பிடித்து நின்று வெற்றி
கண்ட ஒரு பற்றுறுதி மிக்க பெரியவர்.
இத்தகைய பெரியோர்களின்
உண்மை வரலாறுகள் மாய்ந்து விடக் கூடாது. மாய்ந்து மறைந்து விட்டால் அது இந்த சமூகத்திற்கு
மாபெரும் இழப்பு. இந்த நோக்கத்துடன் தான் இவரது வாழ்க்கை * வரலாறு புத்தகமாக வெளி
வருகிறது.
இது இந்த சமூகத்திற்கு
நன்மை செய்ய ஒரு தூண்டுதலாக, உந்து சக்தியாக அமைய வேண்டும். ஆழ்ந்த இறை நம்பிக்கையில் ஊன்றி
நின்று கொண்டு, உயர்ந்த மதிப்பீடுகளை இன்றும் வாழ்ந்து காட்ட, நம்மில் துணிவை
பிறக்கச் செய்ய இந்நூல் உதவ வேண்டும். இவ்வாறு ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
அவர்களின் தியாக வாழ்வின் நினைவு நம் மத்தியில் என்றும் நிலைக்க வேண்டும். இத்தகைய
சிறந்த நோக்கத்துடன் இப்புத்தகத்தை உங்களுக்குப் படைக்கிறேன்.
அருட்தந்தை மரிய
அற்புதம்
|
சமர்ப்பணம் என் போன்ற எண்ணற்ற மக்களுக்கு தம் பணி வாழ்வால் இறைவனை அறிவித்த அருட்தந்தை தோமஸ்
விளையில் அவர்களுக்கு |
1.
கருவிலே திருவானார்
தென்திருவிதாங்கூரில்
காஞ்சிரங்குளத்தில் சாணி என்ற பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர்
குடியேறிய ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேமின் மூதாதையர் குடும்பத்து உறுப்பினர் தான்
மோசை என்பவர். இவர் ஒரு விவசாயி. மறுமலர்ச்சித் திருஅவை உறுப்பினராக இருந்தார்.
அறப்பணியாம் ஆசிரியப்பணி செய்து வந்த இயேசுவடியான் இவரது மூத்த மகன். இவரை
வாத்தியார் என மக்கள் அழைத்தனர். இவர் ஒரு வைத்தியராகவும் இருந்தார்.
விவசாயத்திலும் இவருக்கு ஆர்வம் அதிகம். இவர்களுக்கு இரண்டு புதல்வர்களும் நான்கு புதல்வியர்களும்
இருந்தனர். ஐந்தாவது மகனும் இளைய மகனுமாகிய திரு. ஜஸ்டஸ் என்பவர் சிறு வயதிலேயே
வைத்தியக் கல்வி கற்று வந்ததாகக் கூறப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை தான் இவர்
முறையான கல்வி கற்றிருந்தார். இதற்கு காரணம் வைத்தியக் கல்வி கற்று வந்ததே என்று
அவரே பலரிடம் கூறியுள்ளார்.
இளமைப்பருவத்தை அடைந்த
இவர் காவல் துறையில் சேர விரும்பினார். இவரது தாத்தா 'பிணம் காக்கும் வேலை' உனக்கு வேண்டாம் என்று
திருப்பி அழைத்து வந்து விட்டார். சில நாட்களில் இவர் அமரவிளையில் புல்லமூலக்
குடும்பத்தில் உள்ள விக்டோரியா என்ற நங்கை நல்லாளை மணந்தார். ஆசிரியர்களாக இருந்த விக்டோரியா
பெற்றோரை இளமை பருவத்திலேயே இழந்தார். விக்டோரியா மலையாளத்தை பயிற்று மொழியாகக்
கொண்டு ஏழாம் வகுப்பு வரை பயின்றவர்.
இந்த தம்பதியருக்கு
காஞ்சிரங்குளத்தில் சாணி குடும்ப வீட்டில் 15.05.1928-ல் இலாறன்ஸ்
பிறந்தார். சாணி C.S.I. போதகர் திரு. தேவதாஸ் என்பவர் இலாறன்சுக்கு திருமுழுக்கு வழங்கினார்.
இலாறன்ஸ் சிறுவயதில் குச்சம்காயை நூலில் கட்டி தூப கலசம் செய்து தூபம் வீசி
விளையாடியபோது, அவர் தம்பி சாம் இலைதழைகளை சேர்த்து, வேகவைத்து கசாயம்
தயாரித்து விளையாடினார்.
ஒன்றாம் வகுப்பில்
சேர்ந்து கல்வி கற்ற முதல் நாள் பள்ளிக்கூடம் விட்டு வீடு வந்து சேர்ந்த இலாறன்ஸ்
கையில் முதல் வகுப்பு புத்தகங்கள் இல்லை. பாடப்புத்தகம் எங்கே என்று கேட்ட போது
படகு செய்து விட்டேன் என்றார். அதற்காக பெற்றோர் கோபித்துக் கொள்ளவோ தண்டனை
கொடுக்கவோ இல்லை.
இலாறன்சின் தந்தை அவரை
ஒரே ஒரு முறை தான் அடித்தார் என்று அவரது தாய் கூறினார். அதுவும் தவறு செய்ததற்காக
அல்ல; பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டதை பார்த்துக் கொண்டு
நின்றதற்காக தண்டிக்கப்பட்டார்.
இலாறன்சின் ஒன்பதாவது
வயதில் திரு ஜஸ்டஸ் குடும்பம், அவரது இளைய சகோதரி அமிநாத்தின் தூண்டுதலால் மலங்கரை
கத்தோலிக்கத் திருஅவையோடு மறு ஒன்றிப்படைந்தது. பின்னர் திரு. ஜஸ்டஸ் மறைக்கல்வி
பயிற்றுவித்து வந்தார். அப்போது ஒரு தேனீர் கடையும் நடத்தி வந்தார். நல்ல இலாபம்
கிடைத்தபோதும், முழுநேர மறைபரப்புப் பணியில் ஈடுபடுவதற்காக தேனீர்க் கடையை மூடிவிட்டார்.
இவ்வாறு ஒரு நாள் இலாறன்சின்
தந்தையார் இலாறன்சையும், தம்பி சாமையும் திருவனந்தபுரம் நகரைச் சுற்றிப் பார்க்க
அழைத்துச் சென்றார். இவர்கள் பட்டம் பேராயர் இல்லம் சென்றபோது அருட்தந்தை
போத்தனாமூழி அவர்கள் (பின்னர் கோதமங்கலம் ஆயர்) இவர்களை மறைதிரு பேராயர் மார்
இவானியோஸ் ஆண்டகை அவர்களிடம் அழைத்துச் சென்றார். பேராயர் ஆண்டகை அவர்கள் “ஒரு
மகனை எனக்கு கொடுத்து விட்டுச் செல்லுங்கள்'' என்றார். அப்போது
மூத்த மகனுக்கு நிற்க விருப்பம், இளைய மகனுக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் திரு. ஜஸ்டஸ்
இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் பெற்றோரின் அனுமதியுடன் 1938 ஜூன் மாதத்தில்
இலாறன்ஸ் பட்டம் பேராயர் இல்லத்திற்கு வந்தார். அங்கேயே கல்வி கற்க ஆரம்பித்தார்.
ஆங்கில வழி
பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பு முதல் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயர்
இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் வீட்டு நினைவை மறந்து அங்கேயே முழு மனதுடன் இருப்பதற்காக
ஒரு அணிலை கூட்டில் அடைத்து விளையாட கொடுத்திருந்தனர். சில நாட்களில் அணில்
செத்துவிட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் இலாறன்சின் இளைய சகோதரன் சாம் நோயினால்
பாதிக்கப்பட்டு இறந்துவிட்டான். இச்செய்தி இலாறன்சிற்கு தெரியாது. சில
நாட்களுக்குப் பின்னர் இலாறன்சின் தாத்தாவிற்கு உடல் நலக்குறைவு எனக்கூறி பேராயர்
மார் இவானியோஸ் இலாறன்சை பார்த்து வரும்படி வீட்டிற்கு அனுப்பினார். நேரடியாக சாம்
இறந்த செய்தியை சொல்ல முடியாத காரணத்தால் இவ்வாறு பேராயர் செய்தார். இலாறன்ஸ்
சாணியில் தன் குடும்ப வீட்டிற்கு சென்றபோது தாத்தா நலமாக இருப்பதைக் கண்டான்.
சிறுவன் சற்று நேரம் கழித்து தம்பி சாமை காணாததால் அவன் எங்கே என்று கேட்டான்.
அவன் இறந்து விட்டான் என்ற செய்தியை அப்போதுதான் அவன் அறிகின்றான். மிகவும்
வருத்தமடைந்தான்.
திரு. ஜஸ்டஸ் தம் ஒரே
மகன் இலாறன்சை பேராயர் இல்லத்திலிருந்து வீட்டிற்கு வருமாறு அறிவுறுத்தினார்.
அப்போது அவனுக்கு வயது பதினொன்று. இலாறன்ஸ் மேலுலக வாழ்வின் முடிவில்லா தன்மையை
எடுத்துரைத்து திரும்பி வீட்டிற்கு போக மறுத்தார். இவ்வாறு இலாறன்ஸ் குழந்தைப்
பருவத்திலேயே இறை உண்மைகளில் நிலைத்தவனாக வளர்ந்தான். “விளையும் பயிர்
முளையிலேயே தெரியும்'' என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கினான். S.S.L.C. படித்து
முடித்தபோது பேராயர் மார் இவானியோஸ் ''உன் பெற்றோருக்கு வேறு யாரும் இல்லை. ஆகையால் நீ வீட்டிற்குப்
போ என்றார்''. அதற்கு இலாறன்ஸ் ''நான் போக மாட்டேன்; ஆனால் பிரான்சிஸ்கன் துறவற ஆசிரமத்தில் சேர்ந்து ஒரு சகோதரனாக
பணியாற்ற விரும்புகிறேன்'' என்ற விருப்பத்தை பேராயரிடம் தெரிவித்தான். பேராயர் துறவற சமூகத்தில்
சேர்ந்தால் வீட்டிற்கு போக முடியாது. ஆகையால் நீ குருமடத்தில் இணைவதே நல்லது என
ஆலோசனை கூறினார். தன் பெற்றோருக்கு ஒரே மகனாக இருந்த இலாறன்ஸ் 1944-ம் ஆண்டு
ஜூன் மாதம், பட்டம், புனித அலோசியஸ் இளங்குருமடத்தில் சேர்ந்தார்.
தூய மரியன்னை ஆங்கிலப்
பள்ளிக்கூடத்தில் சகோ. இலாறன்ஸ் கற்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு பாடம் கற்பித்த
திரு. தரகன் சார், மாணவன் இலாறன்சைப்பற்றி கூறும்போது “நல்ல பக்குவமான பண்பு
மற்றும் நல்ல அறிவுடையவராக இருந்தார்''
என்று கூறுகிறார். அவர் ஆயராக மாறிய
பின் தரகன் சார் ஆயரைக் காணச் சென்றார். அவரைக் கண்டவுடன் ஆயர் இலாறன்ஸ் மார்
எஃப்ரேம் அந்த ஆசிரியரின் காலைத் தொட்டு கும்பிட்டார். அவர் தனது இரண்டு கைகளையும்
தலையில் வைத்து நிறைந்த இதயத்துடன் மகிழ்ச்சியோடு ஆயரை ஆசீர்வதித்தார்.
இதிலிருந்து அவருடைய ஆசிரியப் பற்று புலனாகிறது.
தனிமையில் வாழ்ந்த இலாறன்சின்
பெற்றோருக்கு இருபது ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு ஆண் மகன் பிறந்தான். பெற்றோர்
அவனுக்கு ஜோசப் என்று பெயரிட்டு அழைத்தனர். அவர் இன்று மார்த்தாண்டம்
மறைமாவட்டத்திற்கு சொந்தமான மார்த்தா எஸ்டேட்டில் வாழ்ந்து வருகிறார்.
சகோதரர் இலாறன்ஸ்
இளங்குருமடப்படிப்பை முடித்து மங்கலாபுரம் புனித சூசையப்பர் குருத்துவக்
கல்லூரியில் சேர்ந்து குருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்தார். இங்கு உயர்குருமடத்தில்
இவருக்கு ஒரு வருடம் மூத்தவராக படித்த தந்தை இடிக்குள பாண்டியத், சகோதரர் இலாறன்சின்
குருமட வாழ்வைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார். ''சகோ. இலாறன்ஸ்
கலகலப்பாக பேசி அனைவரையும் மகிழவைப்பார். ஒரு நல்ல அறிவாளி, சிறந்த பாடகர். 1946 முதல் 1953 வரையுள்ள
காலத்தில், முதன் முதலாக கேரளாவைச் சார்ந்த சகோ. இலாறன்ஸ் தான் வகுப்பில்
முதல் மாணவனாக திகழ்ந்தார். அத்துடன் அங்குள்ள பாடகர் குழுவில் இடம் பெற்ற ஒரே
கேரள மாணவன் என்ற பெருமையையும் பெற்றார். அக்காலத்தில் விளக்க ஆய்வேடு (Dissertation) எழுதி
ஆசிரிய குருக்கள் மற்றும் மாணவர்கள் எல்லோரும் சூழ்ந்து நிற்க அதற்கு விளக்கம்
அளிக்க வேண்டும். அப்போது கேள்விகள் கேட்க இரண்டு பேரை தேர்ந்தெடுத்தனர். அதில்
ஒருவராக சகோ. இலாறன்ஸ் திகழ்ந்தார். பன்னிரண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள்
கேட்டார். இயேசுவின் கேள்வியில் ஆலயக் குருக்கள் ஆனந்தம் அடைந்தார்கள். அதைப்போல
சகோ. இலாறன்சின் கேள்விகளைக் கேட்டு குருமடக் குருக்கள் இவரை கட்டி அணைத்து
பாராட்டினர். மட்டுமன்றி சிறந்த கேள்விக்கான விருதையும் அவருக்கு அளித்து
பாராட்டினர்.
சகோ. இலாறன்ஸ் மங்கலாபுரம்
குருமடத்தில் பயின்ற காலத்தில் சகோ. இலாறன்சும் அவர் நண்பர் தோமஸ் எருமேலியும்
அங்குள்ள ஒரு தொழுநோய் மையத்தை சந்திக்கச் சென்றனர். தொழுநோயைக் கண்டு மிகவும்
அஞ்சிய காலம். தொழுநோயாளர்களை வெறுத்து ஒதுக்கிய காலம். அப்போது சகோ. இலாறன்ஸ்
மட்டும் தொழுநோய் பிரிவின் உள்ளே சென்று அவர்களிடம் உரையாடினார். இதைக் கண்ட
நண்பர் தோமஸ் சகோ. இலாறன்சை கோபத்துடன் திட்டினார். காலம் நகர்ந்தது. சகோ. தோமஸ்
குருமடத்தை விட்டு வெளியேறினார். சகோ. இலாறன்ஸ் தந்தை இலாறன்ஸ் ஆனார். தந்தை இலாறன்ஸ்
பிரப்பன்கோடு தொழுநோய் மருத்துவமனையின் இயக்குநராக பணியாற்றியபோது முன்னைய சகோ.
தோமஸ் தொழுநோயுற்று பிரப்பன்கோடு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு தங்கி மருத்துவம்
பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
மங்கலாபுரம்
குருமடத்தில் சகோ. இலாறன்ஸ் பயின்றபோது அவ்விடத்து மக்களின் பேச்சு மொழியாகிய
கொங்கினி மொழியைப் பயின்றார். அம்மொழியிலேயே அங்குள்ள மக்களிடமும், அருட்பணியாளர்களிடமும்
பேசிப் பழகினார். திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்திலிருந்து கொங்கினி மொழி பயின்ற
ஒரே நபர் சகோ. இலாறன்ஸ் என்று நினைக்கும்போது, பிறமொழி பேசும் மக்கள்
மேல் அவர் கொண்டிருந்த அன்பு வெளிப்படுகிறது.
தந்தை சாமுவேல்
தைக்கூட்டத்தில் தன் கடந்தகால அனுபவத்தை பின்வருமாறு கூறினார்: 1950ம் ஆண்டு சகோ. இலாறன்ஸ்
மங்கலாபுரம் குருமடத்தில் பயின்றுகொண்டிருந்தார். நானும் தத்துவ இயல் படிக்க
மங்கலாபுரம் அனுப்பப்பட்டேன். என்னை முதல் முறையாக துணையாக அழைத்துச் சென்றவர்
சகோ. இலாறன்ஸ். நாங்கள் இருவரும் திருவனந்தபுரத்திலிருந்து ஆலுவாய்க்கும்,
ஆலுவாயிலிருந்து மங்கலாபுரத்திற்கும் தொடர்வண்டியில் செல்வோம். அன்று
தொடர்வண்டியில் பயணம் செய்வதே ஒரு தனிப் பெருமைதான். தொடர்வண்டியில் பயணம்
செய்யும் போது எனக்கு அடிக்கடி வாந்தி எடுக்கும். அவ்வாறு வாந்தி எடுக்கும்போது
சகோ. இலாறன்ஸ் என் முதுகைத் தடவி விடுவார். எனக்குத் தேவையான உதவிகளை எல்லாம்
செய்வார். அவர் மடியில் என்னைத் தூங்கச் செய்வார். பயணக் களைப்பையும் துயரங்களையும்
தனிப்பட்ட பராமரிப்பால் குறைத்துவிடுவார். பாதுகாப்பாக என்னை குருமடம் கொண்டு
சேர்ப்பார். பிற்காலத்தில் எத்தகைய பணிகளில் எந்த மனநிலையோடு அவர் ஈடுபடப்போகிறார்
என்பதை தெளிவாக உணர்த்தியது அவரது இக்குருமட வாழ்வு என்பதை அறிந்த எவரும்
வெளிப்படையாக ஒப்புக்கொள்வர்.
ஆண்டுகள் பல கடந்து
நான் குருவாகி செங்கன்னூர் ஆலயப் பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில் என்னை
வெறிநாய் கடித்துவிட்டது. அஞ்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன்
தொடர்ச்சியாக பிரப்பன்கோடு தொழுநோய் மருத்துவமனையில் மூன்று மாத காலம்
ஓய்வெடுப்பதற்காக தங்கினேன். அங்கு தந்தை இலாறன்ஸ் இயக்குநராக இருந்தார்.
வேளாவேளைக்கு மருந்தும், உணவும் அவரே எனக்குத் தந்து ஒரு தாயினும் மேலாக என்னை கவனித்து
வேண்டியன செய்தார்.
குருத்துவப் படிப்பை
முடித்த சகோ. இலாறன்ஸ் குருப்பட்டம் பெற்றார். 14.5.1953 ஆம் நாள்
அன்று ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்புநாள் பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்
ஆண்டகை அவர்களால் வழங்கப்படும் முதல் குருத்துவ அருட்பொழிவு. இவ்வாறு பல
சிறப்புகளின் மத்தியில் பேராயரால் திருத்தொண்டர் இலாறன்ஸ் குருவாக அருட்பொழிவு
செய்யப்பட்டார். மறுநாள் புனித அலோசியஸ் இளங்குருமடத்தில் தனது முதல் நன்றித் திருப்பலியை
நிறைவேற்றினார். பிறருக்காக தன்னை
முழுமையாக அர்ப்பணம் செய்த இயேசுவின் பலியை தாமும் நிறைவேற்றி தமது பணி வாழ்வாம்
பலிவாழ்வை உறுதியுடனும், மகிழ்வுடனும் ஆரம்பித்தார் புதுக்குரு தந்தை இலாறன்ஸ்.
2. தலைக் கிறிஸ்மஸ்
தந்தை இலாறன்ஸ் குருப்பட்டம் பெற்றவுடன்
பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையின் முதல் செயலராக நியமிக்கப்பட்டார்.
1953ம் ஆண்டு பேராயர் மார் இவானியோஸ் நோயுற்றதால்
பேராயர் அலுவலகத்தில் பல வேலைகள் முடங்கிக் கிடந்தன. தந்தை இலாறன்ஸ் செயலராக
நியமிக்கப்பட்டதும் அலுவலகப் பணிகள் அனைத்தையும் சீர் செய்து வேகப்படுத்தினார்.
இளங்குருமடத்தின் உதவி அதிபராகவும் பணியாற்றிய இக்காலத்தில் பேராயர் அலுவலகப்பணிகளை
சரிசெய்ய அவர் மேற்கொண்ட கடும் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.
இக்காலத்தில் சாதாரண ஏழை மக்களும் பேராயரை எளிதில் பார்க்க இவர் வழி வகுத்தார்.
கல்லூரிப் படிப்பிற்காக குமரி மாவட்டம் மற்றும் தொலை இடங்களிலிருந்து வரும் ஏழை
மாணவர்களுக்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் தந்தை இலாறன்ஸ் செய்திருந்தார்.
பல சூழ்நிலைகளில் பேராயர் இல்லத்திலேயே அவர்களுக்கு உணவு கொடுத்து தங்க
வைத்ததுண்டு. மாலை 6 மணிக்குப்பின் ஒரு லேடீஸ் சைக்கிளில்
பேராயர் இல்லப் பணிகளை முடித்துவிட்டு மார் இவானியோஸ் கல்லூரிக்குச் செல்வார்.
அங்கு அதிகாரிகளை நேரடியாக சந்தித்து வெளியூரிலிருந்து வரும் சாதாரண மாணவர்களுக்கு
தங்கும் இடமும் உணவும் வழங்க பரிந்து பேசி உதவியிருக்கின்றார். இதனால் அவர்
அனுபவித்த துயரங்கள் கொஞ்சமல்ல. சில வேளைகளில் கல்லூரி அதிகாரிகளின் ஏளன
பேச்சுகளுக்கும் தந்தை இலாறன்ஸ் உள்ளாகியிருக்கிறார்.
தந்தை இலாறன்ஸ் பேராயரின் செயலராக
நியமிக்கப்பட்டதில் மூத்த குருக்கள் பலருக்கும் எதிர்க்கருத்துக்கள் இருந்தன.
ஏனெனில் அன்று கத்தோலிக்க ஆயர் இல்லங்களில் ஆயரின் செயலர் பொறுப்பு ஒரு உயர்ந்த
பொறுப்பாக கருதப்பட்டு முதிர்ந்த தந்தையரையே நியமித்து வந்தனர். ஆனால் அதற்கு
முற்றிலும் மாறாக, இளங்குரு இலாறன்சை பேராயர் தம்
செயலராக நியமித்ததை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தந்தை இலாறன்சோ
இப்பொறுப்புக்கு, “தான் உகந்தவர்” என்பதை பின்னர் நிரூபித்துக்
காட்டினார். பல மொழிகளில் அவருக்கு இருந்த புலமை, அழகான கையெழுத்து, அனைத்திற்கும்
மேலாக சிறு பணிகளைக் கூட செம்மையாக செய்வதற்குரிய நல்ல மனம் ஆகியவை அவரிடம்
இருந்தது. சிறு நிகழ்வைக்கூட பேராயரின் கருத்திற்கு மாறாக பேசவோ செய்யவோ
செய்ததில்லை.
தந்தை இலாறன்ஸ் இக்காலத்திலிருந்தே மாலை
வேளைகளில் சைக்கிள் மிதித்து திருவனந்தபுரத்தை சுற்றியுள்ள மிஷன் தளங்களுக்கு
சென்று நற்செய்தி அறிவிப்பது வழக்கம். இன்று திருவனந்தபுரத்தைச் சுற்றியுள்ள பல மறைபணித்
தளங்களும் தந்தை இலாறன்சின் கடின உழைப்பின் பயனாக தோன்றி வளர்ந்தவையே.
குருப்பட்டம் பெற்றபின் தந்தை இலாறன்ஸ் தனது
முதல் கிறிஸ்துபிறப்புத் திருநாளை திருவனந்தபுரம் அருகேயுள்ள போத்தன்கோடு, கழக்கூட்டம் ஆகிய மறைபணித் தளங்களில் வைத்துக்
கொண்டாடினார். அன்று அவருக்கு உதவியாக சென்றிருந்த போராயரின் தனி உதவியாளர் திரு. M.J. தோமஸ் அந்நிகழ்ச்சியை பின்வருமாறு கூறுகிறார்.
“கழக்கூட்டம் கோயிலுக்கு நாங்கள்
சென்றபோது கோயிலுக்கு வெளியே ஒரு கூட்டம் இளைஞர்கள். அனைவரும் அக்கோயிலிலுள்ள
உறுப்பினர்கள். அவர்கள் அருகே எங்கேயோ கிராமபோனில் ஒலித்துக் கொண்டிருந்த தமிழ்
திரைப்படப் பாடல்களை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். கோயிலில் திருப்பலி
நடந்துகொண்டிருக்கும்போதும்,
இந்த இளைஞர்கள்
தொடர்ந்து பாடலைக் கேட்டு மகிழ்ந்தவண்ணம் நின்றனர். கிறிஸ்து பிறப்புத்
திருச்சடங்குகள் நிறைவுற்றது. தந்தை இலாறன்ஸ் அடுத்த கோயிலுக்கு செல்வதற்காக
ஆலயத்திலிருந்து வெளியே இறங்கினார். நான் உடனே ஓடிச்சென்று இளைஞர்களின் இந்த
மரியாதையற்ற செயலை தந்தையிடம் எடுத்துக் கூறி புகார் செய்தேன். தந்தை இலாறன்ஸ்
அதற்கு இவ்வாறு பதில் கூறினார்:
“இந்த இளைஞர்களுக்கு
கிறிஸ்தவ மதம் என்னவென்றோ,
திருப்பலி என்னவென்றோ
தெரியாது. இவர்கள் அண்மைக் காலத்தில் கிறிஸ்தவர்களாக மாறியவர்கள். இப்போது அவர்கள்
மேல் குற்றம் சுமத்தவோ கடிந்து கொள்ளவோ செய்யலாம். ஆனால் அவர்கள் செய்த தவற்றைப்
பற்றிய உணர்வு அவர்களுக்கு ஏற்பட வேண்டுமென்றால் கிறிஸ்துவை இறைவனாக அவர்கள்
இதயங்களில் நிறுவ வேண்டும். அதற்கு சில காலம் கூட தேவைப்படலாம். இப்போது அவர்களை
குற்றப்படுத்தி, கோப வார்த்தைகளில் பேசினால் அது
அவர்களுக்கு மன வேதனைக்கும் துன்பத்திற்கும் காரணமாகும். மட்டுமல்ல நாம் இதுவரை
எடுத்த முயற்சிகள் எல்லாம் பலனின்றி போகவும் கூடும்" என்றார். தந்தை இலாறன்சின் பதில் அன்று எனக்கு
அவ்வளவு திருப்தியாகத் தோன்றவில்லை. ஆனால் இன்று மறைபரப்புப் பணியின் பல்வேறு
நிலைகளை அறிந்தபின், தந்தை அவர்களின் பதில் எவ்வளவோ சரி
என்று எனக்கு தோன்றியது.
எப்போதும், இக்கட்டான சூழல்ளிலும் கூட தந்தை இலாறன்ஸ் பேராயருடன் உறுதியாக
நின்ற நிகழ்ச்சிகளை தந்தை டோமினிக் சக்கரியா கீழ்வருமாறு விவரிக்கிறார். “தந்தை இலாறன்ஸ் குருப்பட்டம் பெற்று ஒன்றரை
ஆண்டு ஆனவுடன் இளங்குருமட அதிபராக நியமிக்கப்பட்டார். திறமையான ஒருவரை மாற்றி
அவ்விடத்தில் தந்தை நியமிக்கப்பட்டார். இதனால் தந்தை இலாறன்ஸ் மூத்த
தந்தையரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். இந்த சூழ்நிலையில் மற்றொரு
நிகழ்ச்சியும் அவரை மேலும் தனிமைப்படுத்தக் காரணமாயிற்று. மலங்கரை முறைக்கு
அப்பாற்பட்டு இலத்தீன் முறையிலிருந்து எடுக்கப்பட்ட பொருத்தமற்ற அருட்பணி முறைகளை
மாற்ற வேண்டும் என்று உரோமிலிருந்து கட்டளை வந்தது. திருவல்லா ஆயர் இதனை உறுதியாக
ஆதரித்தார். ஆனால் திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்திலுள்ள சீனியர் குருக்கள்
தற்பொழுது கடைபிடிப்பதையே தொடரவேண்டுமென்று வற்புறுத்தினர். காரணம் திருவனந்தபுரம்
மறைமாநிலத்தில் தொடக்கக் காலத்தில் குருக்கள் பற்றாக்குறையினால் இலத்தீன் மற்றும்
மலபார் திருவழிபாட்டைச் சார்ந்த குருக்கள் வந்து மலங்கரை மக்களிடையே பணிபுரிந்தனர்.
அவர்கள் சில நல்ல இலத்தீன் பக்தி முயற்சிகளான சிலுவைப்பாதை, திருமணி ஆராதனை, ஜெபமாலை,
நவநாள் போன்ற
அருட்பணிகளை மக்களிடையே அறிமுகப்படுத்தினர். மக்களும் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் பேராயர் கிரிகோரியோஸ் நடுநிலையாளராக உறுதியாக நின்றார். இன்று நாம்
கடைபிடிப்பது பேராயரின் நிலைபாடுதான். இந்த இக்கட்டான நெருக்கடியில் தந்தை இலாறன்ஸ்
பேராயருடன் உறுதியாக துணை நின்றார்.
தந்தை மாத்யூ கடகம்பள்ளில் தன் குருமட
வாழ்வைப் பற்றி நினைக்கும்போது ''எங்கள் அதிபராயிருந்த தந்தை இலாறன்ஸ்
ஓய்வு நாட்களிலும், மாலை வேளைகளிலும், மறைபரப்புத் தளங்களுக்குச் சென்று திரும்பி
வந்து தம் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்வார். இதைக்கேட்டுக் கேட்டு நாங்களும்
மிஷன் பணிகளில் ஆர்வம் உடையவரானோம்'' என்று
கூறுகிறார்.
தந்தை இலாறன்ஸ் இளங்குருமட அதிபராயிருந்தபோது
சகோதரர் ஜோஷ்வா பீடிகையில் குருமாணவர்களின் இணைத்தலைவராக இருந்தார். இப்படி ஒரு
பொறுப்பை தந்தை இலாறன்சே உருவாக்கி ஒரு சகோதரரிடம் ஒப்படைத்திருந்தார். தந்தை இலாறன்ஸ்
வெளியே செல்லும் போது தன் அறையின் சாவியை சகோதரர் ஜோஸ்வாவிடம் ஒப்படைத்து செல்வது
வழக்கம்.
உயர் குருத்துவக் கல்லூரியில் பயில்வதற்குரிய
நுழைவுத் தேர்வை சகோதரர்கள் எழுதியிருந்தனர். அந்த தேர்வு விடைத்தாள்கள்
அங்கிருந்து மதிப்பிடப்பட்டு திரும்பி வந்திருப்பதாக சகோதரர்கள் எப்படியோ
அறிந்தனர். இக்கூட்டத்தில் ஒரு சகோதரனுக்கு இதை எப்படியாவது அறிந்துதான் ஆக
வேண்டும் என்ற ஆவல். வாய்ப்புக்காக காத்திருந்தார். வழக்கம் போல தந்தை மிஷனுக்கு
செல்வதற்கு முன் அறைச் சாவியை இணைத்தலைவர் பிரதரிடம் ஒப்படைத்தார். அதிபர் வெளியே
சென்றுவிட்டார் என்று உறுதி செய்த பின்னர் அந்த சகோதரர் சாவி வைத்திருந்த பிரதர்
ஜோஷ்வாவை அணுகி எப்படி எல்லாமோ சொல்லி சாவியைப் பெற்றுக் கொண்டார். மற்ற
சகோதரர்கள் எல்லோரும் அமைதியாக படிக்கும் அறையில் படித்துக் கொண்டிருந்தனர்.
சாவியை வாங்கிச் சென்ற சகோதரர் அதிக நேரமாகியும் திரும்பாதது பற்றி பிரதர்
ஜோஷ்வாவுக்கு சந்தேகம் எழுந்தது. அப்போது தந்தை இலாறன்ஸ் படிகளில் ஏறும் ஒலி
கேட்டது. திறந்து கிடந்த தனனுடைய அறையில் தந்தை நுழைந்தார். அந்த சகோதரனோ
அலமாரியிலிருந்த விடைத்தாள்களை பரிசோதித்துக் கொண்டிருந்தார். திடீரென அறையில்
நுழைந்த தந்தையவர்கள் இதையெல்லாம் கண்டும் காணாதவராக, அதே அலமாரியிலிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு விரைவாக
வெளியேறினார். விடைத்தாள் பார்த்துக் கொண்டிருந்த அந்த சகோதரனுக்கு அந்த வேளை
ஏற்பட்ட இதயத்துடிப்பை உங்களுக்கு சிந்திக்கலாமல்லவா? தந்தை திரும்பி வந்தபின் சகோதரர் ஜோஷ்வா அந்த சகோதரனுடைய நிலையைப்
பற்றி அவரிடம் எடுத்துக் கூறினார். இதை கேட்ட தந்தை இலாறன்ஸ் 'ஓ' பரவாயில்லை.
சகோதரரின் டென்சன் எனக்கு நன்கு புரிகிறது என்றார். இன்று இந்த சகோதரன் ஒரு நல்ல
எடுத்துக்காட்டான குருவாக திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தில் பணிபுரிகிறார்.
அதிபரின் அறையில் நுழைந்து அலமாரியைத் திறந்து விடைத்தாள்களை சோதனை செய்வதற்குரிய
அவரது துணிவை எண்ணி அன்று தந்தை இலாறன்ஸ் மகிழ்ந்திருந்தார். ஒருவேளை இந்த
நிகழ்ச்சி இன்று நடந்திருந்தால்......?
சகோதரர் ஜோஷ்வா (பின்னர் அருட்தந்தை ஜோஷ்வா) குருமடத்தில் சேர்ந்து மூன்று நான்கு மாதங்கள் இருக்கும். ஒரு
திருநாள் வந்தது. மதிய உணவுக்குப்பின் ஒரு சிறு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில்
சகோதரர் ஜோஷ்வாவுக்கு பலகுரல் நிகழ்ச்சி. அதில் அவர் உபதேசியாராக வேடம் போட்டு
உபதேசியார் போல் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். பிரசங்கத்தின் இறுதியில் அவர் "அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்'' என்று கூறி நிறுத்தினார். எல்லோரும் வயிறு
குலுங்கச் சிரித்தனர். தந்தை இலாறன்சுக்கும் மிகவும் பிடித்திருந்தது.
திருவிழாக் கொண்டாட்டங்கள் முடிந்து இரண்டு
நாட்களாயின. அனேகமாக எல்லோருக்கும் 'புளூ' காய்ச்சல் பிடித்தது. அனைவரும் தளர்ந்து போயினர்.
குளிர் வேறு அவர்களை விறைக்க வைத்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் உபதேசியார்
வேடம் போட்டு 'அங்கே அழுகையும் பற்கடிப்பும்
இருக்கும்' என்று பிரசங்கித்த பிரதர் ஜோஷ்வாவும்
நோய்வாய்ப்பட்டார். தூக்கம் இல்லாமல் விழித்திருந்து அனைவரையும் தந்தை இலாறன்ஸ்
பராமரித்தார். அவர் சகோதரர் ஜோஷ்வாவின் கட்டிலின் அருகில் அமர்ந்து தலையை தடவி
புன்சிரித்துக் கொண்டு 'உபதேசியார் சொன்னது போல தான்
நடந்திருக்கிறது. கடுவாயை ஏறி கிடுவா பிடித்து விட்டதே!'' என்று நகைச்சுவையாகக் கூறினார். சகோதரர் ஜோஷ்வாவின் பலகுரல்
நிகழ்ச்சி சில காலம் தந்தை இலாறன்சுக்கு சிரிப்பதற்கும், பிறரை சிரிக்க வைப்பதற்கும் காரணமானது.
இரவில் இருமல் ஏற்படுபவர்களுக்கு தனியாக 'சூப்பு' கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார் குருமட அதிபர். ஆனால் ஒரு சிலர் இதை ஒரு வரமாக
எடுத்துக் கொண்டு சூப்பு அருந்தும் வாய்ப்பை சொந்தமாக்கிக் கொண்டார்கள். 60% நபர்களும் இத்தகையவர்கள் என்பதை தந்தை இலாறன்ஸ்
அறிந்திருந்தார். இருப்பினும் அவர் இதையெல்லாம் ஒரு பெரிதாக எடுக்காமல்
சாதாரணமாகவே எடுத்துக்கொண்டார். எல்லாக் காரியங்களையும் அறிந்திருந்தார். ஆனால்
அனேக காரியங்களை கண்டும் காணாதவாறு இருந்தார். மிகக் குறைவான காரியங்களை மட்டுமே
திருத்தியிருந்தார். இத்தகைய ஒரு நல்ல அதிபராயிருந்தார் தந்தை இலாறன்ஸ்.
ஆசிரியர்ப் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் அதை
விட்டு விட்டு குருமடத்தில் சேர்ந்தார். அவரை அதிபர் தந்தை உட்பட எல்லோரும் ''சார்'' என்றே அழைத்தனர். குருமடத்தில் தேர்வு முடிந்து விடுமுறைக்காக வீட்டிற்கு
புறப்பட வேண்டிய முந்தைய நாள் சுற்றுலா சென்றனர். ஏரிக்கரையில் எல்லோரும்
ஒன்றுகூடி ஒருவர் ஒருவரை சிரிப்பூட்டி, உல்லாசமாக
இருந்தனர். அப்போது சாரின் ஒரு மிதியடி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதை
சகோதரர் ஜோஷ்வாதான் செய்தார் என்று சார் அடம் பிடித்தார். எல்லோரும் திரும்பி
குருமடம் வந்தபோது நேரம் மாலை ஆகியிருந்தது. திரிகால மணி அடிப்பதற்காக சார் எல்லோருக்கும்
முன்பாக ஓடியிருந்தார். ஆனால் அதற்கும் முன்னால் சகோதரர் ஜோஷ்வாவும் இன்னொருவரும்
சேர்ந்து கத்தீட்ரல் ஆலய குருசடியின் அருகில் செடிகளுக்கு இடைய மறைந்து இருந்தனர்.
நேரம் இரவு ஆனது. 'சார்'-ஐ அன்று ஒரு கணம் பயப்படுத்தி இரசிப்பதே மேற்படி சகோதரர்களின்
இலட்சியமாக இருந்தது.
''சார் சாலையிலிருந்து ஓடிக் களைத்து குருசடி
அருகில் பாதங்களை வைத்தது தான் தாமதம். மறைந்திருந்த சகோதரர் ஜோஷ்வா 'யாரடா'! நில்லுடா அங்கே! என்று கத்தியைக் காட்டி அச்சுறுத்தியதும் ஒரே
வேளையில் நடந்தது. அந்த கத்தி ரொட்டி வெட்டுவதற்கும் ஜாம் எடுப்பதற்கும்
பயன்படுத்தப்பட்டிருந்த கத்தி. பாவம் சார்! அலறியடித்துக்கொண்டு குருமடம் நோக்கி
ஓடினார். விரட்டிக் கொண்டு இந்த சகோதரர்களும் சிரித்தபடியே சென்றனர். நிகழ்ச்சியை
சார் அவர்கள் தந்தை இலாறன்சிடம் அறிவித்தார். தந்தை இலாறன்ஸோ வழக்கம்போல இதை நகைச்சுவை
நிகழ்ச்சியாகவே எடுத்தார்.
சகோதரர் வாழப்பிள்ளேத்து (பின்னர் இரம்பான் வாழப்பிள்ளேத்து) தூயகத்தின் பொறுப்பைக் கொண்டிருந்த காலம்.
அன்று கூட்டுத் திருப்பலி நிறைவேற்ற அனுமதிக்கப்படவில்லை. குருமட சிற்றாலயத்தில்
அமைக்கப்பட்டுள்ள சிறு பீடங்களில் தந்தையர்கள் தனியாக திருப்பலி நிகழ்த்துவர்.
அதற்கு உதவியாக சிறு குப்பிகளில் இரசம் வைக்கப்பட்டிருக்கும். காலை உணவு
முடிந்ததும் திருப்பலிக்கான திருவுடைகள் மற்றும் அடுக்கி வைப்பர். சில
சகோதரர்களுக்கு மிகுந்த பக்தி போலும்! எனவே காலை உணவு முடிந்ததும், முடியாததுமாக உணவு அறையிலிருந்து ஆலயத்திற்கு
மாரத்தான் ஓட்டமாக போட்டி போட்டு ஓடி வருவர். திருவுடைகள் அடுக்கி வைக்க இருக்கும்
அளவற்ற இந்த பேராசைக்குப் பின்னால் ஏதோ ஒரு இரகசியம் மறைந்திருக்கின்றது என்று தூயகப்
பொறுப்பாளரான சகோதரர் வாழப்பிள்ளேத்து சந்தேகப்பட்டார். அவரது சந்தேகம்
வீண்போகவில்லை. தனது அறிவுத் திறனை பயன்படுத்தினார். வழக்கம் போல காலை
உணவுக்குப்பின் அந்த சகோதரர்கள் மாரத்தான் ஓட்டம் ஓடி ஆலயத்தை அடைந்தனர். அவசர
அவசரமாக திருவுடைகள் மடக்கி,
அடுக்கி வைப்பதுடன் சிறு
குப்பிகளும் காலியாயின. வாய்க்குள்ளே சென்றபின்னர் தான் இது திராட்சை இரசமல்ல
தேங்காய் எண்ணெய் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இவ்வாறு அவர்களின் பிறரன்பு
பணிக்கு சகோதரர் வாழப்பிள்ளேத்து ஒரு முடிவு கட்டினார். நிகழ்ந்ததைத் தந்தை இலாறன்சிடம்
கூறிய போது அவர் வழக்கம் போல விழுந்து விழுந்து சிரித்தார்.
தந்தை இலாறன்ஸ் இறையழைத்தல் இல்லையென உறுதி
செய்தவர்களை திரும்பிச் செல்லத் தூண்டியிருக்கிறார். நீண்ட நேரம் ஆலயத்தில்
செபித்துக் கொண்டிருக்கும் நாட்களை பார்த்தால் யாரையோ குருமடத்திலிருந்து
வீட்டிற்கு திருப்பி அனுப்பப் போகிறார் என்று சகோதரர்கள் புரிந்து கொள்வர்.
இவ்வாறு அதிபர் இலாறன்சின் பயிற்சி பெற்ற குருமாணவர்களுக்கு தந்தை இலாறன்சின்
பாசத்தை ஒருபோதும் மறந்துவிட முடியாது.
3. இளங்குருமட அதிபர்
சகோதரர்களுடன் மிகவும் அன்புடனும்
அக்கறையுடனும் தந்தை இலாறன்ஸ் பழகி வந்தார். குருத்துவ வாழ்விற்குத் தேவையான
ஆன்மீக அடித்தளம் இளங்குருமடத்தில் தந்தை இலாறன்சின் சிறப்பான பயிற்சியால்
கொடுக்கப்பட்டது. மிக எளிய அறிவுரைகள்! ஆனால் அவை இதயத்தின் ஆழத்தில் இறங்கிச்
சென்று பெரும் பலன் விளைவித்ததை பலர் இன்றும் நினைவு கூருகின்றனர்.
தந்தை இலாறன்ஸ் ஒரு சிறந்த ஆசிரியராகவும்
இருந்தார். குருமடத்தில் இலத்தீன் மொழியை பயிற்றுவித்தது அவரே தான். வாரத்தில் ஒரு
நாள் உல்லாச வேளையில் இலத்தீன் மொழியில் தான் பேச வேண்டும் என்று தந்தை இலாறன்ஸ்
சட்டம் வைத்திருந்தார். சகோதரர்கள் மிகக் குறைவாக பேசுவது அன்று தான். மிக
கலகலப்பாக பேசி நடக்கும் 'வாயாடிகள்' கூட அன்று மௌனமாகிவிடுவார்கள். ஆனால் தந்தை இலாறன்சோ அவர்கள் கூட
நடந்து அவர்கள் இலத்தீன் மொழியில் பேச உதவியாயிருப்பார்.
தேவைக்கு ஏற்றாற்போல், சகோதரர்களுக்கு பிரத்தியேகமான கவனிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் ஆண்டு சகோதரர் ஒருவர் கால்பந்து விளையாடி அவரது இடது கால் முறிந்தது.
குணமடைய மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. அப்போது அவருக்கு தந்தை இலாறன்ஸ் தனிப்பட்ட
வசதிகளை செய்து கொடுத்திருந்தார். வகுப்புகளை இழக்காமலிருக்க வகுப்பறையின்
அருகிலுள்ள அறையில் இவருக்கு படுக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். எனவே பாடங்களை
எல்லாம் முறைப்படி கேட்க இவருக்கு முடிந்தது. ஆண்டு இறுதியில் எழுத்துத்தேர்வும்
நேர்முகத்தேர்வும் நடந்தது. இரண்டிலும் சுமாராக நல்லமுறையில் இவர் பதிலளித்தார்.
கேள்விகள் கேட்பதற்கு பேராயர் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையும் உடனிருந்தார். தேர்வு
முடிந்தபின் பேராயர் சகோ. P.G.
தோமஸ் பணிக்கரை
அழைத்துக் கூறினார்.
"வருகை குறைவாக
அல்லவா இருக்கிறது?''
அருகில் நின்ற தந்தை
இலாறன்ஸ் அதற்குப் பதில் கூறினார். 'வருகை
ஒன்றும் இழக்கவில்லை. வகுப்பறையின் பக்கத்து அறையில் தான் இவர் படுத்திருந்தார்.
அங்கு படுத்துக் கொண்டு வருகை சொல்லி வந்தார். எல்லோரும் வாய்விட்டு சிரித்தனர். குருமடத்தின் சட்டங்களை சரியாக
கடைபிடிக்க வைப்பதில் தந்தை இலாறன்ஸ் மிகவும் கண்டிப்புடன் இருந்தார். மீறியவர்கள்
மீது தண்டனை கொடுக்கும் அதிபராகவும் அவர் விளங்கினார்.
தந்தை P.G. தோமஸ் பணிக்கர் தமது இளங்குருமட வாழ்வின் இத்தகைய ஒரு அனுபவத்தை
இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்:
“முதல் ஆண்டு நான்
நூலகப் பொறுப்பை (Librarian)
பெற்றிருந்தேன். அதே
ஆண்டு என் கை முறிந்த பின்னரும் நான் நூல் நிலையத்தில் செய்ய வேண்டிய பணிகளை
நிறைவேற்றி வந்தேன். ஒரு நாள் நான் கையில் கட்டுப்போட்டுக் கொண்டு நூலகத்தில் பணி
செய்து கொண்டிருந்தபோது,
இன்னொரு சகோதரன் வந்து
என்னைப் பார்க்க ஒருவர் வந்து நிற்பதாக கூறினார். நான் நூலகத்தின் வெளியே
சென்றபோது அதிபர் (தந்தை இலாறன்ஸ்) அங்கே நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்க்க
என்னிடம் கூறச்சொன்னவர் அதிபர் தந்தை தான் என்று நினைத்து, என்னைப் பார்க்க வந்தவரிடம் சென்று நான் பேசினேன். என்னை சந்திக்க
வந்தவர் என்னிடமிருந்து விடைபெற்று சென்ற பின்னர் அதிபர் என்னை அழைத்தார்கள். அவர்
என்னிடம் “பிரதர் அவரிடம் பேசுவதற்கு அனுமதி
பெற்றீர்களா?''
"இல்லை” என்றேன். பின் ஏன் அவரிடம் பேசினீர்கள்? என்று கேட்டார். நான் அதற்கு பல காரணங்களைச்
சொல்ல முயன்றேன். ஆனால் அவை ஒன்றும் அங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை''. கோவிலில் சென்று 15 நிமிடங்கள் முழந்தாட்பணிந்து செபம் செய்யுங்கள்'' என்றார். எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.
இருப்பினும் நான் ஆலயத்தில் சென்றேன். கொடுத்த தண்டனையை ஏற்றுக் கொண்டேன்.
இருப்பினும் தந்தை இலாறன்சிடம் எனக்கு இறுதிவரை மிகுந்த பற்று இருந்தது.
மார்த்தாண்டம் மறைமாவட்ட முதல் ஆயராக அவர் பொறுப்பேற்றபோது மிக அதிகமாக மகிழ்ந்த
நபர்களில் நானும் ஒருவன்.
தேவசியா என்பவர் திருவனந்தபுரம் நகரத்தின்
வியாபார மையமான சாலை என்னுமிடத்தில் மாடன் கோவில் ஒன்றை சொந்தமாக கட்டி வழிபாடுகள்
நடத்தி வந்தார். பிறப்பால் இவர் ஒரு கிறிஸ்தவர். கிறிஸ்தவரான "தேவசியா'' இந்து கோயில் கட்டி பூசாரியாக செயல்படுவதை தந்தை இலாறன்ஸ்
அறிந்தார். உடனே சம்பவ இடத்திற்குச் சென்றார். "தேவசியா'' இந்து பூசாரிகளின் உடை அணிந்து அந்த இந்து கோவிலில்
இருக்கின்றார். மக்கள் கூடியிருந்தனர். தந்தை இலாறன்ஸ் அவரை ஆளனுப்பி வரவழைத்தார்.
கட்டி அணைத்து அவரிடம்,
"இந்து கோவிலை
யாருக்காவது கொடுத்துவிட்டு ஒரு குடிசைக் கோவில் கட்ட வேண்டும்'' என்று கூறினார். தேவசியா ஊரைக் கூட்டினார். ''நான் கட்டிய இந்த கோவிலை நீங்கள் எடுத்துக்
கொள்ளுங்கள்'' என்றார். அதற்கு அவர்களோ "நீங்கள் வைத்த கோவிலை நீங்களே ஏதாவது செய்து
கொள்ளுங்கள் என்று கூறினார்கள். பிரச்சனைகள். ஆரம்பமானது, குழப்பங்களும் ஏற்பட்டன. தந்தை இலாறன்ஸ் தேவசியாவை பேராயர்
இல்லத்திற்கு அழைத்தார். இந்துக்கள் கோவிலை வேறு தாழிட்டு பூட்டினார்கள்.
தேவசியாவும் நண்பரும் சேர்ந்து அவரே கட்டிய கோவிலையும், முன் பகுதியில் வளர்த்த செண்பகமரத்தையும் வேருடன் பிடுங்கி
மாற்றினார்கள். தேவசியா தந்தை இலாறன்சிடம் சென்றார். அவர் உபதேசியாரை அங்கு தங்க
வைத்து பாதுகாத்தார். இந்துக்கள் கோவிலை இடித்ததற்காக பெரும் பிரச்சனையை
கிளப்பினார்கள்.
சில நாட்களுக்குப் பின் இவ்விடத்தில் ஒரு
கிறிஸ்தவ ஆலயத்தை கட்டினர். அரசிடமிருந்து ஆட்கள் வந்து ''அரசு புறம்போக்கு நிலத்தில் ஆலயம் வைக்கக்கூடாது'' என்றனர். தந்தையவர்களோ ''நமக்கு தேவையானதை செய்யலாம்'' என்றார். சார்லி என்ற சிறுவனை குடிசை
ஆலயத்தின் உபதேசியாராக நியமித்தார். அவன் இந்துக்களுடன் சேர்ந்து குடிசைக்கு வேறு
தாழிட்டு பூட்டினான். ஞாயிற்றுக்கிழமை தந்தை இலாறன்சும் தந்தை மத்தாயியும்
சேர்ந்து திருப்பலிக்கு சென்ற போது ஆலயம் பூட்டப்பட்டிருந்ததைப் பார்த்தனர். உடன்
சென்றிருந்த தேவசியா பூட்டை உடைத்து தந்தையர் திருப்பலி ஆற்ற உதவினார்.
மறுநாள் ஆலயம் தீ வைக்கப்பட்டது. ஏற்கனவே
கோவிலை இடித்ததற்கு போலீஸ் அதிகாரிகள் விசாரிக்க வேறு வந்தனர். இச்சூழலில் சார்லி
(அப்பு) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவசியாவுக்கு
ஆளனுப்பி நோயில் பூசுதல் வேண்டினார். தேவசியா தந்தை இலாறன்சிடம் கூறி ஏற்பாடு
செய்தார். தந்தை இலாறன்சும்,
தந்தை மத்தாயியும்
இணைந்து சார்லிக்கு பாவசங்கீர்த்தனம், நோயில்
பூசுதல் முதலிய அருளடையாளங்களைக் கொடுத்தனர். அவர் மறுநாள் மரணமடைந்தார்.
சாலை ஆலயத்தில் தந்தை இலாறன்ஸ் பின்னர் 360 பேருக்கு திருமுழுக்கு வழங்கினார். இதை அறிந்த
இந்துக்கள் மீண்டும் பிரச்சனைகளை கிளப்பினர். ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்ற
அனுமதிக்கவில்லை. தந்தை இலாறன்ஸ் ஆலயத்தை கரிமடம் காலணியிலிருந்து வேறு ஒரு
இடத்திற்கு மாற்றலாம் என்றார். தேவசியா தலைமறைவானதால், போலீஸ் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தினர். பேராயர்
இல்லத்திலிருந்து எல்லாம் பேசி,
தேவசியாவை காரில் ஏற்றி
கரிமடத்தில் கொண்டு வந்தனர். DYSP
கூடியிருந்த மக்கள்
கூட்டத்தினரை அமைதி காக்கச் சொன்னார். பின்னர் ஒரு இந்து தலைவரை அழைத்து, ''உபதேசியார் கிறிஸ்தவரா? இந்துவா?'' என்று கேட்டார். தலைவரோ ''கிறிஸ்தவ இந்து''
என்றார். "இந்து கோவிலை கட்டியது யார்?'' "தேவசியா' என்றார் தலைவர்.
"அப்படியானால் இந்த
ஆலயத்தை கட்டியது யார்?''
அதுவும் தேவசியா
என்றார். "இரண்டையும் கட்டியது தேவசியா என்றால்
மக்கள் இதில் தலையிட வேண்டியது இல்லை'' என்றார்.
D.Y.S.P.
பின்னர் சாலையில் இடம் வாங்கினார். அங்கு
காம்பவுண்டு கட்ட தந்தை இலாறன்ஸ் தேவசியாவை ஏற்படுத்தினார். தேவசியா வேலை
ஆரம்பித்தார். அப்போது முஸ்லீம்கள் ஆயுதங்களுடன் எதிர்த்தனர். கட்டிட வேலை
நிறுத்தப்பட்டது. தேவசியா தந்தை இலாறன்சை சந்தித்து ஆலோசித்தார். அங்கே ஒரு லாரி
மூங்கில் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. தேவசியாவை பேராயர் இல்லத்திலேயே தங்க
வைத்துவிட்டு தந்தை இலாறன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து அவரது தலைமையில் வேலி கட்டும்
பணி ஆரம்பமானது. இரவு வந்து பார்த்தபோது எதிர்பார்த்தது போல் மூங்கிலைக்
காணவில்லை. அவை ஆற்றில் எறியப்பட்டிருந்தன. தந்தை இலாறன்சும், தேவசியாவும் காவல் நிலையத்தில் புகார்
செய்தனர். காவல் ஆய்வாளர் மற்றும் அரசு அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
முஸ்லீம்கள் ஆயுதங்களுடன் நிற்கின்றனர். முஸ்லீம்கள் தேவசியாவை தாக்க வந்தனர்.
தந்தை இலாறன்ஸ் அவரை கட்டி அணைத்தவண்ணம் நின்றார். ஒருவன் இறைச்சி வெட்டும்
கத்தியை தேவசியாவின் கழுத்தில் வைத்து கொல்ல முயன்றான். தந்தை இலாறன்ஸ் உறுதியுடன்
நின்று காப்பாற்றினார்.
அடுத்த நாள் இரவு அவ்விடத்தில் சுற்றிலும்
மதிற்சுவரைக் கட்டினர். ஆனால் ஆலயத்தின் குருசடியிலிருந்த மாதா சுரூபத்தை எதிரிகள்
அடித்து, உடைத்து விட்டனர். உடைத்தவன்
குடும்பமும் அவனும் பின்னர் துயரப்பட்டு பெருந்துன்பங்களுக்கு உள்ளாயினர்.
அவர்களது குழந்தை எதிர்பாராமல் மரணமடைந்தது. அவன் போலீசில் பிடிபட்டு வழக்கும்
பதிவானது. தந்தை இலாறன்ஸ் உரோமில் சென்று திரும்பி வந்தபோது பாத்திமாவிலிருந்து
ஒரு மாதா சொரூபம் வாங்கி வந்தார். அது ஆலயத்தில் தனிப்பீடத்தில் நிறுவப்பட்டது.
சாலை ஆலயத்தின் கட்டிடப்பணிகளின்போது
இந்துக்களும் தாக்கினார்கள். அப்போது தேவசியாவின் இளைய மருமகனை பட்டியல் எனப்படும்
மரக்கட்டையால் அடித்தனர். தலை உடைந்தது. உடனே தந்தை இலாறன்சிடம் கூட்டிச்
சென்றனர். தந்தை இலாறன்ஸ் அவனை கட்டி அரவணைத்தார். அவரது அங்கி முழுவதும்
இரத்தக்கறை படிந்தது. உடனே மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். அவருக்கு ஏழு தையல்
போடப்பட்டது. சிகிச்சைச் செலவு முழுவதையும் தந்தையே செய்தார். தேவசியாவின்
தலைமையில் ஆலயம் கட்டப்பட்டு ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் மேற்கூரை அமைத்தனர்.
மூன்றாந்தர குருக்களை உருவாக்க அவர்
விரும்பவில்லை. எல்லாத்துறைகளிலும் குருமாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தார். சூழலுக்கேற்ப நிகழ்ச்சி நிரல்களில் மாற்றம்
ஏற்படுத்தவும் தயங்கக்கூடாது என்பார். வெறும் நிகழ்ச்சிகளுக்காக நிகழ்ச்சி நிரல்
வடிவமைப்பதை அறவே வெறுத்தார். முடிந்த அளவு அனைத்து கலைகளையும் கற்றிருக்க
வேண்டும். பிறரால் நாம் ஏமாற்றப்படக்கூடாது. ஒவ்வொருவரின் திறமைகளையும் வளர்க்க
வேண்டும். மலங்கரைக்காரனுக்கு இவ்வளவும் போதும் என்று நினைக்கக் கூடாது. இது போன்ற
அறிவுரைகளை அவ்வப்போது குருமாணவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துக் கூறிக்கொண்டே
இருப்பார் தந்தை இலாறன்ஸ்.
இளங்குருமடத்தின் ஆண்டு விழா நடந்து
கொண்டிருந்த போது பேராயர் அதற்கு தலைமை தாங்கினார். வராந்தாவில் மேடை
அமைக்கப்பட்டிருந்தது. அங்கு தந்தை இலாறன்ஸ் சொற்பொழிவாற்றினார். ''போர் வீரர்களின் ஒழுங்கும், கீழ்ப்படிதலும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிக
மிக இன்றியமையாதது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு
முக்கியத்துவம் இல்லை. திருஅவை பணிகள் வெற்றி பெற வேண்டுமென்றால், திருஅவையின் செயல்கள் சிறப்பாக அமைய
வேண்டுமென்றால் திருஅவைத் தலைமையுடன் முழுமையான கீழ்ப்படிதல் தேவை. நிபந்தனைகள்
வைத்து கீழ்ப்படிந்து பயனில்லை. அவர் போதித்த ஓழுங்கும் கீழ்ப்படிதலும் தம்
வாழ்வில் முழுமையாக வாழ்ந்து காட்டியிருந்தார் என்பதை எவருமே மறுக்கமாட்டார்கள்.
அமைதிச்சட்டம் (Rule of Silence) மிகக் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்ட காலம். O.K. சகோதரன் கோழிகளை கவனிக்கும் பொறுப்பு
ஏற்றிருந்த வேளை, ஒருநாள் மாதவன் என்ற திருடன் கோழியைப்
பிடிக்க, கோழிக்கூட்டிற்குள் நுழைந்தான். இதை O.K. சகோதரன் கண்டுபிடித்துவிட்டார். ஆனால் மௌனம்
காக்க வேண்டிய, பேசக்கூடாத நேரம் திருடனைப்
பிடித்தால் சத்தம் ஏற்படும். சகோதரர் அதிபரின் அனுமதி வாங்க தீர்மானித்தார். தந்தை
இலாறன்ஸ் ஆலயத்தில் செபித்துக் கொண்டிருந்தார். அவர் செபம் முடிந்து திரும்பி
வரும்வரை வெளியே சகோதரன் காத்து நின்றார். சற்று நேரத்துக்குப் பின்னர் தந்தை
வெளியே வந்தார். சகோதரர் கேட்டார் ''கோழிக்கூட்டிற்குள்
திருடன் நுழைந்தான் பிடிக்கட்டுமா? “பிடிக்கவும்”
என்று பதில் கூறினார். 0.K.
சகோதரர் கோழிக்கூட்டை
அடைந்தபோது மாதவன் கோழிகளைத் திருடிய பின்னர் தலைமறைவாயிருந்தான். நிகழ்ச்சியை
கேட்டு அனைவரும் சிரித்தனர்.
1965 ஆம் ஆண்டு குருத்துவக் கல்லூரி மாணவர் முகாம்
(Major Seminarians
camp) முக்கம்பாலையில்
வைத்து நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் மாலை எல்லோரும் இரப்பர்த் தோட்டத்தை
சுற்றிப் பார்க்கச் சென்றனர். பரந்த தோட்டத்தில் எல்லோரும் சுற்றி நடந்தனர். இரவு 8 மணி ஆனபின்னரும் ஒரு சகோதரனை மட்டும்
காணவில்லை. அழைத்துப் பார்த்தார்கள். பதில் இல்லை. தந்தை இலாறன்ஸ் கூறினார். நாம் ஒரு பெரிய தீப்பந்தம் கொளுத்தி உயர்த்தி
பிடிப்போம். அப்போது வெளிச்சம் கண்டு சகோதரன் வர வாய்ப்பு உண்டு என்றார்.
சகோதரர்கள் ஒரு தீப்பந்தம் கொளுத்தி பிடித்துக் கொண்டு அழைப்பு கொடுத்தனர். வழி
தெரியாமல் தவறி நடந்திருந்த சகோதரர் வெளிச்சம் கண்டு நேராக நடந்து வந்தார். தந்தை
இலாறன்சின் சமயோசித புத்தியை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
1958 ஆம் ஆண்டு சகோ. டோமினிக் மங்கலாபுரம்
குருமடத்திலிருந்து விடுமுறைக்கு பட்டம் வந்தார். அப்போது பட்டம் குருமடத்தில்
தந்தை இலாறன்ஸ் அதிபராக இருந்தார். எல்லோரும் வந்திருந்த காரணத்தால் படுக்க
வசதியில்லை. அதனால் சகோ. டோமினிக் வகுப்பறையில் உள்ள ஒரு பெஞ்சில் படுத்துத்
தூங்கினார். இரவு 11 மணிக்கு தந்தை இலாறன்ஸ் வந்து அவரை
எழுப்பி பிரதர் “ஏன் இங்கு இப்படி படுத்திருக்கிறீர்”? என்று கேட்டார்.
“படுக்கையறையில் போதிய இடவசதியில்லாததால் இங்கே படுத்தேன்” என்றார் அவர். தந்தை
உடனே ஒரு தலையணையை எடுத்து வந்து அச்சகோதரனுக்கு கொடுத்தார். அந்த சகோதரர் அந்த
தலையணை எங்கிருந்து வந்தது என்று அறிய தந்தை இலாறன்சின் பின்னால் சென்றார்.
அப்போது தந்தை இலாறன்சுக்கு ஒரு பாய் மட்டுமே இருந்தது. ''ஃபாதரின் தலையணையை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். இதை ஃபாதர்
வைத்துக்கொள்ளுங்கள் என்று சகோதரன் கூறினார். ''பிரதர் வைத்துக் கொள்ளுங்கள்'' என்று தந்தை கூறினார். இறுதியில் சகோதரரே அதனை பயன்படுத்தினார்.
சகோதரர்களின் உடல் நலம் மிக முக்கியமாக
கவனிக்கப்பட்டது. நல்ல சுவையான உணவு குருமாணவர்களுக்கு கொடுத்திருந்தார். ஒரு
சகோதரன் உணவு நன்றாக சாப்பிடவில்லை என்றால் அருகிலிருக்கும் சகோதரன் அதனை
அதிபரிடம் சொல்ல வேண்டும். தேவைப்படுவோருக்கு சிறப்பான உணவு வழங்கப்பட்டது. உல்லாச
வேளையில் தந்தையும் சகோதரர்களோடு இணைந்து நகைச்சுவைகள் பேசி சிரிக்க வைப்பதும், சிரிப்பூட்டுவதும் வழக்கம். ஆக்கபூர்வமான
சிரிப்பூட்டுதலே அவர் செய்து வந்தார். மேடைபயத்தை தவிர்க்கவும், சவால்களை சந்திப்பதற்கான வலிமை
பெறுவதற்குமாகத்தான் இவ்வாறு செய்தார். மாணவர்களுக்கு புதிய மொழியைக்
கற்பிக்கும்போது “வாசி,
எழுது, பேசு” (Read, Write and Speak) என்ற தாரக மந்திரத்தைப் பயன்படுத்த
வலியுறுத்தினார்.
தந்தை இலாறன்ஸ் பட்டம் குருமட அதிபராயிருந்த
காலத்தில் அவருடன் ஒரு தந்தை உதவி அதிபராகவும் இருந்தார். ஆண்டுக்கு ஒருமுறை ஒரு
நாள் அதிபராகவும், உதவி அதிபராகவும் அங்குள்ள
குருமாணவர்களுள் இருவர் செயல்படுவது வழக்கம். இதன்படி குருமாணவர் இருவரை
அதிபராகவும், உதவி அதிபராகவும் தேர்ந்தெடுப்பர்.
அன்று அவரது முழு விருப்பப்படி நிகழ்ச்சி நிரல் தயாரித்து செயல்படலாம். எவரும்
அன்று குறுக்கிடமாட்டார்கள். அதன்படி அந்த 'அதிபர் நாள்'
வந்தது. சகோதரர்கள்
அனைவரும் இணைந்து சகோதரன் ஜோஸ் கடகம்பள்ளியை (பின்னர் அருட்தந்தை ஜோஸ் கடகம்பள்ளி) அதிபராக தேர்ந்தெடுத்தனர். இன்னொரு சகோதரர் உதவி அதிபராக தேர்வு
செய்யப்பட்டார். உடனே ஒருநாள் அதிபர் அன்றைய நாளுக்குரிய நிகழ்ச்சி நிரலை
தயாரித்தார். ஆன்மீகக் கடமைகளைத் தவிர மற்ற எல்லா நிகழ்ச்சிகளும் மாற்றப்பட்டன.
அதன்படி காலை 10 மணிக்கு விளையாட்டு இருந்தது.
சகோதரர்கள் அனைவரும் மைதானத்தில் இறங்கி மகிழ்ச்சியுடன் விளையாடினர். அப்போது
தந்தை இலாறன்ஸ் வெளியே சென்றிருந்தார். ஆனால் உதவி அதிபர் தந்தை அங்கே
இருந்திருந்தார். 10 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த
சகோதரரைப் பார்த்து அவருக்கு ஆத்திரம் வந்தது. உடனே ஓடிச் சென்று மணியடித்தார்.
எல்லோரையும் அழைத்து,
படிக்கச் சொன்னார்.
மட்டுமல்ல இதற்கு காரணமான 'அதிபர்' சகோதரன் ஜோஸ் கடகம்பள்ளியையும் அவருக்கு உதவிய சகோதரனையும் பிற
சகோதரர்கள் மத்தியில் இரண்டு மணி நேரம் முழந்தாளிட்டு நிற்க வைத்தார். இந்த
நிகழ்ச்சி சகோதரன் ஜோசை மிகவும் புண்படுத்தியது. துக்கம் தாங்க முடியாத அவர்
படுக்கையில் போய்ப் படுத்தார். குருமடவாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவர்
வீட்டுக்குத் திரும்பிப் போகவும் தீர்மானித்தார். இரவு 7.30 மணிக்கு தந்தை இலாறன்ஸ் குருமடம் வந்து சேர்ந்தார். யாரோ சொல்லி
நடந்த செய்தியை அறிந்தார். உடனே தந்தை இலாறன்ஸ் சென்று சகோதரன் ஜோஸ் கடகம்பள்ளியை
அழைத்து தம் அறைக்கு கூட்டிச்சென்றார். நீண்ட நேரம் பேசி ஆறுதல்படுத்தினார்.
சகோதரனை தம் முயற்சியால் இறையழைத்தலில் உறுதிப்படுத்தவும் செய்தார்.
1954 ஆம் ஆண்டு தந்தை இலாறன்ஸ் குருமட அதிபராக
இருந்த வேளை, குருமடத்திலும் காலரா தடுப்பூசி
போடவேண்டிய சூழல் வந்தது. அன்று மொத்தம் 32 சகோதரர்கள் இருந்தனர். இந்த மருந்து அதிகமான பக்கவிளைவுகளை
ஏற்படுத்துவதாக தெரிந்தது. தந்தை இலாறன்சும் இந்த தடுப்பூசி போட்டிருந்தார். அன்று
இரவு குருமாணவர்கள் தடுப்பூசியின் பாதிப்பால் தளர்ந்து விழுந்தனர். பலரும்
கடுங்குளிரால் நடுங்கிய வண்ணம் இருந்தனர். கடுமையான குளிர். பல துணிகளால்
போர்த்திய பின்னரும் குளிர் குறையவில்லை. தந்தை இலாறன்ஸ் பல துணிகளையும் கொண்டு
வந்து சகோதரர்களை போர்த்தினார். வேதனை உடையவர்களுக்கு தடவிக் கொடுத்தார்.
தேவையானவர்களுக்கு வெந்நீர் கொடுத்தார். தன்னுடைய வேதனையை மறந்து அனைவருக்கும்
தூங்காமல் விழிப்புடன் இருந்து பணிவிடை செய்தார். குருமாணவர்களை தம் சொந்த
பிள்ளைகள் எனக் கருதி பராமரித்ததை எவருக்கும் மறக்க முடியாது.
1954 தூய ஞானப்பிரகாசியார் குருமடத்திருநாள்.
உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்த காலம். அன்று காலை உணவிற்கு ஒன்றுமில்லாத
காரணத்தால் கூழ் (கஞ்சி) மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மருத்துவமனையில்
நற்கருணை வழங்கிய பின் அதிபர் தந்தை இலாறன்ஸ் இதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டார்.
அவர் உடனே பேராயரைக் கண்டு விவரம் அறிவித்தார். பேராயரிடமிருந்து பணம் வாங்கிச்
சென்று ஏத்தன் பழம், பிஸ்கட் முதலியவை வாங்கி வந்தார்.
காலை 10 மணிக்கு மாணவர்களை அழைத்து
அவர்களுக்கு கொடுத்தார். அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதை இவர் பார்த்து
ஆனந்தம் அடைந்தார்.
தந்தை இலாறன்ஸ் தொடர்ச்சியாக 12 மணி நேரம் நற்கருணை ஆராதனை நடத்தும் பழக்கத்தை
குருமடத்தில் துவங்கினார். இது ஆடம்பரமாகவும், பக்தியுடனும் நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் மற்ற
நிறுவனங்களிலிருந்தும் மக்கள் வந்து பங்குபெறச் செய்தார்.
ஒருமுறை சகோதரர் பிலிப்பை (நல்ல கறுப்பு
நிறம்) சகோதரர் வற்கீஸ் (நல்ல வெள்ளை நிறம்) கருங்குயில் என அழைத்து கிண்டல்
பண்ணினார். இதைக் கேட்ட அதிபர் சகோதரர் வற்கீசை அழைத்துக் கூறினார், ''அந்த சகோதரர் கறுப்பாக பிறந்தது அந்த
சகோதரனின் தவற்றாலா? நீங்கள் வெள்ளையாகப் பிறந்தது உங்கள்
நன்மையாலா? இருவரையும் கறுப்பாகவும்
வெள்ளையாகவும் படைத்தது கடவுளன்றோ? எனவே
நிறத்தின் அடிப்படையில் ஏளனம் செய்யும்போது படைத்த இறைவனையே ஏளனம் செய்கிறோம்.
நிறத்தின் அடிப்படையில் எவரையும் ஏளனம் செய்யக்கூடாது'. இன நிற வேறுபாடுகளை இளம் உள்ளங்களிலிருந்து அன்றே அகற்றினார்.
குருமடத்தில் கழிவறைக்குச் செல்ல பல படிகள்
இறங்கிச் செல்ல வேண்டும். ஒரு நாள் காலை 8 மணிக்கு 'றம்பாச்சன்' (பீலிப்போஸ் றம்பான்) படிகள் இறங்கி சென்று கொண்டிருந்தபோது கால்
தவறி கீழே விழுந்தார். இதைக் கண்ட தந்தை இலாறன்ஸ் ஓடிப்போய் றம்பாச்சனுக்கு ஏதாவது
காயம் ஏற்பட்டதா? ஏதாவது அடிபட்டதா? என்று கேட்டார். ''இறைவனின் அருளால் தலைகுப்புற விழுந்ததால் கையும் காலும்
முறியவில்லை'' என்றார். அவரது பதில் கேட்டு இருவரும்
பலமாகச் சிரித்தனர்.
அருட்தந்தை வாழப்பிள்ளேத்து கூறும்போது ஒரு
அதிபர் என்ற முறையில் நான் அதிகமாக அன்பு செய்து பாராட்டும் ஒரு தந்தை ஆயர்
இலாறன்ஸ் மார் எஃப்ரேம். முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதற்கு முன் குறிப்பாக
இறையழைத்தலைப் பற்றிய தீர்மானங்கள் எடுக்குமுன் நீண்ட நேரம் இரவில் நற்கருணைநாதர்
முன் செபம் செய்வது வழக்கம்''
என்கிறார்.
தந்தை இலாறன்ஸ் சிறந்த புகைப்பட நிபுணராகவும்
விளங்கினார். பேராயர் இல்லத்தில் தாமாகவே புகைப்படங்கள் தயாரிக்க இருட்டறை மற்று
வசதிகளையும் செய்திருந்தார். மறைப்பணித்தளங்கள், நிறுவனங்கள் மற்றும் முக்கிய திருஅவை தொடர்பான நிகழ்ச்சிகளின்
புகைப்படங்களை அவரே பிரதிகள் எடுத்திருந்தார்.
தந்தை சாமுவேல் மண்ணில் கூறுகையில், "1955 ஆம் ஆண்டு தந்தை இலாறன்ஸ் இங்கு
குருமட அதிபராக இருந்தபோது ஐந்து வகுப்புகள் நடத்திவிட்டு மறைபரப்புத்தளங்களுக்கு
செல்வது வழக்கம். பல நாட்களும் நற்செய்திப் பணி முடிந்து மிகவும் தாமதித்து
வருவதுண்டு. அப்போது உணவு இருக்காது. அதனால் உணவின்றி படுத்துத் தூங்குவார். அவர்
இல்லாது இருந்தபோது உதவி அதிபராயிருந்த நானே சகோதரர்களுக்கு வகுப்புகள் எடுப்பேன்' என்றார்.
பாளையம் பேராலயத்தின் முன் நின்று ஒரு
பெந்தக்கோஸ்தே திருஅவை மூதாட்டி கத்தோலிக்கர்களுக்கு எதிராக போதிப்பது வழக்கம்.
இதைக் கண்ட தந்தை இலாறன்ஸ் அவருடன் பேசி, இறுதியில்
அம்மூதாட்டியை கத்தோலிக்க திருஅவையிலேயே சேர்த்து விட்டார்.
ஒருநாள் கழக்கூட்டம் என்னும் இடத்தில்
மறைபரப்புப் பணி முடிந்த பின்னர் தந்தை இலாறன்ஸ் ஸ்கூட்டரில் வந்து
கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் தவறி சாலையில் விழுந்துவிட்டார். அந்த இடம்
ஒரு இலத்தீன் கத்தோலிக்க ஆலயத்தின் முன் பகுதி. இதைக் கண்ட வெளிநாட்டைச் சேர்ந்த
இலத்தீன் ஆயர் "இலத்தீன் ஆலயத்திற்கு அருகில் மிஷன்
ஆரம்பிப்பதால் தான் இவர் இங்கே விழுந்தார்'' என்று கூறினார். இதெல்லாம் தந்தை இலாறன்சின் மறைபரப்புப் பணியை
எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.
இசையில் தந்தை இலாறன்சுக்கு இருந்த திறமைகளைப்
பற்றி பலர் அறிந்திருக்கமாட்டார்கள். மலங்கரை கத்தோலிக்கத் திருப்பலியின்
பாடல்களுக்கு தந்தை இலாறன்ஸ்தான் முதன்முதலில் Music notations கொடுத்தார். ஆனால் இந்த Music notations ஐ சரியாகப் பயன்படுத்தி பாடல்
பாடுவதற்கு பயிற்சி பெற்ற குருக்களோ, பொதுநிலையினரோ
அன்று மலங்கரை திருஅவையில் இல்லை. இதனால் அவை தொடர்ந்து பயன்படுத்தப்படவில்லை. 1972 முதல் 1980 வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தி பாடல்கள் அடங்கிய Long Play Records உயர்மறைமாவட்டத்தின் பெயரில்
வெளியிடத் தேவையான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்தை இலாறன்ஸ் வழங்கினார்.
புதிதாக கட்டியெழுப்பப்பட்ட பட்டம்
பேராலயத்தின் அர்ச்சிப்பு விழா 1965
ஆம் ஆண்டு பெப்ரவரி
திங்கள் 22-ஆம் நாள் நடைபெற்றது. ஆலய அர்ச்சிப்பு
திருச்சடங்குகளுக்கும் திருப்பலிக்கும் பாடல்கள் பாட ஒரு பாடகர் குழுவை தயாரித்து
அக்குழுவுக்கு தந்தை இலாறன்ஸ் தலைமை வகித்தார். தொடர்ந்து பல
கலைநிகழ்ச்சிகளுக்கும் அவர் உருவம் கொடுத்தார்.
1955-ஆம் ஆண்டு ஒருநாள் சகோதரன் தோமஸ் பணிக்கரையும், சகோதரன் தோமசையும் அழைத்துக் கொண்டு தந்தை
இலாறன்ஸ் முண்டேலா என்ற மிஷனுக்குச் சென்றார். இப்பகுதி மக்கள் தாழ்த்தப்பட்ட
இனத்தைச் சார்ந்தவர்கள். இரவு 7
மணிக்கு சென்றடைந்தனர்.
ஒரு சிறு கோயில். உபதேசியார் வந்து, ''ஃபாதர்
நாளை திருப்பலி உண்டா?''
என்று கேட்டார். ''உண்டு" என்று தந்தை பதில் கூறினார். உடனே உபதேசியார்
தந்தை இலாறன்சுக்கும் மற்ற இரு சகோதரர்களுக்கும் உணவு வாங்கச் சென்றார். அரை மணி
நேரத்திற்குள் உணவு வாங்கி வந்தார். உணவு உண்ண கோயில் தயாரிப்பறையில் ஒரு புல்பாய்
விரித்து மூன்று பேரும் அமர்ந்தனர். உபதேசியார் உணவைப் பரிமாறினார். சகோதரர்களோ
உணவு உண்ணாமலிருந்தனர். தந்தை இலாறன்ஸ் இதைக் கண்டு ''நாம் உணவு அருந்துவோம். எல்லோரும் நமது மக்கள்தானே. இவர்
பரிமாறித் தரும் உணவை நாம் சாப்பிடவேண்டும்'' என்றார். சகோதரர்கள் மனமில்லா மனதுடன் சிறிது உண்ட பின் ''பசியில்லை'' என்று கூறி நிறுத்திவிட்டனர். தந்தையோ நன்றாக சாப்பிட்டார்.
தூங்குவதற்கு புல்பாய் கொடுக்கப்பட்டது. மூன்று பேரும் தூங்கினர். மறுநாள்
திருப்பலி முடிந்து திரும்பி குருமடம் வந்து சேர்ந்தனர். அப்போது தந்தை இலாறன்ஸ் ''நாம் எங்கு சென்றாலும் அவர்களிடையே, அவர்களில் ஒருவராக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
அங்கு மாற்று சிந்தனைகளுக்கொன்றும் இடமில்லை'' என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
கரமனைக்கு பக்கத்திலுள்ள மறைபரப்பு தளங்களில்
எல்லாம் தந்தை இலாறன்ஸ் நற்செய்தி அறிவித்தார். ஒரு இத்தாலியன் ஸ்கூட்டரில்
இடுக்கமான வழிகளையும் கடந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மக்களுக்கு விசுவாசம்
புகட்டினார். இக்காலத்தில் தான் அவர் உரோமுக்கு படிக்கச் செல்ல வேண்டியிருந்தது.
அப்போது இப்பகுதி மிஷன்களிலுள்ள மக்கள் ஒன்று சேர்ந்து பிரிவு உபசாரக்கூட்டம்
நடத்தினர். அந்த வழியனுப்பு விழாவில் ஒருவர் இவ்வாறு பேசினார். ''ஒரு தாய் தன் பிள்ளைகளை படுக்க வைத்து, தூங்கச் செய்து கொண்டு நான் இதோ வருகிறேன்
என்று கூறிச் செல்வது போல நம் தந்தை உரோமுக்குப் போகிறார். போய்த் திரும்பி
வரும்போது இன்னும் அதிகமான அனுபவங்கள் நமக்கு பரிசாக வழங்குவார். எல்லாம்
நன்மைக்கே. அதனால் அவரை வாழ்த்துகிறேன்'' என்று
கூறினார். தந்தை இலாறன்ஸ் இறை அழைத்தலுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
இறையழைத்தலைப் பெற்ற சகோதர சகோதரிகளை மிகவும் மதித்தார். இவர்களை பெயர் சொல்லி
அழைப்பதை அவர் விரும்பவில்லை. எப்போதும் 'ஃபாதர்'
'பிரதர்' 'சிஸ்டர்' என்று பெயர் முன் கூட்டி அழைக்க கண்டிப்பாய் கூறி வந்தார்.
இறையழைத்தலுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
4.
தொழுநோயாளிகளின் தந்தை
திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டம் நோய் சிகிட்சைத் துறையிலும்
சமூக வளர்ச்சித் துறையிலும் நன்முறையில் செயல்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தது. 1963ல் பிரப்பன்கோட்டில்
தொழுநோய் மருத்துவமனை நிறுவப்பட்டது. ஆதரவற்ற அனாதை தொழுநோயாளிகளுக்கு ஆறுதல்
வழங்க வேண்டும் என்று விரும்பிய பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையின்
மனநிலையை நன்கு புரிந்து செயல்படுத்திட பேராயரால் நியமிக்கப்பட்டவரே தந்தை
இலாறன்ஸ்.
பிரப்பன்கோடு மருத்துவமனையின் தொடக்கக்கால வரலாற்றைப்
பார்த்தால் தந்தை இலாறன்சின் கொள்கைப்பிடிப்பும், கடமை உணர்வும், நற்செய்திப்பணி
ஆர்வமும், ஏழைகளின் மீதுள்ள இரக்கமும், அன்பும் நன்கு
புலப்படும். கடினமாக உழைப்பதற்கும், கஷ்டப்படுவதற்கும் அவருக்கு ஒரு தயக்கமும் இருந்ததில்லை.
தந்தை
பெனடிக்ட் ஆயராவதற்கு முன்னர்,
கல்லூரியில்
முதல்வராகவும், விடுதி வார்டன் ஆகவும் இருந்து வந்த
காலம். வெஞ்ஞாறமூட்டிற்கு சமீபமுள்ள வள்ளித்திருப்பன்காடு கோயிலுக்கு ஞாயிறுதோறும்
சைக்கிள் மிதித்து பிரப்பன்கோடு வழியாகச் செல்வார். அப்போது அழகிய
மாணிக்கக்குன்றின் காட்சியைக் கண்டு ஏதாவது ஒரு நிறுவனம் நமக்கு இங்கு இருக்காதா
என்று ஆசைப்பட்டதாக பேராயரே பின்னர் கூறியிருக்கிறார். நாணல் செடிகள் நிறைந்து
காணப்பட்ட இக்குன்றில் மாணிக்கங்கள் தோண்டி எடுத்த குழிகள் அங்காங்கே காணப்பட்டன.
பிரப்பன்கோட்டிலும், அதை சுற்றியுள்ள ஊர்களாகிய குப்பம்
வெஞ்ஞாறமூடு, செம்பூர், தேம்பாமூடு,
கழக்கூட்டம் போன்ற
இடங்களிலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இருந்தனர். ஒரு வீட்டில்
ஒருவருக்கு தொழுநோய் ஏற்பட்டு அது, வீட்டில்
உள்ள பலருக்கு பரவிய பின்னும்,
சிகிச்சைப் பெறவோ, அதைப் பற்றி வெளியே கூறவோ தைரியப்படாமல்
வெட்கத்தால் மறைத்தனர். நாகர்கோயிலைச் சார்ந்த டாக்டர் கிறிஸ்துதாஸ், இங்கிலாந்தைச் சார்ந்த ஒரு பெண்மருத்துவர்
போன்ற சேவை மனப்பான்மை உடைய சில C.S.I.
பணியாளர்கள் சில
மருத்துவ மையங்களை நடத்தி வந்தனர். 1953ல்
தந்தை பெனடிக்ட், பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் என்ற
பெயரில் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டார். அப்போது C.S.I. திருஅவையினர் தம் பணியை தொடர்ந்து நடத்த
முடியாது என்று தங்கள் சிரமத்தை அறிவித்தனர். பேராயர் அவர்கள் இப்பணிகளை
ஒருங்கிணைத்து தொடர்ந்து செய்ய தீர்மானித்தார். இயக்குநராக தந்தை இலாறன்சை
நியமித்தார். பிரப்பன்கோட்ல் மருத்துவமனை கட்டிடமானது மலங்கரை கத்தோலிக்கரும், மருத்துவக் கல்லூரி பேராசிரியருமான டாக்டர்
சத்தியதாசின் அறிவுரைப்படி கட்டியெழுப்பப்பட்டது. தொழுநோய் பராமரிப்பு பயிற்சி
பெற்ற எவரும் நமக்கு இல்லாதிருந்த காரணத்தால் லிற்றில் சிஸ்டேள்ஸ் ஆப் சாள்ஸ்
டிபெர்க்கோ திருஅவையைச் சார்ந்த மூன்று பிரெஞ்சு நாட்டு சகோதரிகள் அழைத்து
வரப்பட்டனர். அவர்கள் நாலாஞ்சிற மடத்தில் தங்கி மொழியையும், நம் நாட்டையும் பழகினர். இதன் அருகில் இரண்டு
வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. ஒன்றில் சகோதரிகளும், மற்றொன்றில் தந்தை இலாறன்சும் தங்கினார்கள். அவரது வீட்டிலேயே ஒரு
அறையை சிற்றாலயமாக பயன்படுத்தினார். 1963-ஆம்
ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் நாள் லூர்து அன்னையின் திருநாளிலே
பேராயர் கிரிகோரியோஸ் ஆண்டகை திருப்பலியை நிறைவேற்றி பிரப்பன்கோட்டில் பணிகளை
ஆரம்பித்து வைத்தார். பேராயரின் கட்டளைப்படி பெதனி துறவற திருஅவையைச் சார்ந்த
சகோதரிகள் சிஸ்டர் சோபியா,
சிஸ்டர். றீத்தா, சிஸ்டர் மார்க்கிரட் ஆகியோர் மருத்துவமனையில்
உதவிபுரிய வந்தனர். கூடவே லிற்றில் சிஸ்டேள்சும் மருத்துவமனை நடத்த உதவி வந்தனர்.
மாவேலிக்கரை கயிறு தொழிற்சாலையின் தலைவர் திரு. செபஸ்தியானின் மனைவி டாக்டர் அகிலா
மருத்துவப் பொறுப்பை ஏற்றார். இதற்கிடையில் இங்கு ஒரு தொழுநோய் மருத்துவமனை
வருகிறது என்று தெரிய வந்த மக்கள் கடுமையாக எதிர்த்தனர். நோயாளிகள்
மருத்துவமனைக்கு வந்து சேருவதற்குள் வழியில் வைத்தே அவர்களை அச்சுறுத்தினர்.
கற்களை வீசவும் செய்தனர். அவர்களை ஏளனம் செய்யவும் தொடங்கினார்கள். மக்கள்
தலைவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் நேரடியாக வந்து தங்கள்
எதிர்ப்பை தெரிவித்தனர். நிலைமை மோசமான காரணத்தால் 'தொழுநோய்'
என்ற பெயரை மாற்றி எல்லா
நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. மருத்துவக்கல்லூரியிலுள்ள
பெயர் பெற்ற மருத்துவர்கள் பலரை தந்தை இலாறன்ஸ் அழைத்து வந்தார். டாக்டர்
சத்தியதாஸ், டாக்டர் ஓமன மாத்யூ (S.A.T. ஆய்வாளர்கள்), டாக்டர் ஜோசப்,
டாக்டர் வர்க்கீஸ்
சாக்கோ, டாக்டர் றோஸ் வர்க்கீஸ் ஆகியோர்
அடிக்கடி வந்து சிகிச்சை செய்தனர். மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு
படிப்படியாக வழங்கப்பட்டது. வீடுகளை சந்தித்தும், கல்விக்கூடங்களை சந்தித்தும் தொழுநோய் அறிகுறி தென்பட்டவர்களை
அடையாளம் கண்டு அதுபற்றி கல்வி புகட்டப்பட்டது. ஆனால் நல்ல பலன் கிடைக்கவில்லை. பல
வேளைகளில் ஏளனமும், அவமானமும், எதிர்ப்பும்தான் சந்திக்க வேண்டியிருந்தது.
பொதுக்கூட்டம்
ஒன்று நடத்த ஏற்பாடாயிற்று. பொதுக்கூட்டத்தில் பேராயர், ''இந்த மருத்துவமனையில் தொழுநோயாளிகளுக்கு மட்டுமல்ல அனைத்து
நோயாளிகளுக்கும் மருந்து வழங்குவோம். அத்துடன் தொழுநோயாளிகட்கும் சிகிச்சை
அளிப்போம். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து தொழுநோயாளிகளைக் கொண்டுவந்து சிகிச்சை
அளிக்கவில்லை. மாறாக நம் ஊரிலுள்ள தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதே எங்கள்
இலட்சியம். அவ்வாறு நம் நாட்டிலிருந்து தொழுநோயை முற்றிலும் ஒழிக்க முடியும்.
இல்லாவிடில் ஆண்டுக்கு குறைந்தது 10 பேரையாவது
நாம் தொழுநோயாளிகளாக மாற்றுகிறோம். அவ்வாறு தொழுநோயாளிகளின் எண்ணிக்கை
அதிகரிக்கும். எனவே இங்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையுடன் ஒத்துழைத்து
தொழுநோயை ஒழிக்க உதவ வேண்டும்''
என்றார். இந்த
கூட்டத்திற்குப் பின்னர் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை கைவிட்டு ஒத்துழைக்கத்
தொடங்கினார்கள்.
பிரப்பன்கோடு
இமாம் முகமது இந்த எதிர்ப்பைப் பற்றி இவ்வாறு கூறினார். "தொழுநோய் மருத்துவமனை என்று மக்கள் முதலில்
அறியவில்லை. திறப்புவிழாவின்போது தான் அறிந்தனர். தொழுநோய் மருத்துவமனை என்று
அறிந்ததும் மக்கள் எதிர்த்தனர். மக்கள் பள்ளி மாணவர்களை தூண்டிவிட்டனர். மாணவர்கள்
வந்து மரச்சீனிகளை எல்லாம் பிடுங்கி எறிந்தனர். மரம், செடி,
கொடிகளின் கனிகளை வெளியே
விற்கத் தடை செய்தனர். கல்லெறிந்தனர். இச்சமயங்களில் தந்தை இலாறன்ஸ் பொறுமையுடன்
கேட்டு நிற்பது வழக்கம். பல வேளைகளில் இரு கைகளாலும் தாடியைத் தடவிக்கொண்டு
சிந்தனையில் மூழ்கியிருப்பார். குறைந்த அளவு நல்ல வார்த்தைகளை பதிலாகக்
கூறுவார்.....
சில
காலங்களுக்குப்பின் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழுநோய் தவிர மற்ற நோய்களுக்கான
இலவச சிகிச்சை நிறுத்தப்பட்டது. ஜெர்மன் தொழுநோய் மையத்தின் உதவி இருந்த
காரணத்தால் முழுமையான தொழுநோய் மையமாக இதை மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
இதனால் இன்னும் எதிர்ப்புகளும்,
துன்பங்களும் அதிகமாக
வளர்ந்தன. மருத்துவர் பொறுப்பிலிருந்த டாக்டர் அகிலா உடல் நலம் குன்றிய காரணத்தால்
கணவர் வந்து அவர்களை அழைத்துச் சென்றார். கொல்லம் பென்சிகர் மருத்துவமனையில் சில
நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் திடீரென மரணமடைந்தார். இது அனைவருக்கும் பெரும்
அதிர்ச்சியாக இருந்தது. நெருக்கடி மேலும் அதிகரித்தது. ஒரு மருத்துவரை தேடி
அலைந்தார். நிரந்தரமாக ஒரு மருத்துவர் அப்போது கிடைக்கவில்லை. டாக்டர் கப்பர் என்ற
ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண் டாக்டர் சில காலம் பணிபுரிந்தாலும் அங்குள்ள
காலநிலைக்கு ஏற்ப ஒத்து போக முடியாத காரணத்தால் பின்னர் வீட்டிற்குச் சென்றார்.
இவ்வாறு எல்லா பக்கங்களிலிருந்தும் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் வந்த
பின்னும் மருத்துவமனைப் பணிகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தன. காரணம் தந்தை
இலாறன்சின் உறுதியான மனமும் அவர் அளித்து வந்த ஊக்கமும்தான்.
ஒரு
கடின உழைப்பாளியாக இருந்தார் தந்தை இலாறன்ஸ். நாணல் செடிகளால் நிறைந்து நின்ற
மாணிக்கக் குன்றை செடி கொடிகளால் நிறைத்தார். பேராயர் இல்லம் சென்று பலவகை
செடிகொடிகளைக் கொண்டு வந்ததைக் கண்டவுடன் சோம்பேறியான காவலர் காணாமல்
போய்விட்டார். பின்னர் தந்தை இலாறன்ஸ் மண்ணை பக்குவப்படுத்தி பிறரது உதவியோடு மிக
அழகான தோட்டம் அமைத்தார். பின்னர், அவ்வழியாக
வந்த பேராயர் ஆஹா! இலாறன்ஸ் தோட்டமல்லவா! நன்றாக இருக்கிறது! என்று கூறி
பாராட்டினார். இதைத் தொடர்ந்து தென்னை, மா, பலா, வாழை, இரப்பர் போன்ற பல வகையான மரங்களை நட்டு வளரச்
செய்தார். இன்னொருபுறம் பசு,
பன்றி, கோழி ஆகியனவும் வளர்க்கப்பட்டது. இது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பும் நோயாளிகளின் மறுவாழ்வுக்கு உதவும்
என நம்பினார். தன்னுடன் பணிபுரிந்தவர்களுக்கும் இந்த ஆர்வத்தை ஊட்டினார்.
'ஏழைகளுக்கு
நற்செய்தி அறிவிக்க நான் உன்னை அனுப்புகிறேன்'' என்று ஏசாயாவுக்கு அருளப்பட்ட இறைவாக்குகளை தன் வாழ்க்கையின்
இலட்சியமாக கொண்டார் தந்தை இலாறன்ஸ். பவுலைப் போன்று அவர் புறவினத்தாரின்
அப்போஸ்தலர் ஆனார். ''புறவினத்தாரிடையே மறைபரப்புப் பணி
செய்வது என்பது மார் இவானியோஸ் ஆண்டகையின் ஒரு வாழ்க்கை இலட்சியமாக இருந்தது. இதை
நிறைவேற்ற வேண்டியது நம் கடமை என்றும் ஆண்டவர் நம்மிடம் செய்யச் சொல்வதை நாம்
செய்தால் எஞ்சியதை அவர் கவனித்துக் கொள்வார்'' என்றும் தந்தை இலாறன்ஸ் அடிக்கடி கூறுவார். மனம் தளர்ந்து
சோர்ந்து போன பலரையும் அவர் தன்னுடைய பணிகளில் தன்னோடு ஈடுபடுத்தி அதன் வழியாக
அவர்களின் வாழ்வை மலரச்செய்தார்.
ஒருமுறை
பிரப்பன்கோடு மருத்துவமனை காம்பவுண்டுக்குள் நான்கு சென்று நிலத்தை சொந்தமாக்க ஒரு
கூட்டம் மார்க்சீய கம்யூனிஸ்டு நபர்கள் வந்தனர். இதற்கு பஞ்சாயத்து தலைவர் தலைமை
வகித்தார். பல சமாதான முயற்சிகளையெல்லாம் கையாண்ட பின்னரும் போராளிகள்
பின்வாங்கவில்லை. இந்து மதத்தைச் சார்ந்த 100க்கு மேற்பட்ட இளைஞர்கள் தந்தை இலாறன்சுடன் இருந்தனர். போராட்டம்
உச்சகட்டத்தை எட்டியபோது தந்தை இலாறன்ஸ் போராட்டக்காரர்கள் முன் வீரத்துடன்
நின்றார். சகோதரிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். இறுதியில் போராட்டக்காரர்கள்
தோல்வியடைந்து பின்வாங்கினர். தகாத சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பஞ்சாயத்து தலைவர்
கனகன் சார் பின்னர் தொழுநோய் மருத்துவமனையின் ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கினார்.
தந்தை இலாறன்சுக்கு எதிராக போராடியவர் அவரது நண்பரானார். பகைவனையும் நண்பனாக்குவது
அவரது தனிப்பண்பு.
பேரயம்
ஊரிலுள்ள கேசவபிள்ளை என்ற தொழுநோயாளர் நூறனாட்டிலிருந்து சிகிட்சை முடிந்து
வீட்டிற்கு வந்தார். வீட்டிலுள்ள பிரச்சனைகளால் இனி வாழ வேண்டாம், சாகவேண்டும் என்று தீர்மானித்தார். விஷம்
அருந்தினார். ஆனால் இறக்கவில்லை. விஷத்தின் பாதிப்பு ஏற்பட்டது. முகத்திலும், உடலிலும் புண்கள் நிறைந்தன. அவ்வாறு
அவநம்பிக்கையுடன் பாளையத்தில் ஒரு மரத்தடியில் இருக்கும்போது தந்தை இலாறன்ஸ்
அவ்வழியாகச் சென்றார். இவரைப் பார்த்து காரணம் விசாரித்தார். பிரப்பன்கோடு கூட்டி
வந்து சிகிட்சை அளித்து குணப்படுத்தினார்.
தந்தை
இலாறன்ஸ் நிலமேல் அருகிலுள்ள குரியோடு என்ற இடத்தில் ஒரு மருத்துவமனையை
உயர்மறைமாவட்டத்திற்காக வாங்கினார். அங்கு அவர் சென்றபோது வேடர்கள் பலர் சென்று
கொண்டிருந்தனர். அவர்களை வண்டியில் ஏற்றி பிரப்பன்கோட்டுக்கு அழைத்து வந்தார்.
குளிப்பாட்டி, ஆடை அணிவித்து உணவு வழங்கினார்.
நோயாளிகளுக்கு சிகிட்சை அளித்து தங்கவைத்தார். எஞ்சியோரை திரும்ப அனுப்பினார்.
வெம்பாயத்தில்
1965ல் கிளினிக் நடத்தி மருந்து நல்கி
வந்த காலம் ஒரு ஜெர்மன் மருத்துவருடன் சகோதரிகளும், தந்தை இலாறன்சும் செல்வார். தந்தை இலாறன்ஸ் ஆங்கிலத்தில் அந்த
மருத்துவருக்கு நோயைப் பற்றி சொல்லிக் கொடுப்பார். அப்போது ஒருவர் வந்தார். தந்தை
இலாறன்ஸ் கேட்டார். ''பெயர் என்ன?'' ''கோபிநாதன்''
என்றார். 'எவ்வளவு படித்திருக்கிறீர்'' என்று கேட்டபோது "B. A படித்துக் கொண்டிருந்தபோது நோயினால் நிறுத்த
வேண்டிவந்தது'' என்றார். ''கோபியே,
அப்படியானால்
டாக்டருக்கு மொழிபெயர்த்துக் கொடுக்கலாம் அல்லவா?'' அவ்வாறு கோபியின் திறமையை வளரச் செய்து பல பணிகளில் அவரை
ஈடுபடுத்தவும் செய்தார்.
கோபிநாதன்
நன்கு குணமடைந்தார். திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு 2 1/2 வயது ஆனபோது பிரப்பன்கோட்டிலுள்ள
நர்சரி பள்ளிக்கூடத்தில் சேர்க்க கோபிநாதன் கூட்டிவந்தார். நர்சரி அதிகாரிகள் ''மூன்று வயது ஆகட்டும்'' என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். மூன்று வயது ஆனபோது அடுத்த
ஆண்டு ஆகட்டும் எனக் கூறி மறுத்தனர். அடுத்த ஆண்டு ஆனபோது வேறு ஏதோ தடை உள்ளதாக
தெரிந்தது. கோபிநாதன் தந்தை இலாறன்சை பார்த்துக் கூறினார். தந்தை இலாறன்ஸ் நர்சரி
அதிகாரியிடம் கூறினார்.
"தொழுநோயாளிகளுக்குத்தான்
இந்த நர்சரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோபிநாதனின் குழந்தையை நீங்கள் இங்கு
சேர்க்க வேண்டும்''. நர்சரி அதிகாரியோ, "கோபிநாதன் தொழுநோயாளி, அவனது குழந்தையைச் சேர்த்தால் மற்றவர்கள் எல்லோரும் தங்கள்
பிள்ளைகளை திருப்பிக் கூட்டிக் கொண்டு போவர்'' என்று நினைவூட்டினார். ''எல்லோரும்
திரும்பிச் சென்றாலும் பரவாயில்லை. கோபிநாதனின் பிள்ளை கண்டிப்பாக இந்த நர்சரியில்
படிக்க வேண்டும்'' தந்தை இலாறன்ஸ் உறுதியாகக் கூறினார்.
குழந்தைக்கு அட்மிஷன் கிடைத்தது.
1969 ஏப்ரல்
1ம் நாள் பிரப்பன்கோடு மருத்துவமனையில்
தந்தை இலாறன்ஸ் பணியாற்றிய நேரம்,
மருத்துவமனையில் ஒரு
பணியாளர் மடத்தில் ஓடிவந்து தந்தை இலாறன்ஸ் மிகவும் சீரியஸ் ஆக
நோய்வாய்ப்பட்டுள்ளார். ஓடிவந்து மருத்துவக் கல்லூரிக்கு (Medical College) கொண்டு போங்கள் என்று சொன்னார். இதைக்
கேட்ட பிரஞ்சு நாட்டைச் சார்ந்த சிஸ்டர் எல்லாம் மறந்து 1/2 கி.மீ தூரம் ஓடி வந்து தந்தை இலாறன்சின் அலுவலகத்தை அடைந்தார்.
அங்கு
தந்தை இலாறன்ஸ் நலமுடன் அலுவல்களை செய்து கொண்டிருப்பதைக் கண்டு
அதிர்ச்சியடைந்தார். 'Father....
Father... you are all right? என்று
சிஸ்டர் கேட்டார்கள்.
"Yes Sister, I am fine' என்று
தந்தை பதில் கூறினார். அன்று ஏப்ரல் 1 ஆகையால்
யாரோ சிஸ்டரை ஏமாற்றியதை அறிந்த தந்தை இலாறன்ஸ் பலமாக சிரித்தபின் "I am fine Sister, Now you
need to be treated for the shock you got' என்று பதில் கூறினார்.
டாக்டர்
சிதம்பரம்பிள்ளை ஆயருடன் நீண்ட காலம் பணி புரிந்தவர். அவர் ஆயரைப்பற்றி கூறும்
போது அவருடைய பண்பையும்,
பிறரை அவர் அழைத்துச்
செல்லும் பாங்கையும் ஆச்சரியத்துடனும், பாராட்டுடனும்
சொல்லக்கூடிய பலரில் நானும் ஒருவன். ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய மேலான பண்புகள்
சிலவற்றைப் பெற்றுள்ளார்கள். அப்பண்புகள் அவரை பிறரிடமிருந்து நமக்கு பிரித்துக்
காட்டுகிறது.
அரசியல், மதம், சுகாதாரம்,
நிர்வாகம் ஆகிய எல்லாத்
துறைகளிலும் நாம் தலைமுறைகளாக,
ஏன் நூற்றாண்டுகளாக
நினைவு கூரும் அளவுக்கு சில சிறப்பான பண்புகளைக் கொண்டு, பிறரது கவனத்தை ஈர்த்த பெரியவர்கள் வரலாற்றில் வாழ்ந்தது உண்டு.
அவ்வாறு இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள், வறுமையிலும், நோயிலும் துன்பப்படும் இலட்சக்கணக்கான
மக்களிடம் கொண்டிருந்த அன்பு,
பரிவு அவரை
மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டியது.
நல்ல
ஒரு சுகாதார நிர்வாகி எப்போதும் அடிமட்ட மக்களின் பிரச்சனைகளையும், துன்பங்களையும் அறிய முயற்சிப்பார் என்பதை
அனுபவங்கள் நிரூபித்திருக்கின்றன. ஆயர் இலாறன்ஸ் அவர்களும் இதற்கொரு
விதிவிலக்கல்ல. எந்த பிரச்சனைகளையும் தீர்ப்பதில் அவர் யாருக்கும் சளைத்தவர் அல்ல.
அவர் ஒருமுறை சுகாதாரப் பணி மையத்திலிருந்து சில தகவல்களை பெற்று திரும்பிக்
கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக ஒரு அரசுப் பணியாளரைக் கண்டார். அரசின் பணிகளை
நிறைவேற்றுவதில் அவருக்கு இருந்த எல்லா தடைகளையும் பிரச்சனைகளையும் அப்பெண்
எடுத்துரைத்தார். அவரது துயரில் மூழ்கிப் போன தந்தை இலாறன்ஸ் தனது முக்கியமான
பணிகளைக்கூட மறந்து 30 நிமிடத்திற்கு மேல் அவருடைய
துன்பத்தை பகிர்ந்துகொண்டார். இத்தகைய பணிகளை நிறைவேற்றுவதில் சுய சாதனை புரியும்
எண்ணத்தை பார்த்து, தனக்கிருந்த குறைகளையும் எடுத்துக்கூற
மறக்கவில்லை. இன்றைய தலைமுறைக்கு இத்தகைய மனநிலை மிகத் தேவைப்படுகிறது. தங்கள்
வெற்றியை அடைவதற்காகவும்,
தங்கள் சாதியை
விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவும் இன்று பலர் மக்கள் பிரச்சனைகளை விட்டு ஓடி
மறைந்து கொள்வது வேதனைக்குரியது.
வாகனத்தில்
பயணம் செய்யும்போதும்,
வாகனத்தை நிறுத்தி
துன்பத்திலும், வேதனையிலும், நோயிலும் இருக்கின்ற மக்களை சந்திப்பதும், அவர்களின் வேதனைகளை அவர்களுடனும், அவர்கள் உற்றார் உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்வதும் அவரது
வழக்கம். அவர்களுக்காக செபித்து,
அவர்களை அவர்
ஆசீர்வதிப்பார். இந்த பணிகளை அவர் நிறைவேற்ற அவரது அன்றாட பிற நிகழ்ச்சிகள்
அவருக்கு தடையாக இருக்கவில்லை.
ஒருமுறை
அம்பிலிகோணம் என்ற ஊரில் ஏராளமான மாற்றுத்திறனாளி மக்களைக் கண்டு கலங்கினார்.
மக்கள் தொகையில் 10 விழுக்காடு மக்கள், ஒரு வகையில் அல்லது மற்றொரு வகையில்
மாற்றுத்திறனாளிகளாகவும் குறையுள்ளவர்களாகவும் இருப்பதை அறிந்து கொண்டார். உடனே
அவர் ஒரு சிறந்த மருத்துவ வல்லுநரை அழைத்துவந்து அவர்களை சோதித்து இயன்றவரை மக்களை
மறுவாழ்வு அடையச் செய்ய ஏற்பாடுகள் செய்தார். வல்லுநர்கள் சுமார் 4 மணி நேரம் தொடர்ச்சியாக சோதித்து, இயன்றவரை மக்களை மறுவாழ்வு அடையச்செய்ய
ஏற்பாடுகள் செய்தார்கள். அவர்களின் எதிர்கால வாழ்வை வளப்படுத்தும் முறையைக்
கூறினார். இருப்பினும் ஆயரிடமிருந்து அறிவுரையைப் பெற்று அவற்றை செயல்படுத்த
வேண்டியவர்களின் ஆர்வக்குறைவால்,
இம்முயற்சி நினைத்த
பலனைக் கொடுக்கவில்லை. ஆகவே ஒரு பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். அதன் விளைவாக இன்று
தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானோர் பல நன்மைகளை அடைந்து வருகின்றனர்.
“ஹெல்த்
பார் ஒண் மில்லியன்” என்ற மிகச் சிறப்பான திட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
கேரள சுகாதாரப் பணி இயக்குநர், பணியாளர்களின் ஒரு கூட்டத்தைக்
கூட்டி ஆயர் இலாறன்ஸ் அவர்கள் நலவாழ்வு பற்றிய உரை நிகழ்த்தினார். அவரது உரையைக்
கேட்ட பலர், இவர் ஒரு மருத்துவர் என்றே
நினைத்தார்கள். ஊட்டச்சத்து,
தாய் சேய் நலன் ஆகிய
தலைப்புகள் அதிகமாக கவனிக்கப்பட்டன. ஒருமுறை படிப்பறிவற்ற ஒரு தாய் சுகாதாரம்
பற்றி வகுப்பு நடத்தியதைக் கண்டு,
உலக சுகாதார நிறுவன
அலுவலர் ஒருவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். எதற்கும் உடனடி பிரதிபலன் எதிர்பார்க்கும்
மனநிலை உடைய மக்களிடையே தந்தை இலாறன்ஸ், இப்பணிகளை சமூக நலனுக்காக நிறைவேற்றுவதன்
தெய்வீகக் கடமையைச் சுட்டிக்காட்டி மக்களை பொறுப்புடையவராக்கினார்.
புதுக்கடைப்
பகுதியில் ஏராளமான மக்கள் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை தந்தை கண்டார்.
உடனே இரவில் பெரும் அளவில் இரத்தப் பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்தார். அவ்வாறு இந்த
தொற்றுநோய் பிடித்தவர்களை கண்டுபிடித்தார். உடனுழைப்பாளிகள் நல்ல ஒத்துழைப்பைக்
கொடுத்தனர். பலர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஒரு நிகழ்ச்சியே இவ்வாயரின் ஆளுமையின் பெருமையை
நமக்கு வெளிப்படுத்த போதுமானது.
ஒருமுறை
வாகன ஓட்டுநர் விடுமுறை பெற்றிருந்தார். வாகனத்தை ஓட்டும் பொறுப்பை தந்தை இலாறன்ஸ்
ஏற்றெடுத்தார். அத்துடன் மருத்துவ அலுவலுக்கு உதவும் பணிகளைக் கூடச் செய்தார்.
ஸ்பிரிட் தடவுவது, இரத்தம் கசிந்து கொண்டிருந்த
காயங்களையும், புண்களையும் சுத்தமாக்குதல் போன்ற
சாதாரண வேலைகளையும் அவர் செய்தார். இந்த சிறு நிகழ்ச்சி ஆயர் இலாறன்ஸ் எந்த
பணிகளையும், எந்த வேளையிலும் செய்யவும், எந்த இடத்தில் செய்யவும் தயாராய் இருந்தார்
என்பதைக் காட்டுகிறது. எதிர்பாராமல் வந்த சில பிரச்சனைகளால் அவர் அனுபவிக்க வேண்டி
வந்த துன்பங்களைப் பார்க்கும்போது வாழ்வின் மிகப்பெரிய பிரச்சனைகளையும், துன்பங்களையும் தாங்குவதற்காகவே பிறந்தவர்
இவர் என்று தோன்றும்.
ஒரு
முறை தம் நிறுவனத்தின் ஒரு மூத்த அலுவலரிடம், முக்கியமான சில கருத்துக்களை உள்ளடக்கி ஒரு கடிதம் தயாரிக்க
வேண்டும் என்றுக் கூறினார். ஆயரின் சொந்த வார்த்தைகளால் அக்கடிதம் நல்லபடியாகவே
எழுதப்பட்டது. ஆனால் அந்த கடிதம் எங்கும் எவருக்கும் அனுப்பப்படவே இல்லை. தகவல்
கொடுப்பதில் அந்த அலுவலரின் திறமையை சோதித்து அறிவதற்கே ஆயர் அவ்வாறு செய்தார்.
தன் அன்பு பராமரிப்பில் பணி செய்த மக்களின் திறமைகளை எப்படி கண்டறிந்தார் என்பதை
இது காட்டுகிறது.
தந்தை இலாறன்ஸ் பிரப்பன்கோடு மருத்துவமனை
இயக்குநராக இருந்தபோது ஆரோக்கியத் திட்டங்களைப் பற்றி வகுப்புகள் நடத்துவதற்காக
நாலாஞ்சிறை பெதனி மடத்துக்கு வருவார். சாதாரண கதர் துணியும், சப்பலும் அணிந்து வரும் அவரை பெதனி மடத்தின்
மதர் சல்க்கா , மதர் மாக்சா, மதர் பாசிம்,
மதர் சைபார் ஆகியோர்
அன்புடன் வரவேற்பர். தாய்-சேய் நலன்பற்றி நீண்ட நேரம் வகுப்பு நடத்துவார்.
மண்விளை, குண்டுகாடு,
சாலை முதலிய தலித்
காலணிகளில் மிக ஆர்வமுடன் பணியாற்றினார். இவர்களை ஊக்குவிக்கவும், வளர்த்தவும் தனிக் கவனம் செலுத்தினார். 1959ம் ஆண்டு பேராயர் பெனடிக்ட் மார்
கிரிகோரியோஸின் பெயர் கொண்ட புனிதரின் விழாவின்போது பட்டம் பேராலயத்தில் பேராயர்
நிறைவேற்றும் திருப்பலியின்போது குண்டுகாட்டிலிருந்து புதுநன்மை வாங்குவதற்குரிய
பிள்ளைகளை பேராலயத்திற்கு அழைத்துவந்து பேராயரிடமிருந்து நற்கருணை பெறச் செய்தார்.
அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நல்ல பழக்கம் இன்றும் தொடர்கிறது. புது நன்மைக்கு
பிள்ளைகளை அதிகமாக தயாரிப்பதிலும் அதை ஒரு அனுபவமாக்குவதிலும் ஈடுபட்டார். வார
நாட்களில் மறைபணித்தளங்களில் திருப்பலி நிறைவேற்றும் பழக்கமும் தந்தை இலாறன்சால்
ஆரம்பிக்கப்பட்டது.
1960 ம் ஆண்டு தந்தை இலாறன்சுடன் பணியாற்றிய
சிஸ்டர் செலின் D.M. தந்தை இலாறன்சின் மிஷன் ஆர்வத்தை
சுட்டிக் காட்டுகிறார். 'ஒரு நபரானாலும் இப்போது மிஷன்
ஆரம்பிப்போம். பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அதனால் மிஷன் ஆரம்பிக்க
வசதியான கட்டிடம் தேவை இல்லை. சிறு குடிசையோ, திறந்த வெளியோ ஆனாலும் போதுமானது' என்று தந்தை இலாறன்ஸ் அன்றே கூறுவார். ஆயரின் குடும்பம்
வறுமையில் வாழ்வது கண்டு 'உலகில் எந்த ஒரு ஆயரின் குடும்பமும்
இவ்வாறு ஏழையாக இருக்கமாட்டார்கள் என்று அருட்சகோதரி கூறிய போது ஆயர் சிரித்து
விட்டு எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வார் என்று பதில் கூறினார்.
தன்னுடைய உள்ளத்தைத் திறந்து எல்லா
காரியங்களையும் மதர் மேரியிடம் கூறி பகிர்ந்து கொள்வது அவர் வழக்கமாக இருந்தது.
மதர் மேரி ஆயரைப் பார்த்து 'ஆரோக்கியம் இல்லாத ஆயர்' என்று கூறியபோது ஆரோக்கியம் ஆண்டவர்
கொடுப்பார்' என்று அவர் பதில் கூறினார். வாழ்வின்
இறுதி வரை உடல் நலக்குறைவு என்ற காரணத்தால் எந்த இறைபணியும் செய்யாமல்
இருந்ததில்லை என்ற அப்பட்டமான உண்மை இங்கு கவனிக்கத்தக்கது.
1967 ஜுலை மாதம் 30-ஆம் நாள் ஒரு பையையும் பிடித்துக்கொண்டு புனித அலோசியஸ்
குருமடப்படிகள் இறங்கி விரைவில்,
வடக்கு மூலையில் உள்ள
சிறு அறையில் ஒரு தந்தை நுழைந்தார். அது யாரென்று அறிவதற்குரிய ஆர்வத்தில் நான்
நின்றேன். குருமடத்தின் முன்னாள் அதிபர் தந்தை இலாறன்ஸ் தோட்டம் என்று ஒரு மூத்த
சகோதரன் கூறினார். ஒருமுறை கூட பார்ப்பதற்குரிய ஆர்வத்தினால் நான் அங்கேயே நின்றேன்.
சிறிது நேரத்திற்கு பின்னர் வியர்வை வழிய இருண்ட அறையிலிருந்து கழுகிய ஃபிலிமுடன்
(புகைப்படத்துடன்) அவர் வெளியே வந்தார். கூர்ந்து கவனிக்கும் கண்கள், சிரித்த முகம். ''பிரதரின்றெ பேரு எந்தாணு?'' "கோசிவற்கீஸ்''. 'இடவக?''
''கிழக்கேத்தெரு', "வீட்டுப்பேரு?'' ''மணிகட்டிய கிழக்கே வீடு மாத்துக் குட்டியுடே ஜேஷ்டன்றெ மகன்'. பிரதர் சுகமாயிருக்கிந்நுவோ? ''அதே'', "கொள்ளாம்'. மிக கவர்ச்சிகரமான நடத்தை. இன்றைய மாவேலிக்கரை
மறைமாவட்ட ஆயர் ஜோஷ்லா மார் இக்னாத்தியசும், தந்தை இலாறன்சும் முதலில் அறிமுகமானது இவ்வாறுதான். பின்னர்
பேராயர் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை தந்தை இலாறன்சின் வீட்டில் அவர் பெற்றோரை
பார்க்கச் சென்றபோது ''இந்த சாதாரண வீட்டிலிருந்தா? இவ்வளவு அசாதாரண ஆளுமைக்கு சொந்தமான தந்தை
இலாறன்ஸ் குருவாயிருக்கிறார்''
என்று வியந்தார். பட்டம்
குருமடத்தில் பயிலும்போது ''ஃபாதர் டாமியன்' நாடகத்தில் நடித்த சகோ. கோசிவற்கீசை கண்டு
பாராட்டிய தந்தை இலாறன்ஸ் கூறினார். "இவ்வாறு
வாழுகின்ற ஒரு குருவாக மாற வேண்டும்'' என்றார்.
மருத்துவமனையின் உள்ளே தந்தை இலாறன்ஸ்
நோயாளிகளுக்காக ஒரு சிற்றாலயம் கட்டினார். அதில் எல்லா நோயாளிகளையும் ஆலயத்தின்
உள்ளே அமரச்செய்வார். சகோதரிகளிடம் வெளியில் நிற்கச் சொல்வார். வெளியே நிற்பதற்கு
கூட வசதியில்லாதிருந்த காலத்தில் தான் இவ்வாறு நடந்தது.
ஒரு நாள் தந்தை இலாறன்ஸ் கிளிமானூர் வழியாக
பச்சை நிற வேன் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் ஓடையில் ஒரு வயதானவர்
கிடப்பதைக் கண்டார். இவர் பெயர் கோவிந்தபிள்ளை. தந்தை வண்டியை நிறுத்தி அவரை
தூக்கி எடுத்து வண்டியில் ஏற்றி மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தார்.
உதவியாளர் அனைவரும் வந்து கூடினர். முதலுதவிகள் செய்யப்பட்டன. இவரை தந்தை
இலாறன்சும் குழுவும் சேர்ந்து குளிப்பாட்டினர். மனித மாண்பு பேணப்பட்டது. ஐந்தாம்
நாள் இவர் இறந்தார்.
பல முறைகளிலும் தொழுநோயாளி இறந்தால் குழி
தோண்டுபவர்கள் தோண்டி முடிந்ததும் சென்று விடுவர். சடலத்தை தூக்கமாட்டார்கள். பல
வேளைகளில் தந்தை இலாறன்சும்,
சகோதரிகளும், கம்பவுண்டரும் சேர்ந்து சடலத்தை தூக்கிச்
சென்று அடக்கம் செய்திருக்கின்றனர்.
M.C.H. திட்டம் பிரப்பன்கோட்டில் நடந்து கொண்டிருந்தது.
பல தாய்மார்கள் வந்து பால்பொடியும், எண்ணெயும்
வழக்கமாக வாங்கிச் செல்வதைத் தந்தை இலாறன்ஸ் கவனித்தார். ஒருநாள் பூமணி, ஜயினி, எஸ்தர்,
மேழ்சி ஆகியோரை அழைத்து “இவ்வாறு கூடுகின்ற தாய்மார்களை ஒன்று கூட்டி
வகுப்புகள் நடத்தினால் ஏராளம் நன்மைகள் ஏற்படும். நீங்கள் இதைச் செய்ய வேண்டும்'' என்றார். தந்தையே அவர்களுக்கு பயிற்சியும்
அளித்தார். அவர்கள் சென்று தாய்மார்களுக்கு வகுப்புகள் நடத்தத் தொடங்கினார்கள்.
இது நாளடைவில் Hom - மாக உருவெடுத்தது. 1980ல் இத்தகைய தாய்மார்களின் ஒரு கருத்தரங்கிற்கு
தந்தை இலாறன்ஸ் ஏற்பாடு செய்திருந்தார். 10 சோன்களிலிருந்து ஏராளம் மகளிர் பங்குபெற்றனர். ஒவ்வொரு சோனும் ஒரு
நிகழ்ச்சி நடத்திக் காட்ட,
வாய்ப்பு வழங்கி அவர்கள்
வளர்ந்துவர வழிவகுத்தார்.
தந்தை இலாறன்ஸ் புனலூரில் ஒரு திருமணத்
தம்பதிகளை ஆசீர்வதிக்கச் சென்றார். திருமணம் முடிந்தபின் அவருடன் முக்கியமான
பலரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பூமணி என்ற பெண்மணியும்
அக்கூட்டத்தின் அருகில் சென்றாள். பூமணியைக் கண்ட தந்தை ஆச்சரியத்துடன் கேட்டார். ''பிள்ளை எப்படி இங்கு வந்தாய்''? என்னை இங்கு திருமணம் செய்து கொண்டு வந்தார்
என் கணவர். பூமணியின் பதில் கேட்ட தந்தை இலாறன்ஸ், தந்தைக்குரிய பாசத்துடன் அரவணைத்து மகிழ்ச்சியுடன் கூறினார். இந்த
பிள்ளை M.C.H-லும், HOM -லும் ஏராளம் செயல்பட்டிருக்கிறார்'' பூமணியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
HOM திட்டத்தைப் பற்றி ஏராளம் விமர்சனம் ஏற்பட்ட
காலம். ஆயர் இலாறன்ஸ் நோய்க்கு சிகிட்சை பெற்று Good Samaritan - ல் ஓய்வு எடுத்த வேளை பூமணி மற்றும் பலர்
சேர்ந்து ஆயரை சென்று சந்தித்தனர். பல காரியங்களைப் பற்றி பேசியபின்னர் ஆயர்
கூறினார்: ''ஒரு தாய் ஆப்பம் சுட்டு அடுக்கிக்
கொண்டிருந்தாள். ஆனால் தயாரித்தவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை'', பொருள் புரிந்த பூமணி நின்று அழுதாள். ஆயரே
அவருக்கு ஆறுதல் கூறினார்.
1970 -ஆம் ஆண்டு கொப்பம் என்ற இடத்தில் ஒரு குடிசைக்
கோயில் கட்டுவதற்கு மக்களுடன் சேர்ந்து தந்தை இலாறன்ஸ் கமுகு மரம் வெட்டி
சரிப்படுத்தி வேலைகள் செய்தார். 1973ல் இதை மாற்றி ஆலயமாக கட்ட
தீர்மானிக்கப்பட்டது. அதற்கு கற்கள் தேவைப்பட்டன. 'Hallow Bricks' பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. எனவே Hallow Bricks தயாரிக்கும் அச்சு இயந்திரத்தை தந்தை
இலாறன்ஸ் வாங்கி வந்தார். அவரே கட்டிடக்கற்களை உருவாக்கி காட்டினார். பின்னர்
பிள்ளைகள், தாய்மார்கள் அனைவருக்கும்
கட்டிடக்கற்களை உருவாக்கும் பயிற்சியும் வழங்கினார்.
1970ல் தந்தை இலாறன்ஸ் தானே ஜீப் ஓட்டிக் கொண்டு
மஞ்ஞப்பாற என்னுமிடத்திற்குச் சென்றார். மழைக்காலமாக இருந்ததால் வண்டி சேற்றில்
புதைந்துவிட்டது. எவ்வளவுதான் அவர் முயன்ற பின்னும் வண்டியை மீட்க முடியவில்லை.
அப்போது இதைப் பார்த்து நின்ற நடராஜன் மற்றும் சிலரையும் கூட்டி வந்து வண்டியை
கரையேற்றினார். தந்தை
“உங்கள் வீடு'' 'காஞ்சிரங்குளம்'. ''இங்கு எவ்வாறு வந்தீர்?'' “Paid Secretary ஆக வந்தேன்!'' ''என் வீடும் காஞ்சிரங்குளம்தான். வசதி உள்ளபோது பிரப்பன்கோடு வர
வேண்டும்” என்று கூறிவிட்டு அன்று அவர்கள்
பிரிந்தனர். சில காலத்திற்குப் பின் நடராஜன் தந்தை இலாறன்சை சந்திக்கச் சென்றார்.
அப்போது தந்தை இயேசுவைப் பற்றியும், திருஅவையைப்
பற்றியும், சமூக சேவையைப் பற்றியும் விரிவாக
உரையாடினார். கிறிஸ்தவ புத்தகங்களும் படிக்கக் கொடுத்தார். நடராஜனின் Paid Secretary காலாவதி தீர்ந்தது. அரசு நிலத்தி
பயிர் செய்ய அனுமதி கிடைத்தது. ஆனால் காலணி மக்கள் வன்மையாக அவரை எதிர்த்தனர்.
தந்தை இலாறன்ஸ் அவ்விடத்தில் ஒரு குடிசையைக் கட்டி பயிர்த்தொழில் செய்ய உதவினார்.
ஒருமுறை தந்தை இலாறன்ஸ் நடராஜனிடம் கூறினார். "தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக
கஷ்டப்படவேண்டும். தெய்வீக அறிவு,
வளர்ச்சிக்கு இட்டுச்
செல்லும் அமைப்பாக அமையாவிட்டால் நம்மால் ஒன்றும் சாதிக்க முடியாது. நாம் ஒரு
இடத்தில் நிற்கும் போது ஒரு வண்டி திடீரென பிரேக் இன்றி குழியில் வந்து விழுகிறது
என்று வைத்துக்கொள்வோம். நாம் எவ்வளவு தான் தள்ளினாலும் வண்டி கரையேறாது. மாறாக நீங்களும்
சேற்றில் மூழ்கத்தான் செய்வீர்கள். எனவே அடித்தளத்தை உறுதியுடன் சரியாக்க
வேண்டும். பின்னர் தள்ளி நீக்க முயன்றால் நடக்கும். நடராஜன் சமூக சேவை
செய்யவேண்டுமெனில் அரசியலிலும் வளர வேண்டும், பொருளாதார பாதுகாப்பும் வேண்டும். அப்போது தான் அதிக நன்மை செய்ய
முடியும், என அறிவுரை கூறினார்.
பிரப்பன்கோடு மருத்துவமனையில் இயக்குநராக
இருந்த தந்தை இலாறன்ஸ் தொழுநோயாளர் அருந்திய உணவையே அவரும் அருந்தினார். ஒரு முறை
அம்மருத்துவமனை பற்றிய புகார்,
குறிப்பாக நோயாளிகளுக்கு
உணவு சரிவர கொடுக்கவில்லை என்று இம்மருத்துவமனைக்கு உதவி செய்திருந்த
அதிகாரிகளுக்கு எட்டியது. இதைக்கேட்ட தந்தை இலாறன்ஸ் மிகவும் மனவேதனையும், அவமானமும் அனுபவித்தார். கொடுக்கப்பட்ட
பட்ஜெட்படி உணவு வழங்க ஏன் முடியவில்லை என்று ஆவணங்களை புரட்டிப் பார்த்தார்.
காரணம் அறிய முயன்றும் பதில் கிடைக்கவில்லை. 40 படுக்கைகளில் அன்று தொழுநோயாளர்கள் இருந்தனர். அதிகாரிகள்
தொடர்ந்து உதவவில்லை என்றால் இவர்கள் நிலை என்ன ஆகும். தந்தை இலாறன்ஸ் ஆலயத்தில்
சென்று தலையை பீடத்தில் சாய்த்து சிலமணி நேரம் ஜெபித்தார். அப்போது, தான்
கொடுத்திருந்த பட்ஜெட்டில் உணவுக்குரிய தொகை கொடுக்கவில்லை என்ற நினைவு வந்தது.
ஆவணங்களிலிருந்து அத்தகவலை அதிகாரிகளுக்கு காட்டினார். அதிகாரிகளுக்கு அப்போதுதான்
தவறு தங்கள் பக்கம் என்று புரிந்தது. மன்னிப்பு கேட்டனர். தொடர்ந்து உதவி
புரிந்தனர்.
மெடிக்கல் மிஷன் சகோதரிகளைச் சார்ந்த சகோதரி
கரோல் கஸ் (டெல்கி மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை நிர்வாகத்துறை தலைவர்) சிஸ்டர்
ஆன் கம்மின்ஸ் (ஒரு தலை சிறந்த வழக்கறிஞர்) சிஸ்டர் பிலமின் மேரி ஆகியோருடன்
அடிக்கடி கலந்துரையாடல்களும்,
கருத்துப்
பரிமாற்றங்களும் நடத்தி வந்தார் தந்தை இலாறன்ஸ். அனைத்திற்கும் மேலாக தந்தை டோங் S.J. யுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
பிரப்பன்கோட்டில் பணியாற்றி வந்தகாலம். தந்தை
இலாறன்ஸ் இடம் மாற்றலாகி கிராத்தூர் செல்வதாக உடன் பணியாற்றிய சகோதரிகள் எப்படியோ
கேள்விப்பட்டனர். ஆனால் இதை உறுதி செய்வதற்காக நேரடியாக தந்தையிடம் கேட்க எவரும்
துணியவில்லை. இறுதியில் அவர்கள் கூட்டத்தில் மிக இளைய சகோதரியான சிஸ்டர்
நிர்லீனாவை அனுப்பி வைத்தனர். சிஸ்டர் தந்தை இலாறன்சின் அறைக்குள் நுழைந்தார்கள்.
அப்போது அவர் பைபிள் படித்துக்கொண்டிருந்தார். சிஸ்டரைப் பார்த்தவுடன் பைபிளை உடனே
மூடி மாற்றி வைத்தார். அது தமிழ் பைபிள் என்று சிஸ்டர் புரிந்து கொண்டார்கள்.
"ஃபாதர் எதற்கு தமிழ் படிக்கிறீர்கள்? இங்கிருந்து இடம் மாறி செல்கிறீர்களா?'' என்று கேட்டபோது சற்று துக்கம் நிறைந்த
அன்புடன் சிஸ்டரை நோக்கினார்கள். ''தமிழ்
கற்க வேண்டாம். இங்கிருந்து மாறிச் செல்ல நாங்கள் அனுமதிக்கமாட்டோம்'' என்று கூறிக்கொண்டு சிஸ்டர் திரும்பும் போது
அவர்கள் மனவேதனையுடனும் பாரத்துடனும் இருந்தார்கள். தொடர்ந்து சிஸ்டர் நிர்லீனா
இவ்வாறு கூறினார். ''அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் நாள்
சிஸ்டர் சேவனாவும், நானும் நூறனாட்டிலிருந்து
வந்திருந்தோம். நான் இரவு தூங்கச் செல்லுமுன் என்னைப் பார்த்து ஒரு சிஸ்டர்
கூறினார்கள் "ஃபாதர் உங்களை அழைக்கிறார்'' என்று. நான் அவர் அறைக்கு சென்றேன். அங்கே கை
நிறைய எனக்கு பிடித்தமான சாக்லெட்டுடன் தந்தை இலாறன்ஸ் நின்றிருந்தார். ஒன்றும்
கூறவில்லை. நான் நாளை போகமாட்டேன். உங்களுடன் கிராத்தூர் வருவேன் என்று கூறியபோது
வேண்டாம் காலையில் பஸ்சில் நூறனாடு போக வேண்டும். அடுத்த வெள்ளி வகுப்புகள் முடிந்தபின்
கிராத்தூர் வரவேண்டும். திருப்பி கொண்டு விடலாம்' என்று என்னை சமாதானப்படுத்தினார்கள். "சரி சிஸ்டர் போய் வாருங்கள்''. என்னிடம் விடைபெறும்போது அந்த அன்புத்
தந்தையின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. 15 ஆண்டுகளில்
ஒரே முறை இன்று மட்டுமே அவர் கண்கள் நிறைந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
5. HOM - திட்டம்
ஆயர் இலாறன்ஸ் தன் பணி வாழ்வில்
குறிப்பிடத்தக்க நேரத்தை செலவிட்ட துறை, ஆரோக்கியத்துறை
ஆகும். சாதாரண மக்களின் உடல் நலம் உயர்ந்தாலன்றி அவர்கள் வாழ்வு வளம் பெறாது என
அவர் நம்பினார். எனவே ஏழை மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவராக பற்பல
வழிமுறைகளை ஆய்ந்தறிந்து சீரிய திட்டங்களை வகுத்தார். உடல் நலத்துறையில் அவருடைய
நீண்ட கால அறிவு, அனுபவம், முயற்சி இவற்றின் விளைவுதான் “பத்து இலட்சம் மக்களுக்கு
சுகாதாரம்” -
"Health for one Million'' என்ற
திட்டம். உலக வல்லுநர்கள் பலரின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்த
இத்திட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.
தாய்மார்களை சிறுசிறு குழுக்களாகக் கூட்டி
தங்கள் ஆரோக்கிய வாழ்வு பற்றிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளச் செய்தார். மக்களின்
ஆரோக்கிய நிலைக்கு நிறுவன அமைப்பு முறையை மாற்றி சமூக மைய மாற்றுவழி
நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் ஃபாதர் டோங் S.J. அவர்களால் தொடங்கப்பட்டதே வாலன்டறி (தன்னார்வ) ஹெல்த் அசோசியேசன்
ஆப் இந்தியா (VHAI). தந்தை டோங்குடன் நெருங்கிப் பழகிய
தந்தை இலாறன்சும் அவர் கருத்துக்களால் அதிகம் கவரப்பட்டார். மக்களின் நலனில்
அக்கறை கொண்டிருந்த வாலண்டறி (தன்னார்வ) ஹெல்த் அசோசியேசன் ஆப் இந்தியா (VHAI), காதலிக் ஹோஸ்ப்பிட்டல் அசோசியேசன் ஆப் இந்தியா
(CHAI), தமிழ்நாடு வாலன்ட்றி ஹெல்த்
அசோசியேசன் (TNVHA) போன்ற தொண்டு நிறுவனங்களுடன் தந்தை
இலாறன்சுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இதன் விளைவாக மக்கள் நலவாழ்வு பற்றிய
சரியான அறிவும், ஆய்வும் அவருக்கு எளிதாக கிடைத்தது.
அத்துடன் மேற்கூறிய தொண்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பும் அவர்
வகித்திருந்தார். 14 ஆண்டுகள் பிரப்பன்கோடு மருத்துவமனை
இயக்குநராக இருந்தபோது HOM-ன் சிந்தனை நேரடியாக இல்லாவிடினும்
பின்னணியில் மறைமுகமாக அவர் மனதில் இயங்கிக் கொண்டே தான் இருந்தது.
இச்சூழலில்தான் உலக சுகாதார நிறுவனம் அனைத்து
மக்களுக்கும் உடல் நலம் கிடைக்க வேண்டும், அதுவும் இரண்டாயிரம் ஆண்டுக்குள் உலகின் எல்லா மக்களுக்கும் உடல்
நலம் என்ற குறிக்கோளுடன்,
உலக மக்கள் ஆர்வத்தைத்
தட்டியுணர்த்தியது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஹெல்த் பார் ஆள் பை டூதவுஸன்ட் (Health for all by 2000 A.D.) என்ற இந்த அறைகூவல் 1978ம் ஆண்டு ஆல்மா ஆட்டா என்னும் இடத்தில்
பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த அறிக்கையின் பின்னர்தான் தந்தை இலாறன்ஸ் இன்னும்
ஆழமாக சிந்தித்தார். ஒரு கத்தோலிக்க குருவாகிய தனக்கு இம்மாபெரும் முயற்சியில்
என்ன செய்ய முடியும் என்று இறைவனுக்கு முன்னால் உளச்சோதனை செய்தார். அதன்
இறுதியில், தான் வாழும் பகுதி மக்களை உட்படுத்தி
ஒரு மில்லியன் (10 இலட்சம்) மக்களுக்கு சுகாதாரம்
ஏற்படுத்தும் ஒரு முயற்சியை ஆரம்பித்தார். இதுவே ஹெல்த் பார் ஒண் மில்லியன் (HOM) என்ற திட்டம். இது ஒரு முயற்சியும், பரிசோதனையும் ஆகும். இதன் வெற்றி தோல்வியை 2000ம் ஆண்டில் தான் சரியாக எடை போட முடியும். 1960 - 70-ஆம் ஆண்டுகளில் காத்தலிக் ஹோஸ்ப்பிட்டல்
அசோசியேசன் ஆஃப் இந்தியாவின் முக்கிய சிந்தனைப் பொருள், ''ஹெல்த் பார் தி மில்லியன்ஸ்'' ஆகும். இதுவும் தந்தை இலாறன்சின் HOM திட்டத்தின் உருவாக்குதலுக்கு துணையாக நின்றது. தங்கள் அறிவு, அனுபவம் இவற்றின் அடிப்படையில் காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு பல மாற்றங்களை
ஏற்படுத்தி நிரந்தரமாக தன்னையே புதுப்பித்துக் கொண்டிருக்கும் HOM திட்டத்தின் அடிப்படை பெண்கள் சக்தி, சுயசேவை, கூட்டான செயல் என்ற முப்பெரும் கொள்கைகளில் அடங்கியிருந்தது.
“ஒரு ஆணுக்கு கல்வி புகட்டினால் ஒரு நபருக்கு
கல்வி புகட்டுவது. ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டினால் ஒரு குடும்பத்திற்கு கல்வி
புகட்டுவது” என்ற உண்மையின் அடிப்படையில் பெண் சக்தியை ஒன்றுதிரட்டி செயல்படுவதே
முன்னேற்றத்திற்கு வழி என்று இத்திட்டம் நம்புகிறது. சாதாரண பெண்கள்
இத்திட்டத்தில் சிலகாலம் ஈடுபட்டதன் விளைவாக தங்களின் அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொண்டார்கள் என்று
மட்டுமல்ல, நல்ல தலைமைப் பண்புகளையும் எளிதில் பெற்றுக் கொண்டார்கள் என்பதற்கு
இத்திட்டத்தில் ஈடுபட்டவர்களே சாட்சி. இந்தியா போன்ற ஏழை நாடுகளில் அரசு
எவ்வளவுதான் திட்டங்களைத் தீட்டி ஆரோக்கிய வாழ்விற்கு நிதியை ஒதுக்கினாலும் சுயமாக
சேவை செய்யும் பண்பை மக்களிடையே வளர்க்காவிடில் எல்லோருக்கும் சுகாதாரம் என்ற
இலக்கை அடைய முடியாது. எனவே தான் HOM திட்டத்தில்
அலுவலர்களுக்கு ஊதியம் ஒன்றும் இல்லை. மாறாக ஒரு நபர் ஒரு மாதம் இரண்டு மணி நேரம்
இலவசமாக இத்திட்டத்திற்காக செலவிட வேண்டும். இதுவே அவர்களிடமிருந்து
எதிர்பார்ப்பது. எனவே இந்த 2
மணி நேரம் செலவழிக்க
விருப்பமில்லாதவர்களுக்கு HOM
திட்டத்தில் ஈடுபட
முடியாது. தனிநல மனநிலை வளர்ந்துவரும் காலம் இது. ஆனால் ஏழை எளிய மக்களின் வலிமை
என்பது அவர்களது சொத்துக்களோ,
செல்வமோ அல்ல. மாறாக
அவர்களுடைய கூட்டுச்செயல்பாடுதான் அவர்களின் வலிமை. எனவே அண்டை வீட்டாருடன் கலந்து
உறவாடி உரையாடி வாழ்பவர்களுக்கே HOM
திட்டத்தில் செயல்பட
முடியும். இந்த கூட்டுச் செயல்பாடு மனித வளர்ச்சிக்கும் மிக மிகத் தேவை என்று HOM நம்புகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்ட ஆகிய கேரளா மாவட்டங்களிலும், தமிழகத்தில் குமரி மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்படுகிறது.
HOM திட்டத்தின்
அடிப்படை கொள்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. முழு
ஆரோக்கியமான நிலையில்,
ஆரோக்கியம் நோய்
குணமாக்குதலை விட முக்கியமானது.
2. மனிதனின்
ஒருங்கிணைந்த வளர்ச்சியில் மட்டுமே ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.
3. வளர்ச்சி
என்பது சுயமாக வளர்வது. எனவே சமூக வளர்ச்சி என்பது சமூகம் தன்னுள்ளிருந்தே
வளர்வது. சுயமாக உதவுவதற்கும் சுயமாக பராமரிப்பதற்கும் உரிய திட்டங்களே
முக்கியமானவை.
4. மக்களை
ஒன்றுகூட்டுவதற்கும்,
ஒருங்கிணைப்பதற்கும், தல தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கும் எந்த
அளவுக்கு உதவுகிறதோ அந்த அளவுக்கே வெளியே இருந்து வரும் உதவி பயன் தரமுடியும்.
உதவிபுரிவோரின் பங்கு,
மக்களுக்காக பணிபுரிவதை
விட மக்களுடன் பணிபுரிவதாகும்.
5. சமூகத்தில்
வெறும் பங்கு பெறுதலை விட சமூக தீர்மானமே அதிக பொருள் கொண்டது.
6. நலத்திட்டங்களை
செயல்படுத்தும் போது அந்தந்த இடங்களிலுள்ள வசதிகளை அதாவது ஆட்கள், நிதி, அரசு கொடுக்கும் வசதிகள், சமூக அமைப்புகள் போன்றவற்றை சாதி, மத அரசியல் சார்பு இன்றி இயன்றவரை பயன்படுத்த வேண்டும்.
7. நலத்திட்டங்களை
அமல்படுத்தும் போது பொருத்தமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் கொள்கையை பின்பற்ற
வேண்டும்.
8. ஆரோக்கியம்
பற்றிய அறிவு மக்களுக்கு புகட்டும் போது முறை சார்ந்த மற்றும் முறை சாராத வழிகளை
பின்பற்ற வேண்டும்.
HOM திட்டத்தில் பணிபுரிய குறைந்த பட்சம், ஒருவர் கற்றுக் கொடுப்பதை புரிந்து
கொள்ளக்கூடிய அறிவும் அதை பிறருக்கு விளக்கி கொடுக்கும் நல்மனமும் திறமையும்
போதுமானதே. எனவே மாதம் ஒருமுறை 2
மணி நேரம் செலவிடும்
போது ஒரு மணி நேரம் கற்றுக் கொள்வதற்கும் ஒரு மணி நேரம் கற்றுக் கொடுப்பதற்குமாக
பயன்படுத்துகின்றனர் இதன் பணியாளர்கள். சராசரி ஒரு குடும்பத்தில் ஐந்து
உறுப்பினர்கள் எனக் கணக்கிடப்பட்டது. அருகிலுள்ள 10 குடும்பங்களின் ஒரு குழுவையே 'HOM குழு'
என்று அழைக்கிறோம். இந்த
குடும்பத் தாய்மார்களில் ஒருவர் இயல்பாகவே தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். இவர்
தாய்த் தலைவி என்று அழைக்கப்படுகிறார். இத்தகைய 20 தாய்த் தலைவியரின் குழுவை 'HOM யூனிட்'
என்று கூறுகிறோம்.
இவர்களில் ஒருவர் தலைவி ஆகிறார். இவர் HOM-வாலண்டியர்' என்று அழைக்கப்படுகிறார். இத்தகைய 5 HOM வாலண்டியர்கள் அடங்கிய குழுவை 'HOM சென்டர்' எனக் குறிப்பிடுகிறோம். இவர்களின் தலைமையை ஏற்போர் 'புரமோட்டர்' என அழைக்கப்படுகிறார். இத்தகைய 20 ‘புரமோட்டர்கள்'
அடங்கிய ஒரு குழுவை 'HOM-சோண்' என்று அழைக்கிறோம். இவர்களில் ஒருவர் தலைவராகிறார். இவர் 'ஆர்கனைசர்' என்று அழைக்கப்படுவார். இத்தகைய 10 ஆர்கனைசர்கள் ஒரு ஒருங்கிணைப்பாளரின் தலைமையில் பணிபுரிவர்.
அவ்வாறு HOM வழியாக இரண்டு இலட்சம் குடும்பத்தார்
அதாவது 10 இலட்சம் மக்கள் தங்கள் நல்வாழ்விற்கு
சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதிலும் பாதுகாப்பதிலும் ஈடுபடுகின்றனர்.
HOM-ன் கருத்துப்படி ஆரோக்கியம் என்று கூறுவது
உடல் நலத்தில் மட்டும் அடங்கியிருப்பது அல்ல. உடல் நலத்துடன், ஆரோக்கியமான மனதும், தூய்மையான ஆன்மாவும், மாசற்ற
சுற்றுச்சூழலும் ஏற்படும்போதுதான் ஒரு மனிதர் நல்வாழ்வு வாழ முடியும். இந்த
ஒருங்கிணைந்த ஆரோக்கியத்தை அடைய பொருளாதாரத்தைப் பெருக்க வேண்டும். அதற்காக
வருமானத்தை ஈட்ட வேண்டும். அதற்குரிய வாய்ப்புகளை சூழ்நிலைக்கு ஏற்ப உருவாக்க
வேண்டும். எனவே HOM மனிதனின் ஒருங்கிணைந்த நல்வாழ்விற்கு
தேவையான அனைத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்வம் காட்டுகிறது என்பதே
உண்மை.
தந்தை இலாறன்ஸ் அவர்கள் ஆரம்பித்து நீண்ட
காலமாக வளர்த்து எடுத்த HOM திட்டம் மக்கள் நல்வாழ்விற்கு தேவையான
எல்லா அறிவையும் நிரந்தரமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு அசாதாரண அமைப்பு.
சாதாரண மகளிர் கூடி கற்று பிறருக்கும் அறிவித்து தங்கள் குடும்பங்களிலும்
சமூகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த HOM திட்டத்திற்கு முடிந்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை
அரை மணி நேரம் HOM பணியாளர்கள் தங்கள் இடங்களில் ஒன்று
சேருகின்றனர். ஒருங்கிணைப்பாளரிடமிருந்து செல்கின்ற அறிவுரைகள், பணியாளரின் கருத்துக்களை எழுதிவைக்கும்
பேப்பர்கள், செயல்படுத்தப்பட்ட அறிவுரைகளின்
குறிப்புகள் முதலியவை முறைப்படி ஒழுங்காக ஒவ்வொரு நிலையிலும் கைமாற்றப்படுகின்றன.
ஒவ்வொரு தாய்த்தலைவியையும் அது எட்டுகிறது என்று வாலண்டியர் உறுதிப்படுத்துகிறார்.
குழுவிலுள்ள தாய்மார்களின் கருத்துக்கள் அடுத்த கூட்டம் வழியாக திரும்பவும்
ஒருங்கிணைப்பாளரை அடைகிறது. மீண்டும் ஒருங்கிணைப்பாளரிடமிருந்து புறப்படுகிற
சுற்றறிக்கை ஒரு மாத காலத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பாளரை சென்றடைகிறது. ஆங்காங்கே
கூடுகின்ற கூட்டங்கள் வழியாக கூட்டுறவும், நட்பும் வளர்வது மட்டுமன்றி எடுக்கும் தீர்மானங்களும்
நிறைவேற்றப்படுகின்றன. இவைக்கு வெளியே தேவைக்கு ஏற்ப இதர கருத்தரங்குகளும், கலந்துரையாடல்களும், தலப்பயிற்சிகளும், வகுப்புகளும்
அவ்வப்போது நடத்தப்படுகின்றன. HOM
அமைப்பையும் அதன்
செயல்முறையையும் ஒரு மரத்திற்கு ஒப்பிடலாம். (HOM Tree)
HOM திட்டத்தின்படி நேரடியாக பயன் அடைவோர்
தாய்மார்களும், குழந்தைகளும் ஆவர். பெண்களை மையமாகக்
கொண்ட இத்திட்டத்தில் பெதனி மற்றும் மேரிமக்கள் கன்னியர் துறவு சமூகத்தைச் சார்ந்த
அருட்சகோதரிகளும் ஆர்வமுடன் பணியாற்றி வருகின்றனர்.
HOM-ன்
பத்து அம்ச திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
1. 5 வயதிற்குட்பட்ட
குழந்தைகளின் உடல் வளர்ச்சியை கண்காணித்தல்
2. பானிய
சிகிச்சை (ORT)
3. தாய்ப்பால்
ஊட்டுதல்
4. தடுப்பூசி
இடுதல்
5. சத்துணவு
கொடுத்தல்
6. தலைமைத்துவத்திற்கான
மகளிர் கல்வி
7. குடும்பக்
கட்டுப்பாடு (இயற்கை முறை)
8. மாற்றுத்திறனாளிகளுக்கான
மறுவாழ்வு
9. இயற்கைச்
சூழல் பராமரிப்பு
10. பொருளாதார
வளர்ச்சி
|
படம் மரம் Take from old Book |
இது தன்னிலே ஒரு நலத்திட்டம் (Project) அல்ல. ஆனால் நலத்திட்டத்தைச் செயல்படுத்தும்
அமைப்பு மட்டுமே. அமைப்பு பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டாலன்றி இது பலனளிக்க
முடியாது. இதை பயன்படுத்தி 1982-ம் ஆண்டு சமூக மைய
மாற்றுத்திறனாளிகளான குழந்தைகள் நலத்திட்டமும், 1985ல் வருமான உருவாக்கத் திட்டமும், 1990ல் இயற்கை பராமரிப்புத் திட்டமும் செயல்படுத்தப்பட்டன. 1992ல் குமரி மாவட்டத்தில் இயற்கையின் சீற்றத்தால்
ஏற்பட்ட புயல், வெள்ளம் இவற்றால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு பெருமளவில் துரித உதவிப்பணிகளும், வீடுகள் அமைப்பதற்குரிய சிறு உதவிகளும் செய்யப்பட்டன. இவ்வாறு
இயல்பாக இயங்கி வரும் HOM
திட்டம் வல்லுநர்களின்
கவனத்தை ஈர்த்தது என்றால் அதில் வியப்பொன்றும் இல்லை.
பல இதழ்களில் இத்திட்டத்தின் சிறப்பு பற்றிய
கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 1985-ம் ஆண்டைய "Future" என்ற இதழில் ஒரு கட்டுரையும், 1990 டிசம்பர் மாத "Health Action" என்ற இதழில் ஒரு கட்டுரையும்
வெளிவந்துள்ளன.
வாலண்டறி ஹெல்த் அசோசியேசன் ஆப் இந்தியாவின்
மாத இதழாகிய 'அனுபவ'-வின் 1991-ம் ஆண்டைய ஒரு மாத இதழ் மொத்தமாக HOM பற்றிய சிறப்புக் கதிராக வெளியிடப்பட்டது.
இவ்விதழின் தொடக்கப்பகுதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: ''நோய்களைத் தடுத்து ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை வளர்ப்பது
பெருமளவிலான சுகாதார பராமரிப்பு முயற்சிக்கு முன்நிபந்தனையாகும். இம்முயற்சியில்
குடும்பத்தின் பங்கு,
குறிப்பாக பெண்களின்
பங்கு, அதிலும் குறிப்பாக தாய்மார்களின்
பங்கு தவிர்க்க முடியாதது. தங்கள் குடும்பங்களின் ஆரோக்கியத்தையும், தங்களை சுற்றி வாழும் மக்களின்
ஆரோக்கியத்தையும் முன்னேற்றமடையச் செய்ய பெண்களை குறிப்பாக கிராமப் பெண்களை
அறிவுறுத்தி ஒருங்கிணைத்து கூட்டான செயல்களில் ஈடுபடச் செய்வது மிக முக்கியமானது.
இம்முயற்சி நாளடைவில் மருத்துவமனை அடிப்படையிலான குணப்படுத்தும் ஆரோக்கிய முறையின்
தோல்விகளையும் குறைகளையும் தவிர்த்து பெரும்பான்மை மக்களின் ஆரோக்கியத்தை
பாதுகாக்கவும், வளர்த்தவும் செய்யும். இத்தகைய ஒரு
முயற்சி சமூக ஆரோக்கியமும் வளர்ச்சித்திட்டமுமாகிய ''ஹெல்த் பார் ஒண் மில்லியன் - HOM" என்ற திட்டம் வழியாக தல சமூகத்தில்
நனவாகின்றது.
ஜனீவாவிலிருந்து வெளியிடப்படும் உலக கிறிஸ்தவ
ஆரோக்கிய அமைப்பு இதழாகிய 'காண்டாக்ட் 1988- எண் 101-ம் HOM பற்றிய தகவல்கள் தாங்கி வந்துள்ளது. HOM செயல் பலன்களைப் பற்றிய ஆய்வுப் படிப்புகளும் நடத்தப்பட்டுள்ளன. HOM திட்டத்தின் மெய்யியல், அமைப்புகளும் அதன் செயல்பாடுகளையும் பற்றி உலக
சுகாதார நிறுவனமும் அதன் அமைப்புகளும் ஆர்வம் கொண்டன. எனவே அவ்வப்போது இந்திய
நாட்டிலும், பிற நாடுகளிலும் நடைபெற்ற
கருத்தரங்குகளுக்கும்,
கலந்துரையாடல்களுக்கும்
நம் ஆயர் அழைக்கப்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் அவர் கௌரவிக்கப்பட்டார்.
இவ்வாறு தனித்தன்மை வாய்ந்த ஒரு அமைப்பு
முறையை தானாகவே ஆரம்பித்து அதை காலத்திற்கு ஏற்ப மாற்றமடையச் செய்து, வளர்த்தி இவ்வுலக சாதாரண மக்கள் பலன் பெற
கொடையாகக் கொடுத்துச் சென்றிருப்பது ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் இவ்வுலக
ஏழை மக்களின் வளர்ச்சியில் ஆற்றிய குறிப்பிடத்தக்க ஒரு பங்கு அன்றோ!
நீண்ட நேரம் தொடர்ச்சியாக பணி செய்வது தந்தை
இலாறன்சுக்கு கைவந்த கலை. மட்டுமல்ல உடன் உழைப்பாளிகளாகிய சகோதரிகளையும் அவ்வாறு
பணி செய்ய தூண்டுவார். இடையிடையே இனிப்புகள் வழங்கவும், தேவைப்பட்டால் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளவும் ஒரு நல்ல
தகப்பனைப் போல அனுமதிப்பார்;
அக்கறைக் காட்டுவார். 'Health for One Million'' ன் கொள்கைகளையும் செயல்முறைகளையும்
விளக்குவதற்காக அருட்தந்தையரையும், சகோதரிகளையும்
அடிக்கடி கூட்டுவார். நீண்ட நேரம் வகுப்புகள் நடத்துவார். இது இவ்வாறு செய்வது
கடினம். இதில் சில மாற்றம் ஏற்படுத்துவது நல்லது'' என்றெல்லாம் தந்தையர் சொல்லும் கருத்துக்களை கேட்பார். ஆனால்
அக்கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உடனடி மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதில்லை.
ஏனெனில் தந்தை இலாறன்ஸ் தெளிவாக,
உறுதியாக தன்
சிந்தனையில் ஊன்றி நிற்பார். பல வேளைகளில் ஒரு சிலரைத் தவிர மற்றவர் எல்லோரும்
அக்குழுவிலிருந்து கூட்டம் நிறைவடையும் முன்னரே பிரிந்து செல்வதே வழக்கம்.
மனிதனின் உடல் நலத்தைப் பற்றிய தெளிவான
சிந்தனை நம் ஆயர் அவர்களுக்கு இருந்தது. இதற்கு ஆழமான இறையியல் அடிப்படையும்
இருந்தது. புனித பவுல் கூறும் 'முதலில் மனித உயிர் கொண்ட உடல், பின்னர் அன்றோ தூய ஆவிக்குரிய உயிர்' (1 கொரி. 15: 45 - 46) என்ற கருத்தை அடிக்கடி எடுத்துக் கூறி
வந்தார். ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அச்சமூகத்தின் மக்களின் ஆரோக்கிய வாழ்வு
என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். ஆரோக்கியத்தின் அடித்தளம் 5 வயது வரையிலான காலம் என்பதை
சுட்டிக்காட்டினார். தன்னுடைய நலன் குன்றிய உடலைச் சுட்டிக்காட்டி, "எனக்கு என்ன குறை? நான் 8-ம் வயது முதல் குருமடத்திலே
பயின்றவன். உணவுக்கு எந்த பஞ்சமும் இல்லை. இருப்பினும் ஏன் நான் இப்படி
இருக்கிறேன்? காரணம் முதல் 5
வயதில் தேவைக்கு ஏற்றபடி
போதிய சத்துணவு கிடைக்காததே என்று ஒளிவு மறைவு இன்றி தாழ்வாக நினையாது தன்னையே
எடுத்துக்காட்டாக, மக்கள் குழுவினருக்கு பல சூழ்நிலையிலே
சுட்டிக்காட்டியிருக்கிறார். தன்னைக் குறைவாக எடைபோட்டு விடுவார்களே என்ற
சிந்தனையைத் தவிர்த்து தனக்கு நேர்ந்த குறை இந்த சமூகத்திற்கு நேரக்கூடாது என்று
உறுதியான மனத்துடன் பிறருக்கு கற்பித்த அவரது துணிவையும், திடமனதையும்,
பெரிய உள்ளத்தையும்
எவ்வளவு தான் பாராட்டினாலும் தகும்.
1989-ம் ஆண்டு ஜூன் மாதம். அப்போது நம் ஆயர் தம்
இல்லத்தில் தங்கியிருந்த வேளை. “பிறக்கும் பிள்ளைகளுக்கு எடை சுமார் 3 கிலோ கிராமாக இருக்க வேண்டும். அப்போது தான்
அது மனிதக் குழந்தையாக இருக்க முடியும். இதுவே இறைவனின் திருவுளம்'' என்று அடிக்கடி போதித்து வந்தார்.
பங்குத்தந்தையர்களுக்கு பின்வருமாறு கட்டளை பிறப்பித்தார். “திருமுழுக்குப் பெற
வரும் குழந்தைகளின் பெற்றோர் குழந்தையின் எடையுடன் வர வேண்டும். யாராவது தம்
பிள்ளையின் எடை கணக்கிடவில்லை என்றால் ஆயர் இல்லத்தின் அருகே மாமரக்கொப்பில்
தொங்கவிடப்பட்டிருந்த எடைத்தூக்கியை பயன்படுத்தி எடையுடன் வந்த பின்னர்தான்
திருமுழுக்கு கொடுக்க வேண்டும்”. இந்த அன்புக் கட்டளையை அப்படியே
பங்குத்தந்தையர்களும் நிறைவேற்றினர். தங்கள் பிள்ளைகள் தேவையான எடை இன்றி
காணப்பட்டால் பெற்றோர் சிறப்பான முறையில் கண்காணித்து குழந்தையை வயதிற்கு ஏற்ற
எடையுடன் வளரச் செய்து,
தரமான குழந்தைகளாக வளர
போதிய ஊக்கம் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி சில ஆண்டுகள் தொடரப்பட்டது. அதன்
விளைவாக மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டது. குறைவான எடையுடைய குழந்தைகளின்
எண்ணிக்கை மிக மிக குறைந்தது. பின்னர்தான் இப்பழக்கம் கைவிடப்பட்டது. நம் ஆயரின்
சீரிய சிந்தனையின் விளைவாக ஏற்பட்ட இம்முயற்சி இப்பகுதி மக்களில் நிலையான நல்ல
தாக்கத்தை ஏற்படுத்தியது பாராட்டத்தக்கது.
ஆலயம் என்பது ஆண்டவரை வழிபடும் இடம்.
இறைப்பிரசன்னம் நிறைந்திருக்கும் இடம். புனிதமான இடம். எனவே ஆலயத்தில், குறிப்பாக வழிபாட்டு மத்தியில் 'ஆன்மீக காரியங்கள்' என அன்று மக்களால் கருதியிருந்தவையே இடம் பெறவேண்டும் என்று
மக்கள் நம்பியிருந்தனர். ஆனால் இக்கருத்திற்கு நேர்மாறாக நம் ஆயர் ஆலயத்தில் உடல்
நலம் பற்றி பேசினார். பெண்களின் நலன் பற்றிப் பேசினார். குழந்தைகள் நலன் பற்றிப்
பேசினார். இது மக்களுக்கு முதலில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும்
கொடுத்தது. ஏன் இப்படி உலக காரியங்களைப் பற்றி இவர் மறையுரையில் பேசுகிறார் என்று
அதிருப்தியுடன் குரல் கொடுத்த நபர்கள் ஏராளம் இருந்தனர். ஆனால் நம் ஆயருக்கு
ஆன்மீகம் பற்றிய கருத்து நம் மக்கள் கொண்டிருந்த கருத்திலிருந்து
வேறுபட்டிருந்தது. மனிதனே கடவுளின் உயிருள்ள நடமாடும் சாயல். உடல் இன்றி உள்ளம்
இருக்க முடியாது. மனிதனின் நலமான வாழ்வே இறைவனின் திருவுளம். முழு மனித வாழ்வே
இறைவனுக்கு மகிமை. இதன் அடிப்படையில் அவரது போதனைகள் மக்களில் நல்ல மாற்றத்தை
ஏற்படுத்தியது. நாளடைவில் அவர் போதனையின் முக்கியத்துவத்தையும், இன்றியமையாமையையும் அவர்கள் புரிந்து
கொண்டனர். குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் நாம் சிந்திப்பவற்றை அதற்கு
முன்னரே உறுதியாக செயல்படுத்திக் காட்டியவர் நம் ஆயர் என்று பின்னர்தான் நாம்
புரிந்து கொள்ள முடிந்தது.
6. நலிவுற்ற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்
வாமனபுரத்தில் ஒரு இந்து குடும்பத்தில்
பிறந்தவர் திரு. A. இராஜேந்திரன். இக்குடும்பத்திற்கு
சொந்தமாக மூன்று இந்துக் கோயில்கள் இருந்தன. இவர்கள் பகுதியில் ஒரு கிறிஸ்தவர் கூட
இல்லை. ஒரு குருவானவர் பேருந்திலோ மற்றும் வடக்கு நோக்கி பயணம் செய்வது மிக
அபூர்வமாக இருந்தது. எப்போதாவது பயணத்தின் மத்தியில் வண்டி நிறுத்தி தாகம்
தணிப்பதற்காக ஒரு குருவானவர் இறங்கினால் அது அவ்வூர் மக்களுக்கு கண்கொள்ளா
காட்சியாக இருக்கும். உடனே மக்கள் கூட்டம் வேடிக்கையாக பார்ப்பர். ஏளனமும்
செய்வர். இது இங்கு இயல்பாக நடந்து வந்த ஒன்று. இத்தகைய சூழ்நிலையில் திரு.
ராஜேந்திரரின் தகப்பனார் உடலெல்லாம் வீக்கமாகி நோய்வாய்ப்பட்டு, நடக்க முடியாத நிலையில் காணப்பட்டார்.
இவருக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்னரும் எந்த ஒரு
வித்தியாசமும் ஏற்படவில்லை. மருத்துவ முறைகள் இவரைப் பொறுத்த வரையில் தோற்றுப்
போய் விட்டன. அன்றைய மரணப் பிரிவாகிய 16-ஆம்
வார்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டபோது இவர் இறப்பின் விளிம்பை
எட்டியிருந்தார்.
திருப்பி அனுப்பப்பட்ட மூன்றாம் நாளில் மூச்சு
வாங்கக் கூட சரியாக முடியாத சூழ்நிலை. இவர் வாமனபுரத்தில் ஒரு டீக்கடைக்கு மெல்ல
மெல்ல செல்கிறார். ஒரு டீ குடித்த பின்னர் சாலை அருகில் அமர்ந்து சூரிய ஒளி உடலில்
பட இளைப்பாறுகிறார். அப்போது ஒரு குருவானவர் ஜீப்பில் வாமனபுரம் வழியாக சென்று
கொண்டிருந்தார். அவர் ஜீப்பை நிறுத்தி தண்ணீர் குடிப்பதற்காக கீழே இறங்கினார்.
சாலை அருகில் அமர்ந்திருந்த இவரைப் பார்த்து அந்த குருவானவர் நலம் விசாரிக்கிறார்.
நோய் நிலைமை கேட்டறிந்த அக்குருவானவர் "பிரப்பன்கோட்டில்
எங்களுக்கு ஒரு மருத்துவமனை உண்டு. வந்தால் நாங்கள் சிகிச்சை அளிக்கலாம்'' என்கிறார். அக்குருவானவர்தான் தந்தை இலாறன்ஸ்.
அதன்படி அவர் பிரப்பன்கோடு சென்றார். ஒரு மாதம் சிகிச்சையும் உபசரிப்பும் அவர்
பெற்றார். அதிசயமாக அவர் குணமடைந்தார். இறந்த இலாசரைப் போல அவர்
உயிர்பெற்றெழுந்தார். இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பணம் கட்ட
இவர்களிடம் ரூபாய் இல்லை. அம்மருத்துவமனை இயக்குநராக இருந்த தந்தை இலாறன்ஸ்
சிரித்தபடியே கூறினார்,
"நான் செய்தது நான்
நம்புகின்ற இயேசுவை முன்னிட்டுத்தான். கண்களால் காண்கின்ற இந்த சகோதரருக்கு
பணிவிடை செய்யும் போது கண்களால் காண முடியாத இயேசுவுக்கே நான் பணிபுரிகிறேன்.
இதுவே இயேசு எங்களுக்கு கற்றுத் தந்தது. இதைக் கேட்ட அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
ஒரு குருவானவருக்கு இவ்வளவு அன்பா! அவ்வாறெனில் அவர் நம்புகின்ற இயேசுவின் அன்பு
எவ்வளவு அதிகமாக இருக்கும்?
அந்தப் பெரியவரின் மகன்
இராஜேந்திரன் சிந்தித்தார்... தீர்மானம் எடுத்தார்... இயேசுவை அவர்கள் மீட்பராக
ஏற்றுக்கொள்ள. ஆனால் அவர்களுடைய குடும்பத்தார், உறவினர்,
கிராமத்தார் எவருமே இதை
அனுமதிக்கவில்லை. இருப்பினும் நாளடைவில் இப்பகுதியில் பணியாற்றிய பிரான்சிஸ்கன்
சகோதரர்களின் முயற்சியால் இவர்களது குடும்பம் கிறிஸ்தவர்களாக மாறியது. இவ்வாறு “நாங்கள் நேரடியாகக் கண்ட கடவுள் தான் தந்தை
இலாறன்சும் சகோதரர் கிறிஸ்பினும்''
(சகோதரர் கிறிஸ்பின்
பின்னர் தந்தை கிறிஸ்பின்)
என்கின்றனர் இவ்வூர்
மக்கள்.
தந்தை இலாறன்ஸ் பிரப்பன்கோடு மருத்துவமனையில்
பணியாற்றியபோது கூடவே கிளிமானூர் பகுதியில் மறைப்பணித்தளங்களிலும் செயலாற்றினார்.
இதற்காக பிரான்சிஸ்கன் சகோதரர்களையும் அழைத்து வந்து ஈடுபடுத்தினார். அவ்வாறு
கிளிமானூர், பாப்பால, அடயமண்,
வைய்யாற்றின்கர, தர்ப்பக்காடு, தட்டத்துமலை,
காரேற்று, பிலாவோடு, ஆரன்தானம்,
கீழாயிக்கோணம், குருந்நேப்பன்காவு, ஊரகம்,
மஞ்ஞப்பாற போன்ற
இடங்களில் பிரான்சிஸ்கன் சகோதரர்களின் முழுமூச்சுடன் கூடிய உழைப்பால் சிறு சிறு
கிறிஸ்தவ சமூகங்கள் உருவெடுத்தன. இதற்கு தேவையான தலைமையை வழங்கி வந்தவர் தந்தை இலாறன்ஸ்
ஆவார். இறையன்பும் பிறரன்பும் ஒருங்கே இணைந்த ஒரு நபர்தான் அவர். இல்லங்களுக்கு
கடந்து வந்து மனித வாழ்க்கையின் துன்பங்களையும், வேதனைகளையும் புரிந்துகொள்வதிலும் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதிலும்
அவர் எப்போதும் விழிப்பாக இருந்தார். குறிப்பாக நோயாளிகளை ஆற்றித் தேற்றவும் நல்ல
சிகிச்சை அளிப்பதற்கு உதவுவதிலும் இயன்றவரை பணிவிடை செய்து அவர்களுக்கு குணம்
அளிப்பதற்கும் அவர் காட்டி வந்த சேவை மனநிலை அவரை வாழுகின்ற மற்றொரு கிறிஸ்துவாக
மாற்றியது. எனவே தான் அவர் ''நோயாளிகளின் ஆயர்'' 'ஏழைகளின் ஆயர்' என்று பின்னர் அறியப்பட்டார்.
இவர் மரநிழலிலும், வீட்டு முற்றங்களிலும் மக்களை கூட்டி இயேசுவின் திருவார்த்தைகளை
சொல்லிக் கொடுத்தார். குடும்பங்களின் பிரச்சனைகளை பொறுமையோடு கேட்டு அதற்கு தீர்வு
காண வழிவகைகளை சொல்லிக் கொடுத்தார். அவ்வாறு கூட்டுறவும், தோழமையும் வழியாக சிறு சிறு செயல்கள் செய்வதற்கு மக்களுக்கு
பயிற்சி கொடுப்பது ஆயரின் ஒரு முக்கியமான பணியாக இருந்தது. இவ்வாறு ஒரு சிறந்த
அமைப்பாளராக திகழ்ந்தார் அவர். ஒரு நபரை நன்கு சோதித்து அறிந்த பின்னரே அவரிடம்
பொறுப்புகளை ஒப்படைப்பார். ஒரு காரியத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பலமுறை நடக்க
வேண்டியிருந்தது. அந்த சோதனையில் வெற்றி பெறுபவர் மட்டுமே பரிசு பெற்றனர். அவரைப்
பார்க்கச் செல்லும்போது ''பக்ஷணம் கழிச்சோ?'' (உணவு உணடீர்களா) என்று கேட்பார். அவ்வாறு
உணவும், பயணத்திற்கு தேவையான பணமும் மட்டுமே
கிடைத்திருந்தது. குடும்பத்திலும் சமூகத்திலும் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்
என்று அவர் அடிக்கடி கூறிவந்தார்.
தந்தை இலாறன்ஸ் (10 Faceted Programme) 10 அம்சத்திட்டம் திருவனந்தபுரம்
உயர்மறைமாவட்டத்தில் வழிநடத்தி வந்த காலம். கோதுமை, எண்ணெய் முதலியன வழங்கி வந்த போது, வழங்கலின் குறைபாடுகளைக்
குறித்து மட்டுமே ஒரு முறை கூடிய கூட்டத்தில் விவாதித்தனர். தந்தை இலாறன்சை சில
குருக்களும், கன்னியரும் சேர்ந்து திட்டமிட்டு
கடுமையாக விமர்சித்தனர். விமர்சனம் உச்சகட்டத்தை எட்டியபோது, பேசாமல் கேட்டிருந்த தந்தை ஜேக்கப்
கிழக்குங்கர அமைதியாக எழுந்தார். ஒரு திட்டம் (Project) என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாததன்
விளைவுதான் இது என்று கூறினார். எழுபதிற்கும் மேற்பட்ட குருக்களும், கன்னியர்களும் நிறைந்திருந்த அரங்கம்.
எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த குருகுல முதல்வர் கூறினார்: ''தந்தை ஜேக்கப் கூறியதுதான் சரி. இனி இதைப்
பற்றி பேச வேண்டிய தேவையில்லை. கூட்டம் அத்துடன் முடிந்தது. எல்லோரும் வெளியே
சென்றனர். தந்தை இலாறன்ஸ் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு
உட்கார்ந்திருந்தார். வெளியே இறங்கியபோது தந்தை ஜேக்கப், தந்தை இலாறன்ஸைப் பார்த்து இது "கண்டு நீங்கள் தளரக்கூடாது'' என்றார். "இல்லை. நிச்சயமாக இல்லை". இது அவரது பதிலாக இருந்தது.
1976ல் தந்தை ஜேக்கப் கிழக்குங்கர குரியோட்டில்
பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பிறந்து மூன்று நாட்கள் மட்டும் ஆன ஒரு
குழந்தையை அவர் கண்டார். கன்னியருடன் ஆலோசித்த பின்னர் அவர்கள் அக்குழந்தையை
வளர்க்கலாம் என்று சம்மதித்து அன்புடன் பேணி வளர்த்து வந்தனர். ஒரு மாதத்திற்குப்
பின்னர் ஊரிலுள்ள சில தலைவர்களும், பெரியவர்களும்
இணைந்து இரு கார்களில் வந்து என் இல்லத்திற்கு முன் இறங்கினர். "குழந்தையை எங்களுக்கு கொடுங்கள், நாங்கள் கல்வி கற்பித்து வளர்க்கலாம்'' என்று தந்தையிடம் கூறினர். இதைக் கன்னியரிடம்
கூறியபோது அவர்களுக்கு மனமில்லை. ஒரே வருத்தமாக இருந்தது. இறுதியில் தந்தை
இலாறன்சிடம் கலந்து ஆலோசித்தனர். 'ஒரு
குழந்தை குடும்பச் சூழ்நிலையில் வளர்வதல்லவா நல்லது. குழந்தையின் எல்லாத்
தேவைகளையும், பொறுப்புடன் செய்வதாக உறுதியளித்தால், குழந்தையை அவர்களுக்கு கொடுங்கள். அனாதை
இல்லத்தில் வளர்ந்தால் எப்படி மாறுவான் என்று சொல்ல முடியாதல்லவா?'' தந்தை இலாறன்சின் இவ்வறிவுரைப்படி செய்தனர்.
சட்டம் சட்டத்திற்காக அல்ல. அவை மனிதனுக்காகவே
என்று ஆயர் நம்பியிருந்தார். எனவே மனிதனுக்கு உதவும் வண்ணம் சட்டத்தை
மாற்றியமைக்கவும் அவர் தயங்கவில்லை. அவர் வாழ்வில் இதற்கு ஏராளமான நிகழ்ச்சிகள்
உண்டு. தனிப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு இளைஞன் மருத்துவமனையில் பணியாற்றி
வந்தார். திருமணம் அவருக்கு நிச்சயிக்கப்பட்டது. ஆலயத்தில் வைத்து திருமணம்
நடந்தால் அச்சமுதாயத்திலுள்ளவர் எவரும் பங்குபெற மாட்டார்கள். எனவே மணமகளின் ஊரில்
பந்தலில் வைத்து நடத்த தீர்மானித்தார்கள். அனுமதியும் பெறப்பட்டது. தந்தை
இலாறன்சும், தந்தை ஜேக்கப்பும் சேர்ந்து அங்கு
வைத்து திருமணம் நடத்தி வைத்தனர். தந்தை இலாறன்ஸ், ''இது திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக
இருக்கும்'' என்று கூறினார்.
தந்தை இலாறன்சின் தகப்பனார் நோய் வாய்ப்பட்டு
படுக்கையில் இருந்த வேளை. அவர் இறப்பிற்கு சில நாட்களுக்கு முன் தந்தை இலாறன்சைப்
பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டேயிருந்தார். ஆனால் தந்தை இலாறன்சோ பிரப்பன்கோடு
மருத்துவமனையிலிருந்து பணிகள் எல்லாம் முடிந்த பின்னர் இரவில் வருவார். அப்போது
அவர் தகப்பனார் மரணப்படுக்கையிலிருந்து கொண்டு "சிறு வயதிலிருந்தே இறைபணியில் தந்தை இலாறன்ஸ்
மகிழ்ச்சி அடைந்தார். இறைபணிக்கு முதலிடம் கொடுத்தார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி
தான்'' என்று கூறினார். அன்று அவர் தகப்பனாரை
கவனித்து வந்த மதர் இம்மாகுலேட்,
சிஸ்டர் எலிசபெத்
ஆகியோரை காணும் தந்தை இலாறன்ஸ்,
தமது தகப்பனாரைப்
பார்த்து ''அப்பாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும்
உண்டல்லவா? என்று கூற, தகப்பனாரோ,
"சொத்தில் பங்கு
கொடுக்கலாமல்லவா? என்று கூறி சிரிப்பதுண்டு. தகப்பனாரை
கவனித்து, அவர் அடக்கம் முடிந்தபின் தந்தை
இலாறன்ஸ் அந்த இரண்டு சகோதரிகளின் கரங்களையும் பற்றிக் கொண்டு சிஸ்டர் நீங்கள்
மிகவும் கஷ்டப்பட்டீர்கள். நன்றி கூறினால் ஒன்றும் போதாது, எல்லாம் என் மனதில் உண்டு. ஆண்டவர் உங்களுக்கு கைமாறு கொடுப்பார்'' என்று கூறினார். இவ்வாறு உதவுபவர்களுக்கு தம்
வாழ்வின் இறுதிவரை அளவுக்கதிகமான நன்றியுணர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருந்த ஒரு
ஆயர் இவர்.
சாதாரண குடும்பத்தைச் சார்ந்த ஒரு வீட்டுப்
பெண்மணி ராதா ராஜன். இவர் இந்து மதத்தை சார்ந்தவர். ஆயர் இலாறன்சிடம் தன்னுடைய
பிரச்சனைகளையும், துன்பங்களையும், வருத்தங்களையும் விரிவாக எடுத்துக் கூறினார்.
ஆயர் பதில் கூறுகிறார். ''காய்க்கின்ற மரத்தில் தான் கல்லெறி
விழும்". நீங்கள் இறை ஆசீர்வாதம் உள்ள ஒரு
தாய். உங்களில் ஏராளம் திறமைகள் உண்டு. அவற்றை வீணாக்கிவிடக்கூடாது. நல்ல விதை, அது ஒன்றாக இருந்தாலும் கூட முளைத்து வளர்ந்து
ஏராளம் நல்ல விதைகளை உருவாக்க முடியும். உங்கள் மனம் ஒருபோதும் சோர்வடைந்து
விடக்கூடாது. சமூக சேவைத்துறையில் உங்களுக்கு ஏராளம் நல்ல பணிகளை செய்ய முடியும்
என்று சிரித்த முகத்துடன் அந்த தாய்க்கு ஆறுதல் கூறினார். திருமதி ராதா ராஜன்
நீண்ட 21 ஆண்டுகளாக ஆயர் இலாறன்ஸ் அவர்களின் HOM திட்டத்தில் பணிபுரிந்த ஒரு நபர் என்ற
முறையில் ஏராளம் முன்னேறியதை நன்றியுடன் நினைக்கிறார்.
''கூட்டுறவை நாம் ஒருபோதும் இழந்து விடக்கூடாது.
HOM என்ற வண்டியில் எல்லாவற்றையும் ஏற்றி
தேவைக்கேற்ப இறக்க வேண்டிய இடங்களில் இறக்க வேண்டும். HOM ஆகிய மரத்தில் ஏராளம் காய்க்க வேண்டும்”. 1997 ல் ஜனவரி 2- ம் சனிக்கிழமை வாலண்டியர் கூட்டத்தில் இறுதியாக அவர் கொடுத்த
அறிவுரை இது.
"HOM செயல்கள்
வெறும் சமூக சேவை அல்ல. அது ஒரு வளர்ச்சி. குறிப்பாக பெண்களின் வளர்ச்சி. அது
தனிநபர்களில் உள்ளடங்கியுள்ளது. நெருக்கடிகளை இணைந்து சந்திக்க வேண்டும். அப்போது
தான் உண்மையான வளர்ச்சி ஏற்படும். சாதாரண மக்களை தங்கள் கால்களில் ஊன்றி நிற்க
இயன்றவர்களாக மாற்ற வேண்டும்''.
''ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை HOM பணியாளர்களுக்கு கன்வென்சன் நடத்தப்பட்டது.
பல தொண்டு நிறுவனங்களிலிருந்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமிருந்து குழுக்கள் அவ்வப்போது வந்து HOM செயல்பாடுகளை கிராம மக்களிடையே நேரடியாக
பார்த்தும் ஆய்வு செய்தும் சென்றனர். நாட்டுக் கலைகள் வழியாக தாய்மார்களுக்கு
அறிவு புகட்டுவது இத்திட்டத்தின் முறையாக இருந்தது. இம்முறையை பெரிய
கூட்டங்களிலும் HOM வாலண்டியர்கள் நிகழ்த்திக் காட்டி
பாராட்டைப் பெற்றுள்ளனர்.
1963ல் போத்தன்கோடு தாஸ் என்பவர் கண்
மருத்துவமனையில் ஆவணக்காப்பு பிரிவில் வேலை பார்த்து வந்த போது ஒரு நாள்
திருவனந்தபுரம் விளையாட்டரங்கின் சமீபம் ஒரு ஸ்கூட்டர் மோதி அவர் விழுந்தார்.
மக்கள் கூடி நிற்கின்றனர். அப்போது அவ்வழியே தந்தை இலாறன்ஸ் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.
அவர் இறங்கி தாசின் அருகில் சென்று செய்திகளை கேட்டறிந்தார். ''வீடு எங்கே''? 'போத்தன்கோடு,
"அங்குள்ள
ஆலயத்தைத் தெரியுமா?''
''அதன் அருகில்தான்". பின்னர் பெட்ரோல் அடிக்க வைத்திருந்த ரூ. 2/-ஐ தாசுக்கு கொடுத்து பஸ்சில் வீடு செல்லக்
கூறினார். அடுத்த நாள் கண் மருத்துவமனையின் ஆவணக்காப்பு பிரிவில் சென்று தந்தை
இலாறன்ஸ் தாசைப் பற்றி விசாரித்தார். தாஸ் விடுப்பில் இருந்ததை அறிந்தார். இரண்டு
நாட்களுக்குப் பின்னர் தந்தை இலாறன்ஸ் ஒரு நோயாளியை அழைத்து வந்தார். தாசைக் கண்டு
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தபின் திரும்பிச் சென்றார்.
பேராசிரியர் சாக்கோ முதலாளியின் மகளுக்கு
பிளஸ் 1ல் சர்வோதயா பள்ளிக்கூடத்தில்
அட்மிஷனுக்காக அனுப்பினார். அன்று அதன் பொறுப்பாளராக இருந்த தந்தை மூத்தேரியைப்
பார்த்தபோது பிள்ளைக்கு மார்க்கு குறைவு. அதனால் முடியாது. வேண்டுமானால் ஆயரைப்
போய் பார்க்கச் சொல்லி அனுப்பினார். அவர்கள் குடும்பமாகச் சென்று ஆயரைப் பார்த்தனர்.
''பிதாவே பிள்ளைக்கு சர்வோதயாவில்
அட்மிஷன் வேண்டும். ஆனால் மார்க்கு சற்று குறைவுதான். ''நம்முடைய நிறுவனங்கள் நம்முடைய பிள்ளைகள் கல்வி கற்பதற்காக அல்லவா? நிச்சயமாக இப்பிள்ளை அங்கு படிக்க வேண்டும்? பதில் கூறி உடனே எழுதிக் கொடுத்தனுப்பினார்.
பிள்ளைக்கு அனுமதி கிடைத்தது. இவ்வாறு மக்களுக்கு உதவும் எண்ணம் அளவுக்கதிகமாக
அவரிடம் காணப்பட்டது.
ஒரு நாள் (1975) பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் அவர்களும் சகோதரர் ஜோண்
அரீக்கலும் (பின்னர் தந்தை ஜாண் அரிக்கல்) இணைந்து பேராயரின் காரில் பயணம் செய்து
கொண்டிருந்தனர். திருவனந்தபுரம் நோக்கி வண்டி சென்று கொண்டிருந்தது. இரவு நேரம்
தூக்க மிகுதியால் சகோதரர் ஜோண் வண்டியிலிருந்து தூங்கிவிட்டார். ஆயூரை எட்டியபோது
பேராயர் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னார். வண்டி நின்றது. சகோதரர் திடீரென
விழித்துக் கொண்டார். அவரிடம் ஜங்சனில் நிற்கின்ற தந்தையை அழைத்து வரக் கூறினார்.
சகோதரர் இறங்கிச் சென்றார். அங்கு நின்றிருந்த தந்தை இலாறன்ஸ் பேராயரின் கைமுத்தம்
செய்து வண்டியில் ஏறினார். பயணம் தொடர்ந்தது. பேராயர் அந்த சகோதரனிடம் கூறினார். "இரவென்றும் பகலென்றும் பாராமல் கடினமாக
உழைக்கின்றவர் தான் தந்தை இலாறன்ஸ். பிரதர் குருவாகும் போதும் இவ்வாறு இருக்க
வேண்டும்"
தந்தை இலாறன்ஸ் பிரப்பன்கோட்டில் பணியாற்றிய
காலத்தில் புறக்கணிக்கப்பட்ட ஏழை மக்களின் வளர்ச்சிக்காக அவர் ஆரம்பித்த ஒரு
முயற்சியே 'Open
boarding' (திறந்த வெளி
விடுதி) 5 வயது முதல் 11 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்காக இது ஆரம்பிக்கப்பட்டது.
சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட சிறார்களை வளர்த்துவதே இதன் இலட்சியம். பாடல், விளையாட்டு, நடிப்பு இவைகளுடன் எழுதவும், படிக்கவும் இவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. உணவு, உடை, கல்வி
ஆகியவை நல்கி சமூகத்திற்கு பயனுள்ள குடிமக்களாக இவர்களை உயர்த்தவே தந்தை இலாறன்ஸ்
தன்னுடைய முக்கியமான,
ஏராளமான
பணிகளுக்கிடையிலும் இப்பணிக்காக நேரத்தை கண்டுபிடித்தார். இந்த பணிகளில் தனக்கு
உதவியாயிருந்த சகோதரிகளிடம் ஒரு முறை அவர் கேட்டார், “இந்த பிள்ளைகள்,
ஓட்டிக் கொண்டிருக்கும்
பேருந்தில் கல்லெறிந்தும்,
வீடுகளை உடைத்தும், கலவரங்கள் ஏற்படுத்தியும் சமூக விரோதிகளாகவும், கொள்ளைக்காரர்களாகவும், கொலைக்காரர்களாகவும் காண விருப்பமா? இல்லை, சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக இவர்களை வளர்த்துவதா? எது நல்லது?”
பிரப்பன்கோட்டிலிருந்து தந்தை இலாறன்சிற்கு
பிரியாவிடை கொடுத்தபோது,
வாழ்த்துக் கூறி அவர்
விரலுக்கு தங்க மோதிரம் அணிவதற்கும் அவர் கரங்களை முத்தம் செய்வதற்கும் இறைவன்
அருள்புரியட்டும் என்று ஆசீர்வதித்தனர் இச்சிறுவர்கள்.
கிராத்தூர் பங்கிற்கு இடமாற்றலாகி
பங்குத்தந்தையாக செல்லும் வழியில் தமது இல்லத்திற்கு சென்று வயதான தன் தாயின் முன்
முழந்தாட்பணிந்து பாதங்களை முத்தம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட காட்சி,
பார்த்து நின்றவர்களின் கண்களை பனிக்கச் செய்தது.
துன்பம் அனுபவிப்பவர்களைப் பற்றிய சிந்தனை
எப்போதும் அவரது உள்ளத்தை வேதனைப்படுத்திக் கொண்டேயிருந்தது. எனவே தான் தனது
வாழ்வில் ஏழைகளின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்றார்.
வெல்டிங், பயிர்த்தொழில், ஆடு, மாடு,
கோழிகள் வளர்த்தல், தேனீக்கள் வளர்த்தல், குழந்தைகளின் கல்வி, ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான பாலர் பள்ளிகள், சேமிப்புத் திட்டம், காய்கறித் தோட்டம் போன்றவை அவர் எடுத்த முயற்சிகளில் சில. ஆயராக
உயர்த்தப்பட்ட பின்னரும் பல வேளைகளில் அவர், ''ஒரு குழுவாக பணி செய்வதுதான் எனக்கு மிக்க மகிழ்ச்சியாயிருந்தது" என்று கூறுவதுண்டு.
1976-ஆம் ஆண்டு சக்கமல வடத்தற பகுதிகளில்
சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஆதிவாசிகளிடையே பணி செய்த அருட்கன்னியர்களுக்கு அவர்
எப்போதும் ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி வந்தார். அங்குள்ள
எல்லா வீடுகளுக்கும் சென்று அவர்கள் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து
அறிவுரைகளையும் இயன்ற உதவிகளையும் செய்து வந்தார்.
பனச்சமூட்டில் பிரசங்கியார் என்று
அழைக்கப்படும் திரு. ஜாண் தமது சொந்த முயற்சியால் ஒரு உயரமான சிலுவையை கட்டி
எழுப்பினார். 19 அடி உயரமும், 2 அடி அகலமும்,
1 அடி கனமும் கொண்ட
இச்சிலுவையை நாட்டியதற்குப் பின்னணியில் நீண்ட வரலாறு ஒன்று உண்டு. திரு. ஜாண்
தனக்கு ஏற்பட்ட பல ஆச்சரியமான அனுபவங்களை ஆயர் இலாறன்சிடம் பகிர்ந்து கொள்வதுண்டு.
ஆயர் அவரையும் அவர் குடும்பத்தையும் ஆறுதலும் உறுதியும் படுத்தி இறைவனுடைய
விருப்பத்தை துணிந்து செய்ய ஊக்கமளித்தார். பலமுறை அவர் இல்லத்தை சந்தித்து
இச்சிலுவை அமைந்திருக்கும் இடத்தை பார்வையிட்டு இது ஒரு குருசடியாக மாற வேண்டும்
என்று அறிவுரை கூறினார். ஆயரின் ஆசியால் இன்று இச்சிலுவை அமைந்திருக்கும் தளம்
செபிப்பதற்கு ஏற்ற ஒரு சூழ்நிலையில் அமைந்திருக்கிறது. இறைவன் தம் விருப்பத்தை
நிறைவேற்ற எத்தனை வகைவகையான மனிதர்களையும், வித்தியாசமான சூழ்நிலைகளையும் பயன்படுத்தி வருகிறார் என்பதற்கு
இதுவும் ஒரு சான்று.
கிராத்தூரிலுள்ள விசுவநாதன் டிரைவரும் தந்தை
இலாறன்சும் 1978ல் திருவனந்தபுரத்திலிருந்து
கோட்டயத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். வடவாதூர் குருமடத்திற்கு அருகிலுள்ள
ஒரு இடத்தில் 40 வயதுள்ள ஒரு மனிதர் சாலை ஓரத்தில்
விழுந்து கிடந்தார். வாயிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவர் குளிரால்
நடுங்கிக் கொண்டிருந்தார். தந்தை இலாறன்ஸ் டிரைவரிடம் வண்டியை நிறுத்தக் கூறினார்.
காக்கா வலி என்று புரிந்து கொண்ட தந்தை, வண்டியிலிருந்து
ஒரு ஸ்பானர் எடுத்து அம்மனிதனின் கையில் பிடிக்கச் செய்தார். டிரைவர்
விசுவநாதனிடம் தண்ணீர் கொண்டு வரக்கூறினார். அங்கு கூட்டம் கூடிய எவருமே எதையும் செய்யாமல்
வேடிக்கை பார்த்து நின்ற சூழ்நிலையில்தான் தந்தை இலாறன்ஸ் இவற்றையெல்லாம் செய்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் அம்மனிதர் நோய் நீங்கி நலமடைந்தார். டிரைவர் கொண்டு வந்த
தண்ணீரை வாங்கிக் குடித்தார். அப்போதுதான் எட்டி நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள்
எல்லாம் அருகில் வந்து தந்தையைப் பாராட்டத் தொடங்கினர். தந்தை அம்மனிதருக்கு
உணவுக்கு ரூபாயும் கொடுத்து மீண்டும் பயணம் தொடர்ந்தார்.
இவ்வாறே 1979-ல் இவர்கள் இருவரும் நாகர்கோவிலுக்கு சுங்கான்கடை வழியாக கடந்து
சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பிச்சைக்காரன் சைக்கிள் மோதி காயத்துடன்
கிடப்பதைக் கண்டார். இருவரும் சேர்ந்து அம்மனிதரை தூக்கி அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். அப்போது தந்தை இலாறன்சின் அங்கியில் இரத்தக்கறை படிந்தது. அதை அவர்
பொருட்படுத்தாமல் அவர் நற்பணியை தொடர்ந்தார்.
இறுதித் தருவாயில் இருந்த தம் வாழ்வை எவ்வாறு
ஆயர் இலாறன்ஸ் வளப்படுத்தினார் என்று திருமதி இராஜம்மாள் கூறுகிறார்: “1987ல் நான் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு
மரணப்படுக்கையில் ஆனேன். மருத்துவக் கல்லூரியில் இருந்த என்னைப் பார்ப்பதற்காக
ஆயர் இலாறன்ஸ் ஒருநாள் வந்தார். என்னை ஆறுதல் படுத்தி எனக்காக செபித்தார். செபம்
முடிந்ததும் எனக்கு நோயில் பூசுதல் வழங்க தந்தை தோமஸ் தெக்கேடத்து தயாராக வந்து
நின்றார். அதைக் கண்ட ஆயர் தாமே அதை நிறை வேற்றுவதாகக் கூறி அவரே எனக்கு நோயில்
பூசுதல் தந்தார். முடிந்தபின் கூறினார். 'நான் நோயில் பூசுதல் வழங்குவோர் சாதாரணமாக இறக்கமாட்டார்கள்''. என்று சாதாரணமாகக் கூறிய அவரது இந்த
வார்த்தைகளை எவருமே காரியமாக எடுக்கவில்லை. ஆனால் உண்மையிலேயே அவர் வார்த்தை
பலித்துவிட்டது. நான் மரணநிலையிலிருந்து மீட்கப்பட்டு குணமடைந்தேன். ஒரு
வானதூதரைப் போல திடீரென வந்த அவரது வருகையும், நோயாளியாக இருந்த என்னிடம் அவர் காட்டிய இரக்கமும், தந்தைக்குரிய அன்பும் ஒரு நாளும் என் நினைவை
விட்டு அகலாது. பின்னர் அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் என் உடல் நிலையைப்பற்றி
விசாரித்து வந்தார்'
7 கிராத்தூர் பங்குத்தந்தை
1977 -ஆம் ஆண்டு முதல் 1980 -ஆம் ஆண்டு வரை அருட்தந்தை இலாறன்ஸ் அடிகளார் கிராத்தூர்
பங்குத்தந்தையாக பணியாற்றினார்கள். இக்காலத்தில் அன்னார் அவர்கள் பொறுப்பு வகித்த
பணிகள் பல.
அவை கிராத்தூர், மஞ்சத்தோப்பு ஆகிய பங்குகளின் பங்குத்தந்தை, புனித தோமையார் மருத்துவமனை இயக்குநர், தமிழக மலங்கரை கல்விக் கூடங்களின் தாளாளர்
என்பவை. அருட்தந்தை அவர்கள் இரவு பகல் பாராமல் மக்கள் முன்னேற்ற பணிகளிலும்
நல்வாழ்வு பணியிலும் முக்கிய கவனம் செலுத்திவந்தார். அன்னார் அவர்கள் அனைத்து
மக்களையும் ஒன்றாக இணைத்து மக்கள் தேவைகளை அறிந்து எந்த வகையில் அத்தேவைகளை நிறைவு
செய்யலாம் என்பதை மக்களுடன் கலந்தாலோசித்து முன்னேற்றத் திட்டங்களுக்கு செயல்
வடிவம் கொடுத்தார். அதற்கு மக்களுக்காக மக்களே செயல்படும் விதத்தை அறிமுகப்படுத்தினார்.
கிராத்தூர் பங்குத்தந்தையாக இருக்கும் போது
முன்னேற்றப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமையை முழுவதுமாக செலவிடுவார். அதற்காக
ஞாயிறு திருப்பலி முடிந்த உடன் மக்கள் முன்னேற்றத்தில் ஆர்வமுடையவர்களை
ஒன்றுகூட்டி கலந்தாலோசிப்பார். அக்கூட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், கடன் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், தென்னை
மரம் ஒற்றி, நகை அடகு போன்ற கடன் உள்ளவர்கள் வந்து
அவர்கள் தேவைகளை சொல்லுவார்கள்;
கூட்டத்தில்
ஆலோசிக்கப்படும். அதன் விளைவாக “கிராத்தூர் வெல்பயர் சொசைட்டி” வழியாக கடனாக
தேவைப்பட்ட பணம் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு கூடுகின்ற கூட்டங்கள் பல
ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 4
மணி வரை நடந்ததுண்டு.
தொடக்க காலத்தில் கூட்டத்தின் இடையில் சண்டையும் நடக்கும். இவ்வளவு நேரம்
அருட்தந்தையவர்களும் கூட்டத்தினரோடு இருப்பார்கள். போகப் போக கூட்டத்தின் தன்மை
மாறத் தொடங்கியது. கூட்டத்திற்கு வருபவர்களை தேவைக்கேற்ப குழுக்களாக ஒன்று
கூட்டுவார்கள். அதன்படி வங்கி அலுவலர், பஞ்சாயத்து
யூனியன் அலுவலர்கள் போன்றோர்களை வரவழைத்து, ஞாயிற்றுக் கிழமை கூட்டங்களில் அறிவுரை வழங்கப்படும். கடன்
தேவைப்படுபவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தவறாமல் சேமிப்புத் தொகை அடைக்க வேண்டும்.
சேமிப்பில் ஒழுங்காக பணம் கட்டுபவர்களுக்கு கடன் வழங்க சிபாரிசு செய்யப்படும்.
இம்முறையைக் கண்டு இந்தியன் வங்கி களியக்காவிளை, கிராத்தூர் மக்களுக்கு கடன் வழங்க முன் வந்தது. அதன் விளைவாக
அன்று குறைந்த வட்டியுடன்,
கூட்டு உத்தரவாதத்தில்
இலட்சம் ரூபாய்க்கு மேல் கடனாக எடுக்கப்பட்டது. இத்தொகை ஞாயிற்றுக்கிழமைக்
கூட்டங்களில் கொண்டு வந்து அடைக்க வேண்டும். அதை ஒருவர் வங்கியில் அடைத்து ரசீதை
ஆட்களுக்கு கொடுப்பார். அம்முறை அதிக சிரமம் இல்லாமல் மக்களுக்கு பயனுள்ளதாக
இருந்தது. வேலையில்லாத இளைஞர்களுக்காக அரசு உதவியுடன் ஒரு நூற்பாலை கிராத்தூரில்
அமைக்க தேவையான நடவடிக்கை எடுத்தார். அதில் பல இளைஞர்கள் வேலை செய்து
பயனடைந்தார்கள்.
அத்துடன் பிரப்பன்கோடு தொழுநோய்
மருத்துவமனையின் கீழ் இயங்கி வந்த திருவனந்தபுரம் தொழுநோய் கட்டுப்பாட்டு
மையத்தின் பொறுப்பையும் கவனித்து வந்தார். அதன் கீழ் அம்பிலிகோணத்தில் ஒரு
தொழுநோய் யூனிட்டு செயல்பட தேவையான ஏற்பாடுகளையும் செய்தார்.
தமிழக மலங்கரை கல்வி நிறுவனங்களின் தாளாளர்
பதவி முதன் முதலில் அருட்தந்தை அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்பணியையும் செவ்வனே
செய்தார்.
இத்துடன் மஞ்சத்தோப்பு பங்கின்
பங்குத்தந்தையாகவும் செயலாற்றினார். மறைபரப்பு பணியில் முக்கிய கவனம்
செலுத்துவதில் தவறவில்லை. அதன் விளைவாக கிடாரக்குழியை மையமாகக் கொண்டு கிராத்தூர்
பங்கிலுள்ள குடும்பங்களை வைத்து புதிதாக ஒரு பங்கு ஆரம்பிக்கப்பட்டது. அதுபோல ஞாயிறு
மாலை நாகர்கோவில், கன்னியாகுமரி, மருந்துவாழ்மலை போன்ற இடங்களை மையமாகக் கொண்டு பல
மறைபணித்தளங்களுக்கு வித்திட்டார். மக்களின் வளமான வாழ்வு ஒன்றையே இலட்சியமாகக்
கொண்டு தந்தையவர்கள் எடுத்த முயற்சிகள் பல வேளைகளில் சரியாக புரிந்து
கொள்ளப்படவில்லை. எனவே பிரிவினைவாதி என்றும் சாதிய சிந்தனையாளர் என்றும் தவறாக
பேசப்பட்டு பல நெருக்கடிகளுக்கும், வேதனைக்கும்
உள்ளானார். இருப்பினும் இறைவனின் பராமரிப்பை முழுமையாக நம்பி துணிவுடன்
முன்னோக்கிச் சென்றார். கிராத்தூர் பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில்
அருட்தந்தை கோசிவர்கீஸ்,
அருட்தந்தை சக்கரியா
நெடியகாலாயில் ஆகியோர் உதவி பங்குத்தந்தையராக பணியாற்றினார்கள்.
மக்களுக்காக பல நல்ல காரியங்களை செய்தபோதும்
அன்னாரை வருத்தமடையச் செய்த பல துயர நிகழ்வுகளும் உள்ளன. இப்படிப்பட்ட
சந்தர்ப்பத்தில் வருத்தமுடனும் கண்ணீருடனும் திருப்பலி ஒப்புக்கொடுத்த நாட்கள்
உண்டு.
1977-ஆம் ஆண்டு மார் இவானியோஸ் கல்லூரியில்
கிளார்க் ஆக வேலை செய்து வந்த ஒரு நபரை பேராயர் மார் கிரிகோரியோஸ் அவர்கள்
பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட காரணத்தால் பணியிலிருந்து நீக்கம் செய்தார்.
இதனால் இந்த நபர் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினருடன் தொடர்பு கொண்டு பேராயர்
இல்லத்தை தகர்க்கப்போவதாக ஒருநாள் மாலையில் அறிவிப்புகிடைத்தது. இந்நிகழ்ச்சி
நடக்கப்போகும் நாள் பேராயர் வெளிநாடு பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதனால் அன்று
கிராத்தூர் மருத்துவமனை இயக்குநராக இருந்த தந்தை இலாறன்சை விவரம் அறிவித்தார்கள்.
அன்று இரவே கிராத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கெல்லாம் இச்செய்தி
அறிவிக்கப்பட்டது. அவ்வாறு திரு. செல்லன் உட்பட ஏறக்குறைய 250 பேர் கொண்ட குழு, பட்டம் பேராயர் இல்லத்தை அடைந்தது. அவர்கள் தந்தை இலாறன்சின்
தலைமையில் அரணாக நின்றார்கள். ஏறக்குறைய 8 மணி ஆனதும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பெரிய குழு அங்கு வந்து
சேர்ந்தது. இதைக் கண்டவுடன் பொதுநிலையினரான பலரும் இல்லத்தை விட்டு தலைமறைவாயினர்.
சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரும் தயாராயினர். உடனே “கை கோர்த்து வளையமாக நில்லுங்கள்'' என்றார் தந்தை. திடீரென எல்லோரும் வளையமாக
நின்றனர். வந்தவர்கள் ஒன்றுமே செய்ய முடியாமல் திரும்பி சென்றனர். அவ்வாறு கலவரம்
ஏற்படக்கூடிய சூழ்நிலையில் துணிவுடனும், விவேகத்துடனும்
தந்தை இலாறன்ஸ் செயல்பட்டதால் பெரும் பாதிப்புத் தவிர்க்கப்பட்டது.
1978 ல் தந்தை இலாறன்சுக்கு உதவியாக அருட்தந்தை
கோசி வற்கீஸ் நியமிக்கப்பட்டார். அவரை வரவேற்றுக் கொண்டு அன்றே அவரிடம் தந்தை
இலாறன்ஸ் கூறினார், “எல்லாம் பார்த்து அதன்படி செயல்பட
வேண்டும். சரியான நேரத்தில் உணவு உண்ண வேண்டும். எனக்காக காத்திருக்கக் கூடாது.
சுதந்திரமாக செயல்படவேண்டும்”
என்றார். இவரே இன்றைய
மாவேலிக்கரை மறைமாவட்ட ஆயரான ஜோஷ்வா மார் இக்னாத்தியோஸ்.
கிராத்தூர் மருத்துவமனையில் வார இறுதியில்
தன்னுடன் பணிபுரியும் அனைவரையும் கூட்டி 6 + 1 என்ற பெயரில் ஒருங்கிணைத்து வகுப்புகள் நடத்தினார். நிர்வாக
நுணுக்கங்கள், ஆள் - ஆள் உறவுகள், குழு நல அணுகுமுறை ஆகியவற்றை Sr. Philomen Mary (Medical
Mission), Mr. K.M. George MBA (Ernakulam), Sr. Muriel (ICM) ஆகியோரின் தலைமையில் வகுப்புகளும், கலந்துரையாடல்களும் நடத்தினார். பிரச்சனைகளை
ஆய்வு செய்து அவற்றை மாற்றிக் கொள்வதற்கான வழிகளையும் கண்டுபிடிப்பது ஆயரின்
தனித்தன்மையாக இருந்தது. ஒரு பெரும் திட்ட அமைப்பாளராக அவர் அறியப்பட்டார்.
பங்கின் காரியங்களைப்பற்றி திருப்பலிக்குப்
பின் பங்கு பேரவை உறுப்பினர்களையும் பிறரையும் ஒன்றுகூட்டி நீண்ட நேரம்
கலந்துரையாடுவார். ஒரு தீர்மானமும் இன்றி கூட்டம் முடிவடைவதும் உண்டு. சில மணி
நேரம் கழிந்து தளர்ந்து,
சோர்ந்து திரும்பி வரும்
தந்தையிடம் என்ன தீர்மானம் ஆனது என்று உதவி பங்குத்தந்தை கேட்பார். 'யார் தீர்மானம் எடுக்க வேண்டும்? நாமா?'' 'இல்லை அவர்கள் தான்', இது
உதவி பங்குத்தந்தையின் பதில்.
"Exactly" தந்தை
இலாறன்ஸ் பதில் கூறினார். இதற்காக மக்களை தயாரிப்பதுதான் இந்த கலந்துரையாடல்.
இதற்காக அவர் எடுத்த வழிகள் மிக சிரமமானதாகவும் பொறுமையுடையதாகவும் இருந்தது.
விழிப்புணர்வு மக்களில் ஏற்பட்டாலன்றி மக்கள் வளரமாட்டார்கள். மக்களை
ஆன்மீகத்திலும் பொருளாதாரத்திலும் சமூகத்தில் வளர்த்துவதே அவர் குறிக்கோளாக
இருந்தது. இதற்காக யாரிடமெல்லாம் ஒத்துழைக்க வேண்டுமோ அவர்களுடன் எல்லாம்
ஒத்துழைத்தார். அரசுடனும் இதர அமைப்புகளுடனும் ஒத்துழைத்தார்.
மருத்துவமனையில் நோயாளிகள் குறைவு என்று
சொல்லும் போது தந்தை இலாறன்ஸ் 'Our
village is a healthy one'
என்று பதில் கூறுவார். எல்லாவற்றிலும் அதன் நல்லபக்கத்தைக் காண்பது அவர் இயல்பு.
ஆயர் இலாறன்ஸ் ஒரு செபமாலை பிரியராக இருந்தார். தினந்தோறும் செபமாலை செபிப்பது
அவருக்கு தனி இன்பம். பயணத்தின் மத்தியிலும் செபமாலை செபிப்பது வழக்கம். அவ்வாறே
எப்போதும் கழுத்தில் உத்தரியம் அணிந்து வந்தார். அறுந்து போனால், உடனே அதனை முடிச்சுப் போட்டும் அணிவார்.
நல்லது கிடைத்தபின் மாற்றுவார். மாதாவின் மீது கொண்ட அவருடைய பக்தியை இது காட்டுகிறது.
தந்தை கோசி வற்கீஸ் விமலபுரம், சூசைபுரம் ஆகிய பங்குகளையும் கவனித்து
அத்துடன் நேசமணி கல்லூரியில் பயின்று B.A. பட்டம்
முதல் வகுப்பில் வென்றார். இதை அறிந்த ஆயர் இலாறன்ஸ் அவரைப் பாராட்டி ''கோயில்களும் கவனித்து, ஆட்களின் தேவைகளும் நிவர்த்தி செய்து நாம் இறை பணியாற்றும் போது
எல்லாவற்றையும் இறைவன் நடத்தித் தருவார்'' என்று
கூறினார். ''கற்க வேண்டும் என்று மனம் வைத்தால்
கற்கலாம்” என்று அடிக்கடி கூறுவார்''
சில ஆண்டுகளுக்குப் பின் 1993ல் தந்தை கோசி சென்னை பாடியில் பணிபுரிந்து
வந்தார். ஆயர் இலாறன்சுக்கு ஒரு இதய அறுவை சிகிச்சை சென்னையில் நடந்தது. அப்போது
பாடி பங்கு மக்கள் தேவையான இரத்தம் கொடுத்தனர். குணமடைந்து திரும்பி வந்த ஆயர்
கூறினார், ''எனது இரத்தம் பாடி மலங்கரை மக்களின்
இரத்தமாகும்'' இவ்வளவு நன்றியுடையவராக அவர்
இருந்தார்.
நோய்வாய்ப்பட்டு இருக்கும் குருக்கள், கன்னியர் மற்றும் பணி செய்து ஓய்வு வாழ்வு
நடத்துவோர் ஆகியோரிடம் அவருக்கு சிறப்பான அன்பும், நன்றியும் இருந்தது. அவர்களைக் கண்டு தம் அன்பை அறிவிப்பதில் அவர்
கவனம் கொண்டிருந்தார்.
1963-ஆம் ஆண்டு பிரப்பன்கோடு மருத்துவமனையை
மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தந்தை இலாறன்சின் சமூக மைய ஆரோக்கியப் பணிகள் 1978-ஆம் ஆண்டு கிராத்தூர் பங்குத்தந்தையாக
பொறுப்பேற்றபின் அங்கும் தொடரப்பட்டது. கிராத்தூர் பகுதியை மையமாகக் கொண்டு மக்களை
சிறு குழுக்களாக ஒன்றுதிரட்டி அவர்களுக்கு தம் பிரச்சனைகளையும், தேவைகளையும் பற்றி விவாதிக்க வாய்ப்பு
கொடுத்து அவற்றை சந்திப்பதற்கான வழிமுறைகளையும் கூறிவந்தார். இக்காலத்தில் தான்
இந்திய நாட்டில் மக்களின் ஆரோக்கிய நிலையை உயர்த்த மாற்றுவழிகள் ஆராயப்பட்டு
வந்தது. பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வந்த நிறுவன முறையினால் ஏழை, கிராமிய மக்களுக்கு சுகாதார வசதி
சென்றடையவில்லை என்ற உண்மை அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்டது. இதற்கு மாற்று
வழியாக தன்னார்வத் தொண்டு நிறவனங்களின் துணையோடு புது முறை ஒன்று
பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி 'மினி ஹெல்த் சென்டர்' (சிறு சுகாதார நிலையம்) ஆரம்பிக்கப்பட
வேண்டும். ஒரு பகுதி நேர மருத்துவரும், ஒரு
ஆண், ஒரு பெண் அடங்கிய இரு முழுநேர
ஆரோக்கிய பணியாளரும்,
மூன்று பகுதி நேர
முதலுதவி பணிப் பெண்களும் ஒரு மையத்தில் செயல்பட வேண்டும். இது 1000 குடும்பங்களைக் கொண்ட 5000 மக்களுக்கு பணிபுரிய வேண்டும் என்றும்
பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு தேவையான நிதியுதவி 1:1:1 என்ற விகிதத்தில் மத்திய அரசும், மாநில அரசும்,
தொண்டு நிறவனமும்
இணைந்து வழங்கவேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டது. மத்தியில் ஜனதா அரசு ஆட்சி
செய்து வந்த கால கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தை தமிழக அரசும்
ஆர்வத்துடன் செயல்படுத்த முன் வந்தது. புதுமை வாய்ந்த இத்திட்டத்தை செயல்படுத்த
அரசு விரும்பினும் மரபு வழி செயல்பட்டு வரும் நிறுவன அமைப்பை அடிப்படையாகக் கொண்டு
செயல்பட்டு பழகிப்போன மக்கள் இதை அவ்வளவாக வரவேற்கவில்லை. எனவே அரசு
இத்திட்டத்தில் ஆர்வமுடைய தொண்டு நிறுவனங்களை விசாரித்து அறியத்தொடங்கியது.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு பொது
மருத்துவபணித்துறை உதவி இயக்குநராக அன்றிருந்த டாக்டர். கபீர் அவர்கள் தந்தை
இலாறன்சை கிராத்தூரில் சந்திக்க நேர்ந்தது. தற்செயலாக அந்த சந்திப்பு நடந்தபோது, தந்தை இலாறன்சின் தலைமையில் மக்கள் சிறு சிறு
குழுக்களாகக் கூடி தம் வாழ்க்கை வசதி பற்றி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். இதை
நேரடியாகக் கண்ட உதவி இயக்குநர்,
தந்தை இலாறன்சின்
ஆர்வத்தையும் ஏற்கனவே அங்கு இயங்கிவரும் சிறு கிராமிய அமைப்புகளையும் கண்டு
மகிழ்ச்சி அடைந்தார். அதன் அடிப்படையில் அரசு புதிதாக ஆரம்பிக்க விரும்பிய 'மினி ஹெல்த் சென்டர்' திட்டத்தை தாங்கள் ஏற்றெடுத்து நடத்த வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டார். மக்களுக்கு நன்மை பயக்கும் என்று நம்பிக்கை உடைய எதையும்
தயங்காது துணிந்து ஏற்கும் மனமுடைய தந்தை இலாறன்ஸ் உடனே அதற்கு சம்மதம்
தெரிவிக்கவும் செய்தார். அதன் அடிப்படையில் 1978-ஆம் ஆண்டு கிராத்தூர் செயின்ட் தாமஸ் மருத்துவமனையை மையமாகக்
கொண்டு குமரி மாவட்டத்தில் பல பகுதிகளிலாக பத்து மினி ஹெல்த் சென்டர்கள்
ஆரம்பிக்கப்பட்டன. இவற்றின் செயல்பாடுகளை நேரடியாக சோதித்து அறிந்து
திருப்தியடைந்த அரசு அலுவலகங்கள் மீண்டும் படிப்படியாக 17 சென்டர்களுக்கு அனுமதி வழங்கின. மொத்தம் இரண்டு அமைப்புகளின்
தலைமையில் தந்தை அவர்கள் குமரி மாவட்டத்தில் 27 மினி ஹெல்த் சென்டர்கள் செயல்படச் செய்தார். இதனால் சாதி, மத' பேதமின்றி
பலர் சிறு வேலை வாய்ப்பு பெற்றனர். மக்களுக்கு சுகாதார அறிவும் வசதியும் பெருகின.
இவ்வாறு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த இத்திட்டம் பற்பல அரசியல் மாற்றங்களால்
நாளடைவில் பல பாதிப்புகளுக்கு உள்ளானது. மத்தியில் அரசு மாறியது. இத்திட்டத்தில்
புது அரசு ஆர்வம் காட்டவில்லை. எனவே இதற்குரிய மானியம் நிறுத்தப்பட்டது.
மாநிலத்திலும் இதன் செயல்பாடுகளிலும் சட்ட திட்டங்களிலும் பெரிய மாறுதல்கள்
ஏற்பட்டன. இத்திட்டத்தை ஆரம்பித்தவர்களில் இருந்த ஆர்வம், பின்னர் வந்த அதிகாரிகளிடம் காணவில்லை. எனவே அவர்கள்
புதுமுறைகளும், விதிகளும் அறிமுகப்படுத்தினர்.
நாளடைவில் இத்திட்டம் அரசின் எவ்வித அதிகாரப் பூர்வ அறிவிப்புமின்றி மானியம்
வழங்குவதை நிறுத்தி அதன் மூலம் கைவிடப்பட்டது.
1983ம் ஆண்டு அரசுமானியம் நிறுத்தப்பட்டும் தந்தை
இலாறன்ஸ் தொடர்ந்து 1990
ஆம் ஆண்டுவரை அதே
முறையில் 27 மையங்களையும் தம் சொந்த முயற்சியால்
திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட நிதியுதவியுடன் நடத்தி வந்தார். பல சுகாதாரப் பணிகளை
ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இத்திட்டத்தின்படி 17-5-1986 அன்று கிறிஸ்டோபுரம் ஆலயத்தில் வைத்து
நடத்தப்பட்ட 'உலக மாற்றுத்திறனாளிகள்' தினவிழாவில் அன்றைய மாவட்ட ஆட்சியாளர் உயர்
திரு முனிர் ஹோதா IAS அவர்களும் மாவட்ட உடல் நல அலுவலரும்
கலந்து கொண்டனர். எல்லா மக்களையும் கூட்டி நடத்தப்பட்ட இதுபோன்ற விழாக்கள் ஆயர்
இலாறன்சின் தனிப்பட்ட முயற்சியின் விளைவாகும். பின்னர் இம்முறையை மாற்றி
வசதிக்கேற்ப இம்மையங்கள்வழி சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றும் பல
குடும்பங்கள் தந்தையவர்களின் இம்முயற்சியால் வாழ்கின்றன என்பதும் அப்பட்டமான உண்மை.
இருப்பினும் இதில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டன. சமூக
விரோதிகளின் ஆதாரமற்ற தூண்டுதலின் பேரில் இந்த மையங்களில் பிரமாணிக்கமுடன்
பணியாற்றிய பலரும் அரசின் குற்றச்சாட்டிற்கு உள்ளாயினர். தந்தை இலாறன்சும், தந்தை புறத்தூட்டும், அருட்கன்னியரும் கூட இக்குற்றச்சாட்டிற்கு உள்ளாயினர். இதனால்
எண்ணற்ற மன வருத்தத்திற்கு இவர்களும் இவர்களைச் சார்ந்த பலரும் உள்ளாயினர்
என்பதையும் மறக்க முடியாது. நெருக்கடியான வேளைகளிலும் இறைவனின் பராமரிப்பும் ஆயர்
இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களுடன் இருந்தது என்பதற்கு, அவர் இவ்வழக்கில் பெற்றிருந்த அசாதரணமான விதிவிலக்கு, ஒரு சான்றாகும். இந்திய ஜனநாயக நாட்டின்
நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி தந்தை இலாறன்சின் நல்ல முயற்சியை உறுதி
செய்யும் என்ற நம்பிக்கையுடன் இவர்கள் மன வேதனைகளை துணிவுடன் தாங்கிக்
கொண்டார்கள். அவர்களது நம்பிக்கை வீண்போகாமல் நாளடைவில் அனைவரும்
விடுவிக்கப்பட்டனர்.
இந்த சுகாதார மையங்கள் பின்னர் ''அடிப்படை சுகாதாரப்பணி' யாக மலர்ந்தது. இத்துடன் HOM திட்டமும் இணைந்து இன்றும் இயன்ற அளவு
மக்களுக்கு பலன்தரக்கூடிய முறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
நற்செய்திப்பணி என்பது மனிதனின் சாதனை அல்ல.
கடவுளின் கொடை என்று ஆயர் அடிக்கடி சொல்வதுண்டு. இது இறைவனின் பணி. ஆகையால் இறைவன்
அதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். நாம் அதை பயன்படுத்தி உழைக்க
வேண்டும். பலன் கொடுப்பவர் கடவுள்தான் என்று உறுதியாக நம்பியிருந்தார். தன்
வாழ்வில் அவரால் தொடங்கப்பட்டு,
வளர்த்தப்பட்ட ஏராளமான
மறைபரப்பு மையங்களும் அவருடைய இந்த ஆழமான அனுபவத்தை பறைசாற்றி நிற்கின்றன.
1712-ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தின் நட்டாலம் என்ற
ஊரில் ஒரு நாயர் குடும்பத்தில் பிறந்தவர் நீலகண்டபிள்ளை. இவர் மார்த்தாண்டவர்மா
மகாராஜாவின் படைத்தளபதியாக திறன்பட பணியாற்றி வந்த காலம். டிலனாய் என்ற படைத்
தளபதியின் அறிவுரையில் தெளிவடைந்து 17-5-1945ல்
கிறிஸ்தவராக திருமுழுக்குப் பெற்று தேவசகாயம் பிள்ளை என்று பெயர் எடுத்துக்
கொண்டவர். இதனால் அரசரின் கோப வெறிக்கு உள்ளாகி பல சித்திரவதைகளுக்கு உள்ளானவர்.
இறுதியில் ஆரல்வாய்மொழியில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த இடத்தில் இன்று ஒரு அழகிய
ஆலயமும் அவர் நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது. பலர் இவரிடம் வேண்டி இறையருள்
நிறைவாகப் பெற்றுக் கொள்கின்றனர். அவ்வாறே அவர் பிறந்த ஊராகிய நட்டாலத்திலும் ஒரு
சிற்றாலயம் உள்ளது. இங்கும் அவருக்கு விழா எடுத்து இறையனுபவம் பெற்று வருகின்றனர்
மக்கள்.
தேவசகாயம் பிள்ளையை கொல்வதற்காக ஆரல்வாய்மொழி
குன்றிற்கு கொண்டு செல்லும் வழியில் பல வேதனைகளுக்கு அவர் உள்ளாக்கப்பட்டார்.
இவ்வாறு அவர் கொடுமைப்படுத்தப்பட்ட இடங்களில் முக்கியமானது நாகர்கோவிலை அடுத்துள்ள
பார்வதிபுரத்துடன் இணைந்து கிடக்கும் பெருவிளை என்ற சிறு ஊர். அங்கு ஒரு வேப்பு
மரம் நின்றது. இம்மரத்தில் தேவசகாயம் பிள்ளையை சங்கிலியால் கட்டிப் போட்டனர். அவர்
உடலில் மிளகாய் பொடி தேய்த்தனர். சாட்டையால் அடித்தனர். இவ்வாறு சுமார் ஆறு மாத
காலம் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் தேவசகாயம் பிள்ளை தான் ஏற்றுக்கொண்ட
இயேசு மீட்பரை புறக்கணிக்க தயாராக இல்லை. அனைத்தையும் அவருக்காக தாங்கிக்கொண்டார்.
தன் துன்பத்தில் அவர் வாழ்வின் பொருளைக் கண்டார். எனவேதான் இறைவன் அவரோடு
இருக்கின்றார் என்று வெளிப்படுத்தும் வண்ணம் புதுமைகள் பல செய்தார். அவர்
கட்டியிடப்பட்ட அந்த வேப்பின் இலை, பட்டை
இவற்றை அரைத்து உடலில் தேய்த்து பல வியாதிகளிலிருந்து மக்கள் குணம் அடைந்தனர்.
அந்த மரம் சிறப்பாக அவரது இறையருளை வெளிப்படுத்தி நின்றது.
நாளடைவில் ஒரு சிலுவை அங்கு நாட்டப்பட்டது.
மக்கள் பலர் வந்து செபித்தனர். காணிக்கை செலுத்தினர். தொலை ஊர்களிலிருந்துகூட பலர்
வந்து இந்த புனிதமான இடத்தை சந்தித்து இறை பிரசன்னத்தை உணர்ந்து சென்றனர். அவர்
இறந்த நாளில் கூட்டமாக கஞ்சி வைத்து அருந்தி அவர் நினைவைக் கொண்டாடி வந்தனர்.
இதற்கான புகைப்படம் இன்றும் சில வீடுகளில் உள்ளன. இருப்பினும் பெருவிளையில்
இருக்கும் இவ்விடம் கிறிஸ்தவர் கைக்கு எட்டவில்லை. அங்கே ஆராச்சார் குடும்பம்
ஒன்று குடியேறி இருந்தது. அவ்விடம் ஜனார்த்தனன் பிள்ளை என்ற ஆராச்சார் பெயருக்கு
இருந்தது. இவ்விடத்தின் புனிதத்தை பராமரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும்
வெற்றி கிடைக்கவில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க இம் முயற்சிகள் எல்லாம்
கைவிடப்பட்ட நிலையில் ஆயர் இலாறன்ஸ் இந்த இடத்தின் வரலாற்றை அறிகிறார். எப்படியும்
இதை நல்ல ஒரு சூழ்நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று தீர்மானிக்கின்றார். வேதசாட்சி
தேவசகாயம் பிள்ளையிடமே செபிக்கிறார். அவர் முயற்சி தோல்வி அடையவில்லை.
நாகர்கோவிலில் வசித்து வந்த செபத்தியான் பிள்ளை, சங்கர பிள்ளை மற்றும் கணேச பிள்ளையின் ஒத்துழைப்பால் இவ்விடத்தை
வாங்குவதற்காக முயற்சி எடுத்தார். பின்னர் திரு. செல்வராஜ், திரு. இராஜமணி ஆகியோரின் விடா முயற்சியால் 1987-ம் ஆண்டு இவ்விடத்தை திருவனந்தபுரம்
உயர்மறைமாவட்டத்திற்காக ஜனார்த்தனன் பிள்ளையிடமிருந்து விலைக்கு வாங்கினார்.
மிகுந்த எதிர்பார்ப்போடு செய்யப்பட்ட இந்த செயல் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
ஏனெனில் விலைக்கு வாங்கிய பின்னும் இவ்விடத்தில் நுழைய முடியவில்லை என்பதே உண்மை.
அதற்கு காரணம் அங்கு குடியிருந்த ஒரு ஆராச்சாரின் குடும்பமே ஆகும். பிரச்சனைக்கு
தீர்வு காண பங்குத்தந்தை நேரடியாக அக்குடும்பத்தாருடன் பேசிப் பார்த்தார். ஆனால்
நிலமை இன்னும் மோசமானது. அவ்வீட்டார் தீவிரவாத இந்து நபர்களிடம் கூறி அவர்கள்
வந்து இரவோடு இரவாக அங்கு நாட்டப்பட்டிருந்த சிலுவையை உடைத்தெறிந்து வேப்பு மரத்தை
பட்டுப் போகச் செய்தார்கள். இதைக் கண்டு மனமுடைந்து, நம் பிக்கை இழந்து போன நபர்களுக்கு ஆயர் ஆறுதல் கூறினார். அவர்
இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் தொடர்ந்து செபித்து பல முயற்சிகளில்
ஈடுபட்டார். இம்முயற்சியில் கிராத்தூர் திரு. முத்தையன் அவர்களும் ஈடுபட்டார்.
இருப்பினும் நினைத்த பலன் கிடைக்கவில்லை. ஆண்டுகள் பல உருண்டோடின. முயற்சியைக்
கைவிடாது திரு. இராஜமணி,
திரு. செல்வராஜ் ஆகியோர்
அவ்வூர் பெரியவர்களையும் மற்றும் பல குடும்பத்தாரையும் நேரில் கண்டு பல முறை பேசி
ஒரு முடிவுக்கு வர முயற்சி செய்தார்கள். அதன் பயனாக 1991ல் அவ்வீட்டார் இருக்கும் இடத்தை விட்டு விட்டு மீதி இடத்தில்
நுழைந்து அங்கு ஒரு ஓலைக் குடிசையும் போடப்பட்டது. அக்குடிசையில் திரு. புன்னூஸ்
தங்க வைக்கப்பட்டார். இம்முயற்சிகளில் திரு. வற்கீஸ், திரு. சோமன் மற்றும் பல நண்பர்கள் பெருமளவில் உதவி புரிந்தனர்.
ஆயர் இந்நிலைமை குறித்து மகிழ்ச்சி அடைந்தார். நேரடியாக பல முறை இடத்திற்கு வந்து
பல பணிகளுக்கு ஏற்பாடு செய்தார். முயற்சி மீண்டும் தொடர்ந்தது. திரு. செல்வராஜின்
கடினமான முயற்சியால் குடியிருந்த வீட்டார் ஒரு சமரசத்திற்கு ஒத்து வந்தனர்.
இதன்படி அவ்வூர் பஞ்சாயத்து தலைவர் திரு. ஜெயப்பால் இல்லத்தில் வைத்து
இவ்விடத்தில் குடியிருந்த ஆராச்சார் குடும்பத்தார் வேறு இடத்தில் குடியிருக்க
தேவையான நிதி உதவி செய்து அவ்விடத்தை முறைப்படி பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.
1987-ஆம் ஆண்டே விலைக்கு வாங்கப்பட்ட இப்புனித இடம்
இன்னல் இடையூறுகள் பல சந்தித்து 1996-ஆம் ஆண்டு தான் முழுமையாக நம்
கட்டுப்பாட்டில் வந்தது. இதற்குள் எதிரும் புதிருமாக இருந்த சூழ்நிலையை ஆயர் தம்
தொடர்ச்சியான முயற்சியால்,
பல குடும்பத்தாரை
சந்தித்து அவர்களோடு உரையாடி,
உணவு அருந்தி
அவர்களுக்காக செபித்து தம் அன்புறவை வெளிப்படுத்தி மாற்றிக்கொண்டார். இவ்வாறு தன்
நீண்ட நாள் கனவு நனவானதைக் கண்டு ஆயர் பெரும் மகிழ்ச்சியடைந்தார். இம்முயற்சியில்
ஈடுபட்ட நபர்களை சிறப்பாக பாராட்டினார். குறிப்பாக திரு. செல்வராஜுக்கு பாராட்டைத்
தெரிவித்து பரிசு வழங்கி தம் நன்றியை வெளிப்படுத்தினார். நேரடியாக வந்து நின்று
அடுத்தகட்ட பணிகளுக்கு ஆலோசனை கூறினார். இவ்வாறு நம் ஆயர் வேதசாட்சி தேவசகாயம்
பிள்ளை மேல் கொண்ட பற்று வீண் போகாது நல்ல பலனை அளித்தது.
தந்தை இலாறன்ஸ் கிராத்தூர் பங்குத்தந்தையாக
பணியாற்றி இருந்த காலம். கிராத்தூர் மடத்தில் தங்கி மருத்துவமனையிலும் தந்தை
இலாறன்சின் பணிகளிலும் உதவியவர் அருட்சகோதரி பொனிபாசி டி.எம். திறமைகள்
இல்லாதிருக்கும் நபர்களுக்கு வேண்டிய பயிற்சி அளித்து திறமை மிக்கவராக மாற்றுபவர்
தந்தை இலாறன்ஸ். பிறரை நம்பி அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார். எவரையும்
திறமையற்றவர், தகுதியற்றவர் என புறக்கணிப்பதில்லை.
மிகுந்த மதிப்போடும்,
மரியாதையோடும் நடப்பவர்
என்று தம் அனுபவத்தை விவரிக்கிறார்கள் அருட்சகோதரி. தன்னுடைய ஏராளமான நல்ல அனுபவ
நிகழ்ச்சிகளை நன்றியுடன் நினைக்கும் இவர்கள், ஒரு அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார்கள்.
“ஒரு முறை கிளினிக் முடிந்த பின், வாகனத்தை கிராத்தூர் மருத்துவமனை முன்
நிறுத்தி விட்டு ஓட்டுநர் வண்டியிலிருந்து தண்ணீர் எடுக்கச் சென்றார். அதற்குள்
நான் வண்டியில் ஏறி அதன் சாவியைத் திருப்பினேன். சுத்தமாக டிரைவிங் தெரியாத எனக்கு
இவ்வளவும் செய்தால் வண்டி ஸ்டார்ட் ஆகி ஓடும் என்று தெரியாது. என் காலும் சரியான
அறிவின்றி ஆக்சிலேட்டரை மிதித்தது. வண்டி திடீரென முன்னோக்கிப் பாய்ந்து
மருத்துவமனை சுவரில் இடித்து நின்றது. வெடிச்சத்தம் போல் ஒலி கேட்டது. வாகனத்தின்
முன் பகுதி பெருமளவில் பழுதடைந்தது. நானும் வண்டியின் வாசல் திறக்கப்பட்டு வெளியே
சென்று விழுந்தேன். மக்கள் கூடினர்...... ஒரே ஆரவாரம்.... அனைவரும் என் மீது
வெறுப்படைந்தனர். தந்தை இலாறன்ஸ் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார்.
கூடியிருந்த மக்கள் என்மீது சரமாரியாக பழி சுமத்திய வண்ணம் இருந்தனர். தந்தை
இலாறன்ஸ் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். வண்டியும் பெருமளவில்
சேதமடைந்து அதன் இயந்திரமும் கோளாறு அடைந்தது. தந்தை இலாறன்ஸ் என்னை விட்டுவைக்க
மாட்டார். என் உள்ளத்தில் ஆழமான குற்ற உணர்வு. நான் ஓடிச் சென்று அவர் முன்
முழந்தாளிட்டேன். காரசாரமான குற்றச்சாட்டையும், கோபத்தையும் அவரிடமிருந்து எதிர்பார்த்து நின்றேன். ஆனால் என்
எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக, தந்தை
இலாறன்ஸ் 'சிஸ்டருக்கு ஏதாவது அடிபட்டதா? ஏதாவது பட்டிருந்தால் உடனே மருத்துவமனையில்
சென்று மருந்து எடுங்கள்'
என்று மிக கனிவோடும்
அக்கறையோடும் கூறி தலையைத் தடவி ஆறுதல் படுத்தி அனுப்பினார். தந்தை இலாறன்சின்
மன்னிக்கும் மனதையும்,
பொறுமையையும், அக்கறையையும் அன்று அதிகமாக நான்
அறிந்துகொண்டேன்.”
''உங்கள் வாழ்க்கையில் அதிகமாக உள்ளத்தை கவர்ந்த
நபர்கள் எவரேனும் உண்டா?''
என்று கேட்ட போது நம்
ஆயர் உடனே பதில் கூறுவார் ''உண்டு ! என் வாழ்வை மிக அதிகமாக
கவர்ந்த இரண்டு நபர்கள் உண்டு. ஒன்று பேராயர் மார் இவானியோஸ், இரண்டு பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்.
இவர்கள் இருவரும் என் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று ஆயர் கூறுவதுண்டு.
பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகையிடமிருந்து
அவர் கற்றுக் கொண்டவை ஏராளம். ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேமின் ஆங்கில கையெழுத்து
மிக அழகாக இருப்பதை எவரும். பாராட்டாமல் இருக்க முடியாது. இதன் இரகசியத்தை அவர்
கூறியுள்ளார். பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்கள் இவரது கையைப் பிடித்து
ஆங்கில எழுத்தை வலப்புறமாக சற்று சாய்த்து எழுதவேண்டும் என்று நேரடியாக பயிற்சி
கொடுப்பாராம். அதன் பலனாக நம் ஆயர் தெளிவான ஆங்கில கையெழுத்து உடையவராக
காணப்பட்டார். இப்படி எத்தனையோ தனிப்பட்ட பயிற்சிகள் வழியாக தம் வாழ்வு வளமானது
என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவரோடு இவருக்கு இருந்த பற்றையும் ஆழமான
அன்பையும் அவர் இறப்பிற்குப் பின்னும் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருந்தார். இதன்
ஒரு முக்கிய வெளிப்பாடாக இருந்தது மார் இவானியோஸ் ஆண்டகையின் நினைவு நாளாகிய ஜூலை
மாதம் 15ம் நாள் அவர் கல்லறைக்கு
பாதயாத்திரையாக செல்வதில் இவர் காட்டிய ஆர்வமும் ஈடுபாடும்.
ஒவ்வொரு ஆண்டும் கேரளத்தில் பல
பகுதிகளிலிருந்தும், குறிப்பாக பெருநாட்டிலிருந்தும் சில
நாட்களுக்கு முன்னரே கால் நடைப் பயணமாக ஏராளமான இளைஞர்கள் திரு யாத்திரையாக
புறப்பட்டு 'மார் இவானியோஸ் நாள்'' அன்று பட்டம் பேராலயத்தில் அமைந்திருக்கும்
அவர் கல்லறையில் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இது நீண்ட ஆண்டுகளாக கேரள
மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதன் வழியாக பலர் தனிப்பட்ட நன்மைகள் அடைவது
மட்டுமன்றி பொதுவாக இது கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் ஒரு வழியாகவும்
இருந்து வருகிறது. விசுவாசிகளை வழிநடத்திய ஆயர்களை புனிதராகக் காண்பதும்
அவர்களிடம் செபிப்பதும் கிழக்கத்திய திருஅவைகளின் ஒரு நீண்ட கால பாரம்பரியமாக
இருந்து வருகிறது. இந்த பழக்கம் கேரள கிறிஸ்தவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக
கிடைத்திருக்கும் ஒரு ஆன்மீகச் சொத்து. ஆனால் இந்த நல்ல பழக்கமும், பாரம்பரியமும் குமரி மலங்கரை
கத்தோலிக்கர்களுக்கு கிடையாது. இதைப்பற்றி எவரும் அவ்வளவாக கண்டு கொள்ளவுமில்லை.
ஆனால் தந்தை இலாறன்ஸ் கிராத்தூர் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றிருந்தபோது
பாதயாத்திரை செல்லும் இந்த புனித பழக்கத்தை இங்குள்ள மக்களுக்கும் அறிமுகப் படுத்தினார்.
இங்குள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து தாமே அதற்கு தலைமைத் தாங்கி இப்பயணத்தை
ஆரம்பித்து வைத்தார். 'மண்டைக்காடு' நிகழ்ச்சியின் விளைவாக மக்களிடையே எதிர்ப்பு அதிகமாக நிலவியிருந்த
காலம். தந்தை இலாறன்ஸ் தலைமையில் கன்னியாகுமரி மலங்கரை பவனிலிருந்து 1979ம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் பாதயாத்திரை ஆரம்பமானது. தந்தை இலாறன்ஸ் திருப்பலி
நிறைவேற்றினார். பின்னர் மொத்தம் 5 இளைஞர்கள்
கையில் கொடிகளை ஏந்திய வண்ணம் குமரி முனையிலிருந்து திருப்பயணத்தை ஆரம்பித்தார்.
ஜீப் ஒன்றில் பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகையின் படம் அலங்கரிக்கப்பட்டு
ஒலிப்பெருக்கி பெட்டிகள் பொருத்தி தந்தை இலாறன்ஸ் அவர்கள் அனைவரும் கேட்க மைக் வழி
அறிவிக்க பாதயாத்திரை புறப்பட்டது. முதல் நாள் நாகர்கோவில் மலங்கரை ஆலயத்தில்
தங்கினர். ஒவ்வொரு பங்கையும் சென்றடையும் போது அங்கிருந்தும் இளைஞர் சிலர்
சேர்ந்து கொண்டனர். இரண்டாவது நாள் பயணம் பிலாங்காலைப் பங்கை எட்ட
வேண்டியிருந்தது. வில்லுக்குறியைத் தாண்டி குமாரகோவில் வழியாக சென்று
கொண்டிருந்தபோது சில இந்து மதத் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தினர்.
ஒலிப்பெருக்கியை உடைத்தனர். கையில் ஏந்தியிருந்த கொடிகளை கம்பியால் அடித்து
முறித்தனர். இப்படி சிறு குழுவாக திரு யாத்திரை செய்தபோது ஏற்பட்ட இந்த
சிரமங்களும், தடைகளும் தந்தை இலாறன்சை தளரச்
செய்யவில்லை. அவர் அதை எல்லாம் பொறுமையுடனும், விவேகத்துடனும் சந்தித்து வீரமுடன் முன்னேறினார். இவ்வாறு பெரும்
சிரமங்களுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட பாதயாத்திரை இன்றுவரை ஆண்டுதோறும் நடந்து
வருகிறது என்றால் இதன் பெருமை தந்தை இலாறன்சையே சாரும். நடப்பதற்கு சாதகமான
சூழ்நிலை சற்றும் இல்லாத நெருக்கடியான ஆண்டுகள் இருந்ததுண்டு. ஆனால் அப்பொழுது கூட
பாதயாத்திரையை நடத்தாமலிருக்க ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள்
அனுமதித்ததில்லை. பிற்காலத்தில் திருயாத்திரை செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக
அதிகரித்த பின்னரும்கூட ஆயர் அவர்கள் தன் ஏராளமான நிகழ்ச்சிகளுக்குள்ளும் இந்த
திருப்பயணத்தில் சிறு நேரமாவது நடந்து பங்கு பெறாமல் இருந்ததில்லை. தன்னை அதிகமாக
கவர்ந்த இருவரில் ஒருவராகிய மார் இவானியோஸ் ஆண்டகையில் அவர் கொண்டிருந்த அளவற்ற
அன்பின் ஒரு காணிக்கையாக ஒவ்வொரு ஆண்டும் அவரைப் பொறுத்தவரையில் இந்த பாத யாத்திரை
அமைந்தது.
8. நாகர்கோயிலில் மறைபரப்புப் பணி
தொழில் நுட்பக் கருவிகளின் கண்டுபிடிப்புகளை
மக்கள் அறியத் தொடங்கிய காலம். கிராம விவசாயமுறைகளின் முக்கியத்துவம்
குறைக்கப்பட்டு, இயந்திரமயமாக்கலின் விளைவுகள்
மக்களின் மனநிலையில் குடியேறிய காலம். கிராம மக்கள் தஞ்சம் என அன்று வரை
கொண்டிருந்த புளி, கருப்பட்டி மற்றும் விவசாய
விளைபொருட்களின் வீழ்ச்சியை சிறிது சிறிதாக மக்கள் அனுபவிக்கத் தொடங்கினர்.
இத்தகைய பரம்பரைத் தொழில்களில் ஆர்வம் குன்றிக் கொண்டே வந்தது. இதனால் வறுமை ஒரு
புறம் தாக்கத் தொடங்கியது. வேலை செய்து பிழைப்பதற்காக பலர் தங்கள் கிராமங்களை விட்டு
நகர் புறங்களில் குடியேறினர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தொழில் நுட்ப
வளர்ச்சியின் வேகம் அதிகமாயிருந்ததால் தொழில்நுட்பத் துறையில் நல்ல எதிர்காலம்
உண்டு என்று உணர்ந்து படித்தவர்கள் தங்கள் இருப்பிடங்களை கிராமங்களிலிருந்து
மாற்றி நகர்புற பகுதிகளில் அமைத்துக் கொண்டனர். இங்கே இவர்களுக்கு தரமான கல்வி
மற்றும் தொழில் பயிற்சி பெற வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. இவ்வாறு கிராமங்களை
விட்டு வெளியேறி நகரங்களுக்கு குடியேறியவர்களில் மலங்கரை கத்தோலிக்க திருஅவை
மக்களும் பலர். இவர்களில் பலர் நாகர்கோவில் பகுதியில் குடியேறி வாழ்ந்தனர். இவ்வாறு
நகரின் உள்ளும், புறமும் பலர் வசதியுடனும் வசதியற்றும்
வாழ்ந்து கொண்டிருந்த மலங்கரை மக்களுக்கு இறையன்பின் உணர்வை மீண்டும் ஊட்டி
வளர்க்க தந்தை இலாறன்ஸ் தீர்மானித்தார். எனவே ஒவ்வொரு நபர்களாக இவர்களை தேடி
புறப்பட்டார் தந்தை இலாறன்ஸ்.
மலங்கரை கத்தோலிக்கத் திருஅவை குமரி
மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட 1934
-ஆம் ஆண்டிலேயே இச்திருஅவையில்
சேர்ந்து மிகுந்த ஈடுபாடு காட்டிவந்த மரியாகிரி பங்கைச் சார்ந்த ஒரு குடும்பமே ''நாடான் சார்'' குடும்பம். கடவுள் பக்தியிலும்,, மறைபரப்புப் பணியிலும் மிகுந்த ஆர்வம் காட்டியது இக்குடும்பம்.
இவரது மூத்த மகன் திரு. கிறிஸ்டல் ஜாண் தன் குடும்பத்துடன் 1960-ஆம் ஆண்டிலேயே பூதப்பாண்டி என்ற இடத்தில்
குடியேறியிருந்தார். நாளடைவில் நல்ல வசதியான ஒரு வீடாக கட்டி எழுப்பப்பட்ட அவர்
இல்லம் பல ஆண்டுகளுக்கு பின்னர் திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தால் வாங்கப்பட்டு
இன்று ஒரு வழிபாட்டு மையமாக விளங்கி வருகிறது. இவர் அன்று அப்பகுதியிலிருந்து
ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக 1975-ஆம் ஆண்டு நாகர்கோவில் நகருக்கு வந்து
மீனாட்சிபுரம் என்ற இடத்தில் வீடு அமைத்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இக்காலத்தில்தான் தந்தை இலாறன்ஸ் கிராத்தூர் பங்குத்தந்தையாக இருந்தார்.
அங்கிருந்து மாலை வேளைகளிலும் இரவு நேரங்களிலுமாக நாகர்கோவில் பகுதியில் மலங்கரை
மக்களைத் தேடி மறைபரப்புப் பணி ஆற்றும் வண்ணம் தொடர்பு கொண்டிருந்தார். திரு.
கிறிஸ்டல் ஜாண் ஆசிரியர்,
குடும்பத்துடன்
மீனாட்சிபுரத்தில் இருப்பது அறிந்து அவர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைந்தார்.
மட்டுமல்ல இக்குடும்பம் ஆனந்தமுடன் தந்தை இலாறன்சை வரவேற்று தங்கள் நெருக்கமான
பாசத்தை வெளிப்படுத்தி தந்தைக்கு அவர் பணியில் எல்லா ஒத்துழைப்பையும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கொடுப்பதாக வாக்குறுதியளித்தது. இச்சந்திப்பிற்கு
பின் மீண்டும் மிகுந்த நம்பிக்கையுடன் தாம் பணியாற்றத் தேவையான சூழ்நிலைகளை
ஆராய்ந்து கொண்டே இருந்தார்;
ஒரு சிலரை சந்திக்கவும்
செய்தார். இவ்வாறு மேற்கூறிய குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டு
தம் பணியை தங்கு தடையின்றி நிறைவேற்றி வந்தார்.
1977 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ஆம் நாள் சற்றும் எதிர்பாராத முறையில் தந்தை
இலாறன்ஸ் திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டப் பேராயர் பெனடிக்ட் மார் - கிரிகோரியோஸ்
ஆண்டகையுடன் திரு. கிறிஸ்டல் ஜாண் வீட்டின் முன் காரில் வந்து இறங்கினார். வந்த
இருவரையும் ஆர்வமுடனும் அளவற்ற அன்புடனும் அவ்வீட்டார் உபசரித்து உள்ளே கூட்டிச்
சென்றனர். நீண்ட நேரமாக பேசிய அவர்களது உரையாடல் நாகர்கோவில் பகுதியில், தேவைப்படும் மக்களுக்கு எவ்வாறு இறைவனை
அறிவிக்கலாம் என்பதாக இருந்தது. இறுதியில் அனைவரும் ஒரே மனத்துடன் இம்முயற்சிகளை
தொடரவேண்டும் என்று உறுதி பூண்டனர். அன்றே அவ்வில்லத்திலேயே பேராயர் பெனடிக்ட்
மார் கிரிகோரியோஸ் ஆண்டகையும் தந்தை இலாறன்சும் இணைந்து அக்குடும்பத்தாருடன்
திருப்பலி நிறைவேற்றி கடவுளைப் புகழ்ந்தனர். இந்த உன்னதமான இறையனுபவத்தில் பங்கு
பெற்ற அனைவருக்கும் இது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக மாறியது.
என்றும் நன்றியுடனும்,
பற்றுடனும் பேணி
பாதுகாக்கும் ஒரு அரிய அனுபவமாக மாறியது. ஆம்! அன்றுதான் குமரித் தலைநகரில்
மலங்கரை கத்தோலிக்க திருஅவை ஆரம்பிக்கப்பட்ட நாள். கடுகு விதை போன்றும், புளிக்காரம் போன்றும் ஆரம்பிக்கப்பட்ட இச்சிறு
முயற்சிதான் பின்னர் பெரிய செடியாக வளரத் தொடங்கியது.
அடுத்த முயற்சியாக அருட்சகோதரி லீனாவை
மேற்குறிப்பிட்ட குடும்பத்திலேயே தங்க வைத்து பணிகள் தொடரப்பட்டன. அப்போது
கிராத்தூரில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த தந்தை இலாறன்சுக்கு உதவியாக தந்தை
சேவியர் ஞாயப்பள்ளி என்ற பக்குவம் மிக்க பக்தியான மூத்த தந்தையவர்கள் பணியாற்ற
வந்தார். தந்தை இலாறன்சுக்கு தம் பங்கிலேயே ஏராளமான பொறுப்புகள் இருந்தபடியால்
தந்தை சேவியர் ஞாயப்பள்ளி தேவைக்கேற்ப நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் வந்து தொடர்ந்து இவ்வீட்டிலேயே
திருப்பலி நிறைவேற்றி வந்தார். அப்போது யாக்கோபாய திருஅவையைச் சார்ந்த நான்கு
ஐந்து குடும்பத்தாரும் இக்குடும்பத்தாருடன் சேர்ந்து திருப்பலியில் வழக்கமாக
பங்கெடுத்து வந்தனர். இந்நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இன்றி சுமார்
இரண்டு ஆண்டுகள் கழிந்தன.
இறைவனின் பராமரிப்பை மீண்டும் மக்கள்
அனுபவித்து அறிந்தனர். நாட்கள் செல்லச் செல்ல திருப்பலியில் பங்கு பெறும் மக்களின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. வீட்டில் மக்கள் அமர இடம் போதாது என்ற
நிலை ஏற்பட்டது. தந்தை இலாறன்ஸ் இதற்கான மாற்று வழிகளை தேடத் தொடங்கினார்.
வடசேரியில் சாலியர் சமுதாயத்தை சார்ந்த இந்து சகோதரர் வாழும் தெருவில் ஒரு மாடி
அறை வாடகைக்கு கிடைத்தது. சற்றும் தயங்காது திருப்பலி அந்த புதிய இடத்திற்கு
மாற்றப்பட்டது. இது மக்களோடு தொடர்பு கொள்வதற்கும் மக்கள் பலர் இங்கு மலங்கரை திருஅவை
வழிபாடு நடப்பதை அறியவருவதற்கும் வாய்ப்பாக அமைந்தது. இங்கும் அவ்வப்போது தந்தை
இலாறன்ஸ் தந்தை சேவியர் ஞாயப்பள்ளியுடன் வந்து வழிபாட்டை நிறைவேற்றி வந்தார். இந்த
இடத்தில் சுமார் ஆறுமாத காலம் இச்திருஅவை இயங்கிக் கொண்டிருந்தது.
இதற்குள் கிராத்தூர் பகுதியிலிருந்து வெளியேறி
நாகர்கோவில் பகுதியில் குடியேறி பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த முன்னாள் மலங்கரை திருஅவை
மக்களை தந்தை இலாறன்ஸ் சந்தித்தார். இவர்கள் அனைவரும் அருகிலுள்ள கோட்டார்
மறைமாவட்டத்தைச் சார்ந்த வெட்டூர்ணிமடம் இலத்தீன் திருஅவையில் உறுப்பினராகச்
சேர்ந்து திருப்பலியில் பங்குபெற்று, பங்கு
செயல்பாடுகளிலும் பொறுப்புடன் ஈடுபட்டு வந்தனர். இவர்களுள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு குடியேறி வாழ்ந்து
வந்த திரு. செறியான் நாடார் குடும்பமும் ஒன்று. இவர்கள் வாழ்ந்து வந்த பகுதி, (தற்போது கிறிஸ்துவிளாகம் என்றும் அன்று
கிறிஸ்டோபுரம் என்றும் வாத்தியார்விளை என்றும் அழைக்கப்பட்டிருந்த பகுதி) பற்பல
காரணங்களால் பின்தங்கிய மக்கள் வாழும் பகுதியாகவே இருந்தது. இம் மக்கள் பற்பல
சாதிகளைச் சார்ந்தவரும் பல மதங்களைச் சார்ந்தவரும், கடவுளை அறியாதவரும், கடவுளை
ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருந்தனர். இம்மக்கள் இங்கு குடியேற பல காரணங்கள்
இருந்தன. பொருளாதார நெருக்கடி,
வேலை வாய்ப்பு, பொதுமக்களிடையே தங்களுக்கு ஏற்பட்ட இழுக்கு, குடும்ப உறவினருடனான பிளவுகள் இப்படி பல காரணங்களால்
இங்கு வந்து குடியேறியவர்களும் உண்டு. இவர்களுள் பெரும்பான்மையோரும் ஓடை
ஓரங்களிலும் சாலை வீதிகளிலும்,
அரசு புறம்போக்குகளிலும்
சிறு குடிசை அமைத்தும் அல்லது வாடகை வீடுகளிலும் தங்கி வந்தனர். இப்படி சமூக, கலாச்சார, கல்வி,
பொருளாதார வேறுபாடுகள்
நிறைந்த மக்கள் வாழ்ந்த இப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க குறைவான எண்ணிக்கையுள்ள
மக்களைத் தவிர மற்ற அனைவரும் மிக நல்லவர்களாக, கடவுள் பற்று உடையவர்களாகவே இருந்தனர் என்பது நம்மை வியப்பில்
ஆழ்த்துகிறது. கூலி வேலை,
சிறு சிறு தொழில்கள், நெசவு போன்ற வேலைகளை செய்து இம்மக்கள்
வாழ்ந்து வந்தனர்.
இச்சூழ்நிலையில்தான் திரு. செறியான் நாடார்
மகன் திரு. தாமஸ், தந்தை இலாறன்சிடம் ஒரு புது தகவலைக்
கொண்டு வந்தார். அதாவது,
தாங்கள் வாழும்
பகுதியில் திரு. சத்தியநேசன் என்ற பிரசங்கியார் ஒரு நீண்ட அறையில் தம் சொந்த
முயற்சியால் ஜெபக் கூட்டம் ஒன்றை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்றும் தற்போது
அவர் வயது முதிர்ந்த காரணத்தால் இதை கிறிஸ்தவர் யாரிடமாவது ஒப்படைக்க
விரும்புகிறார் என்றும் அறிந்து கொண்டார். சாலை ஓரத்தில் மக்களின் வீடுகளைப் போலவே
அரசு புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த அந்த நீண்ட அறையை தந்தை இலாறன்ஸ் உடனே சென்று
பார்வையிட்டார். பின்னர் விலைபேசி முடித்தார். மலங்கரை திருஅவைக்குச் சொந்தம்
என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு வழிபாட்டு மையம் நாகர்கோவிலில் அவ்வாறு
ஆரம்பமானது. புது அறையை அர்ச்சித்து தொடர்ந்து திருப்பலியும் அங்கே
நிறைவேற்றப்பட்டது. இப்போதும் தந்தை சேவியர் ஞாயப்பள்ளி அவர்களே இங்கு வந்து
திருப்பலி நிறைவேற்றி விட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். இவ்வாறு சுமார் 5 ஆண்டுகளில், மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்ட மலங்கரை வழிபாட்டு மையத்தில்
இத்தனை ஆண்டுகளும் தொடர்ச்சியாக பணிபுரிந்தவர் தந்தை சேவியர் ஞாயப்பள்ளி அவர்களே.
அங்கு சென்று, உறுப்பினராக இருந்த அனைவரையும் அன்பு
செய்து அனைவருக்கும் பிரியமான தந்தையாக இருந்ததையும் இங்குள்ள மக்களுக்கு மறக்க
முடியாது. தந்தை அவர்களுக்கு நாகர்கோவில் மலங்கரை திருஅவையைப் பற்றியும் தந்தை
இலாறன்ஸ் அடிகளாரைப் பற்றியும் பசுமையான, இனிமையான, சிந்தனைகள் மட்டுமே இறுதிவரை இருந்தன.
1978 ஜூலை 15 பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகையின் நினைவு நாளை ஒட்டி வடக்கு
பெருநாட்டிலிருந்து பாதயாத்திரை வந்தனர். தந்தை இலாறன்ஸ் குமரி முனையிலிருந்து
தமிழக மக்களை திரட்டி பாத யாத்திரை ஆரம்பித்திருந்தார். இரண்டு அணிகளும் பட்டம்
பேராலயத்தின் முன் ஒன்றிணைந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வடக்கையும்
தெற்கையும் ஒன்றிணைக்கும் ஒரு இணைப்பு கண்ணியாக ஆயர் இலாறன்ஸ் இறுதிவரை விளங்கிய
செயலுக்கு இந்நிகழ்ச்சி ஆரம்பமாக இருந்தது.
1979ல் கன்னியாகுமரியில் தங்கியிருந்த பெதனி
சகோதரிகள் மெல்க்கா, சுகுணா, தகியா ஆகியோர் நாகர்கோவில் பகுதியில் வந்து குடியிருக்கும்
கிராத்தூர் பங்கைச் சார்ந்த மக்களை கண்டுபிடிக்க அலைந்தனர். அதன் பலனாக
செட்டிக்குளம், கிருஷ்ணன் கோயில், வாத்தியார்விளை, சரல்விளை,
தட்டான் விளை ஆகிய
பகுதிகளில் உள்ள மக்களை ஒன்றுதிரட்டி வடசேரியில் நடந்த திருப்பலிக்கு கூட்டி
வந்தனர். இம்முயற்சிகளில் கிராத்தூரை சார்ந்த றசல்தாஸ், ஜஸ்டஸ்,
ஸ்டீபன், விஜயன் ஆகியோர் கன்னியர்களுக்கு உதவினர். 1980 ஏப்ரல் 6-ஆம் நாள் பெதனி கன்னியர்கள் நாகர்கோயில் வெள்ளாளர் காலணியில்
வாடகை வீட்டில் தங்கி பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தந்தை இலாறன்ஸ்
அடிக்கடி சந்தித்தார்.
மருந்துவாழ்மலையில் 1979 -ஆம் ஆண்டு முதல் அருள் சகோதரிகள் ஜெபங்கள் நடத்திவந்தனர். 1980ல் ஒரு சிறு குடிசை வைக்கப்பட்டது. 1990 -ஆம் ஆண்டு முதல் பிரான்சிஸ்கன் சகோதரர்கள்
இங்கு தங்கி பணி புரிந்துவந்தனர். மருந்துவாழ்மலையில் அதிக நேரம் செலவிடுவது
ஆயருடைய பொழுதுபோக்காக இருந்தது. இங்குள்ள பணிகளில் திரு. முத்தையன், ஆயருக்கு பெரிய உதவியாக இருந்து வந்தார்.
இயற்கையின் எழில் மிகுந்த இப்பகுதியில் வெயிலென்றோ மழையென்றோ பாராது ஆயரே நேரடியாக
வேலை செய்து மரம், செடிகளை நட்டு வளர்த்த உதவினார்.
பல காரணங்களுக்காக மக்களை அடிக்கடி ஒன்று
கூட்டுவது வழக்கம். அப்போது அவர் கூறுகின்ற ஒரு உவமை. ''நாம் ஒரு பசுவை வாங்கினோம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு
தேவையான ஆகாரம் சரியான நேரத்தில் கொடுத்தால்தான் அடுத்த நாள் பால் கிடைக்கும்.
அதுபோல்தான் திருஅவையும். எனவே திருஅவையின் வளர்ச்சிக்குத் தேவையான காரியங்களை
செய்ய வேண்டிய காலத்தில்,
செய்ய வேண்டிய முறையில்
செய்ய வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து பலன் எதிர்பார்க்க முடியும்.
திருஅவையுடன் அவர் வைத்திருந்த பற்று இதன்மூலம் வெளிப்படுகிறது.
தந்தை இலாறன்சின் குருத்துவ வெள்ளிவிழா ஆண்டு 1977. அவ்வாண்டின் ஆகஸ்டு மாதத்தில் மதர் சைபார், அருட்சகோதரி சுபீத்தா மற்றும் அருட்சகோதரிகளான
றீகா, சுகுணா ஆகியோரைக் கூட்டிக்கொண்டு
வந்து தந்தை இலாறன்ஸ் கன்னியாகுமரி மலங்கரை பவனில் திருப்பலி நிறைவேற்றினார்.
பின்னர் இந்த அருட்சகோதரிகளை ஒரு மாதகாலம் அங்கேயே தங்க வைத்தார். மொழி, இடம் ஆகியவற்றைப் பற்றிய அறிவு
இவ்வருட்சகோதரிகளுக்கு இல்லாதிருந்த வேளை. தந்தை இலாறன்ஸ் கிராத்தூரிலிருந்து
பேருந்தில் அருள் கன்னியர்களை பார்த்து நலன் விசாரிக்க ஆட்களை அனுப்பிவைத்தார். 1977 செப்டம்பர் மாதம் 2-ஆம் நாள் மதர் சைபார், சிஸ்டர்
சுரபிலா, சிஸ்டர் சுகுணா ஆகியோர்
உறுப்பினர்களாக கன்னியாகுமரியில் பெதனி மடம் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறு
தந்தை இலாறன்சின் ஒரு நீண்ட கால ஆசை நிறைவேறியது.
மாலை வேளையில் வருவார் தந்தை இலாறன்ஸ். இரவில்
தங்கி காலை திருப்பலி நிறைவேற்றுவார். காலை உணவை கையில் எடுத்து செல்வார். பின்
சகோதரிகளை ஜீப்பில் ஏறச் சொல்வார். அவர்களையும் கூட்டி மக்கள் வாழும் கிராமங்களில்
சென்று ஜீப்பை நிறுத்தி இறக்கிவிடுவார். அவர்கள் சென்று பிள்ளைகளையும்
தாய்மார்களையும் சந்தித்து பல்வேறு காரியங்களை விளக்கிக் கூறுவார்கள். பெரியவர்கள்
தந்தை இலாறன்ஸிடம் வர அவர் அவர்களுடன் உரையாடுவார். திரு. தபசி முத்து வீட்டில்
கட்டன் காப்பியும் இவர்களுக்கு கொடுப்பதுண்டு. நாளடைவில் குண்டல் பகுதியில் ஒரு
பாலர் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பல தவிர்க்கமுடியாத காரணங்களால் அது தொடர
முடியவில்லை. சென்ற இடங்களிலெல்லாம் ஒரு பணித்தளம் உருவாக வேண்டும் என்று
கூறுவார்.
தந்தை இலாறன்ஸ் வந்ததும் சகோதரிகளை அழைத்து
மேல்மாடிப்படிகளில் எல்லோரையும் அமரச் செய்வார். ஒவ்வொரு நபராக பெயர் சொல்லி
அழைத்து நலன் விசாரிப்பார். வரும்போது அனேக நாட்களும் ஒரு சிறு பொதி கொண்டு
வருவதுண்டு. பின்னர் அதைக் கொடுக்க கன்னியர் அதை பகிர்ந்து உண்டு மகிழ்வர். 1980 ஏப்ரல் மாதம் நாகர்கோவிலில் பெதனி மடம்
தொடங்கப்பட்டது. சில வேளைகளில் பொதி வாங்கி நாகர்கோவில் அருட்சகோதரிகளுக்காக
கொண்டு செல்வதுண்டு. ஒரு தந்தை தம் மக்களை எவ்வளவு அக்கரையோடு வளர்த்துவாரோ அதே
அக்கரையும், அன்பும் காட்டி வந்த ஒரு அன்பு ஆயர்
அவர். இருக்கின்ற உணவை பிறரோடு பகிர்ந்து உண்பதில் அவருக்கு அளவற்ற இன்பம். 1988ல் ஆயரின் திருநாளை மருந்துவாழ்மலை பகுதியில்
வைத்து கொண்டாடினர். காலையில் திருப்பலிக்குப்பின் உணவு. ஒரு வீட்டிலிருந்து
இட்டலி, மற்றொரு வீட்டிலிருந்து சட்னி, சாம்பார், இன்னொரு வீட்டிலிருந்து பழம், காப்பி இவ்வாறு கொண்டு வந்ததை அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.
ஏழைகளின் வளர்ச்சியில் அக்கரை கொண்டிருந்த
தந்தை இலாறன்ஸ் 1980
-ஆம் ஆண்டு ஒருநாள்
அதிகாலையில் 7.30 மணிக்கு செட்டிகுளம் ஓடைக்கரையில்
அமைத்திருந்த எல்லா வீடுகளிலும் ஏறி இறங்கி நலன் விசாரித்து உரையாடி வந்தார்.
அன்று அப்பகுதி சுத்தம் இன்றி காணப்பட்டது. அவ்விடம் ஒரு மிஷன் தளம் உருவாக்கலாம்
என்று கூறி தந்தை இலாறன்ஸை கூட்டிச் செல்லுமாறு சின்னம்மாள் பாட்டி, அருட்சகோதரிகளான மெல்கா, நிர்லீனா ஆகியோரிடம் கூறியிருந்தார்கள்.
இவர்கள் ஏற்கனவே செட்டிகுளத்தில் ஒரு குருசடி இருப்பதாக கூறியிருந்தனர். அங்கு
திருப்பலி நிறைவேற்ற தந்தை இலாறன்சை கேட்டுக் கொண்டனர். இதன்படி தினம் தோறும்
மாலையில் அங்கு ஒன்றுகூடி செபமாலையும், நவநாள்
செபங்களும் நடத்தப்பட்டன. இதற்கு திரு. முருகன் என்பவர் உதவியாக இருந்தார். பல
நோயாளிகள் வந்து அங்கேயே படுத்து செபித்து நலன் பெற்றனர். சில வேளைகளில் தந்தை
இலாறன்ஸ் அருட்சகோதரிகளுடன் சென்று அச்செபங்களில் பங்கெடுப்பார்கள்.
இப்பகுதி மிகவும் பின்தங்கியிருந்த காலம் அது.
கல்வியிலும், சுகாதாரத்திலும், ஒழுக்கத்திலும் மிகவும் கீழ் நிலையிலிருந்த
காரணத்தால் குடிப்பழக்கம்,
சண்டை சச்சரவுகள் போன்ற
தீமைகள் சாதாரணமாக காணப்பட்டன. ஆனால் இச்சூழலில் மிகுந்த மகிழ்ச்சியுடன் தந்தை
இலாறன்ஸ் மறைபரப்பு பணி செய்தார். அந்த குருசடியையும் அருகில் இருந்த சிறு
அறையையும் வாங்கினார். அருகில் நர்சரி பள்ளிக்கூடம் ஆரம்பித்தார். அது சில
ஆண்டுகள் நடைபெற்றது. குருசடியில் திருப்பலியும் ஆரம்பிக்கப்பட்டது.
அருட்சகோதரிகளும் ஆர்வமுடன் பணியாற்றினார்கள். தொடர்ந்து சில காலங்களுக்குப் பின்
அருகில் உள்ள இடமும் வாங்கி சுமாரான நல்ல ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. இதன்
அர்ச்சிப்பு நிகழ்ச்சி தந்தை ஜி. வர்க்கீஸ் அவர்களின் காலத்தில் பேராயர் பெனடிக்ட்
மார் கிரிகோரியோஸ் ஆண்டகையால் நடத்தப்பட்டது. இம்முயற்சிகளுக்கெல்லாம் ஆயர்
இலாறன்சின் நேரடி ஈடுபாடு இருந்தது. இன்று பீச்ரோட்டில் அமைந்திருக்கும் ஆலயம்
இதன் தொடர்ச்சியே.
பல ஆண்டுகளுக்கு முன்னால் தேனிக்குளம்
பகுதியில் குடியேறியிருந்தவர்கள் திரு. மனுவேலும் அவரது பிள்ளைகளும். இவர்
மக்களில் திரு. வர்க்கீஸ் இப்பகுதியில் ஒரு ஆலயம் அமைக்க வேண்டுமென்று முயற்சி
எடுத்தார். தந்தை இலாறன்ஸை அணுகி தேவையை எடுத்துக்கூறினார். ஏற்கனவே இங்குள்ள
மக்கள் கிறிஸ்டோபுரம் ஆலயத்திற்குதான் திருப்பலிக்கு வந்து கொண்டிருந்தனர். எனவே 1980 - ல் திரு. வர்கீசும் குடும்பமும் சேர்ந்து
தேனிக்குளம் சென்று குளக்கரையில் ஒரு ஓலைக் குடிசை அமைத்தனர். அங்கு தந்தை
இலாறன்சை அழைத்துச் சென்று அதைக் காட்டி இங்கு திருப்பலி நிறைவேற்ற வேண்டும் என்று
கேட்டுக் கொண்டனர். இதன்படி திருஅவை ஆரம்பிக்கப்பட்டது அக்காலத்தில் நாகர்கோவில்
பகுதியில் மறைபரப்பு தளம் தொடங்கப்படுவதற்கு உதவியாக இருந்த திரு. கோசி
அலெக்ஸ்சாண்டர், அவரது மனைவி திருமதி. மோளி
அலெக்ஸாண்டர் ஆகியோருடன் ஆயர் சென்றார். அன்று அவர்கள் சென்ற கார், மண்ணில் புதைந்ததால் மிக
சிரமப்பட்டுதான்.கரையேற்ற முடிந்தது. அன்று ஆடம்பரமாக திருப்பலி
நிறைவேற்றப்பட்டது. முடிந்தபின் திரு. மனுவேல் குடும்பம் காப்பி, ஏத்தன் பழம் முதலியவை அனைவருக்கும் கொடுத்து
தம் மகிழ்ச்சியை தெரிவித்தனர். நாளடைவில் அது ஒரு சிறு ஆலயமாக உருமாறி இன்று
வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முக்கிய சாலை ஓரத்தில் இன்று அழகுடன்
தோன்றும் ஆலயமும் குருசடியும் இதன் தொடர் வளர்ச்சியே ஆகும்.
ஆரம்பகாலத்தில் முன்பின் தெரியாத இடத்திற்கு
பெதனி சகோதரிகளை அனுப்பி ஆர்வமுள்ளவர்களை கண்டுபிடிக்க கூறியிருந்தார் தந்தை
இலாறன்ஸ். மக்களின் மொழியோ,
பழக்க வழக்கங்களோ, ஒன்றும் தெரியாதிருந்த இச்சகோதரிகள் பலவகையான
வேதனைகளுக்கும் மன கஷ்டத்திற்கும் ஆளாக வேண்டியிருந்தது. எடுத்துக்காட்டாக
நாகர்கோவில் பகுதியில் 15
சிறு சுகாதார மையங்கள்
செயல்பட்டுவந்தன. இவை ஆரம்பிக்க தேவையான பணியாட்கள் இல்லை. கண்டுபிடிக்க வேண்டும்.
இதற்காக ஒரே ஒரு மருத்துவரின் விலாசத்தை மட்டும் அருட்சகோதரி மெல்காவிடம்
கொடுத்துவிட்டு மீதி தேவையான அனைத்து மருத்துவர்களையும் கண்டுபிடிக்கச் சொன்னார்.
சிஸ்டர் அலைந்து நடந்து அதற்காக பட்ட சிரமங்களை விவரிக்க முடியாது. ஆனால் தந்தை
இலாறன்ஸ், அவர்களை அடிக்கடி அவர்கள் இல்லத்தில்
சந்தித்து அவர்களின் சிரமங்களையெல்லாம் கேட்டறிந்தார். அதற்கு வேண்டிய
அறிவுரைகளையும், ஆறுதலையும் வழங்கினார். அவர்களிடம்
இருந்த துணிவையும் நன்மையையும் திறமைகளையும் தட்டி எழுப்பி அவர்களைத் தனிப்பட்ட
முறையில் வளரச் செய்ததுடன் மறைபரப்பு பணிகளையும் துரிதப்படுத்தினார்.
9. ஆயர் அபிஷேகம்
1980 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 -ஆம் நாள் மலங்கரை கத்தோலிக்க மறுஒன்றிப்பு
இயக்கத்தின் பொன்விழா மிக கோலாகலமாக கோட்டயம் நகரில் நடந்துகொண்டிருந்தது.
கோட்டயம் காந்தி மைதானத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் விழா
நிகழ்ச்சிகள் இனிதே அரங்கேறிக் கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியாவின்
தென் பகுதியிலிருந்து மட்டுமல்ல பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கூட வருகை புரிந்தனர். சிறப்பு
விருந்தினராக அந்தியோக்கியன் மறைமுதுவர் கர்தினால் சக்கா, உலக மனசாட்சியை இயேசுவின் அன்புப் பணிகளால் தட்டி உணர்த்திய அன்னை
தெரசா மற்றும் சமூக, அரசியல், மதத்தலைவர்கள் ஏராளமாக கலந்து கொண்டிருந்தனர். காலையில்
திருவனந்தபுரம், திருவல்லா, பத்தேரி ஆகிய மறைமாவட்டங்களைச் சார்ந்த 27 திருத்தொண்டர்கள் குருக்களாக அபிஷேகம் செய்யப்பட்டனர். பேராயர்
பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்,
ஆயர் ஐசக் மார் யூகானோன், ஆயர் சிறில் மார் பஸேலியோஸ் ஆகியோர்
குருப்பட்ட திருச்சடங்குகளுக்கு தலைமை வகித்தனர். அன்று பெதனி மற்றும் மேரிமக்கள்
கன்னியர் சமூகங்களைச் சார்ந்த அனேக சகோதரிகளும் துறவற வார்த்தைப்பாட்டை எடுத்தனர்.
அனைவரையும் பக்தி பரவசத்தில் மூழ்கடிக்கச் செய்த
இந்த புனித நிகழ்ச்சிகளின் மணி மகுடமாக அமைந்தது பிற்பகல் நடந்த ஆயர் அபிஷேகத்
திருச்சடங்கு. ஆம், அன்று அந்த அரிய, அருமையான சூழ்நிலையில்தான் நம் தந்தை இலாறன்ஸ்
அவர்கள், ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் என்ற
பெயருடன் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டார். திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டப் பேராயர்
பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் தலைமையில் நடந்த அபிஷேகத் திருச்சடங்கை திருவல்லா
உயர்மறைமாவட்ட ஆயர் ஐசக் மார் யூகானோன், பத்தேரி
உயர்மறைமாவட்ட ஆயர் சிறில் மார் பஸேலியோஸ் ஆகியோர் இணைந்து நடத்தினர். ஆயருக்குரிய
செங்கோல் வழங்கி, சிலுவையை கையில் பிடித்து அரியணையில்
அமரச் செய்து, குருக்கள் தூக்க, மக்கள் 'ஆக்சியூஸ்'
(ஒக்சியோஸ்) அதாவது 'இவர் இப்பொறுப்பிற்கு தகுதி வாய்ந்தவர்' என்று ஆர்ப்பரித்த நிகழ்ச்சி இறைவனின்
நெருக்கமான பிரசன்னத்தை வெளிப்படுத்திய நிகழ்ச்சியாக இன்றும் நம் மனதில்
பதிந்துள்ளது. இவ்வாறு அன்றைய மலங்கரை கத்தோலிக்கத் திருஅவையின் நாலாவது ஆயராக, திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தின் துணை
ஆயராக இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
ஆயர் அருட்பொழிவுத் திருச்சடங்கின்போது தந்தை
இலாறன்ஸ் புதுப்பெயரை ஏற்றுக் கொண்டார். மலங்கரை கத்தோலிக்க மரபுப்படி இவ்வாறு புதுப்பெயர்
ஏற்றுக் கொள்வது வழக்கம். இறைவன் மக்களிடமிருந்து தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.
அத்தலைவர்கள் தமது பணியை ஆற்ற அழைக்கப்படுகின்றார்கள். அதற்காக அவர்களை இறைவன்
அபிஷேகம் செய்கிறார். இவ்வாறு தாம் அழைத்து தேர்ந்தெடுப்பவர்கள் முற்றிலும்
தமக்குச் சொந்தமானவர்கள் என்பதற்கடையாளமாக அவர்களை புதுப்பெயரால் அழைக்கின்றார்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆபிராம் ஆபிரகாமாக மாறியதும், புதிய ஏற்பாட்டில் சீமோன், பேதுருவாக மாறியதும், சவுல் பவுலாக மாறிய நிகழ்ச்சியும் இவ்வுண்மையை
உறுதிப்படுத்துகின்றன. இவர்களின் பெயர் மாற்றமடைவதுடன் இவர்களின் வாழ்க்கை
முறையும் பணியும் கூட வேறுபடுவதைப் பார்க்கின்றோம். இவ்வாறே, மலங்கரை கத்தோலிக்க திருஅவையில் ஒருவர் ஆயராக
திருநிலைப்படுத்தப்படும் போது அவர் ஒரு புதுப்பெயரையும் அத்துடன் ஏற்றுக்
கொள்கிறார். சாதாரணமாக திருஅவை தந்தையரின் பெயரைத்தான் நம் ஆயர்கள் ஏற்பது. இந்த
திருஅவைத் தந்தையர்கள் தூயவர்களாக வாழ்ந்தவர்கள். எனவே இவர்கள் பெயருக்கு முன்னால்
'தூய' என்று பொருள்படும் 'மார்' என்று சேர்ப்பது வழக்கம். தந்தை இலாறன்ஸ்
ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டபோது தம் பெயருடன் 'மார் எஃப்ரேம்'-மும் சேர்த்து ஆயர் இலாறன்ஸ் மார்
எஃப்ரேம் என அழைக்கப்பட்டார். ஒரு ஆயர் இறைச் சமூகத்தின் இறை நம்பிக்கையை
பாதுகாக்க வேண்டியவர். அதை மக்களுக்கு கற்பிக்க வேண்டியவர். கடவுளால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் திருநிலைப்படுத்தப்பட்டவர். இறைமக்களின் பொறுப்பு
ஒப்படைக்கப்பட்டவர். இறைவனுக்கு முற்றிலும் சொந்தமானவர். இந்த உண்மைகளையெல்லாம்
வெளிப்படுத்திக்கொண்டு நம் ஆயர் இப்பெயரை ஏற்றுக்கொண்டார்.
ஆயராக அபிஷேகம் செய்யப்பட்டபின் ஆயர் இலாறன்ஸ்
மார் எஃப்ரேம் அவர்களுக்கு மார்த்தாண்டத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களின்
நீண்டநாள் கனவு இதோ நனவாயிருக்கிறது. நம்மிலிருந்து ஒருவர் ஆயராக உயர்த்தப்
பட்டிருக்கிறார். தங்கள் மத,
மொழி, இனவேறுபாடு களையெல்லாம் மக்கள் ஒரு கணம்
மறந்தனர். அனைவருக்கும் ஒரே கருத்து. நம் ஆயரை நாம் வாழ்த்தவேண்டும். பாராட்ட
வேண்டும். அவருக்கு அளிக்கும் மதிப்பும், மரியாதையும்
இம்மண்ணின் மக்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம். ஆண்டவர் நம் வேண்டுதலை
ஏற்றிருக்கின்றார். எனவே மகிழ்ச்சி கொண்டாடு வோம். விழா எடுப்போம். இறைவனின்
கருணையை இந்த உலகிற்கு பறைசாற்றுவோம். இத்தகைய உணர்வுகளுடன் மக்கள் கடல் என
திரண்டனர். குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் ஆரம்பமான மாபெரும் ஊர்வலம்
மார்த்தாண்டம் சந்தை மைதானத்தை நோக்கி நகர்ந்தது. மலங்கரை கத்தோலிக்க திருஅவையின்
அனைத்து ஆயர்களுடன் புது ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களும் அலங்கரிக்கப்பட்ட
தேரில் அமர்ந்திருந்தார். முதலில் மார்த்தாண்டம் கிறிஸ்துராஜா ஆலயத்திற்கு வந்து
புது ஆயர் வேண்டுதல் நடத்தினார். ஆயர் என்ற நிலைக்கு தன்னை உயர்த்திய ஆண்டவருக்கு
நன்றி கூறி, அவர் தம் பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற
இறையருளை வேண்டினார். பின்னர் அனைவரும் பேரணியாக மார்த்தாண்டம் சந்தை மைதானம்
சென்றடைந்தனர். ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடையில், திருஅவைத் தலைவர்கள், சமூக,
அரசியல் தலைவர்கள், பெரியவர்கள் அமர்ந்திருந்தனர். மேடை அருகிலேயே
ஆயரை ஈன்றெடுத்து இந்த உலகிற்கு வழங்கிய அவர் தம் அன்பு தாய் திருமதி. விக்டோரியா
ஜஸ்டஸும் அமர்ந்திருந்தார்கள். விழாவில் பறைசாற்றப்பட்ட வாழ்த்துரைகளில் எல்லாம்
இறைவனுக்கு நன்றியுணர்வும்,
ஆயருக்கு பாராட்டும், வாழ்த்தும், மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பும் தெரியவந்தன. இந்த மாபெரும்
கூட்டம் போல மார்த்தாண்டத்தில் வேறு ஒரு கூட்டம் அன்று வரை நடந்ததே இல்லை என்று
பலர் கூறும் அளவுக்கு மக்கள் கூட்டம் கடல் என திரண்டிருந்தது. இது இலாறன்ஸ் மார்
எஃப்ரேம் அவர்களிடம் மக்கள் கொண்ட அன்பின் வெளிப்பாடாகும்.
1980 - ஆம் ஆண்டு தந்தை இலாறன்ஸ் ஆயராக அபிஷேகம்
செய்யப்பட்ட பின்னர் ஒரு நாள் ஊரகம் மிஷனுக்கு காரில் வந்திருந்தார். ஆயர் என்னைப்
பார்த்து (இராஜேந்திரன்) ''கல்லறை வரைப் போக வேண்டும், என்னுடன் வாருங்கள்'' என்றார். அவர் அப்பகுதியில் பணி செய்திருந்தார். தொழுநோயாளர்களின்
ஒரு சமூகம் அங்கு இருந்தது. உடனே நானும் கூடச் சென்றேன். காலனிக்கு இரண்டு பர்லாங்
தொலைவிலேயே கார் நிறுத்தப்பட்டது. ஆயருக்குரிய சிவப்புக் கச்சை, மாலை முதலியவற்றை கழற்றி காரிலேயே வைத்து
விட்டார். நான் கேட்டேன்,
'பிதாவே நீங்கள் என்ன
செய்கிறீர்கள்''? அவர் பதிலளித்ததாவது : "இந்த ஏழை மக்களைப் பொறுத்தவரையில் ஒரு ஆயர்
என்று சொன்னால் என்ன என்று தெரியாது. நான் பழைய தந்தை இலாறன்ஸ் ஆகவே அவர்கள்
அறிவர். எனவே அவ்வாறு அவர்கள் தெரிந்து கொண்டால் போதும்''. எனவே அவ்வாறு அவர்கள் இல்லங்கள் தோறும் ஏறி இறங்கினார். அந்த
முதியவர்கள், சிறுவர்கள் எல்லாம் ஆயரின் கைகளில்
பிடித்து தொங்கிக் கொண்டு,
''அச்சா! அச்சா! என்று
அழைத்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி மிக இனிமையானதாக
இருந்தது. பின்னர் ஒரு வீட்டு வராந்தாவில் ஒரு ஓலைக்கீற்றில் அவர் அமர்ந்தார்.
உடனே அனைவரும் அமர்ந்தனர். பின்னர் பாடல்கள் பாடினர். இறைவார்த்தையை பகிர்ந்து
கொண்டனர். இறைவனைப் புகழ்ந்தனர். நாங்கள் கொண்டு சென்ற பழக்குலையை எல்லோருடனும்
பங்கு வைத்து சாப்பிட்டோம். மிக்க மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றோம். "இச்சின்னஞ்சிறியவர்களுக்கு செய்தபோதெல்லாம்
எனக்கே செய்தீர்கள்''
என்ற இயேசுவின் வாக்கு
அன்று அங்கு நிறைவேறியது.
திருமணம், இறப்பு,
நோய் ஆகிய
நிகழ்ச்சிகளில் எம்மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் பங்கு கொள்வார்கள். சூழ்நிலைக்கு
ஏற்றவாறு அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்.
தன் பெயர் கொண்ட புனிதராம் தூய இலாறன்சின்
விழா நாளில் ஆற்றிய உரை: 'இன்று நாம் வேதசாட்சியான தூய
இலாறன்சின் விழாவைக் கொண்டாடுகிறோம். திருத்தந்தை சிக்ஸ்துஸ் அவர்கள் ஆட்சி
புரிந்து வந்த காலத்தில் திருஅவையில் ஒரு திருத்தொண்டராக இருந்தவர்தான் இலாறன்ஸ்.
வேத கலாபனை ஆரம்பமானபோது திருத்தந்தை சிக்ஸ்துஸ் கொலை செய்யப்பட்டார். திருஅவையின்
எல்லா நிதியையும் ஒப்படைத்து விடுமாறு பேரரசர் இலாறன்சுக்கு கட்டளையிட்டார். எல்லா
நிதிகளையும் ஒன்றுதிரட்ட இரண்டு நாட்கள் கொடுக்க வேண்டும் என்று இலாறன்ஸ்
பேரரசரைக் கேட்டுக் கொண்டார். அவர் திருஅவைக்கு இருந்திருந்த அனைத்துச்
சொத்துக்களையும் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தார். மூன்றாம் நாள் அவர் அந்த ஏழை
மக்களை எல்லாம் ஒன்றுதிரட்டி பேரரசருக்கு முன்னால் நிறுத்தி அவர்களைக் காட்டி "இந்த மக்கள்தான் திருஅவையின் சொத்து" என்று கூறினார். ஆத்திரமடைந்த பேரரசன்
இலாறன்சை பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கட்டிலில் கிடத்தி சித்திரவதை செய்து
கொல்லுமாறு கட்டளையிட்டான். அவ்வாறே இலாறன்ஸ் கொல்லப்பட்டார்." தூய இலாறன்சின் வாழ்விலிருந்து மக்கள் தான்
திருஅவையின் நிதி'' என்ற உண்மையை கற்றுக்கொள்வோம்.
அமைப்புகளுக்கும் கட்டிடங்களுக்கும் அப்பாற்பட்ட மக்கள்தான் முக்கியமானவர்கள் என்ற
ஆயரின் சிந்தனை அவர் பெயர் கொண்ட புனித இலாறன்சிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும்.
''எங்கு மக்கள் இருக்கின்றார்களோ
அங்குதான் திருஅவையும் இருக்கிறது” என்று
ஆயர் அடிக்கடி கூறுவார்.
ஆயரின் குடும்ப சூழ்நிலையில் வருத்தம் கொண்டு
வீட்டை சற்று கவனிக்க வேண்டுமென்று வற்புறுத்திக் கூறிய மதர் இம்மாக்குலேட்டிடம் "இறைவன் நடத்துவார். யாரையும் பார்த்து அல்ல
நான் இறைப்பணிக்காக இறங்கியது. இது இறைவனின் திட்டமென்றால் ஒரு மகனைக் கூட கொடுத்த
இறைவன் அறியாமலா ஏதாவது நிகழ்வது?''
என்று பதிலளித்தார்.
இந்த அசையாத நம்பிக்கை அவரிடம் இறுதி வரை இருந்தது. "கடவுள் ஒருவரே பெரியவர். அவர் கரங்களில்
எல்லாம் பத்திரமாக உள்ளது''
என்று அடிக்கடிக்
கூறுவார். “உலக கண்ணோட்டத்தில் உயர் பதவிக்கு
ஆசைப்படாதவர், பெரியவராக காட்டிக் கொள்ளாதவர்.
அவ்வகையில் சிந்திக்கவோ ஆசைப்படவோ செய்யாத ஒரு எளிய இறைபணியாளர்தான் ஆயர்
இலாறன்ஸ். ஒரு ஆயர் ஆனபின்னும் வெளிப்படையாக, மிகவும் கடினமான சூழ்நிலையில் எல்லாம் தலை உயர்த்தி நிற்கும்
வண்ணம், உண்மையான பெருமையை கண்டுபிடித்து, அதை தமதாக்கிக் கொண்ட தாழ்ச்சியின் கோபுரம்
அவர்'' என்று அவர் குடும்பத்துடன்
வைத்திருந்த 28 ஆண்டுகால அனுபவத்திலிருந்து மதர்
இம்மாகுலேட் கூறுகிறார்.
தனி நபர்களின் வாழ்வில் ஏற்படும் நெருக்கடியான
சூழ்நிலைகள் ஆயர் இலாறன்சின் காதுகளை எட்டுவதுதான் தாமதம், உடனே ஓடோடிச் சென்று அவர்களை ஆற்றித் தேற்றுவார். இது அவர்
வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு உண்மை. 1982-ஆம்
ஆண்டு கணவரை இழந்த திருமதி. லீலாம்மா தோமஸ் தனது ஆறாத்துயரத்தில் ஆயர் இலாறன்ஸ்
எவ்வாறு அவர்களைத் தேற்றினார் என்று கூறுகிறார்: “உடனே வீட்டிற்கு ஓடி வந்து எங்களை உறுதிப்படுத்தினார். பல
மணிநேரம் எங்கள் வேதனையை எங்களோடு பகிர்ந்துகொண்டார். பின்னர் எங்கள் குடும்பம்
நலமுடன் வாழ்கிறதா? என்று அடிக்கடி விசாரிப்பார். பிள்ளைகளின்
படிப்பிலும் எதிர்காலத்திலும் மிகுந்த அக்கரை காட்டினார். அன்பு நிதியாகிய ஆயர்
இலாறன்ஸ் வாழ்ந்த நாள்வரை எங்களுக்கு தந்தையாகவும், இரக்கமும்,
கருணையும் நிறைந்த ஒரு
ஆன்மீக குருவாகவும் இருந்தார். அவரை மிக நன்றியுணர்வுடன் நினைக்கிறோம். என்றும்
நாங்கள் அவருக்கு கடமைப்பட்டிருக்கின்றோம்'' என்றார்.
ஆயர் இலாறன்ஸ் அவர்களை திருவனந்தபுரம்
உயர்மறைமாவட்ட குருகுல முதல்வராக நியமித்த நிகழ்ச்சி. முந்தைய குருகுல முதல்வர்
மோண்சிஞ்ஞோர் குருவிளை அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் நேரம். அக்கூட்டத்தில்
ஆயர் பீலக்சினோஸ் இவ்வாறு பேசினார். “முதியவரான
சிமியோனைப் போன்று மதிப்பிற்குரிய தந்தை குருவிளையும் மௌனமாக இவ்வாறு கூறுவார்:'' ''என்னை அமைதியுடன் போக விடுங்கள். ஏனெனில் என்
கண்கள் இறைவனின் இரக்கத்தை கண்டு கொண்டன''. ஆயர்
இலாறன்ஸ் பொறுப்பு ஏற்றதை இவ்வாறு அவர் வருணித்தார்.
நாகர்கோவில் பங்கு இல்லத்தில் மாலை வேளையில்
சுற்றிலுமுள்ள மாணவ மாணவியர் வந்து பங்கு கட்டிடத்தில் அமர்ந்து பாடம் கற்பர்.
இதில் பல மதத்தை சார்ந்தவர்கள் உண்டு. பங்கிலுள்ள ஒருசில இளைஞர்கள் வந்து இந்த
பிள்ளைகள் படிக்க உதவி புரிவர். ஆயர் இலாறன்ஸ் அடிக்கடி அங்கு வந்து செல்வதுண்டு.
ஒருநாள் மாலை வகுப்பு நடக்கும்போது திடீரென ஆயர் காரில் வந்து இறங்கினார். வழக்கம்
போல ஆயரை பார்த்ததும் பிள்ளைகள் ஓடிச்சென்று அன்புடன் அவர் கரத்தை முத்தம்
செய்தனர். இக்கூட்டத்தில் புதிதாக படிக்க வந்த ஒரு இந்து மாணவியும் இருந்தாள்.
எல்லோரும் ஆயரின் கை முத்தம் செய்வதைக் கண்ட பிள்ளையும், தானும் அப்படியே செய்ய வேண்டும் என்ற ஆசையில் ஓடிச் சென்று தன்
கையை ஆயருக்கு முத்தம் செய்ய நீட்டினாள். எல்லோரும் இப்படித்தான் செய்கிறார்கள்
என்று தவறுதலாக அக்குழந்தை எண்ணியதே இதற்கு காரணம். பார்த்து நின்ற எல்லோரும்
வாய்விட்டுச் சிரித்தோம். ஆயரும் எங்களுடன் சிரித்தார்கள். அத்துடன் அப்பிள்ளையை
அன்புடன் பாராட்டி நலன் விசாரித்து வாழ்த்தி அனுப்பினார்.
அன்று ஒருநாள் திரு. M. அண்ணாத்துரை தூக்கமின்றி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார்.
மனதிற்கு அமைதி இல்லை. வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையில்லை. திருமணமாகி ஒரு
குழந்தையுடன் வேலை தேடி நாகர்கோவிலிலிருந்து சென்னை வந்த பின்னும் இக்குடும்பத்திற்கு
விடிவு வரவில்லை. ஒரு வேளை உணவுக்குக்கூட வழியில்லாத நிலை ஒருபுறம். சமூக அந்தஸ்து
மறுபுறம். அவர் ஒரு முடிவுக்கு வந்தார். குடும்பத்துடன் வாழ்க்கையை
முடித்துவிடுவது. இருப்பினும் ஏதோ ஒரு பெரும் குழப்பம். அன்று ஆயர் இலாறன்ஸ், அவர்களிடம் கூறிய வார்த்தைகள்! அவர் தனியாக
ஒரு இளைஞனாக அவருடன் அறிமுகமான காலத்தில் ஒலித்த அதே குரல்/ அவரே நேரடியாக பேசுவது
போன்ற எண்ணம் "உங்களிடத்தில் தாராளம் திறமைகள்
உண்டு. அதை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.'' திரு. அண்ணாத்துரை தெளிவு பெற்றார். மனதை உறுதியாக மாற்றிக்
கொண்டார். அவருக்கு புது தெம்பு பிறந்தது. விடாமுயற்சியுடன் கடினமாக நீண்ட காலம்
உழைத்தார். இடையில் வந்த துன்பங்களையும் தடைகளையும் கண்டு சோர்ந்து விடவில்லை.
விளைவு! வெற்றி! இன்று சுயதொழில் நடத்தி ஒரு கல்லூரி பேராசியருக்கு இணையான
வருமானம் பெறுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் தனது 23-வது வயதில் வேலை தேடி அலைந்த ஒரு பக்தியான C.S.I. திருஅவை உறுப்பினர் இவர். ஆயர் இலாறன்சை
சந்தித்தபோது தம் திருஅவை தலைவர்களின் வழக்கத்திற்கு மாறாக அன்பும், பரிவும், பணிவும்,
ஏழைகள்பால் பாசமும் இவர்
ஆயரிடம் கண்டுகொண்டார். அதன் பலனாக தாமாக மனமுவந்து மலங்கரை கத்தோலிக்க திருஅவையில்
சேர்ந்து ஒரு கத்தோலிக்க குடும்பமாக வாழ்பவர் இவர். ஆயருடன் அவர் பல வளர்ச்சித்
திட்டங்களில் டிரைவராக,
டெக்னிசியனாக, ஆண் பணியாளராக, ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர். மலங்ரை கத்தோலிக்கத்
திருஅவையில் பங்கு செயலர்,
மார்த்தாண்டம் மறைவட்ட
மறைக்கல்வி செயலர், ஆற்றூர் மண்டல கோள்பிங் குடும்ப
சிறப்பு பிரதிநிதி, பாஸ்டரல் கவுன்சில் உறுப்பினர் போன்ற
முக்கிய பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார். இவை அத்தனைக்கும், ஆயருக்கு இவரிடமிருந்த அன்பும் அக்கரையும்
மட்டுமே காரணம் என்கிறார் இவர்.
17-5-93 அன்று சென்னை வட பழனி விஜயா மருத்துவமனையில்
ஆயருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அருட்சகோதரிகளுடன் கூடவே திரு. அண்ணாத்துரையும் நின்று ஆயரைக் கவனித்துவந்தார்கள்.
அன்று காலை 7.45 மணிக்கு பேராயர் மார் கிரிகோரியோஸ்
அவர்கள் வந்து நமது ஆயருக்கு மனித வாழ்வில் இறுதியாக கொடுக்கும் அருளடையாளமாகிய
நோயில் பூசுதலை கொடுத்துவிட்டு,
எல்லோரும் கண்கலங்கி
நின்ற நேரம் மருத்துவ சிப்பந்திகள் தள்ளுப்படுக்கையை கொண்டு வந்தார்கள். ஆயரின்
தாடி, மீசை, வெட்டப்பட்டன. ஆயரின் மார்பில் உள்ள ரோமங்கள் சவரம் செய்து
அகற்றப்பட்டன. அறுவை சிகிட்சைக்கான உடைகள் அணிவிக்கப்பட்டன. கட்டிலிலிருந்து ஆயரை
சிப்பந்திகள் தள்ளுப்படுக்கையில் மாற்றினார்கள். அந்த வேளையில் ஆயர், தந்தை மரிய அற்புதம் அவர்களை அழைத்து ''அச்சா! வருஷந்தோறும் ஞான் நடத்துந்ந துக்க
வெள்ளி பிரார்த்தன ஈ வர்ஷம் மருந்துவாழ்மலையில் நடத்தணும். அச்சன் உடனே அவிடெ போய்
பிரார்த்தன நடத்தியிட்டு இவிடெ வந்நால் மதி'' என்று சொன்னார்கள். ஆயர் எஃப்ரேம் விடை பெற, எல்லோர் கண்களிலும் நீர் அருவியாக கொட்ட
தள்ளுவண்டி ஆப்ரேஷன் தியேட்டரை நோக்கி நகர்ந்தது. ஆயர் எல்லோரையும் பார்த்து ஜெபம்
செய்யும்படி கேட்டுக் கொண்டு புறப்பட்டார்கள்.
இவரைப் பொறுத்தவரையில் ஆயர் இன்றும் இவர்
வாழ்வுக்கு ஒரு பெரும் உந்து சக்தியாக இருப்பதாக கூறுகிறார். அவர் கூறிய
வார்த்தைகள் ''உன்னிடம் தாராளம் திறமைகள் உண்டு: அதை
உபயோகித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்'' என்ற குரல் சோர்வடையும்போதும் தோல்வி அடையும்போதும் எல்லாம் இவர்
காதுகளில் இன்றும் உரக்க ஒலித்துக்கொண்டே இருப்பதாக சான்று பகர்கின்றார்.
டாக்டர் ஜெயகர் ஜோசப் கணிப்பொறி விஞ்ஞானியாக
மாறிய மருத்துவர். இவர் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களைப் பற்றி கூறும் போது '' ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களின்
ஆலோசனையும், உதவியும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக
பெறும் பேற்றை பெற்றேன். நான் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டபோது அவர் ஒரு ஆயர்
என்ற நிலையை விட ஒரு தந்தை என்ற முறையில் என் மீது அக்கரை காட்டினார். என் தீய
சோதனைகளை வெற்றிகொண்டு என் திறமைகளையெல்லாம் ஆக்கபூர்வமாக உயர்ந்த நோக்கத்திற்காக
செலவிட அவர் என்னை பக்குவப்படுத்தினார். என் குடும்பத்திற்கு அவர் தந்தை. அறிவு
பூர்வமான வழிநடத்தல் எங்கள் பிணைப்பை உறுதிப்படுத்தி வளரச் செய்தது. ஒட்டு
மொத்தத்தில் நான் இலட்சியத்தை அடைய தேவையான தூண்டுதலையும் நம்பிக்கையையும்
கொடுத்தார். அவர் அடிக்கடி கூறும் ஒரு வாக்கியம் ''மெய்யாக முடியுமானவைகளை மட்டுமே கனவு காண்பது நல்லது.'' (Dreaming is good only if it
is reality). அவரிடம்
நான் கண்ட மிகச் சிறப்பான பண்பு என்னவெனில் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட
பிரிவினருக்காக அறிவியல் முறைப்படியும், மனிதாபிமான
முறையிலும், பணி செய்ய அவரிடம் இருந்த உறுதியான
ஆவல்தான். இம்முயற்சியில் அவர் வெற்றியும் கண்டு நம் இதயங்களில் அவர் உயிருள்ள
நினைவையும் ஏற்படுத்திக் கொண்டார் என்று நான் எண்ணுகிறேன்''
''குருத்துவ மாணவர்களுக்கு சரியான உச்சரிப்புப்
பயிற்சி கொடுப்பதில் ஆயர் கவனமாயிருந்தார். தெளிவாக, நிறுத்தி வாசிக்க தாமே நேரடியாக கற்றுக் கொடுப்பதுண்டு. மலையாள
மொழி சரிவர எனக்குத் தெரியாது. ஜெபத்தின் மத்தியில் விசுவாசப்பிரமாணம் சரியாக
உச்சரிக்க முடியாமல் தடுமாறி வாசித்தேன். இதைக்கண்ட ஆயர் இலாறன்ஸ் என்னை தனியாக
அறையில் அழைத்தார். எனக்கு சரிவர உச்சரித்து வாசிக்க கற்றுத்தந்தார். நான் ஒரு
சகோதரனாக பேராயர் இல்லத்தில் இருந்த காலம். மட்டுமல்ல எனக்கு பாடல் திறமை உண்டு
என்று கண்டறிந்த ஆயர் இலாறன்ஸ் நான் எப்படி நீளமாக சுவாசித்து பயிற்சி பெற
வேண்டும் என்று கற்றுத்தந்தார். அதன்படி பயிற்சி பெற்று இன்று ஒருவாறு நல்ல
முறையில் பாட முடிகின்றது"
என்று தந்தை வின்சென்ட்
தம் சொந்த அனுபவத்தை பலருடன் பகிர்ந்துகொள்கிறார். இவரே இன்றைய மார்த்தாண்டம்
மறைமாவட்டத்தின் ஆயராக உள்ளார்.
அவ்வாறே சகோதரர்கள் இலக்கிய விழாக்களிலும், வளர்ச்சிக் கூட்டங்களிலும் பங்குபெற ஆயர்
கட்டாயப்படுத்தி வந்தார். அங்கிருந்து கற்றுக் கொண்டவற்றை குருமட வாழ்வுடன்
ஒப்பிட்டு சிந்தித்து எழுதி பைல் பண்ணி வைக்க வற்புறுத்துவார்.
23-8-1983 அன்று மார்த்தாண்டம் பகுதி மக்களுக்கு
ஒருசோகச் செய்தி. அன்றுதான் இப்பகுதியிலே சுமார் 50 ஆண்டு காலம் பணியாற்றிய மோன்சிஞ்ஞோர் ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்கள்
இறையடி சேர்ந்தார்கள். ஆயர் இலாறன்ஸ் செய்தி அறிந்து உடனே விரைந்து வந்தார்கள்.
தந்தை குழிஞ்ஞாலில் இம்மக்களுக்கு ஆற்றிய அருந்தொண்டுகளை மறந்தவர் அல்ல அவர். எனவே
தந்தையவர்களின் இறப்பில் மனம் நொந்து கண்ணீர்விட்ட ஏராளமான மக்களுடன் ஆயர்
அவர்களும் சேர்ந்து கொண்டார். பின்னர் வேளாவேளைகளில் இறந்தோருக்கான
திருச்சடங்கிற்கு தலைமை வகித்தார். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஆலோசனை வழங்கினார்.
இறுதியில் பேராயருடன் அவர் அடக்கச்சடங்குகளை நடத்தி அவர் மக்களுக்கு ஆற்றிய
நற்பணிகளுக்கு மோண்சிஞ்ஞோர் ஜோசப் குழிஞ்ஞாலில் மீதுள்ள தன் நன்றியையும் அவர்மீது
கொண்ட அன்பையும் வெளிப்படுத்தினார்.
1982ல் தமிழ் ஆசிரியையாக நமது தனியார் பள்ளிக்
கூடத்தில் ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த பணியிடம் அரசு அங்கீகாரம்
பெறவில்லை. 1986 வரை இந்த ஆசிரியை பணிபுரிந்தார்.
அவ்வாண்டு இந்த பணியிடம் அரசு அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் பொறுப்பாளர்கள் அந்த
ஆசிரியைக்கு அவ்விடத்தைக் கொடுக்க மறுத்தனர். இன்னொரு ஆசிரியையை அவ்விடத்தில்
நியமிக்கத் தீர்மானித்தனர். இதையறிந்த திரு. செல்லன் மற்றும் சிலர் சேர்ந்து அன்று
துணை ஆயராக இருந்த மார் எஃப்ரேமை நேரில் கண்டு தங்கள் குறையைத் தெரிவித்தனர்.
குறையைக் கேட்டவுடன் அந்த ஆசிரியையின் பங்குதந்தை, தாளாளர் மற்றும் தொடர்புடைய அலுவலர்களை அழைத்து காரணத்தை
விசாரித்தார். அப்போது பங்குத்தந்தை எங்களைப் பார்த்து ''இவர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது'' என்று ஏளனமாகக் கூறினார். உடனே ஆயர், "இவர்கள், பொது நிலையினர். ஒரு பங்கை நடத்திக்கொண்டு செல்பவர்கள்'' என்று திருத்திக் கூறினார். அப்போது அவர்கள்
வெட்கி தலைக் குனிந்தனர். அன்றே ஆயர் எல்லாம் விசாரித்து, பொறுப்பாளர்களுக்கு உண்மை நிலையை உணர்த்தி அந்த ஆசிரியைக்கே
வேலையை கொடுக்கச் செய்தார். எல்லோருக்கும் மிகச் சிறந்த அறிவுரையை அமைதியாக அதே
வேளையில் எளிய முறையில் கூறி அனுப்பி வைத்தார்.
நிலைக்கல் பிரச்சனைகள் உச்சகட்டத்தை
எட்டியிருந்த வேளை. தந்தை பிலிப்போஸ் நடமல மிகவும் அஞ்சி நடுங்கி ஆங்ஙமூழியில்
வாழ்ந்திருந்த வேளை. என்ன நடக்கும்? எப்போது
நடக்கும்? என்றெல்லாம் எவருக்கும் தெரியாமல்
பயந்து இருந்த சூழ்நிலை. அப்போது ஆயர் இலாறன்ஸ் நடமல தந்தையின் பாதுகாப்பில்
மிகவும் அக்கரையுடையவராக இருந்தார். எனவே "தேவையற்ற பிரச்சனைகளில் ஒன்றும் தந்தை
ஈடுபடக்கூடாது. ஒரு சென்று பூமி அல்ல பெரிது. மனித உறவுகள் தான் பெரிது'' என அவரை ஆற்றித் தேற்றிக்கொண்டு வாரத்தில்
இரண்டு கடிதங்கள் வைத்து எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். ஆயர் இலாறன்ஸ், தந்தை நடமலையுடன் தனிப்பட்ட அன்பும்
அக்கரையும் காட்டி வந்தார். ஆயரின் அன்பை பல சூழ்நிலைகளில் தந்தை அனுபவித்தது அறிய
முடிந்தது.
ஆங்ஙமூழியில் SAVE உயர்நிலைப்பள்ளி ஒரு தனி நபருக்கு சொந்தமானது. இதனை
உயர்மறைமாவட்டத்திற்கு வாங்குவதற்காக அன்றைய பேராயரிடம் தந்தை நடமல பேசினார்.
ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. தந்தை நடமல மிகவும் வருத்தப் பட்டார். அவர்
ஆயர் இலாறன்சைக் கண்டு விவரம் சொன்னார். ஆயர் இலாறன்ஸ் கூறினார். ''ஃபாதர், உறுதியாக இருங்கள். அதிகாரி களிலிருந்து கிடைக்கும் பதில் சில
வேளைகளில் நமக்கு முரணானது என்று தோன்றும்போது வருத்தப்பட்டு தளர்ந்துவிடக்
கூடாது. நன்மை என்றால் நமது கருத்திலிருந்து பின்மாறவும் கூடாது. முடிந்தால்
எப்பொழுதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இறைச்சித்தம் என்றால்
நிச்சயமாக நடக்கும். எனவே சற்றும் வருத்தப்பட வேண்டாம்". தந்தையை ஆறுதல் படுத்தினார். ஆயர் சொன்னது போல
காலத்தின் நிறைவில் உயர்மறைமாவட்டம் அப்பள்ளிக்கூடத்தை வாங்கியது.
10. பரந்த மறைபரப்புக் கண்ணோட்டம்
1983-ம் ஆண்டு. நான் புதிதாக நியமனம் பெற்று
நாகர்கோவில் கிறிஸ்டோபுரம் என்று அறியப்பட்டிருந்த இன்றைய கிறிஸ்து விளாகம்
பங்கின் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற நாள். என்னை வரவேற்க அன்று அப்பங்கிலுள்ள
சுமார் 50 நபர்கள் கூடியிருந்தனர். ஆயர்
இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அங்கு பிரசன்னமாயிருந்தார். அந்த மக்களுக்கு என்னை
அறிமுகம் செய்து வைத்துவிட்டு அவர் அம்மக்களுக்கு கூறிய அறிவுரை இன்றும் என் மனக்
கண்முன்னே காட்சியாக தெரிகிறது. ''ஒரு புதிய இளம் தந்தையைப்
பெற்றிருக்கிறீர்கள். தந்தையை உங்கள் சொந்த குடும்ப நபராகக் கருதி பாதுகாத்து, அன்பு செய்து வளரச் செய்ய வேண்டும்'', சாதாரண முறையிலே என்னை அறிமுகம் செய்து வைத்து, அம்மக்கள் என்னை அன்பு செய்ய வழிவகுத்த ஆயரின்
நெருக்கமான அன்பு, பண்பு, பாசம் போகப்போக எனக்கு நன்கு தெரிந்தது.
1989-ஆம் ஆண்டு மேய் மாதம் 30 ஆம் நாள் இப்பங்கிலிருந்து மாற்றமாகி
சென்றபோது ஆயர் கூறிய ஆசிமொழிகளை அப்படியே கடைப்பிடித்த நாகர்கோவில் மக்களை நான்
அன்புடன் பாராட்டினேன். தனி நபர்கள் மீது தனிக் கவனம் செலுத்தி அவர்களை வளரச்
செய்ததற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் அவர் வாழ்வில் உண்டு. அறிவிலும், ஆற்றலிலும், எல்லா பண்புகளிலும் வளர்ந்து திறமையாக சமூகத்தில் செயல்பட ஒவ்வொரு
நபர்களுக்கும் அவர் கொடுத்துவந்த ஊக்கமும், உற்சாகமும் எவராலும் மறக்க முடியாது. பிறர் முன்னால் நம்மை
அறிமுகப்படுத்தி வைத்து பிறரது அங்கீகாரத்தையும் நமக்கு பெற்றுத்தந்து
வளரச்செய்வது அவரது இரத்தத்துடன் ஒன்றிப் போன ஒரு நற்பண்பாக இருந்தது.
ஆடம்பரத்தை அளவுகோலாக வைத்து மனிதனை எடைபோடும்
காலம் இது. ஆனால் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் தன்னுடைய மிக எளிய வாழ்க்கை முறையால்
இதற்கு ஒரு சவாலாக விளங்கினார். ஆடம்பரமாக, அரச பாணியில் முறைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்த
மக்களுக்கு ஆயர் ஒரு ஏமாற்றமாகவேயிருந்தார். பங்கெடுக்கும் கூட்டங்களில் எத்தனை
மக்கள் பங்கெடுத்தனர் என்பதைவிட எத்தகைய மனநிலையோடு பங்கெடுத்தனர் என்பதுதான்
அவருக்கு முக்கியமாக இருந்தது. எனவே பங்குகளில் ஆயரை அழைக்கும் போது
பங்குத்தந்தையருக்கு கவலைப்படுவதற்கு அதிகமாக ஒன்றும் இருக்கவில்லை.
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் பரந்த
தொலை நோக்குடன் கூடிய மறைபரப்புக் கொள்கையை கொண்டிருந்தார். எல்லா மக்களும்
கடவுளின் மக்கள் என்பதை ஏற்று அனைவரையும் அரவணைத்து வாழ்க்கையில்
வாழ்ந்துகாட்டியவர் இவர். 1983
முதல் 1989 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஆயர்
அவர்களின் பணித்தளம் நாகர்கோவில் கிறிஸ்துவிளாகத்தை மையமாக கொண்டு அமைந்தது. அன்று, அதாவது 1978-ஆம் ஆண்டு ஏழை மக்களும், மிக
சாதாரண நிலையினரும் மட்டுமே வாழ்ந்துவந்தனர். இது முழுக்க முழுக்க புறநகர்
பகுதியாகவே இருந்தது. அனேகமாக அத்தனை மக்களும் சாலை ஓரங்களிலும், ஓடை ஓரங்களிலும் , அரசு புறம்போக்கு நிலத்திலும் சிறு குடிசை கட்டி வாழ்ந்து
வந்தனர். சுகாதார வசதியோ மற்றும் குடிநீர் வசதியோ அவ்வளவாக இல்லாத இடம். கூலிவேலை
செய்வோர், சலவைத் தொழில் புரிவோர், நகரில் சென்று சிறு சிறு வியாபாரம் செய்வோர்
ஆகியோர் நிறைந்த பகுதி. அனேகமாக எல்லா சாதியை சார்ந்த மக்களும் வாழ்ந்து வந்தனர்.
இப்பகுதியில் தான் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் தன்னுடைய தனிப்பட்ட கவனத்தை
செலுத்தினார். HOM யூனிட்டுகள் தொடங்கினார். சிறு சுகாதார
நிலையங்கள் அமைத்தார். வெகுவாக மக்களிடையே காணப்பட்ட தொழுநோய் போன்ற பரவும்
வியாதிகளைக் கண்டறிந்து சிகிட்சை பெற மக்களுக்கு வழிவகுத்தார். மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட உடல் நல அலுவலர் போன்ற பல்வேறு
அதிகாரிகளை அழைத்து வந்தார். அவர்களுடன் கூட்டங்கள் நடத்தி மேம்பாட்டுப் பணிகளை
துரிதப்படுத்தினார்.
நல்ல உடல் நலனுடன் வாழ வாய்ப்புக்கள் உண்டு
பண்ணினார். பொங்கல், தீபாவளி, சுதந்திரதினம்,
குடியரசு தினம் போன்ற
விழாக்கள் தகுந்த முறையில் அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி நடத்துவதில் தனிக்
கவனம் செலுத்தினார். இவ்வாறு சமூக ஒருமைப்பாடும், ஒற்றுமையும்,
அன்பும், நட்பும் உடையவர்களாக இவ்வூர் மக்கள்
திகழ்ந்தனர். இது இம் மக்களுடைய பொற்காலமாக இருந்தது. பல மதங்கள், பல வகுப்பினர், பலதரப்பட்ட கல்வி நிலையினர், வேறுபட்ட பொருளாதார நிலையில் உள்ளோர், பலவகை அன்றாட் பணிகள் செய்வோர் அத்தனை பேரும் வேற்றுமையில்
ஒற்றுமை கண்டு ஒரே கடவுளின் மக்களாக வாழ்ந்தனர். இத்தகைய ஒரு சீரிய மறைபரப்புக்
கண்ணோட்டத்தை ஆயர் கொண்டிருந்தார்.
'கடவுளை அறிவிப்பதற்கு பணம் அல்ல, அன்புதான் தேவை'' என்று அடிக்கடி கூறி வந்தார். ''அன்பும் ஆர்வமும் உள்ள இடத்தில் தேவையான பணம் தானே வரும்'' என்று அவர் நம்பி பிறருக்கும் கற்பித்தார்.
இயேசு எல்லா மக்களையும் அன்பு செய்தார். இருப்பினும் ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர்
என்று சொல்லி எளியவரிடம் அதிக அன்பு காட்டினார். பாவிகள், வரிதண்டுவோர்,
பெண்கள், பிள்ளைகள், பொருளாதாரத்தில் பின் தங்கியோர் எல்லாம் இயேசுவின் இந்த ஏழைகளில்
அடங்குவர். இவ்வாறாக ஆயர் இலாறன்ஸ் அவர்களின் கவனம் ஓடை ஓரங்களிலும், குளக்கரைகளிலும், பழங்கிராமங்களிலும், போதிய
வீடோ, வசதியோ இன்றி வாடும் மக்களிடம்
சென்றது. அவர்கள் மத்தியில் அன்றாட வாழ்வின் வேதனைகளோடு, ஏக்கங்களோடு,
பரிமிதிகளோடு ஆண்டவரை
வழிபட சிறு சிறு செபக்குடிசைகள் ஆரம்பித்தார். இதன் வளர்ந்த நிலையே இன்று
செட்டிக்குளம், தேனிக்குளம், மந்தாரம்புதூர்,
குமாரபுரம் போன்ற
இடங்களில் இருக்கும் மலங்கரை கத்தோலிக்க ஆலயங்கள். இவை 1981 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம்
ஆண்டுக்குட்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்டவை.
ஆலயத்தில் போதிய வசதி இல்லையே, ஆலயம் அழகாக இல்லையே, பெரிதாக இல்லையே என்பதை ஒரு குறையாகக் கருதும் மக்களுக்கு
இயேசுவின் பிறந்த சூழலைப் பற்றி எடுத்துக் கூறுவார். ''ஏழையாய்ப் பிறந்து, ஏழையாய்
வாழ்ந்த இயேசுவை, ஏழைகளுக்கு இயன்ற முறையில் வழிபாட்டு
இடம் அமைத்து வழிபட்டால் போதும்''
என்று கூறுவார். மழை மிக
குறுகிய காலம் மட்டும் பெய்கின்ற இந்த குமரி மாவட்டத்தில் ஆண்டின் முக்கால்
பகுதிக்கும் மேற்பட்ட மாதங்கள் வேனில் காலம். எனவே சாதாரண ஓலை ஷெட்டுகள் வழிபட
போதுமானவை என்று வலியுறுத்தினார்.
1982-ஆம் ஆண்டு மண்டைக்காடு என்ற இடத்தில் 9 கிறிஸ்தவர்கள் போலீசாரின் துப்பாக்கிச்
சூட்டில் கொல்லப்பட்டனர். குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ - இந்து கலவரம் மூண்டது.
ஆங்காங்கே தாக்குதல்கள் நடைபெற்றன. நாட்டு வெடிகுண்டுகளால் வழிபாட்டு இடங்களும்
மற்றும் நிறுவனங்களும் சேதப்படுத்தப்பட்டன. மதத்தின் அடிப்படையில் மக்களிடையே
வெறுப்புணர்வும், சந்தேகங்களும் வளர்ந்தன. அமைதியை
நிலைநாட்ட பல்வேறு மதத்தலைவர்களும், அரசு
அதிகாரிகளும் சேர்ந்து பல அமைதிக் கூட்டங்கள் நடத்தினர். அரசு வேணுகோபால் கமிஷன்
நியமித்தது. அதன் பரிந்துரையின் பேரில் குமரி மாவட்டத்தில் ஆட்சியர்
பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து சட்டம் ஒன்றை ஏற்றினார். அரசு அனுமதியின்றி
வழிபாட்டு இடங்கள் அமைக்கக்கூடாது என்பதே அது. இது மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு பெரும் பாதிப்பை
ஏற்படுத்தியது. பழைய ஆலயங்கள் கூட புதுப்பிக்க அனுமதி எளிதாக கிடைக்காத நிலை
ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கு பாதுகாத்தல் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட இந்த சட்டம்
கிறிஸ்தவர்களுக்கே பெரும் பாதிப்பாக, சிரமமாக
வந்து சேர்ந்தது. இக்காலகட்டத்தில் கிறிஸ்தவ மறைப்பணி பெருமளவில் தடைபட்டது
எனலாம். மதத் தீவிரவாத சக்திகள் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி
கிறிஸ்தவ மறைக்கு தடைகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தன. ஒற்றுமைக்கும், ஒருமைப் பாட்டிற்கும், ஒரு காலத்தில் பெயர் பெற்ற குமரி மாவட்டம் இவ்வாறு அமைதியற்ற ஒரு
சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
இக்காலகட்டத்தில்தான் நம் ஆயருடைய மறைபரப்புப்
பணி வாழ்வில் பெரிய வேதனை தரக்கூடிய அந்த நிகழ்ச்சி நடந்தது. 1990 ஆம் ஆண்டு இன்றைய கிறிஸ்து விளாகம்
ஆலயத்திலிருந்து சுமார் 15
மீட்டர் தொலைவில் சாலை
அருகிலுள்ள குடிநீர் குழாய் பக்கத்தில் கணபதி சிலை ஒன்று அமைக்கப்பட்டது. அரசு
உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட தொலைவில் தான் பிற மத வழிபாட்டுத் தளங்கள் வைக்க
முடியும். எனவே இம்மாவட்டத்தில் நடைமுறையில் இருந்த சட்ட மீறலை அதிகாரிகளின்
கவனத்திற்கு சிலர் கொண்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இந்து சகோதரர் சிலரின்
உயர்மட்ட சுவாதீனத்தினால் அரசு சுமார் 12 ஆண்டுகளுக்கு
மேல் வழிபாட்டு இடமாக பயன்படுத்தப்பட்டிருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் வழிபாடு நடத்த
தடை விதித்தனர். அன்று இங்கு பங்குத்தந்தையாக இருந்த தந்தை செலஸ்டீன் அடிகளாரை 13-5-1990 அன்று காவல் துறையினர் திருப்பலியின்போது
வந்து தாக்க முயற்சித்தனர். மீண்டும் 20-5-90 அன்று
தடை விதித்து காவல் துறை அலுவலகத்தில் வரவழைத்து இனிமேல் வழிபாடு நடத்த மாட்டேன்
என்று எழுதி கையொப்பமிட வைத்தனர். தந்தை செலஸ்டீன் தன் துணிவான முயற்சியால், பக்குவமாக அந்த சூழ்நிலையை சரி செய்ய
முயன்றார். அதற்காக அவர் மிகவும் தியாகம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. 28-5-90 அன்று இவ்வாலயத்தில் வைத்து நடப்பதாக
அறிவிக்கப்பட்டிருந்த திருமணம் கூட இங்கு நடைபெற விடாமல் தடுத்து அருகிலுள்ள
இலத்தீன் ஆலயத்தில் வைத்து நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் வழிபாடு நடத்திவரும் இடம்
அண்மையில் தோன்றியது எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது. எனவே உடனே ஆலயத்தை
அப்புறப்படுத்த வேண்டும் என்று கோட்டாட்சியாளரிடமிருந்து (R.D.O.) நோட்டீஸ் வந்தது. இவ்வாலயத்தின் ஞானஸ்நான
பதிவேட்டையும் எடுத்து நான் கோட்டாட்சியாளர் (R.D.O) அலுவலகம் சென்றேன். 1978 ஆம் ஆண்டு முதல் மக்கள் ஞானஸ்நானம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி
விளக்கினேன். ஆனால் அவை ஒன்றும் பலனளிக்கவில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க இவ்வூர் மக்களிடையே
பெரும் பீதியும், வெறுப்புணர்வும், பகைமையும் வளரக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
ஆரம்ப காலம் முதல் நிலவி வந்த அமைதியான சூழ்நிலைக்கு பெரும் ஊறு விளைவதைப்
பார்த்து ஆயர் இலாறன்ஸ் அவர்கள் மிக அதிகமாக வேதனைப்பட்டார்கள். அவர் அதிகமாக
அன்பு செய்து, கவனம் செலுத்திய இந்தப் பகுதியில்
குழப்பமான ஒரு சூழ்நிலை ஏற்படுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே அவர்
பல நல்ல நபர்களை கலந்து ஆலோசித்து அரசு அதிகாரிகளைக் கண்டு இக்கட்டான இச்
சூழ்நிலைக்கு ஒரு முடிவு காண விழைந்தார். நானும் ஆயர் அவர்களும் சென்று அன்றைய
ஆட்சித் தலைவர் அவர்களைக் கண்டு விண்ணப்பம் கொடுத்து நிலைமையை விளக்கிக் கூறினோம்.
அன்றைய காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களையும் வீட்டில் சென்று நேரில் பார்த்து
பேசி விளக்கினோம். ஆனால் பலன் ஏற்படவில்லை. அடுத்த ஞாயிறு அதாவது 27-5-90 அன்று வழிபாடு நடத்தக்கூடாது என்று தடை
விதித்தனர். பங்குத்தந்தை செலஸ்டின் அடிகளார் திருப்பலி அந்த ஆலயத்தில்
நிறைவேற்றமாட்டேன் என்று காவல்துறையினருக்கு எழுதிக் கொடுத்திருந்தபடியால், திருப்பலி நிறைவேற்றும் நோக்கில் நான் முந்தைய
நாளிலேயே நாகர்கோவில் பங்கு மேடையில் தயாராக இருந்தேன். என்ன செய்வது? ஞாயிறு அதிகாலை 4 மணிக்கே ஏராளமான காவலர்கள் ஆலயத்தைச் சுற்றி வளைத்து காவல்
காத்தனர். எவரையும் நுழையவிடாது வழிகளை அடைத்து நின்றனர். எங்கும் ஒரே பரபரப்பு.
சாலை அருகில் உள்ள ஆலயத்தில் நுழைந்து வழக்கம்போல் மணி அடிக்கச் சொன்னேன்.
உபதேசியார் திரு. டோமினிக் அவர்கள் மணி அடித்தார்கள். ஆனால் முடிப்பதற்குள்
காவலர்கள் வந்து அதட்டி,
மணி அடிப்பதை நிறுத்தி
அனைவரையும் விரட்டிவிட்டனர். எனக்கு தகவல் கிடைத்தது. மீண்டும் ஒரே குழப்பம்.
எப்படி நிலைமையை சரி செய்வது?
நம் ஆலயத்தில் நம்
வழிபாடு நடத்துவது நமது உரிமை. உரிமையை இழக்க விரும்பவில்லை. ஒருசில நபருடன், திருப்பலிக்கு நேரம் ஆனதும் நான் ஆலயத்தை
நோக்கி சென்றேன். சாலையிலிருந்து திரும்பிச் செல்லும் வழியில் காவல் துறையினர்
என்னை தடுத்து நிறுத்தினர்,
அச்சுறுத்தினர். சற்று
நேரம் வாக்கு வாதம் நடந்தது. காவலர்கள் தகாத வார்த்தை பேசி இழிவாக சத்தமிடத்
தொடங்கினர். நிலைமை சரியில்லை என உணர்ந்து நான் திரும்பி எங்கள் பங்கு இல்லத்தில்
வந்தேன். அவ்வாறு 13 ஆண்டுகளாக நிறைவேற்றி வந்த திருப்பலி
நிறுத்தப்பட்டது. அனைவரும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கி செய்வதறியாது திகைத்து
நின்றனர்.
இந்நிகழ்ச்சிகளை எல்லாம் உடனுக்குடன் ஆயர்
இலாறன்ஸ் அவர்கள் அறிந்துகொண்டே இருந்தார்கள். அவரது துயரத்தையும் வேதனையையும்
விவரிக்க முடியாது. இறைவனை செபித்து திடமான தீர்மானத்தை எடுத்தார். இறைவன்
வழிகாட்டுவார் என உறுதியாக நம்பி இறைபராமரிப்புக்கு தன்னை விட்டுக் கொடுத்தார்.
தன் அறிவையும், அனுபவத்தையும் எல்லாம்
பயன்படுத்தினார். இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. கோவிலைச் சுற்றி போலீசார்
லத்தி கம்புடன் இரவு பகலாக காவல் காத்து நின்றனர். அப்போதுதான் 30-5-1990 அன்று ஆயர் இலாறன்ஸ் தன் காரில் அந்த சாலை
வழியாக பங்கு இல்லத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். வழியில் ஆலயம் செல்லும் ஓடைப்
பகுதியில் காரை நிறத்தச் சொல்லி கீழே இறங்கினார். விரைவாக ஆலயத்தை நோக்கி
நடந்தார். நல்ல வேளை அப்போது காவல் காத்த காவலரை அங்கு காணவில்லை. விரைவாக
ஆலயத்தின் உள்ளே சென்றார். அங்கு அமர்ந்து செபித்தார். அப்போது நானும், நம் பங்கு மக்களாகிய திரு. வற்கீஸ், அவரது மனவிை திருமதி. மரிய ஏஞ்சல், அவர்கள் மகன் ஜாண்பால் ஆகியோர் அங்கு
சென்றோம். ஆயர் உறுதியாகச் சொன்னார். நான் இங்கு தாமசிக்கப் போகிறேன். இது என்
ஆலயம். எனவே அத்தியாவசியத் தேவைக்காக அத்தோடு சேர்ந்து ஒரு சிறு அறை ஓலையால்
வளைத்து வைக்க வேண்டும். உடனே செய்யுங்கள்''. கட்டளையை ஏற்று நாங்கள் பங்கு மேடைக்கு, ஷெட்டுக்கு தேவையான பொருட்கள் எடுக்கச் சென்றோம். கூட சிறுவன்
ஜாண்பால் இருந்தான். சுமார் பதினைந்து இருபது நிமிடங்கள்தான் இருக்கும். அதற்குள்
சிறுவன் ஜாண்பால் அலறிய அழுகுரல் கேட்டு திரு. வற்கீஸ் ஓடிச் சென்றார். சென்று
பார்த்தபோது அங்கு கண்ட காட்சி நெஞ்சை பிளப்பதாக இருந்தது. காவல் காத்துவந்த
காவலர்கள் வந்தபோது ஆயர் உள்ளே இருப்பதைக் கண்டனர். அவரை வெளியேறக் கூறினர். ஆயரோ
இது என் சொந்த பூமி, என் ஆலயம், நான்தான் இதன் உரிமையாளர். பின் ஏன் நான் வெளியேற வேண்டும் என்று
அடிப்படை உரிமையை எடுத்துக் கூறினார். காவலர்கள் விடவில்லை. கையிலிருந்த லத்திக்
கம்பால் அவரை அடித்தனர். ஆயர் தடுக்க முயன்றார். பிடித்து அவரை வெளியே தள்ளினர்.
அவர் பனைமரத்தால் நாட்டப்பட்டிருந்த கட்டளையில் சென்று விழுந்தார். அதன் கூர்மையான
ஆல் அவரது கைப்பத்தியில் குத்திக் கிழித்தது. இரத்தம் கசிந்தது. இதற்குள் நாங்கள்
சம்பவ இடத்திற்கு சென்றுவிட்டோம். பிள்ளைகளும், பெரியோர்களும்,
பெண்களும் ஒன்றுகூடினர்.
காவலர்கள் திகைத்து நின்றனர். உடனடியாக என் நண்பரான Rev. சாம்ஜி அவர்களுக்கு போன் பண்ணினோம். அவர் அங்கிருந்தே போலீஸ் உயர்
அதிகாரிகளுக்கும், கோட்டாறு ஆயர் இல்லத்திற்கும் போன்
பண்ணி செய்தியை அறிவித்தார். சில நிமிடங்களில் ஆலயத்தைச் சுற்றி மக்கள் கூடினர்.
போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர். கோட்டாறு மறைமாவட்டத்தின் அன்றைய
குருகுல முதல்வராக இருந்த தந்தை பவுல் லியோன் அவர்களும், அருட்திரு சாம்ஜி அவர்களும் வந்து சேர்ந்தனர். இப்பெரும்
பிரச்சனையின் ஆழத்தை திறம்பட அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தனர். பிரச்சனையின் கௌரவம்
புரிந்து கொண்ட அதிகாரிகள் சமரசம் பேசத்தொடங்கினர். “மன்னிக்கவும். அடித்த காவலரை உடனே 'சஸ்பென்ட்'
பண்ணி விடுகிறோம்.
நீங்கள் சம்மதம் என்று ஒரு வார்த்தை கூறுங்கள் ' என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர். ''எவரையும் தண்டிப்பது என் நோக்கமல்ல. இது எங்கள் ஆலயம், சொந்த ஆலயம். இங்கு நாங்கள் வழிபடுவது எங்கள்
அடிப்படை உரிமை. இதற்குரிய தடையை நீக்க வேண்டும். இதுவே எனக்குப் போதும்''. ஆயரின் அமைதியான, அதே வேளையில் திடமான குரல் பலனளித்தது. உடனே இருதரப்பு
மக்களிடமிருந்தும் பிரதிநிதிகள் அலுவல கத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தை முடிந்தது. அதன்படி சாலை அருகில் உள்ள ஆலயம், பங்கு மேடை, வயலருகில் இருக்கும் ஆலயம் ஆகியவற்றில் இனி வழிபாடு நடத்தலாம் என
தீர்மானமாயிற்று. அவ்வாறே இந்து சகோதரர்களுக்கும் வழிபாடு நடத்த இடம்
ஒதுக்கப்பட்டது. பிரச்சனை சுமுகமாக முடிந்தது. இவ்வாறு அடிபட்டு இரத்தம் சிந்தி
வழிபாட்டு இடத்தை உறுதி செய்த ஆயர் இலாறன்ஸ் அவர்களின் தியாகத்தின் விளைவாக, இன்று அதே இடத்தில் சுமாரான வசதியுடன் ஒரு
ஆலயம் அமைந்துள்ளது. திருப்பலி ஞாயிறுதோறும் தவறாமல் அன்று முதல் நடந்து வருகிறது.
இன்று இப்பகுதி மக்கள் எல்லாம் மீண்டும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
மறைபரப்புப்பணியில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வம், துணிவு,
தெளிவு ஆகியவற்றை விளக்க
இந்நிகழ்ச்சி ஒன்றே போதுமானதன்றோ! தன் வாழ்க்கையின் ஒவ்வொரு மூச்சும் நற்செய்தி
அறிவிப்பதற்காக இறைவனின் அன்பையும், அருளையும்
பிறருக்கு அறிவிப்பதற்காக ஆயர் செலவிட்டார். அதிலே அவர் இன்பம் கொண்டார் என்பது
மறுக்க முடியாத உண்மையாகும்.
அன்று ஒரு நாள் கன்னியாகுமரி சாந்தோம் பல் சமய
உரையாடல் அரங்கில் வைத்து சமூக வளர்ச்சி பற்றிய கருத்தரங்கு
நடைபெற்றுக்கொண்டிருந்தது. கூட்டத்தில் தென்னிந்திய திருஅவை குமரிப் பேராயத்தின்
முன்னாள் பேராயர் செல்வமணி,
தந்தை ஆல்பர்ட்
நம்பியாபறம்பில் C.M.I.,
அருட்திரு. சாம்ஜி, பேராசிரியர் தினகர்லால்... மற்றும் பலர்
கலந்துகொண்டனர். நம் ஆயரை அறிமுகம் செய்து வைத்து வரவேற்புரை கூறிய நண்பர் "இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர்'' என்று புகழ்ந்து கூறினார். ஆனால் ஆயர்
இலாறன்ஸ் அவர்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்த போது முதலில் அறிமுகம் செய்து வைத்தவர்
கூறியதைத் திருத்திக் கூறினார். ''நான் ஒரு சமூக சேவையாளன் என்பது
உண்மைதான். ஆனால் அதைவிட அதிகமாக நான் ஒரு கத்தோலிக்க குருவானவர். ஒரு சமூக
சேவையாளர் என்பதைவிட மிகமிக அதிகமாக ஒரு கத்தோலிக்க குரு என்பதில்தான் நான்
பெருமைப்படுகிறேன். அந்த பெயராலேயே அழைக்கப்படுவதை நான் அதிகம் விரும்புகிறேன்'' என்று திருத்திக் கூறினார். அனைவரும் அவரது
ஆழமான கடவுள் பற்றையும் இறைவனைப் பிறருக்கு அறிவிக்கும் ஆர்வத்தையும் ஓரளவு
புரிந்து கொண்டார்கள்.
அன்று பூனாவில் இருந்த மலங்கரை
கத்தோலிக்கர்களில் திரு. தோமஸ்குட்டி பனச்சிக்கலும் ஒருவர். கேரள கத்தோலிக்கருடன்
இணைந்து மலங்கரை கத்தோலிக்கர் எண்ணிக்கையில் குறை வாயிருந்தபோதும்கூட 'கேரள கத்தோலிக்க சங்கம்' என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருந்தனர்.
திருஅவை பணிகளை இவர்கள் இயன்ற அளவு செய்து கொண்டிருந்தனர். வழக்கமாக மலையாளத்தில்
திருப்பலியும் நடந்துகொண்டிருந்தது. இவ்வா றிருக்க 1982 ஆம் ஆண்டு மார் எஃப்ரேம் ஆயர் ஒரு கருத்தரங்கில் பங்குபெற
பூனாவில் இருக்கும் பெதனி துறவற இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். இச்செய்தி
இங்குள்ள மலங்கரை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. பூனா இரயில்
நிலையத்திற்கு சமீபமுள்ள அம் மறைமாவட்டத்தைச் சார்ந்த சாகாயமாதா கோயிலில் ஆயரின்
தலைமையில் திருப்பலி நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயர் இலாறன்ஸ் மார்
எஃப்ரேம் அவர்களிடம் இச்செய்தி அறிவிக்கப்பட்டது. ''எல்லோரும் ஆவலுடன் தாங்கள் திருப்பலி நிறைவேற்றுவதை எதிர்
பார்த்திருக்கின்றனர்''
என்று கூறினார்கள். ஆயர்
பதில் கூறினார். ''என்னைப் பேராயர் கருத்தரங்கில்
பங்குபெற அனுப்பி வைத்தாரே தவிர இங்கு திருப்பலி நிறைவேற்ற அனுமதி அளிக்க வில்லை.
எனவே பேராயரின் அனுமதியின்றி நான் ஒன்றும் செய்யமாட்டேன்'' என்றார். அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்தது. அவர்கள்
வேதனைப்படுவதை அறிந்த ஆயர் அன்று இரவே பேராயரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு
திருப்பலி நிறைவேற்ற அனுமதி பெற்றார். மட்டுமல்ல, தொடர்ந்து வாரந்தோறும் திருப்பலி நிறைவேற்ற ஒரு தந்தையையும்
ஏற்பாடு செய்யச் சொன்னார். இவைகளிலிருந்து அதிகாரிகளுக்கு எவ்வளவு கீழ்ப்படிந்து
செயல்பட்டார் என்பது பூனாவிலுள்ள மலங்கரை மக்கள் நன்கு புரிந்துகொண்டார்கள்.
சுகாதாரத் துறையில் மிக அதிகமாக தன் முத்திரை
பதித்து வந்த தந்தை இலாறன்சிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இத்துறையில்
மிக உயர்ந்த நிலையை ஆயர் எட்டுவார் என அவரோடு பணிபுரிந்த நபர்கள் நம்பினார்கள். 1980 டிசம்பர் திங்கள் 28 ஆம் நாள் தந்தை இலாறன்ஸ் ஆயராக அபிஷேகம் செய்யப்பட்ட மறுநாள் VHAI-யினர் அவரை பாராட்ட ஒன்றுகூடினர். அதில்
ஒருவர் சற்று ஏமாற்ற உணர்வுடன் கூறினார், "Health and Development என்ற துறையில் அதி உன்னத நபராக உயர்ந்துவர
வேண்டிய ஒருவரை கட்டிப்போட்டுவிட்டனர். இருப்பினும் வெற்றி பெற எல்லா வாழ்த்துக்களும்
தெரிவித்துக் கொள்கிறேன்''
எனக் கூறினார்.
1980-ம் ஆண்டு மே மாதம் அருட்சகோதரி நிர்லீனா
நாகர்கோவில் மடத்தில் வந்து சேர்ந்தார்கள். ஒரு மாதத்திற்குள் அப்பகுதியிலுள்ள 82 நபர்களுக்கு தொழுநோய் பல்வேறு நிலைகளில்
இருப்பதை கண்டுபிடித்தார்கள். செய்தி அறிந்த தந்தை இலாறன்ஸ்
திருவனந்தபுரத்திலிருந்து அருட். சகோதரிகளை கூட்டி வந்தார். உடனே ஒரு திட்டம்
தயாரிக்க வேண்டும். திருவனந்தபுரத்திலுள்ள சகோதரிகளே அதை கவனிப்பார்கள் எனக்
கூறினார். இதை மேற்கூறிய சகோதரிக்கு அங்கீகரிக்க முடிய வில்லை. தந்தை இலாறன்ஸ்
இதைப் புரிந்துகொண்டு ஆலயத்தில் நுழைந்து செபித்தார். பின் ஓய்வு எடுத்தார்.
அருட்சகோதரியும் கோயிலில் நுழைந்து 20 நிமிடங்கள்
செபித்தார். வெளியே வந்த போது தந்தை இலாறன்ஸ் நிற்கின்றார். அவர் கண்களில் அன்பும்
அக்கரையும் பளிச்சிட்டது.
"தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க
இதயம் நிறைய அன்பும் அரசு இலவசமாக கொடுக்கும் மருந்தும் எனக்கு ஏராளம் உள்ளது.
அதற்கு திட்டமும், பணமும் தேவையில்லை. இந்த நல்ல பணியை
மிகவும் தனிப்பட்ட முறையில் செய்ய எனக்கு இயல வேண்டும். இது சிரமமானதால் திருவனந்த
புரத்திலுள்ள St.
John's மருத்துவமனையிலிருந்து
யாரையாவது இங்கு வரவழைத்துவிட்டு என்னை நாலாஞ்சிறைக்கு மாற்ற வேண்டும்'' என்று அருட்சகோதரி கூறினார்கள். ''வேண்டாம், சகோதரி செய்தால் போதும். வேறு எவரும் இதற்கிடையில் வரமாட்டார்கள்.
இது நான் விரும்புவது. சகோதரியால்தான் நல்ல படியாக செய்ய முடியும்''. அவர் பதில் கூறினார். அவர்களது தனித்தன்மையை 100% அங்கீகரித்து தொழுநோயாளிகளின் வளர்ச்சியில்
உதவினார்.
11. மார்த்தாண்டத்தில் ஆயர்
1983ம் ஆண்டு ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
அவர்களின் இருப்பிடம் திருவனந்தபுரம் பேராயர் இல்லத்திலிருந்து
மார்த்தாண்டத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டு இறுதியில் ஆயராக உயர்த்தப்பட்டாலும் மக்களின்
எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நடைமுறையில் ஏதும் செய்ய முடியாதவராக இருந்து வந்தார்.
இந்நிலையில் தங்களுக்கு என தனியாக மறைமாவட்டம் உருவாகி ஆயர் இலாறன்ஸ் அவர்கள் அதன்
தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற ஆவல் தமிழக மக்களிடமிருந்து உரத்தக் குரலில்
ஒலித்தது. மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது போன்ற தோற்றத்தைக் கொடுத்துக்
கொண்டு, ஆயர் அவர்களை மார்த்தாண்டம்
கிறிஸ்துராஜபுரம் பங்கு மேடையின் மேல்பகுதியில் சிறு வசதிகளைச் செய்து கொடுத்து
அங்கே தங்கிப் பணிபுரிய பேராயர் கட்டளையிட்டார். ஆயர் மீது அதிகமாக அன்பு
கொண்டிருந்த மக்கள் அவரை ஆடம்பரமின்றி இரகசியமாக வர அனுமதிக்கவில்லை. பெரியதொரு
வரவேற்பை மீண்டும் கொடுக்க ஏற்பாடு செய்தனர். கேரள தமிழக எல்லையாகிய
களியக்காவிளையில் ஏராளமான கார்களுடன் தலைவர்களும், பெரியவர்களும் ஏராளமாக கூடி வரவேற்றனர். மாலை அணிவித்தும்
பொன்னாடை போர்த்தியும் ஆயரை வரவேற்றவர்களில் இந்து, முஸ்லீம் மற்றும் இலத்தீன் கத்தோலிக்கத் தலைவர்களும் அடங்குவர்.
''ஜெய் ஜெய்! மார் எஃப்ரேம்'' என்ற வாழ்த்தொலிகள் விண்ணைப்பிளந்தன. ஆயர்
அவர்கள் மார்த்தாண்டம் சந்திப்பை அடைந்ததும் ஆயிரக் கணக்கான பெரியவர்களும், இளைஞர்களும், பெண்களும்,
பிள்ளைகளும், அணிதிரண்டு நின்றனர். அலங்கரிக்கப்பட்ட இரதம்
ஒன்று தயாராக இருந்தது. அதில் ஆடம்பர இருக்கை ஒன்றும், மற்றும் சில இருக்கைகளும் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன.
சந்திப்பில் காரில் வந்து இறங்கிய ஆயரை ரதத்தில் ஏற்றினர். கூடவே சிலரும் ஏறினர்.
மக்களின் எதிர்பார்ப்பும்,
பெரும் மகிழ்ச்சியும்
மடைதிறந்த வெள்ளம் போல ''ஜெய் ஜெய்! மார் எஃப்ரேம்! ஜெய் ஜெய்!
மார் எஃப்ரேம்! என்ற வாழ்த்தொலிகளால் முழங்கின. மக்களின் இந்த மகிழ்ச்சிக்கும்
எதிர்பார்ப்பிற்கும் மாறுபட்ட மனநிலையுடன் ஆயர் காணப்பட்டார். தன்னில்
வைத்திருக்கும் நம்பிக்கைக்கேற்ப செயல்படக்கூடிய ஒரு தலைமைப் பொறுப்பில் நான்
இல்லையே என்ற வேதனையோடு காணப்பட்ட அவர் அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் அமராமல், நின்று கொண்டே கையிலிருந்த சிலுவையால் மக்களை
ஆசீர்வதித்தவண்ணம் இருந்தார். அவருடைய மனதில் படர்ந்திருந்த இந்த சோகத்தின்
இரகசியம் போகப் போகத்தான் மக்களுக்கு தெரிந்தது. ஏனென்றால் முழு அதிகாரத்துடன்
குமரி மலங்கரை கத்தோலிக்கர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய ஆயர் இலாறன்ஸ் மார்
எஃப்ரேம் அவர்கள் மார்த்தாண்டத்தில் தங்குகிறார் என்று பத்திரிக்கைகளில் செய்தி
வந்திருந்தாலும், இவை எல்லாம் பத்திரிகையோடு
நின்றுவிட்டதே அன்றி நடைமுறையில் ஒன்றும் நடத்த முடியாதவராக ஆக்கப்பட்டிருந்தார். 1983-ஆம் ஆண்டு முதல் தன் இறப்பு வரை அவர்
மார்த்தாண்டத்திலேயே நிரந்தரமாக தங்கியிருந்தார். அப்போது அவருக்கென செயலராக
தந்தையர் எவரும் இருக்கவில்லை. வாரத்தின் எல்லா புதன்கிழமைகளிலும் அவர்
திருவனந்தபுரம் பேராயர் இல்லத்தில் சென்று பேராயருக்கு உதவியாயிருப்பார். திருமண
திருச்சடங்குகளுக்கு தலைமை வகிப்பது, திருமண
குழப்பங்களை தீர்ப்பது போன்ற உரிமைகள் மட்டுமே அவரிடம் இருந்தது. ஆசிரியர்களை
நியமனம் செய்வது, வளர்ச்சிப் பணிகள் அல்லது கட்டுமானமான
பணிகள் போன்றவை எல்லாம்,
பேராயரின் நேரடிப்
பொறுப்பில் சில தந்தையர்களின் உதவியோடுதான் நடந்து கொண்டிருந்தது. ஆயர் என்ற
பெயரைக் கேட்டு நம்பிக்கையுடனும்,
எதிர்பார்ப்புடனும்
அத்தியாவசிய தேவைகளுக்காக ஆயரை அணுகி வந்த சாதாரண மக்களுக்கு ஏதும் செய்ய
முடியாதவராகவே அனேக காலம் இருந்தார். தன்னைத் தேடி வந்தவர்களிடம் ''பால் வற்றிப்போன பசு'' என்றும்
"சக்கை நீக்கி
பிலாவு பாட்டம் கொடுத்திருக்கின்ற நிலைதான் எனக்கு'' என்றும் தம் இயலா நிலையை பலமுறை எடுத்துக் கூறியதுண்டு.
இருப்பினும் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை. இவ்வேளை ஓரளவுக்காவது அவருக்கு
கைகொடுத்தது HOM திட்ட செயல்பாடுகளே. இவ்வாறு இயன்றதை
செய்து, கடவுளில் ஆழமாக நம்பிக்கை வைத்து மிகுந்த
எதிர்பார்ப்புடன்தான் வாழ்ந்து வந்தார்.
இக்காலகட்டத்தில் நம் ஆயருக்கு பலவகையான
நெருக்கடிகள் வந்ததுண்டு. ஒரு ஆயராகவே இங்கு வாழ்ந்த பின்னரும் தீர்மானங்கள்
எடுப்பதில் அவருக்குரிய உரிமைகள் அவருக்கு கொடுக்கப்படாத காரணத்தால்
அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே இருதலைக் கொள்ளி எறும்பு போல வேதனைப்பட்டு
திகைத்த நிகழ்ச்சிகள் பல உண்டு. இதனால் சில வேளைகளில் தந்தையர்களிடமிருந்துகூட
மிகுந்த மன வேதனை அனுபவிக்க வேண்டியிருந்தது.
1986-ஆம் ஆண்டு மலங்கரை சிறியன் கத்தோலிக்க
பள்ளிக்கூடங்களில் பணிபுரிந்துவந்த 30-க்கும்
மேற்பட்ட ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம் கொடுக்கப்பட்டது. அன்று தாளாளராகவும், பங்குத்தந்தையாகவும் இருந்த தந்தை வர்க்கீஸ்
மாவேலில் இந்த இடமாற்றத்தை மற்ற சில தந்தையரின் தூண்டுதலில் மற்றும் பரிந்துரையின்
பேரில் செய்தார். ஒழுங்கு நடவடிக்கை என்ற போர்வையில் செய்யப்பட்ட இந்த
இடமாற்றத்தில் பெரும்பாலானோர் குறிப்பிடத்தக்க எந்த தவறும் செய்யாதவர்கள்.
வழக்கத்திற்கு மாறாக நடைபெற்ற பெருமளவிலான இந்த இடமாற்றம் ஆசிரியர்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும் பெரும் எதிர்ப்பை
தோற்றுவித்தது. இத்தனைக்கும் இதன் வேடிக்கை என்னவென்றால் மார்த்தாண்டத்திலேயே
தங்கியிருந்த ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களின் சரியான அறிவிற்கோ அல்லது
அனுமதிக்கோ இந்த இடமாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகள் பலர் இது
பற்றி தந்தை மாவேலியிடமும்,
பேராயரிடமும் பேசிப்
பார்த்தனர். இவ்வாறு ஒரு சுமுகமான முடிவுக்கு வருவதற்காக இடைநிலை வகித்தவர்களில் இப்பகுதியிலுள்ள
பெரியவர்கள் பலர் அடங்குவர். ஆயர் இலாறன்சும் தன்னால் இயன்றவரை இப்பிரச்சனைக்கு
தீர்வு காண முயன்றார். ஆனால் இம்முயற்சிகள் ஒன்றும் பலனளிக்கவில்லை. ஆசிரியர்களும்
பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மார்த்தாண்டம் பங்கின் தாளாளர்
அலுவலகத்தின் முன் சத்தியாகிரகம் இருந்து குரல் எழுப்பியவண்ணம் பல நாட்கள்
இருந்தனர். இதற்குள் ஆசிரியர்களின் போராட்டக் குரல் கேட்க பொறுக்காத தாளாளர் தந்தை
வர்க்கீஸ் மாவேலில் ஒருசில நாட்கள் பங்கு மேடையிலிருந்து மாறி நின்றார்.
இருப்பினும் நிலைமை சரியாகவில்லை. போராட்டமும் தீவிரமடைந்தது. எதிர்ப்பை சந்திக்க
முடியாத தந்தை வற்கீஸ் மாவேலில் இரகசியமாக திருவனந்தபுரம் பேராயர் இல்லத்தில்
சென்று தங்கினார். ஆசிரியரின் இடமாற்றப் பிரச்சனை நீதிமன்றத்தையும் எட்டியது.
இந்நிலையில், திடீரென பங்குத்தந்தை சென்று விட்ட காரணத்தால் மார்த்தாண்டம், சிதறால், குழித்துறை ஆகிய பங்குப் பணிகளை கவனிக்க எவரும் இல்லாத சூழ்நிலை
ஏற்பட்டது. ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் பங்குத்தந்தையின் பொறுப்புகளை ஏற்க
பணிக்கப்பட்டார். எவ்வித எதிர்ப்பும் இன்றி தம் சொந்த மக்களுக்கு பணி செய்ய
கிடைத்த அரிய வாய்ப்பு என்று மகிழ்ச்சியுடன் ஆயர் இப்பொறுப்புகளை ஏற்றெடுத்தார்.
மூன்று பங்குகளிலும் உள்ள அனைத்து பணிகளையும் சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும்
நடத்தினார். மட்டுமல்ல யாரிடமும் சொல்லாமல் பங்கை விட்டுச்சென்ற தந்தை வர்கீஸ்
மாவேலில் அவர்களை, ஆயர் அவர்கள், மக்களை வைத்து அழைக்கச் செய்து, நன்றி கூறி,
பிரிவு உபசார விழா
வைத்து செங்ஙன்னூர் என்ற புதிய பங்கு வரை கொண்டு விடவும் செய்தார். என்னே! நம்
ஆயரின் பெருந்தன்மை இக்காலகட்டத்தில் அவருக்கு வெகு சில குருக்கள் அவ்வப்போது
வந்து சிறு உதவிகள் செய்துள்ளார்கள் என்பது உண்மைதான். இருப்பினும் ஒரு
குருவைக்கூட உதவிக்கு அவருக்கு 'கொடுக்கவில்லையே என்பது கசப்பான
உண்மையே. ஆடம்பரமாக, ஆள் கூட்டமான முக்கியமான
நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்குகொள்ளும் பாரம்பரியமுள்ள ஆயர்கள் இருக்கும்போது, ஒரு சாதாரண குருவின் பணிகளை சுறுசுறுப்போடு, மகிழ்ச்சியோடு செய்த நிலையை அந்த மக்களால்
மறக்க முடியாது. திருப்பலி,
வீடு சந்திப்பு, கல்லறை ஆசீர்வதித்தல், கட்டிட கல்லிடுதல், அடக்கம், நோயாளி சந்திப்பு திருமணச்சடங்கு இப்படி
இன்னும் பல பணிகளை திருப்பலிக்கு வெளியே நிறைவேற்றிய ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
அவர்களின் இந்த ஒன்றரை ஆண்டுகால தியாகத்தைப் பற்றி மார்த்தாண்டம் பங்கு உபதேசியார்
திரு. பாக்கியநாதன் அவர்கள் நன்றியுடனும், கண்ணீருடனும் பல வேளைகளிலும் கூறியிருக்கிறார். இவ்வாறு தன்னை
நோக்கி எறியப்பட்ட கற்களை ஒன்று கூட்டி ஏறிச் செல்லும் படிகளாக மாற்றி, வேதனையில் சாதனை படைத்த நம் ஆயரைப்போல்
வரலாற்றில் அதிக மக்கள் இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் வாழ்வில் விதம் விதமான
நெருக்கடிகளும், சோதனைகளும் வந்தாலும் அவற்றை கடவுளில்
நம்பி சந்தித்த காரணத்தால் நெருப்பில் இடப்பட்ட தங்கம் போல நாள்தோறும் கடவுளுக்கு
முன் பிரகாசித்தார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் தந்தை டோமினிக்
சக்கரியாஸ் தாமாக முன் வந்து விருப்பம் தெரிவித்தபடியால் பேராயரால் மார்த்தாண்டம்
பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் பங்கு பொறுப்புகளிடமிருந்த நம்
ஆயர் விடுவிக்கப்பட்டார். தந்தை டோமினிக்கும் ஆயர் இலாறன்சும் நெருக்கமாக நட்பு
கொண்டிருந்தனர். இருவரும் சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொண்டவர்களாக
ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து வந்தனர்.
இக்காலகட்டத்தில்தான் 1987-ஆம் ஆண்டு கிழக்கு திருஅவைகளின் தலைவர்
கர்தினால் லூர்து சாமி அவர்கள் கேரள திருஅவையை சந்திக்க வருகை தந்தார்.
திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்திற்கும், வருகைதர
இருந்த கர்தினால் அவர்களை,
குமரி மலங்கரை திருஅவை
மக்கள் வாழும் மார்த்தாண்டம் அழைத்து வர இங்குள்ள மக்கள் பெரிதும் ஆசைப்பட்டனர்.
இதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று இங்குள்ள தமிழ்பேசும் மலங்கரை
கத்தோலிக்க மக்களின் எண்ணிக்கையை ஓரளவு கர்தினால் அவர்களுக்கு புரிய வைப்பது.
இரண்டு, ஒரு மறைமாவட்டம் இங்கு உருவாக
வேண்டியதன் தேவையை உணர்த்துவது. மூன்று, கர்தினால்
அவர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு தமிழர். இது போன்ற பல காரணங்களால் கர்தினால்
அவர்களை அழைத்துவர துடிப்பாய் இருந்தனர் இங்குள்ள மக்கள். ஆனால் அந்தோ ஒரு பெரும்
ஏமாற்றம் காத்திருந்தது. சிலரது சுயநல சிந்தனையின் விளைவாக தவறான கணிப்பின்
அடிப்படையில் எக்காரணத்தை ஒட்டியும் கர்தினால் அவர்களை இங்கு அழைத்துவர அனுமதிக்க
மாட்டோம் என்று மேலிடம் அடம்பிடித்தது. “இங்கு
கட்டுப்பாடு இருக்காது,
வசதியில்லை, அதற்குரிய தேவையில்லை'' போன்ற சாக்குப் போக்குகள் சொல்லப்பட்டன. ஆனால் இதற்கொன்றும்
நாங்கள் பணிந்து விடுவது இல்லை என்று உறுதியுடன் மக்கள் கூறினர். தந்தை
டோமினிக்கும், ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
அவர்களும் மக்களின் ஆசையை நிறைவேற்ற சிறப்பான முயற்சிகள் எடுத்தனர். பேராயருடன்
பரிந்து பேசினர். நிலைமை மோசமாகிவிடும் என்ற நிலையில், சரியாக பத்து நாட்களுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டது. இதே
வேளையில் கேரளாவில் சில மாதங்களுக்கு முன்னரே தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்தன.
தமிழக மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வண்ணம் மிக குறைந்த
நாட்களில் மிகச் சிறந்த தயாரிப்புகளில் குருக்களும், கன்னியரும்,
பொதுநிலையினரும்
ஈடுபட்டனர். தந்தை ஹோர்மிஸ் புத்தன்வீட்டில் தலைமையில் பலர் ஈடுபட்டு
மார்த்தாண்டம் மோன்சிஞ்ஞோர் ஜோசப் குழிஞ்ஞாலில் நினைவு உயர்நிலைப்பள்ளி மைதானம்
சீரமைக்கப்பட்டு, உயர்ந்த ஒரு மேடையும் கட்டப்பட்டது.
தந்தை Y. ஜோசப், திரு. இராஜப்பன்,
திரு இராஜேந்திரபாபு, திரு. வற்கீஸ், திரு. அருளப்பன் (அக்கிவிளை) ஆகியோர் நிதி திரட்டும் பணியில்
ஈடுபட்டனர். தந்தை பிறேம்குமார் தலைமையில் வரவேற்பு பணிகள் நடந்தன. இவை
அத்தனைக்கும் ஆயர் அவர்கள் தேவையான தலைமைக் கொடுத்து வந்தார். அந்த நாள் வந்து
விட்டது. 19-8-1987, அழகாக அலங்கரிக்கப்பட்ட பந்தல், சாலை ஓரங்களும் ஆலய வளாகமும் தோரணங்களால்
பளிச்சென்று காட்சியளித்தது. மக்கள் கடல்போல் வந்து குவிந்தனர். சாலையின் இரு
ஓரங்களிலும் மாணவ மாணவியர் கொடி அசைத்து நின்றனர். கர்தினால் லூர்துசாமி அவர்களை
பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் அழைத்து வந்தார். நம் ஆயர் அவரை வாசலில் மாலை
அணிவித்து மெழுகு வர்த்தி கொடுத்து தூபம் வீசி வரவேற்றார். பாடகர் குழு இனிமையான
வரவேற்புப் பாடல் பாடியது. ஆலயத்தில் இறையன்னை , மற்றும் புனிதர்களின் புகழ்ச்சிப் பாடலுக்குப் பின் கர்தினால், பேராயர் மற்றும் தலைவர்கள் மேடையை நோக்கி சென்றார்கள்.
கூட்டம் ஆரம்பமானது. ஆயர் இலாறன்ஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பேராயரின்
சிறு உரைக்குப்பின் கர்தினால் உரையாற்றினார். ''எங்கும் கூடாத மக்கள் கூட்டம். எங்குமே கிடைக்காத சிறப்பான
வரவேற்பு. உண்மையில் மகிழ்கிறேன். இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். திருத்தந்தையிடம்
உங்கள் அன்பை எடுத்துக்கூறுவேன்''.
உரை முடிந்து நினைவுப்
பரிசு கொடுக்கப்பட்டது. பின் இறுதியில் மக்கள் கூட்டம் சிறிது சிறிதாக பிரிந்தனர்.
ஆயர் இலாறன்ஸ் அவர்களின் தலைமைப்பண்புகளையும், திறமையையும் ஆர்வத்தையும் எல்லாம் வெளிப்படுத்திய ஒரு அருமையான
நிகழ்ச்சி. அனுமதி தர தயங்கியவர்கள் கூட ஆச்சரியத்தில் மூழ்கினர். மனமார எங்களை
பாராட்டினர். மனிதன் ஒன்றை நினைக்க இறைவன் மற்றொன்றை தீர்மானிக்கிறார்.
இறைபராமரிப்பின் இன்னொரு வெளிப்பாடாக இது அமைந்தது.
ஆயர் இலாறன்ஸ் அதிக தேவையிலிருக்கின்ற மக்கள்
எங்கு இருக்கின்றார்களோ,
அங்கே அவர்களைத் தேடிச்
சென்று பணிபுரியும் மையங்களை ஏற்படுத்துவது வழக்கம். இயேசு அன்று கூறிய 'ஏழைகள்' இன்றைய சூழ்நிலையில் சொந்தமாக வீடின்றி, தொழிலின்றி,
சொந்தமின்றி, சாலை ஓரங்களிலும், அரசு புறம் போக்குகளிலும், குடிசை பகுதிகளிலும் வாழும் மக்கள் என்பதில் சந்தேகமில்லை.
இத்தகைய மக்களுக்கு இறைவனைக் கொடுக்க வேண்டுமானால், இவர்களோடு இவர்களைப் போல், நாமும் இறங்கி வரத்தான் வேண்டும். 1984-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் என்னையும் காரில் ஏற்றிக்
கொண்டு நாகர்கோவில் நகரிலிருந்து குமரி நோக்கி பயணமானார். சுமார் 5 கி.மீ தொலைவு சென்றதும், வலப் பக்கமாக வளைந்து சென்ற ஒரு கரடு முரடான
சல்லிரோடு வழியாக வண்டி போகட்டும் என்று கட்டளையிட்டார். ஒரு பார்லாங் தூரம்
சென்றதும் தொடர்ந்து வண்டி ஓட முடியாத நிலை. வண்டி நிறுத்தப்பட்டது. ஆயர் கீழே
இறங்கினார். கூடவே நானும். அந்த ரோட்டின் இருபுறங்களிலும் ஏராளமான குடிசை வீடுகள்.
பதினெட்டாம்படி என்று அந்த ஊர் அழைக்கப்பட்டது. இரண்டு புறங்களிலுமுள்ள வீடுகளில்
ஆயர் சென்று பலரிடமும் நலன் விசாரித்தார். சிலர் சிரித்தனர். சிலர் வெறுப்புடன்
உற்று நோக்கினர். மற்றும் சிலர் அன்புடன் ஏற்றுக்கொண்டனர். ஆனால் மக்கள் எத்தகைய
பதில் கொடுக்கிறார்கள் என்பதைப் பற்றி தான் அதிகமாக விழிப்பாயிருந்தாரே தவிர மற்று
எதையும் ஆயர் கண்டு கொள்ளவே இல்லை. சந்தித்த மக்களிடம் எல்லாம், அவர்கள் வாழ்க்கை பற்றி, சொந்த ஊர் பற்றி எல்லாம் கேட்டறிந்தார்.
நோயுற்ற பிள்ளைகளையும்,
பிறரையும் கண்டபோது, அவற்றை சரி செய்வதற்கான வழிகளைக் கூறினார்.
பசியாயிருந்த சிலருக்கு சிறு உதவியும் செய்வதை நான் பார்த்தேன். வரிசையாக இருந்த
வீடுகளின் மத்தியில்,
ஒரு வீட்டில் வயதான
பாட்டி ஒருவர் படுக்கையாக இருந்தார். அவரை கவனிப்பதற்குரிய பெரியவர்கள்
பொறுப்பானவர்கள் எவரும் வீட்டில் இல்லை. அவருடன் இருந்த பெண்மணி, தன் இயலாமையை கூறினாள். நாங்கள் பார்த்தபோது
அவரை மருத்துவமனைக்கோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ எடுத்துச் செல்லக்கூடிய
சூழ்நிலையில் அவர் இருக்கவில்லை. அப்பெண்மணியின் கவலையெல்லாம், இறந்தபின், நான் அடக்கச் செலவிற்கு என்ன செய்வேன் என்பதாக இருந்தது. ஆயர்.
அவர்களுக்கு தைரியம் கொடுத்தார். அவர்களை கவனிக்க சிஸ்டர் மெல்கா மற்றும்
கன்னியர்களை ஏற்படுத்தினார். ஏதாவது நிகழ்ந்து விட்டால் தமக்கு தகவல் கொடுக்க, தொடர்பு கொள்ளவேண்டிய முகவரியும் கொடுத்தார்.
அவர்களுக்காக ஜெபித்தார். அவ்வீட்டில் அவர்கள் அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை. அவர்கள் விரும்பியபடி,
சில நாட்கள் கன்னியரால்
கவனிக்கப்பட்டு, இறுதியில் அடக்க நாளில், தானே நேரடியாக நின்று அனைத்து இறுதிக்
கடமைகளையும் செய்துவிட்டுத் திரும்பிச் சென்றார்.
முன்பின் பழக்கமில்லாது, எங்கிருந்தோ வந்து ஒருவர் இப்படி
பொறுப்புடனும், அன்புடனும் பணிகள் செய்து திரும்பிச்
சென்றது அவ்வூர் ஏழை மக்களின் கவனத்தை கவர்ந்தது. எனவே அவர் தம் விருப்பப்படி
அவர்கள் மத்தியில் ஒரு சிறு குடிசை, பணி
மையமாக அமைக்கப்பட்டது. சிறு பிள்ளைகளுக்கு ஆரம்ப பாடங்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. கூடவே ஞாயிறு
நாட்களில், அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த
மந்தாரம் புதூர் C.S.I.
திருஅவையைச் சார்ந்த
இன்பம், கண்மணி, ராணி,
மேரி போன்ற மகளிரால்
அரைமணி நேரம் பாடல், மற்றும் ஜெபங்கள் சொல்லிக்
கொடுக்கப்பட்டன. இதனால் அவ்வூர் மக்களுக்கு மனிதராக வாழ உதவும், பல நன்மைகள் ஏற்பட்டன. இவ்வாறு ஏழை மக்களையே
தாம் அதிகமாக அன்பு செய்த காரணத்தால், ஆயர்
அவர்கள், செட்டிக்குளம், தேனிக்குளம், தோவாளை போன்ற பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள்
மத்தியிலும் பணி மையங்கள் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை இவ்வாறாயினும், தீமை எப்போதும் நன்மையை தாக்கிக் கொண்டே இருந்தது. ஆயர் தலைமையில்
நடந்த பணிகளால் மதம் மாறிவிடுவார்களோ என்ற அச்சம் உயர் குலத்தில் வசதியாக
வாழ்ந்திருந்த அண்டை ஊர் மக்களுக்கு ஏற்பட்டது. எப்படியாவது இவர்கள் நடமாட்டத்தை
நிறுத்த வேண்டும் என்று அவர்கள் உறுதி பூண்டனர். அதற்குரிய இரகசிய வழிமுறைகளையும்
ஆராய்ந்து வந்தனர். இச்சமயம்,
வயற்கரையில்
அமைந்திருந்த நம் பணி மையம் கீழே விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. இதை சரி
செய்வதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கட்டுமானப்பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்ட
நிலை. சில சமூக விரோத சக்திகளின் தூண்டுதலால் அரசு அலுவலரின் துணையோடு அக்கட்டடம்
உடனே இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கட்டளை பிறந்தது. அந்த குறிப்பையும்
கொண்டு பல அலுவலரிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு உண்மை நிலையை விளக்கிக் கூறிய
பின்னும், பயன் ஒன்றும் ஏற்படவில்லை. அடுத்த
நாள் பலர் சேர்ந்து, நாங்கள் கட்டி எழுப்பிய அறையை இடித்து
தரைமட்டமாக்கினர். ஏழைகளாகிய காரணத்தால் அதை எதிர்த்து நிற்க அன்று எவரும் இல்லை.
மிகுந்த வேதனையோடு அவ்விடம் செல்லாமலே நாங்கள் திரும்பி வந்துவிட்டோம்.
இந்நிகழ்ச்சிகளையெல்லாம் ஆயர் இலாறன்ஸ்
அறிந்துகொண்டு தான் இருந்தார். தாம் செய்யும் பணி இறைவனுக்கு சித்தமானால்
எப்படியும் நடக்கும் என்று உறுதியாக நம்பியிருந்தார். ஒருநாள்
கன்னியாகுமரியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது, இடிக்கப்பட்ட அவ்விடத்திற்கு சென்றார். அங்கே ஒரு குடிசை வைக்கப்
பட்டிருந்தது. ஆயர் உடனே உள்ளே நுழைந்து அமர்ந்தார். எங்களுக்கு ஆளனுப்பினார்.
நாங்களும் சென்றோம். பின்னர் அவ்விடத்தில் தொடர்ந்து பணியாற்ற வகை செய்தார்
என்றால் ஏழைகள் மீது அவர் காட்டிய அன்பே காரணம். அதற்காக அவர் எதிர்ப்பையும்
அச்சுறுத்தலையும் கண்டு ஓடிவிடுபவர் அல்ல.
திரு. தோமஸ் குட்டி பனச்சிக்கல் தம் டாக்டர்
பட்ட ஆய்வு நடத்தியிருந்த வேளையில், ஆயர்
இலாறன்சின் Health
for One Million திட்டத்துடன்
நன்கு ஈடுபட நேர்ந்தது. சாதி,
மத பேதமின்றி
சமூகத்திலுள்ள ஏழைகளை,
எல்லா வகையிலும்
உயர்த்துவதற்காக ஆயர் பாடுபட்டார். இத்தகைய திட்டங்களில் ஈடுபடுவது அவருக்கு
மிகுந்த மகிழ்ச்சியையும்,
திருப்தியையும்
கொடுத்திருந்தது. திட்டங்களை ஏற்பாடு செய்யும்போது மிகச்சிறிய காரியங்களில் கூட
அவர் நேரடியாக தனிப்பட்ட கவனம் செலுத்தியிருந்தது, நம் அனைவருக்கும் பின்பற்றக்கூடிய ஒரு பண்பாக இருந்தது.
1987- நவம்பர் 17ம் நாள் டாக்டர் தோமசின் தாய் இறையடி சேர்ந்தார்கள். செய்தி
அறிந்த ஆயர் இலாறன்ஸ் நீண்ட தூரம் பயணம் செய்து பத்தனம்திட்ட மாவட்டத்தில்
வள்ளிக்கோடு கோட்டயத்தில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று அவரை ஆறுதல் படுத்தினார்.
இவரை கட்டியணைத்து ஆற்றித் தேற்றிய நிகழ்ச்சி இன்றும் இவர் மனதில் மாயாது
நிற்கின்றது. இறந்தோரின் உறவினரை நேரடியாக கண்டு ஆறுதல் கூறும் ஆயரின் நல்ல பண்பை, பலமுறை, பற்பல இடங்களில் பார்க்க முடிந்தது.
இறைபராமரிப்பில் மிகுந்த நம்பிக்கை அவருக்கு
இருந்தது. தமது அன்புக்குரிய தாய் இறந்தபோது அன்னாரின் உடலடக்கத்
திருச்சடங்கின்போது இவ்வாறு ஆயர் தம் மறையுரையில் கூறினார். "இந்நாட்களில் நான் செபிப்பதெல்லாம் ஒன்றே
ஒன்று. தந்தை மகன் தூய ஆவிக்குப் புகழ். இது மட்டுமே. ஏனெனில் புகழ்வதற்குரிய
காரியங்கள் மட்டுமே என் வாழ்வில் இறைவன் எனக்கு நிகழ்த்தியுள்ளார்”. தம் தாயின்
சடலத்தின் முன் நின்று இவ்வாறு கூறுவதற்கு தூய பவுலைப் போன்ற தளராத இறை நம்பிக்கை
உடைய ஒருவருக்கே முடியும்.
இறைவன் மக்களுக்கு கொடுக்கின்ற இவ்வுலகச்
செல்வங்களைப் பற்றிய தெளிவான சிந்தனை ஆயருக்கு இருந்தது. ஒருமுறை ஒரு வீடு
ஆசீர்வதித்து முடிந்தபின் அவ்வீட்டு உரிமையாளரைப் பார்த்து கூறினார்: “பாருங்கள்! சொந்தமாக ஒரு வீடு உங்களுக்கு
உரிமையாயிருக்கிறது. இனிமேல் அதிக நேரத்தை இறைவனுடைய பணிக்காக செலவிட வேண்டும்.
இவ்வுலக வசதிகளைப் பற்றி ஆயருக்கு இருந்த இந்த வித்தியாசமான கண்ணோட்டம்
அவ்வீட்டாரை மிகவும் கவர்ந்தது. இவ்வுலக செல்வங்கள் இறைவனை அதிகமாக நெருங்கச்
செய்ய வேண்டும் என்று ஆயர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
தனி நபர்களை அங்கீகரிப்பதற்கும், வளரச்செய்வதற்கும் ஆயருக்கு எந்த தயக்கமும்
இருக்கவில்லை. வந்தவரை அன்புடன் வரவேற்பதிலும், தம்முடைய உணவை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் அவருடைய சாதாரண
செயலாக இருந்தது. பிறரை மிகவும் மதிப்புடன் மட்டுமே அவர் அழைத்திருந்தார்.
அதிகாரிகளுடன் காட்டும் கீழ்ப்படிதல், ஆதரவற்றவர்களுடன்
காட்டிய இரக்கம், துன்பப்படுகிறவர்கள் மீது கொண்டிருந்த
அக்கரை, ஏழைகள் மீது கொண்ட அன்பு, அனைவரிடமும் காட்டி வந்த தாழ்ச்சி
அனைத்திற்கும் மேலாக ஆண்டவரிடம் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை இவை
அனைத்தும் ஆயர் இலாறன்சிடம் காணப்பட்ட பண்புகளாகும்.
மார்த்தாண்டம் கிறிஸ்துராஜா ஆலயத்தின் பங்குத்
திருவிழா நவம்பர் மாதம் 23ம் தேதி கொண்டாடப்படும். நவம்பர்
மாதம் 14ம் தேதி கொடியேற்றி, தொடர்ந்து பத்து நாட்கள் விழா நடைபெறுவது
வழக்கம். வழக்கம்போல 1992
ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
இரண்டாவது வாரம் திருவிழாவிற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வந்தன. நவம்பர் மாதம் 12ம் நாள் அதிகாலை 4 மணிக்கு ஒருசிலர் வந்து, பங்கு
இல்லத்தின் வாசல்களைத் தட்டி ''ஃபாதர்... ஃபாதர்'' என்று உரக்க அழைத்தனர். நான் அன்று கீழ்
தளத்திலும், ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் முதல்
மாடி அறையிலும் வசித்து வந்தோம். நான் விழிப்பதற்குள் ஆயர் இலாறன்ஸ் விழித்துக்
கொண்டார்கள். கதவைத் திறந்து வந்தவர்களிடம் செய்தி கேட்டபோதுதான், அருகிலுள்ள குழித்துறை ஆற்றில் வெள்ளம்
பெருக்கெடுத்து வருகிறது. பல வீடுகளும், வெள்ளத்தில்
மூழ்கிவிட்டன. மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஆயர் நொடிப் பொழுதில் வண்டியை எடுத்து, வெள்ளப்
பெருக்கின் எல்லையைக் சென்றடைந்தார். அப்போதைக்கெல்லாம் நாங்களும் விழித்துக்
கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தோம். கூடி நின்ற மக்களுக்கு கட்டளையிட்டு, பொருட்களையும் ஆட்களையும் மீட்கும் பணியில்
ஈடுபட்டார். மீட்கப்பட்ட பொருட்களுடன் ஆட்களை நம் பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பாக
அமர்த்தச் செய்தார். ஆயர் இல்லத்தில் இருந்த எல்லா வண்டிகளும், மடத்திலுள்ள எல்லா வண்டிகளும் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் கரைகளுக்கு பறந்தன. அங்கெல்லாம் மீட்புப் பணித்
துரிதப்படுத்தப்பட்டன. இந்த வெள்ளப் பெருக்கை நேரில் கண்ட அந்த பகுதி மக்கள் 100 ஆண்டுகளில் இப்படி, ஒரு வெள்ளப் பெருக்கு இந்த ஊரில் ஏற்பட்டதில்லை என்றனர். எனவே
பெரும் வெள்ளத்தையும் அதன் அழிவையும் கண்டு அதிர்ச்சியிலும், ஏக்கத்திலும் நிலைகுலைந்து நின்ற தாய்மார்கள், பிள்ளைகள், முதியவர்கள் அனைவருக்கும் ஆயர் இலாறன்ஸ் நேரடியாகச் சென்று ஆறுதல்
கூறினார். பள்ளிக்கூடங்களிலும் மற்றும் தங்க வைத்திருந்த மக்களுக்கு உணவு வழங்க
ஏற்பாடு செய்தார். இத்தகைய பெரும் அழிவு இப்பகுதிக்கு ஏற்பட்ட காரணத்தால்
கிறிஸ்துராஜா ஆலய திருவிழா நாட்களில் திருப்பலி மட்டுமே நடைபெற்றது. மக்கள்
அவதிப்படும் வேளையில் மற்ற நிகழ்ச்சிகள் நடத்தி வேதனையுறும் மக்கள் மனநிலையை
வேடிக்கை ஆக்காது அவர்கள் துன்பத்தில் பங்குபெற பங்கு மக்கள் ஒருமனதாக முன்
வந்தனர். அவ்வாறு வழிபாட்டை வாழ்க்கை அனுபவத்துடன் இணைத்து பிறருக்கு
மாதிரியாகவும் விளங்கினார்கள் இப்பங்கு மக்கள். வெள்ளப்பெருக்கின் விளைவுகள்
ஒருசில நாட்களில் நின்றுவிடவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் மார்த்தாண்டம், குழித்துறை, சிதறால்,
உண்ணாமலைக்கடை, தச்சன்விளாகம், திக்குறிச்சி,
ஆற்றூர் ஆகிய பகுதிகளில்
தாங்கள் உடமைகளை இழந்து பரிதபித்தனர். தங்களுக்கு இருந்த வீடுகள் வெள்ளத்தில்
மூழ்கி தரைமட்டமாயிருந்ததை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த ஆபத்து
காலத்தில், அருட்சகோதரிகள், மார்த்தாண்டத்தைச் சார்ந்த பல மன்ற
உறுப்பினர்கள் மற்றும் பலர் தங்களால் இயன்றவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்
வந்தனர் என்பது பாராட்டுதற்குரியது. அரசும் நாளடைவில் பல பணிகளுக்கு உதவின. ஆனால்
ஆயர் இலாறன்ஸ் அவர்கள் உடனடியாகக் கொடுத்த தகவலின்படி ஜெர்மனியிலுள்ள Maltesar என்ற நிறுவனத்தார் உடனடியாக தங்கள் பிரதிநிதி
ஒருவரை இப்பகுதிக்கு அனுப்பினார்கள். அந்நபருடன் நானும் சென்று பாதிக்கப்பட்ட
அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டோம். அதன் அடிப்படையில் உணவு மற்றும் அடிப்படை
வசதிக்கான உதவியும் கட்டுமான பணிகளுக்குரிய உதவியும் மக்களுக்குக் கிடைத்தது.
இவ்வாறு பல அமைப்புகளுக்கும்,
அரசுக்கும் செய்ய
முடிந்ததை விட அப்பகுதி மக்களுக்கு அதிகமான நன்மை ஆயர் இலாறன்ஸ் அவர்களின்
தனிப்பட்ட முயற்சியால் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்திலும், துன்பத்திலும், நெருக்கடியிலும் இருக்கும் மக்களுக்கு எப்படியும் உதவி
புரிந்துதான் ஆக வேண்டும் என்ற உறுதியான அவரது மனதை இத்தகைய பல்வேறு நிகழ்ச்சிகள்
வழியாக நன்கு மக்களுக்கு புரிந்துகொள்ள முடிந்தது. மக்களை வெறும் ஒரு கூட்டமாகவோ
பற்பல பிரச்சனைகளாகவோ காணாது மக்களாகவே காண்பதற்கு ஆயரால் முடிந்தது. எனவேதான்
வேதனையில் இருக்கும் மக்களுக்கு எவ்வளவுதான் செய்ய முடிந்தது என்பதைவிட அவர்தம்
வேதனையை தாமும் மனதார உணர்ந்து அவர்களின் வேதனையை பகிர்ந்து கொள்ளும் நல்ல மனித
நேயம் அவரிடம் காணப்பட்டது.
12. இயற்கைச் சூழலில் இறைவழிபாடு
இயற்கையில் இறைபிரசன்னத்தைக் கண்டவர் ஆயர்
இலாறன்ஸ். எனவே இயற்கையின் அழகையும், மரம், செடி, கொடிகளையும் பராமரித்து பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார்.
அத்துடன் இயற்கைச் சூழலை உள்ளபடியே இறைவழிபாட்டு இடங்களாகவும் மாற்றிக்கொண்டார்.
கன்னியாகுமரி மடத்தின் முன் மஞ்சள் பூக்கள்
பூத்து நின்றிருந்த செடியின் ஒரு கொப்பை ஒரு சகோதரி முறித்துவிட்டார்கள். ஆயர்
இலாறன்ஸ் வந்தவுடன் அதை அறிந்து அந்த சகோதரியை நன்கு கோபப்பட்டார். ''நம் உடலில் ஒரு உறுப்பை முறித்துவிட்டால்
எப்படி இருக்கும்? இவ்வாறுதான் மரங்களின் கொப்புகளை
முறிப்பதும்". இவ்வாறு கூறி மரங்களை வளர்க்கவேண்டிய
தேவையைப்பற்றி நீண்ட நேரம் கற்பித்தார். பின்னர் மருந்து வாழ் மலைப்பகுதியில்
சூபாபூள் மற்றும் மரக்கன்றுகளை தாமும் நேரடியாக வேலை செய்து நட்டார். சிறு மரக்கன்றுகளை
பிளாஸ்டிக் கவரில் வைக்க ஏற்பாடுச் செய்தார். ஆடு, மாடுகளிடமிருந்து அச்செடிகளையும், மரங்களையும் பாதுகாக்க நெடுங்காடு கோயிலில், முன் உபதேசியாராயிருந்த திரு. புன்னூசை
மந்தாரம்புதூரில் தங்கி பாதுகாக்க வைத்தார்.
நாகர்கோவிலில் 40 சென்ட் பூமியில் மடம் புதிதாக கட்டப்பட்டபோது சில மரங்களை
வெட்டக்கூடாது என்று ஆயர் அறிவுறுத்தினார். ஆனால் கட்டிடம் கட்டியபோது இரண்டு
மரங்கள் வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. செய்தியை அறிந்த ஆயர் அன்று
அருட்சகோதரிகளிடம்
"இனிமேல் நான்
அங்கு வரவேண்டுமென்றால் புதிய மரங்கள் நட்டு வளர்த்தவேண்டும்'' என்று கூறினார்.
மலங்கரை மக்களை ஊக்குவிப்பதிலும், அங்கீகரிப்பதிலும் ஆயர் இலாறன்ஸ் மார்
எஃப்ரேம் மிக ஆர்வம் காட்டிவந்தார். 1992 - 93 ஆம்
கல்வி ஆண்டிற்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருது திரு. கிறிஸ்டல் ஜாண்
ஆசிரியருக்கும் அருட்சகோதரி சாவியோ D.M. அவர்களுக்கும்
கிடைத்தது. ஆயர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்களை நேரடியாக பாராட்டினார்.
அத்துடன் நிற்கவில்லை. அவ்வாண்டு கேரளாவில் வைத்து மலங்கரை கத்தோலிக்க திருஅவை
ஒட்டுமொத்தமாக கொண்டாடிய மறு ஒன்றிப்பு இயக்க ஆண்டு விழாவின்போது
பொதுக்கூட்டத்தின் மேடையில் இவ்விருவரையும் அமர்த்தி பேராயரால் பாராட்டி பேச
வைத்து தங்க பதக்கமும் இவர்களுக்கு வழங்கி கௌரவித்தார் ஆயர்.
இயேசுவின் அன்பு அதிகமாக அங்கீகரிக்கப்படாத
இடங்களில் சிறப்பான முயற்சி எடுக்க ஆயர் தயங்கவில்லை. குமரி மாவட்டத்தின்
அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலூக்காகளில் அவர் பல
இடங்களில் சென்று மக்களுடன் தொடர்பு கொண்டு பல நன்மைகளை செய்ய முயன்றார். திரு.
கிறிஸ்டல் ஜாண் ஆசிரியரையும் கூட்டிச்சென்று வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைக்க
பல்வேறு குடும்பங்களுக்கு உதவினார். சில இடங்களில் அவரது நன்மையை புரிந்து
கொள்ளாமல் கடுமையான எதிர்ப்பும் ஏற்பட்டது. தோவாளையில் ஒரு முறை ஆயரைப் பார்த்து ''உங்களுக்கு இங்கிருந்து போகலாம்'' என்று கூறி விரட்டினர். ஆனால் அதே மக்களை அவர்
மீண்டும் மீண்டும் சந்தித்து அம்மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை உறவாடினார். இவ்வாறு
அவர் இறப்பு வரை அவ்வூர் மக்களிடம் நல்ல அன்பும் அக்கறையும் கொண்டவராகவே
திகழ்ந்தார்.
மலங்கரை திருவழிபாட்டு முறைகளை தமிழில்
மொழிபெயர்த்து எளிய முறையில் திருச்சடங்குகள் நடத்துவதில் ஆயர் சிறப்பான முறையில்
கவனம் செலுத்தினார். இதற்காக அருட்சகோதரி எமிலியானா அவர்கள் ஆயருக்கு உதவினார்கள்.
மொழிபெயர்த்து, பாடல் பாடி. ஒலிநாடாக்களில் பதித்து
மக்களுக்கு அதை கற்றுக் கொடுக்கவும் செய்தார்கள். சிறிய மறைபரப்புத் தளங்களில் கூட
அங்குள்ள பல் சமய மக்களை ஒன்று கூட்டி தம் வழிபாட்டு முறைப்படி கிறிஸ்து பிறப்பு, சுபுக்கோனோ (ஒப்புரவு), பாதி நோன்பு, பெரிய வெள்ளி,
உயிர்ப்பு போன்ற
திருச்சடங்குகளை நடத்திவந்தார். இவ்வாறு தமிழ் மொழியில் மலங்கரை வழிபாட்டு
முறைப்படி திருச்சடங்குகள் நடத்துவதற்காக நீண்ட நேரம் தனி நபர்களின் உதவியுடன்
பயிற்சி பெற்றார்.
தமிழ் கற்றுக்கொள்ளும் தீவிர முயற்சியை ஆயர்
மார்த்தாண்டம் வந்து சேர்ந்தவுடனேயே ஆரம்பித்தார். திரு. தேவதாஸ் ஆசிரியர் மாலை
வேளையில் ஆயரின் வசதிப்படி தமிழ் பாடங்களை கற்றுக் கொடுத்தார். சில வேளைகளில்
சொற்பொழிவு, மறையுரை போன்றவை தமிழ் மொழியிலேயே
எழுதிக்கொடுத்து இவரே பயிற்சி அளித்திருந்தார். இவ்வாறு பிறரிடமிருந்தும் நன்மை
இருந்தால் திறந்த மனதுடனும்,
ஆர்வத்துடனும் கற்றுக்
கொள்ளும் பெரிய மனம் ஆயரிடம் இருந்த சிறப்பான ஒரு பண்பு.
1991-ம் ஆண்டு உயிர்ப்பு விழா நாள், ஆயர் இலாறன்சும் சில சகோதரிகளும், சகோதரர்களும் பங்கு மக்கள் சிலரும் மந்தாரம்
புதூர் சிறு ஆலயம் முன்பு கூடினர். பெரிய வெள்ளிக்கிழமையன்று ஏற்கனவே ஆயர், சில சகோதரர்களுடன் மருந்துவாழ்மலை ஏறி
சிலுவைப்பாதை நடத்தியிருந்தார். பின்பு மார்த்தாண்டம் ஆலயத்தில் உயிர்ப்பு விழா
திருச்சடங்குகளும் திருப்பலியும் நிறைவு செய்தபின் சோர்வை பொருட்படுத்தாமல்
மந்தாரம்புதூர் வந்து சேர்ந்தார் ஆயர் அவர்கள். நேரம் அதிகாலை 4 மணி. அனைவரும் சேர்ந்து மலை ஏறினர். அங்கே ஒரு
குகை காணப்பட்டது. இயேசு இறந்த பின் அடக்கப்பட்டதும் குகையில் தானே! ஏறக்குறைய அதே
தோற்றம். வெறுமையான கல்லறையும் பொதியப்பட்டிருந்த துணிகளும் இயேசுவின்
உயிர்ப்புக்கு சான்றாக இருந்தது போல, துணிகள்
சுருட்டி குகையின் ஒரு அருகில் வைக்கப்பட்டிருந்தது. வானதூதராக ஒருவர்
நிறுத்தப்பட்டிருந்தார்.
''நீங்கள் நாசரேத்தூர் இயேசுவையா தேடுகிறீர்கள்? அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்துவிட்டார்.
இதோ அவரை வைத்திருந்த கல்லறை!''
எல்லாம் உண்மையாகவே
நடப்பது போன்ற தோற்றம். நற்செய்தியிலிருந்து இந்த நிகழ்ச்சிகள் பற்றி கூறப்படும்
பகுதிகள் வாசிக்கப்பட்டது. ஆயர் அதற்கு விளக்கமும் கொடுத்தார். மௌனமாக சிறிது
நேரம் செபித்தனர். பின்னர் பாடல் பாடினர். மகிழ்ச்சியாக இயேசுவின் உயிர்ப்பை
அறிக்கையிட்டுத் திரும்பினர். கீழே ஆலயத்தில் வந்து திருப்பலி நிறைவேற்றினார்.
இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வை இன்றைய நிகழ்ச்சியாக
மாற்றினார் ஆயர் இலாறன்ஸ்.
கோவளம் பகுதியில் கடலோடு சேர்ந்த ஒரு பாறையில்
மலங்கரை சிலுவை கொத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த இடத்திற்கு ஒரு வரலாறு
உண்டு. இயற்கையில் இறைவனின் பிரசன்னத்தை உணரும் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
அவர்கள் கடலையும், மலையையும், சமவெளியையும் எல்லாம் ஒன்று போல் இறைவழிபாட்டு இடங்களாக, இறைவார்த்தையை அறிவிக்கும் இடங்களாக மாற்றிக்
கொண்டார். இந்த இடத்தில் மலங்ரை வழிபாட்டு முறைப்படி தவக்காலம் ஆரம்பிக்கின்ற
ஒப்புரவு திருச்சடங்கு (சுபுக்கோனோ) நடத்தியிருந்தார். மீண்டும், உயிர்ப்புக்குப் பின் திபேரியக் கடலில்
உயிர்த்த கிறிஸ்து காட்சி கொடுத்த நிகழ்ச்சியை, மலங்கரை வழிபாட்டுமுறை நாள்காட்டியில் வரும் ஞாயிறுக்கு
(உயிர்ப்புக்குப் பின் இரண்டாம் ஞாயிறு) அடுத்த நாளாகிய திங்கட்கிழமை இங்கு
நடத்திக் காட்டப்படுவதுண்டு. 1992-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் நாள் பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ், ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் ஆகியோர் இங்கு
வந்திருந்தார்கள். அருட்தந்தையர் S. வற்கீஸ், ஜோசப் சுந்தரம், S. ஜாண்,
செலஸ்டின், ஆகியோரும் கூடவே நின்றனர். அருட்சகோதரிகள்
சுகுணா, எய்மார்டு, ஜோசிலின்,
எமிலியானா, மரீனா ஆகியோரும் அங்கு கூடியிருந்தனர். அப்பகுதியிலுள்ள
சில மக்களும் வருகை தந்திருந்தனர். இயேசு திபேரியக் கடலில் காட்சிக் கொடுத்த பகுதி
நற்செய்தியிலிருந்து வாசிக்கப்பட்டது. விளக்கவுரை பேராயர் வழங்கினார். பின்னர்
சிறிது நேர செபத்திற்கு பின் இந்நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டப்பட்டன. அப்பகுதி
நண்பரின் உதவியுடன் அருட்தந்தையர் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். பின்னர்
முறைப்படி எல்லாம் தொடர்ந்தது. இறுதியில் கரையில் வந்தபோது அங்கு ஏற்கனவே
வைத்திருந்த கிழங்கும்,
கொண்டு வந்த மீனும்
கடற்கரையில் நெருப்பு மூட்டி சுடப்பட்டது. அந்நெருப்பில் வெந்த மீனையும், கிழங்கையும் அனைவரும் ருசித்தனர். பேராயரும்
உண்டார்கள். ஆம். அதே அனுபவம்,
அதே மகிழ்ச்சியுணர்வு!
அதே நம்பிக்கை! அனைவரையும் அந்த புதிய அனுபவத்தில் நினைக்கச் செய்த பெருமை
முற்றிலும் ஆயர் இலாறன்ஸ் அவர்களையே சாரும். மலங்கரை வழிபாட்டு முறை சடங்குகள்
வெற்றுச் சடங்குகளாக மாறிவிடாமல் வாழ்க்கை அனுபவங்களாக மாற்றப்பட வேண்டும்.
அதற்காக ஆயர் எடுத்த முயற்சிகளில் இதுவும் ஒன்று.
1979-ஆம் ஆண்டு கன்னியாகுமரியிலுள்ள காட்டுநாயக்கன்
தெருவில் முதியோர் கல்வி ஆரம்பிக்கப்பட்டது. மாலை வேளைகளில் சகோதரிகள் தகியா, சுகுணா, கோண்டடின் ஆகியோர் மாறி மாறி வீடுகள் சந்தித்து செபிக்கவும், வகுப்புகள் எடுக்கவும் செய்து வந்தனர். அன்று
ஒருநாள் ஒரு வீட்டில் 50
வயது மதிக்கக் கூடிய
ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை நெய்யூர் புற்றுநோய்
மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்யைளித்திருந்தார்கள். நோய் மிக முற்றிய போது
அவரை மருத்துவர்கள் கைவிட்டனர். நோயாளியை வீட்டிற்கு கொண்டு செல்ல
வற்புறுத்தினார்கள். வீட்டார் மிகவும் துக்கத்துடன் அவரை வீட்டிற்கு கொண்டு
வந்தனர். சகோதரிகள் அவ் வீட்டிற்கு தினந்தோறும் சென்று செபிப்பதும் ஆறுதல்
கூறுவதும் உண்டு. அப்போது அம்மனிதர் தம் ஒரே ஆவலை அவர்களிடம் கூறினார். ''நான் மருத்துவமனையில் கிடந்து இறக்க வேண்டும்''. இந்த செய்தியை தொலைபேசி மூலம் தந்தை
இலாறன்சுக்கு அறிவித்தார்கள். உடனே அவர் வண்டியுடன் வந்தார். வண்டியில் இந்த
நோயாளியை ஏற்றி கிராத்தூர் மருத்துவமனையை அடைந்தார். கூடவே சகோதரிகளும், உறவினர் சிலரும் இருந்தனர். அவருக்கு சிகிச்சை
அளிக்க மருத்துவரும்,
நர்சுகளும்
ஆரம்பித்தனர். ஆனால் அன்றிரவே அவர் இறந்தார். அவரது ஆவல் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அவரை தந்தை இலாறன்ஸ் மீண்டும் தம் வண்டியில் ஏற்றி கன்னியாகுமரி வீட்டில்
ஒப்படைத்தார். அவரது அடக்கத்தில் தந்தை இலாறன்சும், சகோதரிகளும் பங்கு பெற்று செபித்தனர். இந்த நிகழ்ச்சி
அவ்வீட்டாருக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. தந்தை இலாறன்ஸ் அவர்களுக்கு
மறக்க முடியாதவரானார்.
1986ல் ஒரு நாள் ஓட்டுநர் சுகதனிடம்
கன்னியாகுமரியிலிருந்து ஜீப் எடுத்து வெளியே விடச் சொன்னார் ஆயர். ஜீப்பில் ஏறி
ஆயர் புறப்பட்டார். இடையில் வேகம் கூட்டச் சொன்னார். வண்டி வேகமாக புறப்பட்டது.
குலசேகரத்தை அடைந்தபோது ஒரு வீட்டு முன்னால் மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அது புதிய வீடு ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சி என்று புரிந்தது.
வண்டியிலிருந்து இறங்கும் போது, ''நன்றாகச் செய்தாய், வேகமாகவும்,
பாதுகாப்பாகவும், ஓட்டினாய்!'' ஆயர் சுகதனின் தோளில் தட்டி பாராட்டினார். வீடு அர்ச்சிப்பு
முடிந்தது. ஆயருக்கு காப்பி கொடுக்க அழைத்துச்சென்றனர். காப்பி அருந்த
உட்கார்ந்ததும், ''டிரைவர் எங்கே?'' என்று ஆயர் கேட்டார். ''பிதாவே, டிரைவருக்கு வேறே ஏற்பாடு செய்துள்ளோம்'' வீட்டாரின் பதில் பிடிக்கவில்லை. ''வேறு ஏற்பாடு செய்தது பரவாயில்லை இப்போது என்னுடன் காப்பி அருந்த
அழைத்து வாருங்கள்'' என்றார். எந்த கூட்டத்திலும் கூட
உட்கார வைத்து ஓட்டுநருக்கும் உணவு அளிப்பதில் ஆயர் இலாறன்ஸ் கவனமாக இருந்தார்.
1989-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் நாள் இரவு 7.30 மணிக்கு ஆயர் இலாறன்ஸ் கன்னியாகுமரி மலங்கரை பவனை அடைந்தார். கார்
நின்றது. டிரைவர் ஆயரது பெட்டியை எடுத்து அவர் அறைக்கு கொண்டு சென்றார். ஆயரோ கூடி
நின்ற சகோதரிகளிடம் ஒன்றுமே பேசவில்லை. நேராக சிற்றாலயத்தினுள் நுழைந்து கதவை
அடைத்தார். நேரம் 10 மணி ஆன பின்னரும் ஆயரை வெளியே
காணவில்லை. என்னவென்று அறிய ஒரு சகோதரி ஆலயத்தின் சாவித்துவாரம் வழியாக உற்று
நோக்கினார். அங்கே ஆயர் தம் தலையை பீடத்தில் வைத்து முழந்தாள் பணிந்து
செபித்துக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டார். சற்று நேரத்திற்குப் பின் வெளியே
வந்த ஆயர் சகோதரிகளுடன் உணவு உண்டு, தன்
அறைக்குச் செல்லுமுன் சகோதரிகளை அழைத்துக் கூறினார்: ''ஒரு முக்கியமான கருத்துக்காக நீங்கள் உருக்கமுடன் செபிக்க
வேண்டும்''. அடுத்த நாள் காலையில் திருப்பலி
முடிந்த பின், சகோதரி சுகுணா, சாரள்ளியா ஆகியோரையும் காரில் ஏற்றி
புறப்பட்டார். வள்ளியூரில் உள்ள ஒரு மாதா ஆலயத்தை அடைந்தனர். அந்த நாள் முழுவதும்
அங்கு ஆராதனை செய்தனர். மதியம் ஆனதும் சகோதரிகளோடு உணவு உண்ணக் கூறினார். ஆனால்
அவரோ அன்று முழுவதும் ஆராதனையில் மூழ்கியிருந்தார். திரும்பி வரும் வழியில் "கேசின் காரணம்தான்'' என்று கூறினார். சகோதரிகளை கன்னியாகுமரியில் இறக்கி விட்டபின்
அவர் மீண்டும் பயணமானார். வாழ்வின் மிக நெருக்கடியான இது போன்ற வேளைகளில் செபம்
மட்டுமே அவரது கேடயமாக,
பாதுகாப்பாக இருந்தது.
தன் வேதனையையும், நம்பிக்கையையும் எல்லாம் ஆண்டவரிடம்
பகிர்ந்து கொண்டு ஆறுதலும் துணிவும் பெற்றிருந்தார்.
1991-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25-ஆம் நாள் அதிகாலை மந்தாரம்புதூர் ஆலயத்தில்
கிறிஸ்து பிறப்பு திருச்சடங்குகளும், திருப்பலியும்
முடிந்தது. ஆயர் இலாறன்ஸ் '
Life Crib" (உண்மை
குடில்) காண்பதற்காக அனைவரையும் அழைத்தார். சகோதர்கள், சகோதரிகள் ஏராளமான விசுவாசிகள் அணியாக நின்றனர். கூடவே மூன்று
அரசர்களின் வேடம் புனைந்து மூவரும் இருந்தனர். அத்துடன் ஆடுகள், கழுதை போன்ற விலங்குகளும் கூட்டி வரப்பட்டன.
அன்று "இதோ மக்களுக்கெல்லாம்... மீட்பர்
பிறந்துள்ளார்'' என்று வானதூதர் ஆட்டிடையர்களுக்கு
அறிவித்த போது ஆட்டிடையர் குழந்தை யேசுவைப் பார்க்கச் சென்றனர். அதே மனநிலையுடன்
அனைவரும் புறப்பட்டனர். கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடி அனைவரும் மலையை நோக்கி
நடந்து சென்றனர். மலை உச்சிக்கு சற்று கீழே ஒரு குகை அமைந்திருந்தது.
சிறிது நேரத்திற்குப்பின் அனைவரும் அந்தக்
குகையை எட்டினர். அங்கே அந்த குகையின் உள்ளே ஒரு தாய் தூய மரியாவாகவும் ஒரு தந்தை
புனித சூசையப்பராகவும்,
ஒரு குழந்தை இயேசு
குழந்தையாகவும் நிறுத்தப்பட்டிருந்தனர். குழந்தை துணிகளால் சுற்றப்பட்டிருந்தது.
ஆடுகள் அருகில் நின்றன. அரசராக வந்தவர் காணிக்கை செலுத்தி வணங்கி நின்றனர்.
ஆட்டிடையராக வந்தவரும் வியந்து நின்றனர். அதன்பின்னர் நற்செய்தியிலிருந்து
கிறிஸ்து பிறப்பு பகுதியை ஒருவர் வாசித்தார். ஆயர் இலாறன்ஸ் அப்பகுதிக்கு இன்றைய
சூழ்நிலையில் விளக்கம் கொடுத்தார். அனைவரும் செபித்து பாடல் பாடினர். பின்னர் ஆயர்
இலாறன்ஸ் துணிகளால் சுற்றப்பட்டு அங்கே குகையில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையை தம்
கைகளில் எடுத்து கூடியிருந்த மக்களைப் பார்த்துக் கூறினார், ''இதுவே இயேசு குழந்தை''. ஆம்,
இயேசு தம் மனிதப்
பிறப்பால் இவ்வுலக மனிதரை தெய்வமாக மாற்றினார். எனவே மனிதன் புனிதனாக மாறுகிறான்.
மனிதனுக்கு செய்வதெல்லாம் இறைவனுக்கு செய்வதாக மாறுகிறது. ஆழமான இறை இயலை
உட்கொள்ளும் இந்த எளிய திருச்சடங்கு வழியாக ஆயர் இலாறன்ஸ் மாபெரும் செய்தியை
மக்களுக்கு அறிவித்தார். இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியாக கீழே
இறங்கினார். இந்த வாழ்க்கைக் குடில் ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் நாளன்று நடத்திக்
காட்டுவது ஆயரின் வழக்கமாக இருந்தது.
திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட நிர்வாகியாக
இருக்கும்போது 1995 நவம்பர் 19-ஆம் நாள் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் தலைமையில்
கிராத்தூரில் வைத்து 5
நண்பர்களும் அருட்தந்தை
பிரேம்குமார் அவர்களுமாக சிந்தித்து உருவானதே இன்றைய மலங்கரை கத்தோலிக்க கல்லூரி.
இது கல்வித்தரத்தில் மக்களை உயர்த்தவேண்டும் என்பதன் அடையாளமே. குழித்துறையில், கடைசியாக அருட்தந்தை S. ஜாண்,
ஆயர் அவர்களை
சந்திக்கும் போதுகூட தன் உடல் நிலையும் பொருட்படுத்தாது அவரோடு "காலேஜ் எந்தாயி! இதின்றெ கூடெ நம்மள்
அக்ரிகல்சரல் காலேஜ் கூட தொடங்ஙணம்'' என்று
சொல்லிய வார்த்தைகள் இன்றும் எங்கள் நெஞ்சத்தில் ஓலமிட்டுக்கொண்டே இருக்கிறது.
ஆயர் இலாறன்ஸ் மார்த்தாண்டம் பங்குத்தந்தையின்
பணிகளைக் கவனித்து வந்த காலம். புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஒரு தாய்
அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். மரணம் கண்முன் கண்ட உறவினர்களும் அத்தாயை அணுகி
அவர்களுக்கு வேண்டிய பணிவிடை செய்யத் தயங்கினர். ஆயர் அவர்களே அத்தாயின் உடலை
துடைத்து சுத்தம் செய்யத் தொடங்கினார். இதைக் கண்ட பலர், பின்னர் தாமாக முன்வந்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்தனர்.
அத்தாய்க்கு ஆயர் நோயில் பூசுதல் வழங்கி நற்கருணை அளித்து நல்ல மரணம் அடைய வழி
வகுத்தார். இவ்வாறே சின்னம்மை (Chicken-Pox)
போன்ற தொற்று நோய்
பிடிபட்டவர்களை அணுகி பணிவிடை செய்ய பிறர் தயங்கும் போது உறுதியுடனும் மிகுந்த
இரக்கத்துடனும் நெருங்கிச் சென்று பணிவிடை புரிந்த நிகழ்ச்சிகள், அருட்சகோதரிகளுக்கும் குடும்பத்தாருக்கும்
மிகுந்த ஊக்கத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. வாழ்வின் ஓரத்திற்கு நோயின்
காரணமாக தள்ளப்பட்டவர்களிலும் ஆயர் இறைவனை மெய்யாகவே கண்டதே இதற்கு காரணம்.
நீண்ட காலமாக ஆயருடன் ஓட்டுநராக பணியாற்றிய
திரு. பாபு ஆயரைப்பற்றி கூறும்போது, ''பயணம்
செய்யும் போது, யாராவது விபத்துக்குள்ளாகியோ, நோய்வாய்ப்பட்டோ காண நேர்ந்தால் உடனே தன்
காரில் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வார். ஒரு முறை மண்ணன்தல என்ற இடம் வழியாக
வந்து கொண்டிருந்தபோது,
பேருந்து இடித்து ஒருவர்
இறந்துவிட்டார். ஆயர் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல தனது காரில்
ஏற்றினார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து போய் விட்டதால் மக்கள் அவரைத் தடுத்தார்கள்''. இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது வழியில்
யாராவது கைநீட்டி ஏற்றிச் செல்ல வேண்டுமென்று கேட்டால் உடனே காரை நிறுத்தி அவர்களை
கூட்டிச் செல்வார். செல்லும் இடங்களில் தனக்கு உணவு பரிமாறத் தொடங்கும் போது உடனே
ஓட்டுநருக்கு உணவு கொடுத்தீர்களா?
என்று கேட்பார்.
இல்லையென்றால் கூடவே மேசையில் இருத்தி உணவு உண்ணச் செய்வது வழக்கம்.
மரியாகிரி பங்கில் மறைக்கல்வி ஆண்டு விழா
நடந்தது. தந்தை ஜேக்கப் விளையில் ஆயர் இலாறன்சை அழைத்திருந்தார். விழாவின் போது
சில மாணவர் டிஸ்கோ நடனம் ஆடினர். தலைமை உரையில் ஆயர் கூறினார், ''நாம் மாதிரியான கலை நிகழ்ச்சிகளை
நடத்தவேண்டும். நடத்துபவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும்
பயன் ஏற்படவேண்டும். ஏதாவது,
ஏனோ, தானோ என நடத்தினால் போதாது, விசுவாச வளர்ச்சிக்கு உதவுகின்ற கலை
நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும்"
மரியாகிரி ஆலயத்தின் சமீபம் உள்ள ஒரு ECI தேவாலயத்தில் குருத்து ஞாயிறு அன்று பவனி
சென்றனர். குந்நன்விளாகத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு குருத்தோலையும்
பிடித்துக் கொண்டு இச்திருஅவையினர் சென்ற போது சில தீவிரவாதிகளால் இவர்கள்
தாக்கப்பட்டனர். இதில் ECI
திருஅவை போதகர் சிசிலும்
காயமுற்றார். ஒரு நாளுக்குப்பின் ஆயர் இலாறன்ஸ் இச்செய்தி அறிந்தார். உடனே ஆயர்
தந்தை ஜேக்கப் விளையில் அவர்களையும் கூட்டி அந்த போதகர் வீட்டில் சென்றார், செபித்தார். அவருடன் நீண்ட நேரம் உரையாடி அவரை
ஆறுதல்படுத்தித் திரும்பிச் சென்றார். எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து மத
பணியாளர்களுடனும் இவர் அன்பும்,
அக்கரையும் காட்டி
வந்தார்.
Unicef -ன் திட்டத்தின் கீழ் 1984-ஆம் ஆண்டு நாகர்கோவில் பகுதியில் மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு
பயிற்சி அளிக்கப்பட்டது. கிறிஸ்துவிளாகத்திலுள்ள அலுவலகத்தில் காலை உணவுக்குப்
பின் இப்பிள்ளைகளைப் பெற்றோர் கொண்டு சேர்ப்பர். Fits, strange behavior, mental retardation, கேள்விக் குறைவு, பார்வை குறைவு போன்ற வகையிலுள்ள பிள்ளைகள்
இங்கு வருவர். சகோதரிகள் பல இடங்களுக்கு சென்று வரும் போது ஆயரைச் சுற்றி
மகிழ்ச்சியுடன் விளையாடும் மாற்றுத்திறனாளி பிள்ளைகளைப் பார்க்கலாம். இது
இவர்களுக்கு ஒரு விண்ணக அனுபவமாக இருந்தது. ஆயரின் கார் வந்தவுடன் ஓடிச் செல்லும் 8 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய மற்றும் உடல் ஊனம்
கொண்ட மணிகண்டன் என்ற பையன் ஆயரின் அருகிலேயே சேர்ந்து இருந்து, ஆயர் போகும் வரை அவரோடு ஒட்டிக்கொண்டே
இருப்பான். ஆயர் இதை மகிழ்ச்சியோடு ஊக்குவிப்பார். இரவில் தாய் வந்து கூட்டிச்
செல்ல முயன்றாலும் நடக்காது. தூங்கிய பின்னர் தான் எடுத்துச்செல்வது வழக்கம்.
அருட்சகோதரி நிர்லீனாவிடம் அலுவலகத்தின் அருகிலேயே அமர்ந்து தினமும் 1/2 மணி நேரம் பாடம் கற்றுக் கொடுக்கக் கூறினார்.
அவர்களும் அதை சரிவர செய்து,
பெருமளவில்
முன்னேற்றமடைந்து ஓடி நடப்பவனாய் மாறினான் மணிகண்டன். மாற்றுத்திறனாளி
பிள்ளைகளிடம் அவர் காட்டிய அன்பு மறக்க முடியாது.
பெண்களால் அதிக நன்மை செய்ய முடியும் என
நம்பிய ஆயர் ஆர்வமுள்ள மகளிரைக் கண்டு பிடித்து அவர்களை மறைபரப்புப் பணிக்காக
அனுப்பினார்.
1990-ஆம் ஆண்டு செம்பிலாவிளை என்ற இடத்தில் ஒரு
நபரை அடக்கம் செய்த இடம் இருந்தது. அங்குள்ள மக்கள், அருட்சகோதரிகள் அங்கு சென்று செபிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
விவரம் அறிந்த ஆயர் தாமே நேரில் சென்று அவ்விடத்தை மறைபரப்பு தளமாக மாற்றினார்.
கேரளாபுரத்திலும் மறைபரப்பு தளம் தொடங்க பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
ஆயர் இலாறன்ஸ் மார்த்தாண்டம் பங்குத்தந்தையின்
பணிகளை நிறைவேற்றி வந்த காலம். அருட்சகோதரி பவுளின் D.M. உடன் பணியாளராக இருந்தார். அப்போது கண்ணக் கோடு, தச்சன் விளாகம், வெள்ளிவிளாகம்,
பம்மம் ஆகிய மறை பரப்பு
தளங்களை வளர்ப்பதில் ஆயர் ஆர்வமுடையவராக இருந்தார். ''ஒரு நபராக இருந்தாலும் மிஷன் தொடங்க வேண்டும். பின்னர் மக்கள்
வருவார்கள்'' என்று கூறுவார். அதன்படி மீனச்சல், பரக்காணி, திருவிதாங்கோடு ஆகிய இடங்களுக்கு ஆயர் அடிக்கடி செல்வதுடன்
அருட்சகோதரிகள் அங்கு போகவேண்டும் என்று கூறவும் செய்தார்.
''எதற்காக அங்கு செல்ல வேண்டும்? நமக்கு ஆட்கள் இல்லையே" என்று ஆதங்கப்படும்போது, “செல்லும் இடங்களில் உள்ள நோயாளிகள், ஆரோக்கியமற்ற குழந்தைகள் ஆகியோரைக்
கண்டுபிடித்து எனக்கு அறிக்கை கொடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். நோயாளிகளுக்கு பாவசங்கீர்த்தனம் கொடுத்து
நற்கருணை வழங்கவேண்டும் என்பது அவருக்கு கண்டிப்பான ஒன்றாக இருந்தது. தந்தை
வில்லியம் O.C.D. அவர்களும், அருட்சகோதரி பவுளினும் சேர்ந்து பங்கிலுள்ள அனைத்து நோயாளிகளையும்
சந்தித்து நோயில் பூசுதல் வழங்கி,
அருளடையாளங்களையும்
பெறச்செய்தார். பங்கை பல வார்டுகளாக பிரித்து, ஒரு திட்டம் வகுக்கச் செய்தார். பங்கிலுள்ள ஏழையென்றோ, செல்வரென்றோ பாராது யார் அழைத்தாலும்
செல்வார். பங்கிலுள்ள மக்களின் செய்திகள் எதையாவது சொல்லாமலிருந்தால் மிகவும்
வருத்தப்படுவதுண்டு. வாழோடு கோயிலை தீ வைத்து அழித்தபோது அதைப் புதுப்பிக்க
ஏற்பாடு செய்தார். ''எல்லோரும் கவனியாது இருப்பது கூடுதல்
கவனிக்கப்படுவதற்கே''
என்று ஆயர் கூறினார்.
அன்றொரு நாள் ஆலப்புழை மாவட்டத்தில் நூறனாடு
தொழுநோய் சானட்டோரியத்தில் ஆயர் இலாறன்ஸ் பேசியபோது கீழ்வரும் கதையைக் கூறினார். 'ஒரு தந்தையும் மூன்று பிள்ளைகளும் சேர்ந்து
உல்லாசப் பயணம் செல்ல தயாராயினர். தந்தை ஒரு பெரிய பொதிச் சோறு கட்டி மூத்த
மகனிடம் கொடுத்துக் கூறினார்,
''நமக்கு மதியம்
உண்பதற்காக இருக்கட்டும்,
கவனமாக பார்த்துக் கொள்". இன்னொரு பொதியில் ரொட்டி, பழம், ஜாம் மற்றும் மூன்றாவது இளைய மகனுக்காக பாலும் சேர்த்து வைத்து
இரண்டாவது மகனின் கையில் கொடுத்தார். பின்னர் மாருதி காரில் பயணம் புறப்பட்டனர்.
நேரம் 10 மணி. இரண்டாவது மகனிடம் ''அந்த பொதியை எடுத்து வா, நமக்கு சிற்றுண்டி சாப்பிடுவோம் என்றார்'' தகப்பனார். அவன் கூறினான், "இது நான் சுமந்து கொண்டுவந்தது. யாருக்கும்
தரமாட்டேன்''. கார் மீண்டும் புறப்பட்டது. மதியம்
ஆனது. ஒரு மரநிழலில் வண்டியை நிறுத்தினார். தகப்பனார் மூத்த மகனை அழைத்து
கூறினார்: ''சோறு எடுத்துவா. நமக்கு மதிய உணவு
உண்போம்'' அவன் கூறினான்: 'இந்த பெரிய பொதியை சுமந்து கஷ்டப்பட்டவன்
நான். அதனால் நான் தரவேமாட்டேன்'.
அன்பு சகோதரர்களே!
இறைவன் நம்மை உல்லாசப் பயணத்திற்கு அனுப்பியிருக்கிறார். சிலரிடம் பெரிய பொதி
கொடுத்தும், சிலரது பொறுப்புக்களை வேறு சிலரிடம்
ஒப்படைத்தும் அனுப்பியிருக்கிறார். ஆகவே ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழ வேண்டும்''.
கன்னியாகுமரி மலங்கரை பவனில் வைத்து
மங்கலாபுரம் குருமடத்தில் பயின்ற தந்தையரின் கூட்டம் நடைபெற்றது. 30 தந்தையர்கள் பங்குபெற்றனர். ஆயர் இலாறன்ஸ்
மங்கலாபுரம் குருமடத்தில் பயின்ற காரணத்தால் அவரும் கூடவே இருந்தார். நீண்ட
ஆண்டுகளாக துணை ஆயராகவே இருந்திருந்த ஆயர் இலாறன்சிடம் அவர்களுக்கு இரக்கம்
தோன்றியது. எனவே அவர்களில் மூத்த குருவாகிய தந்தை ஜார்ஜ் மலஞ்சருவில் எழுந்து
பேராயர், திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தைப்
பிரித்து சுதந்திரமாக பணிபுரிய உங்களுக்கு ஒரு மறைமாவட்டம் தரவேண்டும். இதை
நாங்களே பேராயரிடம் கூறப்போகிறோம்” என்றார்.
உடனே “நான் ஒரு உபதேசியாரின்
மகனாகயிருந்தேன். என்னை தந்தையரிடம் தங்க வைத்து, உபசரித்து,
அன்பு காட்டி ஒரு
குருவாக மாற்றினார் பேராயர். இதில் நான் மிகவும் திருப்தியடைகிறேன். மீண்டும்
இறைவன் என்னை ஒரு ஆயராக மாற்றினார். எனவே நான் இருக்கும் நிலையில் மிகவும்
திருப்தியடைகிறேன் 'யாரும் யாரிடமும்' ஒன்றும் சொல்ல வேண்டாம்". இதுதான் ஆயரின் பதிலாக இருந்தது.
13. வரம்புகளைக் கடந்த தோழமை
1989- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 'ஷில்லாங் என்னுமிடத்தில் வைத்து இந்திய
கத்தோலிக்க ஆயர் பேரவை நடந்துகொண்டிருந்தது. அப்போது மலங்கரை கத்தோலிக்க
மக்களுக்கு, குறிப்பாக குமரி மலங்கரை மக்களுக்கு
ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. அக்கூட்டத்தில் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேமை
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச்செயலராக தெரிந்தெடுத்தனர். அது முதல்
இருமுறை தொடர்ச்சியாக இப்பொறுப்பில் ஆயர் இருந்தார். இப்பொறுப்பில் அமர்த்தப்பட்ட
ஆயர் இலாறன்ஸ் பலராலும் பாராட்டப்பட்டார். ஒவ்வொரு முறையும் மார்த்தாண்டம் ஆயர்
இல்லத்திலிருந்து டெல்கியிலுள்ள இந்திய கத்தோலிக்க ஆயர் அலுவலகத்திற்குப்
பயணமாகும் போது, நாங்கள் அனைவரும் ஆலயத்தில் கூடி
செபித்து ஆயரை அன்புடன் வழியனுப்பி வைப்போம். அவ்வாறே திரும்பி வரும்போது ஆயர்
இயன்றவரை அங்கு நடந்த நிகழ்ச்சிகளின் சாரத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்வார்.
இப்பொறுப்பில் இருந்தபோது இந்திய திருஅவையின்
பல முக்கிய பணிகளில் முழுமையாக ஆயர் ஈடுபட்டார். Catholic Directory of India இவர் காலத்தில் ஒரு முறை வெளியிட
முடிந்தது. CBCI - யின் பொன்விழாவை முன்னிட்டு அதன்
செயல்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் நம் ஆயரும் உறுப்பினராக
இருந்தார். Caritas
India, St. John Medical Colleges, Bangalore ஆகியவற்றின் செயல்பாடுகளிலும் முக்கிய
பொறுப்பு இவரிடம் இருந்தது. இத்துடன் திருஅவையின் பொதுவான பல தேவைகளை நிவர்த்தி
செய்ய அரசை தூண்டுவதற்காக பல தலைவர்களையும் சந்திக்க நேர்ந்தது. தலித்
கிறிஸ்தவர்களுக்கு அரசு சலுகை வழங்க வற்புறுத்துதல், சிறுபான்மை நலன் பாதுகாக்கப்படல் மற்றும் நாட்டின் பொதுவான பல
நலத் திட்டங்களும் அரசு செயல்படுத்தவேண்டும் என்ற நோக்குடன் இத்தலைவர்களை பலமுறை
தனியாகவும், கூட்டமாகவும் சந்திக்கும் வாய்ப்பு
பெற்றார். அவர் சந்தித்த தலைவர்களில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி உயர்திரு.
சங்கர் தயாள் சர்மா, முன்னாள் பிரதமர்கள் உயர்திரு. ராஜீவ்
காந்தி, உயர்திரு. V.P. சிங்,
உயர்திரு. P.V. நரசிம்மராவ், முன்னாள் துணை ஜனாதிபதியும் இந்நாள் ஜனாதிபதியுமாகிய உயர்திரு. K.R. நாராயணன், முன்னாள் உள்துறை இணை அமைச்சர் உயர்திரு. ராஜேஷ் பைலட் மற்றும்
பலர் அடங்குவர். இவ்வாறு மக்களின் நன்மைக்காக யார் யாரை சந்திக்க வேண்டுமோ அவர்களை
சந்திக்க அவர் தயங்கியதில்லை.
''கன்னியர்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டினால்
மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது எளிதாகிவிடும்'' என்று ஆயர் அடிக்கடி கூறுவார். இளம் கன்னியர்களுக்கு பயிற்சி
கொடுப்பதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுக்கு
எளிய முறையில், சுவையாக நடைமுறைக் காரியங்களை
படிப்பித்தார். வெளிநாடுகளுக்கு பயணம் சென்று திரும்பும் போதும், டெல்கியில் C.B.C.I கூட்டங்கள் முடிந்து வரும்போதும் கன்னியரை
ஒன்றுகூட்டி தன் அறிவையும்,
அனுபவத்தையும்
அவர்களுக்கு பகிர்ந்தளிப்பது அவருக்கு தனி இன்பமாக இருந்தது. எந்த மனிதர்க்கும்
அவரிடம் எளிதில் அணுகலாம்.
“சிஸ்டேழ்ஸ்
வேலைக்காரிகளாகக் கூடாது. கானாவூர் திருமண வீட்டில் மாதாவின் பங்கு நீங்கள்
ஆற்றவேண்டும்'' என்பார். திருஅவையில் கன்னியர்களின்
பங்கு என்ன என்ற தெளிவான சிந்தனை அவருக்கு இருந்தது.
அருட்சகோதரி சாவியோ மார்த்தாண்டம் பாலர்
பவனின் பொறுப்பு வகித்திருந்த காலம்; ஆயர்
பாலர் பவன் பிள்ளைகளிடம் காட்டி வந்த அன்பு இன்றும் பசுமையாக அவர்கள் மனதில்
நிற்கிறது. எங்காவது வெளியூர் சென்று வரும்போது இனிப்பு வாங்கி பாலர்பவன்
பிள்ளைகளை பார்க்க வருவார். பிள்ளைகளோடு நீண்ட நேரம் அளவளாவுவார். அவர்களுக்கு
நகைச்சுவை கூறுவார். கேள்விகள் கேட்டு, பதில்
கூறவில்லையென்றால் நான் இனி வரும்போது கூற வேண்டும் என்பார். பிள்ளைகளின்
ஆரோக்கியத்திலும் ஆர்வம் காட்டுவார். பூச்செடிகளும், காய்கறிகளும் வளர்ப்பதில் ஆர்வம் ஊட்டுவார். சோர்ந்து இருக்கும்
போது பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ஆனந்தமடைவார். ஒரு தந்தையின் எல்லாவித
அன்பையும் பிள்ளைகள் ஆயரிடம் அனுபவித்தனர். சிறு பிள்ளைகள் கூட்டமாக அவர்
இருகரங்களிலும் பிடித்து தொங்கி சொந்தம் கொண்டாடுவது வழக்கம்.
புதுநன்மை பெறும் பிள்ளைகள் வெளி
ஆடம்பரங்களில் மூழ்கி,
இறை அனுபவம் பெற
தவறிவிடக்கூடாது என்பதில் ஆயர் விழிப்பாயிருந்தார். எனவே புதுநன்மை ஆடம்பரமாக
பெறும் நாளுக்கு முந்தின நாளிலே வெளி ஆடம்பரங்களும், கொண்டாட்டங்களும் இல்லாமல் பிள்ளைகள் புதுநன்மை பெறச் செய்து
தனியாகவும், கூட்டாகவும் பக்தியுடன் செபித்து இறை
அனுபவம் பெறச் செய்வார். கையிலிருக்கும் மெழுகுவர்த்தியை எரியச்செய்தால் அவர்கள்
கவனம் திரும்பிவிடும் என்று எண்ணி திரி எரிய வைக்க வேண்டாம் என்று
அறிவுறுத்தியிருந்தார். புதுநன்மை பிள்ளைகளுக்கு விருந்து வைப்பதைவிட முக்கியமானது
அவர்கள் ஆன்மீக உணவு தகுந்த தயாரிப்புடன் பெறுவதுதான் என்று நினைவூட்டுவார்.
1990-ஆம் ஆண்டு மந்தாரம்புதூரில் இறையழைத்தல்
முகாம் ஒருவார காலமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் பேராயர் பெனடிக்ட்
மார் கிரிகோரியோஸ் ஆண்டகையும்,
ஆயர் இலாறன்ஸ் மார்
எஃப்ரேம் அவர்களும் அதிகாலையில் வந்தார்கள். பின் மருந்துவாழ்மலையின் உச்சியில்
ஏறி விவிலியத்தின் பல அதிகாரங்களை படித்து தியானித்தார்கள். தியானத்திற்கு பின்
ஜெபமாலை ஜெபித்தனர். தண்ணீர் மட்டும் இடையில் அருந்தினர்.
பின்னர் கீழே இறங்கி வந்து அங்குள்ள ஆலயத்தில்
திருப்பலி நிறைவேற்றினர். அதன் பின்னரே உணவு உண்டனர். இவ்வாறு இம்மலைப் பகுதியில்
தனியாக பல வேளைகளில் செபித்ததுண்டு. இயற்கை எழிலில் ,தனிமையில் இறைவனைக் காண்பது ஆயருக்கு இன்பமாக இருந்தது. 1996 -ஆம் ஆண்டு புனித வார திருச்சடங்கில்
பங்குகொள்ள ஆயருடன் சகோதரர் பத்றோஸ்-ஐயும் (இன்று அருட்தந்தை பத்றோஸ்) கூட்டிச் சென்றார். பாஸ்கா வியாழன் அன்று பிலாங்காலையில் பாஸ்கா
திருப்பலி முடிந்தவுடன் இரவு 10
மணியளவில்
மருந்துவாழ்மலைக்கு கூட்டிச்சென்றார். சுமார் 11 மணியளவில் மலை உச்சியில் சென்றடைந்தனர். இரவில் திரியும் எரிய
வைத்து மலையேறிய இவர்களை நாய்கள் துரத்தின. கூட வந்த சகோதரர் பயந்தே விட்டார்.
ஆனால் ஆயரோ அந்த சகோதரனையும் அரவணைத்து, உறுதிப்படுத்திக்
கூட்டிச் சென்றார். கையில் விவிலியமும் இருந்தது. சகோதரர் விவிலியம் வாசித்து, ஆயர் விளக்கம் கொடுக்க தியானம் தொடர்ந்தது.
இடையிடையே அழுது கொண்டே ஜெபிக்கும் ஆயரைக் காண முடிந்தது. ஒரு மணியளவில் கூட
இருந்த சகோதரர் பத்றோஸ் தூங்கிவிட்டார். காலை 3 1/2 மணியளவில்,
ஆயர் சகோதரரைத் தட்டி
உணர்த்தி, திரும்பி ஆசிரம இல்லம் வந்தடைந்தார்.
இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக சகோதரருக்கு நிலைக்கிறது.
சகோதரர் வர்க்கீஸ் (இன்று அருட்தந்தை வர்கீஸ் நடுதல) பேராயர் இல்லத்தில் தன் முதலாண்டு குருமட பயிற்சியை
பெற்றுக்கொண்டிருந்த காலம். 1984-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நாள்
வழக்கம் போல் காலை உணவிற்குப்பின் பேராயர் இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் நற்கருணை
சந்திப்புக்குச் சென்றுவிட்டு வெளியேறினார். அன்று ஒரு குருகுல முதல்வராயிருந்த
ஆயர் இலாறன்ஸ், சிற்றாலயத்தின் அடுத்த அறையின் முன்
நின்று அருட்சகோதரர் வர்க்கீஸ் நடுதலையை அழைத்தார். உள்ளே கூட்டிச்சென்றபின் ஒரு
கட்டு கவர், அதாவது கடிதங்கள் வந்த கவர் அவர்
கையில் கொடுத்து ஒரு கத்தியும் கூடவே வழங்கி "இதை ஒரு புறம் எழுதுவதற்கு வசதியாக கட்பண்ணி
அடுக்கி தர வேண்டும்''
என்றார். அப்போதுதான்
இப்படி ஒரு பழக்கத்தை அந்த சகோதரர் அறிந்தார். அனைத்து கவர்களையும் ஆயர்
சொன்னபடியே கட் பண்ணி அடுக்கி ஆயரிடம் கொடுத்து திரும்பும்போது, பயனற்ற கவர்களை மீண்டும் பயன்படுத்தும்
பழக்கத்தை ஆயர் இலாறன்சிடமிருந்து கற்றுக்கொண்ட அனேக நபர்களில் இந்த சகோதரரும்
ஒருவர் ஆனார்.
ஆயர் இலாறன்சிடம் ஒரு திட்டத்தையும் கொண்டு
அனுமதி பெறச் சென்றால் உடனே அதை எழுதிக்கொண்டு வரச் சொல்வது வழக்கம். இந்த ஒரு
எதிர்பார்ப்பை பல வேளைகளில் பலருக்கும் செய்ய மனமில்லாமல் இருந்தது. மட்டுமல்ல
அவரிடம் பெரும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால் ஆயர் இதில் மிகவும்
கண்டிப்பாகவே இருந்து வந்தார். இதற்கு காரணங்கள் உண்டு. வந்த நபர் என்ன
கூறியிருக்கிறார்; என்ன பரிந்துரைத் திருக்கின்றார்
என்று அவர் ஒருநாளும் மறக்கக் கூடாது. அந்த கருத்துக்கு ஆயர் என்ன பதில்
கூறியிருக்கிறார் என்பதும் மறந்து போகக்கூடாது. இதனால் கருத்துக்கள்
சூழ்நிலைக்கேற்ப மாற்றப்படாது என்று மட்டுமல்ல, செய்த செயலின் பொறுப்பை எவர்மேலும் தனிப்பட்ட முறையில்
சுமத்திவிடாமல் கூட்டாக எடுக்கவும் துணைபுரியும். ஆகவேதான் ஒரு காரியத்தை
எடுத்துக் கூற வரும்போது அதை பேப்பரில் கொண்டுவர வேண்டும். அத்திட்டம் நிறைவு
பெறும்வரை அந்த பைல் கூடவே எடுத்து வரப்பட வேண்டும் என்று ஆயர்
வற்புறுத்தியிருந்தார்.
கன்னியாகுமரியை அடுத்த மெஞ்ஞானபுரத்தில் பாலர்
பள்ளி ஒன்று ஆயரின் முயற்சியால் நடைபெற்று வந்தது. இப்பள்ளியில் ஆயாவாக
பணிபுரிபவர் திருமதி நல்லாயி என்பவர். சாதாரண குடும்பமாகிய இவருடைய வீட்டில் இந்து
முறைப்படி இவர்கள் மகளுக்குத் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு தம்மால் இயன்ற
உதவியை ஆயர் செய்தார். உதவியுடன் நிறுத்திவிடாது தம் அன்பையும் ஆதரவையும்
தெரிவிக்க அத்திருமண சடங்குகளிலும் பங்குபெற்றார். வீட்டில் வைத்து சமூக முறைப்படி
நடந்த அந்த திருமணத்திற்கு கன்னியாகுமரியிலுள்ள அருட்சகோதரிகளையும் கூட்டிக்
கொண்டு காலையிலேயே மணமகள் வீட்டிற்குச் சென்றார். அங்கு மிகவும் பொறுமையுடனும், அன்புடனும் அமர்ந்திருந்தார். திருமண
நிகழ்ச்சிகள் முடியும் வரை அதில் பங்குபெற்று மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்து
அவர்களோடு கூட இருந்து விருந்திலும் பங்குபெற்றார். பல மணி நேரம் அந்நிகழ்ச்சியிலே
பங்குபெற்று சாதாரண மக்களின் ஆயர் நான் என்று தம் செயலால் நிரூபித்தார்.
அந்நிகழ்ச்சியிலே பங்குபெற மதம் அவருக்கு ஒரு தடையாக இருக்கவில்லை.
இவ்வாறு மேக்கோடு திரு. நாராயணன் நாடார் மகன்
திருமணம் நாகர்கோவிலில் உள்ள பைரவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முழுக்க
முழுக்க இந்து முறைப்படி இந்து பூசாரியால் நடத்தி வைக்கப்பட்ட இந்த திருமணத்தில்
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். அத்திருமணத்திற்கு
ஆயர் அவர்கள் வருகைதந்து திருமண மேடையின் ஒரு பகுதியில் அமர்ந்து அனைத்து
நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று மணமக்களை வாழ்த்தி திரும்பிச்சென்றார். இவ்வாறு
மதத்திற்கும் மேல் மானிட அன்பையும், உறவையும்
மதித்து அவர் தம் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்று அனைவருக்கும் ஆயராக அவர்
திகழ்ந்திருந்தார்...
எந்த ஒரு மனிதனும் ஒரு தீவு அல்ல. மனிதன் ஒரு
சமூக உயிர். சமூகத்திலே பிறந்து சமூகத்திலே வளர்ந்து சமூகத்திலே மடிபவன். எனவே
ஒருவன் விரும்பினாலும்,
விரும்பாவிடினும் ஒரு
குடும்பத்தின் உறுப்பினராக,
ஒரு குலத்தின் மகனாக ஒரு
சமூகத்தை சார்ந்தவனாகத் தான் இருக்க முடியும். ஆனால் தாங்கள் சார்ந்திருக்கின்ற
குடும்பத்தின் பெயரிலோ,
குலத்தின் பெயரிலோ, சமூகத்தின் பெயரிலோ மக்களிடையே பாகுபாடுகள்
பாராட்டப் படக்கூடாது. இந்திய நாட்டைப் பொறுத்தவரையில் சாதி இம்மக்களிடையே
வேரூன்றிவிட்டது. இதன் அடிப்படையில் ஒடுக்குமுறைகளும், ஏற்றத்தாழ்வுகளும் மலிந்துவிட்டன. சாதி வெறியைத் தூண்டி
வளர்க்கும் சுயநலவாதிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. திட்டமிட்டு ஏமாற்றுவதாக
அமைந்த இந்த சாதிவெறி,
ஒரு சில வகுப்பினரின்
தன்னலத்திற்காக சமூகத்தில் தூண்டி வளர்க்கப்பட்ட ஒரு தீய பழக்கம். இதன் கோரப்
பிடியிலிருந்து நம் நாடு விடுபட இன்னும் எத்தனை காலங்கள் தேவைப்படுமோ? தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட பெற்றோருக்குப்
பிள்ளையாக ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்கும் ஒரு நபர் அக்குடும்பத்தை
சொந்தம் கொண்டாடித்தான் ஆக வேண்டும். அடுத்த வீட்டிலே தனக்கு பிரியமான எத்தனை
நபர்கள்தான் இருந்தாலும்,
எத்தனை வசதிதான்
காணப்பட்டாலும் தன் வீட்டைப் போலவே அவ்வீட்டில் உரிமை கொண்டாட முடியாது. தன்
பெற்றோர் தன் பெற்றோர்தான். தன் குடும்பம் தன் குடும்பம்தான். இறைவனின் இந்த
அற்புதமான படைப்பு ஒரு குடும்பத்துடனும், சமூகத்துடனும்
அதிக ஈடுபாடு உடையவனாக மனிதன் வளர்கிறான். இவ்வாறு சொந்த குடும்பத்துடனும், சமூகத்துடனும் ஈடுபாடு கொள்வது வளர்ச்சிக்கு
இன்றியமையாததாக இருக்கின்றன. எனவே ஒரு சமுதாயத்தை சார்ந்து இருப்பதால் மக்களிடையே
நெருக்கமான உறவு ஏற்படுகிறது. உரிமை கொண்டாடப்படுகிறது. ஈடுபாடு அதிகரிக்கிறது.
பொறுப்பும் வந்து சேருகிறது. ஆக மொத்தத்தில் அச்சமூகத்திலுள்ள நலிவடைந்தோர், பின் தங்கியோர் நலன் பாதுகாக்கப்படுகின்றன.
அச்சமூகம் வளர்கிறது. எனவே சொந்த சமுதாயத்தை ஒடுக்குமுறைக்கான ஒரு கருவியாக
மாற்றாது, வளர்ச்சிக்கான, ஒற்றுமைக்கான ஒரு கருவியாகவும் மாற்ற
வேண்டும். இதைத்தான் சிறந்த சமூக இயல் வல்லுநர் ஒருவர் ''சமுதாய சார்பு ஒன்று; சமுதாயப்
பாகுபாடு இன்னொன்று. ஒருவன் ஒரு தனிப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவனாக இருக்கலாம்.
ஆனால் அந்த சமுதாயம் பிற சமுதாயத்தினரை ஒடுக்குவதற்கான ஆயுதமாக இருக்கக்கூடாது'' என்று தெளிவுபடுத்துகிறார்.
இயேசுவும் அன்றைய பாலஸ்தீன நாட்டில் ஒரு
குடும்பத்தில் பிறந்தார். அவர் யூதகுலத்தைச் சார்ந்தவர். எனவே யூதர்களுடைய பழக்க
வழக்கங்களையெல்லாம் பின்பற்றினார். தன் இனத்தாராகிய மக்களிடம் அவருக்கு அன்பும், ஈடுபாடும் வெகுவாக இருந்தது. தன் குலத்திலே
ஊன்றி நின்றுகொண்டு, பிறகுலத்தவரையும் அன்பு செய்து தன்
குலத்தாரிடமிருந்த குறைகளையும் சுட்டிக்காட்டி நிறைவுக்கு அவர்களை
இட்டுச்சென்றார்.
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் சிறந்த
சமுதாயப் பற்றுடையவர். அவர் பிறந்து வளர்ந்த சமுதாயத்தைப் பற்றியும் அதன் குறை
நிறைகளைப்பற்றியும், நன்கு தெரிந்திருந்தார். நான் இந்தச்
சமுதாயத்தைச் சார்ந்தவன் என்று கூறுவதிலே பெருமை கொண்டவர். 1991-ஆம் ஆண்டு பல சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்
பலர் பங்கேற்ற ஒரு கூட்டம். ஆயரும் அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த விருந்தினரில்
ஒருவர். குமரிமாவட்ட மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றிய சிறப்புரை ஒன்று நடந்து
கொண்டிருந்தது. மலையாள மொழியில் உரையாற்றிக் கொண்டிருந்த பிற சமுதாயத்தைச் சார்ந்த
ஒருவர் இடையே ''நாடான் மார்'' என்று கூறினார். நம் ஆயர் அதை பொறுத்துக் கொண்டிருக்கவில்லை. உடனே, உரைக்கு இடையே எழுந்து, ''அங்ஙனெ பறயருது. ஒந்நுகில் 'நாடார்' எந்நு பறயணம்,
அல்லெங்கில் நாடார்
சமுதாயத்தில் பட்டவர் எந்நு பறயணம்'' என்று
திருத்திக் கொடுத்ததை நான் நேரடியாகக் கண்டேன். கேட்டேன். தான் சார்ந்திருந்த
சமுதாயத்தின் மீது அவர் கொண்டிருந்த மதிப்பின் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே இது.
அவர் எந்த ஒரு பிற சமுதாயத்தையும் குறைவாகவோ, இழிவாகவோ கருதவில்லை. அப்படியே எந்த ஒரு பிற சமுதாயத்தைச்
சார்ந்தவரும் தம் சமுதாயத்தை குறைவாகவோ, இழிவாகவோ
பேசுவதை அவர் பொறுத்துக்கொள்ளவுமில்லை.
ஆயர் தம் சமுதாயத்தில் கொண்டிருந்த பற்றுதான்
ஒருவேளை அவரை மிக அதிகமாக தவறாக புரிந்து கொள்ளச்செய்தது எனலாம். இதனால் அவர்
இறுதி 15 ஆண்டு காலம் சகிக்க வேண்டியிருந்த
துன்பங்களும், துயரங்களும் ஏராளம். மலங்கரை
கத்தோலிக்க திருஅவையிலிருந்துதான் இத்துன்பம் அதிகமாக வந்தது என்பதும் மறக்க
முடியாத உண்மையே. இவை ஒன்றும் அவரை தம் பற்றுறுதியிலிருந்து பின்வாங்க
வைக்கவில்லை. ஆயர் எவ்வளவு தான் சமுதாயத்துடன் அன்பு கொண்டிருந்தாலும், அந்த அன்பு எந்த ஒரு பிற சமுதாயத்தினரையும்
குறைத்து எடைபோடச் செய்யவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த கிளிமானூர், திருவனந்தபுரம், நெடுமங் நாடு போன்ற இடங்களிலும், மக்கள் மீது அவர் எவ்வளவு அன்பு காட்டினார் என்பதை, ஆயர் இலாறன்ஸ் மீது இம்மக்கள் காட்டும்
அன்பிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
"யூதரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர யூதருக்கு
யூதரைப் போலானேன். நான் திருச்சட்டத்திற்கு உட்படாதவனாயிருந்தும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களைக்
கிறிஸ்துவிடம் கொண்டுவர அச்சட்டத்திற்கு உட்பட்டவர் போலானேன். திருச்சட்டத்திற்கு
உட்படாதவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர திருச்சட்டத்திற்கு உட்படாதவர் போலவும்
ஆனேன்..... நான் எல்லாருக்கும் எல்லாமானேன்'' (1 கொரி. 9:19-22)
என்ற தூய பவுலின் மனநிலை
நம் ஆயரிடமும் காணப்பட்டது.
கிறிஸ்துராஜபுரத்தில் தங்க வந்தபின் ஒவ்வொரு
மாதமும் மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்க
விருப்பம் கொண்டார் ஆயர். தவறாது எல்லா மாதமும் முதல் ஞாயிறு மாலை 4 மணிக்கு மக்கள் பிரதிநிதிகள்
மார்த்தாண்டத்தில் கூடினர். சமுதாய முன்னேற்றம் பற்றி ஆர்வமுடன் அளவளாவினார்.
ஐம்பதுக்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடினர். இத்தகைய கூட்டங்களுக்கு முறைப்படி
அழைப்பு அனுப்பப்படவில்லை. இதை சாக்கு சொல்லி ஆயர் மீது பழி சுமத்தியவரும் உண்டு.
எவரையுமே ஒதுக்கி வைக்காது எல்லோரும் ஏற்றுக் கொள்ளப்பட்டனர் என்பது அப்பட்டமான
உண்மை. மட்டுமல்ல இக்கூட்டங்களின் ஆரம்பத்திலோ அல்லது இறுதியிலோ குறிப்பிடத்தக்க
நேரம் ஆயருடன் சேர்ந்து ஆழ்ந்த செபத்தில் ஈடுபடுவதும் வழக்கமாயிருந்தது. பல
வேளைகளில் ஆலயத்திற்குள்ளேயே செபத்தின் சூழ்நிலையில் இந்த அமைதியான உரையாடலும், ஆலோசனைகளும் நடைபெற்றன என்றால் இதன் தன்மையை
நன்கு புரிந்து கொள்ளலாமல்லவா?
இந்த கலந்துரையாடலின்
விளைவாக இயன்ற காரியங்களை உடனேயே ஆரம்பிக்க தூண்டினார் ஆயர். அவ்வாறு 1986- மே மாதம் 4-ஆம் தேதி கூடிய கூட்டத்தில் Malankara Students Scholarship Scheme (மலங்கரை மாணவர் முன்னேற்ற நிதி
நலத்திட்டம்) ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் 'Talent Searching' அதாவது மிகச் சிறந்த மாணவர்களை கண்டுபிடித்து
ஊக்கம் அளித்தல், தன்னம்பிக்கை ஊட்டி I.A.S., I.P.S., Research Scholar,
Judges ஆக வர உதவுதல்
ஆகியன. Follow a
child till it comes to the top' என்று
ஆயர் இதன் பொறுப்பாளர்களை அடிக்கடி நினைவு படுத்திக்கொண்டே இருந்தார். ஏராளமான
மாணவ, மாணவியர் பங்குபெற்று நல்ல முறையில்
செயல்பட்டு வந்த இத்திட்டம் அதிகார பூர்வமாக பேராயரால் ஆரம்பிக்கப்பட இருந்தது.
ஆனால் அப்பொழுது சிலரது தவறான தூண்டுதலால் இதற்கு சாதீய நிறத்தைக் கொடுத்து, பங்கேற்பை குறைத்து சில ஆண்டுகள் செயல்பட்டது.
பின்னர் உண்மையை உணரத் தொடங்கிய மக்கள் எவ்வித தயக்கமும் இன்றி ஈடுபட்டு வந்தார்கள்.
நல்ல பல திட்டங்களை, தூரப்பார்வையோடு வகுத்து செயல்பட
தூண்டி வந்தார், ஆயர். பரிசளிப்பு விழாவில்
குழந்தைகளைப் பேச வைத்து அவர்களின் அச்ச உணர்வை அகற்ற வழிவகுத்தார். எப்போதும்
வருங்கால தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக்கூறினார். பல ஆண்டுகள்
கழித்து 1991-ஆம் ஆண்டு இத்திட்டத்தின் பரிசளிப்பு
விழாவின் போது இப்பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது
என்று குறிப்பிட்டார். சிறப்பான முன்னேற்றம் அருகாமையில் உள்ளது என்றார். சமுதாய
முன்னேற்றத்திற்காக சமுதாய மக்களால் எடுக்கப்படும் இத்தகைய முயற்சிகளில் ஆயருக்கு
மிகுந்த நம்பிக்கை இருந்தது.
இத்திட்டத்தில் திரு. இராஜேந்திரபாபு, திரு. இராஜப்பன், திரு. வர்கீஸ்,
திரு. கடாட்சம், திரு. தாசைய்யா, திரு. சைமன்,
திரு. ஞானபிரகாசம், திரு. இயேசுதாஸ், திருமதி. ஜுடித் நிர்மலா, திரு. சக்கிரபாணி ஆகியோர் தாமாக வந்து உதவினர். 1996-ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் கிராத்தூர் ஆலயத்
திருவிழாவிற்கு திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட பரிபாலகராக பணியாற்றி வந்த ஆயர்
இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் வருகை தந்தார்கள். திருவிழா முடிந்தபின் சிலர்
ஆயரைச் சந்தித்து ஒரு கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறினர். உடனே அதற்கு
சம்மதம் தெரிவித்து ஆர்வமுள்ளவர் ஒன்றுகூடி உடனே அதன் வழிமுறைகளை ஆராயச் சொன்னார்.
ஆயரின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்திருந்த அருட்தந்தை பிரேம்குமார், திரு. இராஜேந்திரபாபு, திரு. சைமன்,
திரு கடாட்சம், திரு. ஏசுதாஸ் ஆகியோர் ஒன்றுகூடி ஆயரின்
தலைமையில் உடனடியாக ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் உடனடியாக
விண்ணப்பிக்கக் கூறினார். அதன்படி பலரது முயற்சியாலும், ஒத்துழைப்பாலும் மலங்கரை கத்தோலிக்க கல்லூரி ஒன்றிற்கு அரசு
அங்கீகாரம் பெற்று மரியாகிரியில் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாடார் சமுதாயம் பெயரும், புகழும் பெற்று விளங்குவது எல்லோரும்
அறிந்ததே. பெரும்பாலான இச்சமுதாயத்தினர் இந்து மதத்திலேயே இன்றும் இருக்கின்றனர்.
இருப்பினும் தம் சொந்த சமுதாயத்தினருடன் உறவு வைத்திருப்பது வளர்ச்சிக்குத் தேவை
என்று ஆயர் உணர்ந்தார். ஏழை மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெற நாடார் மகாஜன
சங்கத்திற்கு ரூபாய் ஐந்தாயிரம் அகமகிழ்ந்து அளித்தருளினார் நம் ஆயர். 1910-ஆம் ஆண்டில் மதுரையில் நிறுவப்பட்ட
இவ்வியக்கம் சமூக முன்னேற்றப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. 1989-ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் நாள் இராஜபாளையத்தில் நிகழ்ந்த நாடார் மகாஜன சங்கத்தின் 57-ஆம் மாநாட்டில் ஆயர் இலாறன்ஸ் மார்
எஃப்ரேமுக்கு ''கல்வித் தந்தை' என்னும் பெருமைமிகு விருது வழங்கப்பட்டது.
இவ்வாறு தம் சமுதாயத்திடம் அன்பும், பற்றும்
கொண்ட ஒரு ஆயர் என்று அனைத்து சமுதாயத்தினரும் புகழ்ந்து கூறுவர்.
தந்தையாக இருந்தபோதும் சரி, ஆயராக இருந்தபோதும் சரி, ஆயர் இலாறன்ஸ் மிக மிக சாதாரண வாழ்வு
வாழ்ந்தார். நாகர்கோவில் பகுதியில் பணியாற்றி வரும்போது மிக எளிய உணவை உண்டு
திருப்தியடைந்தார். கிறிஸ்டோபுரத்தில் அன்று அமைந்திருந்த சிறு அறையில்
மகிழ்ச்சியாக ஓய்வெடுத்தார். தனிமையில் நீண்ட நேரம் செபித்தார். ஒரு ஆயரான காரணத்தால்
எத்தகைய வசதியையோ, பெருமையையோ அவர் என்றும் நாடியதில்லை.
சாதாரண மக்கள் தங்கள் வருத்தங்களை அவரிடம் எடுத்துக்கூறி ஆறுதலடைந்தனர்.
அவர்களிடம் உரையாடுவதில் அவருக்கு தனி இன்பம் இருந்தது. இவ்வாறு பாரம்பரிய பெருமைக்கும்
ஆடம்பரத்திற்கும் முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்வை ஆயர் இலாறன்ஸ் வாழ்ந்தார் என்பதை
எவரும் ஒப்புக் கொள்வர்.
பணித்தளங்கள் அமைவது ஆண்டவரின் செயல். அதற்கு
காலமும் இடமும் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது என்று ஆயர் நம்பியிருந்தார். 1986 -ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு நாள் காலை ஆயர்
இலாறன்ஸ் நாகர்கோவில் வந்தார். சகோதரிகளும் கூடச் செல்லவேண்டும் என்று கூறினார்.
சிஸ்டர் மெல்கா மற்றும் செல்வி ஜோசப்பின் கூடச்சென்றனர். அவர்களை
குமாரபுரத்திலுள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று அங்கே இருக்கச் சொன்னார். ஆயர்
புறப்பட்டுச் சென்றார். ஆனால் திரும்பி வந்தபோது மாலை 6 மணி ஆகியிருந்தது. அவர்கள் அங்கு அக்குடும்பத்தாருடன் செபித்து, பேசி, உரையாடி இருந்தனர். இது அங்கு ஒரு மறைபரப்புத்தளம் அமைய உதவியாக
இருந்தது.
பணித்தளங்களைத் தேடி அலையும் ஆயர்
இவ்விருப்பத்தை தன் கூட பணிபுரிவோரிடமும் அடிக்கடி கூறிவந்தார். 1987-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆயர் இலாறன்ஸ் சிஸ்டர்
மெல்காவை அழைத்து கூறினார்: ''பார்வதிபுரத்தில் நமக்கு ஒரு மிஷன்
ஏற்படவேண்டும். அதற்குரிய ஒரு மையத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்'' என்றார். கேட்டவுடன் சிஸ்டர் சற்று
தயங்கினார்கள். நம் முயற்சியால் என்னதான் நடந்துவிடும். ஆனால் தங்கள் உள்ளத்தில்
எழுந்த சந்தேக உணர்வை வெளியே கூறிக்கொள்ளவில்லை. கூறினால் அதை ஏற்றுக்கொள்பவரோ, பாராட்டுபவரோ அல்ல ஆயர் என்று அவர்களுக்கு
நன்கு தெரியும். எனவே எப்படியும் கீழப்படிதலே ஒரே வழி என்று முடிவு எடுத்தார்கள்.
நீண்ட நேரம் செபித்தபின் எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லாமலே பார்வதிபுரம் நோக்கி
பயணம் ஆனார்கள். சென்றவர்கள் பார்வதிபுரத்தில் இந்து சகோதரர்கள் வாழும் தெருவுக்கு
சென்றார்கள். தற்செயலாக திரு. கிருஷ்ணன் அய்யர் என்பவரின் வீட்டில் சென்று அவரோடு
சிறிது நேரம் பேசினார்கள். நலன் விசாரித்து முடித்தபின் அவர் நம்பிக்கைக்குரிய
நல்ல மனிதர் என்று அவர்களுக்குத் தெரிந்தது. எனவே தன் நோக்கத்தை அவர்களிடம்
மறைமுகமாக கூறினார்கள். அவர் அதை சரியாக முறைப்படி புரிந்து கொண்டவராக "இப்போது எங்கள் கட்டிடம் இருக்கும் இடத்தின்
அருகில் ஒரு கல்சிலுவை உள்ளது. அதை வேண்டுமானால் உங்களுக்கு விலைக்கு வாங்கலாம்'' என்று கூறினார். சிஸ்டருக்கு ஒரே மகிழ்ச்சி.
லாட்டரி சீட்டு அடித்தது போன்ற ஆனந்தம். சென்று இடத்தைப் பார்த்தபின் செய்தியை
அவர்கள் ஆயரிடம் கூறினார்கள். ஆயரும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். முறைப்படி
அதன் உரிமையாளரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட அவ்விடத்தில் இன்று ஓங்கி உயர்ந்து
நிற்கும் ஆலயத்தில் ஞாயிறுதோறும் திருப்பலி நடைபெறுகிறது. பாரம்பரியமாக சாதி, மத, வேறுபாடின்றி
மக்கள் வந்து இறைவனைத்தொழுது நன்மைகள் அடைந்துவரும் இவ்வாலயம் ''தைநேசிமாதா'' பெயரில் உள்ளது.
மலங்கரை கத்தோலிக்க திருஅவையின் தனித்தன்மைகளை
பாதுகாப்பதில் ஆயர் சிறப்பான கவனம் செலுத்தியிருந்தார். வழிபாட்டு முறைகள் மலங்கரை
திருஅவையின் முறைப்படி நடத்துவதில் விழிப்பாயிருந்தார். திருப்பலிக்கு பத்திரா' (புளியாத அப்பம்) வைக்கப்பட்டிருந்தது.
சந்தேகத்தின் பெயரில் ஆயர் பத்திறாயா? ஹமீறாயா? என்று கேட்டார். அது பத்தீறா என புரிந்து
கொண்ட ஆயர் ஓட்டுநரை கன்னியாகுமரிக்கு அனுப்பி 'ஹமீறா'
கொண்டுவரச்சொல்லி, வந்த பின்னரே திருப்பலி நிறைவேற்றினார்.
மலங்கரை கத்தோலிக்க திருஅவையின் தனித்தன்மைகளையும் மரபுகளையும் பேணி பாதுகாத்து
பிறருக்கும் அவற்றை கற்பித்து வந்தார். பெண்களும், பிள்ளைகளும் இயேசு வாழ்ந்த காலத்திலேயே அவ்வளவாக
கவனிக்கப்படவில்லை. இச்சமூகத் தீமைகள் ஓரளவு நாம் வாழும் சமூகத்திலும்
நிலைநிற்கிறது என்பது உண்மை. பிள்ளைகளின் கல்வியிலும், பராமரிப்பிலும் இன்று குறிப்பிடத்தக்க கவனம் பெற்றோரால்
செலுத்தப்படுவது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் பெண்களைப் பொறுத்தவரையிலே அன்று
சமூகம் அவர்களை சமமாக கருதுவதில்லை; வரவேற்பதில்லை; தேவையற்ற பல சுமைகளை அவர்கள் மேல் இந்த ஆண்
ஆதிக்க சமூகம் சுமத்திவைத்திருக்கிறது. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒரு தீமையே
வரதட்சணை என்ற பழக்கம். குமரிமாவட்டம் இத்தீமையில் முன்வரிசையில் நிற்கிறது என்ற
உண்மை நமக்கு அவமானமாகவும்,
வேதனையாகவும் உள்ளது.
இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைக்குடும்பங்கள். பணம் இல்லாத ஒரே காரணத்தால்
வாழ்வில் திருமணம் நடைபெறாமல் நிற்கும் மகளிருக்கு இங்கு பஞ்சமில்லை. இந்த
அப்பட்டமான உண்மையை நன்கு அறிந்து இச்சமூக கொடுமைக்கு ஒரு தீர்வு காண ஆயரால்
எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சியே ஏழைப்பெண்கள் திருமண உதவித் திட்டம்.
குடும்ப வாழ்வு நடத்துவது ஒருவரது அடிப்படை
உரிமை என்றும் அதை இச்சமூகம் மறுப்பது இறைவனுக்கு எதிராக இழைக்கும் தீமை என்றும்
அப்பட்டமாக எடுத்துக்கூற ஆயர் தயங்கவில்லை. இந்த பாதிக்கப்படும் பிரிவினர் பக்கம்
இச்சமூகத்தின் கவனம் செல்ல வேண்டுமென்று ஆயர் விரும்பினார். அக்காலத்தில்
மார்த்தாண்டத்தில் கிறிஸ்தவ திருஅவையினர் ஒன்றுகூடி ''ஐக்கிய கிறிஸ்மஸ் விழா'' நடத்த
ஏற்பாடாயிற்று. ஆயரே அதன் தலைவராக இருந்தார். சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு
முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் கிறிஸ்தவ திருஅவைகளுக்கு வெளியே இந்து
மற்றும் முகமதிய சகோதரர்களும் மற்றும் சில தொண்டு நிறுவனங்களும் பங்குபெற்றன.
இவ்விழாவை மீண்டும் பொருள் உள்ளதாக மாற்ற இதை
ஒட்டி ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் அறிமுகமானது. ஒவ்வொரு பிரிவினரைச்
சார்ந்த ஒரு ஏழைப் பெண்ணுக்கு அன்று ரூபாய் 3000/- வழங்கி திருமணம் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.
இதில் பலர் நேரடியாகவும்,
மறைமுகமாகவும் ஈடுபட்டு
வருவது நம்பிக்கையூட்டுகிறது. இந்த உதவியை அந்தந்த பிரிவினரின் தலைவர்கள் வழி
வழங்குவதால் உதவி பெறும் பெண்கள் கூட்டத்திற்கு முன் தோன்ற வேண்டிய அவசியமும்
இல்லை. இத்திட்டம் வழியாக முதல் 18
ஆண்டுகளிலேயே சுமார் 250 பெண்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் இன்றும்
தொடர்ந்து நடைபெறுகிறது. இம் முயற்சிகளில் ஆரம்பம் முதல் திரு. தேவதாஸ், திரு. இராஜப்பன், திரு. இராஜேந்திரபாபு, திரு.
வர்க்கீஸ், திரு. கடாட்சம் திரு. மரிய நார்பர்ட்
மற்றும் பலர் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவது பாராட்டுவதற்குரியது.
1993 ஆம் ஆண்டு பேராயர் பெனடிக்ட் மார்
கிரிகோரியோஸ் ஆண்டகையின் குருத்துவ பொன் விழாவை ஒட்டி 50 தம்பதிகளுக்கு மார்த்தாண்டம் C.S.I சிங்களேயர் அரங்கில் வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில்
இப்பெண்களுக்கு ரூ.10000/ சிறப்பு உதவியாக வழங்கப்பட்டதும்
குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பெண்கள் மீது சமூகம்
சுமத்தியிருக்கும் சுமையை குறைக்க பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டமாக
ஆயரின் இம்முயற்சி மாறி இருக்கிறது.
14. தனிநபர் மீது காட்டிய அக்கரை
ஆயருக்கு அவர் இல்லத்தில் உதவி செய்து வருபவர்
அருட்சகோதரி எமிலியானா. ஒருநாள் திடீரென அவர்களுக்கு தொலைபேசி வழியாக ஒரு செய்தி
வந்தது. மடத்தில் செய்தி அறிவிக்க ஒருவர் சென்றார். உங்கள் அப்பா இறந்துவிட்டார்'. செய்தி கேட்டு அச்சகோதரி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அச்சகோதரி, தன்னைத் தேற்றிக் கொண்டு, வீடு செல்ல தயாரானார்கள். இதற்குள் ஆயர்
இலாறன்ஸ், ஒரு குறிப்பு எழுதி இச்சகோதரிக்கு
கொடுத்து அனுப்பியிருந்தார். அதில் ''மிக
ஆழ்ந்த வருத்தமுடன் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தந்தையின் ஆன்மா
சாந்தியடைவதற்காக உருக்கமுடன் செபிக்கிறேன். அவர் இப்போது விண்ணில் இருக்கிறார்.
எனவே உறுதியாய் இருங்கள்'',
என்று எழுதி கையொப்பம்
இடப்பட்டிருந்தது. வீடு திரும்புமுன் அச்சகோதரி ஆயருக்குத் தேவையான சில
அத்தியாவசிய பொருட்களை எடுத்து ஒப்படைப்பதற்காக ஆயர் இல்லம் சென்றார்கள்.
சகோதரியைக் கண்ட ஆயர் அவர் கரங்களைப் பற்றிக்கொண்டு கண்ணீர்விட்டு அழுதார்.
சகோதரியும் அழுதார்கள். சகோதரியின் அப்பாவை ஆயருக்கு நன்கு தெரியும். இறுதியில்
வாடகைக்காரில் வீடு செல்ல இருந்த அவர்களுக்காக ஆயர் இல்லத்தில் உள்ள வண்டியை
அனுப்ப ஏற்பாடு செய்தார். இதற்குள் மதர் இல்லத்திலிருந்து வந்த இரண்டு சகோதரிகளும்
மற்றும் அருட்தந்தையர்,
உடன் பணியாளர்
ஆகியோருடன் அச்சகோதரியின் இறந்த தந்தையின் நல்லடக்கத்தில் பங்குபெறச் சென்றனர்.
உடல் நலமின்மையால் சகோதரியின் அப்பாவின் நல்லடக்கத்திற்குச் செல்ல முடியாமலிருந்த
ஆயர் அன்னாரது 41-ஆம் நினைவு நாளில் அருட்தந்தையருடன்
அவர் கல்லறைக்குச் சென்று திருப்பலியாற்றினார். இவ்வாறு ஆயர் இலாறன்ஸ் பிறரை
பரிவோடு கண்ணோக்கி இருந்தார். தன்னுடைய உடல் நலக்குறைவோ, வேலைப்பழுவோ ஒன்றும் இதற்கு தடையாக இருக்கவில்லை.
ஆயர் இலாறன்ஸ் மறைபரப்பு தளங்கள்
கண்டுபிடிப்பதிலும், ஆரம்பிப்பதிலும் ஆர்வமுடையவர் என்ற
செய்தி பலரும் அறிந்தனர். தங்கள் இடங்களில் அத்தகைய மையம் ஒன்று ஆரம்பிக்க
வேண்டும் என விரும்பியவர் அவரை நேரடியாக அணுகவும் செய்தனர். வடக்கு பகவதிபுரம்
அருகிலுள்ள ஜேம்ஸ் டவுணைச் சார்ந்தவர் திரு. துரை ராசையா அவர்கள். புராதன C.S.I திருஅவை உறுப்பினராக விளங்கியது இவர்
குடும்பம். இவர் பிள்ளைகள் வேதபோதக பணியில் முழுமையாக ஈடுபடும் அளவிற்கு ஆழ்ந்த
விசுவாசம் உடையவர்கள். பற்பல காரணங்களுக்காக இவர்கள் கத்தோலிக்கத் திருஅவை
உறுப்பினராக விரும்பினர். மட்டுமல்ல, தம்
இடத்தில் ஒரு கத்தோலிக்க வழிபாட்டு இடம் வேண்டும் என்றும் வெகுவாக ஆசைப்பட்டார்.
இதன் அடிப்படையில் 1986-ஆம் ஆண்டு ஆயர் இலாறன்ஸ் அவர்களை
நேரடியாக சந்தித்து தம் விருப்பத்தைத் தெரிவித்தார். அத்துடன் நானும் தொடர்பு
கொண்டேன். ஆயருடன் மிகுந்த ஆதரவும், பற்றும்
காட்டிய இவர் எப்படியும் விரைவில் ஒரு மையம் எல்லா ஊரிலும் ஆரம்பிக்கவேண்டும்
என்றும், அதற்கு வேண்டிய உதவிகளை தாம்
செய்வதாகவும் உறுதியளித்தார். ஆயர் இலாறன்ஸ் அவர்கள், வீட்டிற்குச் சென்றார், செபித்தார்.
அவருக்கு சொந்தமான இன்னொரு வீட்டில் செபிக்க கேட்டுக்கொண்டார். ஆயரோ அதை
ஆரம்பித்தும் வைத்தார். அதன்படி ஒருவாரத்தில் ஒரு நாள் செபம் நடந்தது. அருகிலுள்ள
சில குடும்பங்கள் இதில் வந்து பங்குபெற்றன. இவ்வாறு பல மாதங்கள் கடந்தன. துரை
ராசையா தமக்கு சொந்தமான சிறிது இடத்தையும் திருஅவைக்குக் கொடுத்தார். அவரும்
மலங்கரை கத்தோலிக்க திருஅவையில் சேர்ந்து கொண்டார். ஞாயிறு திருப்பலியும்
அவ்வப்போது நிறைவேற்றப்பட்டது. நாகர்கோவில் பங்கைச் சார்ந்த திரு. கிறிஸ்டல் ஜாண்
குடும்பமாக மனைவி மற்றும் மகள் அனிலா கிறிஸ்டி (தற்போது அருட்சகோதரி அனிலா
கிறிஸ்டி) சென்று ஞாயிறு தோறும் பிற்பகல் நற்செய்திப் பணி ஆற்றி வந்தனர். அவ்வாறு
மலங்கரை திருஅவையின் ஒரு சிறு கிளை ஜேம்ஸ் டவுனில் ஆரம்பிக்கப்பட்டது. 'தாமாக வந்து திருஅவை தொடங்க வழிவகுத்த திரு.
துரை ராசையா போன்றோர் கடவுளால் அனுப்பப்படுகின்றவர்கள். இது கடவுளின் செயல். மனித
முயற்சி அல்ல'' என்று ஆயர் அடிக்கடி
அறிவுறுத்துகிறார்.
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள்
வெளிநாட்டுப் பயணங்களைத் தேடி அலைந்தவர் அல்ல. தேவைகளின் அடிப் படையில் அழைப்பு பல
வேளைகளில் அவரைத் தேடி வந்ததுண்டு. திருத்தந்தையை சந்திக்க அழைப்பு வந்தமையால் 1995-ஆம் ஆண்டு மற்றும் மலங்கரை திருஅவைத்
தலைவர்களுடன் 'Ad
limina' சந்திப்பிற்காக
உரோமுக்குச் சென்று திருத்தந்தையை சந்தித்தார். திருத்தந்தை அவருக்கு பரிசுகள்
வழங்கி பாராட்டினார். மற்ற ஆயர்களுடன் அவருக்கும் வழங்கப்பட்ட பூசை பாத்திரங்கள்
(திருத்தட்டம், திருக்கிண்ணம்) இன்றும் உள்ளன.
ஆயர் ஆற்றி வந்த சுகாதாரப் பணிகளின்
அடிப்படையிலும் மற்றும் பல நோக்கங்களுடனும் ஜெர்மனிக்கு சிலமுறை சென்று
வந்ததுண்டு. பெரியவர்களுடனும்,
மற்ற அமைப்புகளுடனும்
நேரடியாக உரையாடி நம் மக்களுக்கு நன்மை செய்தார். ஜெர்மனிக்கு செல்லும் போது
விமலபுரத்தைச் சார்ந்த திரு. சில்வஸ்டரும் அவரது குடும்பமும் மிகுந்த ஆதரவும், ஒத்துழைப்பும் அவருக்கு கொடுத்திருந்தனர்.
இவ்வாறு மனிதனின் ஆன்மீக, சமூக, சுகாதார நன்மையை பெருக்கும் நோக்குடன் ஆயர் இலாறன்ஸ் மார்
எஃப்ரேம் அவர்கள் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா,
ஹாங்காங் போன்ற
வெளிநாடுகளை சந்தித்திருக்கின்றார்.
பல மொழிகளையும் ஆயர் கற்றிருந்தார். மலையாளம், ஆங்கிலம், தமிழ்,
இலத்தீன், சிரியன், இத்தாலியன்,
ஜெர்மன் போன்ற மொழிகளில்
பேசுவதற்கும் பிறரோடு தொடர்பு கொள்வதற்கும் அவரால் முடிந்தது.
1983-ஆம் ஆண்டு ஆயர் இலாறன்ஸ் மறைபரப்புப் பணியில்
தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம். குறிப்பாக மலங்கரை திருஅவை அவ்வளவாக பிரபலமடையாத
நாகர்கோவிலைச் சுற்றிய பகுதிகளில் அவர் கவனம் சென்றது. அப்போதுதான் ஆளூர் புன்ன
விளையில் லண்டன் மிஷன் என்ற பெயரில் பெரியவர் ஒருவர் தன் குடும்பத்துக்காக ஒரு
சிறு ஆலயம் வைத்து நடத்தி வந்தார். நேரடியாக திருஅவைத் தலைவர் எவருடனும் தொடர்பில்லாதிருந்த
திருஅவையிலுள்ள சுமார் ஐந்து குடும்பத்தினர் கத்தோலிக்க மறையில் இணைவது என்று
தீர்மானித்தனர். உடனடியாக அப்பொழுது ஒரு தீர்மானம் ஏற்படுவதற்கு இன்னொரு காரணமும்
இருந்தது. குமரியில் அதிகமான மலங்கரை மக்களைக் கொண்ட பங்கு கிராத்தூர். இந்த
கிராத்தூர் பங்கை சார்ந்த திரு. ஹென்றி ஆசிரியரின் சகோதரி பான்சியை
மேற்குறிப்பிட்ட ஆளூர் புன்னவிளை திருஅவையைச் சார்ந்த திரு. தங்கராஜ் திருமணம்
செய்தார். எனவே திரு. ஹென்றி ஆசிரியரின் தூண்டுதலுடன் இச்திருஅவையினர் ஆயர்
இலாறன்சை சந்தித்துப் பேசினர். பல கட்ட உரையாடலுக்குப்பின் ஆயர் இலாறன்சின்
தலைமையில் ஆளூர் திருஅவை மக்கள் அனைவரும் கத்தோலிக்க திருஅவையில் இணைந்தனர். அந்த
ஆலயம், அதற்குரிய கல்லறைத் தோட்டம் அனைத்தும்
திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தின் பெயருக்கு எழுதிக் கொடுத்தனர் அம்மக்கள்.
பின்னர் அந்த மகிழ்ச்சியான நாளில் திரு. தங்கராஜ் வீட்டில் எங்களுக்கு விருந்து
வழங்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பிக்கப்ட்ட ஆளூர் திருஅவையில் ஆலயம் பின்னர் 1991-ஆம் ஆண்டு பெரிதாக கட்டப்பட்டு இன்று புதுப்
பொலிவுடன் விளங்குகிறது.
தனிநபர்கள் 'HOM' திட்டத்தில் பணிபுரிவது வழியாக பற்பல வகைகளில் தங்களால் இயன்றவரை
வளர்ச்சி பெற முடிந்தது என்பதை அங்கீகரிப்பர். இத்திட்டத்தில் பணிபுரியும்
திருமதி. கனகபாய் சத்தியதாஸ் கூறுகையில், ''HOM
திட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்த ஒரே காரணத்தால்தான் என் போன்ற பல பெண்கள்
இன்று சமூகத்தில் துணிவுடன் செயல்பட முடிகிறது. குழித்துறையில் இருந்து
மார்த்தாண்டம் வரை பேருந்தில் பயணம் செய்ய தயங்கி நிற்கும் நான் இன்று திருச்சி, தஞ்சாவூர், சென்னை,
பெங்களூர் போன்ற
இடங்களுக்கு தனித்தே பயணம் செய்து பல பயிற்சி முகாம்களில் பங்கு பெற்று
வந்திருக்கின்றேன் என்றால் அதற்கு வழிகாட்டி வளர்த்தியவர் ஆயர் இலாறன்ஸ் அவர்களே.
மட்டுமல்ல என் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த காலத்தில், அவரை அழைத்து அரவணைத்து அன்புகாட்டி அந்த தீய
பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட காரணமாயிருந்தார். இதனால் இன்று என் கணவரும், குடும்பமும், இறை பற்றிலும்,
மகிழ்ச்சியிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்''.
ஒவ்வொரு துறையிலும் திறமைமிக்கவர்களைக் கண்டு
கலந்துரையாடி ஆலோசனை பெற்று அவர்களின் ஒத்துழைப்பையும் நாடுவது வழக்கம். ஒருமுறை
திரு. கிறிஸ்டல் ஆன்றணியையும் வேறு சிலரையும் அழைத்துக்கொண்டு ஆயர்
கன்னியாகுமரிக்குச் சென்றார். கோவளம் அருகில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில்
இருக்கும் ஒரு பாறைப்பகுதி அது. அங்கு அவ்வப்போது சென்று செபிப்பதும் இயற்கையை
ரசிப்பதும் உண்டு. அந்த பாறையிலே ஒரு மலங்கரை சிலுவை கொத்தி வைக்க வேண்டும் என்று
திரு. கிறிஸ்டல் ஆன்றணியிடம் கூறினார். அதன்படி அப்பணி சில நாட்களுக்குப் பின்
பூர்த்தி ஆக்கப்பட்டது. பல மக்கள் இச்சிலுவையை நோக்கி செபித்து
பிரச்சனையிலிருந்தும்,
நோயிலிருந்தும்
விடுதலைப் பெறுவதற்கு இது வாய்ப்பாக அமைந்தது. ஆயரின் இந்த தொலைநோக்குடன் கூடிய
சிந்தனையின் விளைவே இது.
1997 ஜனவரி மாதம் ஒருநாள், ஆயர் மேரி மக்கள் துறவு சமூக அருட்கன்னியர்களுடன் சுற்றுலாப் பயணம்
சென்றார். அனைவருக்கும் மிக்க மகிழச்சி. கிறிஸ்துராஜா வண்டியில் பயணம் ஆரம்பமானது.
நேராக மருந்துவாழ்மலையை அடைந்தது. அனைவரும் மலையேறி சூரிய உதயம் கண்டனர். அங்கே
அமர்ந்து சிறிது நேரம் இயற்கையில் வாழும் இறையன்பு பற்றிய சிறு தியானம் செய்தனர்.
சுமார் 7.30 க்கு ஆங்காங்கே அமர்ந்து காலை உணவு
உண்டனர். ''உணவு ஆரோக்கியம் இவற்றை நினைத்து
என்றும் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இறைவன் தரும் உடல் நலம் அவரை அன்பு
செய்வதற்கும், அவரது பிள்ளைகளை அன்பு செய்வதற்கும், பணி செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும்'' என்று அறிவுரை கூறிய ஆயரின் வார்த்தைகள்
முதலாமாண்டு சகோதரிகளின் இளம் மனதில் ஆழமாக பதிந்தது. இறங்கி வந்தபோது ஒரு
வீட்டின் அருகில் நட்டு வளர்த்தியிருந்த காய்கறித் தோட்டத்தைச் சுட்டிக்காட்டி, "இவ்வாறு தான் மனிதர்களும். ஏராளம் திறமைகளும், வாய்ப்புகளும் ஒன்றும் இல்லாவிட்டாலும் நமக்கு
கடவுள் தந்திருப்பவை ஒன்றும் சற்றும் பாழாக்காமல் பயிர் செய்தால் இறைவன் நல்ல பலன்
தருவார். சோம்பேறிகளாக மாறாமல் என்றும் ஆர்வமும், சுறுசுறுப்பும் உடையவர்களாக இருக்க வேண்டும்''. அங்கிருந்து காற்றாடி மலை சென்றபோது நகைச்சுவை
கூறி, பாடல் பாடி, விடுகதைகள் இட்டு அனைவரையும் மகிழ்வித்தார். ஆயரில் இருந்த
திறமைகளும் கலையுணர்வும் ஒவ்வொன்றாக வெளிப்பட்டன. பின்னர் ஒரு தொடர் பாடல் பாடிக்
கொடுத்தார்.
ஆ....ஆன ஆறாட்டு....... ஈ... ஈச்ச ஈராண்டு.......
உ....ஊத்து ஊஞ்ஞாலு..... எ......ஏணி ஏலக்கா........
இசையுடன் தாளம், ஓசை தவறாமல் ஒவ்வொரு குழுவையும் சில நிமிடங்களில் பாட கற்றுக்
கொடுத்தார். அப்பாடலின் இசையும்,
குரலும் இவர்கள் மனதில்
இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. காற்றாடி மலை ஆலயத்தில் மிக பக்தியுடன்
திருப்பலி நிறைவேற்றினார். மதிய உணவின்போது சிரிப்பூட்டுவதுடன் நின்றுவிடாது வேத
சாட்சி தேவசகாயம்பிள்ளையின் வரலாற்றை அனைவருக்கும் விளக்கிக் கொடுத்தார். வேதச் சாட்சியாக
அனைவருக்கும் சவால்விடவும் செய்தார். சீடத்துவத்தின் விலை, இயேசு சீடன் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று
அவர்கள் இளம் உள்ளங்களில் பதியச் செய்தார்.
தொடர்ந்து கன்னியாகுமரி கடல் அலைகள் பாதங்களை
தட்டுவதை ரசித்துக்கொண்டு சிற்றுண்டி அருந்தினர். ஆயரும், குழுவுக்கு 'Ave
Maria' (மரியே வாழ்க)
என்ற ஈரடிப்பாடலைக் கற்றுக்கொடுத்தார். இந்நிகழ்ச்சி எல்லாம் இவர்கள் மனதில்
என்றும் நிற்கின்றன. விளையாட்டும், அதனிடையே
கௌரவமான செயல்பாடுகளும் ஒன்றாக்கி தேவைக்கு சேர்த்துக்கொடுத்த ஆயர் இலாறன்சின்
அந்த பெரிய மனதும், உண்மையாக மனிதத் தன்மையில் நிறைந்து
காணப்பட்ட புனிதத் தன்மையும் என்றும், எல்லோருக்கும்
ஒரு மாதிரி தான்.
சமூகத்தில் துன்பம் அனுபவிக்கின்ற பெண்கள்
மீது அவருக்கு தனிப்பட்ட அக்கறை இருந்தது. உணவின்றியும், கணவரின் துன்புறுத்தலாலும், வறுமையின் பிடியினாலும், பிள்ளைகளை
வளர்த்த வேண்டிய பொறுப்பாலும் எல்லாம் வேதனையும் துன்பமும் அனுபவிக்கும்
பெண்களுக்கு உதவ அருட்சகோதரிகளுக்கு அதிகமாக முடியும் என்று கூறினார். அக்கால
கட்டத்தில் செல்லும் இடமெல்லாம் 'தாய்-சேய்' நலன் பற்றியே போதித்தார். ஒருமுறை பயணம் செய்துவிட்டு
மார்த்தாண்டம் வரும்போது வழியில் மன நோயாளியாயிருந்த ஒரு தாயைக் கண்டார். ஆயர்
இல்லத்தில் வந்து சேர்ந்தவுடன் அப்பெண்மணியைக் கூட்டிவர அருட்கன்னியரிடம்
கூறினார். இரண்டு சகோதரிகள் மிகவும் சிரமப்பட்டு அப்பெண்மணியை கண்டுபிடித்து அழைத்து
வந்தனர். அப்பெண் மனநோய் முற்றியவராய் இருந்தார். உணவு கொடுக்கவும், ஆயர் கட்டளையிட்டார். வயிறு நிரம்ப அவளுக்கு
உணவளித்தனர். உண்டபின் எஞ்சிய உணவை அள்ளி சகோதரிகளின் மேல் வீசினார். குளிப்பாட்ட
முயன்றபோது தீய வார்த்தைகள் பேசி,
கற்களை எடுத்து
சகோதரிகளுக்கு நேராக வீசி பின்னர் ஓடிவிட்டார். அப்பெண்மணிக்கு அதிகமான பணிவிடை
செய்ய முடியாமல், அங்கிருந்து ஓடிவிட்ட செய்தி அறிந்து
ஆயர் மிகவும் வேதனைப்பட்டார்.
பெண்களால் அதிக நன்மை செய்யமுடியும் என்று
நம்பிய ஆயர், ஆர்வமுள்ள மகளிரைக் கண்டு பிடித்து
அவர்களை மறைபரப்புப் பணிக்காக அனுப்பினார்.
ஆயர் இலாறன்சுக்கு ஒருமுறை இதய அறுவை சிகிட்சை
செய்ய வேண்டி வந்தது. முறையான பரிசோதனைகள். திருவனந்தபுரத்திலேயே செய்து
முடித்தப்பின் 13.5.1993
அன்று சென்னையிலுள்ள
விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள். உடனடி தயாரிப்பாக அஞ்சியோகிராம்
சோதனை நடத்தப்பட்டது. அந்நாட்களில் மிகுந்த வேதனை அனுபவித்தார். ஆயருக்கு உதவியாக
நாங்கள், தந்தை ஜார்ஜ் ஜாண் மற்றும்
தந்தையர்களும், அருட்சகோதரி ஏய்மார்டு, அருட்சகோதரி எமிலியானா ஆகியோரும் நின்று
கவனித்துக் கொண்டோம். அறுவை சிகிட்சைக்கு முந்தைய நாள் பேராயர் பெனடிக்ட் மார்
கிரிகோரியோஸ் அவர்கள் மருத்துவ மனையில் சென்று ஆயரை சந்தித்து ஜெபித்தார். அப்போது
ஆயர் பேராயரிடம் கேட்டு,
நோயில் பூசுதல் என்னும்
அருளடையாளத்தைப் பெற்றுக் கொண்டார். அதற்கு முன்னரே ஒப்புரவு அருளடையாளம்
பெற்றிருந்தார். அவ்வாறு இதய அறுவை சிகிச்சைக்கு முன் இறப்புக்கு தன்னையே
தயாரித்துக் கொண்டு, இறைவன் எப்பொழுது அழைத்தாலும், செல்வதற்கு தயாராக இருந்தார். 17.5.1993 அன்று அறுவைச் சிகிட்சை வெற்றிகரமாக
நடத்தப்பட்டது. அறுவை சிகிட்சைக்கு பிந்தைய நாட்கள் மிகவும் விழிப்புடன் இருக்க
வேண்டிய காலம். மிகுந்த வேதனையும் அனுபவித்த நாட்கள். வேதனை மத்தியிலும் தனக்கு
பிடித்தமான தெய்வீகப் பாடல்கள் அருகில் நின்றிருந்த சகோதரிகளிடம் பாடச் சொல்லி
இறைவனை தியானித்திருந்தார். மேலும் “தந்தை, மகன், தூயாவிக்கு புகழ்'' என்று
மெதுவாக இடைவெளி விட்டு அறிக்கையிட்டுக் கொண்டே இருந்தார். நோயின் நாட்களில் அவர்
அறையிலேயே கூட நின்ற தந்தையர் திருப்பலி நிறைவேற்ற ஆயர் நற்கருணை உட்கொண்டு
வந்தார்.
29.5.1993 ஆயர் மருத்துவமனையிலிருந்து திரும்பிச்
செல்லும் நாள். தமக்கு இத்தனை நாட்கள் பணியாற்றிய அனைவரையும் நேரடியாக கண்டு, தம் நன்றியை தெரிவித்துக்கொண்டார். இதில்
மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தொடங்கி துப்புரவு பணியாளர் வரை அடங்குவர்.
திரும்பி வந்து மறுநாள்,
அதாவது பெந்தேக்கோஸ்து
திருநாள் திருப்பலியும்,
திருச்சடங்குகளும்
நாற்காலியில் அமர்ந்தவண்ணம் நிறைவேற்றினார்.
15. திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட பரிபாலகர்
1994 அக்டோபர் திங்கள் 10-ஆம் நாள் பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை இவ்வுலக
வாழ்வை நிறைவு செய்தார். அதுமுதல் திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தின் பரிபாலகராக
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் பெறுப்பேற்றார்கள். ஆயருக்கு மிகப்பிரியமான
பேராயரின் இறுதி அடக்க நிகழ்ச்சிகளை ஒரு பெரும் நிகழ்ச்சியாக மாற்றவேண்டும் என்று
அவர் தீர்மானித்தார். அதற்கேற்ப பலரை கலந்து ஆலோசித்து திட்டங்களை வகுத்தார்.
அனைத்தையும் மிக நுணுக்கமாக செயல்படுத்தவும் செய்தார். இவ்வாறு உயர்மறைமாவட்ட
பரிபாலகர் பொறுப்பேற்றது முதல் தமது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்திக்கொண்டே
இருந்தார்.
தன் அனைத்து செயல்களுக்கும் ஒரு முறையை
ஏற்படுத்தி அதன்படி செயல்பட வழிவகுத்தார். எந்த துறையாக இருந்தாலும் சரி
அத்துறையின் பொறுப்பாளர் தந்தையின் வழிதான் செல்ல வேண்டும் என்று ஆயர் மார்
எஃப்ரேமுக்கு கண்டிப்பு இருந்தது. அத்துறையின் பொறுப்பாளர்களை நம்பி ஒப்படைத்தார்.
இடையில் சாதாரணமாக எவ்வித தலையீடும் செய்வதில்லை. மாறாக அவர்களே திட்டங்கள் தீட்டி
சிறப்பாக தம் பொறுப்புக்களை செய்ய ஊக்குவித்தார். ''பறஞ்ஞால் கேள்க்குந்தவனெ கண்டால் தொழிக்கணம்'' என்று கூறுவார். அதாவது “இதை செய், அதை செய்''
என்று எப்போதும் கூற
வேண்டி வருகின்ற நபரால் ஒன்றுமே செய முடியாது, என்பதே பொருள். பணம் தொடர்பாக அவரை அணுகுவோரிடம், நிதிக்காப்பாளர் தந்தை வழியாகத்தான் செல்ல
வேண்டும் என்று வற்புறுத்தியபோது சிலர் அதை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. ஆண்டுகளாக
பழகிப்போன முறைகளிலிருந்து விடுபட அவர்களுக்கு விருப்பமில்லை.
ஒருமுறை பணம் அனுமதிக்க தம்மை அணுகிய ஒரு
தந்தையிடம், 'நிதிக்காப்பாளர் தந்தையை கலந்து
ஆலோசித்தீர்களா?'' என்றுக் கேட்ட ஆயருக்கு
நிதிக்காப்பாளர் தந்தையைக் கேட்டு எனக்கு பணம் தேவையில்லை'' என்று பதில் கிடைத்தது. இருப்பினும் இத்தகைய வருத்தமூட்டும்
நிகழ்ச்சிகள் ஆயரது பற்றுறுதியிலிருந்து வெளிப்படும் செயல்முறைகளை மாற்றுவதற்கு
போதுமானவையாக இருக்கவில்லை.
உயர்மறைமாவட்ட பரிபாலகராயிருந்தபோது
நிதித்துறையை பொறுத்தவரையில் ஆயரது திட்டம் மிகத் தெளிவாக இருந்தது. அதாவது
உயர்மறைமாவட்டத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் கடனைத் தீர்ப்பதுதான் அவரது
முன்னுரிமை. நிதிக்காப்பாளர் தந்தையின் உதவியுடன் உயர்மறைமாவட்டத்தின் ஒட்டுமொத்த
கடன் தொகையையும் அதன் வகைகளையும் தெளிவாகக் கற்றுத் தேர்ந்தார். அவற்றை மூன்று
நிலைகளுக்குள் கொண்டுவந்தார். அதாவது செலுத்திவரும் அதிகபட்ச வட்டித் தொகைக்கான
கடனை தடைசெய்து நிறுத்துவது ஒன்று. அவசரமாக செய்து முடித்துத்தான் ஆகவேண்டும் என்ற
பணிகளின் செலவினங்கள் இரண்டு. சற்று பின்னர் செய்தாலும் பெரும்பாதிப்பு இல்லை என்ற
வகையில் வரும் செலவினங்கள் மூன்று. இதற்கு ஏற்ப புதுப் பணிகளைத் தொடங்க அவர்
அவ்வளவாக அனுமதிக்கவில்லை. ஆனால் நடைபெற்று வரும் பணிகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்காமல் அவை தொடர்ந்து செயல்படுத்தி முடிக்கப்பட்டன. இவ்வாறு தமது நீடிய
பார்வையாலும், தெளிவான சிந்தனையாலும் உறுதியான
செயல்பாட்டினாலும் ஒரு கோடியே எழுபத்து எட்டு இலட்சம் ரூபாய் கடனை இக்காலத்தில்
ஆயர் இலாறன்ஸ் அவர்களால் தீர்த்து வைக்க முடிந்தது. எனவே இதை அறியாத தந்தையர், தாம் விரும்பிய படி எல்லாம் நடக்காத
காரணத்தால் ஆயரை எதிர்மறை சிந்தனையுடன் பார்த்தனர்.
மலங்கரை திருஅவையின் பங்கையும், பதவியையும் உயர்த்திக் காட்டி நம் சுய மதிப்பை
வளர்த்துகின்ற ஆயரின் திருஅவையோடுள்ள அன்பு எவ்வளவோ ஆழமும், பரப்பும் மிக்கது. 1996-ல் கிரேக்க கத்தோலிக்க மறைமுதுவர் மாக்சிமூஸ் ஐந்தாம் ஹக்கிம், சிறியாவின் டமாஸ்கசில் நம்முடைய ஒரு மடம்
ஆரம்பிக்க கேட்டிருக்கிறார். ஐந்து கன்னியரையும் கேட்டிருக்கிறார் என்று மதர்
இம்மாகுலேட் ஆயரிடம் கூறியபோது,
''மிக நல்லது. மடம்
ஆரம்பிக்கப்பட வேண்டும். நமது சகோதரிகளை விட வேண்டும். அருட்சகோதரிகள் தேவைக்கு
அதிகமாக இருக்கும் போது அனுப்பலாமென்று இருக்கக் கூடாது. இறைவன் நடத்துவார். நாம்
வெளிநாடுகளில் உள்ள திருஅவைகளுக்கும் உதவ வேண்டும். அதற்குரிய நேரம் வந்துவிட்டது.
இவ்வளவு காலம் அவர்கள் நமக்கு உதவினார்கள் அல்லவா? குருக்களும் செல்ல வேண்டும்'' என்று கூறி அனைத்து வாழ்த்துக்களும், ஆசியும் அருளினார்.
தந்தை பிலிப் உழுநல்லூரின் குருத்துவ
வெள்ளிவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. மக்கள் கூட்டமாக அணி அணியாக நின்றிருந்தனர்.
தந்தை உழுநல்லூர், ஆயர் இலாறன்சுடன் அன்புடன் வரவேற்றுக்
கூட்டி வரப்பட்டார். அப்போது அருகில் நின்ற ஒரு இந்து மதத்தைச் சார்ந்த சிறுமி
தந்தையைப் பார்த்து
"Good morning Father!" என்று
சொன்னாள். இதைக் கண்ட ஆயர் தந்தை உழுநல்லூரிடம் "இதுவே மிகப் பெரிய வரவேற்பு" என்றார்.
நீண்ட ஆண்டுகள் பயிற்சி பெற்ற குரு மாணவர்கள்
தங்களின் உடனடி இலட்சியமாகிய குருப்பட்டத்தை எதிர்பார்த்திருப்பர். குருவாக
திருநிலைப்படுத்தப்பட்டபின் எங்கு பணி செய்ய நியமிக்கப்படுவர் என்ற எண்ணம்
எல்லோரிலும் எழுவதுண்டு. சாதாரணமாக வளர்ந்த பங்குகளுடன் மட்டும் தொடர்பு
வைத்திருக்கும் இவர்கள் கற்பனையிலும், எதிர்பார்ப்பிலும்
எல்லாம் நல்ல வளர்ந்த ஒரு பங்கில் பணியாற்றுவதையே எண்ணிப்பார்க்க முடியும். இந்த
எண்ணத்திற்கு விதி விலக்கல்ல,
குருவாக
திருநிலைப்படுத்தப்பட்ட தந்தை தோமஸ் குழிநாப்புறம். அவர்களும் அன்று
திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட பரிபாலகராக இருந்த ஆயர் இலாறன்ஸ் அவர்கள் எங்கு
தன்னை பணி செய்ய ஏற்படுத்தப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்புடன் இருந்தபோது 1994 டிசம்பர் 26ம் நாள் குருப்பட்டம் பெற்ற உடனேயே 'ஆற்றிங்ஙல்'
என்ற இடத்திற்கு போய்
மறைபரப்புப்பணி ஆற்ற வேண்டும் என்று கட்டளை கொடுத்தார். இது அவருக்கு மிக
ஏமாற்றமாக இருந்தது. எனவே சில நாட்கள் மௌனமாக இருந்து, விட்டார். ஆனால் ஆயர் இலாறன்ஸ் தந்தையைப் பார்க்கும் போதெல்லாம் ''ஆற்றிங்ஙலில் மிஷன் ஆரம்பித்துவிட்டீர்களா? என்று கேட்டு அவரை நினைவுபடுத்திக்கொண்டே
இருந்தார். சில நாட்களுக்குப்பின் தந்தை தோமஸ் வேறு வழியின்றி ஆற்றிங்ஙலில் மிஷன்
வேலையைத் தொடங்கினார். வீடு சந்திப்பு, தனி
நபர்களை சந்தித்தல், கல்வி கற்றுக்கொடுத்தல் இப்படி பல
முறைகளைப் பயன்படுத்தி ஒரு சிறு கிறிஸ்தவ சமூகத்தை ஏற்படுத்தினார். இதன்
முன்னேற்றத்தில் ஆயர் மிக மகிழ்ந்தார். 1995 ஆகஸ்ட்
5-ஆம் நாள் ஆயர் இலாறன்ஸ் ஆற்றிங்ஙல்
கோயிலை (ஓலைக் குடிசை) பார்வையிட்டார். தொடர்ந்து பல அறிவுரைகளும், உதவியும் புரிந்தார். தந்தை தோமஸ் ஆர்வமுடன்
பணியாற்றினார். இடைப்பட்ட சில காலத்திற்குப்பின் மீண்டும் ஆற்றிங்ஙல்
பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஒரு மிஷன் ஆரம்பித்து வளர்த்துவது ஒரு
குருவின் வாழ்வில் எவ்வளவோ மகிழ்ச்சியைக் கொடுக்கின்ற ஒன்று என்பதை அனுபவித்து
உணர்ந்தார். அவரது முயற்சியால் இங்கு ஒரு அழகிய ஆலயம் 1997 ஆகஸ்ட் 21-ஆம் நாள் பேராயரால்
அர்ச்சிக்கப்பட்டது. இன்று நல்ல ஒரு சமூகமும் அங்கு உண்டு. திருவனந்தபுரம்
உயர்மறைமாவட்ட சான்சிலராகவும் பணியாற்றிய தந்தை குழிநாபுறம் ஆயர் இலாறன்ஸ் எப்படி
தன்னை மறைபரப்புப் பணியில் ஆர்வமுடையவராக்கினார் என்று நன்றியுடன் வியந்து அவரைப்
பாராட்டுகிறார்.
ஒருநாள், பயணம் செய்யும்போது சகோதரன் ஆன்றணி (தற்போது அருட்தந்தை ஆன்றணி கிளாம்பறம்பில்) கூட இருந்தார். அவ்வப்போது கேள்விகள் கேட்டு, பதில் கூறச் சொல்லுவார். சொல்லவில்லையென்றால்
காதில் கிள்ளும் கிடைக்கும். இவை இறையியல், மெய்யியல்,
நாடு, உலகம், சமூகம் என பரந்த தலைப்புகள் அடங்கும். "இரு நாட்டு அணிகள் ஒன்றுக்கொன்று கால்பந்து
விளையாடுவது எதற்கு''
என்று கேட்டார். மிகவும்
ஆலோசித்து சகோதரர் கூறினார்,
''அதிக கோல் போட்டு
வெற்றி பெறும் நோக்கம் தான்''
என்று. ''அல்ல இரு அணியினரின் உடல்
வியர்ப்பதற்காகத்தான்''
என்று ஆயர் திருப்பிக்
கூறிய போது அந்த சகோதரனும் ஓட்டுநரும் வாய் விட்டுச் சிரித்தார்கள். இவ்வாறு
அமைதியாக பேசி மகிழவைப்பதும் அவரது ஒரு இயல்பாக இருந்தது.
ஏழை எளியவர்மீது சிறப்பான அக்கரை
கொண்டிருந்தவர் ஆயர் இலாறன்ஸ். அவரது வாழ்வில் இதை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சிகள்
ஏராளம். 1995-ஆம் ஆண்டு திருவனந்தபுரம்
உயர்மறைமாவட்ட பரிபாலகராக பணியாற்றும் வேளை. ஊந்நுகல் என்ற பங்கில் தந்தை பிலிப்
செம்பகசேரி பணியாற்றிவந்தார். அப்பங்கைச் சார்ந்த திரு. ஜோஸ் மாத்யு பச்சயில்
கேரளாவில் அறியப்படுகின்ற ஒரு வழக்குரைஞர். இவருக்கும் ஆயர் இலாறன்சுக்கும்
நெருங்கிய நட்பு இருந்தது. இவரது தந்தையின் நினைவுநாள் வந்தது. ஆயர் இலாறன்ஸ் வருகை
தந்திருந்தார். திருப்பலி நிறைவேறியது. வருகை தந்திருந்தவர்களுடன் ஆயர் உரையாடிக்
கொண்டு, ஆலய வளாகத்தில் நின்றிருந்தார்.
அவர்கள் அனேகமாக எல்லோரும் சமூகத்தில் உயர் நிலையிலிருந்தவர்கள். ஆலய இடத்தின்
ஓரம் வழியாக ஒரு சிறு பாதை செல்கின்றது. அப்பாதை வழியாக 'குறவர்'
இனத்தைச் சார்ந்த சில
ஏழை மனிதர் நடந்து கொண்டிருந்தனர். ஆயர் இலாறன்சின் பார்வை அவர்கள் பக்கம்
சென்றது. திடீரென தாம் உரையாடிக்கொண்டிருந்த பெரியவர்களை எல்லாம் விட்டுவிட்டு
ஓடோடி அந்த சாதாரண மனிதரிடம் சென்றார். அவர்களிடம் நலன் விசாரித்தார். சற்று நேரம்
உரையாடிய பின்னர் மீண்டும் முன்னர் பேசிக்கொண்டிருந்த பெரியவர்களிடம் வந்து
சேர்ந்தார். வந்ததும் இத்தகைய ஏழைகளுக்கு உதவுவதே நமது கடமை என்று அவர்களிடம்
கூறினார். அனைவரும் ஆச்சரியத்துடன் ஆயரின் அன்பை அறிந்து கொண்டனர்.
வெஞ்ஞாறமூட்டில் மனநோயாளி ஒருவருடைய மகன் மிக
திறமைசாலியாக இருந்தார். இவர்களுக்கு வீடு இல்லை. இதை தந்தை எலியாஸ் அம்பாட்டு, தந்தை இலாறன்சிடம் கூறினார். அவரோ சென்று இடம்
வாங்கி பலரிடமிருந்து பொருட்கள் நன்கொடையாக பெற்று வீடும் கட்டிக்கொடுத்தார்.
இவ்வாறு அக்குடும்பத்தை வாழச் செய்தார்.
வட்டப்பாறையில் மனவளர்ச்சி குன்றிய
பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடம் உள்ளது. அதன் அருகில் உள்ள தென்னந்தோப்பில் சென்று
ஒருவன் தேங்காய் திருடிச்சென்றான். திருடன் யாரென்று நன்கு தெரியும். அங்குள்ள
சகோதரிகள் காவல் நிலையத்தில் போய் புகார் கொடுக்க, ஜார்ஜ் அவர்களை ஏற்படுத்தினார். ஜார்ஜ் சார் இந்த விவரத்தை ஆயர்
இலாறன்சிடம் கூறினார். ''அவரது வீட்டிற்குச் சென்று, இனிமேல் நீ திருடக்கூடாது என்று சொல்ல
வேண்டும்'', ''நான் சொன்னால் ஏற்றுக்கொள்வானா?'' சார் தயங்கினார். ''சென்று கூறினால் போதும்''. ஆயரது
வார்த்தையைக் கேட்டு ஜார்ஜ் சார் சென்று அறிவுறுத்தினார். திருட்டும் நின்றது.
சகோ. கோசி சிறக்கரோட்டு (இன்றைய அருட்தந்தை கோசி சிறக்கரோட்டு) தன் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை
ஏற்படுத்திய ஒரு நிகழ்ச்சியை இவ்வாறு கூறுகிறார். ''நான் றீஜன்சி நடத்தி வந்த காலம். ஆயர் இலாறன்சுடன் பயணம் - செய்ய
ஒரு வாய்ப்புக் கிடைத்தது. சந்நனப்பள்ளி திருவிழாவிற்கு முந்தைய நாளில் ஆயரும்
நானும் சேர்ந்து பத்தனம்திட்டைப் போய் சேர்ந்தோம். பிதாவு பயன்படுத்தி வந்த கார்
கோளாறுடன் காணப்பட்டதால் வேறொரு அம்பாசிடர் காரில் பயணம் ஆனோம். பிதாவுடன் பயணம்
செய்து பழக்கமில்லாத எனக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலிருந்தது.
டிரைவரும் புதிய நபராக இருந்ததால் என்னென்ன எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.
நாங்கள் அன்று இரவு பத்தனம்திட்டை பங்கு இல்லத்தில் ஓய்வு எடுத்த பின் காலையிலேயே
சந்நனப்பள்ளிக்கு புறப்பட்டோம். பிதாவு காரில் இருந்து எவற்றையோ வாசித்துக்
கொண்டிருந்தார். பிதாவை வரவேற்க அணியாக நின்றிருந்த விசுவாசிகளைக் கண்டவுடன்
டிரைவர் திடீரென காரை நிறுத்தினார். பிதாவின் வாகனத்தைக் கண்டதும் வாணவெடிகள்
கொளுத்தப்பட்டு வெடிகள் முழங்கின. பிதாவு காரிலிருந்து இறங்கி வரவேற்பு இடத்திற்கு
செல்வதற்காக கறுத்த குப்பாயம்,
கிரீடம், திருச்சிலுவை இவற்றை எடுத்து கொடுக்கும்படி
என்னிடம் கேட்டார்கள். இவை எல்லாம் எங்கு வைத்திருப்பார்கள் என்று எனக்குத்
தெரியாது. டிரைவரும் இதை எடுத்துக் கொடுத்து பழக்கமில்லை. ஒரே அங்கலாய்ப்பு! நான்
உடனே, காரின் டிக்கி திறந்து பார்த்தேன்.
திருப்பலிக்குள்ள திருவுடைகளும் மற்றும் எல்லாம் அங்கு இருந்தது. ஆனால் தற்போது
தேவையானவை இல்லை. ஆயரின் பதில் எதுவாக இருக்கும் என்று நான் மிகவும் பயப்பட்டேன்.
டிக்கியிலிருந்த பெட்டியில் காணப்பட்ட மரச்சிலுவையை எடுத்து ஆயரின் கையில்
கொடுத்தேன். பின்னர் ஆயரை மாலை அணிவித்து வரவேற்க காத்து நின்ற பங்குத்தந்தை
அணிந்திருந்த கறுப்புக் குப்பாயம் கழற்றி வாங்கி அதை ஆயருக்குக் கொடுத்தேன். ஆயர்
இறங்கிச் சென்று வரவேற்பை ஏற்றுக் கொண்டார். ஆயர் என்னை என்ன சொல்லப்போகிறார்? கடினமான கோப வார்த்தைகள்தான்.... இது
நிச்சயம்... முதல் அனுபவம். திருவிழா முடியும் வரை நான் அஞ்சி நடுங்கிக்
கொண்டிருந்தேன். திருப்பலி முடிந்து விட்டது... நான் எதிர்பார்த்த ஒன்றும்
நடக்கவில்லை. திரும்பி வருவதற்காக காரில் ஏறினோம். காரில் வைத்து என்னை வசைமாரி
பொழிவார் என்று எண்ணினேன். பயணம் தொடர்ந்தது. கொட்டாரக்கரை தாண்டியது.... ஆயூரும்
கடந்துவிட்டது... கார் முன்னோக்கி சென்று கொண்டிருந்தது. ஆயர் அந்த
நிகழ்ச்சியைப்பற்றி ஒன்றுமே கூறவில்லை. ஆனால் மற்ற பல காரியங்களைப்பற்றியும்
உரையாடிக்கொண்டே வந்தார். பேராயர் இல்லத்தை எட்டிய போது ஆறுதல் அடைந்தேன். ஆயர்
இந்த நிகழ்ச்சியை அடியோடு மறந்திருப்பார் என்று நான் நம்பினேன். ஆனால் இரவு உணவு
வேளையின்போது என்னை அழைத்தார். மிகவும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார். அதிகமான
அன்புடன் ஒரு நண்பனிடம் அறிவுரை கூறுவது போல காரியங்கள் அனைத்தையும்
சொல்லித்தந்தார். நான் ஆச்சரியப்பட்டேன். என்னுடைய கணிப்புக்கு முற்றிலும்
மாறுபட்ட இந்த செயல்வழியாக ஒரு தெய்வீக மனிதனை மட்டுமல்ல, அன்பு தந்தையை ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேமில் உண்மையாகவே
கண்டுகொண்டேன்''.
ஆயர் இலாறன்ஸ் திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டப்
பரிபாலகராக இருந்த காலம். பொருளாதார, கல்வி
அடிப்படையில் பின்தங்கிய பங்குகளை வளர்ந்த பங்குகள் தத்து எடுத்து கவனிக்கும்
முறையை ஏற்படுத்தினார். இன்றும் தொடர்ந்துவரும் இப்பழக்கத்தை ஆரம்பித்தவர் ஆயர்
அவர்களே. மட்டுமல்ல கற்ற பொது நிலையினர் மிஷன் தளங்களில் சென்று உதவவேண்டும் என்று
அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் திரு. கே. மாத்யூ வர்கீஸ் சார்ட்டர்டு
என்ஜினியரும், அவர் குடும்பமும் மறைபரப்புப்
பணியாற்றி வந்தனர். தனி நபர்களின் திறமைகளை அங்கீகரித்து பாராட்டுவதில் கவனம் காட்டினார்.
மேற்கூறிய இன்ஜினியரும், அவர் மனைவி திருமதி. மேரி மேத்யூ (ஓய்வு பெற்ற
முதல்வர், மார் தியோபிலஸ் டிரைனிங் காலேஜ்) 'பாப்பரசின் ஒரு அறிவுரை குழு' கூட்டத்தில் பங்கு பெற்றனர். 'பொன் திபிக்கல் கவுன்சில் பார் பாமிலி' -யின் இந்தியா பிரதிநிதிகளாக
தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஆயர் அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும் தெரிவித்தார். எர்ணா
குளத்தில் வைத்து நடந்த Catholic
Council of India - வின்
ஒரு கூட்டத்தில்,
Sesesion Moderator ஆக
திருமதி. மேரி மேத்யூ செயல்பட்டார். கூட்டம் முடிந்தது. ஆயர் இலாறன்ஸ் ஓடி வந்து "I am Proud of you" என்று பாராட்டினார்.
சகோ. தோமஸ் ஆலுநில்குந்நதில் ஒரு மலங்கரை குரு
மாணவர். 'றீஜன்சி' காலம் பேராயர் இல்லத்தில் நின்றிருந்தார். ஆயர் இலாறன்ஸ்
உயர்மறைமாவட்ட பரிபாலகராக இருந்தார். சகோதரர் ஆயரை அவர் அறையில் காணச் சென்றார்.
ஆயர் அவரை அரவணைத்துக் கேட்டார்: ''நீங்கள்
இங்குள்ள விருந்தினரா''?
திடீரென கேட்டக்
கேள்விக்கு ஆம், ஒரு விருந்தினர் தான் என்று அவர்
பதில் கூறினார். ஆயர் கூறினார் ஆலயத்தில் சென்று 5 நிமிடங்கள் செபித்து இக்கேள்விக்கு பதில் காணவேண்டும். அவர்
மிகுந்த ஏமாற்றத்துடனும்,
வருத்தத்துடனும்
ஆலயத்தில் சென்று செபித்தார். பின்னர் திரும்பி வந்து ஆயரிடம் பதில் கூறினார், "நான் ஒரு விருந்தினரல்ல; நீங்கள் வழிநடத்தும் திருஅவையின் ஒரு அன்பு
மகன் நான்''. இருவரும் நெருங்கி உறவாடுவதற்கும்
சகோதரரின் இறையழைத்தலை ஆழமாக்குவதற்கும் முடிந்தது.
1989-ல் அருட்சகோதரி பிரசாந்த D.M. சிவலோகம் மிஷனில் போய்க் கொண்டிருந்த காலம்.
ஒரு ஓலைக் குடிசை, வழிபாட்டு இடமாக இருந்து வந்தது. அது
காற்றில் அடித்து செல்லப்பட்டது. மீண்டும் அங்கு வழிபாட்டு இடம் வைக்க எதிர்ப்பு
ஏற்பட்டது. எனவே ஞாயிறுதோறும் ஒரு வீட்டில் வைத்து செபம் நடந்தது. அப்போது
பங்குத்தந்தையாக இருந்தவர் தந்தை ஜாண் துண்டியத் அவர்கள். செபம் நடத்தியிருந்த
இடத்தில் திருப்பலி நிறைவேற்ற அனுமதி வாங்குவதற்காக ஆயரை அங்கு அழைத்து வந்தனர்.
அன்று திருப்பலி நிறைவேற்றுவதற்கான ஆயத்தங்கள் எல்லாம் அங்கு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் ஆயர் அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசி அளவளாவி விட்டு ஆலயம் அமைக்க இருக்கும்
இடத்தை பார்வையிட எல்லோரையும் கூட்டிச் சென்றார். மரச்சீனி பயிரிட்டிருந்த
அவ்விடத்தில் ஒரு தென்னை மரத்தின் அடியில் எல்லோரும் நின்றுகொண்டே ஆயரின்
தலைமையில் அன்று செபம் நடத்தினர். இனி அங்கே கூடி செபித்தால் போதும் என்று ஆயர்
கூறினார். பின்னர் தொடர்ந்து எல்லா ஞாயிறும் அங்கேயே செபம் நடந்தது.
சில மாதங்களுக்குப்பின் ஒரு அக்டோபர் மாதம்
அங்கு திருப்பலி நிறைவேற்றுவோம் என்று ஆயர் கூறினார். அதன்படி குடிசை எதுவுமின்றி
கம்புகள் நாட்டி சில அலங்கார தோரணங்கள் கட்டினர். ஆயரே அங்கு திருப்பலி
நிறைவேற்றினார். மழைக் காலமாக இருந்தது. இருப்பினும் திருப்பலி நிறைவேறும்வரை மழை
பெய்யவே இல்லை.
1991-ல் தந்தை டானியேல் மாணிக்குளம்
பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். அப்போது ஒரு ஓலைக்குடிசை இருந்தது. அக்காலத்தில்
பிரச்சனைகள் எதுவுமின்றி முன்னோக்கிச் சென்றனர். அவ்வாறிருக்க குடிசையைப் பிரித்து
பெரிதாக்க தீர்மானித்தனர். ஓலைக் குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பணித்தளம் சில
ஆண்டுகளுக்குப் பின் சற்று புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. இங்கு வழிபாடு
நடப்பது ஞாயிறு மட்டுமே. இதர நாட்களில் பெண்களின் முன்னேற்றம் கருதி தையல்
இயந்திரங்கள் வாங்கி தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. மக்களை மனமாற்றி
விடுவார்கள் என்று பயப்பட்டு வந்த பிற மத சகோதரர்கள் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை
இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கினர். 1994 நவம்பர் மாத ஒரு சனிக்கிழமை இது நடந்தது. தையல் இயந்திரங்களை
எடுத்துச் சென்றுவிட்டனர். ரப்பர் மரங்களை வெட்டிச் சாய்த்தனர். நிகழ்ச்சி அறிந்த
பங்கு மக்களும், அருட்கன்னியரும், பங்குத்தந்தை டானியேல் மாணிக்குளமும்
அதிர்ச்சியடைந்தார்கள். அவர்களின் துயரம் தாங்க முடியாமல் இருந்தது. தங்கள்
முயற்சி எல்லாம் வீணாகப் போய்விட்டதென ஏங்கினர். ஆயர் இலாறன்ஸ் செய்தி அறிந்தார்.
அவர்களை ஆற்றித் தேற்றினார். இறைவனுக்கு சித்தமானால் அனைத்தும் வெற்றியாக முடியும்
எனக் கூறினார்.
அப்போது கிறிஸ்து பிறப்பு விழாவும் வந்தது.
ஆலயமின்றி எப்படி திருப்பலி நிறைவேற்றுவது? இந்த பெருவிழாவில் கூட ஆண்டவரை வழிபட முடியாமல் போய் விட்டதே
என்று மக்கள் பரிதபித்தனர். ஆயர் இலாறன்ஸ் அவர்களுக்கு கூறினார்: ''கிறிஸ்து பிறப்பு நாள் சிவலோகம் பங்கிற்கு
திருப்பலி நிறைவேற்ற நான் வருவேன். எல்லோரும் தயாராயிருங்கள்''. மக்களுக்கு புரியவில்லை. எங்கு பலி
நிறைவேற்றப் போகிறார் என்று ஆச்சரியப்பட்டனர். ஆயர் கூறியபடி அனைவரும்
இடிபட்டுக்கிடந்த ஆலயச் சுவர்களுக்கு அருகில் ஒன்றுகூடினர். திறந்த வெளியில்
திருப்பலிக்கு ஆயத்தம் செய்யப்பட்டது. அவ்வாறு 1994-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள் காலை ஆயர் இலாறன்ஸ் இயற்கையின் இயல்பான சூழலில்
படைப்பின் ஆண்டவருக்கு திருப்பலி அர்ப்பித்தார். பங்குபெற்ற மக்கள்
உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர். ஆனால் ஆயர் மக்களைத் தேற்றினார், ''ஒரு ஆலயம் இடித்தால் 10 ஆலயங்கள் இப்பகுதியில் நமக்கு கட்ட முடியும்''. அவ்வாறு கடவுள் வழிபாட்டை நான்கு
சுவர்களுக்குள் கட்டுப்படுத்த முடியாது என விளம்பரப்படுத்தினார்.
மக்கள் புத்தொளி பெற்றனர். பொறுமையுடன்
மீண்டும் அப்பங்கை கட்டி எழுப்பினர். பற்பல தடைகளுக்குப்பின் இன்று ஓரளவு வசதியான
ஆலயம் அமைக்கப்பட்டு,
திருப்பலி ஒழுங்காக
நடைபெறுகின்றது. இவ்வாறு எத்தகைய நெருக்கடியான சூழலிலும் தமது துணிவான
பிரசன்னத்தால் நம்பிக்கையும்,
துணிவும் ஊட்டியவர் ஆயர்
இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள். பிரச்சனைகளின் உண்மை நிலையை ஆய்ந்து அறிந்து
அதற்கேற்ப தீர்வு காண முயல்வது ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களின் நிர்வாக
அணுகுமுறை. ஆயர் உயர்மறைமாவட்ட பரிபாலகராக இருந்தபோது அஞ்சல் கல்லூரி
நிர்வாகத்தில் சில சிக்கல்கள் இருந்து வந்தது ஆயர் கவனத்துக்குக் கொண்டு
வரப்பட்டது. இரு தரப்பினரின் குற்றச்சாட்டுகளையும் நேரடியாக கேட்டறிந்த ஆயர்
அத்துடன் திருப்தியடைந்துவிடாது தாமாக நேரிட்டு கல்லூரிக்கு சென்று பிரச்சனைகளின்
ஆழத்தையும் நிலவிவரும் சூழ்நிலையையும் அறிந்து அதற்கு ஒரு தீர்வு காண முயற்சிகள் மேற்
கொண்டார். எவ்வித முக நோட்டமும் பாராது, அக்கல்லூரியின்
சுமுகமான செயல்பாட்டிற்கு உதவும் வகையில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். இதனால்
பலருக்கு அவர்மீது அதிருப்தி ஏற்பட்டது. இருப்பினும் பொது நன்மைக்காக தம் அறிவு, அனுபவம் இவற்றின் அடிப்படையில் தீர்மானங்கள்
எடுத்து தமது நிர்வாகத் திறமையை நன்கு வெளிப்படுத்தினார்.
ஆயர் இலாறன்ஸ் திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட
பரிபாலகராயிருந்தபோது கொடுத்த முதல் குருப்பட்டம். இதற்கு முன் அவர் சிலரை குருவாக
திருநிலைப்படுத்தியிருப்பினும் இது ஒரு உயர்மறைமாவட்டத்தின் முக்கிய
பொறுப்பிலிருக்கும் அதிகாரி என்ற முறையில் உரிமையுடன் வழங்கிய பட்டம். நாள் : 19.12.1994 இடம் : பின்குளம். குருவாக
திருநிலைப்படுத்தப்பட்டவர் : திருத்தொண்டர் வர்க்கீஸ் நடுதல அவர்கள். அன்று ஆயர்
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். குருப்பட்டத்தின்போது திருப்பலி மத்தியில்
கீழ்வரும் பகுதியை நற் செய்தியாகப் படித்தார். "இப்போது மானிட மகன் மாட்சி பெற்றுள்ளார். அவர்
வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால்
கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்.
நீங்கள் என்னை தேடுவீகள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே
யூதர்களுக்குச் சொன்னேன். இப்போது உங்களுக்கும் சொல்கிறேன். 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக்
கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம்
அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார். (யோவா 13:31-35) பின்னர் ஆயர் கீழ்வருமாறு மறையுரை ஆற்றினார்.
''இன்று நம்மிடையே இருந்து நம்முடைய ஒரு மகனை
கடவுள் சிறப்பான முறையில் தேர்ந்தெடுத்து அவருடனே நெருங்கச் செய்து, தனது குருத்துவ பதவியை அந்த மகனுக்கு
வழங்குகிறார். அந்த திருச்சடங்கில் பங்குபெற நாம் இங்கு குழுமியிருக்கிறோம்.
நம்மைப் பொறுத்தவரையில் பெரும் இறைஆசீர்வாதத்தின் ஒரு வேளை இது. இறைவன் தம் மக்கள்
மீது கருணை காட்டுகிறார் என்பதன் ஒரு வெளிப்படையான அடையாளமே இது... இது கிறிஸ்மஸ்
தயாரிப்பு காலம். திருத்தந்தை 2-ஆம் அருள் சின்னப்பரின் அண்மைக்கால
சுற்றுமடல்களின் வழியாக நம்மை ஒரு சிறப்பான கடமைக்கு அழைக்கிறார். இந்த நூற்றாண்டு
நிறைவு பெற இன்னும் 5
ஆண்டுகள் தான் உள்ளன.
மூன்றாம் ஆயிரம் ஆண்டுக்கு நம்மையே தயாராக்க வேண்டிய காலம். அதற்கு முன்னால்
செய்து முடிக்கவேண்டியவற்றை செய்து முடிக்க வேண்டிய காலம். இதற்கான தயாரிப்பு
காலமாக இக்காலத்தை எடுக்க அழைப்பு விடுக்கிறார். இரண்டு ஆயிரம் ஆண்டு நிறைவுறும்
ஆண்டு ஒரு மாபெரும் ஜூபிலி ஆண்டு. ஜூபிலி மகிழ்ச்சியின் வேளை (ஜூபிலி பற்றியும்
அதன் தயாரிப்பு பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கிறார்).
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு நாளிலே
திருத்தந்தை ஒரு செய்தி கொடுப்பதுண்டு.. உலக அமைதி நாளாக இது கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு உலக அமைதி நாளில் மகளிரைப் பற்றிய செய்தியை திருத்தந்தை கொடுக்கிறார். 'உலகில் அமைதி வேண்டுமென்றால் பெண்கள் அதை
உணர்ந்து அமைதியின் தூதுவர்களாக செயல்பட வேண்டும்' என்று திருத்தந்தை எடுத்துச்சொல்கிறார். புதிய ஏற்பாட்டு
காலத்தில் பெண்களுக்கு கடவுள் கொடுத்திருக்கும் பதவியைப் பற்றி உணர்ந்து திருஅவை
செயல்பட வேண்டும்.
அன்பு சகோதர சகோதரிகளே! புதிய
ஏற்பாட்டுக்காலம் பெண்களின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது
மிகை ஆகாது. 1994 ஆகிய இந்த ஆண்டு குடும்ப ஆண்டாக
கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதன் நிறைவு நெருங்கியுள்ளது. கடவுள் ஆணும்
பெண்ணுமாக படைத்து ஒரு குடும்பமாக வாழ்ந்து இறை திருவுளத்தை நிறைவேற்றப்
பணித்தார். ஆதிபெற்றோர் இறை கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்திருந்தார்களேயானால்
பெற்றோர் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் வேளையில் அக்குழந்தைக்கு உடல், உயிர் கிடைப்பதுடன் ஆன்மீக உயிரும்
கிடைத்திருக்கும். ஆன்மீக உயிர் என்று சொல்வது இறையருள். இறையருளை அப்பொழுதே
மனிதன் பெற்றிருப்பான். ஆனால் ஆதி பெற்றோர்களின் தவறினால் இறைமனித உறவு அறுந்து
போயிற்று. மின்சாரம் இருந்தால் விளக்கு ஒளி தருகிறது. மின்சார கம்பியுடன் விளக்கை
இணைக்கவில்லையென்றால் விளக்கு எரிவதில்லை.
ஆன்மீக உயிர் என்பது கடவுளின் பிரீதி
(திருப்தி). மகிழ்ச்சி யுடன் கடவுள் மனிதனை படைத்தார். அவனை அன்பு செய்தார். அந்த
அன்பு என்பது, 'என்னை நினைக்க வேண்டும். என்னை அன்பு
செய்ய வேண்டும். என்னை மறக்கக்கூடாது' என்ற
இறைவிருப்பத்தில் வெளிப்பட்டது. அதன் அடையாளமாகத்தான் இறைவன் ஏதேன் தோட்டத்தின்
எல்லா கனிகளையும் ருசிக்கலாம். ஆனால் ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ணக்கூடாது.
அதற்கு காரணம் என்னை நீங்கள் மறக்காமலிருக்க வேண்டும். உங்கள் சந்ததியும்
எக்காலமும் என்னை நினைக்கவேண்டும். நான்தான் இவற்றையெல்லாம் படைத்து உங்களுக்கு நல்கியவர்.
ஆகவே நீங்கள் என்னை மதிக்கவேண்டும். என்னை அங்கீகரிக்கிறீர்கள் என்பதன் அடையாளமாக
நீங்கள் அந்த கனியை தொடக்கூடாது. தொடாமலிருந்தால் நீங்கள் எனக்கு பிரியமானவர்கள்.
உண்டால் நீங்கள் எனக்கு அன்னியர்கள், என்னை
அன்பு செய்யவில்லை என்பது பொருள். ஆனால் ஆதிபெற்றோர் தவறினர். இறைவனின்
அதிருப்திக்கு ஆளாயினர்.இறை உயிரை இழந்தனர். மின்சாரம் இல்லாமலிருந்தால் விளக்கு
அங்கு இருப்பினும் ஒளிகொடுக்க முடியாது. இவ்வாறு உடலளவில் இருந்தாலும் ஆன்மீகமாக
நாம் இறந்துவிட்டோம்,
இறை அன்பு இல்லாதவர்கள்
ஆனோம்.
இதை மீண்டும் பெறவேண்டும். ஒளி கொடுக்கச்செய்ய
இறைவன் அருள்புரிந்து தாமாக மனிதரானார். அவ்வாறு மீண்டும் நம்மை கடவுளுடன்
ஒன்றித்தார். மின்சார தொடர்பை எற்படுத்தினார். இது மரியாள் வழியாக நிகழ்ந்தது.
மரியாளிடமிருந்து உடல் எடுத்து இவ்வாறு உயிர்கொடுத்தார். மீண்டும் இறை மனித உறவை
சரி செய்தார். இறைவன் மனித மகனாக மாறினார். ஒரு மனித பெண்ணிடம் உடல் எடுத்து
அவருடன் ஒன்றாகி, இறைவனும், மனிதனும் ஒன்றிணைந்தனர். இவ் வாறு மனிதத்திற்கு அருளின் தொடர்பு
கிடைத்தது. இந்நிகழ்ச்சியைத்தான் கிறிஸ்மஸ் என்கிறோம். இந்த செயல் முறைகளுக்கு இறைவன்
ஒரு பெண்ணை பயன்படுத்தினார்.
"ஆதாம் ஏவாள்
குடும்பம் இறையருள் இழந்தனர். ஆனால் அவர் சந்ததியின் ஒரு குடும்பத்தை - மரியாள்
குடும்பத்தை - தேர்ந்தெடுத்து அவர்வழியாக அருளை மீண்டும் நாம் பெறச்செய்தார்.
இதுவே புதிய ஏற்பாடு. புதிய ஏற்பாட்டின் முதல் நபர் பெண். பழைய எற்பாட்டில் முதல்
நபர் ஆண். இங்குதான் புதிய ஏற்பாடு பெண்ணை உயர்த்தி அருளின் அடிப்படை ஆக்குகிறார்.
அப்பெண்ணிடமிருந்து ஒரு மகனை பிறக்கச் செய்கிறார். பழைய ஏற்பாட்டில் ஆணை தேர்ந்து
கொண்டு அவனிலிருந்து ஒரு நபரை தோற்றுவித்தார். அவர் பெண். புதிய ஏற்பாட்டில் புதியவளாகிய
பெண்ணிலிருந்து ஒரு நபரை பிறக்கச் செய்கிறார். அவர் ஆண். அவர் தான் இயேசு. இயேசு
இறைவன் ஆவார். மரியாளின் மகனாக பிறந்தார். தூய பவுல், ''நமக்கு ஒரு மீட்பர் கொடுக்கப்பட்டார். அவர் பெண்ணிலிருந்து
பிறந்தார்'' என்கிறார்.
இங்குதான் திருத்தந்தை எடுத்துக் கூறுகிறார்.
புதிய ஏற்பாட்டின் காலத்தில் குறிப்பாக உலகில் அமைதி ஏற்பட வேண்டுமென்றால் பெண்
தன்னுடைய கடமையைப் பற்றி உணர்ந்து செயல்பட வேண்டும். 2-ஆம் வத்திக்கான் பொதுச் சங்கம், இன்றைய உலகு விழாமலிருக்க வெண்டுமென்றால், சீர்குலைந்து போகாமல் இருக்க வேண்டுமென்றால் நற்செய்தியால்
தூண்டப்பட்ட பெண்கள் உணர்ந்து முன்வந்து அவர்கள் தம் அறப்பணியை
நிறைவேற்றவேண்டியிருக்கிறது. ''பெண்தான் இவ்வுலகில் அமைதியின்
தூதுவராக செயல்பட வேண்டியவர்.'
இந்த ஆண்டு 1995 - ஜனவரி மாதம் 1-ஆம் நாள் உலக அமைதி நாளின் செய்தியில் இதை
வலியுறுத்திக்கூறுகிறார் திருத்தந்தை.
குருப்பட்டம் வழங்கும் இவ்வேளையில் எதற்காக
பெண்ணைப் பற்றியும், இந்த வரலாற்றைப் பற்றியும் எல்லாம்
கூறுகிறேன் என நீங்கள் நினைக்கலாம். குருத்துவம் என்றால் என்ன? யார் குருவானவர்? புதிய ஏற்பாட்டில் குரு இயேசு. அந்த இயேசு பெண்ணின் மகனாக
பிறந்தவர். ஆதாம் படைக்கப்பட்டார். ஆனால் இயேசு பிறக்கின்றார். பெண்ணிலிருந்து
பிறக்கின்றார். அத்தாயுடன் வாழ்கிறார். தாயும், மகனும் ஒன்றாகின்றனர்.
இறுதியில் கல்வாரி மலையில் இதோ தாயும், மகனும் அங்கு இருந்தனர். மகன் சிலுவையில்
தொங்கிக் கொண்டு பலியானார். அருகில் நின்று அவள் தந்தையாகிய கடவுளைப்பார்த்து
சொல்ல முடிந்தது,
"சிலுவையில்
கிடக்கும் உடல், இது என் உடல்" அந்த உடலிலிருந்து துளித்துளியாக விழுகின்ற
இரத்தத்தைப் பார்த்து அவருக்கு கூற முடிந்தது. “இது என் இரத்தம்''
குருக்களாகிய நாங்களும்
பலி பீடத்தில் நின்றுகொண்டு எங்களுக்கு கடவுள் நல்கியிருக்கும் அதிகாரத்தையும், இப்பதவியையும் பயன்படுத்தி.... அப்பத்தை
எடுத்துச் சொல்கிறோம்.
"இது என் உடல்' நாங்கள் சொல்வதும் மரியாள் சொல்வதும்
ஒன்றுக்கொன்று எவ்வாறு இருக்கிறது? பொருளில்
எவ்வளவோ இடைவெளி இருக்கிறது! இரண்டும் உண்மைதான். இருப்பினும் இங்குதான் புதிய
ஏற்பாட்டில் பெண்ணின் மேன்மை,
பெண்களின் பங்கு
வெளிப்படுகிறது. குருவாகிய இயேசுவுக்கு ஒரு பெண் தாயானார். பெண்ணை தாயாக்கினார்.
இறைவனுக்கும் தாயாக்கினார். இங்குதான் அப்பெண்ணின் மகிமையை நம்மால் பார்க்க
முடிகிறது. பெண்ணுக்கு மட்டுமே இறைவனுக்கு அடுத்தபடியாக இப்பெயரை இறைவன்
கொடுத்துள்ளார். பின்னர் சிலுவையில் கிடந்து உயிர் பிரியப் போகும் வேளை. அப்போது
சிலுவையின் அடியில் நின்ற தூய யோவானைப் பார்த்து, ''அம்மா! இனி இவர் தாம் உம் மகன். தாயும், மகனுமாக வாழ்ந்து இவ்வுலகில் என் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும்.
இந்த ஆணையின்படிதான் இன்று இந்த நம் மகன் குருவாக மாறுகிறார். பலியாக இறப்பதற்கு
முந்தைய நாள் - உண்மையில் பலியாக மாறுவது பெரிய வெள்ளிக் கிழமை - அதற்கு முந்தைய
நாள் அதிகாரம் வழங்கினார். அந்த முறிக்கப்படும் என் உடலை அப்ப வடிவிலும் நான்
சிலுவையில் சிந்த இருக்கும் என் இரத்தத்தை இந்த இரசம் வழியாகவும், மாற்றமடையச்செய்து என் மக்களுக்கு நல்குவீர்.
இதற்காகத்தான் இந்த நம் மகன் இன்று குருவாக திருநிலைப்படுத்தப்படுவது.
இயேசுதான் குரு; நித்தியகுரு. அந்த இயேசு வந்து முறைகளையெல்லாம்
ஏற்படுத்தியதால்தான் என்னைப் போன்றவர் குருத்துவம் பெற்றனர். இயேசுவின் அருள்
பெறுவது வழி நம் எல்லோருக்கும் குருத்துவத்தில் பங்கு கிடைக்கிறது. இயேசுவின்
அருள், இயேசு பெற்ற அருள் எனக்கும், உங்களுக்கும் எல்லாம் கிடைப்பது ஞானஸ்தானம்
வழியாக. ஞானஸ்நான வேளையில் இயேசுவின் உயிர் நம்மில் பெறுகிறோம். அவ்வாறு இயேசுவில்
சில பிரத்தியேக கடமைகளும் நாம் பெறுகிறோம். இயேசு இறைவனும், மனிதனும் என்ற நிலையில் குருவும், அரசரும் இறைவாக்கினரும் ஆவார். இறைவாக்கினர்
என்று சொல்லும் போது,
இறைவன் தம் நல்ல
வார்த்தைகளை அறிவிக்க கொடுக்கப்பட்ட பதவி. அவ்வாறே ஞானஸ்நானம் பெறும்போது
எல்லோருக்கும் இந்த மூன்று பதவிகளும் கிடைக்கின்றன. இயேசுவின் குருத்துவத்தில்
பங்கு, இயேசுவின் அரசுரிமையில் பங்கு; இயேசுவின் இறைவாக்குரைக்கும் பணியில் பங்கு.
எனவேதான் கிறிஸ்தவ சமூகத்தை தூய பவுல் அரச குருத்துவ திருக்கூட்டம் என
அழைக்கின்றார்.
நாம் அனைவரும் அரச குருத்துவ திருக்கூட்டம்.
இதிலிருந்து சிலர் இறைபணி ஆற்ற,
தனக்கு பணிவிடை புரிய, இறைவாக்கு என்றென்றும் அறிவிக்க, உடல் உதிரம் ஆகிய உணவை மக்களுக்கு நிரந்தரம்
வழங்க, மக்களை பாவத்திலிருந்து மன்னித்து
அவர்களை தூய்மைப்படுத்த சிறப்பாக அழைக்கப்படுகின்றனர். இந்த முப்பணிகளையும்
நிறைவேற்ற இறைமக்களுக்கு பணி செய்ய இப்போது குருவாகும் இவரும், நானும் அழைக்கப்பட்டவர்கள், நியமிக்கப்பட்டவர்கள். இறைவன் செய்ய வேண்டிய
பணிகளை மக்களிடையே நிறைவேற்ற அவர் எங்களை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த பணியின்
இயல்பு என்ன? இரவு உணவு வேளையின்போது பாத்திரத்தில்
தண்ணீர் எடுத்து சீடர் ஒவ்வொருவரிடமும் சென்று, அவர்கள் பாதங்களை கழுவுகிறார். துண்டால் துடைக்கின்றார். இவ்வாறு
அவர்கள் பாதம் தொட்டு பணிவிடை செய்கின்றார். அவர்களிடம் கூறுகிறார், 'உங்கள் தலைவரும், ஆண்டவருமாகிய நான் இவ்வாறு செய்தேன் என்றால், நீங்களும் ஒருவர் ஒருவரின் பாதம் தொட்டு
தாழ்ச்சியுடன் பணி செய்ய நியமிக்கப்படுகிறீர்கள். எனவே, பணி செய்ய நியமிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள் நேரடியாக செய்ய
வேண்டிய பணிகள், ஒன்று ஆன்மீக உணவு தயாரித்து
வழங்குதல், இரண்டு பாவ மன்னிப்பு - பாவசங்கீர்த்தனம்
வழங்குதல். இவை இரண்டும் பிறரால் செய்ய முடியாதவை. குருக்கள் மட்டும்
நிறைவேற்றக்கூடியவை. இவை இரண்டும் இன்று உலகில் ஒரு தாய் செய்யும் பணிகள்.
உடலளவில் தாய் மக்களுக்கு செய்து கொடுக்கும் தாயினுடைய இரண்டு பணிகள். இவைதான்
பணிக்குருத்துவத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் செய்ய ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள்.
அன்பு சகோதர, சகோதரிகளே! இதுதான் பணிக்குருத்துவம். இதை மக்களும் புரிய
வேண்டும். நாங்களும் புரிய வேண்டும். பணிக் குருத்துவத்தை பெறும் நாங்கள் பணியாளர்
ஆக இருக்க வேண்டும். இதுதான் இறைவன் விரும்புவது. நம் எல்லோரும் விரும்புவது. குரு
இறக்கும் போது, நற்செய்தியிலிருந்து இவ்வாறு
வாசிக்கின்றனர்: “தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளா வேளை
உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும், அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துக்
கொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர்'', (மத். 24:
45-46). இதை திருஅவை
முழுவதும் உணர வேண்டும். உணவு தயாரித்து கொடுப்பது - குருவின் முதல் கடமை இது தான்....
இப்போது புது குருவாக திருநிலைப் படுத்தப்படும் அருட்தந்தை அவர்களே, இறைவன் இறுதியாக தம்மிடம் உம்மை அழைக்கும்
போது, இந்த இறை வார்த்தைகளுக்கு எந்த
அளவுக்கு உமக்கு பதில் கூற முடிகிறதோ, அந்த
அளவிற்குதான் நீர் உத்தம குருவாக இருக்க முடியும். இறைவன் என்னிடமிருந்து என்ன
எதிர்பார்க்கிறார். என் மக்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? இதை நிறைவேற்றினால் நாம் பேறுபெற்றவர்கள்.
இதற்கு குறைவு ஏற்பட்டால் அதன் இழப்பு யாருக்கு? அந்த குருவுக்கும், இறைமக்களுக்கும்தான்.
உணவு கிடைக்காமல் பலவீனமடைந்து இறைமக்கள் வருந்தவேண்டிய நிலை ஏற்படும். இறைமக்கள்
பலவீனமின்றி உடல் நலத்துடன் வாழ்வதற்கு கடவுள் ஏற்படுத்திய முறை இதைத்தவிர
வேறொன்றும் இல்லை. நான் என் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சிந்திக்கிறேன், இன்று இறை மக்கள் பலவீனமடைந்து
கொண்டிருக்கின்றனர் என்றால் அதில் குருவாகிய எனக்கும் பங்கு இல்லையா? - எனது சோம்பல், அலட்சியம்... இறைவா என்னை மன்னியும். எனது பொறுப்பைப்பற்றி உணர
எனக்கு உதவி புரியும் என வேண்டுகிறேன். இவ்வாறே, பாவ மன்னிப்பு கொடுப்பதிலும்.. மக்களை கழுவ வேண்டியது அவரவர்
பச்சாத்தாபம் வழியாக. ஆனால் அதன் செய்தி நிரந்தரமாக அறிவித்துக் கொண்டிருக்க
நமக்கும் கடமை உண்டு. பாவ மன்னிப்பு அதிகாரம் எனக்கு தந்திருக்கின்றார். நான் அதை
பயன்படுத்த வேண்டும்.
அன்பு சகோதர சகோதரிகளே! நீங்கள் எங்களுக்கு
உதவ வேண்டும். இறைமக்கள் அனைவரும் பணிக்குருத்துவத்தில் ஈடுபட்டிருக்கும்
குருக்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஏனெனில் எங்கள் பொறுப்பு மிகப் பெரியது. இறை
சந்நிதானத்தில் நாங்கள் கொடுக்க வேண்டிய கணக்கு மிகப் பெரியது. எனவே, இதற்கு ஏற்றப்படி வாழ எங்களுக்காக நீங்கள்
வேண்டுங்கள். அவ்வாறு இறைமக்களுக்கு வேண்டிய அருளும், தூய்மையும்,
கிடைக்க இறைமக்களாகிய
நீங்கள் எப்பொழுதும் செபிக்க வேண்டும்.''
ஒரு ஆண் என்பவர் யார்? ஒரு தாயின் மகன் அல்லவா? இங்குதான்
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவை உணர்வேண்டியிருக்கிறது. சிலுவையும் சுமந்து
கொண்டு கல்வாரிக்கு. பயணமான இயேசுவைக் கண்டபோது பெண்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.
இயேசு அவர்களைப் பார்த்து ''எருசலேம் மகளிரே! நீங்கள் எனக்காக
அழவேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள்
பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்''
என்று கூறினார்.
இவ்வார்த்தைகள் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். - * உங்கள் ஜெபங்கள்
எங்களுக்கும் தேவை. இல்லாவிடில் நாங்கள் குறையுள்ளவர்களாக இருப்போம். இறைவன்
உன்னதமான, மிகப்பெரிய கடமைகளை எங்களிடம்
ஒப்படைத்துவிட்டு அதை நிறைவேற்றக் கூறியுள்ளார். "நாங்கள் வலுவற்ற மண்கலங்கள். உங்கள்
சந்ததிகள். ஆகவே நீங்கள் குருக்களுக்காக, உங்களது
மக்களுக்காக வேதனையுடன் மன்றாட வேண்டும். அவர்கள் தம் அழைப்பிற்கு ஏற்றபடி
வாழ்ந்து உங்களை தூய்மைப்படுத்தவும், உங்களுக்கு
வேளாவேளைகளில் உணவு வழங்கவும் அவர்களுக்காக செபியுங்கள். அவ்வாறு நாங்கள் எங்கள்
கடமைகளை நிறைவேற்றுகிறோம் என்ற உண்மையான மகிழ்ச்சி அடையவும், எங்கள் பணிகளின் பலனை நீங்கள் அனுபவிக்கவும்
செய்யுங்கள்.
தொடர்ந்து நடைபெறுகின்ற குருத்துவ
திருநிலைப்பாட்டுத் திருச்சடங்கில் அனைவரும் செபங்களை கவனமுடன் கேட்டு ஜெபித்து, குருவாக நிருநிலைப்படுத்தப்படும் நம்முடைய
இந்த மகனுக்காக சிறப்பான முறையில் செபிப்போம்'.
திருச்சடங்கின் இறுதியில் இறையழைத்தலைப் பற்றி
கீழ்வரும் கருத்துக்களையும் வலியுறுத்திக் கூறினார். ''அன்புமிக்க சகோதர, சகோதரிகளே!
ஒரு முக்கியமான செய்தியைக் கூட உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன்.
திருச்சயிைன் பணிகள் தானாக நடக்க முடியாது. அப்பணிகளை நாம்தான் நிறைவேற்ற
வேண்டும். இன்று இங்கு வைத்து ஒரு குருப்பட்டம் நடைபெற்றது. அதிலே நமக்கு
மகிழ்ச்சி உண்டு. இதிலே கலந்துக் கொண்டு 'இறைவா உமக்கு புகழ்' என்று
கூறுகிறோம். ஆனால் இது மட்டும் போதாது. உங்களுடைய அன்பு மக்களை குருக்களாக மாற
இறைவன் அழைக்கின்றார். அந்த இறைவனின் குரலைப் பெற்றோர் கேட்க வேண்டும். இறைவன்
உங்கள் ஆண் மக்களை குருக்களாகவும் பெண் மக்களை அருட்சகோதரிகளாகவும் அழைக்கின்றார்.
உங்கள் பிள்ளைகளை இறைப்பணிக்காக இறைவன் உங்கள் வழியாகவே அழைக்கின்றார். எனவே, 'எனது குடும்பத்திலிருந்து ஒரு நபராவது ஒரு
குருவாகவோ, ஒரு அருட்சகோதரியாகவோ இறைப்பணி
ஆற்றும் வரம் தரவேண்டும்'
என்று தினந்தோறும்
நீங்கள் செபிக்கவேண்டும். இறைவனுடைய அழைப்பை கேட்பதற்கும், அதற்கு பதில் அளிப்பதற்கும் நீங்கள் மனம் வைக்க வேண்டும்.
நம்மிடையே ஒரு வித்தியாசமான மனநிலை உண்டு.
இறையழைத்தலை ஏற்க பிள்ளைகளை அனுமதிப்பதில் நாம் தயங்குகிறோம். குறிப்பாக பெண்
பிள்ளைகளை கன்னியர் இல்லம் அனுப்ப நாம் மிகவும் தயங்குகிறோம். இன்று திருஅவையில்
சாதாரணமாக குருக்களை விட மூன்று மடங்கு கன்னியர்கள் உண்டு. ஆனால் இப்பகுதியிலுள்ள
நம் மனநிலை நேர்மாறாக இருக்கிறது. ஆண்பிள்ளைகளை குருமடம் அனுப்புவதில் மூன்றில்
ஒரு பகுதியே பெண் பிள்ளைகளை கன்னியர் இல்லம் அனுப்புகிறோம். இந்நிலை மாற வேண்டும்.
இதில் தாய்மார்கள் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும்.
இனி, குருமடம்
சென்று பயின்று ஒருவர் திரும்பி வந்து விட்டால் அவரை ஏற்றுக் கொள்ளவேண்டும்.
கன்னியர் இல்லம் சென்று ஒருவர் திரும்பி வந்து விட்டால் அதில் வருத்தப்படுவதற்கு
ஒன்றும் இல்லை. ஏனெனில் அவர்கள் திரும்பி வருவது அவர்கள் ஏதாவது தவறு செய்த
காரணத்தால் அல்ல. மாறாக அவர்கள் சிலகாலம் பயிற்சி பெற்றபின் 'எனக்கு இந்த வாழ்க்கை நிலை ஏற்றது அல்ல' என்று உணர்ந்து திரும்பி வருகிறார்கள். எனவே
அவர்களை நாம் மகிழ்ச்சியுடன் நம் இல்லத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது நமக்கு
இகழ்ச்சி அல்ல புகழ்ச்சிதான். எனவே நம் பிள்ளைகளிலிருந்து ஏராளமான மாணவர்கள்
இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொள்ள நீங்கள் செபியுங்கள். இன்று இந்த குருப்பட்டம்
இங்கு வைத்து நடக்கின்ற காரணத்தால் இப்பகுதியிலிருந்து ஏராளமானோர் இறையழைத்தலை
ஏற்று குருக்களாக, கன்னியராக திருஅவையில்
பணியாற்றுகிறார்கள், என்ற செய்தி விரைவிலே கேட்க வேண்டும்
என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதுக்குரு தந்தை வற்கீஸ் நடுதல அவர்களின்
பெற்றோருக்கு என் அன்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன்
இப்புது குரு தம் அழைத்தலில் இறுதிவரை நிலைத்து நிற்க செபிக்க வேண்டும். என்றும்
நினைவுபடுத்துகிறேன்''.
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் இறுதியாக
திருத்தொண்டர் ஸ்கரிய கொச்சுமுருப்பேல் அவர்களுக்கு குருப்பட்டம் வழங்கினார்.
இவ்வாறு முதலும் இறுதியுமாக அவர் குருவாக திருநிலைப்படுத்திய இரு குருக்களுமே
அவருக்கு ஒப்படைக்கப்பட்ட மார்த்தாண்டம் மறைமாவட்டத்திலேயே ஆயருடன் இணைந்து
சிலகாலம் பணியாற்றினர் என்பதும் குறிப்பிபடத்தக்கது.
தலித் கிறிஸ்தவர்களுக்கும் அனைத்து உரிமைகளும்
வழங்க வேண்டும் என்று வாதாடியவர் ஆயர் இலாறன்ஸ். கேரளா அரசை கேட்டுக் கொண்டு
மாபெரும் பேரணி ஏற்பாடாயிற்று. தலித் கிறிஸ்தவர்களுக்காக நடத்தப்பட்ட இந்தப் பேரணி
திருவனந்தபுரம் வெள்ளயம்பலத்திலிருந்து Secretariate (அரசு
தலைமைச் செயலகம்) வரை நடந்தது. காலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியில் ஆயரும்
நடந்து சென்று பங்கு பெற்றார். வழியில் அவர் கோஷம் ஒன்றும் முழக்கவில்லை. ஆனால்
இறுதியில் நடந்த கூட்டத்தில் ஆயர் இலாறன்ஸ் சொற்பொழிவாற்றினார். பிற்பகல் ஒரு
மணிக்கு இந்நிகழ்ச்சி முடிந்த பின் ஆயர், பேராயர்
இல்லத்திற்குச் சென்று உணவு உண்ட பின் சற்று ஓய்வெடுத்துக் கொண்டார். அப்போது
பேராயர் இல்லத்தில் 'ரீஜன்சி' நடத்திக் கொண்டிருந்த சகோதரர் ஜோசப் நெடுமாங்குழியில் (தற்போது அருட்தந்தை ஜோசப் நெடுமாங்குழியில்) பின்னர் நடந்தவற்றை இவ்வாறு விவரிக்கிறார்: "நான் மாலை 4 மணிக்கு டீ குடிக்க அவசரமாக போய்க் கொண்டிருந்தேன். என் முன்னால்
தோன்றினார் ஆயர் இலாறன்ஸ். பறப்பதற்கு தயாராக வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.
ஆயர் இலாறன்ஸ் காரில் ஏறினார். அப்போது என்னைப்பார்த்து, 'செம்மாசனும் வண்டியில் ஏறு' என்றார். எங்கே போகிறோம் என்று தெரியாமல் இருந்தது. எதிர் கேள்வி
கேட்பது சரி அல்ல என்று நினைத்த நான் ஒருவார்த்தையும் கூறாது காரில் ஏறினேன்.
பேராயர் இல்லத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை நோக்கி கார் சென்றபோது நான் சற்று
படபடத்தேன். எங்கே போகிறோம். எனக்குத் தெரியாது. வலப்புறம் கார் திரும்பினால்
காசர்கோடு வரைப் போகலாம். இடப்புறம் திரும்பினால் கன்னியாகுமரி வரையும்! நல்ல வேளை
கார் இடப்புறம் திரும்பியது. கூடிப் போனால் கன்னியாகுமரிவரைப் போகும். எப்படியாவது
ஒரு தீர்வு கண்டு விடலாம். நான் உறுதி அடைந்தேன். ஆனால் எதிர்பார்த்தது ஒன்றும் நடக்கவில்லை.
பாளயம் சென்றபோது அறிந்தேன் Secretariate
சமீபம் ஒரு
கலந்துரையாடலில் பங்கு பெறுவதுதான் நோக்கம் என்று. இடத்தை எட்டியபோது நான்
தெரிந்து கொண்டேன், ஆன்டனி அரசு ஏற்படுத்தி இருக்கும் 'மது ஒழிப்புத் திட்டம்' ஒரு வெற்றியா? இல்லைத் தோல் வியா? என்பதுதான்
உரையாடலின் தலைப்பு என்று. பல பெரியவர்கள் அதில் கலந்துகொண்டனர். அங்கு மிக
இளையவன் நான்தான். காரசாரமான விவாதம். அதிக நபர்களும் இது ஒரு தோல்வியாக இருக்கும்
என்று மட்டுமல்ல உயர் அதிகாரிகளையும், காவல்
துறையினரையும் குற்றம்சாட்டியும் பேசினர். எனக்கு பொறுக்க முடியவில்லை. நான்
எண்ணினேன்: எதற்காக எல்லோரையும் குற்றம்சாட்டவேண்டும்? மட்டுமல்ல “உங்கள் இளமை எங்கே?'' என்று அடிக்கடி கேட்கும் ஆயரின் முன் என் இளமையை நிரூபிக்க இது
நல்ல வாய்ப்பு என்றும் கருதினேன். உணர்ச்சிவசப்பட்டு நானும் எழும்பினேன். என்னைவிட
அறிவும், அனுபவமுமிக்க பெரியவர்களுக்கு முன்
நான் சற்று தயங்கினேன். ஒரு துணிச்சல் மிக்க வலிமையால் நான் என் கருத்தை
எடுத்துரைத்தேன். எவரும் அதற்கு பதில் கூற துணியவில்லை. நான் சற்று தடுமாறினேன்.
நான் நினைத்தேன், இந்த சிறு பையனின் கருத்தை எதற்கு
கருத்தில் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருப்பார்களோ! பெரியவர் மத்தியில்
பேசியதற்கு ஆயர் என்னை கோபப்படுவார் என எண்ணினேன். உரையாடல் முடிந்தது. ஆயர்
இலாறன்ஸ் என்னை அந்த பெரியவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். நன்றாக இருந்தது என்று
பாராட்டவும் செய்தார். அத்துடன் முடியவில்லை. இரவு பேராயர் இல்லத்தில் உணவின் போது
எனது துணிவையும் கருத்தையும் அனைவருக்கும் முன்னிலையில் பாராட்டவும் தவறவில்லை.
இந்நிகழ்ச்சிக்குப் பின் எத்தனை போராட்டம் வேண்டுமானாலும் போராடலாம் என்ற தெம்பை
நான் பெற்றேன். வாழ்வின் முக்கிய கட்டமாகிய இளமையை வீணாக இழக்காமல் திருஅவைக்கும், சமூகத்திற்கும் நன்மை செய்ய வலிமையுடன் போராட
பயன்படுத்த வேண்டும் என்றும் ஆயர் அடிக்கடி கூறுவார். இவ்வாறு செயல்படுத்துவோரை
காணும் போது அவர்களை அளவில்லாமல் பாராட்டவும் அதில் ஆனந்தம் கொள்ளவும் செய்கின்ற
ஒரு நல்ல ஆயர்".
டில்லியில்
தலித் கிறிஸ்தவர்களுக்கும் சம உரிமை வழங்க ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் பல
முயற்சிகளை எடுத்திருந்தார். குறிப்பாக இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச்
செயலராக இருந்தபோது இதற்காக நாட்டுத் தலைவர்கள் பலரையும் சந்தித்திருந்தார்.
ஒருமுறை இந்த இலட்சியத்தை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க ஒரு பேரணி
நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் தந்தை ஆபிரகாம் வாலுபறம்பில் அவர்களும்
பங்கெடுத்தார். இருவரும் சேர்ந்து பேரணியில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு
சேரிப் பகுதியை கண்டனர். உடனே ஆயர் தந்தை வாலுபறம்பிலினிடம், "இவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய முடியாதா? நிச்சயம் செய்ய வேண்டும்'' என்று கூறினார். அதற்கு தந்தை அவர்களை "பிதாவே! இவர்களின் கலாச்சாரம், மொழி ஒன்றும் நமக்கு தெரியாது. பின்
இவர்களுக்கு என்ன செய்வது?
என்று பதிலளித்தார். "இல்லை ஏதாவது செய்வதற்கு முடியும்''. ஆயர் உறுதியுடன் பதிலளித்தார். பின்னர்
இவர்களுக்கான HOM திட்டத்தின் செயல்பாடுகளை
ஆரம்பித்தார். இருப்பினும் அவரது திடீர் மரணம் இப்பணிகளுக்கு தற்கால முடிவு
கட்டிவிட்டது.
ஆயர்
ஒரு இயற்கை விரும்பியாக இருந்தார். Friends of trees என்ற
இயக்கத்தில் சகோதரர்கள் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பேராயர்
மார் கிரிகோரியோஸ் ஆரம்பித்த மரம், காய்கறி
வளர்த்தலை ஆர்வமுடன் தொடர்ந்தார். பேராயர் இல்லத்தின் மேல் மாடியில் காய்கறிகள்
நட்டு, வரிசையாக ஒருங்கே காய்த்து நிற்கும்
அழகைக் கண்டாலே எவரும் இதனால் தூண்டப்பட்டு செடிகளை நட்டு வளர்ப்பர். மாஞ்சியம்
விதைகள் கேசரிப்பதிலும்,
தைகள் வளர்த்து
பிறருக்கு வழங்குவதிலும் ஆர்வமுடையவராக இருந்தார். இதனால் பலருக்கு ஏராளமான நன்மை புரிய முடிந்தது.
16. பலரின் பார்வையில்....
ஆயருடன் நேரடியாக ஈடுபட்டிருந்த ஒரு சிலரது
எழுத்துக்கள் இங்கு கொடுக்கப்படுகின்றன. இவை ஆயரைப்பற்றி இன்னும் அறிந்துகொள்ள
உதவும்.
ஆயருடன் சுமார் 22 ஆண்டு காலம் நெருக்கமான உறவு வைத்திருந்த சாந்தி ஆசிரமத் தலைவர்
தந்தை கிறிஸ் பின் ஆச்சாரியா கூறுகையில் ''நான் மார் எஃப்ரேம் ஆயரின் வாழ்க்கையை என் முன்மாதிரியாகக் கண்டு
படிக்கவும், வளரவும் செய்தேன். அவரது பிரசன்னம்
எனக்கு என்றும் புத்துணர்வையும்,
உள்ளுணர்வையும், அக ஒளியையும் கொடுத்திருக்கிறது. களங்கமற்ற
சிரிப்பும், ஒரு தாய்க்குரிய அன்பும், அக்கறையும் என்னை கடமை உணர்வுடையவனாக
மாற்றியது. நான் ஆயரையும் அவர் என்னையும் நன்கு அறிந்திருந்தோம். அவர் குருத்துவத்தின்
முழுமையைத் தன் வார்ததையிலும்,
வாழ்க்கை முறையிலும் இறுதிவரை
பாதுகாத்தவர் ஆவார்''.
மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு தனிக்
கவனம் செலுத்தும் நோக்குடன் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் திருமதி. கனகபாய்
சத்தியதாஸ், திருமதி. மேரி செல்லப்பா திருமதி.
மரிய றோணிக்கம் மற்றும் திருமதி. விஜயா ஆகியோரை திருவனந்தபுரம் அருகில் உள்ள
முறிஞ்ஞபாலம் என்னும் இடத்திலுள்ள நிறுவனத்தில் பயிற்சிக்கு அனுப்பினார். 1996 டிசம்பர் 16-ஆம் நாள் முதல் இப்பயிற்சி ஆரம்பமானது. இதற்குள் 1997 பிப்ரவரி 6-ஆம் நாள் திடீரென ஏற்பட்ட உடல் நலக் 'குறைவால் ஆயர் ஸ்ரீஉத்ராடம் திருநாள் (SUT) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரத்திற்குப்பின் இந்த
நால்வரும் மருத்துவமனையில் ஆயரை சந்தித்தனர். பேசுவதற்கு கட்டுப்பாடு
விதிக்கப்பட்டிருந்தும்கூட இவர்களைக் கண்டவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ''நீங்கள் பயிற்சிக்குத்தானே வந்தீர்கள்? வகுப்பு முடிந்துவிட்டதா? பயிற்சியை நன்றாக பெற்றபின் நம் ஊரில் மூளை
வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்காக வகுப்புகள் ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் HOM திட்டங்களையும் நல்லமுறையில் கவனிக்க வேண்டும்'' என்று உரைத்தார்.
ஆயரின் நேர்முக உதவியாளராக நீண்ட காலம்
பணிபுரிந்த திரு. வில்லியம் கூறும் போது 'ஆயர் அவர்களின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. எந்த காரியத்தையும்
முன் கூட்டியே கணித்து செயல்படுத்தும் திறமைவாய்ந்தவர். எக்காரியமும் செய்யும்முன்
தேவையான அறிவுரைகள் வழங்குவார். நாம் செய்ய நினைப்பதற்கு எதிர்மாறாகத்தான் ஆயர்
அவர்களின் அறிவுரை இருந்தாலும்,
காரியம்
முடியும்போதுதான் அதனால் உண்டாகும் பலன் தெரியும்.
நேரத்தை வீணாக்கமாட்டார். சிறிது நேரம்
கிடைத்தாலும் மக்கள் முன்னேற்றப் பணிகளுக்கான திட்டங்கள் வகுப்பதில் செலவிடுவார்.
அதன் விளைவுதான் HOM எனப்படும் ஹெல்த் பார் ஒண் மில்லியன்
திட்டம். இதனால் பல திட்டங்களும் ஆயர் அவர்களை தேடி வந்ததுண்டு. யார் உதவி கேட்டு
வந்தாலும் ஆயர் அவர்களால் முடிந்த அளவு உதவுவார்.
அலுவலகத்தில் வேலை செய்பவர்களுடன் மிக
அன்பாகவும், அத்துடன் கண்டிப்பாகவும் இருப்பார்.
நாம் என்ன அலுவல் செய்யப் போகிறோம் என்பதை ஒரு மாதத்திற்கு முன்பாகவே எழுதி காட்ட
வேண்டும். ஒரு வாரத்திற்குள்ள வேலைகள் கண்டிப்பாக எழுதியிருக்கவேண்டும்.
அப்போதுதான் செய்ய வேண்டியவைக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியும், எந்த வேலையும் விட்டுப்போகாமல் இருக்கும் எனக்
கூறுவார். அலுவலக வேலைகளில் மிக கவனமாக, சிறு
பிழை இருந்தாலும் அதை சரிசெய்துதான் அனுப்புவார். ஆயர் அவர்கள் கடிதம் எழுதும்போது, தான் குறிப்பிட்ட, நினைக்கும் கருத்தை பெறுபவர் புரியும் விதத்தில் மிக தெளிவாக
எழுதுவார். அலுவலக வேலைகளில் தவறுகள் ஏற்படும் போது கடிந்து கொண்டாலும், சிறிது நேரத்திற்குப் பின் அதை சுட்டிக்காட்டி
புரியவைப்பார்.
பொதுவாக சிறு குழந்தைகள் முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம் இவைகளில் மிகுந்த அக்கறை
கொண்டவர். இன்று பிள்ளைகளை நல்லமுறையில் வளர்த்தினால் தான் நாளைய சமுதாயம் நன்றாக
இருக்கும் என்பார். குழந்தை நலவாழ்வு, குடும்ப
வாழ்வு போன்றவை பற்றி மறையுரை நேரத்திலும் பள்ளி ஆண்டு விழாக்களிலும் உரை
நிகழ்த்துவார். மக்கள் ஆயருக்கு வேறு எதுவும் சொல்வதற்கு இல்லையா என்று
கேட்டதுண்டு.
ஆயருடன் அலுவல் செய்த காலத்தில் ஒரு
தந்தைக்குரிய அன்பும்,
அரவணைப்பும் எனக்கு
கிடைத்ததுண்டு. இடையிடையே ''வீட்டில் எல்லாரும் சுகமாயிரிக்குந்
நோ? பிள்ளேருடெ படித்தம்
எங்ஙனெயிரிக்குந்து"?
என்று வினவுவார். அலுவலக
வேலை இருந்தால் இரவென்றோ,
காலையென்றோ நேரம்
பார்க்காமல் யாரையாவது சொல்லி அனுப்புவார். கிராத்தூர் பங்குத்தந்தையாக இருந்தது
முதல் ஆயர் அவர்கள் நோய்வாய்ப்படுவதுவரையில் அன்னாருடன் சுமார் 19 ஆண்டு காலம் வேலை செய்ய முடிந்ததை பெரும்
பாக்கியமாக கருதுகிறேன்''
பத்தேரி மறைமாவட்ட ஆயர் மேதகு வற்கீஸ் மார்
திவன்னியாசியோஸ் அவர்கள் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களைப்பற்றி கூறுவதைக் கீழே
காண்போம். ''சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட, குரல் எழுப்ப முடியாத மக்களுக்காக தன் வாழ்வை நற்செய்தியின்
மதிப்பீட்டிற்கு ஏற்ப அர்ப்பணித்தவர் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள். எனவே
அவர் வாழ்வு மக்கள் மத்தியில் அர்ப்பணத்தின் நினைவுச் சின்னமாக விளங்குகின்றது.
அவர் வாழ்வு எளிய வாழ்வாக இருந்தது. அவரது இனிய எளிய வாழ்வுமுறை என்னை அதிகமாக
கவர்ந்தது. சாதி, மத பேதமின்றி அவரை எல்லோரும் எளிதில்
அணுகக்கூடியவராக இருந்தார்... ''மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள்
செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்......'' (மத். 25:40)
என்ற இயேசுவின்
வார்த்தையை அவர் நம்பியிருந்தார்.
நான் அவரிடம் கொண்டிருந்த உறவு வழியாக அவரது
ஆன்மீக வளமையை நன்கு அறிந்துகொண்டேன். இறைவனில் அவர் வைத்திருந்த நம்பிக்கைதான்
மார்த்தாண்டம் மறைமாவட்டத்தை தோற்றுவித்து அதைக்கட்டி எழுப்புவதற்குரிய திடனை
அவருக்கு கொடுத்தது. பல்வகையான வரம்புகளுக்கு உட்பட்ட மார்த்தாண்டம்
மறைமாவட்டத்தின் முதல் ஆயராக அவரை பொறுப்பேற்கச் செய்தது அவரது ஆழமான இறை
நம்பிக்கையும், எதிர்நோக்குடன் கூடிய கண்ணோட்டமுமே
ஆகும்'. ஏற்கனவே மார்த்தாண்டம் மறைமாவட்ட
மக்களுக்கு நன்கு அறிமுகமாயிருந்த ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள்
அம்மக்களின் எண்ணங்களையும்,
எதிர்பார்ப்புகளையும்
நிறைவு செய்பவராக விளங்கினார். இயேசுவின் திருஅவையை கட்டி எழுப்புவதில் அவர்
என்றும் பொறுப்புமிக்கவராக திகழ்ந்தார்.
திருஅவையின் படிப்பினைகளை என்றும்
பிரமாணிக்கமாக கடைபிடித்து போதித்தவர் அவர். அவருக்கு தனக்கே உரித்தான தொலை
நோக்குடன் கூடிய ஒரு கண்ணோக்கு இருந்தது. பல்வேறு இறையியல் சிந்தனைகளின் தெளிவற்ற
நிலையில் கூட உண்மையை உறுதியாக கடைபிடிக்க அவர் தவறவில்லை. எனவேதான் திருஅவையின்
முக்கிய பொறுப்புகளை ஏற்று மக்கள் நலனுக்காக பணிபுரிய அவரால் முடிந்தது. தம்
மறைமாவட்ட குருக்களுக்கு இவர் ஒரு உடனுழைப்பாளியாகவும் சகோதரராகவும், பிற ஆயர்களுக்கு ஒரு நண்பராகவும் எப்போதும்
தேவையான உதவிக்கரம் நீட்டுபவராகவும் இருந்தார்.
நான் மலங்கரை குருத்துவக் கல்லூரி அதிபராக
இருந்தபோது அடிக்கடி எங்களை சந்தித்து குருமாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை
வழங்கினார். குருத்துவ அழைப்பின் இன்றைய தேவையையும், முக்கியத்துவத்தையும் பற்றி குருமாணவர்களுக்கு நன்கு உணரவைக்க
வேண்டும் என்ற கண்டிப்பு அவருக்கு. இருந்தது. 1996 -ஆம் ஆண்டு இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைக் கூட்டம் நம்
குருத்துவக் கல்லூரியில் வைத்து நடைபெற்றபோது அவர் அடிக்கடி வந்து நேரடியாகவே
அனைத்து ஏற்பாடுகளுக்கும் தலைமை ஏற்று வழிநடத்தி உதவிய நிகழ்ச்சிகளை என்னால்
மறக்கமுடியாது.
உடல் நலம் மிகவும் குன்றியிருந்தபோதும் நீண்ட
தூரம் பயணம் செய்து 1997
-ஆம் ஆண்டு பெப்ருவரி
மாதம் 5-ஆம் நாள் பத்தேரியில் வைத்து நடைபெற்ற
எனது 'ஆயர் அபிஷேகத்' திருச்சடங்கில் பேராயருடன் இணைந்து தலைமை
வகித்து நிறைவேற்றியது என் வாழ்வில் என்னை அதிகமாக தொட்ட ஒரு நிகழ்ச்சி ஆகும்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் மீண்டும் படுக்கையில் ஆனார். பின்னர் அவரை நான் S.U.T மருத்துவமனையில் சந்தித்தபோது மலங்கரை
கத்தோலிக்க திருஅவையின் வளர்ச்சிபற்றி விரிவாக என்னுடன் உரையாடினார்.
சுருங்கக் கூறின், நான் வாழ்வில் சந்தித்த ஒருசில மிகப் பெரிய நபர்களில் ஆயர்
இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களும் ஒருவர். இவர் ஒரு மெய்யான மேய்ப்பர். மக்களின்
வளர்ச்சிக்காக தன் வாழ்வை தியாகம் செய்தவர். இறுதிவரை தன்னை அழைத்த ஆண்டவருக்கு
பிரமாணிக்கமாய் இருந்தவர். இறைசித்தத்தை நிறைவேற்றுவதில் அவர் காட்டிய
அர்ப்பணமனநிலை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றுவதற்கு ஏற்றது. ''உங்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துச்
சொன்ன உங்கள் தலைவர்களை நினைவு கூருங்கள். அவர்களின் வாழ்வின் நிறைவை
எண்ணிப்பார்த்து நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கை உடையவர்களாய் இருங்கள்'' (எபி. 13:7). இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு பிரமாணிக்கமாய்
இருக்க முயல்வோம்".
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் பிற
மறைமாவட்டங்களிலுள்ள பலருடன் நல்ல உறவை வைத்திருந்தார். தூத்துக்குடி
மறைமாவட்டத்தை சார்ந்தவர் தந்தை நவமணி அவர்கள். இவர் 'குரு காமராஜர்'
என்றும் 'பேராச்சாரியார்' என்றும் 'மோண்சிஞ்ஞோர்' என்றும் 'டாக்டர்' என்றும் பட்டம் பெற்றவர். ''எல்லாமே நன்மைக்கே'' என்ற
விருதுவாக்குடன் வாழ்ந்த இவர் 'வரதட்சணை ஒழிப்பு - இருதட்சணை ஏற்பு' இயக்கம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். இவர்
ஆயர் இலாறன்சுக்கு நண்பர். இவர் பணிகளை பாராட்டி ஊக்குவிப்பவர். பல பல சமூக
நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்து பங்கு பெற்றுள்ளனர். ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
அவர்கள் இறந்தபோது தந்தை நவமணி ஆயரின் இறுதிச் சடங்குகளின் மத்தியில் தானாக இயற்றி
மனமுருக பாடல் ஒன்றைப் பாடினார்.
''உம்முகம் காண்பதெப்போ உம்குரல் கேட்பதெப்போ -
உம்மை ஆயர் இலாறன்ஸ் என்று அழைப்பதெப்போ.....'' என்று உணர்ந்து கண்ணீர் வடிக்கப்பாடியபோது அங்கு குழுமியிருந்த
பெருங்கூட்டத்தினர் வாய்விட்டு அழுதனர் என்றால் இவர் தம் நட்பின் ஆழம் நமக்கு
நன்கு புரிகிறதன்றோ!
ஆயரைப்பற்றி அருட்தந்தை தோமஸ் குளங்ஙர
கூறும்போது, 'ஆயரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு
எனக்கு கிடைத்ததுண்டு. மிக எளிமையாக வாழ்க்கை நடத்தி திருஅவையின் நற்செய்தி
அறிவிப்புப் பணிக்காக தன்னையே வெறுமையாக்கிய பெருமையுடைய மனிதர் அவர்.
பொதுநிலையினரோடு மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். தன்னுடைய ஆயர் பதவியை பொருட்படுத்தாமல்
அவர்களோடு பழக முடிந்தது. ஆண்டவரின் விருப்பத்திற்கு நம்மை விட்டுக்
கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்த அவரால் அதனை செயல்படுத்தவும் முடிந்தது.
இவரைப் போன்ற நற்செய்தி அறிவிப்பாளர்கள் மலங்கரை கத்தோலிக்க திருஅவையில் ஒரு சிலரே
உளர் என்பது என் கருத்து. எந்த சூழ்நிலைக்கும் பொருந்தும்படியான அவருடைய வாழ்க்கை
என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கீழ்ப்படிதல் அவரிடம் காணப்பட்ட ஒரு சிறப்பான தன்மை.
அதேவேளையில் கண்மூடித்தனமாக கீழ்ப்படிந்ததால், அவருடைய செயல்பாடுகளில் சில வெற்றியைக் கொடுக்கவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது. ஒரு நற்செய்தி பணியாளர் என்ற முறையில் நான் அவரை மிகவும்
விரும்புகிறேன்'' என்றார்.
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களின்
வாழ்க்கையால் வெகுவாக கவரப்பட்டவர்களில் ஒருவர்தான் திருவல்லா உர்மறைமாவட்ட
பேராயர் மேதகு தோமஸ் மார் கூறிலோஸ் அவர்கள். இவர் ஆயரைப்பற்றி கூறும்போது அவரது
குருமட வாழ்வின் நாளிலும்,
டில்லியில் மலங்கரைக்
கத்தோலிக்கர்களின் பொறுப்பு வகிக்கும் தந்தையாக இருந்தபோதும், இன்னும் பல சூழ்நிலைகளில் மிக இனிமையான பல
அனுபவங்கள் தமக்கு உள்ளதாக கூறுகிறார்கள். உரோமில் இவர் பயின்ற காலம். அப்போது
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் C.B.C.I.
யின் பொதுச் செயலராக
இருந்தார். ''ஒரு முறை உரோமில் வந்திருந்த ஆயர்
கால்நடையாகவும், மற்றும் வாடகைக்காரிலும் பயணம் செய்த
மிக எளிய வாழ்க்கை முறை என்னை அதிகமாகத் தொட்டது'' என்கிறார். ''ஒரு சாதாரண மனிதனுக்கு கிடைக்கமுடியாத
எந்த வசதியையும் அவர் அனுபவித்ததை நான் பார்த்ததே இல்லை. மிக எளிய ஒரு வாழ்க்கை
அவர் வாழ்ந்தார். எளிய வாழ்வு வாழ்வதிலே அவர் மகிழ்ச்சி அடைந்திருந்தார். தன்னை
ஒரு போதும் அவர் உயர்ந்தவராகக் காட்டிக்கொள்ளவில்லை. பெரிய மனிதர்களுக்குத்தான்
வாழ்வில் எளியவராக இருக்க முடியும். ஏனெனில் அவர்களுக்கு பெருமைப்பட வாழ்வில் வேறு
ஏராளமான காரியங்கள் இருக்கும்.... அவரது மறைபரப்பு ஆர்வம், செப வாழ்வு,
சமூக சேவை போன்றவை
மலங்கரை கத்தோலிக்க திருஅவை வரலாற்றில் அவருக்கு ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக்
கொடுத்திருக்கின்றது. நம் கவனத்திற்கு அவர் ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்தார்.
உலகம் ஒருவருக்கு எவ்வளவு இருக்கிறது (having) என்பதன்
அடிப்படையில் மதிப்பு அளிக்கிறது என்றால், இறைவன் ஒருவர் எத்தகையவராக இருக்கிறார் (being) என்பதன் அடிப்படையில் மதிப்பு அளிக்கிறார்.
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் இரண்டாம் வகையின் அடிப்படையில் வாழ்ந்து
நம்மை பேறுடையவர்கள் ஆக்கியிருக்கின்றார். அவரது நினைவுக்கு முன் எளிய அஞ்சலியை
செலுத்துகிறோம்''
குமரி கிறிஸ்தவ சமய மற்றும் சமூக நல்லிணக்க
இயக்கத்தின் (KEM) செயலர் அருட்திரு. சி. சாம்ஜி அவர்கள்
ஆயருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களுள் ஒருவர். ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
அவர்களுடன் அவருக்கு இருந்த உறவை கீழ்வருமாறு விளக்குகிறார்.
''காலத்தின் வேகமோ, கோள்களின் வேகமோ தெரியவில்லை. வருடம் ஒன்று ஓடிவிட்டதாமே!
நம்பமுடியவில்லை என்னால். ஏனென்றால் நம் உறவுகள் உதட்டளவு இல்லாமல் ஆலமரம் போல்
ஆழமாக விரிவாக வளர்ந்துள்ளதே. காரணம் "Ay Sanji Listen" என்ற தாங்களது அன்பு கலந்த பதம் இன்னும்
என்னில் ரீங்காரம் செய்துகொண்டுதான் இருக்கிறது. பிறப்பால் தென்னிந்திய
திருஅவையின் திருப்பணியாளரான எனக்கு தாங்காத அன்புறவால் கத்தோலிக்கத் திருஅவையில்
நல்லுறவு தந்ததும் தாங்கள்தானே. தங்களது நல்லுறவு, நல்லிணக்க பணிகளைக்குறித்து தெளிவாக வரைய வேண்டியது, திருஅவையின் சரித்திரத்தில் இன்றியமையாத
ஒன்று. ஆயர் பெருமானே! தாங்களது திருஅவை நல்லுறவின் நல்லிணக்க பணிகளை (ECUMENICAL MINISTRY) காணிக்கையாக வார்த்தைகளில்
படைக்கிறேன்.
''திருஅவையின் பேதுருவாக செயல்பட்ட ஆயர்
அவர்களின் சிந்தனையில் திருஅவை பிரிவுகளிடையே சமய மற்றும் சமூக நல்லிணக்கம் (ecumenism) இன்றியமையாதது என்ற தாகம் இருந்தது. இதை
அவர்கள் அருட்தந்தையாக இருந்த காலத்திலேயே செயல்படுத்தினதாகவும் அறிவேன். மேலும் 2-ஆம் வத்திக்கான் சங்க ஏடுகளில்
குறிப்பிடப்பட்டிருந்த நல்லிணக்கத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் உள்ளவராக
இருந்தார். அதோடு சமய மற்றும் சமூக நல்லிணக்க பணியானது தெளிவான மனித நேய
கோட்பாடுகளுடன் பரவவேண்டும் என்ற ஆர்வம் அவருடன் இருந்தது. இப்பணிக்கு இடையூறாக
இருக்கும் திருஅவை கோட்பாடுகளைக் குறித்து திருஅவைத் தலைவர்கள் மற்றும்
சிந்தனையாளர்களுடன் மனம் திறந்த உரையாடல் தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தினார்''
''சமய மற்றும் சமூக நல்லிணக்கப் பணிகளின்
இன்றியமையாத நிலையை நன்கு உணர்ந்தவர். இவர் காலத்தின் இன்றியமையாத ஒருவர் என்று
கூறுவர். நல்லிணக்க இயக்கம்,
சுய நலம் கொண்டதாகவோ, இறையியல் தன்மை இல்லாததாகவோ கிறிஸ்தவ ஒழுக்க
நெறி அற்றதாகவோ செயல்படக்கூடாது என்று கருத்து பிடிப்பு உள்ளவர்.
"இந்திய தேசிய அரசியல் தளத்தில் கன்னியாகுமரி
மாவட்டம் மதவெறி அரசியல்வாதிகளுக்கு ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கு
கிறிஸ்துதான் விடை என்பதை குமரி கிறிஸ்தவ சமயம் மற்றும் சமூக நல்லிணக்க இயக்கம் (Kumari Ecumenical Movement) சமூக நீதிப்பயணம் மற்றும் பணியின்
மூலம் தெளிவு படுத்த வேண்டும் என்றார். குமரி தென்னிந்திய திருஅவையின் முதற்
பேராயரும், தென்னிந்திய திருஅவையின் 5-ஆவது பிரதம பேராயருமான அதி உயர் மறை திரு. I.R.H. ஞானதாசன், கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் அஞ்ஞசுவாமி ஆண்டகை மற்றும்
இந்திய சுவிசேக லூத்திரன் திருஅவையின் தலைவர் திரு. டாக்டர் H.B. ஜக்கையா, இரட்சண்ணிய சேனை திருஅவை இணைந்து ஆரம்பிக்கப்பட்ட குமரி கிறிஸ்தவ
ஒற்றுமை இயக்கத்தை (KEM)
மீண்டும் உற்சாகமூட்டி
குமரி தென்னிந்திய திருஅவை ஆயர் கிறிஸ்துதாஸ், கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் தர்மராஜ், மற்றும் இதர திருஅவைகளுடன் இணைந்து செயல்பட
உற்சாகமூட்டினார். இதற்காக தனது திருஅவையின் அருட்தந்தையர்கள், கன்னியர்கள் மற்றும் ஆர்வமுள்ளோரை அவசியம்
கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அதோடு குமரி கிறிஸ்தவ சமய மற்றும் சமூக நல்லிணக்க
இயக்கத்திற்கு பாதுகாவலராக இருந்து இறுதிவரை பணி செய்தார்''.
"குமரி தென்னிந்திய திருஅவையின் இரண்டாவது
பேராயர் அறிவர் கொ. செல்வமணி அவர்களைப்போன்று நடையில், அணுகுமுறையில்,
நிர்வாகத்தில், எளிமையானவராக செயல்பட்டார். இந்த எளிமையில்
மனித உள்ளத்தையும், இறைத்தன்மையையும் நான் கண்டேன். ஆனால்
சில அருட்தந்தையர்கள் மேலும் சில முதன்மையானவர்கள் இந்த எளிமையை மதிக்கவில்லை
என்பதையும் நான் அறிவேன். இதனால் அவரது திறம், நிறம்,
குணம் எந்த வகையிலும்
குறைந்து போகவில்லை என்பதைக் கடவுளே நிரூபித்துக் காட்டினார். எப்படி? அகில இந்திய கத்தோலிக்க ஆயர் சங்கத்தின்
பொதுச் செயலராக 2-வது முறை உயர்த்தப்பட்டார். இதனால்
அகில இந்திய அளவில் மத்திய,
மாநில அரசுத் தலைவர்கள், மற்ற அரசியல் தலைவர்கள், திருஅவையின் தலைவர்கள், திருஅவை சார்பு (Para Church Organizations), சமூக நிறுவனங்களின் தலைவர்கள், இவரை எப்படி கண்டு கொண்டார்கள் என்றால் இவர்
இனிமையானவர், அரசியலில் சாணக்கியர், நிர்வாகத்தில் திறமையானவர் என்று
பாராட்டினார்கள். இதை நான் நன்கு அறிவேன்".
''திருஅவை என்பது கிறிஸ்துவின் திருப்பணிகளை
சமூக நலனுக்காவும், மனித வளர்ச்சிக்காவும் கொடுக்கப்பட்ட
அவரது சரீரம். இதை மக்கள் இயக்கமாக வளர்த்த வேண்டியது, திருப்பணியாளருடைய அர்ப்பணம் ஆகும். திருஅவை நிர்வாகத்தைப்பற்றி
அவர் கூறியதாவது: மனிதனுடன் அன்புற்று செயல்படுதலாகும். எப்படியெனில் ஒரு தந்தை
அவன் மகனிடத்தில் அன்பு பூண்டு தந்தை நடக்க வேண்டிய முறையில் செயலாற்றல் வேண்டும்.
அதோடு மகன் தந்தையிடத்து எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமோ அவ்வாறு செயலாற்ற வேண்டும்.
இவ்வழிதான் வளர்ச்சிவழி நிர்வாகம் என்பர்''.
''இந்த பரந்த கூட்டுறவில் கிறிஸ்து பிறப்பு
ஆராதனை ஒன்றில் அருளுரை ஆற்றினார். பின்னர் நானும் ஆயரும் சுகவீனமாக இருந்த
கோட்டார் மறைமாவட்ட ஆயர் லியோன் தர்மராஜ் அவர்களைப் பார்க்கச் சென்றோம். போகிற
வழியில் நடைபெற்ற உரையாடல் பலவற்றில் விசுவாசத்தைக் குறித்து ஆழமான கருத்துக்களை
என்னிடம் சொன்னார். இக்கருத்துக்கள் ஒவ்வொரு கிறிஸ்தவனும் அறிந்து வைக்க வேண்டிய
ஒன்றாகும். அவர் கூறிய பல கருத்துக்கள் என் கையேடுகளில் உள்ளன. அவற்றிலிருந்து
சில.
Think success and believe that
you are capable of being successful. Cease to think in terms of what you cannot
do, but in terms of what you can do. (Ay Samji) Never think failure. Failure is
antifaith, when opportunity appears, hold the deep conviction that, "this
is right for me. I shall succeed." The measurement of your success is not
determined by the size of your brain but by the size of your faith. Affirm this
belief. Faith is an attitude of mind. Faith is belief in myself, other people and
God. I live in faith; I act through faith".
"குமரி கிறிஸ்தவ சமய மற்றும் சமூக நல்லிணக்க
இயக்கம் தொடர்ந்து பற்பல பணிகளை ஆற்றவேண்டும் என்று வாழ்த்திய ஆயரது வார்த்தைகளை
நினைக்கின்றேன். மார்த்தாண்டம் மலங்கரை கத்தோலிக்க மறைமாவட்டம் இப்பணியில் ஆழமாக
வளரும் என்ற நம்பிக்கையுடனும் நல்லுறவுடனும் வணக்கத்திற்குரிய நமது ஆயர் மேதகு
டாக்டர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களுக்கு இதய அஞ்சலியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்''
ஆயருடன் நெருங்கிப் பழகி ஈடுபட்ட தந்தை
பிரேம்குமார், ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களை ''காலத்துக்கு ஒவ்வாத ஆயர்'' என்று அழைக்கிறார். இவ்வாறு வித்தியாசமாக
காண்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் இதோ, ''மனிதனை 3
வகையாகப் பிரிக்கலாம்.
பழமைவாதிகள்
புதுமை மனிதன்
முற்போக்கு சிந்தனையாளன்
1. பழமைவாதி
சமூகத்தின் இன்றைய தேவைகளை 20
ஆண்டுகளுக்கு முன் உள்ள
சமூக சிந்தனைகளின் அடிப்படையில் சிந்திப்பான். அதையே சாதிக்க நினைப்பான். எனவே
காலத்திற்கு ஒத்துப்போகாது. உலக சிந்தனைகள் மாறினாலும் தன்னிலே மாற்றம் இல்லை. என்
குறுகிய காலத்தில் அப்படி இருந்தது. நான் படிக்கும்போது இப்படித்தான் செய்வேன்
என்று பழமைகளை உயர்வாகச் சொல்வான். இவர்கள் செயலிலும் அவ்வளவாக இருக்காது.
பாரம்பரியங்களை நினைவுகூற உதவுமே அல்லாமல் செயல் வடிவத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இது வழிவகுக்காது. எனவே
இவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எப்போதும் கருத்து
உரசல் நடைபெறும். இதை ஆங்கிலத்தில் Generation Gap (தலைமுறை
இடைவெளி) என்பர்.
2. 'புதுமை
மனிதன்' என்பவன் இன்றைய சமூக தேவைகளுக்கு, இன்றைய சிந்தனை அடிப்படையில் பதில் காண
முயல்வான். அப்படியே செய்ய விரும்புவான். மக்கள் அவன் பின்னே செல்ல
விரும்புவார்கள். அவன் தன்னைக் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வான். உலகில் எது
மாறினாலும் அதை எளிதில் தனதாக்கிக் கொள்வான். அவனுக்கென்று எந்த கொள்கைகளும் இருக்காது.
காலத்திற்கேற்ப தன்னையும்,
தன் சிந்தனைகளையும்
மாற்றக்கூடியவன். Flexible
என்று ஆங்கிலத்தில்
சொல்வார்கள். பல வேளைகளில் Majority
யின் கருத்துகளுடன்
ஒத்துப்போவான். எனவே எல்லோரும் நல்லவர் என்று சொல்வர்.
3. முற்போக்கு
சிந்தனையாளன் இனி 10 ஆண்டுகள் கழிந்தால் சமூகம் எப்படி
இருக்கவேண்டும் என்ற சிந்தனையோடு சமூகம் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது; இன்று எப்படி இருக்கிறது; 10 ஆண்டுகளுக்குப் பின் எப்படி இருக்க வேண்டும் என்று விஞ்ஞான
முறைப்படி சிந்தித்து அதற்காக இன்று முற்படுவான். தன் கொள்கைகளை, சிந்தனைகளை 10 ஆண்டுகளுக்குப்பின் சமூகம் இருக்க வேண்டிய Vision (தொலைநோக்கு ) உடன் ஒப்பிட்டு செயல்படுவார்.
அப்போது இன்றைய மனிதனுக்கு அது ஜீரணிக்க கடினமாக இருக்கும். பழமையில் அவன்
பழக்கப்பட்டவன். புதுமை அவன் இன்று காண்கிறான். தொலை நோக்கில் நாளை என்பது
அவனுக்கு அனுபவமில்லாத ஒன்று. எனவே பல கேள்விகள் சமூகத்தில் எழும்பும். பலர்
எதிர்ப்பர். இது நடக்குமா என்று சந்தேகங்கள் எழுப்புவர். இப்படி சமூகத்தில் பல
விளக்கங்கள் வரும்போது (Majority)
அதிக மக்களும்
எதிர்ப்பர். ஆனால் தொலை நோக்கு உள்ளவன் அந்த எதிர்ப்புகளுக்கு கலங்காமல் உறுதியாக
நின்று அந்த நாளுக்காக பொறுமையோடு போராடுவான். அது மனிதனின் நிலையான வளர்ச்சிக்கு
உதவுவதாக இருக்கும். அதற்காக எந்த துன்பத்தையும் தாங்கக் கூடியவன், கொள்கை பிடிப்புள்ளவன், சமூகத்தின் மீது பற்றுள்ளவன், தான் அல்ல முக்கியம் சமூகம் முக்கியம் என்று
உணர்ந்தவன். இப்படிப்பட்ட மனிதர்கள் இறந்த பின்பே புகழப்படுவார்கள். (உம்.)
கலிலியோ, காமராஜர், காந்தியடிகள் போன்றோர்.
இன்று வாழும் எல்லோரையும் இந்த மூன்றில்
காணலாம். நம் மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேன்மையான இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
அவர்களை நான் எண்ணுகையில் இவர் 3-வது நிலையில் உள்ளவர். 10 ஆண்டுகளுக்குப்பின் உள்ளதை, இன்று கண்டு செய்வதில் கொள்கை
பிடிப்புடையவரும், இன்றைய நிலை கண்டு நாளைய சமூகத்தை
கட்டி எழுப்ப முற்பட்டவரும் நம் ஆயர். இதை அவரது ஒருசில திட்டங்கள் வழியாக நான்
கண்டுள்ளேன்.
முதன் முதலாக அவரது HOM திட்டத்தின் சமூக அமைப்பிற்கு (Social Structure) பல ஆண்டுகளுக்கு முன் உருவம் கொடுத்தார்.
அன்று எல்லோரும் அவரை சிறுபிள்ளைத்தனம் என்றனர். ஆனால் இன்று அந்த அமைப்புதான்
உலகளவில் சமூகவியல் தத்துவங்களின்படி செயல்படும் Self-help Group (சுயஉதவி குழு) என்று உலக வங்கியும், உலக நாடுகளின் உதவும் அமைப்புகளும்
செயல்படுத்துகின்றன. நம் மறைமாவட்டத்திலுள்ள நிறை வாழ்வு சங்கம் அதன் தொடர்ச்சியே.
அன்று கண்டது. இன்று நடக்கிறது.
அதனால் தான் சிறு பிள்ளைகளின் எடை, அவர்களது ஆளுமை, ஆன்மீக வளர்ச்சியினை பாதிக்கும் என்று முன்கண்டு, ஒவ்வொரு பங்கிலும் குழந்தைகளின் எடை, குறித்த காலத்தில் எடுக்க வேண்டும் என்று
திட்டம் வகுத்தார். அன்று எல்லோரும் இது என்ன காரியம் என்று முணுமுணுத்தனர். ஆனால்
இன்று இது எல்லா மருத்துவமனைகளிலும் நோய் என்றால் உடனே எடை பார்க்கும் மனநிலை
உருவாகி உள்ளது. உடலுக்கும் மனதிற்கும் தொடர்பு உண்டு. அதுபோல எடைக்கும், ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என்பதைக்
காணமுடிகிறது.
எந்த ஒரு காரியத்தை ஆயரிடம் போய் சொன்னாலும், அதைக் காகிதத்தில் எழுதித்தரச் சொல்லுவார்கள்.
இதைக் கேட்கும் போது பலர் குறை சொன்னதுண்டு. "என்ன நாங்கள் சின்ன பிள்ளைகளா? L.K.G., U.K.G. குழந்தைகளா'' என்று கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததும் உண்டு. ஆனால்
ஆயரில் அந்த எதிர்ப்புகள் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைத் திட்டவட்டமாக நன்மையின்
படியாகக் கண்டு செயல்பட்டார். இன்றும் நான் அதை எண்ணும்போது முழுக்க முழுக்க
நல்லது என்று காண்கிறேன். ஒரு திட்டத்தை நாம் மனதில் எண்ணும் போது, அது விஞ்ஞான முறையில் செயல் வடிவம் உள்ளதாக
இருக்கவேண்டுமாயின் நம் மூளையும்,
பிற அனுபவங்களும்
ஒன்றிணைய வேண்டும். இதைக் காகிதத்தில் எழுதும்போதுதான் நாம் அதை உணர்ந்துள்ளோம்
என்று பொருள். மேலும்,
மீண்டும் நாம் போட்ட
திட்டத்தை திருப்பிப் பார்க்க அது உதவும். பேசுவது காற்றில் போய்விடும். பேசும்
வார்த்தைகளில் பெருமளவு பேசுவதற்காக பேசுகிறோம். (உம்.) அரசியல்வாதிகள். ஆனால்
திட்டங்கள் எழுத்து வடிவம் பெறும்போது மட்டும்தான் திட்டம் இடும் நபருக்கும், பயன்பெறுவோருக்கும், பயன் உள்ளதாக அமையும். இதை வளரும் சமூகம் நன்கு உணரும். அதை
முன்கூட்டியே கண்டவர் நம் ஆயர்.
"அது ஒரு தீர்க்கதரிசனம்
போல". அன்று அது ஒரு L.K.G. பயிற்சி என்று எண்ணினோம். இன்று அது Managerial Skill (நிர்வகிக்கும் திறமை) என்று உணர்ந்து
உள்ளோம்.
எனவே நான் கண்ட ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
காலத்திற்கு ஒவ்வாத மனிதர். ஆனால் சமூகத்தின் வளர்ச்சிக்கு நாளைய தேவைகளையும், அணுகுமுறைகளையும் முன்காணும் தீர்க்கதரிசி.
அவரது சிறப்பை உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் அன்றே புகழ்ந்தன. நாம் இன்றுதான்
உணரத் தொடங்கி உள்ளோம். ஆகையால் அவர் இன்றும், என்றும் வாழும் அமரர்.
மிக சிறப்பான முறையிலே மறைபரப்புப் பணியற்றி
இறையடி சேர்ந்தவர் (16.1.1998)
நாலாஞ்சிறை பிரான்சிஸ்கன்
துறவு சமூகத்தைச் சார்ந்த சகோதரர் பியோ அவர்கள். இவர் நம் ஆயருடனான உறவை விளக்கும்
போது இவ்வாறு கூறுகிறார். ''1970
அக்டோபர் மாதத்தில் நான்
முதன் முதலாக தந்தை இலாறன்சைச் சந்தித்தேன். நான் ஒரு பிரதராக
நவசன்னியாசத்திலிருந்து - வந்தவுடன் கிளிமானூரில் நியமிக்கப்பட்டேன். எனது முதல்
சுப்பீரியர் பிறதர் ஜாண்பால்,
இலாறன்ஸ் பாதரை எனக்கு
அறிமுகம் செய்து வைத்தார். அடர்த்தியான நீண்ட தாடியும் மீசையும் உடைய ஒரு
பக்தியுள்ள குருவானவர்''
என்று நான் என்னை
அறியாமலே கூறிவிட்டேன். அவர் என்னை கட்டி அரவணைத்து முத்தமிட்டார். மட்டுமல்ல, எனது ஆசைகள், திறமைகள் எல்லாவற்றையும் கேட்டு அறிந்து கொண்டார்.
1970-ம் ஆண்டு முதன் முதலாக ஐக்கிய கிறிஸ்தவ பேரவை
வெஞ்ஞாறம்மூட்டில் துவங்கப்பட்டபோது கிளிமானூரில் உள்ள நான்கு மறைபரப்புத்
தளங்களில் உள்ள மக்களை ஒருங்கிணைத்து வெஞ்ஞாறம்மூட்டில் ஊர்வலத்திற்கு கொண்டு
சென்றேன். ஊர்வலம் முடிந்த பிறகு வண்டியில் கொண்டு சென்ற உணவுப் பொருட்கள்
மக்களுக்கு பரிமாறப்பட்டது. எனக்கும், இலாறன்ஸ்
அடிகளாருக்கும் சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லை. அன்று வாமனபுரம் இலத்தீன் திருஅவை
குருவானவராக இருந்த சின்னப்பன் அடிகளார் இதை புரிந்து கொண்டு, இன்றைக்கு கிறிஸ்து பிறப்பு திருவிழா அல்லவா? நமக்கு ஒன்றாக சாப்பிடுவோம் என்று கூறி எங்களை
தன் மேடைக்கு அழைத்தார். அந்த இரவு நாங்கள் மூன்று பேருமாக நடந்து கோவிலை
சென்றடைந்தோம். ஃபாதர் அடுக்களையை திறந்து பார்த்தபோது, பூனை இருந்த எல்லா உணவு பொருட்களையும், கீழே தள்ளிப் போட்டு காலி செய்திருந்த பரிதாபமான நிலையைக் காண
முடிந்தது. அருந்த தண்ணீர் கூட கிடைக்கவில்லை. உண்மையாகவே எனக்கு மிகவும் கோபம்
இருந்தது. இலாறன்ஸ் அடிகளார் என்னுடைய தோள்பட்டையை தட்டிக்கொண்டு ''பார்த்தீர்களா பிரான்சீஸ்கனுடைய மகிழ்ச்சி'' என்று கூறினார். நாங்கள் மூன்று பேரும்
அனைத்தையும் மறந்து கலகலவென சிரித்தோம். பிறகு கோயிலில் சென்று பலிபீடத்தில்
போடப்பட்டிருந்த கயிற்றுப் பாயில் படுத்து உறங்கினோம்.
ஒருநாள் நான் ஃபாதரின் அறையில் சென்றபோது அவர்
மும்முரமாக கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். கிறிஸ்மஸ் கார்டுகள் வந்த
கவர்களையெல்லாம் சேர்த்து,
அதனுடைய உள்புறங்களில்
தான் அவர் கடிதங்கள் எழுதுவது வழக்கம். இந்த பழக்கம் சகோ. எஃப்ரேமிடமிருந்து
கற்றதாகும். அவர்தான் தந்தை இலாறன்சின் குடும்பத்தை கத்தோலிக்க திருஅவைக்கு கொண்டு
வந்தவர். அன்று முதல் அருட்சகோதரர்களின் நன்மாதிரிகளை பின்பற்றுவதில் அவர் மிகவும்
ஆர்வம் காட்டியிருந்தார். மிஷன் உணர்வும், ஜெப வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடும், பிரச்சினைகளை அஞ்சா நெஞ்சுடன் ஏற்றுக்கொள்வதற்கான மன உறுதியும், அவர்களிட மிருந்து கிடைத்ததாக அவர் அடிக்கடி
கூறுவார்.
ஒருநாள் இரவு 11 மணிக்கு அவர் என்னுடைய இல்லத்திற்குள் நுழைந்தார். ''ஒன்றும் சாப்பிடவில்லை. மதியமும் சாப்பிட
முடியவில்லை. ஏதாவது இருக்கிறதா?
என்று விசாரித்தார்.
நான் கொஞ்சம் கூழ் தயாரிக்க துவங்கிய போது, அங்கே அலமாரியில் இருந்த பழமும், பிஸ்கட்டும் எடுத்து சாப்பிட்டார். பின்னர்
உடனே கோயிலுக்குச் சென்றார். அங்கு இரண்டு மணி நேரம் இறைவனுடன் உரையாடினார்.
காலையில் பிரப்பன்கோட்டிற்கு செல்ல 10 ரூபாய்
கடன் வாங்கி சென்றது என்னுடைய மனதை நெகிழச்செய்தது.
ஒரு வருடம் கழித்து ஆயராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கிடைத்தது. அப்போது அந்த வழி நடந்து வந்த
ஃபாதர் என்னுடைய கைகளை அழுத்தமாக பிடித்து ரொம்ப நேரம் குலுக்கி விட்டு சொன்னார்.
எல்லோருக்கும் நான் இனி ஆயர். ஆனால் கிளிமானூர் மக்களுக்கு நான் என்றைக்கும்
ஃபாதராகவே இருப்பேன்.
கோட்டயத்தில் வைத்து நடந்த ஆயர்
திருநிலைப்பாடு விழாவில் கிளிமானூர் மிஷன் சென்றர்களிலிருந்து 60 மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து ஒரு பாண்ட்
செற்று கொண்டு சென்றிருந்தேன். இதைக்கண்ட ஆயர் வண்டியிலிருந்து சடசடவென இறங்கி
பிள்ளைகளை ஆசீர்வதிக்கவும்,
என்னை கட்டிப்பிடித்து
முத்தம் போடவும் செய்தார். அதை நான் இப்போதும் மிகவும் நன்றியுடன் நினைப்பதுண்டு.
எனக்கு இலாறன்ஸ் ஆயர் யாராக இருந்தார்? இந்த கேள்விக்கு ''அவர் என்னுடைய வழிகாட்டியாகவும், ஜெப வாழ்க்கையில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் மிஷன்
வாழ்க்கைக்கு ஒரு திறமைசாலியாகவும், எளிய
வாழ்க்கைக்கு சிறந்த உவமையாகவும்''
உண்மையாக திகழ்ந்தார்
என்பதே என் பதில்.
17. மறைமாவட்ட உதயமும், ஆயரின்
உறைதலும்
மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அந்த
நாள் திடீரென எதிர்பாராத வேளையில் வந்தது. 1996 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு
பட்டம் புனித மரியன்னை பேராலயம் குருக்களாலும், துறவியராலும்,
விசுவாசிகளாலும் நிரம்பி
வழிந்தது. பேராயர் சிறில் மார் பசேலியோஸ் சிறு ஜெபத்திற்குப் பின் மக்களைப்
பார்த்துக் கூறினார்,
"இறைவன் நம்மை
அதிகமாக ஆசீர்வதித்து வருகிறார். மலங்கரை திருஅவை மக்களாகிய நமக்கு இன்று மூன்று
மகிழ்ச்சியான செய்திகள் உள்ளன. திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரிடமிருந்து
வந்திருக்கும் அச்செய்தியை நான் இப்போது அதிகார பூர்வமாக விளம்பரப்படுத்துகிறேன்''. தொடர்ந்து, முறைப்படி கடிதங்களைப் படித்தார், பேராயர். அதில் பத்தேரி மறைமாவட்டத்தின் புது ஆயராக தந்தை வர்க்கீஸ்
ஒற்றத்தெங்கில் அவர்களை திருத்தந்தை நியமித்துள்ளதாகவும், இரண்டாவது,
திருவனந்தபுரம்
உயர்மறைமாவட்டத்தின் தென்பகுதியை பிரித்து மார்த்தாண்டம் மறைமாவட்டமாக
அறிவித்துள்ளதாகவும் மூன்றாவதாக,
இப்புதிய
மறைமாவட்டத்தின் முதல் ஆயராக மேதகு இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களை திருத்தந்தை
நியமித்துள்ளதாகவும் அறிவித்தார். எங்கும் ஒரே மகிழ்ச்சி, ஆரவாரம். தமிழக மலங்கரை மக்கள் அவ்வளவாக அப்போது அங்கு
இருக்கவில்லை. இருப்பினும்,
இருந்தவர்கள் ஆனந்தம்
அடைந்தனர். தொடர்ந்து,
தந்தை வர்க்கீஸ்
ஒற்றதெங்கில் அவர்களுக்கு மோதிரமும், மாலையும், சிவப்பு இடைக்கச்சையும் அணிவிக்கப்பட்டன.
பேராயரும், பிறரும் அவரைக்கட்டி. அரவணைத்து
முத்தமிட்டனர். பின்னர்,
ஆயர் இலாறன்ஸ் மார்' - எஃப்ரேம் அவர்களுக்கு இடைக்கச்சையும் மாலையும்
அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து,
பேராயரும் பிறரும்
தங்கள் "அன்பையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்க, கட்டி அணைத்து : தழுவிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயர்
பவுலோஸ் மார் பிலக்சினோஸ்,
திருவல்லா மறைமாவட்ட
முதன்மைக் குரு மோண்சிஞ்ஞோர் தோமஸ் கொடி நாட்டு குந்நேல், பத்தேரி* மறைமாவட்டத்தின் பரிபாலகராக இருந்த மோண்சிஞ்ஞோர் தோமஸ்
தாந்நிக்காகுழி, மற்றும் பல அருட்தந்தையரும் பங்கு
பெற்றார்கள். இவ்வாறு நீண்ட கால காத்திருப்பிற்குப்பின் மார்த்தாண்டம் மறைமாவட்டம்
உதயமானது. 1996 டிசம்பர் திங்கள் 16-ஆம் நாள் பட்டம் பேராலயத்தில் வைத்து
மார்த்தாண்டம் மறைமாவட்டம் உதயமான செய்தியும், அதன் முதல் ஆயராக மேதகு இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள்
நியமிக்கப்பட்டதும் எங்கும் பறைசாற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சிகள் முடிந்தபின் ஆயர் இலாறன்ஸ்
ஆலயத்திற்கு வெளியே வந்தார். அப்போது ஆயரோடு சிலகாலம் பணிபுரிந்த அருட். சகோதரி
குசுமம் D.M. ஆயரின் கைகளை முத்தம் செய்து கூறினார், ''பிதாவே! எங்கள் ஆவலை இறுதியில் இறைவன்
சாதித்துத் தந்திருக்கிறார். அதற்கு ஆயர், சகோதரியின் இருகரங்களையும் பற்றிக் கொண்டு கூறினார்: "நான் முதன் முறையாக மார்த்தாண்டம் வந்தது
தானியேல் சிங்கக்குகையில் கிடப்பதைக் கண்டுகொண்டும், இரண்டாம் முறை வந்தபோது இயேசு சிலுவை சுமந்து கொண்டு கல்வாரி
நோக்கி பயணம் ஆவதை கண்டு கொண்டும், மூன்றாவதாக
இப்போது வருவது (இரண்டு கைகளையும் விரித்து பிடித்துக்கொண்டு) சிலுவையில் மரணம்
கண்டுகொண்டும் ஆகும். சிஸ்டர் சிலுவை அடியில் நிற்பீர்கள் அல்லவா?'' “நிச்சயமாக செயம் வழியாக சிலுவையின் அடியில்
நான் நிற்பேன் பிதாவே''
என்று அவர்கள் பதில்
கூறினார்கள். ஆயர் கூறியது ஒரு இறைவாக்காகவே அமைந்துவிட்டது.
மேதகு ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம், மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக
அறிவிக்கப்பட்டபின் முதன் முறையாக இம்மறைமாவட்டத்தின் குருக்களை சந்தித்தபோது "மங்கள வார்த்தை அறிவிக்கப்பட்டபோது
கன்னிமரியாள் அந்த மகிழ்ச்சியை அறிவிக்க முதன் முதலில் தன் உறவினரான எலிசபெத்திடம்
சென்றார். அதுபோன்று மார்த்தாண்டம் மறைமாவட்டம் உதயமாகி, அதன் முதல் ஆயராக அறிவிக்கப்பட்ட பின், அந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் அறிவிக்க வந்துள்ளேன்'' என்று கூறினார். தொடர்ந்து அளித்த பல
அறிவுரைகளுக்கு மத்தியில் ''நான் இனி அதிக காலம் வாழ்ந்திருக்கமாட்டேன்.
என் இறப்புக்குப் பின் வெளியேயிருந்து யாராவது வந்து இங்குள்ள காரியங்களை
செய்வார்கள் என்று நினைக்க வேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தான் இங்குள்ள
காரியங்களை கவனிக்க வேண்டியது''
என்று பொறுப்புகளை
உணர்ந்து நாம் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
புது மறைமாவட்டம் உதயமான செய்தி குமரி மலங்கரை
மக்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. களியக்காவிளை முதல் குமரி வரையிலான
தமிழ் பேசும் பகுதியை உள்ளடக்கியது இம்மறைமாவட்டம். அடுத்த நிகழ்ச்சிகளுக்காக
தயாராயினர் மக்கள். ஆயர் இலாறன்ஸ் அவர்கள் மறைமாவட்ட குருக்களை ஒன்று திரட்டினார்.
அவர்களின் கருத்தை கேட்டறிந்து அனைவரின் ஒப்புதலுடன் ஜனவரி மாதம் 23-ஆம் தேதி மறைமாவட்ட தொடக்க விழாவும், பொறுப்பேற்பு விழாவும் நடத்தலாம் என
தீர்மானிக்கப்பட்டது. அதிகம் தாமதியாமல் இறைமக்கள் ஒன்று கூட்டப்பட்டனர். அங்கும்
ஆயர் கலந்துகொண்டு அரிய அறிவுரைகள் பல வழங்கினார். விழா எடுக்கும் இடம், மார்த்தாண்டம் மார்ஷல் நேசமணி நினைவுக்
கல்லூரி மைதானம் என்று தீர்மானிக்கப்பட்டது. குருக்களின் தலைமையில் கன்னியர், பொதுநிலையினருடன் இணைந்து ஒவ்வொரு
பணிகளுக்கும் தனித் தனி குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நிதிக்குழு, வரவேற்புகுழு, வழிபாட்டுக்குழு,
பந்தல், மேடை அமைப்புக்குழு, உணவுக்குழு இப்படி பல குழுக்கள் திறம்பட ஒருங்கிணைந்து செயல்படத்
தொடங்கின. இந்நிகழ்ச்சிகளில் மக்கள் காட்டிய ஆர்வமும், ஈடுபாடும் எத்தகைய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் என்று
தெரிவிப்பதாக இருந்தது.
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் மார்த்தாண்டம்
மறைமாவட்டத்தின் முதல் ஆயராக அறிவிக்கப்பட்டது முதல் தன் பணிகளில் இன்னும் தீவிரம்
காட்டத் தொடங்கினார். நீண்ட பல ஆண்டுகளாக கண்ட கனவுகள் தான் எத்தனை! தீட்டியிருந்த
திட்டங்கள் ஏராளம் ஏராளம்! ஆனால் அவற்றையெல்லாம் செயல்படுத்துவதற்கு அன்று
தடைகளுக்கு மேல் தடைகள். மக்களின் எதிர்பார்ப்புகள் ஒருபுறம்! அதிகாரிகள் அவர் மீது
சுமத்தியிருந்த கட்டுப்பாடுகள் மறுபுறம். அவர் பணிசெய்த மக்களின் எதிர்பார்ப்புகள்
இவர் வழியாக நிறைவேறவில்லையே என்ற ஏமாற்றம். நாம் இட்ட வரம்பை இவர் மீறிவிடக்கூடாது
என்ற அதிகாரிகளின் ஆதங்கம் மறுபுறம். இருபுறமிருந்தும் ஆயருக்குத்தான் நெருக்கடி.
ஆம், உரலுக்கு ஒரு புறம் தான் இடி என்றால்
மத்தளத்திற்கு இருபுறமும் இடி என்ற நிலைதான் அவருக்கும் ஏற்பட்டிருந்தது.
ஆனால் காலம் மாறிவிட்டது. கடவுள்
கனிந்துவிட்டார். மக்களின் மங்கிப்போன நம்பிக்கை இதோ புத்துணர்ச்சி பெற்று
எழுந்துள்ளது. மாறிவந்த அதிகாரிகளும் மனமுவந்து பணி செய்ய அனுமதித்துள்ளனர்.
அருளின் காலம் இதுவே. இறைவனுக்கு ஏற்புடைய நேரம் இதுவே. இதை எல்லாம் அறிந்தவராய்
ஆயர் இலாறன்ஸ் பணிசெய்யத் துணிந்துவிட்டார். அவர் நினைத்திருப்பார், ''எனக்கு திறமையில்லை என்று மக்கள் கூறிய காலம்
முடிந்துவிட்டது. நான் தீர்மானங்கள் எடுக்கத் தெரியாதவன் என்று அன்னியர் இகழ்ந்த
சூழ்நிலை மாறிவிட்டது. என்னிடம் வந்தால் ஒன்றுமே நடக்காது என்று ஏளனம் செய்யும்
மனிதர்கள் இனி தங்கள் கருத்தை மாற்றிவிடுவர். என்னை நாடி வந்தவர் என்று அறிந்தாலே
அவர்கள் விரும்பும் காரியத்தை கட்டாயமாக அதிகாரிகள் நடத்திக் கொடுக்க மாட்டார்கள்
என்று சிறுமையாக எண்ணிய நாட்கள் எல்லாம் இதோ முடிந்துவிட்டது. கண் முன் நான்
இருக்க, நான் அறியாமலே மேல் அதிகாரிகளிடம்
சென்று நினைத்ததை முடித்துவிட்டு எட்டி நின்று நகைப்பாக என்னை பார்க்கும்
மனிதர்கள் இனி இருக்கமாட்டார்கள். ஆம், இதுபோன்ற
எத்தனை எத்தனை கசப்பான அனுபவங்கள்! எவருக்கும் கூறமுடியாத இரகசியங்கள் யாருமே
அறியாத உள வேதனைகள்! இல்லை இல்லை! இவை கசப்பல்ல. இனிமேல் இனிப்பு. இவை அனைத்தும்
ஆண்டவர் குடிக்கக் கொடுத்த துன்பக்கிண்ணங்கள். இவைகளிலிருந்து நான் ஏராளம் கற்றுக்
கொண்டேன். இந்த அனுபங்கள் எல்லாம் இன்று எனக்கு பெரும் வலிமையாக, விலைமதிக்க முடியாத நிதியாக இருக்கிறது. இனி
காலம் தாழ்த்தக் கூடாது. இவற்றைப் பயன்படுத்தி வெகுவிரைவாகவே பணிகளை புதுப்பிக்க
வேண்டும். இரட்டிப்பாக பலனளிக்கச் செய்ய வேண்டும்.
இறுதியில் அந்த நன்னாளும் வந்தது.
மார்த்தாண்டம் பகுதியே நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தி கொண்டிருந்தது. எங்கும்
தோரணங்கள், அழகிய அலங்காரங்கள். சரியாக 2.30 மணிக்கு மலங்கரை திருஅவையின் தலைவர் பேராயர்
சிறில் மார் பஸேலியோஸ்,
திருவல்லா ஆயர்
கீவர்க்கீஸ் மார் தீமோத்தியோஸ்,
ஆயர் பவுலோஸ் மார்
பிலக்சினோஸ், பத்தேரி புது ஆயர் வர்க்கீஸ்
ஒற்றத்தெங்கில் ஆகியோர் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களை அன்புடன்
அழைத்துவந்தனர். அனைவரையும் மாலை அணிவித்து வரவேற்றனர். மார்த்தாண்டம் ஆலய
வாயிலில் பங்குத்தந்தையும்,
மறைவட்ட முதன்மைக்
குருவுமான தந்தை ஜோசப் பிலாங்காலை அவர்கள் வழிபாட்டு முறைப்படி வரவேற்பு
வழங்கினார். தொடர்ந்து பொறுப்பேற்கும் திருச்சடங்கு நடைபெற்றது. திருவனந்தபுரம்
உயர்மறைமாவட்ட குருகுல முதல்வர் கோர் எப்பிஸ் கோப்பா கோசி வர்க்கீஸ் அவர்கள்
இலத்தீன் மொழியில் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களை மார்த்தாண்டம் மறைமாவட்ட
ஆயராக நியமித்திருக்கும் திருத்தந்தை ஆணையை வாசித்தார். தொடர்ந்து அதன்
தமிழாக்கத்தை தந்தை பிறேம்குமார் வாசித்தார். இனிய பாடல்களும் பக்திமிக்க
செபங்களும் நிறைந்த அத்திருச்சடங்கு ஒன்றரை மணிநேரம் நடந்தது. இதன் மத்தியில் முக்கிய
திருச்சடங்காக ஆயர் இலாறன்ஸ் அவர்களை அரியணையில் இருத்தி அருட்தந்தையர் S. வர்க்கீஸ், பிறேம்குமார்,
கிறிஸ்பின், S. ஜாண், பிலிப் தயானந்து,
ஸ்கறியா
கொச்சுமுறுப்பேல் ஆகியோர் தூக்கி,
''இவர் இப்பொறுப்பிற்கு
தகுதி வாய்ந்தவர்'' என பொருள்படும் 'ஒக்சியோஸ்' மூன்று முறை பாடி' உயர்த்த
ஆயர் இலாறன்ஸ் அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்த வண்ணம் இருந்தார்.
இதன் பின்னர் தான் முறைப்படியான பொது வரவேற்பு
நிகழ்ச்சி ஆரம்பமானது. பிற்பகல் (ஆரம்பம் முதலே) பல்வேறு பங்குகளிலிருந்து தனியார்
வாகனங்களிலும், பேருந்துகளிலும், கால்நடையாகவும் மக்கள் வந்து குவிந்து கொண்டே
இருந்தனர். தேசீய நெடுஞ்சாலை வழியாக பஸ் போக்குவரத்து சில மணி நேரங்களுக்கு
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மார்த்தாண்டம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு முன்
தேசிய நெடுஞ் சாலையிலிருந்து மக்கள் வந்து குவிந்தவண்ணம் காணப்பட்டனர். இவர்களின்
கூட்டம் தொடர்ச்சியாக நேசமணி கல்லூரி மைதானம் வரைதிரண்டு இருந்தது.
களியக்காவிளையில், நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் M.C.Y.M. இளைஞர்கள் ஆயர்களை வரவேற்க தயாராகி நின்றனர்.
காரில் வந்த பேராயர்,
நம் ஆயர், மற்றும் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி
வரவேற்று, திருத்தந்தை கொடி வைத்து மெதுவாக
ஓட்டிய ஏராளமான கார்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் இளைஞர்கள் மார்த்தாண்டம்
வரவேற்பு இடம் நோக்கி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மார்த்தாண்டம்
ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குமுன் பொதுமக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆயர்கள் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தை நோக்கி அழைத்துவரப்பட்டனர்.
அப்போது பேராயரும் ஆயர் இலாறன்ஸ் அவர்களும் தங்கள் கைகளிலிருந்த சிலுவையால்
சிரித்த முகத்துடன் அனைவரையும் ஆசீர்வதித்த வண்ணம் இருந்தனர். 13 ஆண்டுகளுக்கு முன் வரவேற்று, மார்த்தாண்டத்திற்கு கொண்டுவந்தபோது இருந்த
சோகம்படர்ந்த முகத்திற்கு நேர் மாறாக மகிழ்ச்சியான, நம்பிக்கைத் துடிப்புடைய மலர்ந்த முகத்துடன் ஆயர் இலாறன்ஸ் மார்
எஃப்ரேம் காணப்பட்டார்.
மைதானத்தை எட்டியதும் மிக அழகாக
அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஆயர் அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார். பெரிய பந்தலும், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி
பெட்டிகளும், சிறப்பான ஒலி ஒளி அமைப்புகளும், மக்களுக்கு பக்தியுடன் இந்நிகழ்ச்சிகளில்
பங்குபெற நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. திருப்பலியின் மத்தியில் கோட்டாறு
மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் தர்மராஜ் அவர்கள் மறையுரை ஆற்றினார். நிகழ்ச்சிகள்
குறிப்பிடப்பட்டிருந்ததற்கும் தாமதமாகவே நடைபெற்று வந்ததால் தலைவர் பலர் முன்னரே
வந்து சேர்ந்தனர். ஏராளமான ஆயர்களும், பேராயர்
எஸ்ரா சற்குணம், பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.
தனுஷ்கோடி ஆதித்தன்',
நாகர்கோவில் பாரளுமன்ற
உறுப்பினர் திரு. டென்னீஸ் M.P.,
திரு. குமாரதாஸ் M.L.A. அரசு மற்றும் சமூகத்தலைவர்களும் இதில் பங்கு
பெற்றனர்.
ஆயர் இலாறன்ஸ், மார்த்தாண்டம் மறைமாவட்ட குருக்களை ஒன்றுகூட்ட விரும்பினார்.
அடுத்த பணித்திட்டங்களை வகுக்க ஆசித்தார். அனைவரும் இணைந்து முன்னோக்கிச் செல்ல
தீர்மானித்தார். எவ்வளவு விரைவாக இச்செயலை செய்ய விரும்பினாரோ அவ்வளவு அதிகமாக
காலதாமதம் ஏற்பட்டது. 1997
ஜனவரி மாதம் 31-ம் தேதி வரை உயர்மறைமாவட்டக்குருக்களுக்கு
தங்கள் விருப்பப்படி புது மறைமாவட்டத்தில் பணியாற்றவோ, சேரவோ செய்வதற்குரிய முடிவெடுக்க அறிவிப்பு
கொடுக்கப்பட்டிருந்தது. எனவே ஜனவரி 31-ம்
நாள் வரை முடியாத காரியம். பெப்ருவரி 2-ம்
தேதி அருகிலுள்ள தக்கலை மறைமாவட்ட ஆயர் திருநிலைப் படுத்துதல் திருச்சடங்கிற்கு
துணைத் தலைவராக பங்குபெற வேண்டும். பெப்ருவரி 5ம் தேதி பத்தேரி மறைமாவட்ட ஆயர் திருநிலைப்படுத்துதல் விழா.
இதற்கிடையில் பல நாட்கள் ஆயரால் நிர்ணயிக்கப்பட்டும் ஒரு வகையில் அல்லது இன்னொரு
வகையில் தடையாக அமைந்தது. இறுதியில் S.U.T மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தபோதுதான் நடந்தது. ஏற்கனவே மறைமாவட்டப் பொறுப்புகளை யார்
யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆலோசித்து, செபித்து எழுதி வைத்திருந்தார். மட்டுமல்ல, அந்தந்த தந்தையரிடம் ஓரளவு கூறியுமிருந்தார்.
அதன்படி இனி நீண்டுபோக வேண்டிய அவசியமில்லை. நாட்கள் நீண்டுபோனால் மறைமாவட்ட
பணிகள் முடங்கிவிடும். அப்போது மக்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். எனவே இது கூடாது
என்று அந்த படுக்கையில் படுத்துக்கொண்டு கடமையுணர்வுடன் இறைவன் ஒப்படைத்த பொறுப்பை
எண்ணி, இறைமக்களின் நன்மைக்காக, இவற்றை எல்லாம் செய்தார்கள்.
அப்போது அங்கு அவரைக்காண தந்தை வர்க்கீஸ்
நடுதல மற்றும் தந்தை கோர்மீஸ் புத்தன்வீட்டில் ஆகியோர் வந்தனர். ஆயர் படுக்கையில்
படுத்திருந்தார். இருவரும் நலன் விசாரித்தனர். தந்தை வர்க்கீஸ் நடுதல "பிதாவே, office... 'வாக்கியத்தை முடிப்பதற்குள், ''உடனே கொடுக்கணம். எந்து செய்யாம்?'' என்று எதிர் கேள்வி கேட்டார். "பேராயர் இல்லம் சென்று நான் மாதிரிப்படிவம் வாங்கி
வருகிறேன்''. ஆயர் மகிழ்ந்தார். இதுவரை
தந்தையருக்கு அலுவல்களை எப்படி ஒப்படைப்பது என்று எண்ணி வருந்தியிருந்தார் என்பது
அப்போது நன்கு தெரிந்தது. தந்தை நடுதல கூறியபடியே மாதிரிப்படிவம் வாங்கி வந்தார்.
ஆயர் தலையணையில் சாய்ந்து படுத்துக்கொண்டே தனக்கே உரிய பாணியில் அப்படிவங்களை
மாற்றி எழுதினார். பின்னர் மிகக் கவனமாக அந்தந்த அலுவல்களை ஒப்படைக்க தீர்மானித்து
எழுதி வைத்திருந்த பட்டியலை எடுத்து சரியாக நிரப்பினார். மீண்டும் தந்தை வர்க்கீஸ்
நடுதல சென்று முறைப்படி படிவங்களை அடித்து வந்தார். அடுத்து எவ்வாறு இதை
தந்தையரிடம் ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அத்தந்தை ''எவ்வளவு இரவானாலும் நானே நேரில் கொண்டு போய்
ஒவ்வொரு தந்தையரிடமும் ஒப்படைப்பேன்'' என்று
உறுதி கூறினார். ஆயர் மிகவும் மகிழ்ந்தார். அதற்குள் அநேகமாக எல்லா குருக்களும்
அங்கு ஆயரைப் பார்க்க வந்து சேர்ந்தனர். அன்று 11-2-1997 செவ்வாய்கிழமை. நேரம் பிற்பகல் 3 மணி. ஆயர் தனியாக அந்த மருத்துவமனை அறையில்
படுத்திருந்தார். வெளியே காத்து நின்ற குருக்கள் சிலருடன் நானும் நின்றிருந்தேன.
என்னை ஆயர் அழைப்பதாக ஒருவர் கூறினார். நான் உள்ளே சென்றேன். படுக்கையிலிருந்து
மிக சிரமப்பட்டு ஒருவாறு எழுந்து அமர்ந்திருந்தார். உரக்கப் பேசமுடியவில்லை. 'இனி அதிகம் தாமசிக்கண்டா. அச்சனு ஓப்பீஸ்
கொடுக்கயாணு. காரியங்ஙள்க்கு முடக்கம் வரருது' சிறிது நேரம் அமைதி. மீண்டும் தொடர்ந்தார். ''அச்சனே ஞான் V.G. ஆயிட்டு நியமிக்குகயாணு, கையிலிருந்த
ஆணையை என்னிடம் கொடுத்தார். நான் அவர் கரங்களை முத்தி வாங்கினேன். ''நந்நாயிட்டு பிறார்த்திச்சு காரியங்கள்
எல்லாம் பங்கியாயிட்டு செய்யணும்''.
''உவ்வ பிதாவே” என்று நான் பதில் கூறினேன். நன்றியுணர்வுடனும்
பொறுப்புணர்வுடனும் நான் அவர் கண்களைப் பார்த்தேன். என்னிடம் கொண்டிருந்த அன்பும்
வைத்திருந்த நம்பிக்கையும் எனக்கு நன்கு உணர முடிந்தது. "எந்நால் கொள்ளாம்'' என்று கூறி அடுத்த தந்தையை வரச்சொல்லி என்னை அனுப்பினார். நான்
மீண்டும் கைகளை முத்தி பலதரப்பட்ட உணர்வுகளுடன் வெளியேறினேன். தொடர்ந்து நாங்கள்
ஒவ்வொருவராகச் சென்று அவர் ஒப்படைத்த பொறுப்புகளை பெற்றுக்கொண்டோம்.
தந்தையரிடம் அலுவல்களின் பொறுப்பை
ஒப்படைத்தபின் ஆயர் மிகவும் நிம்மதியுடன் காணப்பட்டார். ஓய்வுடன் இருப்பது அவர்
முகத்தில் தெளிந்து காணப்பட்டது. மட்டுமல்ல அடிக்கடி இருந்து வந்த விக்கல், சற்று குறைவாக காணப்பட்டது. அவர் உடலும்
உள்ளமும் 'ஒரு பொறுப்பைக்கூட நிறைவேற்றி
முடித்து விட்டேன்' என்று பூரிப்படைந்தது தெளிவாகத்
தெரிந்தது. அப்பொழுதெல்லாம் அவர் ஆயுளைப்பற்றி சற்றுமே கவலைப்படவில்லை. ஆலயத்தில்
வைத்து அன்பான, மகிழ்ச்சியான சூழ்நிலையில் எங்களுக்கு
மறைமாவட்ட அலுவல்களின் பொறுப்பை வழங்க முடியவில்லையே, மாறாக படுக்கையிலிருந்து கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே என்று
மட்டுமே வருத்தமடைந்தோம். ஆனால் இறைவன் 'நீங்கள்
இதைப்பற்றியா வருந்துகிறீர்கள் இதைவிட பெரிய அதிர்ச்சி உங்களுக்குக்
காத்திருக்கிறது' என்று அன்றே கூறியது எங்கள்
காதுகளுக்கு எட்டவில்லை.
மருத்துவமனையில் வைத்து குருக்களுக்கு
அலுவல்களை ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன? குணமடைந்து வந்த பின்னர் செய்தால் போதாதா? என்று அவருடைய இந்தச் செயலைக்கூட விமர்சித்தவர்கள் உண்டு. ஒருவேளை
அவரை அறிந்த நாளிலிருந்தே அவரை விமர்சனம் செய்து பழகியவர்களாகயிருக்கலாம். ஆனால்
தொடர்ந்து அவர் நோயால் அவஸ்தைப்பட்டதையும் அவரது மறைவையும் எல்லாம் அனுபவித்த
பின்னர், எண்ணிப் பார்க்கும் போதுதான், அவர் அன்று செய்த செயலால் எவ்வளவோ
குழப்பங்களும் ஸ்திரமற்ற தன்மைகளும் தவிர்க்கப்பட்டு நன்மை நடந்துள்ளது என்று
எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.
அன்று பிப்ரவரி மாதம் 19-ம் நாள் புதன்கிழமை. ஆயர் இலாறன்ஸ் நோயின்
ஆதிக்கத்தால் cosmopolitan
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த வேளை. அவரை இரண்டு நாட்கள் Intensive Care Unit ல் அனுமதித்து பின் சற்று ஓய்வுக்காக தனி
அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம். நான் அவரைக் காணச் சென்றேன். அவருக்கு நல்ல
ஓய்வு வேண்டும்; பேச அனுமதிக்கக் கூடாது என்று நன்கு
அறிந்திருந்த நான் அமைதியாக நின்றேன். அவர் சைகை காட்டி ஒரு காகிதமும் பேனாவும்
எடுத்து அவர் அருகில் என்னை அமரச்சொன்னார். ''நான் சொல்வதை எழுதி எடுக்கவும். ஃபாதர் சென்று நமது
மறைமாவட்டத்திலுள்ள எல்லா பங்குகளையும் சந்திக்க வேண்டும். அங்குள்ள தேவைகளை நன்கு
ஆய்வு செய்ய வேண்டும். வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று குறித்து எடுக்க
வேண்டும். பின் அதை என்னிடம் தர வேண்டும்'' என்று கூறிமுடிப்பதற்குள் அப்போது அங்கு இல்லாதிருந்த அருட்சகோதரி
எய்மார்டு அங்கு வந்து எரிச்சலோடு கூறினார்கள், ''இது (ஓய்வு எடுக்க) ரெஸ்ட் எடுக்கேண்ட சமயம். அச்சன் எழுந்நேற்று
போகணம். பிதாவினு மனசிலாகுந்நில்லே. சுகமாயிட்டு இதொக்கெ பறயாம்'' ''சிஸ்டரே! ரெஸ்ட் எந்நு பறஞ்ஞால் எந்தாணு? ஒரு வெக்திக்கு இஷ்டமுள்ளது செய்யுந்நதாணு
ரெஸ்ட் எந்து பறயுந்நது. அல்லாதெ சிஸ்டர் விஜாரிக்குந்தது போலே, ஒந்தும் செய்யாதே வெறுதே இரிக்குந்நதல்ல" ஆயரின் பதில் எங்களை சிந்திக்க வைத்தது.
1997-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் நாள் ஆயர் இலாறன்ஸ் கிராத்தூர் பள்ளிக்கூட
ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். 4-ம் தேதி காலையில் மார்த்தாண்டம் மடத்தில் அவரது பெயர் கொண்ட
புனிதரின் விழா கொண்டாடப்பட்டது. திருப்பலி முடிந்து உணவு அறையில் உணவு அருந்திக்
கொண்டிருந்தார். திடீரென வெளியே வராந்தாவிற்குச் சென்ற ஆயர் வாந்தி எடுப்பது
தெரியவந்தது. உடனே அங்கு நின்ற மதர் ஸ்டெல்லா மற்றும் சகோதரிகள் வேண்டிய
முதலுதவியைச் செய்தனர். Dr.
ஜெயராஜ்
வரவழைக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பின் வேண்டிய மருந்து கொடுக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு ஆயரின் காரில் புறப்படத்தயாராயினர். வண்டியில் ஏறிய பின்னர்தான்
ஆயருக்கு, உணவு எடுக்கச்சென்ற அருட்சகோதரி
எமிலியானா உணவுடன் ஓடிவருவதைக் கண்டார். காரில் ஏறச் சொல்லிக்கொண்டு ''சிஸ்டரே, சிஸ்டரும் கூட கிடப்பிலாயால் ஞான் பின்னெ எந்து செய்யும்?'' என்று கேட்டார். பல ஆண்டுகளாக மார்த்தாண்டம்
ஆயர் இல்லத்தில் ஆயருக்கு நேரடியாக உதவி செய்துவரும் அருட்சகோதரி சிரமப்படுவதை
அவரது பெரிய துன்பத்தின் மத்தியிலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை போலும்.
எத்தனையோ சூழ்நிலைகளில்,
தமக்கு அவர்கள்
செய்கின்ற உதவியை மிகுந்த நன்றியுடன் வெளிப்படுத்தியிருக்கின்றார். இப்போதும்
அதற்கு மாற்றமில்லை என்ற வண்ணம் இவ்வாறு கூறினார். இதற்குள் ஆயர் இல்லத்தில் சென்ற
ஆயரிடம் தந்தை S. ஜாண், அருட்சகோதரி எய்மார்டு மற்றும் பலர் கூடினர். திருவனந்தபுரம் S.U.T. மருத்துவமனைக்கு ஆயரைக் கூட்டிச் செல்ல
வண்டியில் புறப்பட்டனர். அப்போது தான் மறுநாள் பத்தேரியில் வைத்து நடக்கவிருந்த
ஆயர்பட்டவிழா அவர் நினைவுக்கு வந்தது. S.U.T
யில் சென்றால் நிச்சயம் படுக்க வைப்பர். பின் இந்நிகழ்ச்சிக்கு போக முடியாது என்று
அவருக்குத் தோன்றியது. எனவே,
''நாம் உடனே S.U.T. செல்ல வேண்டாம். தற்போதைக்கு படந்தாலுமூடு
குந் நேத் மருத்துவமனைக்கு சென்றால் போதும்'' என்று கட்டாயப்படுத்தினார். அதன்படி அங்கு சென்றுவிட்டு திரும்பி
வந்தனர். அன்று இரவே ரெயிலில் பத்தேரிக்கு பயணமானார். கூட சகோதரர் ஆன்றணியும்
மற்றும் அருட்சகோதரிகளான எய்மார்டு, எமிலியானா
ஆகியோரும் பல தந்தையரும் சென்றனர்.
1997 பிப்ரவரி 5-ஆம் நாள் பத்தேரி மறைமாவட்டத்தின் புது ஆயராக மோண்சிஞ்ஞோர்
வர்க்கீஸ் ஒற்றத் தெங்கில் அவர்கள் திருநிலைப்படுத்தப்பட இருக்கின்றார். பேராயர்
சிறில் மார் பஸேலியோஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும் திருச்சடங்குகளில் இணையாக
திருவல்லா ஆயர் வர்க்கீஸ் மார் திமோத்தியோசும், ஆயர் இலாறன்ஸ மார் எஃப்ரேம் அவர்களும் இருந்தனர். அன்று ஆயர்
மிகவும் தளர்ந்து காணப்பட்டார். இருப்பினும் அன்று காலையில் நடந்த ஆயர் பட்ட
திருச்சடங்கில் முழுமையாக பங்கெடுத்தார். சோர்வின் காரணமாக இடையிடையே தண்ணீர்
அருந்தி அந்த 4 மணி நேரம் நீண்டு நின்ற செபங்களில்
பங்குபெற்றார். தன் உடலில் இறுதி மூச்சு இருக்கும் வரை திருஅவையின் பணிகளில்
முழுமையாக ஈடுபட்டே தீருவேன்'
என்ற உறுதியான மனம்தான்
அவரது உடலின் தளர்வையும் நோயையும் வென்று அவரை இப்புனித நிகழ்ச்சிகளில்
ஈடுபடுத்தியது.
அந்நாட்களில்தான் மானந்தவாடி
மறைமாவட்டத்திற்கு புது ஆயர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆயர் இலாறன்ஸ் மார்
எஃப்ரேம் தன் நோயைப் பொருட்படுத்தாது பத்தேரியிலிருந்து மானந்தவாடி சென்று ஆயரை
வாழ்த்தினார். பின்னர் இரயில் நிலையம் சென்றார். அப்போதுதான், ஆயரிடமோ, அவர்கூட சென்றிருந்த சகோதரர் ஆன்றணியிடமோ காசு இல்லையென்று
தெரியவந்தது. இருவரும் மாறி மாறி அடுத்தவரிடம் இருக்கும் என்ற எண்ணத்தில்
வந்திருந்தனர். இரயில் நேரம் தாமதித்தமையால் அருகிலிருந்த C.M.I. தந்தையர் இல்லத்தில் ஓய்வு எடுக்கச்சென்றனர்.
அவர்களுடைய நிலைமையை அறிந்த சுப்பீரியர் தந்தை ரூ. 1000/ கொடுக்க,
நேரமானதும் இரயில்
நிலையம் சென்று பயணம் தொடர்ந்தனர்.
6-2-1997 ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் இறுதியாக ஆசீர்வதித்த திருமணம், அவரது ஓட்டுநர், திரு. லாசரின் மகளின்
திருமணம். ஆரியனாடு ஆலயத்தில் வைத்து நடந்தது. முந்தைய நாள் பத்தேரிக்கு
சென்றுவிட்டு மிகவும் தளர்ந்து காணப்பட்ட ஆயர் வழக்கம்போல ஆலயத்தில் நுழைந்து கௌமா
செபம் சொல்லி முடித்தார். எல்லோரிடமும் அவரவர் இடங்களிலேயே அமரச் சொன்னார்.
தொடர்ந்து ஒருமணி நேரம் திருமணம் என்னும் அருளடையாளத்தைப் பற்றி நீண்ட மறையுரை
ஆற்றினார். தொடர்ந்து திருமணத் திருச்சடங்கும் நடத்தி அத்தம்பதியரை மனமார
ஆசீர்வதித்தார். கூட இருந்து எப்போதும் உதவுகின்ற சகோதரனுக்கு இறுதியாக அவர்
வழங்கிய பரிசுதான் அவர் மகள் திருமணத்தை ஆசீர்வதித்தது. இறைவனின் திட்டத்தில்
இதுவும் நன்றே நிறைவேறியது.
இரவு 12 மணியளவில் ஆயர்
இலாறன்ஸ் மார் எஃப்ரேம் உடல் நலம் மிக பாதிக்கப்பட்டதால் தந்தை ஜோசப் பிலாங்காலை
ஆயரிடம் வந்தார். உடனே அருட்சகோதரி எமிலியானா அழைக்கப்பட்டார்கள். அருட்சகோதரி
வந்தபோது தலையில் இரண்டு கைகளாலும் அழுத்திப்பிடித்துக் கொண்டு வேதனைப்படும்
ஆயரைக் கண்டார்கள். அருட்சகோதரியைக் கண்ட ஆயர் ''சிஸ்டரே, என்றெ தல
பொட்டிப்போகுந்து. ஒரு வண்டி பிடிக்கு! ஆஸ்பத்திரியில் போகாம்'' அருட்சகோதரி உடனே
மடத்தில் வண்டிக்கு ஏற்பாடு செய்யப்போனபோது, ''வேண்டாம். சிஸ்டேழ்சை
இப்போது தொந்தரவு செய்ய வேண்டாம். வேறு வண்டி பிடித்தால் போதும்'' என்று சொன்னார்கள்.
அந்த நெருக்கடியிலும் பிறரை தொந்தரவு செய்யக்கூடாது என்ற பெரிய மனம். இருப்பினும்
இறுதியில் மடத்திலுள்ள வாகனத்தில் S.U.T மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதிகாலை 3 மணிக்கு மருத்துவமனையை
அடைந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்குள் 7-2-1997 அன்று
அருட்தந்தையருக்கான கூட்டம் வைக்கப்பட்டிருந்தது. அன்று ஆயர் கலந்து கொண்டு
தொடரவேண்டிய பணிகளை அறிவுறுத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆயர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவரம் அறிந்து அக்கூட்டம் மாற்றி வைக்கப்பட்டது.
பின்னர் 10-2-1997 ஆனால் 'சுபுக்கோனோ' திருச்சடங்கு ஆயர் தலைமையில் நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டது. அன்று அவரது உடல் நலக்குறைவு காரணத்தால் இந்நிகழ்ச்சியும்
தடைபட்டது. மருத்துவமனையில் அருட்தந்தையர் மாறி மாறி அடிக்கடி சென்று வேண்டிய
காரியங்களை ஆயருக்கு செய்து கொடுப்பதில் கவனமாயிருந்தனர். கூடவே அருட்சகோதரி
எமிலியானா, அருட்சகோதரி எய்மார்டு, சகோதரர் ஆன்றணி
ஆகியோர் முழுமையாக இருந்து கவனித்தனர்.
ஆயரின் உடல் நலம்
குறிப்பிடத்தக்க முன்னேற்றமடையவில்லை. எனவே நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சைப் பெற
வேண்டும் என்று விரும்பி அவரை அருகிலுள்ள Cosmopolitan (கோஸ்மோபோலிட்டன்)
மருத்துவமனைக்கு மாற்ற வேண்டி வந்தது. இவ்வாறு ஆரம்பம் முதல் இறுதிவரை மருத்துவர், மருத்துவமனை
சம்பந்தமான அனைத்து காரியங்களிலும் மிகவும் உதவியவர் அருட்தந்தை ஜோசி (தந்தை
ஜார்ஜ் ஜோண்). மேலும் ஆயர் அவர்களின் நெருக்கடியான வேளைகளில்கூட அருட்தந்தை, ஆயர் அவர்களுக்கு
செய்த உதவிகளை மறக்க முடியாது. கூடவே தந்தை கோசிவர்க்கீஸ் அவர்களும்
வந்திருந்தார். 17-2-1997 அன்று கோஸ்மோ மருத்துவமனையில் ஆயர் அனுமதிக்கப்பட்டார். அங்கு
மருத்துவமனை முன், அதன் நிர்வாக அதிகாரிகள் அனைவரும் வந்து, அன்புடன் ஏற்று
பின்னர் சிகிச்சையளித்தனர். ஆயருக்கு தலைவேதனை தீவிரமடைந்தது. இருப்பினும் அவரை
தனி அறையில் அனுமதித்து சிகிச்சையளித்தனர்.
வேதனையின்
நெருக்கடியிலும் இறைவனை மட்டும் உறுதியாகப் பற்றிக்கொண்டார், ஆயர் இலாறன்ஸ்
அவர்கள்.
1997 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதியன்று இரவு
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் கோஸ் மோபோலிட்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வரும்போது முன்னால் நின்ற சகோதரி எமிலியானாவை அருகில் அழைத்தார். பின்னர் இவ்வாறு
கூறினார். ''நமது பாலர் பவனிலுள்ள பிள்ளைகளுக்கு பாட்டு, சொற்பொழிவு, நடனம் எல்லாம்
படிப்பிக்க வேண்டும். வகுப்பு வாரியாக பிரித்துக் கற்பிக்க வேண்டும்''. அச்சகோதரி ''ஆம் பிதாவே!
என்றார்கள்.
''எனது பழைய அங்கிகளையெல்லாம் பிலாங்காலையிலுள்ள
முதியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதை அப்படியே கொடுத்தால் போதாது. அவர்களுக்கு
பயன்படும் வண்ணம் அளவுடன் தைத்து கொடுக்க வேண்டும்''. இவ்வாறு
அச்சகோதரியிடம் கூற, “ஆம் பிதாவே" என்றார்கள்.
மீண்டும் ''எனக்கு பதினைந்து
அருட்தந்தையர்களே உள்ளனர். நீங்கள் சகோதரிகள்தான், இனிமேல்
பணிகளையெல்லாம் செய்ய வேண்டும்''. இவ்வாறு ஆயர் கூற அதற்கு ''எத்தகைய பணிகள்
ஆனாலும் நாங்கள் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்” என்று அச்சகோதரி பதில் கூறினார்.
உடல் நலம் குன்றியிருந்த அவ்வேளையிலும்கூட மூன்றுவிதமான பணிகளை ஆயர்
நினைவூட்டினார். பிள்ளைகளை பராமரித்தல், முதியவர்களை கவனித்தல், மறைபரப்புப் பணி
ஆகியவையே இம்மூன்று பணிகள்.
நோயிலும், பிரச்சனையிலும், தோல்வியிலும், இழப்பிலும் எல்லாம்
இறைவனைப் பற்றிக்கொண்ட ஆயர் படுக்கையிலிருந்து எழும்ப இயலாமல் மிகவும் வேதனையுடன்
இருந்தபோது தனக்கு மிகவும் பிடித்தமான பாடலை, கூட இருந்த
அருட்சகோதரிகளிடம் பாடச் சொல்வார். அதன்படி
''நன்ம நிறஞ்ஞோரம்மே
தின்மையில் நிந்நு நெம்மே
காத்து இரட்சிச்சீடணே
கனிவுள்ள கன்னி அம்மே!''
என்ற பாடல் பாடப்படும். இப்பாடலை
ஆயரின் பாலர் பருவத்தில் சகோதரர் எஃப்ரேம்' கற்றுக்கொடுத்ததாக
கூறியிருந்தார். 20-2-1976 அன்று பேராயர் சிறில் மார் பஸேலியோஸ் அவர்கள் மருத்துவமனையில்
வந்து ஆயரை சந்தித்துவிட்டு, மருத்துமனையிலிருந்து ஆயர் சென்ற பின் ஓய்வெடுக்கும்
வசதியைப்பற்றியெல்லாம் விரிவாக பேசிச்சென்றார். 21-2-1997 காலை.
காலை செபம் முடிந்ததும் வழக்கம் போல் தந்தை கோசிவர்க்கீஸ் நற்கருணை கொண்டு
மருத்துமனைக்கு வந்தார். ஆனால் அன்று சற்று நேரத்திற்கு முன் இரு பிஸ்கட்டுகளும், காப்பியும் ஆயர்
அருந்தியிருந்தார். ஒரு மணி நேரம் ஆகாத காரணத்தால், ''நற்கருணையை மேசையில்
வைத்துவிட்டு நீங்கள் செல்லுங்கள். நேரம் ஆகும்போது நானே எடுத்து உட்கொள்ளலாம்'' என்று தந்தையிடம் ஆயர்
கூறினார். தந்தையோ, "நான் பொறுத்திருக்கலாம்'' என்று கூறி நேரம்
வருவது வரை பைபிள் படித்து காத்திருந்து, பின் நற்கருணை ஆயருக்கு வழங்கித் திரும்பிச்சென்றார்.
மருத்துவமனையில்
படுத்து, தளர்ந்து, மனம் சோர்ந்து இருந்த ஆயர் 21-12-97ல்
மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
வெளியே புறப்பட்டதும் நேரடியாக வண்டி பட்டம் பேராலயத்தில் சென்று நின்றது. அங்கு
இறங்கி மார் இவானியோஸ், மார் கிரிகோரியோஸ் ஆகியோரின் கல்லறையில் செபித்தார். பின்னர்
பட்டம் சிற்றாலயத்தின் வளாகத்திலுள்ள தம் பெற்றோரின் கல்லறை முன் செபித்தார்.
அப்போது அதை சுற்றியிருந்த சிலந்தி வலை, வாடிய மலர் இவற்றை தாமே அகற்றினார். பின்னர் பேராயர் இல்லம்
சென்று அங்கு இருந்தோரை சந்தித்து பேசியபின் குழித்துறைக்கு ஓய்வு எடுக்க வந்து
தங்கினார். அங்கு அருட். சகோதரி எய்மார்டு மற்றும் ஆயரின் உறவினர் மகன் ஷாஜியும், கூடவே இருந்து
வேண்டியவற்றை கவனித்து வந்தனர்.
மறைமாவட்ட பணிகளை
அருட்தந்தையர்களுக்குப் பொதுவாக வழங்க வேண்டும் என்று விரும்பியும், உடல் நலக்குறைவு
காரணமாக மருத்துவமனையில் வைத்து வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆயர் ஒருவாறு
நலமடைந்து திரும்பி வந்து குழித்துறையில் ஓய்வு எடுத்திருந்த காலம். தந்தையரை
அழைத்து ஆசி கூறி பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று விரும்பினார். அதன்படி சில
நாட்கள் கழிந்து 27-2-1997 வியாழக்கிழமை அன்று எல்லா தந்தையரும் குழித்துறைக்கு
அழைக்கப்பட்டனர். அதற்கு முந்தின நாள் அருட்தந்தையர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கு
ஆயரே நேரடியாக அந்த அறைக்கு வந்து அறிவுரைகளை வழங்கினார். சற்று தயங்கி நின்ற
அருட்சகோதரி எய்மார்டிடம் அதிகாரபூர்வமாக கட்டளையிட்டார். அனைத்து ஏற்பாடுகளும்
தயாராக்கப்பட்டது. -
சுமார் 10 மணியளவில் தந்தையர்
ஆயர் கூறியபடி கூடினர். ஆயர் வந்தார். அதற்கு முன்னரே காலையில் நற்கருணை நாதர்
முன் அமர்ந்து செபித்துக்கொண்டு ஒரு விவிலியப் பகுதியை வாசிப் பதற்காக செயலர்
அருட்தந்தை. S. ஜாணிடம் ஒப்படைத்திருந்தார். செபத்துடன் கூட்டம் ஆரம்பமானது.
தொடர்ந்து லூக்.13: 31-33 வரையிலான பகுதியை நான் வாசித்தேன். ஆயர் தம் அறிவுரையை
நிகழ்த்தினார். மிகவும் தாழ்ந்த குரலில் அவர் பேசினார். கூட்டமாக செயல்பட
வேண்டியதன் தேவையையும் அதன் நடைமுறை ஒழுங்குகளையும் பற்றி பேசினார்.
அருட்தந்தையரிடம் கலந்து ஆலோசனை செய்தார். ஆயருக்கு வருத்தம் விளைவிக்கக்கூடிய
விவாதத்துக்குரிய எதைப்பற்றியும் கூறாமல் இருப்பதில் அருட்தந்தையர்கள் விழிப்புடன்
இருந்தனர். இடையில் சில நிமிடங்கள் பானம் அருந்துவதற்காக வெளியே சென்றார்.
மீண்டும் திரும்பி வந்து மறைமாவட்ட மலரில் கொடுக்கப்பட்டிருந்த விதி முறைகளை
விவரித்தார். தமது முத்திரை (Emblem) பற்றிய விளக்கங்களையும் அளித்தார். அவரது உடல்நலக் குறைவையும்
அதன் மத்தியிலும் மறைமாவட்டப் பணிகளில் அவருக்கு இருந்த மிகுந்த ஆர்வத்தையும்
நன்கு தெரிந்திருந்த தந்தையர் மிக மிக அன்புடனும் நட்புடனும் இந்த சந்திப்பு
அமைவதற்காக முழுமையாக ஒத்துழைத்தனர். மதிய செபத்திற்குப் பின், உணவு உண்ட பின்னர், குருக்கள் மட்டும்
கூடி மற்று சில பணிகளைப் பற்றி கலந்து ஆலோசித்து 4 மணியளவில் கூட்டத்தை
நிறைவு செய்தோம். மிக அமைதியான நட்பான சூழ்நிலையில் கூடிய இந்த கூட்டம்தான் ஆயர், குருக்களின் குழுவுடன்
நடத்தும் இறுதிக் கூட்டம் என்பதை அன்று எவருமே அறியவில்லை.
ஆயர் அவர்கள்
சுகவீனமாக இருக்கும் போது தந்தையர் அடிக்கடி வந்து இயன்றவரை ஆயரின் அருகே இருந்து
ஆயருக்கு வேண்டியவற்றை உதவினர். பணிகளைச் செய்வதற்குரிய அறிவுரைகளும் பெற்றனர்.
நள்ளிரவுக்குப்பின் மட்டுமே தந்தையர், கூட இல்லாதிருந்தனர்.
27-2-97 இரவு 10 மணியளவில் ஆயர் திடீரென நிலை குலைந்து படுக்கையிலே விழுந்தார்.
அப்போது அவர் அருகே இருந்த திரு. ஜோளி வர்க்கீஸ் அருட்சகோதரி எய்மார்டு, ஷாஜி, பிரதர் ஆன்றணி ஆகியோர்
வண்டியில் பிஸ்வாஸ் மருத்துவ மனைக்கு அவரை எடுத்துச்சென்றனர். இரவு 10.30 மணிக்கு
ஆயர் இல்லத்தில் தொலைபேசி மணி ஒலித்தது. அருட்தந்தை சாமுவேல் புன்னூர் போன்
எடுத்தபோது ஆயர் அவர்களை பிஸ்வாஸ் மருத்துவமனையில் serious ஆக கொண்டு
சென்ற செய்தியை அறிந்தார். அவரும் அன்று மார்த்தாண்டத்தில் தங்கியிருந்த
அருட்தந்தை மைக்கிள் முக்கம் பாலத்தும் நிமிடங்களுக்குள் மருத்துவமனை நோக்கி
பைக்கில் சென்றனர். அங்கு டாக்டர் ஜெயகர், டாக்டர் ஆர்தர்
ஆகியோர் அவருக்கு முதலுதவி செய்தனர். ஆக்ஸிஜன் கொடுத்து ஒருவகையில், பிரிய இருந்த அவர்
உயிரை பிடித்து வைத்திருந்தனர் என்று கூற வேண்டும். இதற்குள் செய்தி அறிந்து
அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் சிலர் மருத்துவமனையில் கூடினர். நிலைமை
சற்று கட்டுக்கடங்கியதும் அவரை திருவனந்தபுரம் கோஸ்மோவுக்கு கொண்டு செல்ல
ஏற்பாடாயிற்று. ஆம்புலன்சில் நானும் டாக்டர் ஜெயகர், ஷாஜி ஆகியோர் அருகில்
அமர்ந்திருக்க ஆயரை படுக்க வைத்து பாதுகாப்பாக வண்டியை ஓட்டிச் சென்றார். திரு.தாமஸ். வழியில்
வாந்தி எடுத்தபின், சிறிது உணர்வுடனும் தெளிவுடனும் காணப்பட்டார். கண்கள் திறந்து
இருந்தும் அவரால் பேச முடியவில்லை. மீண்டும் Cosmo-யில்
அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரால் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே சகோதரிகளும்
நாங்களும் நிற்கும்போது பேச முடிந்தது. பின்னர் அவர் சரிவர பேசவேயில்லை. ஸ்கான்
எடுத்து பார்த்தபோது தலைநரம்புகள் பொட்டியிருப்பதும் இரத்தம் நரம்புகளுக்கு வெளியே
நிறைந்திருப்பதும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். 'Brain Hemorrhage' என்று
கண்டுபிடிக்கப்பட்டது. 28-2-1997
அன்றே Sree Chitra (ஸ்ரீ
சித்திரா) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு அனுமதிக்கப்பட்ட பின் அங்கே
ஆயருடன் துணை இருக்க ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் அருட்சகோதரி
எமிலியானா மற்றும் நாங்கள் அருட்தந்தையர்கள் குறிப்பாக தந்தை மைக்கிள், S. ஜாண், பீட்டர் ஆனந்த், பிறேம்குமார் ஆகியோர்
இரவு பகலாக ஆஸ்பத்திரியின் வரவேற்பு அறையில் இருந்துகொண்டு அவர்களுக்கு
வேண்டியவற்றை செய்து கொண்டே இருந்தோம்.
எங்களோடு சேர்ந்து, ஆயரோடு வேலை செய்த
திரு. சுரேஷ் குமார், மற்றும் ஓட்டுனர்களான திரு. தோமஸ், திரு. லாசர், திரு. சுரேந்திரன்
போன்றோர் ஆயருக்கு வேண்டியவற்றை இரவு பகலாக செய்து கொண்டிருந்தனர். பங்கு
ஆலயங்களில் ஆயர் நலமடைய சிறப்பு செபங்கள் நடந்து கொண்டிருந்தது. மக்கள் மிகவும்
ஏக்கத்தோடு செபித்தனர். இறைவனின் இரக்கம் ஆயரின் நலன் வழியாக வெளிப்பட வேண்டும்
என்று கண்ணீருடன் செபித்து காத்திருந்தனர். ஏராளமான தலைவர்கள், குருக்கள், கன்னியர்கள், மற்றும் பொதுமக்கள்
தினந்தோறும் வந்து மருத்துவமனை முன் நின்று செய்திகளை அறிந்து திரும்பிப் போயினர்.
பேராயரும் மற்றும் பல ஆயர்களும் வந்து சிறப்பு அனுமதி பெற்று ஆயரை நேரடியாக
பார்த்து செபித்துச் சென்றனர். மார்ச்சு மாதம் 6-ஆம் தேதி தக்கலை ஆயர் 'மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி' அவர்கள் ஆயர் இலாறன்சை
சந்தித்தபோது, "என்னை புரிகிறதா?''
என்று கேட்டதற்கு புரிகிறது' என்று தலை அசைத்து
மெதுவாக பதில் கூறியதாகவும்; இப்போது சற்று ஆறுதலாக இருக்கிறதா? என்று கேட்க 'இருக்கிறது' என்றும் கூறியதாக
தெரிகிறது. இதற்கிடையில் தலையில் துவாரம் போட்டு தேங்கி நின்ற நீரை வெளியேற்றினர்.
சற்று குணமடைந்த பின் இளநீர் கொடுக்க முடிந்தது. மீண்டும் நிலைமை மோசமானதும்
உடலெல்லாம் பெரும் வீக்கம் ஏற்பட்டது. அவர் உடல் நிலைமை பற்றி மருத்துவரை அடிக்கடி
சந்தித்து நிலமையை அறிந்து கொண்டேயிருந்தோம்.
23-3-'97 குருத்தோலை ஞாயிறு, ஆயரை கண்காணித்த நர்ஸ் ஒருவர் ஆசீர்வதித்த குருத்தோலையைக்
காட்டி 'பிதாவே! இன்று குருத்தோலை ஞாயிறு. அடுத்த ஞாயிறு உயிர்ப்பு.
நீங்களும் அதற்குள் நலம் பெற்று உயிர்த்தெழ வேண்டும்'' என்றுகூறியதற்கு
சிரித்தபடியே ஆயர் படுத்திருந்தார்கள்.
28-3-97 பெரிய வெள்ளிக்கிழமை! இந்நாளின் முக்கியத்துவத்தை நன்கு
தெரிந்தவர் போல் அவரை சிகிச்சை செய்து வந்த நர்சுகளிடம் பைபிள் படித்துக்காட்ட
பைபிளைக் சுட்டிக் காட்டினார். அதன்படி அவர்கள் இயேசுவின் பாடுகளைப் பற்றிய
பகுதியை வாசித்தனர். ஆயர் கவனமாக கேட்டார். அப்போது ஒருவேளை சற்று நினைவு
இருந்திருக்கலாம்.
ஸ்ரீ சித்திராவில்
அனுமதிக்கப்பட்டிருந்த ஆயரைப் பொறுத்த வரையில் அனேக நாட்களிலும் சற்றும்
நினைவின்றியே இருந்தார். ஒருநாள் சற்று நினைவு திரும்பிய போது அங்கே நர்ஸாக
பணிபுரிந்த அருள் சகோதரி அனிற்றா 'பிதாவே' ஏராளமான தந்தையரும் சிஸ்டேசும், ஆட்களும் கீழே நின்று
கொண்டு உங்களுக்காக செபிக்கிறார்கள்''
என்று கூறிய போது அவர் பேச முடியாமல்
கண்களில் கண்ணீர் நிறைந்தது.
துக்க வாரத்தின்
முக்கிய சடங்குகளை நடத்த தந்தையர் அனைவரும் தத்தம் பங்குகளுக்கு சென்றிருந்தனர்.
அருட். சகோதரி எமிலியானா மட்டும் மருத்துவமனையில் இருந்த நேரம். பெரிய சனிக்கிழமை
பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் ஆயருக்கு நரம்பு பொட்டியதாக
அறிவிக்கப்பட்டது. திருவனந்தபுரம் ஆயர் இல்லத்திலிருந்து அருட்தந்தை தோமஸ்
குழினாப்புறம் ஓடி வந்தார். செய்தி எனக்கும் அறிவிக்கப்பட்டு நானும் உடனே
மருத்துவமனை சேர்ந்தேன். மருத்துவர் என்னை அழைத்துக் கூறினார். ''இதுவரை எதிர்பார்ப்பு
இருந்தது. ஆனால் இனி எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என்ன வேண்டுமானாலும் நிகழலாம்'' துக்கம் தாங்க
முடியாமல் அனைவரும் மௌனக் கண்ணீர் வடித்தனர். இனி நடக்கப் போகும் நிகழ்ச்சிகளை
தாங்கும் வலிமையை வேண்டினர். மார்த்தாண்டம் மறைமாவட்ட மக்கள் அனைவருக்கும் செய்தி
அறிவிக்கப்பட்டது. உயிர்ப்பு திருச்சடங்குகளை மிக சுருக்கமாக முடித்துவிட்டு
அருட்தந்தையர்கள் பலர் மருத்துவமனை வந்து கூடினர். ஆனால் உடனடியாக ஒன்றும்
நிகழவில்லை. மீண்டும் ஒரு சில இரவுகள். அந்த இரவுகளில் மருத்துவமனையில் எவரையும்
இருக்க அனுமதிக்கவில்லை. எனவே நள்ளிரவுக்குப் பின் அருட்தந்தையர்கள் பேராயர்
இல்லத்திலும் அருட்சகோதரிகள் சாந்தி நிகேதனிலும் இரவை கழித்தனர்.
1997 ஏப்ரல் மாதம் 8-ம் தேதி செவ்வாய்கிழமை! அதிகாலை 12.30 மணிக்கு
பேராயர் இல்லத்தில் தொலைபேசி ஒலித்தது. ஸ்ரீ சித்ரா மருத்துவமனையிலிருந்து
அழைப்பு! ஆயர் இலாறன்சுக்கு மிக மிக கூடுதலாயிருக்கிறது. நான் உடனே விரைந்தேன்.
வழியில் சாந்திநிகேதனிலிருந்து அருட்சகோதரி எமிலியானா, மதர் இம்மாக்குலேட், அருட்சகோதரி பார்பரா
அனைவரும் சேர்ந்து மருத்துவமனை சேர்ந்தோம். சென்றபின் அதிகாரிகள் கூறினர், ''ஆயர் சற்று முன்
மரணமடைந்தார்!'' சென்று பார்த்தோம். ஆயர் இனி ஒருபோதும் விழிக்க முடியாமல்
நிரந்தரமாக நித்திரையில் ஆழ்ந்திருந்தார்.... ஆம்! ஒரு பெரிய வரலாறு
முடிந்துவிட்டது. நம்பவே முடியவில்லை !
மேதகு ஆயர் இலாறன்ஸ்
மார் எஃப்ரேம் அவர்களின் மறைவு இவ்வளவு சீக்கிரம் இருக்கும் என்பதை நம்பவே
முடியவில்லை தான் !
ஆம்! ஒரு வரலாற்றைப்
படைத்துவிட்ட அந்த நல்ல ஆயர் மறைந்துவிட்டார்.
கடந்த 28-2-1997-ல்
திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டிருந்த மேதகு ஆயர் அவர்கள் 8-4-1997 அதிகாலை 12.40 மணியளவில்
இம்மண்ணகம் விட்டு விண்ணகம் சேர்ந்தார்.
அந்த நெஞ்சை அதிர
வைத்திடும் செய்தி கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் விரைவில் கேரளம் மற்றும் மார்த்தாண்டம்
மறைமாவட்டப் பகுதிகளில் காட்டுத்தீயென பரவிவிட்டது.
ஆ...அய்யகோ எமது
மார்த்தாண்டம் மறைமாவட்ட முதல் ஆயரே! எம் இதயமெல்லாம் கொள்ளை கொண்டுவிட்ட அன்புருவே!
நல்லாயரே! ஆடுகளாகிய எம்மையெல்லாம் அனாதையாக்கிவிட்டுச் சென்றுவிட்டீரே!
மார்த்தாண்டம்
மறைமாவட்ட மக்கள் கதிகலங்கினர்! கண்ணீர் வடித்தனர்! அருட்தந்தையர்கள்
அருட்கன்னியர்கள் அங்கலாய்ந்தனர்.
சாதி மத பேதமின்றி
மார்த்தாண்டம் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளைச் சார்ந்த இறைமக்களும், பொது மக்களும், அருட்தந்தையர்களும், அருட்கன்னியர்களும்
தாய்ப் பசுவைத் தேடிச்செல்லும் கன்றுகளென மார்த்தாண்டம் கிறிஸ்துராஜபுரம் தலைமைப்
பேராலயம் விரைந்தனர்.
சாரை சாரையாக மக்கள்
கூட்டம். ஆனால் குண்டூசியும் கீழே விழுந்தால் அதன் ஒலி கேட்கும் நிசப்தம்!
மக்களின் இதயம் உருகியது! அதனை அவர்களின் கண்களினின்று வழிந்தோடிய அருவிகள்
புலப்படுத்தின.
எங்கே ஆயர்! எங்கே
ஆயர்! இறைவா... எங்கள் ஆயரை எடுத்துவிட்டீரே! எங்கள் ஆயரை எடுத்துவிட்டீரே! எங்களை
தனி மரங்களாக்கிவிட்டீரே! மக்கள் பரிதவித்தனர்.
அதே வேளையில்
அமரராகிவிட்ட மேதகு ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களின் திருவுடல்
திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரா மருத்துவமனையிலிருந்து திருவனந்தபுரம் பட்டம் தலைமை
பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதிகாலை 3 மணிக்கு பேராயர்
சிறில் மார் பஸேலியோஸ் இரங்கல் செய்தி வழங்க அவர் தலைமையில் திருப்பலியும்
தொடர்ந்து தூபமன்றாட்டும் நடைபெற்றது.
அதன் பிறகு கார்கள்
புடைசூழ, திருவல்லா புஷ்பகிரி ஆஸ்பத்திரியிலிருந்து கொண்டுவரப்பட்ட
ஆம்புலன்சில் மேதகு ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேமின் திருவுடல் மார்த்தாண்டத்திற்கு
பயணமானது.
மார்த்தாண்டத்தில்
குழுமியிருந்த மக்கள் கூட்டம் ஏக்கப் பெருமூச்சுடன் வழிமேல் விழிவைத்து
பார்த்தவண்ணம் மார்த்தாண்டம் கிறிஸ்துராஜபுரத்திலிருந்து மார்த்தாண்டம் சந்திப்பை
நோக்கியே திரண்டிருந்தனர்.
காலை 8 மணி
ஆ..... அந்தோ! மேதகு
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் திரு உடல் கிறிஸ்துராஜபுரம் ஆலய வளாகத்தில்
அரியணையில் அமர்ந்த நிலையில், இடது கையில் செங்கோலும், வலது கையில்
சிலுவையும் வைத்திருக்க, புத்தாடை அணிந்த நிலையில் ஆம்புலன்சிலிருந்து இறக்கப்படுகிறது.
ஆ. ஆயரே... எங்கள் ஆயரே... மக்கள் கூட்டம் கண்ணீர் வடித்தது.
"எங்களை விட்டு போய் விட்டீரே அய்யா..... எங்கள் கனவுகள்
எல்லாம் கனவுகளாகவே போய் விட்டனவோ''.....! மக்களின் பரிதாபக் குரல்கள்.
"இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் கூட கடவுள் எங்களுக்கு அவரை
தந்தாரில்லையே'' மக்களின் விரக்தி குரல்கள்.
அந்தோ மேதகு ஆயரின்
திருவுடல் அதே அரியணையுடன் ஆலயத்தின் தலை வாசலுக்கு அழைத்து வரப்படுகின்றது.
சில நாட்களுக்கு
முன்னால் தானாக நடந்து வந்த அந்த ஆலயத்தில் அந்தோ.... அவர் நாற்காலியில்
அமர்த்தப்பட்டு அழைத்து வரப்படுகிறார்.
ஆலயத்தலைவாசலின்
வெளியே அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள், இறை மக்கள் கூட்டம் கண்ணீர் வழிந்தோட நின்று கொண்டிருந்தனர்.
அந்தோ... -
"என்னை அன்பு செய்யும் அன்பு மக்களே.... நான் உங்களிடம் அன்பு
செலுத்தியது போல், நீங்களும் என் மீது அன்பு செலுத்துகின்றீர்கள். அதை உணர்த்தும்
வகையில்தான் இதோ இரவு பகல் பாராது, பசியும் நோக்காது என்னை வழியனுப்ப வந்து இங்கு
குழுமியிருக்கின்றீர்களோ... எல்லோரும் கிறிஸ்துவின் அமைதியில் ஒருவருக்கொருவர்
அன்பு செலுத்தி வாழுங்கள்.... நான் இறைவனில் இளைப்பாறுகின்றேன்..... '' என்று மௌன மொழியில்
அந்த மக்களிடம் பிரியாவிடை கேட்கின்றாரே... -
ஆம்! பிரிவாற்றாமையால்
கண்ணீர் மல்க அந்த மக்கள் கடல் - மேதகு ஆயர் இலாறன்னஸ் மார் எஃப்ரேம் அவர்களுக்கு
பிரியாவிடை கொடுக்கின்றனர்.
வேறென்ன செய்ய
முடியும்? ஆண்டவர் தந்தார்... அவரே எடுத்துக்கொண்டார்... மக்களின்
வேதனைக் குரல்கள்!
இவ்வாறு மார்த்தாண்டம்
கிறிஸ்துராஜபுரம், மக்களின் அங்கலாய்ப்பில் அலைமோதியது.
ஆயரது திருவுடல்
பேராலயத்தின் பலி பீடத்தின் முன் மக்கள் பகுதியில் அரியணையுடன் கண்ணாடிக் கூட்டில்
மக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக வைக்கப்பட்டிருந்தது.
மேதகு ஆயர் இலாறன்ஸ்
மார் எஃப்ரேம் புன்னகைத்துக் கொண்டே இருக்கின்றார். அவர் மரணமடையவில்லை. உயிரோடு
தான் இருப்பதுபோல் தோன்றுகிறது. மக்கள் கூட்டம் மாறி மாறி இப்படி அவர் தம் கண்ணாடி
அறைக்குள் நாற்காலியில் அமர்த்தப்பட்டிருந்த அந்த திருவுருவ காட்சியை குறித்து கவலை
தோய்ந்த மொழிகளால் வர்ணித்துக் கொண்டிருந்த அதே வேளையில் பேராயர்கள், ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள், இறை மக்கள்
கூட்டத்தார் திரளாக வருகைதந்து அஞ்சலி அர்ப்பணித்தவண்ணம் இருந்தனர்.
சர்வ மத தலைவர்கள், அனைத்துக் கட்சி
பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள், சாதி சமயம் கடந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அமரராகிவிட்ட
ஆயர் பெருமகனாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி தெரிவித்துக் கொண்டு சென்றார்கள்.
அவ்வாறு அவருக்கு
அஞ்சலி செலுத்தியவர்களில் முக்கியமானவர்கள் :
திருவனந்தபுரம்
மலங்கரை கத்தோலிக்க திருஅவைத் தலைவர் பேராயர் சிறில் மார் பஸேலியோஸ், திருவனந்தபுரம் ஆயர்
சூசை பாக்கியம், திருவல்லா ஆயர் கீவர்கீஸ் மார் திமோத்தியோஸ், பத்தேரி ஆயர்
கீவற்கீஸ் மார் திவன்னியாசியோஸ், ஆயர் பவுலோஸ் மார் பிலக்சினோஸ், மதுரை பேராயர் டாக்டர்
ஆரோக்கியசாமி, தக்கலை சீரோ மலபார் ஆயர் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி, குமரி மாவட்ட
சி.எஸ்.ஐ. பேராயர் எம்.ஐ.கேசரி, கேரள மாநில முன்னாள் அமைச்சர் உம்மன் சாண்டி, கேரள சபாநாயகர்
விஜயகுமார், கேரள கல்வி அமைச்சர் P.J. ஜோசப்
மற்றும் கேரள குமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானவர்கள் அஞ்சலி
செலுத்தினார்கள்.
பல்வேறு தமிழ், மலையாளம் மற்றும்
ஆங்கில பத்திரிகை நிருபர்களும் புகைப்பட கலைஞர்களும் அங்கே முகாமிட்டு செய்திகள்
சேகரித்துக்கொண்டிருந்தனர்.
மேதகு ஆயருக்கு
மறுநாள் 9-4-97 அன்று காலைவரை விடிய விடிய இரங்கலும், வழிபாடுகளாலும், திருப்பலிகளாலும், அருட்தந்தையர்களும், அருட்கன்னியர்களும், இறை மக்களும்
குழுமியிருந்து தொடர் அஞ்சலியும் செலுத்திக்கொண்டிருந்தார்கள்.
9-ம் தியதி அதிகாலை மக்கள் கடல் மேலும் மேலும் நிறைந்து
வழிந்தது. தமிழகக் கலாச்சாரமும், கேரளக் கலாச்சாரமும் அங்கே இரண்டற கலந்தன. திருவனந்தபுரம்
உயர்மறைமாவட்டம், திருவல்லா, பத்தேரி மறைமாவட்டங்கள் மற்றும் பல இடங்களிலிருந்தும் கேரள
மக்களும், தமிழக மக்களும் அங்கே மேலும் மேலும் வந்து பெருகினர். ஊசி
விழுந்தால் கூட கீழே விழாத வகையில் மக்கள் நெருக்கடி அடர்ந்திருந்தது.
அன்றைய நாள் காலையில்
மறைந்த மேதகு ஆயருக்கு இறுதிச் சடங்கு. ஆடம்பர திருப்பலி திருவனந்தபுரம்
உயர்மறைமாவட்ட பேராயர் சிறில் மார் பஸேலியோஸ் தலைமையில் தொடங்கியது. திருப்பலியில்
திருவனந்தபுரம் ஆயர் சூசை பாக்கியம், கோட்டாறு ஆயர் லியோன் தர்மராஜ், தக்கலை ஆயர் மார்
ஜார்ஜ் ஆலஞ்சேரி, திருவல்லா ஆயர் கீவற்கீஸ் மார் திமோத்தியூஸ், பத்தேரி ஆயர்
கீவற்கீஸ் மார் திவன்னியாஸியோஸ், சாயல் ஸ்தானிக ஆயர் பவுலோஸ் மார் பீலக்சீனோஸ், சீறோமலபார் திருஅவை
நிறுவாகி மார் வற்கி விதயத்தில், குமரி மாவட்ட சி.எஸ்.ஐ பேராயர் எம். ஐ. கேசரி, இந்திய கத்தோலிக்க
ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஜோசப் பவ்வத்தில், வராப்புழ பேராயர்
டானியல் அச்சாரு பறம்பில், நெய்யாற்றின்கர ஆயர் வின்சென்ட் சாமுவேல், மார் ஒஸ்தாசியோஸ்
மற்றும் அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள், குருமாணவர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்குபெற்றனர்.
திருப்பலியைத்
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ஆயர்களின் இரங்கல் புகழ்மாலைகள் நடைபெற்றன. பின் 11 மணிக்கு இறுதிச்
சடங்கு ஆரம்பமானது.
திருச்சடங்கின்
மத்தியில் திருவனந்தபுரம் மறைமாவட்ட ஆயர் சூசைபாக்கியம் மலையாள மொழியில் மறையுரை
ஆற்றினார். ''ஆயர் எஃப்ரேமின் மரண வார்த்தை நான் கேட்டபோது என் மனதில்
தெளிந்து வந்த காட்சி லூக்கா நற்செய்தியாளர் விவரித்திருக்கும் சிமியோனின்
சித்திரம்தான். எருசலேமில் சிமியோன் என்றொரு இறைவாக்கினர் இருந்தார். அவர்
நேர்மையானவர். இறைப்பற்று கொண்டவர். இஸ்ராயேலருக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை
எதிர்பார்த்திருந் தவர். ஆண்டவருடைய மெசியாவைக் காணும் முன் அவர் சாகப்போவதில்லை
என்று தூயாவியால் உணர்த்தப்பட்டிருந்தார். சிமியோன் குழந்தையாகிய இயேசுவை
மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும், அக்களிப்புடனும் கையில் ஏந்திக் கொண்டு இவ்வாறு கூறினார்: 'ஆண்டவரே உமது சொற்படி
உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும்
காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன''. மார் எஃப்ரேமைப் பற்றி
சிந்திக்கும் போது இந்த உண்மைகளெல்லாம் அவரிலும் நனவாகியிருக்கிறது என்று
நினைக்கின்றேன். அவர் ஒரு இறைபற்று கொண்டவராயிருந்தார், நேர்மையாளராயிருந்தார்.
இஸ்ராயேலின் ஆறுதலை எதிர்பார்த்திருந்தார். ஆம், இந்த மறைமாவட்டத்தின்
உதயத்திற்காக, புதிய ஒரு திருஅவை, சமூகம் இங்கு உருவாகி காண்பதற்காக ஆவலுடன் செபித்தார். கடினமாக
உழைத்தார். நிச்சயமாக இறைவனின் ஆன்மா இம் மறைமாவட்டம் உருவாகுமுன் இறக்கமாட்டீர்
என உறுதியைக் கொடுத்திருக்க வேண்டும். அதற்காகவே அவர் வாழ்ந்திருந்தார். ஆண்டவரின்
திருஅவையை இப்பகுதியில் கட்டி எழுப்புவதற்காக அவர் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
இறுதியில் சிமியோனின் வார்த்தைகளை அவரும் சொல்லிக்கொண்டு நம்மை விட்டு பிரிந்து
செல்கின்றார்.
ஜனவரி 23-ஆம் நாள் அவரது
பொறுப்பேற்புத் திருச்சடங்கு இதே ஆலயத்தில் வைத்து மிக ஆடம்பரமாக நாம் நடத்தினோம்.
அதில் பங்குபெற அவர் என்னை நேரில் வந்து அழைத்தார். இருப்பினும் ஏற்கனவே
நிச்சயிக்கப்பட்டிருந்த சில முக்கிய நிகழ்ச்சிகள் இருந்த காரணத்தால் எனக்கு
அச்சடங்கில் பங்குபெற முடியவில்லை. பின்னர் அவர் என்னைக்கண்டபோது கூறினார்: ''பொறுப்பேற்புச்
சடங்குகளுக்கு வரமுடியாதது பரவாயில்லை. அதைவிட முக்கியமான திருச்சடங்குகளும்
நிகழ்ச்சிகளும் நாங்கள் ஏற்பாடு செய்வோம். அதில் நீங்கள் கண்டிப்பாக கலந்துகொள்ள
வேண்டும்', ''இந்நாட்களில் நான் சிந்தித்துப் பார்க்கிறேன். ஒரு
மறைமாவட்டத்தைப் பொறுத்தவரையில் அதன் ஆயராக பொறுப்பேற்கும் திருச்சடங்கை விட
முக்கியமான நிகழ்ச்சி இது தான் என்று. இந்த மறைமாவட்டத்தைப் பொறுத்தவரையில் மிக
முக்கியமான, பொருளுள்ள, ஒருவேளை அவசியமுமான ஒரு திருச்சடங்கிலே நாம் பங்கு பெற்றுக்
கொண்டிருக்கின்றோம். ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேமின் பலி, நிறைவு பெறுகின்ற
முக்கியமான ஒரு நாள் இன்று.
ஒரு குருவுக்கும், குருகுலத்
தலைவருக்கும், திருஅவை மூன்று விதமான பணிகளை கொடுத்துள்ளது. இறைவாக்கினர், அர்ச்சகர், மேய்ப்பர். இந்த
முப்பெரும் பணிகளில் பலி, பாடுகள், சிலுவை இவை நெருங்கிய உறவு கொண்டுள்ளன. தீமை நிறைந்த
சமூகத்தில் உயர்ந்த மதிப்பீடுகளுக்காக வாழ்ந்தனர் இறைவாக்கினர். மிகப்பெரிய
இறைவாக்கினரான இயேசு உட்பட அவர்கள் அனைவரும் துன்புறுத்தப்பட்டனர்; கொல்லப்பட்டனர். ஆயர்
இலாறன்ஸ் ஒரு பெரிய இறைவாக்கினராயிருந்தார். உயர்ந்த மதிப்பீடுகளுக்காக அவர்
கொடுத்த குரல் இப்பகுதியில் மட்டுமல்ல எல்லாத் திசைகளிலும் முழங்கிக் கேட்டது.
அவர் ஒரு இறைவாக்கினரைப்போல தமது வாழ்வை பலியாக்கிக்கொண்டு தமது பாடுகளுக்கெல்லாம்
முடிவு கட்டியிருக்கும் ஒரு நல்ல நாள் இது. ஒரு குருவானவர் பலி செலுத்துபவரும், பலிப்பொருளுமாயிருக்கின்றார்.
கடமையும் பொறுப்பும் வழியாக இப்பலியை அவர் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். இயேசுவைப்
போல தம் பலியை அவர் இன்று நிறைவு செய்கிறார். நல்ல மேய்ப்பன் யார்? நல்ல மேய்ப்பன் தன்
ஆடுகளுக்காக தன்னுயிரைக் கொடுப்பவர். தமது வாழ்வை ஒரு புது சமூகத்திற்காக, புது
மறைமாவட்டத்திற்காக செலவிட்டார். சில நாட்களுக்கு முன் மறைமாவட்டத்தின் ஆயராக பொறுப்பேற்ற
அவர் ஆயரின் பணி என்ன என்று நன்கு புரிந்திருந்தார். எனவே தம் மக்களுக்காக அவர்
வாழ்வை இங்கு அர்ப்பணித்திருக்கின்றார். ஒரு ஆயர் அவரது மறைமாவட்டத்தின், அந்த திருஅவை
சமூகத்தின் மணமகனாக சித்தரிக்கப்படுகின்றார். அவர் அணிகின்ற மோதிரம் இதன்
அடையாளமே. திருஅவையை உளமார அன்பு செய்வதே மணமகனின் கடமை. நண்பருக்காக தன் உயிரைக்
கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை என்று ஆயர் இலாறன்ஸ் இம்மறைமாவட்டத்தை அன்பு
செய்து அதற்காக தன்னுயிரை ஈந்து தம் வாழ்வுவழி உறுதிப்படுத்தியிருக்கின்றார். இம்
மறைமாவட்டத்தின் விசுவாசிகள், குருக்கள், கன்னியர் அனைவரையும்,
"இக்குறுகிய காலத்தில் நான் காட்டியதை
விட நல்ல மாதிரிகைக் காட்டித்தர முடியுமா?'' என்று அவர் இன்று
கேட்கிறார். இந்த கேள்வி அவர் வாழ்வு வழியாக, இறப்பு வழியாக
நம்மிடையே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இயேசுவைப் போன்று அவர் கூறுகிறார்: "நான்
உங்களுக்கு ஒரு மாதிரி காட்டியிருக்கிறேன். நீங்கள் என்னைப் ஆயர் என்றும், பிதாவே என்றும்
அழைக்கிறீர்கள். சுய நலச் சிந்தனைகளை விட்டு என்னையே வெறுமையாக்குகிறேன்.
உங்களுக்கு மாதிரி காட்டியுள்ளேன். இதை நீங்களும் பின்பற்ற வேண்டும். எல்லாம்
நிறைவேறியிருக்கிறது'' இம் மறைமாவட்டத்தின் முதல் ஆயர் என்ற முறையில் மிக குறுகிய
காலத்தில் தம் பணியை முடித்து விட்டு மார்த்தாண்டம் மறைமாவட்டத்தை பேரும், புகழும் உடையதாக்கி
இருக்கிறார். மலங்கரை திருஅவையும் பாரத திருஅவையும் வேதனையும், இழப்பும் அனுபவிக்கும்
நேரம் இது. ''உம் விருப்பம் என் ஆனந்தம்'' என்ற அவரது விருது
வாக்கினையே நாமும் ஏற்று அறிக்கையிடுவோம்''
தொடர்ந்து
தமிழ்மொழியில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் தர்மராஜ் அவர்கள் மறையுரை
ஆற்றும் போது இவ்வாறு கூறினார்கள்: "கிறிஸ்து இயேசுவில் என் அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே! நமது
அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் நம்மை
விட்டு பிரிந்து விட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருக்கிறது. ஏறக்குறைய
75 நாட்களுக்கு முன்னால் மார்த்தாண்டம் மறைமாவட்டம் உருவானதையும்
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்கள் அதன் முதல் ஆயராக பொறுப்பேற்றதையும் எண்ணி
அவர்களை வாழ்த்திப் பாராட்டிப்பேச வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி பெருமைப்படுவதுண்டு.
ஆனால் சிறிதும் எதிர்பாராத வண்ணம் இத்தனை நாட்களுக்குள் என் வாழ்த்தை மாற்றி
அனுதாபச் செய்தியை உங்களுக்கு அறிவிக்கவேண்டிய சூழ்நிலை வரும் என்று கனவில்கூட
எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களின் மறைவில்
மார்த்தாண்டம் மறைமாவட்ட குருக்கள், துறவியர், பொதுநிலையினருக்கு என்னுடைய, கோட்டாறு
மறைமாவட்டத்தினுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வேளையில் நான்
சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் உங்கள் துன்பத்திலே நாங்களும் உங்களோடு
இருக்கிறோம்; நாங்களும் உங்களோடு பங்கு பெறுகின்றோம். தொடர்ந்து உங்கள்
மறைமாவட்டத்திற்காகவும் உங்கள் ஆயருக்காகவும் செபிக்கிறோம் என்று உறுதி
கூறிக்கொள்கிறேன். தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறும் இந்த
வார்த்தைகள் என் நினைவுக்கு வருகிறது.
“நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை.
தமக்கென்று இறப்பதுமில்லை - நாம்
வாழ்ந்தாலும்
ஆண்டவருக்கென்றே வாழ்கின்றோம்.
இறந்தாலும்
ஆண்டவருக்கென்றே இறக்கின்றோம்.
வாழ்ந்தாலும்
இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே
உரியவர்கள்''
நம்மை விட்டு பிரிந்த
மார் எஃப்ரேம் அவர்கள் ஆண்டவருக்கே முற்றிலும் உரியவராக இன்று மாறிவிட்டார்.
திருவெளிப்பாட்டு நூலில் கூறப்படுவது போல இனி இவருக்கு சாவு இல்லை. இவருக்கு நோவு
இல்லை. இவருக்கு அழுகை இல்லை. இவருக்கு துன்பம் இல்லை'. தந்தை இறைவனுடன்
வாழ்வதற்கு நன்றி செலுத்துவோம். ஜனவரி மாதம் 23-ம் நாள் இந்த மறைமாவட்டத்தை
தொடங்கிவைத்து அதன் ஆயராக பொறுப்பேற்று தம் பணியை ஆரம்பித்த இவர் இவ்வளவு விரைவாக
தம் வாழ்வை முடித்துக்கொள்வார் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. ஏன் இப்படி
நடந்துவிட்டது? கடவுள் ஏன் இவ்வளவு கடினமாக செயல்பட்டுவிட்டார்? என்று நம் உள்ளத்தில்
ஒரு கேள்வியை எழுப்பலாம். ஆண்டவர் ஏசாயா இறைவாக்கினர் வழியாக பேசுகிறார்: "உங்களுடைய
எண்ணங்கள் என்னுடைய எண்ணங்கள் அல்ல'. மனிதர்களாகிய நீங்கள் எப்படி எப்படி எல்லாமோ திட்டங்களைத்
தீட்டலாம். கனவுகள் காணலாம். ஆனால் இறைவன் நமக்கென்று ஒரு திட்டத்தை
வகுத்திருக்கிறார். பலர் அதை புரிந்து கொள்வது முண்டு. புரியாதிருப்பதும் உண்டு.
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களை பொறுத்தவரையில் இறைவனுக்கு ஒரு திட்டம்
இருந்தது. அந்த திட்டம் இன்று நிறைவேறி இருக்கிறது. எனவே இறை திட்டத்திற்கென சிரங்களைத்
தாழ்த்துவோம்....''
அந்தோ கண்ணாடி
அறைக்குள் அமர்ந்திருந்த ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அதே நிலையில் மார்த்தாண்டம்
குருகுல முதல்வர் மரிய அற்புதம், அருட்தந்தையர்கள் பீட்டர் ஆனந்த், பிரேம்குமார், வின்சென்ட், வர்க்கீஸ், கிறிஸ்பின், தோமஸ் கும்புக்காட், ஸ்கரியா
கொச்சுமுருப்பேல் ஆகியோரின் உதவியுடன் வெளியே வருகின்றார். பின்னர் இயேசுவின்
திருச்சிலுவை முன்பு மூன்று தடவை தூக்கி உயர்த்தப்பட்டு திருச்சடங்குகள்
நடத்தப்படுகின்றன.
'அய்யய்யோ....... பொறுக்க முடியவில்லையே........ ஆண்டவரே....
ஆண்டவரே உம்மை நோக்கி திருப்பலி அர்ப்பித்த அதே இடத்தில் இதோ மேதகு ஆயரின் திரு
உடல் உயர்த்தப்படுகின்றதே. பொறுக்க முடியவில்லையே.... எங்களால் பொறுக்க
முடியவில்லையே...... மக்கள் கடல் விம்மியது.
'இந்த காட்சியையும் எங்கள் கண்கள் காணவேண்டியதாகி விட்டதே....' என மக்கள் அழுது
புலம்பிட
ஆ.... குமரி மாவட்டமே
ஒன்று சேர்ந்து அசைகிறதோ....
மக்கட்கூட்டம் அசைந்த
காட்சி அப்படித்தான் தோன்றியது.......
தொடர்ந்து....
அமரர் ஆயர் அவர்களின்
உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அரியணையில் அமர்த்தி அவர் திருவுடலின்
இருபுறமும் பேராயர் சிறில் மார் பஸேலியோஸ் மற்றும் திருவல்லா ஆயர், பத்தேரி ஆயர் ஆகியோர்
அமர்ந்திருக்க நகர் காணல் படலம் ஆரம்பமானது.
முதலில்
சிலுவைகள்..... முத்துக் குடைகள் அணிவகுத்துச் செல்ல சிறுவர், சிறுமியர், பெண்கள், பாடற்குழுவினர், ஆண்கள், அருட்கன்னியர்கள், அருட்தந்தையர்கள், ஆயர்கள் செல்ல சோக
இசையுடன் அமரத்துவம் ஆகிவிட்ட ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அமர்ந்திருந்த வாகனம்
மெதுவாக ஊர்ந்து சென்றது.
அய்யய்யோ... இதென்ன
சோதனை! மார்த்தாண்டம் மறைமாவட்ட மக்களே, நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள்.... அமைதியாக
இருங்கள்.... நான் உங்களை விட்டு இறைவனிடம் இளைப்பாறச் செல்கிறேன்.....
உங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுவேன்...' என்று வலக்கை
சிலுவையைக் காட்டி மௌன மொழி பேசுகின்றாரே அமரர் ஆயர் பெருமகனார்!
அந்த வாகனத்திற்கு
முன்னால் ஆயர் பயன்படுத்திய கார் ஓசையில்லாமல் அமைதியாக சென்று கொண்டிருந்தது.
மார்த்தாண்டம் கிறிஸ்துராஜபுரம் தலைமைப் பேராலயத்திலிருந்து தொடங்கிய அந்த நகர்
காணல் ஊர்வலம் மார்த்தாண்டம் காந்தி திடலை அடைந்து, வந்த வழிக்கு
திரும்பிய பின்னர்தான் தொடங்கிய இடத்திலிருந்து ஆயர் அமர்ந்திருந்த வாகனம் நகர்
காணலுக்கு புறப்பட முடிந்தது.
அவ்வளவு மக்கள் கூட்டம்!
'இவ்வளவு மக்கள் கூட்டம் இதுவரையில் கண்டதே இல்லை.....!' சாலை ஓரங்களிலும், வீட்டு மாடிகளிலும்
குழுமி நின்ற அனைத்து மத மக்கள் கூட்டம் ஆச்சரியம் அடைந்தனர்.
'அண்ணலே, சாதி சமயத்தை கடந்து எம்மோடு சேர்ந்து வாழ்ந்தீரே... குமரி
மாவட்ட மத நல்லிணக்கத்திற்கு அடித்தளமாக செயல்பட்டீரே...... எங்களோடு ஒன்றிவிட்ட
உம்மை எங்கள் இதயத்திலிருந்து பிரிக்கவே முடியாது..... -
சாதி சமயத்தை கடந்து
எல்லா பிரிவு மக்களும் சாலையின் இருமருங்கிலும் அணிதிரண்டு நின்று அந்த மக்கள்
நாயகனுக்கு பிரியாவிடை வழங்கினார்கள்..
'நல்லவரே.... சமாதான தூதுவரே.... இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
என்னும் நல்லாயரே.... படைத்த பரம்பொருளுடன் செல்லும் உத்தமரே எங்களுக்காக
வேண்டிக்கொள்வீராக'. அவர் உயிரோடு தான் இருக்கிறார். அதோ அந்த ஆயர்களுக்கு
மத்தியில் உயிரோடு தான் இருக்கிறார்....'
'வாழ்க நீ எம்மான் வாழ்க' என்று சில நாட்களுக்கு
முன்பு அவர் தம் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியை கண்ணாரக் கண்டு நெஞ்சத்தால்
வாழ்த்திய அந்த மக்கள் நெஞ்சங்கள் இன்று பொறுக்க முடியாமல் பதறினார்கள்.
'அய்யனே.... அருள்மொழி வள்ளலே..... இறைவனின் சீடரே.... எங்களின்
முதல் ஆயரே.... எம்மை விட்டு பிரிகின்றீரே... எம்மை வாழவைக்க வந்தீர். எம்மிடமே
பிரியாவிடை கேட்பதா?'
மக்கள் கூட்டம் வேறு
என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கவே - |
மார்த்தாண்டம்
மறைமாவட்ட முதல் ஆயரின் அமரத்துவ நகர்காணல் தொடங்கியது.
அந்த மக்கள் கூட்டம்
பிரியாவிடை நல்கிட, தான் அல்லும் பகலும் சென்றுவந்த அந்த நகர வீதியினை ஆயர்களும், அருட்தந்தையர்களும், அருட்கன்னியர்களும், பல்லாயிரம் மக்களும்
புடைசூழ வலம்வந்து அதோ தமது உறைவிடம் நோக்கி அமரர் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
பயணமாகின்றார்.
- 'எல்லாம் முடிந்தது' என்று இயேசு பெருமான் அன்று கல்வாரி சிலுவையில் மொழிந்த அந்த
இறுதி மொழிக்கூற்று அனைவருக்கும் பொருத்தமே.
'ஆமாம்' எல்லாம் 'முடிந்தது'. ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் இறுதிப் பயண நிகழ்ச்சிகள் எல்லாம்
முடிந்தது.
மீண்டும்
கிறிஸ்துராஜபுரம் ஆலய வளாகம் அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் இருந்து அமரர் இலாறன்ஸ்
மார் எஃப்ரேம் அவர்களின் திருவுடல் அவர் அமர்ந்திருந்த நாற்காலியுடன்
அருட்தந்தையர்களால் கீழே இறக்கப்பட்டு பேராயர் சிறில் மார் பஸேலியோஸ் தலைமையில்
ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆலய பீடத்திற்கு பின்புறம் அமைக்கப்பட்ட கல்லறையில்
நாற்காலியுடன் அமர்த்தப்பட்டது.
அய்யய்யோ.... இனி
என்று உம்மைக் காண்போம் ஆயனே...' மக்கள் கூட்டம் இறுதிப் பயண விடை கொடுத்துவிட்டனர்.
அங்கே கல்லறையில்
பேராயர் தலைமையில் இறுதி செபங்கள் நடத்தப்பட்டன. அதன் பிறகு ஆயர் இலாறன்ஸ் மார்
எஃப்ரேமின் முகம் வெண்மையான துணியால் மூடப்பட்டது. குந்திரிக்கத்தால் நிறைத்து
நற்காலியுடன் அமர்த்தி கல்லறை கட்டி அடைத்து மூடப்பட்டது.
ஆமாம். எல்லாம்
முடிந்தது. ஒரு வரலாற்றின் புதிய அத்தியாயம் தொடங்கியது.
மார்த்தாண்டம் மறைமாவட்ட முதல் ஆயர்
மேதகு இலாறன்ஸ் மார் எஃப்ரேம் மறையவில்லை. அவர் புகழ் தீபமாக மக்கள் உள்ளத்தில்
வாழ்வாங்கு வாழ்கின்றது.
"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே
இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்'' (யோவான் 12:24). இயேசுவின்
இவ்வார்த்தைகளுக்கு ஏற்ப ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களும் மிகுந்த பலன்
கொடுப்பதற்காக தன்னை மடியச் செய்திருக்கிறார்கள். இறைவனின் அழைப்பை ஏற்று குருவாக
திருநிலைப்படுத்தப்பட்ட அன்று, தம் பணி வாழ்வை பலி வாழ்வாக ஆரம்பித்தார்கள். இது அவர் தாமாகவே
தேர்ந்தெடுத்த தீர்மானம். அது முதல் தம் வாழ்வை படிப்படியாக பலியாக்கினார். போரிலே தம்
உயிரைப் பலியாக்கும் போர்வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நாம்
பாராட்டுகிறோம்,
அவர்களும்
நம் பாராட்டுக்கு உரியவர்கள்தான். இறைவனில் கொண்டிருந்த, இறை நம்பிக்கையில்
ஊன்றிநின்ற காரணத்தால் தம் இன்னுயிரையே மனமுவந்து இழக்கத் துணிந்த மறைசாட்சிகளின்
ஆழமான இறைப்பற்றை நாம் புகழாமலிருக்க முடியாது. இத்தகையோரின் பலிவாழ்வை மனிதகுலம்
நினைக்க கடமைப்பட்டிருக்கிறது. இருப்பினும் இவர் தம் வாழ்வு திடீரென முடிவுக்கு
வந்த வாழ்வு. ஒரு வேளை அன்றாட வாழ்வை சாதாரணமாக வாழ்ந்து சிறிது சிறிதாக தம்மையே
பலியாக்கி இயற்கையான இறப்பு எய்திய தியாகச் செம்மல்களின் பலி வாழ்வு நம் அனைவரது
பாராட்டுக்கும்,
புகழுக்கும்
இன்னும் அதிகமாக உரியது எனலாம். முந்தையவர் தம் தியாகத்தையும், துணிவையும் அதிகமாக
வெளிப்படுத்தியவேளை தம் கண்முன் கண்ட திடீர் இறப்பு என்றால் பிந்தையவர்கள் தம் வாழ்வின்
தியாகத்தையும் பற்றுறுதியையும் வாழ்வின் ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்திக் கொண்டே
வாழ்ந்தவர்கள். இத்தகைய ஒரு நீண்டகால தியாகத்திற்கு தம்மை மனமுவந்து கையளித்தவர்
தான் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம். எனவேதான் அவர் வாழ்வும், வரலாறும் இம்மண்ணில்
மறைந்துவிட்டாலும், அவர் புகழ் அழிந்து விடவில்லை. தாம் யாருக்காக பலியானாரோ அந்த
இயேசுவின் இறுதிபோல அவர் இம்மண்ணில் அழிந்துபோக புதைக்கப்பட வில்லை. மாறாக
முளைத்து வளர்ந்து மிகுந்த பலன் தரும்படி விதைக்கப்பட்டிருக்கிறார். அவர் வாழ்வில்
வாழ்ந்து காட்டிய ஒவ்வொரு நிகழ்ச்சிகளும், அவற்றில் வெளிப்பட்ட இறை
நம்பிக்கையும்,
மனித
நேயமும் பலமடங்காக இந்த சமூகத்தில் உயிர்த்தெழ வேண்டும். இது நமக்கு ஒரு தூண்டுதல்
மட்டுமல்ல,
ஒரு
இறையருளும்கூட. தம் வாழ்வை அணு அணுவாக பிறருக்காக இறைவனை முன்னிட்டு பலியாக்கினார்
என்றால் அப்பலியின் பலனை இன்று அவர் இறைவனுடன் அனுபவிக்கின்றார்.
இக்காரணத்தால்தான் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் அவர்களின் வாழ்வு நமக்கு ஒரு
மாதிரி மட்டுமல்ல அவர் அன்பு செய்த நம் அனைவருக்கும் இறையருள் பெறும் ஒரு இனிய
அருவியாகவும் திகழ்கின்றது. இவரிடம் வேண்டி இறையருள் வெளிப்பட்டு நன்மைகள் பெற்ற நல்ல
பல அனுபவங்கள் பல மக்களுக்குஇதற்குள் கூறுவதற்குண்டு. நன்மை, தீமையை வெற்றி
கொண்டு தான் ஆகும். நற்செயல்களுக்காக ஏற்கின்ற எந்த தியாகமும் விலையின்றிப் போக
முடியாது என்ற உண்மைகளை இவர் வழியாக உணரக்கூடிய அனுபவங்களை பெறத் தொடங்கி
விட்டார்கள் மக்கள்.
ஆம்! ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
அவர்களின் இவ்வுலக பணிவாழ்வு முடிந்துவிட்டது. நம் பணிவாழ்வு ஆரம்பமாகி விட்டது.
ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கமல்லவா! அவர் நம்மை விட்டு பிரிந்து சென்று
விட்டார். நாமோ இதன் பொருட்டு ஒன்றுகூட வேண்டும். நாம் பிரிவதெல்லாம் மீண்டும்
ஒன்று கூடுவதற்காகத்தானே? ஆக, அவரது இறப்பு அர்ப்பண வாழ்விற்கான நமது பிறப்பு!
ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம்
அவர்களின் இறப்பு இறைவன் இன்று நமக்கு விடுக்கும் ஓர் அழைப்பு! அர்ப்பண வாழ்வு வாழ
விடுக்கும் அழைப்பு! எல்லா சூழ்நிலைகளிலும் ஆழ்ந்த இறைப்பற்றுடன் வாழவிடுக்கும்
அழைப்பு! நன்மை செய்ய விடுக்கும் அழைப்பு! இந்த அழைப்பிற்கு நீ கொடுக்கும் பதில்
என்ன?

Comments
Post a Comment