மார்த்தாண்டத்தை உயர்த்தியவர் ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம்

 

மார்த்தாண்டத்தை உயர்த்தியவர் ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம்

1998 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக மேதகு ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் அவர்கள் அறிவிக்கப்பட்ட போது மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி தென்பட்டது. ஏனென்றால் முதலாம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பட்டம் என்னுமிடத்தில் அமைந்திருந்த அருட்பணித்துவ பயிற்சியகத்தில் முதலாமாண்டு கற்கின்ற போது காலை நேரங்களில் தியானப் பயிற்சிகள் பல நிகழ்த்தி ஆன்மீக  வளர்ச்சிக்கு வித்திட்ட மிகப்பெரிய மாமேதையாய் அவரை அறிந்திருந்தேன். என்னை குருவாக அருட்பொழிவு செய்தவரும் இவரே. நீண்ட ஏழு ஆண்டுகள் ஆயரின் செயலராகவும், மறைமாவட்ட பொருளராகவும் இணைந்து பணிபுரிய இறைவன் அளித்த பெரும் பேற்றை எண்ணி மகிழ்கிறேன். இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

நம் ஆயர் அவர்கள் கொண்டிருந்த நற்பண்புகள் ஏராளம். ஏராளம். ஏராளம். அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டுமே நான் இங்கு குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன்.

1.        இறை வேண்டுதலில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார்.

மாலை உணவு முடிந்த பின்னர் நேராக சிற்றாலயத்திற்கு செல்வார். பல மணி நேரங்கள் அங்கேயே அமர்ந்திருந்து தியான நிலையில் இருப்பார். காரியங்களை அவரிடம் கேட்டு பதில் கிடைப்பதற்கு பல மணி நேரங்கள், எப்போது இவர் தன்னுடைய அறைக்கு வருவார் என்று நீண்ட நேரம் காத்திருந்த தருணங்கள் பல உண்டு. அப்போதெல்லாம் என்னுடைய மனதில் தோன்றியவை ஜெபிப்பதற்காக இந்த அளவுக்கு ஆர்வம் கொண்டிருந்த மிகப்பெரிய ஆளுமைக்கு சொந்தக்காரரான இவரை ஆன்மீகவாதி என்பதா அல்லது இறைஞானி என்பதா.

குருத்துவ அருட்பொழிவு, திருத்தொண்டர் அருட்பொழிவு மற்றும் துறவற பட்டங்கள் வழங்குகின்ற நாளுக்கு முந்தைய நாளில் நீண்ட நேரம் ஜெபத்தில் நிலைத்திருப்பார். திருவழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்ற அன்றைய தினம் உபவாசம் இருந்து அருள்பொழிவு பெறக்கூடிய நபருக்காக ஜெபிப்பது அவரது வழக்கமாக இருந்தது.

2.        தந்தையாக அரவணைப்பவர்

எப்போதும் சொந்த தகப்பனாரை போன்று அன்பு கொண்டவர். தந்தைக்குரிய அரவணைப்பை தந்தவர். மாலை நேரங்களில் பல நாட்களிலும் நாங்கள் வெளியே சென்று சாப்பிடச் செல்வது வழக்கம். ஆனால் ஆயர் அவர்கள் தாமதமாக உணவறைக்கு வந்தாலும் அருட்கன்னியர்களிடமோ அல்லது அவருக்கு உதவி செய்யக்கூடிய சிறுவனிடமோ யார் யாரெல்லாம் சாப்பிட்டார்கள் என எல்லாவற்றையும் கேட்டறிவார். சாப்பிடாத பல நாட்கள் ஏன் சாப்பிடவில்லை என அறிவுரை கூறி தந்தைக்குரிய பாசம் காட்டுவார்.

ஆயர் அவர்களோடு மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய அரிய வாய்ப்புகள் கிடைத்தன. அப்போது தான் ஒரு தந்தையின் பாசத்தையும் அரவணைப்பையும் என்னால் அதிகமாக உணர்ந்து கொள்ள முடிந்தது. அன்று விமானம் வழக்கத்திற்கு மாறாக உயர்வதும் தாழ்வதுமாக பயப்படுத்தக்கூடிய சூழலில் பறந்து கொண்டிருந்தது. பதற்றத்தோடு காணப்பட்ட என்னை ஆயர் அவர்கள் மிகுந்த அன்போடு கரங்களை பற்றிக் கொண்டு பயப்பட வேண்டாம், ஒன்றுமில்லை, தைரியமாக இருந்துக்கொள் என்று அவர் அரவணைத்தார்.

3.        துயருறுவோரை தேற்றும் மனம்

ஒருநாள் நம் குரு ஒருவர் பிறரால் தாக்கப்பட்டு மிகுந்த வேதனை அனுபவித்தார். ஆயர் நேரடியாக சென்று அவரை கட்டியணைத்து ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றினார். நோயுற்றோரை இரவும் பகலும் பாராது சந்திக்கவும் தேவையான உதவிகள் செய்யவும் நல்மனம் காட்டி வந்தார். ஒருமுறை தொலைதூரத்தில் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குருவானவர் ஒருவரை இரவோடு இரவாக அழைத்து வர வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பிய நிகழ்வு இப்போதும் நினைவுக்கு வருகிறது.

4.        ஏழைகளுக்கு உதவிகள் செய்து இறைவனை கண்டவர்

பிற நபர்களுக்கு கொடுப்பதிலேயே இன்பம் கண்டவர் அவர். செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் எளியோர்களுக்கு ஒரு சிறிய உதவியை வழங்கி அவர்கள் அனைவருடைய மனதையும் கவர்ந்தவர். ஆயர் இல்லத்திற்கு யார் யாரெல்லாம் உதவிக்காக வருகிறார்களோ அவர்களுக்கு சிறிய உதவியேனும் கொடுத்து அனுப்புவதில் கட்டாயம் இருந்தது. குறிப்பாக கிறிஸ்துமஸ் காலகட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தன் கையாலேயே உதவிகளை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கி மகிழ்ந்தார். ஒரு சில நபர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தாமதமாக வந்தாலும் அவர்களையும் இன்முகத்தோடு உணவு வழங்கி உதவிகள் செய்ததில் ஆர்வம் காட்டியிருந்தார். பெறுவதை விட கொடுப்பதில் இன்பம் அடைந்தார். இவ்வாறு ஏழைகளுக்கு இறைவனாகவே நமது ஆயர் செயல்பட்டிருந்தார்.

5.        பொருளாதார நிர்வாகத்தில் சிறந்து விளங்கினார்

ஒவ்வொரு காரியங்களையும் சிறப்பாக ஆய்ந்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி நிலையை கண்டறிந்த பின்னர் மட்டுமே அதனைப் பற்றி வெளிப்படுத்துவார். ஒவ்வொரு முறையும் பயணம் மேற்கொண்டு திரும்பி வருகின்ற போது மிகவும் குறைந்த அளவு நன்கொடையே ஆயினும் அவற்றை மகிழ்வோடு வாங்கி வருவார். ஒரு சில நபர்கள் 2 டாலர் அல்லது 5 டாலர் என்று நன்கொடைகளை வழங்கி இருக்கிறார்கள். ஒரு வாரத்திற்குள் அனைவருக்கும் நன்றி கூறி பதில் கடிதம் எழுதுவதும் அவரது வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு நபரும் கொடுத்திருக்கக் கூடிய நன்கொடையை எவ்வாறு அவர்கள் கஷ்டப்பட்டு அளித்துள்ளார்கள் என்பதை திரு. வில்லியம் மற்றும் என்னிடமும் அடிக்கடி விவரித்து வந்தார்.

நிறுவனங்களுக்காக பல நேரங்களிலும் வங்கிகளில் இருந்து கடன் எடுக்க வேண்டிய சூழல்கள் வருகின்ற போது கடனை சீக்கிரமாக அடைத்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார்.

6.        மறைமாவட்ட பங்குகளை அன்பு செய்தார்

யாரிடமும் முன்கூட்டி சொல்லாமலேயே அடிக்கடி பல பங்குகளையும் பங்குத்தந்தையர்களையும் சென்று எதிர்பாராத விதமாக சந்தித்து நலம் விசாரிப்பார். எப்போது வேண்டுமென்றாலும் ஆயர் அவர்கள் எங்களை சந்திக்க வருவார் என்ற எதிர்பார்ப்பு பங்கு மக்களிடையேயும் அருட்தந்தையர்களிடமும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவராகவே ஏதேனும் மறைபணித் தளங்களில் உள்ள சிறு மிஷன்களை தானே முன் வந்து திருப்பலி ஒப்புக்கொடுத்து பங்கு மக்களை சந்தித்து உற்சாகப்படுத்தினார். பல ஆலயங்கள் அன்று மறைமாவட்டத்திலிருந்து கட்டப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட புது ஆலயங்களுக்காக பங்கு மக்களும் தங்கள் பங்களிப்புத் தொகை வழங்குவது காட்டாயமாக்கப்பட்டிருந்தது. இத்தொகையானது 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பமாகி செல்லங்கோணம் ஆலயம் கட்டும் போது 25 லட்சம் ரூபாய் வரை மக்களின் பங்களிப்புத் தொகையாக மறைமாவட்டத்திற்கு செலுத்த வேண்டும் என்ற வரைமுறை உருவானது. இவ்வாறு பங்கு மக்களையும் அன்பு செய்து அத்துடன் அவர்களுடைய பங்களிப்பும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதில் நிலைத்திருந்தார்.

7.        விருந்தினர்களை உபசரிப்பதில் இவரை மிஞ்சியவர்கள் யாருமே இல்லை.

விருந்தினர்கள் வருகின்ற போது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உணவுப் பொருள்கள் என்னென்ன என்பதை ஆயர் அவர்களே தீர்மானித்து வைத்திருந்தார். ஆயர் இல்லத்தில் மேய்ப்புப் பணி அறிவுரைக் குழு போன்ற கூட்டங்கள் நடைபெறுகின்ற வேளையில் ஆயர் அவர்கள் விரும்பிய ஒரு உணவு வகை தான் பீஃப் உலத்தியது. மிகவும் சுவையான இந்த உணவு வகையை நம் மறைமாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தியவர் ஆயர் அவர்களே அவர்.

8.        சமையலில் கில்லாடி

ஆயர் அவர்கள் அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணிபுரிந்த போது சொந்தமாகவே சமையல் செய்திருந்தார். அருட்கன்னியர்கள் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளுக்கும் உணவு நல்ல முறையில் சமைத்து பரிமாறிய பின்னர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமையலறை சென்று ஒவ்வொரு உணவுப் பொருளும் சுவையாக அமைந்திருந்தது என்று உற்சாகப்படுத்துவார். ஒருமுறை ஆயர் அவர்கள் கூறிய வழிகாட்டுதலுக்கு ஏற்ப சமைக்க தவறியபோது சமையலறைக்கு நேராக சென்று காய்கறி ஒன்றையும் அதனை வெட்டுவதற்கு கத்தி ஒன்றையும் கேட்டார். சமையலறையில் பணிபுரிந்தவர்கள் சற்று தயக்கத்துடன் நின்றார்கள். திகைத்து நின்றார்கள். காய்கறிகளை கத்தியால் தானாகவே வெட்ட ஆரம்பித்தார். நீங்கள் இதனை இவ்வாறு வெட்டுகின்ற போது தான் சீராக எளிதாக அமையும் என்று கற்பித்தார்.

9.        அவர் ஒரு விவசாயி

நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் மறைமாவட்டத்திற்கு சொந்தமான ஒவ்வொரு நிலங்களையும், எஸ்டேட்டுகளையும் சந்தித்து அங்கிருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி அதனை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அறிவுரை வழங்கி வந்தார். அவ்வாறே ஒவ்வொரு எஸ்டேட்டுக்கும் தனித்தனியாக பெயரிட்டு அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அருட்தந்தையர்களுக்கு பொறுப்பு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். எதிர்பாராத நேரங்களில் முக்கம்பாலை போன்ற இரப்பர் தோட்டங்களுக்கு அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கும் உதவிகள் பல செய்து வந்தார்.

10.   ஆயர் அவர்கள் நம் மறைமாவட்டத்தை அன்பு செய்து வந்தார்

நமது மறைமாவட்டத்தை நன்முறையில் வளர்ச்சியின் பாதையில் வழிநடத்திய ஆயர் அவர்கள் பத்தனம்திட்டை மறைமாவட்டத்திற்கு மாற்றலாகி செல்கின்ற வேளையில் கூட்டப்பட்ட ஆயர் மாமன்றத்திற்கு முந்தைய நாளில் என்னை அழைத்து கூறிய வார்த்தைகள் இப்போதும் மனதில் நிலைத்திருக்கிறது. ‘அருள் தந்தை அவர்களே, நான் உங்களோடு சேர்ந்து, இந்த மார்த்தாண்டம் மண்ணில் இறக்கும் வரை வாழ்வதற்கும், இங்கேயே துயில்கொள்வதற்கும் தான் விரும்புகின்றேன். ஆனால் ஆயர் மாமன்றத்தின் தீர்மானம் எதுவோ அதற்கு நான் கட்டுப்பட வேண்டிய சூழலும் உள்ளது. எனவே ஒரு வேளை பணியிட மாற்றம் வருகிறது என்றால் நீங்கள் யாரும் கலக்கமடைய வேண்டாம். உங்களை இறைவன் வழிநடத்துவார். எல்லாம் நன்மைக்கே’ என்று கூறினார். ஏதோ அந்த வார்த்தைகளைக் கேட்ட உடனடியாக கண்ணீர் வந்தது. ஆனால் பின்னர் அந்த கண்ணீரின் அர்த்தம் நன்றியாக உருமாற்றம் அடைந்ததை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

இத்தகைய பெரிய ஆளுமைக்கு சொந்தமான நம் அன்பிற்கும் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய ஆயர் அவர்களை விழாக்களின் போது நினைவு கூர்வது மட்டுமல்ல. அவரைப் பற்றிய நாம் அனுபவித்தறிந்த உண்மைகளை தொகுத்து நூல் ஒன்று உருவாக்குவதே தகுந்தது என கருதுகிறேன்.

அந்த அளவுக்கு நமது மறைமாவட்டத்தை அன்பு செய்து, மறைமாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து, மறைமாவட்ட பங்குகளின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி, நம் ஒவ்வொருவரையும் வளர்ச்சியின் பாதைக்கு இட்டுச் சென்ற இம்மாமனிதரை நாம் அனைவரும் சிரந்தாழ்த்தி கரம் கூப்பி தொழுவோம். இது நன்றியின் வார்த்தைகள் மட்டுமல்ல. நீங்கள் எங்களுக்காக செய்த பாசத்திற்கான பிரதிபலன் மட்டுமே இவ்வார்த்தைகள் அனைத்தும்.

ஆயர் அவர்களின் குருத்துவ அருட்பொழிவு மற்றும் ஆயர் அருட்பொழிவின் ஜுபிலி விழாக்களை கொண்டாடுகின்ற இவ்வேளையில் உம் மக்களாகிய நாங்கள் யாவரும் இணைந்து ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்களை இந்த நேரத்தில் கூறி, நீர் வாழ்க! உம் பணி எங்கும் சிறந்து ஓங்கட்டும்! வளர்க உம் பணி! நீடுழி காலம் வாழ்க! என்று வாழ்த்தி எங்களுடைய ஜெபங்களையும் வாழ்த்துக்களையும் உங்களுக்கு அன்போடு சமர்ப்பிக்கின்றோம்.

 

 

அருட்தந்தை மரிய ஜாண் நடைக்காவு

10.12. 2022

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை