நானறிந்த தலைமைக்குரு ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம்


 

நானறிந்த தலைமைக்குரு

ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம்

அருட்தந்தை மரிய ஜாண் நடைக்காவு

மார்த்தாண்டம்

12.4.2023

நூல் விபரம்

நூலின் பெயர்         : நானறிந்த தலைமைக்குரு -

ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம்

நூலின் வகை         : அனுபவப் பகிர்வு

நூலாசிரியர்           : அருட்தந்தை மரிய ஜாண்

உரிமை               : ஆசிரியருக்கே

முதற்பதிப்பு           : 12.4.2023

நூல் அளவு           : A5

எழுத்து               : 14 புள்ளி

எழுத்துரு             : விஜயா

Nāṉainta talaimaikkuru

aiyar yūhāṉōṉ mār kirisōsam

By:

Fr. Maria John

First Edition: 12.04.2023

Mobile: 9443559775

Email: frmariajohn@gmail.com

கிடைக்கும் இடங்கள்

சாந்தோம் அச்சகம் மற்றும் சாந்தோம் புத்தக நிலையம்

வடக்குத்தெரு, கிறிஸ்துராஜபுரம், மார்த்தாண்டம்

 

வாழ்த்துரை

உயர்ந்த உள்ளம் கொண்டவர் நம் ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் ஆவார். அனைவரையும் ஏற்றுக் கொள்பவர் அவர். எல்லோராலும் புகழப்படுபவர் அவர். அனைவருக்கும் நெருக்கமானவர் அவர். நம்மை

ஒன்றிப்பில் நிலைத்திருக்கச் செய்தவர் அவர்.

இத்தகைய பாராட்டுதலுக்குரிய ஆளுமை உடையோரான ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் அவர்களைப் பற்றி எழுதப்பட்ட நான் அறிந்த தலைமைக் குரு என்ற நூலானது அவரது வாழ்க்கையை நிலைகளை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

ஆயர் அவர்களோடு இணைந்த ஏழு ஆண்டுகள் பணி வாழ்வில் நான் அனுபவித்த காரியங்களும் பல. இந்நூலில் எழுதப்பட்டுள்ள அனுபவங்கள் ஒவ்வொன்றும் மிகவும் உண்மையானவை என்பதை நான் அறிவேன்.

ஆயர் அவர்களைப் பற்றிய வாழ்க்கை அனுபவங்களை நூலாக தொகுத்துள்ள அருட்தந்தை மரிய ஜாண் அவர்களை பாராட்டுகின்றேன். வாழ்த்துகின்றேன். இந்நூல் இளையோருக்கும் முதியோருக்கும் ஆயர் அவர்களை அதிகமாக அறிந்திட வாய்ப்பாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வாசிப்போம், அறிவோம். வாழ்ந்து காட்டுவோம்.

 

அருட்தந்தை எஸ். வர்கீஸ்

 

 

 

 

எனதுரை

ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் அவர்கள் எப்போதும் முகத்தில் புன்சிரியோடு இறை மக்களுடன் உறவாடுவதில் தலை சிறந்து விளங்கியவர். அவரது பிறருக்கு உதவி புரியும் மனம் அனைவராலும் போற்றப்படுகிறது. அவரது வாழ்வின் நற்காரியங்களை எண்ணி எண்ணி பெருமைப்படுவோர் பலர். அவரோடு கொண்ட நெருக்கமான வாழ்வு பலருடைய கவனத்தையும் ஈர்த்தது என்பதும் தெள்ளத்தெளிவானது.

பணியிடமாற்றம் பெற்று சென்ற பின்னரும் மார்த்தாண்டம் மறைமாவட்ட மக்களோடு நெருங்கிய உறவில் நீங்காது என்றும் நிலைத்திருக்கும் ஆயர் அவர்கள் தொலைதூரம் என்றும் பாராமல் நம் இறை மக்கள் உறவில் நிலைத்திருக்க விரும்பி அடிக்கடி நம்மூருக்கு வருகிறார்கள். இதுவே அவர் நம்மோடு கொண்ட உறவுக்கு மிகப்பெரும் அடையாளமாக திகழ்கின்றது.

ஆயர் அவர்களோடு மார்த்தாண்டம் ஆயரகத்தில் நீண்ட ஏழு ஆண்டுகால உடன் பயணத்தில் அவரிடமிருந்து நான் கற்று அறிந்தவை ஏராளம் ஏராளம். மறைமாவட்டத்தில் இத்தகைய மிகப் பெரும் பேற்றை பெற்ற நான் பெருமைப்படுகிறேன்.

அவரோடு வாழ்ந்த அனுபவங்களை வெளி உலகுக்கு அல்லது வரும் தலைமுறையினருக்கு பறைசாற்ற வேண்டிய கடமையும் உரிமையும் எனக்கு உண்டு என நான் நம்புகின்றேன். எனவே, என் வாழ்வில் நான் அனுபவித்த சிலவற்றை  இந்நூலில் எழுதியுள்ளேன்.

அருட்தந்தை மரிய ஜாண்

உள்ளடக்கம்

1.        குடும்ப மரபு

2.        இளமையில் பக்தி

3.        குருவாக மறைபணிகள்

4.        மார்த்தாண்டத்தை வளர்த்தியவர் 

5.        நாகர்கோவிலில் மறைபணிகள்

6.        இறைவேண்டலில் ஆர்வம்

7.        தந்தைப் பாசம்

8.        துயருறுவோருக்கு ஆறுதல்

9.        ஏழைகளில் இறைவனைக் கண்டவர்

10.   சிறந்த நிர்வாகி

11.   மறைமாவட்டத்தோடு அன்பு

12.   என் வாழ்வில்

 

 

 

 

 

 

1.        குடும்ப மரபு

 

திருத்தூதர் தோமாவால் கிறிஸ்து மதத்தை ஏற்றுக் கொண்ட குறவிலங்காட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தாரிடமிருந்து ஆலக்கோடு என்ற குடும்ப மரபு ஆரம்பமானது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குறவிலங்காட்டைச் சார்ந்த பகலோமற்றம் என்னும் கிறிஸ்தவ மரபைக் கொண்ட மாத்தன் அன்னம்மா தம்பதியினர் பத்தனம்திட்டை மாவட்டத்தில் மெழுவேலி கிராமத்திற்கு வந்து குடியேறினர். போர்த்துக்கீசியர்களின் வருகையால் மலங்கரை திருச்சபையில் பல்வேறு குழப்பங்களும், பிரச்சனைகளும் உருவாகின. இப்பின்னணியில் வேணாட்டு அரசர் அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மா மற்றும் திவான் இராமையன் தளவாய் ஆகியோர்  குறவிலங்காட்டுப் பகுதியை கையடக்கினர்.

இச்சூழலில் தான் மாத்தன் அன்னம்மா தம்பதியினரும் அவரது சகோதரனும் வேலை தேடி மத்திய திருவிதாங்கூர் பகுதி நோக்கி புலம்பெயர்ந்தனர். இத்தம்பதியினர் திருவாறன்முளை தம்புரானை சந்தித்து தங்களுக்காக வேலை வழங்கவும் வாழ்வாதாரத்திற்கு உதவுமாறும் கோரிக்கை வைத்தனர். மெழுவேலி பகுதியில் திருடர்கள் பலர் உலவியிருந்ததால், அவர்களை கண்காணிக்கும் பொறுப்பை தம்புரான் இவர்களிடம் ஒப்படைத்தார். இவர்களுடைய நற்பணியைப் பாராட்டி அரசர் ஆலக்கோட்டுப் பகுதியில் அவர்கள் தங்கி வாழ விவசாய நிலங்களை தானமாக வழங்கினார். மேலும் அப்பகுதியில் அரசுக்காக வரி வசூல் செய்யும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார். வரி வசூல் செய்தவர் அன்று பெருமாள் என அழைக்கப்பட்டார். இக்குடும்பத்தார் ஆலக்கோடு பகுதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து பெருமாள் பதவியை தக்க வைத்துக் கொண்டனர். மாத்தன் அன்னம்மா தம்பதியினரின் மகன் கீவர்கீஸ் பெருமாள் எனப்பட்டார். கீவர்கீஸ் பெருமாளுக்கு ஆறு குழந்தைகள். அவர்களுள் நான்காமவர் கீவர்கீஸ் மாத்தன் பெருமாள் ஆவார்.

கீவர்கீஸ் மாத்தன் பெருமாளின் மகன் வர்கீஸ் பெருமாள் ஏறக்குறைய 175 ஆண்டுகளுக்கு முன்னர் கடம்பநாடு என்னும் இடத்திற்கு புலம் பெயர்ந்தார். அப்பகுதி விவசாயத்திற்கு உகந்தது அல்ல என அறிந்து மீண்டும் கடம்மனிட்ட என்ற இடத்திற்கு மீண்டும் புலம்பெயர்ந்தார். இவர் தான் கடமனிட்டா என்னும் ஊருக்கு வந்த முதல் கிறிஸ்தவர் ஆவார். வர்கீஸ் பெருமாளுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். அவரது இரண்டாவது மகனான ஆபிரகாம் வழியாகவே கல்லூர் என்னும் குடும்ப மரபு  முன்னுக்கு வந்தது.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் கடமனிட்டா கல்லூர் குடும்பத்தின் ஆபிரகாமின் குடும்பத்தினரான சாண்டிச்சனும் சகோதரர்களும் அன்று வனப்பகுதியாக அமைந்திருந்த இந்து ஆலயத்தின் அருகிலிருந்து தற்போதைய கல்லூர் குடும்ப வீடு அமைந்திருக்கும் இடத்திற்கு இடம் பெயர்ந்தனர். கல்லூர் புத்தன்புரக்கல் சாண்டிச்சன் என்பவர் பல ஏக்கர் நிலங்களை தன் உழைப்பால் சொந்தமாக்கி விவசாயம் செய்து சொத்துக்களைச் சேகரிக்கத் துவங்கினார். இவரது ஏழு குழந்தைகளில் மூவர் சிறு வயதிலேயே இறையடி சேர்ந்தனர். மூத்தவரான மாத்தன் ஆபிரகாம் அவறாச்சன் என்ற பெயரையும் கொண்டிருந்தார்.

மாத்தன் ஆபிரகாம், ஆச்சியம்மா ஆபிரகாம் தம்பதியினர் யாக்கோபாயா கிறிஸ்தவர்களாக கடம்மனிட்டயில் வாழ்ந்து வந்தனர். துவக்கக் காலங்களில் இவர்கள் கோழஞ்சேரியில் உள்ள  யாக்கோபாயா ஆலயத்தில் ஆன்மீக அருள் கொடைகளை பெற்று வந்தனர். இச்சூழலில் மலங்கரை கத்தோலிக்க திருச்சபையில் மறுஒன்றிப்பு நிகழ்வு அரங்கேறவும் அதன் வழியாக பலர் கத்தோலிக்க நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு மறுஒன்றிப்படைந்து திரும்பி வரவும் செய்தனர். மாத்தன் ஆபிரகாம் மற்றும் ஆச்சியம்மா ஆபிரகாம் தம்பதியினரும் 1930 ஆம் ஆண்டிலேயே மலங்கரை கத்தோலிக்கத் திருஅவையுடன் மறுஒன்றிப்படைந்தனர்.

 

ஆயர் தன் பெற்றோருடன்

 

மாத்தன் ஆபிரகாம் மற்றும் ஆச்சியம்மா ஆபிரகாம் தம்பதியினருக்கு பத்து குழந்தைகள் உருவாயினர். தங்களது அனைத்து குழந்தைகளையும் இறையறிவிலும் கிறிஸ்தவ நம்பிக்கையிலும் நிலைத்து நிற்கும் விதத்தில் வளர்த்து வந்தனர். குறிப்பாக மலங்கரை கத்தோலிக்க திருஅவையின் நம்பிக்கையில் சிறு வயதிலிருந்தே ஆழமான அடிப்படையில் பயிற்சி  வழங்கி வந்தனர். இவ்வாறு ஆயரின் குடும்பம் திருத்தூதர் தோமாவின் அடிப்படை கிறிஸ்தவ மரபைக் கொண்டதாகவும்  ஆழமான கிறிஸ்தவ நம்பிக்கையில் நிலைத்திருந்து மலங்கரை கத்தோலிக்க திருஅவையினராக நம்பிக்கை வாழ்வில் செழித்து வளர்ந்து வந்து கொண்டிருந்தனர். இறைஆசீரின் பண்புகளை நாள்தோறும் அனுபவித்து அறிந்து வாழ்ந்து வந்தனர். இறையாசீரால் இவர்கள் பத்து பேர்களும் எத்தகைய உயர் வாழ்வு நிலை கொண்டிருந்தனர் எனக் காண்போம்.

 

ஆயர் தன் குடும்பத்தாருடன்

1) பேராசிரியர் முனைவர் எம். கே மாத்யூ. M.A. Ph.D. பேபி என்ற பெயரால் கோவாவில் வாழ்ந்து வந்தார்.  பின்வரும் பொறுப்புகளில் அவர் பணி புரிந்து வந்தார். Head, History, Dean, Registrar Goa University, Goa மற்றும் UGC NAAC Team Member Co-ordinator, Net observer, Advisor UPSE as Expert and Moderator, Goa PSC. திருமதி மேரி மாத்யூ என்பவரே இவரது துணைவியார்.  இவர்களுக்கு Dr. றோய் மாத்யூ, றூபி பங்கேரா, மற்றும் ரெஜி மாத்யூ ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

2) திரு K.M. ஜார்ஜ் கல்லூர் மற்றும் அவரது துணைவியார் லேயம்மா ஜார்ஜ் ஆகியோர் அமெரிக்காவில் குடியேறியிருந்தனர். இவர்களுக்கு ஷாஜி கல்லூர், ஷெர்ளி ஜோஸ், ஷைனி அனில், மற்றும் ஷான்றி தோமஸ் ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர்.

3) மேதகு ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் இரண்டாம் ஆயரும் பத்தனம்திட்டை மறைமாவட்டத்தின் முதல் ஆயரும் ஆவார். சிறுவயதிலேயே இவர் அச்சன்குஞ்ஞு என அழைக்கப்பட்டிருந்தார். அச்சன்குஞ்ஞு என்றால் குட்டிக் குருவானவர் என்பது பொருள்.

4) திரு கெ எ. சாமுவேல் மற்றும் அவரது துணைவியார் றோசம்மா சாமுவேல். மும்பையில் பணிபுரிந்த இவர் பின்வரும் பொறுப்புக்களை வகித்தார். Secretary of Silk and Art Silk and Silk Weaving Industry Ltd மற்றும் and Managing Director Art Silk Co-operative Ltd. Mumbai. திரு. லினோ சாமுவேல் மற்றும் லிபி மாத்யூ ஆகிய இருவர் இவரது குழந்தைகளாவர்.

5) திருமதி அம்மிணிக் குட்டி மற்றும் அவரது துணைவர் டி.வி. ஜாண் ஆகியோருக்கு திருமதி லதா மாத்யூ, திரு. மோஜி ஜாண் மற்றும் மோன்சி ஜாண் ஆகிய வாரிசுகள் உள்ளன.

6) திரு ஆபிரகாம் கல்லூர் மற்றும் அவரது துணைவியார் சூசம்மா. திரு ஆபிரகாம் கல்லூர் அவர்கள் ISRO வில் பணியாற்றினார். நிஜோ ஆபிரகாம் மற்றும் லிஜோ ஆபிரகாம் ஆகியோர் இவரது வாரிசுகளாவர்.

7) திரு கெ. எ. ஜோசப்  மற்றும் திருமதி ஜோளிஜோசப் ஆகியோரது புதல்வி அருட்சகோதரி ஜசீந்த் SIC ஆசிரியப்பணி செய்து வருகிறார்.

8) திரு தோமஸ் கல்லூர் மற்றும் அவரது துணைவியார் எலிசபெத் தோமஸ்.  மறைக்கல்வியின் தலைமை ஆசிரியராகவும் மேய்ப்புப் பணி அறிவுரைக்குழும உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் JIL FARM Products, AMAI JYOTHI Est மற்றும் St. JOHN'S Agro Products நிறுவனங்களின் நிர்வாகியாகவும் உள்ளார். டெசி, ஜாண் மற்றும் லிற்றில் ட்றீசா ஆகியோர் இவரது வாரிசுகளாவர்.

9) திரு. லீலாம்மா ஜோஸ் மற்றும் அவரது துணைவர் திரு ஜோஸ் அகஸ்டின் தம்பதியினரின் வாரிசுகள் திரு ஆஸ்டின், திருமதி ஜஸ்டீனா அஜய், திருமதி. கிறிஸ்டின் மற்றும் திரு. ஜோஸ்டின்  ஆவர்.

10) திருமதி றோசம்மா மற்றும் அவரது துணைவர் டி.சி. இராஜன் ஆகியோரது வாரிசுகள் அனில், ஆன்சி மற்றும் அருண் ஆகியோர் ஆவர்.

பத்துக்குள்ளே உருவான முத்தே நம் ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் ஆவார். ஆயரின் மறைப்பணி வாழ்வுக்கு அடித்தளமிட்டவர்களும் இவர்களே ஆவர்.

2.  இளமையில் பக்தி

 

பத்தனம்திட்டை கடமனிட்டா என்னும் கிராமத்தில் கல்லூர் குடும்பத்தில் மாத்தன் ஆபிரகாம் மற்றும் ஆச்சியம்மா இவர்களுடைய மகனாக 1944 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி மூன்றாவது மகனாகப் பிறந்தார் நம் ஆயர். அச்சன்குஞ்சு என்னும் செல்லப் பெயரால் வளர்க்கப்பட்டார். கடம்மனிட்டா ஆலயத்தின் விண்ணகப் பாதுகாவலரான புனித யோவான் என்பதை அடிப்படையாக கொண்டு ஜாண் என்ற பெயரை  திருமுழுக்குப் பெயராக தனதாக்கி கொண்டார். இவ்வாறு வீட்டில் அச்சன்குஞ்சு எனவும் பள்ளிக்கூடத்தில் ஜாண் எனவும் வளர்ந்து வந்தார்.

சிறுவயதிலேயே மிக அழகானவராகவும் நல்ல உடல்வாகு உடையவராகவும் வளர்ந்து வந்தார். வலியந்தி என்னும் இடத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் துவக்கக் கல்வியைப் பயின்றார். வீட்டிலும் பயிற்சியகத்திலும் சாந்த குணம் உடையவராகவும், அமைதியானவராகவும் பழகி வந்தார். தனது அப்பாவுக்கு அரசின் நியாய விலைக்கடையில் செய்ய வேண்டிய பணிகளுக்கு உதவ எப்போதும் தயாராக இருந்தார். வீட்டிலேயே வளர்க்கப்பட்ட பசுக்களுக்கு புல் போன்ற உணவுப்பொருட்களை சேகரிக்கவும், இரப்பர் சீட் அடிக்கவும், அவற்றை தொலைதூரத்திலிருந்து தலையில் வைத்துக் கொண்டே நடந்து வீட்டுக்குக் கொண்டு வரவும் செய்தார். தங்கள் விவசாய நிலத்தில் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் பணியை எப்போதும் அச்சன்குஞ்சு விருப்பத்துடன் செய்து வந்தார்.

வீட்டில் பெற்றோர்கள் பணிக்கின்ற அனைத்துப் பணிகளையும் கீழ்ப்படிதலுடன் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். எப்போதும் பெற்றோருக்குப் கீழ்ப்படிதல் என்பது சிறுவயதிலேயே அவரது முக்கிய குணநலனாக இருந்தது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒரு சில நேரங்களில் அச்சன்குஞ்சுவை கேலி செய்து சண்டை சச்சரவுகளில் ஈடுபடுத்துகின்ற போது இவர் எந்த விதமான எதிர் சண்டைகளுக்கும் துணியாமல் தியாகத்தோடு திரும்பி வருவார்.

இவரது பெற்றோர் இவரை இறைபயத்தில் சிறுவயதிலேயே தகுந்த கவனத்தோடு வளர்த்து வந்தனர். அவரது அப்பா ஒரே ஒரு நாள் மட்டுமே அவரைத் தண்டித்தார். திருப்பலி நேரத்தில் ஆலயத்தில் இருந்து வெளியேறியதற்காகவே அவர் தண்டனையை ஏற்க வேண்டிய சூழல் உருவானது. ஆலயத்தில் சிறுவயதிலேயே தூயகப் பணியாளராக பணியாற்றி வந்தார். ஆலய நிகழ்வுகளில் மகிழ்வுடன் தன்னை உட்படுத்தியிருந்தார். ஆலயம் சார்ந்த பணிகளைச் செய்திட எப்போதும் தயாராயிருந்தார்.

பாலர் பருவத்தில் சகோதரர்கள் அனைவரும் இணைந்து ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுப்பதை போன்று வீட்டு முற்றத்திலும் விளையாட்டாக தூயகப் பணிகளை செய்து காட்டி மகிழ்ந்தனர். சகோதரர்கள் ஒவ்வொருவரும் சிரட்டை ஒன்றை நூலில் கட்டி தொங்கவிட்டு குந்திருக்கம் போட்டு தூபம் வீசுவதாக விளையாடி மகிழ்ந்தனர். ஆனால் எப்போதுமே அச்சன்குஞ்சு குருவானவராக வேடமணிந்து செய்து காட்டினார். இதற்காக தனது அப்பாவின் நீளமான சட்டை ஒன்றை அங்கியாக பயன்படுத்தி மகிழ்ந்தார்.

ஆயரின் தகப்பனார் ஒவ்வொரு நாளும் அதிகாலை ஐந்து மணிக்கே விழித்தெழுந்து கிறிஸ்தவ பக்திப் பாடல்களை உரத்த குரலில் பாடுவார். இப்பாடல் தான் குடும்பத்தில் அனைவரும் விழித்தெழ அழைப்பு மணியாக இருந்தது. பின்னர் அனைவரும் இணைந்து காலை மன்றாட்டை ஜெபிக்கின்றனர். மாலை வேளையில் அம்மா மௌனமாக குறைந்தது ஒரு மணி நேரமாவது தனி ஜெபத்தில் மூழ்கி இருப்பது வழக்கம். அனைவரும் இணைந்து மாலை மன்றாட்டை ஜெபிக்க ஒன்றிணைவர். வீட்டில் குடும்ப ஜெபத்தின் மன்றாட்டுக்களை வழிநடத்துபவர் எந்நாளும் அச்சன்குஞ்சுவே ஆவார். மாலை மன்றாட்டு முடிந்த பின்னர் மட்டுமே அனைவரும் இணைந்து இரவு உணவு உண்பர். தொடர்ந்து பள்ளிக்கூடப் பாடங்களை படிக்கத் துவங்குவர். சனிக்கிழமை மாலையில் ஆலய மறைக்கல்விப் பாடங்களை மட்டுமே கற்பர்.

கல்லூர் குடும்பம் பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலத்தில் அச்சன்குஞ்சு இளங்குருத்துவ பயிற்சியகத்தில் இணைய தனது சுயவிருப்பத்தை தெரிவித்தார். கடம்மனிட்ட ஆலயத்திலிருந்து பலர் குருத்துவ பயிற்சியகத்தில் இணைந்து பயிற்சியை பாதியிலேயே முறித்து விட்டு வீடு திரும்பினர் என்ற கசப்பான உண்மை இறைமக்களிடையே நிலவியிருந்த காலம். வறுமையில் வாடிய குடும்பத்தை ஏதேனும் வேலைகள் செய்வதன் வழியாக முன்னேற்ற தகப்பனாரோடு இணைந்து உழைக்க வேண்டும் என அறிவுரை கூறி திசை திருப்ப முயன்றோர் பலர். மகனது விலைமதிப்புள்ள காலத்தை இழக்கச் செய்ய வேண்டாம், இவன் திரும்பி வர வேண்டிய சூழல் கட்டாயம் ஏற்படும் என்று அவரது தகப்பனாரிடம் அறிவுரை கூறி எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டியவர்கள் ஏராளம்.

 

குருத்துவ பயிற்சியக மாணவன்

 

அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு குருத்துவ பயிற்சியகத்தில் நான் இணைந்தே தீருவேன் என்ற மிகுந்த உறுதியோடு இருந்த அச்சன்குஞ்சு அருட்தந்தை ஜேக்கப் ஜான் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்தபோது பட்டம் புனித அலோஷியஸ் இளங்குருத்துவ பயிற்சியகத்தில் இணைகின்றார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே விடுமுறைக்கு வருவது வழக்கமாக இருந்தது. விடுமுறைக்கு வருவதும் திரும்பிச் செல்வதும் பங்கு ஆலயத்திலிருந்து ஆகும். தினந்தோறும் காலையில் நடந்தே தனது ஆலயத்திற்கு திருப்பலிக்குச் செல்வார். குருத்துவ பயிற்சியகத்தில் முழங்கால் படியிட்டு ஜெபித்ததால் கால் முட்டுகளில் உருவான தழும்புகளை சகோதரர்கள் கண்டு வியந்தனர்.

இளங்குருத்துவ பயிற்சியகத்தில் சேர்ந்த பின்னர் அவரது தகப்பனாரும் தாயும் வாரத்திற்கு ஒரு முறை உபவாசமிருந்து மன்றாட்டுக்களை இறைவனிடம் சமர்ப்பித்து மன்றாடி வந்தனர். அவரது தாய் தனது முதிர்ந்த வயதிலும் அவரது இறப்பு வரையிலும் ஆயருக்காக உபவாச ஜெபம் இருந்து மன்றாடி வந்தார். தினந்தோறும் அவரது தாயார் இருபது ஜெபமாலை மன்றாட்டுகள் வரை ஜெபித்து ஆயரின் மறைபணிகளுக்காக இறையருள் வேண்டி வந்தார். ஆயரின் தாத்தா அச்சன்குஞ்சுவைப் போன்றே உடல்வாகுவிலும் நடத்தையிலும் குணநலனிலும் இறைபக்தியிலும் சிறந்து விளங்கினார். தாத்தாவின் வாழ்க்கை முழுவதும் ஆயர் அவர்கள் வாழ்ந்து காட்டுகிறார் என்று அவரது குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர்.

குருவானவராக அருட்பொழிவு செய்யப்பட்ட பின்னர் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் இணைந்த கூடுகையின் போது பின்வரும் கருத்தை கண்ணியமாக எடுத்துரைத்தார். பெற்றோரே, சகோதரர்களே. நீங்கள் ஒருபோதும் என்னிடம் எவ்வித பொருளாதார உதவியும் கேட்க வேண்டாம். என்னுடையவை அனைத்தும் இறைவனுக்கு உரியவை. அவற்றை நம் வீட்டிற்குள் கொண்டு வந்தால் இங்கே குந்திருக்கத்தின் நறுமணம் வீசும் என இலாவகமாக கூறினார். அவரது சகோதரர்களும் பெற்றோரும் எந்த விதமான உதவிகளையும் ஆயர் அவர்களிடம் இருந்து இதுவரையிலும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது மிகப்பெரிய உண்மையாகும்.

 

குருவானவராக

 

குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் தேவைக்கேற்ப பல்வேறு விதமான வேண்டுதல்களை சமர்ப்பித்து இந்நாள் வரையிலும் ஜெபிக்கின்றார் என்று குடும்பத்தினர் நம்புகின்றனர். அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்காகவும் எந்நாளும் வேண்டுகின்ற பிரதிநிதியாகவும், குடும்பத்தினரை ஒன்றிணைத்து இறைசன்னிதியில் சமர்ப்பிக்கின்ற தலைவராகவும், குடும்பத்தினரிடையே தார்மீகம் மற்றும் தூய்மையின் வழிகாட்டியாகவும், தேவைக்கேற்ப கோபத்தாலும், அன்பாலும் குடும்பத்தினர்களுக்கு கலங்கரை விளக்காய் ஆயர் திகழ்கின்றார். குடும்பத்தில் எத்தகைய கருத்துப் பரிமாற்றங்களும் குழப்பங்களும் வந்தாலும் ஆயரின் இறுதி வார்த்தைகளே தீர்ப்பாக அமைகின்றது.

 

3.        குருவாக மறைபணிகள்

 

1973 ஆம் ஆண்டு மேய் 5ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் உயர் குருத்துவ பயிற்சியகப் படிப்பை முடித்த பின்னர் அருட்தந்தை ஜாண் கல்லூர் குருவானவராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

 

குருத்துவ அருட்பொழிவு

புதுக்குருவானவராக துவக்கம் முதலே மறைபணித் தளங்களில் பணியாற்றுவதற்கு ஆர்வம் காட்டினார். பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் மற்றும் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் ஆகியோரது வழிகாட்டுதல்களுக்கேற்ப திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தின் மறைப்பணிகளுக்கு பெயர்பெற்ற கேரளாவின் தென்பகுதிகளில் மறைபணியாற்ற தயாரானார். பாலராமபுரத்தை மையமாகக்கொண்டு அன்றைய மறைபணிகள் நடந்தன.

அருட்தந்தை பிலிப் உழுந்நல்லூர்  பாலராமபுரத்தில் தங்கியவாறு நெய்யாற்றின்கரை மற்றும் பாறசாலை பகுதிகளில் பல மறைப்பணித்தலங்களை உருவாக்கினார். நம் மறைமாவட்டத்தில் அவரால் உருவாக்கப்பட்ட மறைபணித்தளம் தான் வெட்டுக்குழி இறைமக்கள் சமூகம். வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் சின்னஞ்சிறிய குடிசைகளை அமைத்து அல்லது சின்னஞ்சிறு கட்டிட அமைப்புகளை ஏற்படுத்தி இறைச் சமூகங்களை உருவாக்கினார். திருஅவை இவருக்கு கோர் எப்பிஸ்கோப்பா என்ற பதவியைக் கொடுத்து அங்கீகரித்தது.

புதுக்குருவான அருட்தந்தை ஜாண் கல்லூர் எனப்பட்ட நம் ஆயர், அருட்தந்தை பிலிப் உழுந்நல்லூர், அருட்தந்தை கீவர்கீஸ் பெருமல மற்றும் அருட்தந்தை சாமுவேல் பள்ளிவாதில்கல் ஆகிய மூத்த குருக்களுடன் பாலராமபுரத்தில் தங்கியிருந்து தனது மறைப்பணிகளை துவங்கினார். மூத்த குருக்களுடன் எப்போதும் மதிப்பும் மரியாதையும் செலுத்தி அவர்களிடமிருந்து மறைப்பணி அனுபவங்களை கேட்டறிந்தார். மதியம் மற்றும் மாலை நேரங்களில் அருட்தந்தையர்களோடு இணைந்து ஜெப வாழ்விலும் ஈடுபட்டார்.

            வெண்ணியூர், சொவ்வர, முல்லூர் மற்றும் விழிஞ்ஞம் ஆகிய மறைப்பணித்தலங்களில் பணியாற்ற அருட்தந்தை ஜாண் கல்லூர் மறைப்பணியாற்ற முதலில் பணிக்கப்பட்டார். காலையில் மறைப்பணித்தலங்களுக்கு ஏறக்குறைய 8 கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்து சாதாரண ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்ய பணியாற்றி வந்தார். வாழ்க்கையில் மிகவும் நலிந்த சூழலில் வாழ்ந்து வந்த மக்களுக்கு எப்போதும் அவர் உதவிகள் பல செய்ய முன் வந்தார். வீடில்லாத ஏழைகள் பலருக்கு வீடுகள் இவரது கூட்டு முயற்சியால் கட்டப்பட்டு வழங்கப்பட்டன. ஏராளமான மருத்துவ உதவிகள் மற்றும் திருமண உதவிகள் இவரால் வழங்கப்பட்டன.

 

குருவாக பணிகள்

இம்மக்கள் வாழ்வின் தேவைகளுக்காக தங்களுக்கு உரிய சொத்துக்களை அடமானம் வைத்து கடன் தொகை திருப்பிச் செலுத்த இயலாமல் துயரத்தில் வாழ்ந்து வந்த காலம். குறிப்பாக ஒரு குடும்பத்திற்கு இரண்டு தென்னை மரங்கள் உள்ளன என்றால் பல ஆண்டுகளுக்கு ஒரு தென்னை மரத்தை அடமானம் வைத்திருப்பார்கள். வறுமையில் வாடியவர்களுக்கு இந்த அடமானத் தொகையை திருப்பி செலுத்தவே முடியாமல் போனது. இத்துயர நிகழ்வை புரிந்து கொண்டு வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று வங்கிகள் வழியாக கடன் பெற்றுக் கொள்ள மக்களுக்கு உதவி புரிந்தார். இவற்றை பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் அவர்களின் அனுமதியோடு செய்திருந்தார் என்பது இன்னும் சிறப்பானது ஆகும். பேராயரின் அனுமதியோடு சிறு தொழில் செய்வதற்கான கடன்களை மக்களுக்கு வழங்கவும் தலைமை வகித்தார்.

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட அன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டு உதவியோடு பால்பொடி மற்றும் சத்து மாவு போன்றவற்றை ஒவ்வொருவரும் அவர்களுடைய சொந்த நிலத்தில் பணி செய்வதற்கு ஏற்ப பகிர்ந்து வழங்கி ஆரோக்கியமான வாழ்வு வாழவும் பணித்தார்.

மக்கள் சமூகத்திற்காக அருட்தந்தை ஜான் கல்லூர் அவர்கள் செய்த பணிகள் கொஞ்சம் அல்ல. நான்கு தேவாலயங்கள், மரியாவின் புதல்வியர் துறவு சமூகத்திற்கென கன்னியர் மடம், ஒரு துவக்கப்பள்ளி, ஒரு தையல் பயிற்சி நிறுவனம், ஒரு பாலர் பள்ளி, தென்னந்தோப்பு மற்றும் ஏராளம் ஏராளம் சமூக சேவைகள். இது ஒரு இளங்குருவாக தன்னந்தனியாக செய்ய முடிந்தது என்பது ஆச்சரியமானது.

அருளடையாள வாழ்விலும் நம்பிக்கை வாழ்விலும் சிறந்து விளங்க வேண்டிய அடிப்படை நம்பிக்கைப் பயிற்சி வகுப்புகளை அவர்களுக்காக நடத்தினார். குடும்ப வாழ்வின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு விதமான கருத்தரங்குகளை நடத்தி குடும்ப வாழ்வில் சிறந்து விளங்க வேண்டிய தன்மைகளை எடுத்துரைத்தார். புதுக்குருவானவராக இருந்த போது இவ்வாறு மக்களின் சமூக முன்னேற்றத்தில் மிகப்பெரிய ஆர்வம் காட்டி பணியாற்றி வந்தார். மூத்த குருக்களோடு ஆறு வருடங்கள் பலராமபுரத்தில் தங்கி இருந்த காலத்தில் அவர் எப்போதும் மறைப்பணித்தலங்களில் சந்தித்த சவால்களை எடுத்துக் கூறி அவற்றை முன்னோக்கிய பாதையில் எவ்வாறு கொண்டு செல்ல முடியும் என்ற கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

 

பயிற்சி வகுப்பு

இப்பகுதிகளில் மறைபணியாற்றிய பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பணிபுரிந்த காலத்தில் இவ்விடத்து மக்களுக்கு நல்ல ஆலயங்கள் அமைய வேண்டும் என்ற முறையில் பல்வேறு ஆலயங்கள் அமைவதற்கான பண உதவிகள் வழங்கினார். சின்னக் குடிசைகளாக அமைந்திருந்த குடிசை ஆலயங்கள் பலவும் சற்று வசதியான முறையில் பல தேவாலயங்கள் அமைக்கவும் முயற்சி செய்தார். அத்தகைய பல ஆலயங்களும் இன்றும் நிலை நிற்கின்றன. இம்மக்கள் நன்றியோடு அருட்தந்தை ஜான் கல்லூர் அவர்களை நினைவு கூர்கின்றனர். 1973 முதல் 1979 வரை இப்பகுதிகளில் நற்பணியாற்றி மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றார்.

இவ்விடத்திலிருந்து இடமாற்றலாகி பிரப்பன்கோடு மருத்துவமனையில் பணிபுரிய தந்தை ஜாண் கல்லூர் அவர்கள் சென்றபோது இவ்விடத்து எளிய மக்கள் நூற்றுக்கணக்கானோர் அவரை வழியனுப்ப கண்ணீரோடு சென்றனர் என்பது இப்பகுதி மக்களின் மனதில் நீங்காமல் நிலைபெறும் அனுபவமாக உள்ளது.

பிரப்பன்கோடு மருத்துவமனையில் பணிபுரிந்த போது சரியான கல்வி அறிவு இல்லாததே தொழுநோய் உருவாக முக்கிய காரணம் என்பதை அறிந்த தந்தை அவர்கள் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பயிற்சிகளை நடத்தத் தொடங்கினார். தூய்மை என்பதன் முக்கியமும், தூய்மையற்ற நிலையில் இந்நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் என்பதையும் மக்களிடையே எடுத்துக் கூறுவதில் தனிக்கவனம் செலுத்தி வந்தார். இவ்வாறு புதுக்குரு ஜாண் கல்லூர் அவர்கள் ஏராளமான பணிகளை இறைமக்களுக்காக செய்தார்.

பிரப்பன்கோட்டில் பணிகள்

 

தொடர்ந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில் வாழும் மலங்கரை கத்தோலிக்க மக்களை ஒன்றிணைப்பதற்காக புது மிஷனறியாக அமெரிக்க நாட்டிற்கு அருட்தந்தை ஜான் கல்லூர் அவர்கள் அனுப்பப்பட்டார். திருஅவையினுடைய எத்தகைய ஆட்சி அமைப்போ, இறைமக்கள் சமூக அமைப்போ,  கட்டிட அமைப்புகளோ எதுவும் இல்லாதிருந்த சூழலில் தன்னந்தனியாக அயல் நாடு சென்று மலங்கரை கத்தோலிக்கர்களாக விரிந்து பரந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாழ்ந்திருந்த ஒவ்வொருவரையும் தேடி கண்டுபிடித்து மலங்கரை கத்தோலிக்க திருஅவை சமூக ஒண்றிப்பிற்குக் கொண்டு வந்தார். அமெரிக்கா வாழ் மலங்கரை கத்தோலிக்க திருஅவையினரின் மனதில் நீங்காத இடம் பெற்று சிறந்து விளங்கினார். செய்த நற்பணிகளின் பலனாகவே இவரது பணியிட மாற்றத்திற்கு பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடா இணைந்த மறைமாவட்டம் உருவாவதற்கு ஏதுவானது.

அமெரிக்கா வாழ் மக்கள் ஆயரைப் பற்றி எப்போதும் கூறுகின்ற ஒரே ஒரு வார்த்தை தான் எங்களது அன்பார்ந்த ஆயர் இவர். மக்கள் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்ற இப்பெருந்தகையை வாழ்த்துவதும் நாம் அவரது உடனிருப்பைப் பெற்றதும் நாம் பெற்ற பெரும்பேறாகும். அமெரிக்காவிலிருந்து நம் மறைமாவட்ட ஆயராகவே பணியிடமாற்றம் பெற்று வருகிறார்.

 

ஆயராக அருட்பொழிவு

4.        மார்த்தாண்டத்தை வளர்த்தியவர்

 

1997, ஜூலை மாத முதல் நாளில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயராக நம் பேராலயத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்ட ஆயர் அவர்களுக்கு மலங்கரை மறைமாவட்டங்களும் கலாச்சார இயக்கங்களும் குழுக்களும் பல்வேறு சிறப்பு வரவேற்பு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தினர். ஆலய நிகழ்வுகள் மட்டுமல்ல, மார்த்தாண்டம்  பகுதிகளில் சமூக அரசியல் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் ஆயர் அவர்கள் கலந்து கொண்டு இறை ஆசி வழங்கினார். குமரி கிறிஸ்தவ ஐக்கிய பேரவை இணைந்து நடத்தக் கூடிய பல்வேறு கண்டனப் பேரணிகளிலும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று மறைமாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை மெய்ப்பித்து வந்தார்.

மறைமாவட்டத்தில் உள்ள இயக்கங்கள் மற்றும் நிறுவனங்களை அடிக்கடி சந்தித்து அவற்றின் நிர்வாக நிறைகுறைகளை ஆய்ந்தறிந்து அதன் பொறுப்பு வழிநடத்துநர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியும் அவர்கள் செய்யும் நற்காரியங்களை உற்சாகமூட்டியும் தன் பணியை திறம்பட செய்து வந்தார்.

அடிக்கடி ஆயர் என்ற முறையில் அவர் முற்காலங்களில் அயராது பணி செய்து உழைத்த அமெரிக்க வாழ் நபர்களிடம் மீண்டும் அவர்களோடு உள்ள உறவை தக்க வைப்பதற்காகவும் அந்த உறவின் உச்சக்கட்டமாக அவர்களிடமிருந்து நன்கொடைகளை திரட்டுவதற்காக ஆண்டுதோறும் அமெரிக்க நாடுகளுக்கும் அவ்வாறே ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கும் மறைமாவட்டத்தின் நன்மைக்காக பயணம் மேற்கொண்டு வந்தார்.

ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு திரும்பி வருகின்ற போது மிகவும் குறைந்த அளவு நன்கொடையே ஆயினும் அவற்றை மகிழ்வோடு வாங்கி வருவார். குறிப்பாக ஒரு சில நபர்கள் 2 டாலர் அல்லது 5 டாலர் என்று நன்கொடைகளை வழங்கி இருக்கிறார்கள். ஒரு வாரத்திற்குள் அனைவருக்கும் நன்றி கூறி பதில் கடிதம் எழுதுவதும் அவரது வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு நபரும் வழங்கிய நன்கொடையை எவ்வாறு அவர்கள் கஷ்டப்பட்டு வழங்கியுள்ளார்கள் என்பதை என்னிடமும் திரு. வில்லியம் அவர்களிடமும் அடிக்கடி விவரித்து வந்தார்.

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்வுகள் மார்த்தாண்டம் வட்டார ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பின் வழியாக நடத்தப்படும். கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் அதிகமான உதவிகளை ஏழைகளுக்காக அவர் வழங்கி வந்தார். இத்தகைய உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார்கள். பல்வேறு நபர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று அவரிடமிருந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை ஆயரகத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்காக வந்து குவிந்த வண்ணம் இருந்தார்கள்.  இவ்வாறு வந்திருந்த ஏழை எளிய மக்களுக்கு பரிசுகள் வழங்குவது மட்டுமல்ல அவர்களது பசியைப் போக்க காலை உணவு வழங்கி திருப்தியுடன் அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வாறு மார்த்தாண்டம் வட்டார பகுதியில் உள்ள ஏழை மக்கள் கிறிஸ்துமஸ் தின நாட்களில் ஆயர் அவர்களின் உதவிகளை எண்ணி பெருமிதம் அடைவதும் நன்றி கூறுவதும் வழக்கமாகவே அமைந்திருந்தது.

ஆயராக தனது முதல் கிறிஸ்துமஸ் திருநாள் திருப்பலியையும்  புத்தாண்டுத் திருப்பலியையும் மார்த்தாண்டம் பேராலயத்தில் நிகழ்த்தியவாறு தனது பணிகளை தொடர்ந்து செய்ய பேராலய மக்களோடு இணைந்து இறைவேண்டல் செய்தார். ஆண்டுதோறும் குருத்தோலைத் திருநாளை பேராலத்திலேயே நடத்தி வந்தார்.

 

மார்த்தாண்டம் பழைய பேராலயம்

 

பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு ஆலயங்களிலும் சிறு மற்றும் பெரிய மறைப்பணித்தலங்களிலும் கிறிஸ்துமஸ் மற்றும் துக்கவார திருழிபாட்டு நிகழ்வுகளை நடத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு நிகழ்வுகள் இல்லை எனில் தானாகவே முன்வந்து ஏதேனும் மறைப்பணித்தலங்களிலோ ஆலயங்களிலோ திருப்பலி ஒப்புக் கொடுத்து வந்தார். இஃது இறைமக்களோடு நெருங்கிய உறவை ஏற்படுத்த வழிவகுத்தது.

ஆண்டுதோறும் ஆயரின் பெயர் கொண்ட புனிதரின் திருநாள் நவம்பர் 13 ஆம் நாளில் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் அனைத்து குழுக்களும் அனைத்து நிறுவன பொறுப்பாளர்களும் ஆயரகம் வந்து அவர்களுக்கு வாழ்த்துக்களை மனமுவந்து தெரிவித்து வந்தார்கள். இவ்வாறு இவர்கள் கொண்டுவரக்கூடிய நன்கொடைகளை சேமித்து பிறரன்புப் பணிகளுக்காக செலவிடும் வழக்கமாக இருந்தது. அவருடைய பெயர் விழாவுக்காக நன்கொடை வழங்குகின்ற நபர்கள் உதவிகள் தேவைப்பட்டால் அவர்களுக்கு மேலும் நன்கொடைகளை திருப்பி வழங்கி அவர்களது பணிகளை ஊக்குவித்து வந்தார். இரு தினங்கள் இந்நிகழ்வு நடத்தப்பட்டன. முந்தைய நாளில் பங்குகளிலிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் இறைமக்கள் நேரடியாக ஆயரை வாழ்த்தி நன்கொடைகளை வழங்கி சிறப்பித்தனர். பெயர்விழாவின் நன்னாளில் காலையில் நன்றித் திருப்பலியும் அனைவருக்கும் காலை உணவும் வழங்கப்பட்டது. மதியம் சிறப்பு விருந்தினர்களோடு விருந்தும் வழங்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு  நற்கருணை ஆண்டை ஒட்டிய நிகழ்வுகள் மிகப்பெரும் பேரணியுடனும் பேராலயத்தில் நற்கருணை ஆராதனையுடனும் நடத்தப்பட்டன.

 

நற்கருணை ஆண்டைய நற்கருணை ஆராதனை திருநிகழ்வு

 

ஆயராக பதவியேற்றவுடன் மரியாயின் சேனையின் தமிழக உயர் அமைப்பான சென்னை செனாத்துஸ் மன்ற பொறுப்பாளர்களை சந்தித்தார். இதன் அடிப்படையில் மார்த்தாண்டம் மறைமாவட்டத்தை மையமாக வைத்து இவ்வியக்கத்தின் கொமீசியம் என்ற அமைப்பானது முதல்முறையாக 1999 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் நாளில் ஆயர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வாறு கூரியா என்ற நிலையிலிருந்து மரியாயின் சேனை இயக்கம் உயர்வு நிலை அடைந்தது.

வருடந்தோறும் ஏப்ரல் மாதம் 8ஆம் நாள் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் ஆண்டகையின் நினைவுத் திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வந்தார். அவ்வாறு ஆயரின் நினைவு நாட்களில் பல்வேறு பங்கு மக்களால் அவரது கல்லறை நோக்கிய திருப்பயணம் நடத்தப்பட்டு வந்தது. அன்றைய நாளில் கருத்தரங்குகள் மற்றும் பொருட்காட்சிகளும் நடத்தப்பட்டன. பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

கருமானூர், செருப்பாலூர், மங்காடு,  காட்டுவிளை, பிலாங்காலை, பூந்தோப்பு, வாழோடு, செக்கிட்டுவிளை, நடைக்காவு, சூரியகோடு, பின்குளம், சைனம்விளை, முகவூர், ஊரம்புவிளை, கண்ணக்கோடு, சேரோட்டுக்கோணம், குழித்துறை, மாத்தூர்க்கோணம், பீச்ரோடு, ஞானதாசபுரம், குமாரபுரம், பார்வதிபுரம், மந்தாரம்புதூர், கிறிஸ்துவிளாகம், மத்தியாஸ் நகர் மற்றும் தேனிக்குளம் என ஏறக்குறைய இருபதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் அல்லது ஆலய பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. இவ்வாறு கட்டப்பட்ட புது ஆலயங்களுக்காக பங்கு மக்களும் தங்கள் பங்களிப்புத் தொகை வழங்குவது காட்டாயமாக்கப்பட்டிருந்தது. இத்தொகையானது கருமானூர் ஆலயம் கட்டப்பட்ட் போது 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பமாகி செல்லங்கோணம் ஆலயம் கட்டும் போது 25 இலட்சம் ரூபாய் வரை மக்களின் பங்களிப்புத் தொகையாக மறைமாவட்டத்திற்கு செலுத்த வேண்டும் என்ற வரைமுறை உருவானது.

ஓலை மற்றும் ஓட்டுக் கட்டிடங்களாக இருந்த அனைத்து பள்ளிக்கூடங்களும் காங்கிரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டு புதிதாக வடிவமைக்கப்பட்டன. இவ்வாறே பங்குத்தந்தையர்களுக்கான பல தங்கும் கட்டிடங்களும் புதிதாக கட்டப்பட்டன. பல்வேறு பங்குகளில் பங்கு மக்கள் இணைந்து முயற்சிகள் மேற்கொண்ட ஆலய விரிவாக்கம் மற்றும் குருசடி கட்டுதல் போன்ற பணிகளுக்கு பங்குத்தந்தையர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை நல்கி வந்தார். அவ்வப்போது அப்பணிகளை சந்தித்து தேவையான கருத்துக்களை வழங்கி வந்தார்.

கட்டிடப் பணிகளை எந்த ஒப்பந்ததாரர் அல்லது பொறியாளரால் செய்யப்பட வேண்டும் என்பதை ஆயரே தீர்மானித்திருந்தார். அவர்களிடம் மொத்த ஒப்பந்தத் தொகையை ஆயர் அவர்களே நேரடியாக பேசியிருந்தார். அவ்வாறு பல கட்டிடப் பணிகளை செய்தவர் பொறியாளர் திரு டைட்டஸ் ஆவார். மேலும் ஆலய கட்டிடப் பணிகளுக்காக ஆலஞ்சியைச் சார்ந்த இரண்டு சகோதரர்கள் கேரளாவில் பெரிய ஆலயப் பணிகளை செய்ததை அறிந்து நம் மறைமாவட்ட ஆலயங்களைக் கட்டுவதற்கும் அவர்களை பயன்படுத்தினார். அவர்கள் ஓய்வு பெற்றபோது அவர்களது மகன் இப்பணிகளை செய்தார். பொறியாளர் சுவராஜ் அவர்களின் மேற்பார்வையில் சில கட்டிடப் பணிகளை செய்திருந்தார். கல்லூரிகளுக்கான கட்டிடங்கள் அனைத்தும் பொறியாளர் திரு. சிறில் அவர்களால் கட்டப்பட்டது.

அருட்தந்தையர்கள் பலர் அவர்கள் பணிபுரியும் இறைமக்களின் நிலைக்கு ஏற்ப குருசடிகளை அமைத்து அருள்வாழ்வில் வளர முயற்சிகள் மேற்கொண்டனர். இத்தகைய இறைமக்களின் முயற்சிகளுக்கு ஆயர் அவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி வந்தார். அடிக்கடி அவ்விடம் சென்று பார்வையிட்டுத் தேவையான ஒழுங்குமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் நல்கி வந்தார்.

குருசடிகள் கட்டுவதற்கென்று ஒரு போதும் மறைமாவட்டத்திலிருந்து எத்தொகையும் செலவாக்கியது இல்லை. ஆனால் இறைமக்களின் முயற்சிக்கு தனது பங்களிப்பாக தனது சொந்த கணக்கில் இருந்து அன்பளிப்புகளை தாராள மனதுடன் வழங்கி வந்தார்.

மறைமாவட்டப் பேராலயத்தோடு இணைந்த பங்குத் தந்தை தங்கும் இடத்தில் மறைமாவட்ட ஆயரக அலுவலகமும் செயல்பட்டு வந்தது. அலுவலகத்திற்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்ததால் வெட்டுமணி தேங்காய்பட்டணம் சாலையில் தற்போது அமைந்திருக்கும் ஆயரக வளாக கட்டிடம் ஒன்று வாடகைக்காக முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து அந்த கட்டிடமும் இடமும் விலைக்கு வாங்கப்பட்டது. தொடர்ந்து அக்கட்டடத்தின் பின்பகுதியில் அரங்கமும் சமைலறையும் உணவறையும் அமைக்கப்பட்டது. பின்னர் முற்பகுதியில் பணியாளர்களுக்கான அலுவலகமும் அருட்தந்தையர்கள் தங்குவதற்கான இடமாகவும் வடிவமைக்கப்பட்டது.

 

ஆயரகத்தின் முந்தைய தோற்றம்

 

ஆலயங்களைப் போன்றே மக்களின் சமூக சூழலையும் உறவையும் வலுப்படுத்த சமூக நலக்கூடங்கள் பல அமைக்கப்பட்டன. இந்த சமூக நலக்கூடங்கள் இன்று பல ஆலயங்களுக்கும் வருமானம் தருகின்ற அமைப்புகளாகவும் செயல்பட்டு வருகின்றன. முகவூர், மஞ்சத்தோப்பு, காஞ்சியோடு மற்றும் பேராலயம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட சமூக நலக்கூடங்களில் இன்றும் பல்வேறு பணிகள் நடந்த வண்ணம் உள்ளன.

பனச்சமூடு மற்றும் மஞ்சத்தோப்பு போன்ற இடங்களில் சிறுதொழில் பயிற்சிக்கான கட்டிட அமைப்பு கட்டப்படவும், பழைய கட்டிடம் பழுதுபார்க்கவும் செய்யப்பட்டன. பீச் ரோடு ஆலய மக்களுக்காக மூன்று அறைகள் கொண்ட ஆலயத்தோடு இணைந்த ஒரு கட்டிடமும் கட்டி வழங்கப்பட்டது.

 

மஞ்சத்தோப்பு கயிறு தயாரிக்கும் பயிற்சியகம்

 

மறைமாவட்ட இளங்குருத்துவ பயிற்சியகம் முதலில் குழித்துறை நலவாழ்வுப்பணிக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. குரு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் கன்னியாகுமரியில் மலங்கரை பவனில்  அமைந்துள்ள இளையோர் மைய கட்டிடத்திற்கு குருத்துவ பயிற்சியகம் மாற்றப்பட்டது. பல ஆண்டுகள் குருத்துவ பயிற்சியகம் அங்கு செயல்பட்டு வந்தது. இக்காலத்தில்தான் இலவுவிளையில் இளங்குருத்துவ பயிற்சியகத்திற்காக தென்னை மரங்கள் மற்றும் இரப்பர் மரங்கள் அடங்கிய ஒரு விளைநிலப்பகுதி விலைக்கு வாங்கப்பட்டது. ஆயர் அவர்களின் தனிப்பட்ட முயற்சியால் குருத்துவக் கல்லூரியின் கட்டிடமும் அமைக்கப்பட்டு குருமாணவர்களும் தங்கள் பயிற்சியைத் தொடர்ந்தனர். இவ்விடத்தில் மார் எஃப்ரேம் பொறியியல் கல்லூரி துவங்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது செமினாரி இவ்வளாகத்திலேயே கீழ்பகுதிக்கு மாற்றப்பட்டது.

கன்னியாகுமரி மலங்கரை பவன் வளாகத்தில் இறையூழியர் மார் இவானியோஸ் தங்கியிருந்த பழைய ஓட்டுக் கட்டிடமும் சிற்றாலயமும் இளையோர் நல மையக் கட்டிடமும் அமைந்திருந்தது. கன்னியாகுமரி சுற்றுலாத்தலமாக வளர்ந்த சூழலில் நம் வளாகத்தில் மற்று பயன்படுத்தாத பகுதிகளில் அரசு வளர்ச்சிப் பணிக்காக நிலம் கையகப்படுத்த திட்டமிட்டதை அறிந்த ஆயர் உடனடியாக மார் இவானியோஸ் ஆனிமேஷன் சென்டர் என்ற கட்டிடத்தை உருவாக்கினார். இக்கட்டிடத்தில் தான் தற்போது புனித பவுல் IAS அக்காடமி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

            ஆலயங்களின் எல்லைகளைப் பிரித்தும் புதிய மறைப்பணித்தலங்களைக் கண்டறிந்தும் புது ஆலயங்கள் பல அமைக்கப்பட்டன. சற்று அளவில் பெரிதாகவும் நன்முறையிலும் வடிவமைக்கும் போது புது ஆலய விசுவாசிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் என்ற கருத்தை வலியுறுத்தியே பல புது ஆலயக்கட்டிடங்கள் சற்று பெரிதாக அமைக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட பூந்தோப்பு, சேனம் விளை, கடுவாக்குழி, பல்லுகுழி, ஊரம்புவிளை, பெருவழிக்கடவு, சீறோபாயின்டு, சேறோட்டுக்கோணம், கோணம், ஞானதாசபுரம், மத்தியாஸ்நகர், கீழ்மாங்கோடு, புலியூர்சாலை, முகவூர், வெள்ளச்சிப்பாறை, செக்கிட்டுவிளை மற்றும் கிடாரக்குழி போன்ற புது ஆலயங்கள் இதற்கு சான்றாகும்.

            கிறிஸ்துவிளாகம், பாலவிளை, அம்பிலிகோணம், பாத்திமாநகர், பிலாங்காலை என பல இடங்களில் பங்குத் தந்தையர் இல்லம் புதிதாக கட்டப்பட்டது. சில இடங்களில் பழுதுபார்த்தலும் நடந்தன.

கிராத்தூர் மற்றும் மரியாகிரியில் அமைந்துள்ள ஆங்கில வழி பள்ளிக்கூடங்களுக்கு முற்றிலும் புதிய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு தன்னம்பிக்கையோடு வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தன. மரியாகிரியில் அமைந்துள்ள மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் துவக்க காலங்களில் அதன் வளர்ச்சிக்கு திட்டங்கள் பல வகுத்து வந்தார். கிராத்தூரில் அமைந்துள்ள மார் கிறிஸோஸ்டோம் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதி வழங்கி அதன் செயல்பாடுகளையும் கவனித்து வந்தார். மார் எஃப்ரேம் பொறியியல் கல்லூரி துவங்க உடனடி கட்டமைப்புத் தேவையை உணர்ந்து செமினரிக் கட்டிடத்தையே அதற்காக வழங்கி கல்லூரியாலேயே செமினரிக்காக புதுக் கட்டத்தை கட்டிட வழி செய்தார். இம்மூன்று கல்லூரிகளுக்கும் ஆயர் அவர்களுக்கு உறுதுணையாக அருட்தந்தை பிரேம் குமார் அவர்கள் செயல்பட்டு வந்தார்.

மறைமாவட்டத்திற்கென மிட்ஸ் என்ற சமூக நலப்பணி மையம் முதலில் மார்த்தாண்டம் பேராலய வளாகத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் கழுவன்திட்டை பகுதியில் புதிதாக இடம் வாங்கப்பட்டு அலுவலகக் கட்டடம் அமைக்கப்பட்டு குமரி மாவட்டம் முழுவதும் இதன் பணிகள் நடைபெறுமாறு துரிதப்படுத்தப்பட்டன. கோள்பிங் இயக்கம், சேவ் ஏ பேமிலி, தளிர்கள் உலகம், சுய உதவிக் குழுக்கள் என பல செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மிட்ஸ் நிறுவனத்தின் கீழ் கன்னியாகுமரி சமூகக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கும் அருட்தந்தை பிரேம் குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.

 

கோள்பிங் இயக்க ஆண்டுவிழாவின் போது

கோள்பிங் இயக்கத்தினரும் மரியாயின் சேனை இயக்கத்தினரும் இணைந்து அக்டோபர் மாத இறுதி ஞாயிறன்று மாபெரும் செபமாலைப்பவனி நடைபெற்று வந்தது. ஆயர் அவர்கள் இந்நிகழ்வினில் கலந்து கொண்டு இறை ஆசீரையும் உடனிருப்பையும் வெளிப்படுத்தி வந்தார்.

            ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் துவங்கிய ஹெல்த் ஃபார் ஒன் மில்லியன் என்ற திட்டத்தை மையமாக்கி நல வாழ்வுப் பணிகளை குழித்துறையில் அருட்தந்தை மரிய அற்புதம் அவர்கள் தலைமையில் தொடர்ந்திட வழிவகுத்தார். பல்வேறு மக்கள் நலப்பணிகள் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வந்தன. இவற்றில் முக்கியமான சுய உதவிக்குழுக்கள்,  ஏழைப்பெண்களுக்கான திருமண உதவி திட்டம், மார்த்தாண்டம் மெடிக்கல் மிஷன் போன்றவை நன்முறையில் இப்போதும் செயல்பட்டு வருகின்றன. குழித்துறையில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளிக்கூடமும் தலைசிறந்த பணிகளுள் ஒன்றாக அமைந்துள்ளது. இப்பணிகளுக்கு நீண்ட காலம் அருட்தந்தை மரிய அற்புதம் அவர்கள் தலைமை வகித்தார்.

மார்த்தாண்டம் பேராலய வளாகத்துக்கு அருகிலேயே சாந்தோம் அச்சகப் பயிற்சியகம் துவங்கப்பட்டது. நவீன அச்சக இயந்திரங்களைக் கொண்டு இதன் பணிகள் துவங்கப்பட்டன. பயிற்சியகமும் பணியகமும் இணைந்து மறைமாவட்டத்தின் ஊடகப் பணிகளில் மிகப்பெரிய சிறப்பான பணியாற்றி வருகிறது. அத்துடன் திருப்பணிப் பொருட்கள் விற்கப்படும் நிலையம் ஒன்றும் ஆரம்பமானது.

முக்கம்பாலையில் அமைந்துள்ள இரப்பர் தோட்டத்திற்கு மார்த்தா எஸ்டேட் என பெயரிடப்பட்டிருந்தது. தொடர்ந்து ஒவ்வொரு தோட்டத்திற்கும் பல்வேறு பெயர்களை வழங்கியிருந்தார். வாழக்குழியில் இரப்பர் தோட்டம் ஒன்று வாங்கப்பட்டது. வாழக்குழியில் அமைந்துள்ள தோட்டத்திற்கு செயின்ட் எஃப்ரேம் தோட்டம் எனப் பெயர். அணக்கரையில் ஆற்றின் அருகே புதிதாக வாங்கப்பட்ட இரப்பர் தோட்டத்திற்கு அமலா எஸ்டேட் எனப் பெயரிடப்பட்டது. மஞ்சத்தோப்பில் அமைந்துள்ள தென்னந்தோப்புக்கு மார் இவானியோஸ் ஃபார்ம் எனவும், வள்ளவிளையில் அமைந்துள்ள தென்னந்தோப்புக்கு மார் பசேலியோஸ் ஃபார்ம் எனவும், செல்லங்கோணத்தில் அமைந்துள்ள தோட்டத்துக்கு மாதாமலை எஸ்டேட் எனவும் பெயரிட்டார்.

 

பத்தாண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில்

ஆயர் அவர்களின் பத்தாண்டு கால ஆயர்பணி நிறைவை முன்னிட்டு பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆலயங்கள் என 10 நிறுவனங்களுக்கு TENTH EPISCOPAL YEAR OF MAR CHRYSOSTOM  (TEYMAC) EDUCATION ENDOWMENT என்ற பெயரில் ரூபாய் ஐம்பதாயிரம் வீதம் நிரந்தர வைப்பு நிதி உருவாக்கப்பட்டது.

ஆயரின் 60ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய சூழலில் அவரது பெயர் நிலைத்து நிற்க மறைமாவட்டத்தில் அருட்தந்தை ஜோசப் சுந்தரம் அவர்களுடைய முயற்சியால் துவங்கப்பட்டது தான் ஷாலோம் ஹோம் என்னும் பிறரன்புப் பணி நிறுவனம். கிரத்தூர் புனித தோமையார் மருத்துவமனை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இறக்கும் நிலையில் உள்ள தீவிர நோயாளர்களுக்கு இறுதி கால பராமரிப்புப் பணிகள் செய்கின்ற இல்லமாக இது துவங்கப்பட்டது. ஆங்கிலத்தில் இது Hospice எனப்படுகிறது.

நமது மறைமாவட்டத்திலிருந்து முறைப்படியாக திண்டிவனம் முப்பணிக் கழகம் மற்றும் திருவனந்தபுரத்தில் குறவன்கோணம் சென்று முறையாக இறையியல் கற்றுத் தேர்ந்த வேதியர்களை மறைமாவட்ட மறைப்பணிகளுக்காக பயன்படுத்தத் துவங்கினார். இவர்கள் இறையியல் பயிற்சி பெற்ற பின்னரும் அவர்களுடைய பங்கு ஆலயங்களில் உபதேசியாராக பணிபுரிந்து வந்தனர். அவர்களது பணிகளை சீர்படுத்தி அவர்களுக்கு என்று பயணச் செலவாக சிறு தொகையும் கொடுத்தார். இவர்கள் அனைவரையும் சீர்படுத்தி மறைமாவட்ட நற்செய்தி அறிவிப்புப் பணிகளுக்காக பயன்படுத்தத் துவங்கினார். இவர்களுள் மரியாகிரியைச் சார்ந்த திரு. ஏசுதாஸ், நடைக்காவைச் சார்ந்த திரு. டேவிட், பாலவிளையைச் சார்ந்த திரு. சத்தியநேசன் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

மேலும் மறைபணிக்காக ஆர்வம் கொண்ட பலரையும் இக்குழுவினில் சேர்த்து மறைப்பணி செய்யும் ஆர்வத்தை தூண்டினார். இவர்கள் புதிய மறைப்பணித்தலங்கள் உருவாக பேருதவியாக இருந்தனர். பெரிய பங்குகள் சிறிய மறைப்பணித்தலங்களை தத்தெடுக்கும் முறைகளையும் அறிமுகப்படுத்தினார்.

குருக்களோடு அவர் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். திடீர் வருகையால் அடிக்கடி குருக்கள் இல்லத்தில் அவர்களை சந்தித்து அவர்களது நிறை குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வந்தார். நோயால் வாடும் குருக்களை சந்தித்து மறைமாவட்ட வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ உதவிகள் வழங்கவும் நேரடியாக சென்று நலம் விசாரிக்கும் வழக்கத்தையும் செயல்படுத்தியிருந்தார். குருக்கள் ஏதேனும் பிரச்சனைகளுக்கு உட்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது அவர்களை தனியாக சந்தித்து அவர்களுக்குத் தேவையான அன்பையும், தந்தையின் அரவணைப்பையும்  பாச உணர்வையும் காண்பித்து வந்தார்.

குருக்களும் இறைமக்களும் ஆயரோடு உறவிலும், ஒன்றித்த செயல்களிலும் நிலைத்திருந்தனர். அதற்கு மிகப்பெரிய ஒரு தெளிவு தான் மலங்கரை கத்தோலிக்க சங்கமம் மறைமாவட்டத்தில் வைத்து நடைபெற்ற போது ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ற முறையில் அதிகமாக ஒத்துழைப்புக் கொடுத்து அந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு சான்று பகர்ந்தனர். இவ்வாறு கருத்து வேறுபாடுகள் பல இருந்தன என்றாலும் மறைமாவட்ட ஒன்றிணைந்த வளர்ச்சி பணிகள் செய்கின்ற போது அனைத்து குருக்களும் அருட்கன்னியர்களும் அனைத்து இறைமக்களும் மறைமாவட்டம் வளர வேண்டும் என்ற நிலையில் சிறப்பாக இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதற்கெல்லாம் காரணம் ஆயர்கள் அவர்களின் தந்தைக்குரிய பாச உணர்வே காரணம் ஆகும்.

இவ்வளவு நற்பணிகளை நம் மக்களுக்கு வழங்கிய ஆயருக்கு நாம் செய்த நன்றிக் கடன் என்பது பெரிதாகும். நன்றி அறிவிப்பு மற்றும் பிரிவு உபசார விழாவை வெகு விமரிசையாக மறைமாவட்ட அளவில் அனைவராலும் நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுத்து கொண்டாடப்பட்டது. பங்குகளிலிருந்து பிரதிநிதிகளாக இறைமக்களும் அருட்தந்தையர்களும் அருட்கன்னியர்களும் இணைந்து ஆயரை வழியனுப்பி பத்தனந்திட்டை மறைமாவட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அடிக்கடி நம் மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளின் திருவிழாக்கள், திருமணங்கள், குருத்துவ அருட்பொழிவுகள், அடக்க நிகழ்வுகள் மற்றும் தனி நபர் வீடுகளில் நடைபெறக்கூடிய முக்கிய நிகழ்வுகளுக்கு அருட்தந்தையர்கள் ஆயரை அழைத்து அவரும் பெருமகிழ்ச்சியுடன் வர உறவில் நிலைத்து நிற்கின்றோம். இப்போதும் மார்த்தாண்டம் மறைமாவட்டத்தோடு தான் கொண்டிருக்கின்ற அன்பையும் பழைய அனுபவங்களையும் அடிக்கடி எடுத்துக் கூறி சந்திப்பவரிடம் உரையாடுவது வழக்கமாக உள்ளது.

ஆயிரம் அவர்களுடைய குருத்துவ மற்றும் ஆயிரம் அருள் பணி ஜுபிலி விழாக்களை மறை மாவட்ட அளவில் நாமும் டிசம்பர் 10ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு பேராலயத்தில் வைத்து கொண்டாடினோம்.

 

மறைமாவட்டத்தில் ஜூபிலி விழா

 

5.        நாகர்கோவிலில் மறைபணிகள்

 

மார்த்தாண்டம் மறைமாவட்டத்தில் மறைப் பணிகளை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். 1. களியக்காவிளை பகுதியில் சி எம் ஐ துறவு சமூக அருட்தந்தையர்களும், பிரான்சிஸ்கன் மிஷனரி சகோதரர்களும் உருவாக்கிய தலத்திருஅவைகள். 2. மார்த்தாண்டம் மற்றும் பனச்சமூடு பகுதிகளில் மோன்சிஞ்ஞோர் ஜோசப் குழிஞ்ஞாலில் மற்றும் மரியாவின் புதல்வியர் துறவு சமூகத்தைச் சார்ந்த அருட்சகோதரிகளும் இணைந்து துவங்கிய தலத்திருஅவைகள், 3. அருட்தந்தை பிலிப் செம்பகசேரி மற்றும் அருட்தந்தை மாத்யூ கடகம்பள்ளி மற்றும் பலர் துவங்கிய தலத்திருஅவைகள். 4. நாகர்கோவில் பகுதிகளில் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் ஆரம்பித்த தலத்திருஅவைகள்.

ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேமின்  தீவிர மற்றும் முக்கிய மறைப்பணித்தலமாக நாகர்கோவில் பகுதி அமைந்திருந்தது. எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சுகாதார நிலையங்கள் வழியாக மறைப்பணித்தலங்களை உருவாக்க அவர் முனைந்தார். ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் அவர்களும்  ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் துவங்கிய பணிகள் அனைத்தையும் தொடர்ந்திட எவ்வித தயக்கவும் காட்டவில்லை. ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேமின் அயரா உழைப்பால் உருவான அனைத்து பகுதிகளையும் தனதாக்கிக் கொண்டு அவற்றை வளர்ச்சியின் பாதைக்கு வழிநடத்தினார்.

கிறிஸ்துவிளாகம்

நாகர்கோயிலின் முக்கியப்பகுதியான வடசேரிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள மேலத்தெருக்கரைப் பகுதியில் டவுண் இரயில் நிலையத்துக்கு மிக அருகாமையில் கிறிஸ்துவிளாகம் என்னும் மறைப்பணித்தளம் அமைந்துள்ளது. மார் எஃப்ரேம் மைதானத்தில் கல்லறைத் தோட்டம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் சிறிய கட்டிடம் அமைக்கப்பட்டு ஆலய வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இறைமக்களுக்கு சரியான ஆலயம் இல்லாத சூழலை கருத்திற்கொண்டு ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் அவர்கள் புதிய ஆலயக் கட்டிடம் ஒன்று அமைப்பதற்கு முன் வந்தார். அரசிடமிருந்து ஆலயத்திற்காக அனுமதி கிடைக்காத சூழலில் பொருள்கள் காப்பக கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது. நாளடைவில் அருட்தந்தை பீட்டர் அவர்களால் ஆலய வடிவில் கோபுரத்துடன் கம்பீரமாக, தற்போது திருத்தலமாக செயல்பட்டு வருகிறது.

கிறிஸ்துவிளாகம் ஆலயம்

இவ்வாலயத்திற்கு நிரந்தர வைப்புத் தொகை போன்ற பல்வேறு விதமான மற்று உதவிகளையும் அவர்கள் செய்திருக்கின்றார்கள். குருக்கள் இல்லம் ஒன்றும் இவரது காலத்திலேயே அமைக்கப்பட்டது.

 

பார்வதிபுரம்

250 ஆண்டுகளுக்கு பழமையான வரலாற்றைக் கொண்ட பார்வதிபுரம் ஆலயமானது மிகச் சிறிய ஓலைக் குடிசையாக அமைக்கப்பட்டிருந்தது.

 

பார்வதிபுரம் ஆலயம்

 

ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் ஆயர் அவர்களுடைய காலத்தில் ஓலைக்குடிசை மாற்றப்பட்டு, குறைவான அந்நிலப்பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டு கீழ்தளத்தில் ஆலயமும் மேல்தளத்தில் குருக்கள் இல்லமும் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. தொடர்ந்து பங்கு மக்களின் முயற்சியால் கோபுரம் அமைக்கப்பட்டு ஆலய வடிவில் தேசிய நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது.

பெருவிளை

பெருவிளையில் புனித தேவசகாயம் கட்டி வைக்கப்பட்டிருந்த புண்ணிய பூமி அமைந்துள்ள நிலம் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் கையகப்படுத்தப்பட்டு சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.

நான்கு அதிசயங்கள் இங்கே நடைபெற்றன.

1. தூய தேவசகாயம் கட்டப்பட்டிருந்த பட்ட மரம் தளிர்த்து நிழல் கொடுத்தது.

2. தளிர்த்த வேப்பமர இலைகள் ஊர் மக்களின் காலரா நோய்க்கு மருந்தாகியது.

3. தூய தேவசகாயம் இவ்விடத்தில் வைத்து திருக்குடும்பக் காட்சி கண்டார்.

4. தூய தேவசகாயத்தின் இறைவேண்டலால் ஆராச்சாருக்கு குழந்தை வரம் கிடைத்தது.

ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் இந்நிலப்பகுதியை பராமரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளச் செய்தார். சமூக சேவை நிறுவனத்தின் கிளை அலுவலக கட்டிடம் ஒன்றை அங்கே கட்டச் செய்து இத்திருத்தலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டார். தற்போது இத்திருத்தலம் பலர் வந்து ஜெபிக்கின்ற ஓர் புண்ணியத் தலமாக திகழ்ந்து வருகிறது.

 

பெருவிளை தேவசகாயம் கெபி

 

தேனிக்குளம் எஸ்டேட்

தேனிக்குளம் பகுதியில் அமைந்துள்ள எஸ்டேட்டினுடைய வழிப் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது. இவரது காலத்தில் வழிப் பிரச்சனைக்கு தீர்வு காணும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாமே தோல்வியை தழுவின. இருப்பினும் இந்நிலப்பகுதியோடு இணைந்த பகுதிகளை வாங்குவதற்கு இவரால் முடிந்தது. அடிக்கடி இவ்விடத்திற்கு வந்து தேங்காய் போன்ற விளைபொருட்களை ஆயரகத்திற்கு நேரடியாக கொண்டு வருமாறு கூறியிருந்தார்.

தேனிக்குளம் ஆலயம்

தேனிக்குளத்தின் குளக்கரையில் ஓலைக் குடிசையில் தேனிக்குளம் தேவமாதா ஆலயமானது செயல்பட்டு வந்தது. பலமுறை பராமரிப்பு பணிகள் செய்த பின்னரும் உடைப்பு ஏற்பட்டவாறே இருந்தன.

தேனிக்குளம் ஆலயம்

 

இவ்விறைமக்களின் ஆன்மீக நிலையை உணர்ந்தவாறு நல்ல ஒரு வழிபாட்டிடம் அமைய வேண்டும் என்பதற்காக களியங்காடு இறச்சகுளம் நெடுஞ்சாலையின் அருகிலேயே புதிதாக இடம் வாங்கப்பட்டது. சாலை மட்டத்திற்கு நிலப்பகுதி உயர்த்தப்பட்டு மண்ணால் நிரப்பப்பட்டது.  இறைமக்களுக்காக புது ஆலயம் ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டது.

நாவல்காடு

நாவல்காடு ஆலய மக்களோடு ஆயருக்கும் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் ஆயரோடு இறைமக்களுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. நாவல்காட்டில் சிறுவன் ஒருவன் தன்னை தாத்தா என அழைத்த நிகழ்வை எப்போதும் அவர் நினைவு கூர்வார். வளர்ச்சிப் பணிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்தார்.

 

நாவல்காடு ஆலயம்

ஆலயத்தின் பக்கவாட்டுப் பகுதியில் அமைந்துள்ள நிலத்தை மக்களுக்காக வாங்கி கொடுக்கவும் செய்தார்.

            பூதப்பாண்டி

பூதப்பாண்டியில் திரு. கிறிஸ்டல் ஜான் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட வீட்டில் பராமரிப்புப் பணிகள் செய்து குருக்களை தங்க வைக்கவும் ஆலயத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் செய்யவும் நல்மனம் காட்டினார். துவரங்காடு ஆரல்வாய்மொழி நெடுஞ்சாலையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

மத்தியாஸ்நகர்

மத்தியாஸ்நகர் என்ற இடத்தில் அருட்தந்தை கிறிஸ்பின் ஆச்சாரியா அவர்களின் தலைமையில் அருட்சகோதரி சிசிலி ஜாண் அவர்களின் உதவியோடு புதிய மறைப்பணித்தலம் கண்டுபிடிக்கப்பட்டது. அருட்சகோதரி சிசிலி ஜாண் அவர்களது அயராத உழைப்பால் வளர்ந்து வந்த இறை மக்கள் சமூகத்திற்காக மரங்கள் இல்லாத காலியான  தோட்டமானது வாங்கப்பட்டது.

இத்தோட்டத்தின் நுழைவு வாயிலருகே சிறிய கட்டிடமொன்று அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வழிபட வசதி உருவாக்கினார். மற்று பகுதிகளில் மறைமாவட்டத்திலிருந்து நேரடியாக விவசாயம் செய்ய வரைமுறை வகுத்தார். அன்று அருட்தந்தை ஜெரால்டு அவர்களின் கண்காணிப்பில் மாமரங்களும். வாழை மரங்களும் நடப்பட்டன. மரச்சீனி போன்றவை பயிரிடப்பட்டன. இன்று இந்நிலப்பகுதி அழகிய மாந்தோப்பாக காட்சி தருகிறது.

 

ஞானதாசபுரம்

ஞானதாசபுரம் என்ற இடத்தில் அருட்தந்தை கிறிஸ்பின் மற்றும் அருட்சகோதரி சிசிலி ஜாண் அவர்களுடைய கடின உழைப்புடனும், பேருதவியுடனும் இறைச் சமூகமானது உருவாக்கப்பட்டது. இவர்களுக்கென்று புதிய இடம் வாங்கப்பட்டு அவர்கள் இறைவனை வழிபடுவதற்கு என்று ஆலயக் கட்டிடமும் அமைக்கப்பட்டது.

செட்டிகுளம்

செட்டிக்குளம் ஓடைக்கரை பகுதியில் அமைந்திருந்த ஆலயத்தில் அங்குள்ள மக்கள் வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தி வந்தனர். இவ்விடம் தூய்மையற்ற சூழலில் சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் அமைந்திருந்தது. இவர்களுக்கென்று ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பீச்ரோடு பகுதியில் புதிய இடம் வாங்கப்பட்டு அவர்களுக்காக புதிய ஆலயமும், மற்று பயன்பாட்டுக்காக மூன்று அறைகள் கொண்ட ஒரு கட்டிடமும் கட்டிக் கொடுக்கப்பட்டது.

மந்தாரம் புதூர்

மந்தாரம் புதூரில் மக்கள் வழிபட சிறிய ஆலயம் சிறிதாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இச்சூழலில் மக்களுக்காக சமூக சேவை நிறுவனத்தின் பெயரில் ஒரு கட்டிடத்தை ஆலயமாக அமைத்து மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது. பின்னர் பலிபீடம் அமைக்கப்பட்டு ஆலயமாக மாற்றப்பட்டது. இப்பகுதியில் உள்ள நிலங்களை பராமரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

 

கன்னியாகுமரி

பேராயர் மார் இவானியோஸ், பேராயர் மார் கிரிகோரியோஸ் மற்றும் ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் ஆகிய புண்ணிய பெருந்தகையோரின் வாழ்விடமாக அமைந்திருந்த மலங்கரை பவன் வளாகத்தை வளப்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து செழிப்புள்ளதாக மாற்றிய பெருமை ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் அவர்களுக்கே உரியது. கன்னியாகுமரியில் இப்புண்ணிய பூமியில் தான் புனித எஃப்ரேம் இளங்குருத்துவ பயிற்சியகம் குழித்துறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு ஒரு சில ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. குருத்துவ பயிற்சியக மானவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய அனுபவமாகவும், அங்கு களப்பணி புரிந்த அருட்சகோதரர்களுக்கு இலாறன்ஸ் மார் எஃப்ரேம் ஆயரின் மறைப்பணி வாழ்வை அறிந்திடவும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. மேலும் கோல்பிங் இயக்கத்தினருக்கான தங்கும் வசதி கொண்ட கட்டிடம் அமைக்க அனுமதி வழங்கினார். பயன்படுத்தப்படாமல் இருந்த இவ்விடத்தில் மார் இவானியோஸ் அனிமேஷன் சென்டர் என்ற பெரிய கட்டிடத்தின் முதல் தளத்தையும் அமைக்கச் செய்தார்.

குமாரபுரம்

குமாரபுரம் மக்களுக்காக சிறிய ஒரு ஓலைக் குடிசையில் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கன்னியாகுமரி காஷ்மீர் நான்குவழிச்சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் ஆலயத்திற்கென்று புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் இது ஆலயமாக கோபுரத்துடன் வடிவமைக்கப்பட்டது. ஆலயமாகவே இதுவும் காட்சியளிக்கிறது.

முக்கடல்

முக்கடல் சாந்தி ஆசிரமம் இருந்த பகுதியில் கிறிஸ்பின் ஆச்சாரியா அவர்களுடைய பணிகளுக்கு எல்லாவித ஒத்துழைப்பும் வழங்கினார். அடிக்கடி அவ்விடம் சென்று ஆசிரமவாசிகளோடும் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களோடும் உரையாடி வந்தார். முக்கடல் என்ற ஒரு பங்குத் தலம் ஆசிரமத்திலேயே செயல்பட்ட போது அடிக்கடி அம்மக்களையும் சந்தித்து  ஆசி வழங்கினார்.

இவை அனைத்தும் நாகர்கோவில் பகுதியில் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் அவர்கள் செய்த மறைப்பணிகள் ஆகும். பல்வேறு வெளிப்படையாக காண முடியாத பலப் பல பணிகள் ஆங்காங்கே அவரால் செய்யப்பட்டன. பல்வேறு நபர்களுக்கு மருத்துவ உதவிகள், ஏழைப்பெண்களுக்கு திருமண உதவிகள், வீடில்லாதோருக்கு வீடு கட்டுவதற்கான உதவிகள் என அவர் உதவிகளை வழங்கி செயல்படுத்தினார்.

 

6.        இறை வேண்டலில் ஆர்வம்

 

பட்டம் புனித அலோசியஸ் அருள்பணித்துவ இளையோர் பயிற்சியகம் தற்போதைய காதோலிக்க மையம் அமைந்துள்ள இடத்தில் செயல்பட்டு வந்தது. துவக்கக் காலங்களில் முதலாம் ஆண்டு பயிற்சி மாணவர்களுக்கு எவ்வாறு தியானிப்பது என்ற பயிற்சி வழங்கி வந்தனர். அன்று எங்கள் அதிபராக இருந்த அருட்தந்தை சேடியத்து அவர்களும், இணை அதிபராக இருந்த ஜாண். ஜி அவர்களும் ஒவ்வொரு நாளும் மாறி மாறி வந்து தியானிப்பது எப்படி என்ற பயிற்சி வழங்கி வந்தனர்.

அதிபர் தந்தை அவர்கள் பன்னாட்டு திருஅவைகளுக்கு இடையேயான உரையாடல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் செல்வது வழக்கம். குறிப்பாக கிழக்குத் திருஅவைகள் அதிகமாக செயல்படுகின்ற மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய கூட்டங்கள் நிகழ்வதுண்டு. அதிபர் தந்தை அவர்கள் இத்தகைய ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது அருட்தந்தை ஜான் கல்லூர் அவர்கள் அமெரிக்க மலங்கரை வாழ் மக்களுக்கு நற்பணியாற்றி விடுமுறைக்காக பட்டம் உயர் மறைமாவட்ட ஆயரகத்தில் தங்கியிருந்தார். அருட்தந்தை சேடியத்து இல்லாத போது இவரே எங்களுக்காக தியான உரைகள் நடத்தி வழிகாட்டுதல் வழங்க வந்திருந்தார். குறிப்பிட்ட நேரத்திலேயே நாங்கள் அமர்ந்திருக்கும் வேளையில் அவரது உரையை ஆரம்பிப்பார். தூக்கம் எங்களை வாட்டிக் கொண்டே இருக்கும். ஆனால் அருட்தந்தை ஜான் கல்லூர் அவர்கள் தியான உரை ஆரம்பித்தவுடன் தனது கண்களை அடைத்தவாறு இறைவனின் உடன் இருப்பை உணர்ந்து இதயத்தின் ஆழத்திலிருந்து உருவான நல்ல இறைக் கருத்துக்களை எங்களுக்காக பகிர்ந்தளிப்பார். துவக்கக் காலங்களில் எனக்கு அதிகமாக புரிவதில்லை. ஆனால் என்னுடைய வகுப்புத் தோழர்கள் ஒவ்வொரு நாளும் காலை உணவு முடிந்த பின்னர் அருட்தந்தை ஜான் கல்லூர் அவர்கள் கூறிய தியான உரைகளின் முக்கிய கருத்துகளை பரிமாறிக் கொள்கின்ற போது இவரது தியான உரைகளில் எவ்வளவு ஆழமான கருத்துக்கள் ஆழ்ந்து கிடக்கின்றன என்பதை பற்றிய தேடல் என் மனதிற்குள் வந்தது. இவ்வாறாக ஜெப உணர்வில் வேரூன்றியவரால் மட்டுமே தியான உரைகளிலும் இறைக் கருத்துக்களை பிறரோடு ஆழமாக பகிர்ந்து கொள்ள முடியும்.

ஆயரகத்தில் அறையில் இருந்து வெளியே வருகின்ற போது எப்போதும் சிற்றாலயத்தில் வந்து குறைந்தது 2 நிமிடங்களாவது ஜெபத்தில் மூழ்கியிருந்து பின்னர் வெளிவருவது அவரது வழக்கம். மறைமாவட்டத்தில் அவரால் உருவாக்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு எல்லாம் அடிப்படையாக அமைந்தது அவரது ஜெப வாழ்வு என்பதே ஆகும்.

ஆலயங்களுக்கு செல்கின்றபோதெல்லாம் பல்வேறு விதமான கோரிக்கைகளை ஆலய மக்கள் அவரிடம் எடுத்துரைப்பர். கேட்ட கோரிக்கைகளை இறைவனின் முன்னிலையில் சமர்ப்பித்து ஜெப உணர்வோடு எங்களோடு கருத்துக்களை பரிமாறிக் கொள்வார். கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டியவை என்ற தீர்மானத்தை ஒவ்வொரு முறையும் ஆழ்ந்த ஜெபத்திற்கு பின்னர் மட்டுமே எங்களிடம் பகிர்ந்து கொள்வார்.

குருத்துவ அருட்பொழிவு, திருத்தொண்டர் அருட்பொழிவு மற்றும் துறவறப் பட்டங்கள் வழங்குகின்ற நாளுக்கு முந்தைய நாளில் நீண்ட நேரம் ஜெபத்தில் நிலைத்திருப்பார். திருவழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்ற அன்றைய தினம் உபவாசம் இருந்து அருள்பொழிவு பெறக்கூடிய நபருக்காக ஜெபிப்பது அவரது வழக்கமாக இருந்தது.

திருவழிபாட்டு நிகழ்வுகளில் எந்தவிதமான மாற்றங்களோ உட்புகுத்தல்களோ வழங்க அவர் முன்வரவில்லை. ஏதேனும் மாற்றங்கள் வருகின்ற போது சரியான நேரத்தில் தலையிட்டு அதனை தடை செய்திருந்தார். திருவழிபாட்டு காரியங்கள் ஒவ்வொன்றிற்கும் அதனதன் முக்கியத்துவங்களை சரியான நேரத்தில் வழங்கி வந்தார். தமிழ் மொழியில் திருப்பலி நூல் போன்ற ஏராளமான திருவழிபாட்டு நூல்களை தமிழாக்கம் செய்வதற்கு அருட்தந்தை ஜார்ஜ் அவர்களை ஊக்கப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரச் செய்தார். இறையியல் பற்றிய ஐயங்கள் திருவழிபாட்டுப் பாடல்களில் வருகின்ற போது அதற்கான ஆலோசனைக் குழுமங்களை அமைத்து இறையியல் வல்லுநர்களை கலந்தாலோசித்து நல்ல முடிவுகளை அறிவித்து வந்தார். பரலோகத்தில் இருக்கிற ....... என்ற செபத்தை பற்றிய கருத்த சர்ச்சைகள் வந்த போது அவரே நேரடியாக அருட்தந்தை பிலிப் செம்பகசேரி அவர்களை சந்தித்து கருத்து கேட்டு வந்தார். ஆரத்தி எடுத்தல் என்ற நம் தமிழ் நாட்டு வழக்கத்தை நம் ஆலய நிகழ்வுகளில் திருவழிபாட்டுக்கு முந்தைய நேரங்களில் செய்து காட்டும் வழிமுறையைக் கொண்டு வந்தார்.

கன்னியர் இல்லங்களிலும் ஆலயங்களிலும் சாதாரண சந்திப்புக்காக செல்கின்ற போது முதன் முதலில் சிற்றாலயத்திற்கு உள்ளே சென்று நற்கருணை நாதர் முன்னில் சென்று ஜெபிப்பது அவரது வழக்கம். அவரது வாகனத்திலேயே அன்றாட பாசுர மாலை ஜெபிக்க முடியாத தருணத்தில் பயணத்தின் போதே ஜெபிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து வைத்திருந்தார். சொல்லக்கூடிய ஜெபங்கள் ஒவ்வொன்றையும் நிதானமாக நடத்தி ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் ஜெபித்து வந்தார்.

ஆயரின் செபங்களும் மரையுரைகளும் ஏறக்குறைய பேராயர் மார் கிரிகோரியோஸ் அவர்களுடைய இராகத்தை ஒத்த ஜெபங்களாக உள்ளன. அவரது மறையுரைகள் தீவிர இறையியல் சிந்தனைகளை உள்ளடக்கியதாக இருக்கவில்லை. ஆனால் மிகவும் எளிதான கருத்துக்களை எளியோரும் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் இலாவண்யமாக எடுத்துரைத்து வந்தார். அவர் பேசுகின்ற ஒவ்வொரு பேச்சுக்களும் என்றும் நமது மனதில் நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக குருத்துவ அருட்பொழிவு காலங்களில் அவரது மறையுரைகளில் முக்கியமாக கூறும் கருத்து என்னவென்றால், குருத்துவம் என்பது மண்பாண்டங்களில் வைக்கப்பட்ட மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும். என்றும் இதனை பாதுகாக்க வேண்டியது திருஅவையினர் ஒவ்வொருவருடைய கடமை. எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இது கீழே விழுந்து உடையலாம்.” என இலாவண்ணியமாக எளிதாக எடுத்துரைப்பார். தமிழும் மலையாளமும் கலந்த மொழிகளில் அவர் எடுத்துரைக்கின்ற போது மக்கள் அப்படியே கேட்டு உட்கார்ந்திருப்பர்.

 

7.        தந்தையாக அரவணைப்பவர்

 

எப்போதும் சொந்த தகப்பனாரைப் போன்று அன்பு கொண்டவர். தந்தைக்குரிய அரவணைப்பைத் தந்தவர். மாலை நேரங்களில் பல நாட்களிலும் நாங்கள் வெளியே சென்று சாப்பிடச் செல்வது வழக்கம். ஆனால் ஆயர் அவர்கள் தாமதமாக உணவறைக்கு வந்தாலும் அருட்கன்னியர்களிடமோ அல்லது அவருக்கு உதவி செய்யக்கூடிய சிறுவனிடமோ யார் யாரெல்லாம் சாப்பிட்டார்கள் என எல்லாவற்றையும் கேட்டறிவார். சாப்பிடாத பல நாட்கள் ஏன் சாப்பிடவில்லை என அறிவுரை கூறி தந்தைக்குரிய பாசம் காட்டுவார்.

ஆயர் அவர்களோடு மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய அரிய வாய்ப்புகள் கிடைத்தன. அப்போது தான் ஒரு தந்தையின் பாசத்தையும் அரவணைப்பையும் என்னால் அதிகமாக உணர்ந்து கொள்ள முடிந்தது. அன்று விமானம் வழக்கத்திற்கு மாறாக உயர்வதும் தாழ்வதுமாக பயப்படுத்தக்கூடிய சூழலில் பறந்து கொண்டிருந்தது. பதற்றத்தோடு காணப்பட்ட என்னை ஆயர் அவர்கள் மிகுந்த அன்போடு கரங்களை பற்றிக் கொண்டு பயப்பட வேண்டாம், ஒன்றுமில்லை, தைரியமாக இருந்து கொள் என்று அவர் அரவணைத்தார்.

வேளாங்கண்ணி திருத்தலத்தில் திருநிகழ்வு ஒன்றுக்காக நாங்கள் இணைந்து பயணித்த போது சற்று ஓய்வெடுக்கும் நோக்குடன் வழியோரத்தில் அமைந்திருந்த ஒரு ஆலயத்தில் இறங்கினோம். பங்குத்தந்தையை அழைப்பு மணி மூலம் அழைத்து அவரோடு பேசிப் பழகினோம். பங்குத்தந்தையும் ஆயரை இன்முகத்தோடு வரவேற்றார். சற்று நேரத்தில் ஊர் மக்கள் பலர் அங்கு வந்து கூடினர். பாலர் பள்ளியைச் சார்ந்த மாணவியர்களும் அங்கு வந்து கூடி ஆண்டவரே எங்களை ஆசீர்வதியுங்கள் என்று முழங்காலில் நின்றனர். இப்பகுதியினர் ஆயர்களை ஆண்டவரே என அழைப்பது வழக்கம். நம் ஆயரும் முகமலர்ச்சியோடு அவருடன் பேசி மகிழ்ந்து ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்கினார். ஆயரின் வாழ்வில் இது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என பல முறை கூறினார்.

 

 

குருக்கள் விபத்துகளில் சிக்குகின்ற போது உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து சென்று அவர்களுக்கு தேவையான முதலுதவி செய்தல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல், தேவைக்கேற்ப வழக்கு பதிய வேண்டிய இடத்தில் பதியச் செய்தல் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமாக  தீர்வு காணல் போன்ற பணிகளை ஆயரகத்தினரே செய்து உதவ வேண்டும் என பணித்திருந்தார். பாதிக்கப்பட்ட நபர்களை நேரடியாகச் சென்று ஆறுதல் கூறி ஒரு தந்தையாக அரவணைத்தார். அருட்தந்தையர்களின் குடும்பங்களில் ஏதேனும் துயர் நிகழ்வுகள் நிகழ்கிறது என்றால் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று அவரை சந்தித்து நேரடியாக உதவிகள் செய்திட வழிவகை செய்திருந்தார்.

அருட்தந்தையர்கள் வழக்குகளில் சிக்குகின்ற போது முதலில் அவரை பாதுகாப்பாக சரியான ஆலோசகர்களின் பரிந்துரையால் வழிநடத்தி வந்தார். பாதிக்கப்பட்ட நபரை அரவணைத்து ஆறுதல் கூறினார். அவரை ஆயரகத்திலேயே தங்க வைத்திருந்தார். அதே நேரத்தில் விசாரணைக் குழு ஒன்று அமைத்து அவர்களது வழக்கின் உண்மை நிலையை அறிந்து கொண்டார். விசாரணையின் முடிவுகளுக்கு ஏற்ப அவர்களை அரவணைக்கவும் அதே நேரத்தில் சரியான தண்டனையை கொடுத்து தண்டிக்கவும் செய்திருந்தார்.

பல காலங்களிலும் சென்னை மற்றும் கோவா போன்ற தொலைதூரங்களுக்கு வாகனங்களில் அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆயர் அவர்களை தொடர்பு கொண்டு பயணத்திட்டத்தை தெரிவிக்கின்ற போது நீங்கள் பத்திரமாக சென்று வரவேண்டும்என்று கூறி வழியனுப்புவார். செல்லும் இடங்களில் தங்கும் வசதி ஏற்பாடு செய்தாகி விட்டதா என்று விசாரித்து கேட்டறிவார். ஒரு சில நேரங்களில் பயணப்படியும் தந்து அனுப்புவார்.

ஆயரகத்தில் தங்கியிருந்த அருட்தந்தையர்கள் ஒருபோதும் ஆயரகத்தில் உள்ள வாகனங்களை சொந்தமாக இயக்க அனுமதி தரப்படவில்லை. எப்போதும் பணியாளர்களை வைத்து மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதற்கு அவர் கூறிய விளக்கம் என்னவென்றால், ஆயரக அருட்தந்தையர்கள் செய்ய வேண்டிய பணிகளை வாகனம் ஓட்டிச் சென்று செய்கின்ற போது சரியான விதத்தில் செய்ய இயலாமல் போகலாம். அது மட்டுமல்ல பாதுகாப்பு கருதியும் ஓட்டுநரை வைத்து வாகனம் ஓட்ட வேண்டும். ஏதேனும் விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தன்னந்தனியாக அதனை சந்திப்பதை விட கூட்டாக செய்வது நல்லது என விளக்கம் அளித்து இருந்தார். அருட்தந்தை பிரேம்குமார் அவர்கள் மூன்று கல்லூரிகளின் தாளாளராக செயல்பட்ட போது அவரையும் அழைத்து நீங்கள் தனியாக வாகனம் ஓட்டிச் செல்வது பாதுகாப்பற்றது என அறிவுரை வழங்கியிருந்தார். அவ்வாறே அவரும் புதிதாக ஓட்டுனர் ஒருவரை நியமித்திருந்தார். இவ்வாறு பலரையும் அழைத்து பாதுகாப்பு குறித்து பேசியிருக்கின்றார்.

 

ஜூபிலி கொண்டாட்டம்

மூத்த குருக்கள் ஜுபிலி விழா கொண்டாடுகின்ற போது அவர்களை தனிப்பட்ட முறையில் ஆயரகத்தில் அழைத்து வந்து விழா எடுத்து சிறப்பித்து அவர்கள் செய்த பணிகளை கூறி சிறப்பாக பாராட்டி வந்தார். ஆயரகத்து அருட்தந்தையர்களின் பெயர் விழாக்களையும் ஜூபிலி விழாக்களையும் தனிப்பட்ட முறையில் ஆயரகத்தில் வைத்து கொண்டாடினார்.

 

நடைக்காவு அருட்கன்னியர்களுடன்

 

அவ்வாறு அருட்கன்னியர்களின் பெயர் விழாவின் போதும் அவர்களை அழைத்து பாராட்டி வாழ்த்தினார். அனைத்து துறவு சமூக அருட்கன்னியர்களும் ஆயரை அடிக்கடி சந்திக்கவும் அவர்களது நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கவும் செய்து வந்தனர். அருட்கன்னியர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் அடிக்கடி நடத்தப்பட்டன.

 

பயிற்சி வகுப்புகள்

 

அருட்தந்தையர்களினுடைய பெயர் விழா மற்றும் ஜூபிலி விழா போன்ற சிறப்பு திருநிகழ்வுகள் வருகின்ற போதும் முக்கிய மேடைப் பேச்சுக்களிலும்  அடிக்கடி அருட்தந்தையர்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடையோரைப் பாராட்டி வந்தார். பொதுநிலையினரையும் அருட்கன்னியர்களையும் இவ்வாறே அவர்களது நன்மைகளை எடுத்துக் கூறி பாராட்டவும் செய்தார். அரசு மற்றும் அரசியல் சார்ந்து பொதுநிலையினரின் உயர் பதவி மற்றும் உயர் பொறுப்பு பெறுபவர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து கௌரவிக்கவும் செய்தார்.

குருத்துவ பயிற்சியகத்தில் சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய படிப்பின் இறுதியில் அல்லது இடைப்பட்ட பகுதியில் தேவைக்கேற்ப ஒவ்வொருவருடைய சூழலை புரிந்து கொண்டு படிப்பைத் தொடரவோ நிறுத்தவோ அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களைப் பகிர்ந்து வந்தார். படிப்பை நிறுத்துவோர் அவர்களுடைய முன்னோக்கிய வாழ்வு சீராக இயங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்த குற்றங்களை வெளிப்படையாகக் கூறாமல் இரகசியமாக வைத்திருந்தார். ஒரு சில நபர்கள் தங்களுடைய பயிற்சியின் இறுதிக் கட்டத்தில் பயிற்சியகத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல் வந்த போது அவர்கள் உயர் படிப்பு படிப்பதற்கும் அதன் வழியாக அவர்களுடைய வாழ்வு முன்னேற்றம் அடைவதற்குமான வழிமுறைகளை வகுத்திருந்தார். இவ்வாறு இன்று உயர் நிலையில் இருப்போர் பலர். அவர்களும் இன்று ஆயர் அவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர்.

அருட்தந்தையர்களைப் பற்றிய ஒரு சில புகார்கள் பங்கு மக்களிடமிருந்து வந்தபோது உடனடியாக அந்த நபரை அழைத்து ஆறுதல் கூறுவார். பின்னர் அதனுடைய உண்மை நிலை என்ன என்பதை பாதிக்கப்பட்ட அந்த நபரிடமே கேட்டு அறிந்து கொள்வார். புகாரின் உண்மைத் தன்மையும், பாதிக்கப்பட்டவரின் அறிக்கையும் சேர்த்து நல்ல தீர்மானத்திற்கு ஏற்ப அந்த நபருக்கு தேவையான ஆறுதல் வார்த்தைகளை கூறித் தேற்றுவார்.

அருட்கன்னியர்கள் மடத்தில் திடீர் சந்திப்புக்குச் செல்கின்ற போது வருந்தும் நிலையில் உள்ள அருட்கன்னியர்களை ஆயரகத்திற்கு வரச் செய்து அவர்களுடைய துயர அனுபவம் என்ன என்பதை கேட்டறிந்து தேற்றுவார். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நோயினால் பாதிக்கப்பட்டோ அல்லது ஏதேனும் துயர அனுபவங்கள் சந்தித்திருந்தால் தொலைதூரம் என்றும் பாராமல் அவ்விடம் சென்று நலம் விசாரிக்கவும் ஆறுதல் கூறவும் செய்து வந்தார்.

 

மரியாவின் புதல்வியர் துறவு சமூக அருட்கன்னியர்களுடன்

 

அடிக்கடி வாய்ப்பு கிடைக்கின்ற போது மூத்த குருக்களையும், மூத்த அருட்கன்னியர்களையும் மற்றும் முற்காலங்களில் திருஅவைக்காக பாடுபட்டு உழைத்த மூத்த பொதுநிலையினரையும் சந்திப்பதற்கு ஆர்வம் கொண்டிருந்தார். பத்தனந்திட்டைக்கு இடமாற்றலாகி சென்ற பின்னரும் அடிக்கடி நம் மறைமாவட்ட பொதுநிலையினரை பல வேளைகளிலும் சந்தித்து ஆசி கூறவும் ஆறுதல் கூறவும் செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு தந்தையாக ஒவ்வொருவரையும் தெளிவாக அறிந்திருந்தார். இந்த இடத்து இன்னாரென்று நாம் கூறினால் அவரைப் பற்றிய தற்போதைய தரவுகளை தெளிவாக அவரே எடுத்துக் கூறுவார். அந்த அளவுக்கு ஒவ்வொரு நபரையும் அவர் அறிந்து பாசம் காட்டி வந்தார்.

யாரென்று வித்தியாசம் பாராமல் அனைவரோடும் எளிதில் பழகுபவர். நீங்கள் நல்லா இருக்குமோ?” என்ற அவருடைய தந்தைக்குரிய பாசக் கேள்விக்கு எல்லோரும் அன்பு கலந்த பதிலை வழங்குவதே வழக்கம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் புன்சிரி ததும்பும் முகத்தோடு அனைவரையும் ஏற்றுக்கொண்டு நலம் விசாரிப்பதில் தெளிவாக இருந்தார்.

 

8.        துயருறுவோருக்கு ஆறுதல்

 

குரு ஒருவர் பிறரால் தாக்கப்பட்டு மிகுந்த வேதனை அனுபவித்தார். ஆயர் நேரடியாக சென்று அவரை கட்டியணைத்து ஆறுதல் வார்த்தைகள் கூறித் தேற்றினார். நோயுற்றோரை இரவும் பகலும் பாராது சந்திக்கவும் தேவையான உதவிகள் செய்யவும் நல்மனம் காட்டி வந்தார். ஒருமுறை தொலைதூரத்தில் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குருவானவர் ஒருவரை இரவோடு இரவாக அழைத்து வர வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பிய நிகழ்வு இப்போதும் நினைவுக்கு வருகிறது. குருவானவர்கள் யாரேனும் நோயினால் அவதிப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்களை ஆயரகத்திலிருந்தே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அன்புக் கட்டளை இருந்தது.

மேலும் சிலர் சில வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து அதனை பெற்றுக் கொள்ள பல்வேறு விதமான யுக்திகளை கையாண்டது உண்டு. பங்கு மக்களோடு இணைந்து கோரிக்கைகள் வைத்ததும் உண்டு. ஆயர் அவர்கள் அவரை தனியாக அழைத்து அவர்களது தேவைகளை கேட்டறிவார். பின்னர் தேவையான கலந்துரையாடல்களோடு தேவையான வழிகாட்டுதல்களை அந்நபருக்கு கூறுவார். சில நேரங்களில் அவர்களுடைய கோரிக்கைகளை அங்கீகரிக்கவும் செய்துள்ளார்.

ஆயரகத்தில் பணிபுரியும் பணியாளர்களை தன்னுடைய அலுவல்களில் இணைந்து பயணிப்பவர்கள் என்ற உயரிய எண்ணத்தைக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பணியாளரையும் அடிக்கடி சந்தித்து அவர்களுடைய தேவைகள், அவர்களுடைய குடும்பச் சூழல்கள் மற்றும் அவர்களின் வாழ்வில் சந்திக்கும் சவால்கள் இவற்றையெல்லாம் கேட்டறிந்து தகுந்த விதத்தில் தேவையான நேரத்தில் பல்வேறு பொருளாதார உதவிகளை செய்து வந்தார். பண்டிகைக் காலங்களில் பணியாளர்களுக்குத் தேவையான பரிசுகளை தாராள மனத்துடன் வழங்கி வந்தார். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் முன்னர் பணியாளர்கள் தனியாக ஆயரை சந்தித்து ஆசி பெறுவதோடு மட்டுமல்ல பரிசுகளையும் பெற்று மகிழ்ந்தனர். இவ்வாறு அவர்களது சோதனைகளிலும் வேதனைகளிலும் உடனிருந்து அவர்களை தேற்றினார். அவர்களது குடும்பத்து சூழல்களில் தேவைக்கேற்ப கலந்து கொண்டு ஆறுதல்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் செய்தார்.  அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகள் பல செய்யவும் அவர்களது பிள்ளைகளை உயர்கல்வி கற்க உதவவும், சிறு தொழில் தொடங்க தேவையான உதவிகள் செய்யவும் அவர்களுக்கு வீடு கட்ட உதவி புரியவும் செய்துள்ளார்.

திருஅவைக்காக பணிபுரிந்த பொதுநிலையினரை ஏற்றுக்கொள்ளவும் ஊக்கப்படுத்தவும் செய்து கொண்டிருந்தார். பல்வேறு பக்த இயக்கங்களை வழிநடத்திய மற்றும் முன்னின்று செயல்படுத்திய பொதுநிலையினரை அடிக்கடி வீடுகளில் சென்று சந்திக்கவும் ஊக்கப்படுத்தவும் செய்தார். அவர்களது முதுமைக் காலங்களில் அவர்களை சந்தித்து அவர்கள் செய்த நற்பணிகளை பாராட்டி நன்றியின் வார்த்தைகளையும் பேசி நினைவுபடுத்தினார். நம் மறைமாவட்டத்தில் செயல்பட்ட போது மட்டுமல்ல, மாற்றலாகி சென்ற பின்னரும், பணி ஓய்வு பெற்ற பின்னரும், இப்போதும் இப்பணியை அவரே முழு விருப்பத்துடன் செய்து வருகிறார். பல நபர்களையும் அடிக்கடி தொலைபேசியில் அழைத்து பேசி உரையாடியும் வருகிறார்.

 

9.        ஏழைகளில் இறைவனை கண்டவர்

 

பிற நபர்களுக்கு கொடுப்பதிலேயே இன்பம் கண்டவர் அவர். செல்கின்ற இடங்களில் எல்லாம் எளியோர்களுக்கு சிறிய உதவிகளை வழங்கி அனைவரது மனதையும் கவர்ந்தவர். திருவிழாக் காலங்களில் அல்லது மற்ற நிகழ்வுகளுக்காக ஆலயங்களுக்கு வருகின்றபோது குருக்களுக்கு உணவு சமைக்க உதவி புரிகின்ற நபர்களுக்கு சின்னஞ்சிறு பொருளாதார உதவிகளை வழங்குவார். அவர் வழங்கக்கூடிய இந்த சிறு உதவி அவர்களுக்கு பேருதவியாக அமைவதனால் எப்போதும் ஆயர் அவர்கள் வரமாட்டாரா? என்று எதிர்பார்த்து இருப்பர். திருவிழாக் காலங்களில் ஆயர் அவர்கள் வருகிறார் என்றாலே இத்தகைய சிறு தொழில் புரிகின்ற எளியோர்களுக்கு மனதிற்குள்ளே கொண்டாட்டமாக இருக்கும். கொடுப்பதில் சிறந்தவராக இருக்கின்றபடியால் யார் வந்து கேட்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் கொடுத்து உதவுவார். ஒருவேளை தன்னுடைய கைப்பையில் போதுமான பணம் இல்லாமல் இருக்கிறது என்றால் அவருடைய ஓட்டுநர் திரு ஜோய் அவர்களிடமிருந்து கேட்டு வாங்கி இத்தகைய உதவிகளை அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். ஒரு சில நபர்களை இனம் கண்டு அவர்களுக்கு சின்னஞ்சிறு உதவிகள் போதாது என்று அறிந்தால் ஆயரகத்திற்கு வாருங்கள் என்று சொல்லி அனுப்புவார்.

ஆயரகத்திற்கு யார் யாரெல்லாம் உதவிக்காக வருகிறார்களோ அவர்களுக்கு சிறிய உதவியேனும் கொடுத்து அனுப்புவதில் கட்டாயம் இருந்தது. குறிப்பாக கிறிஸ்துமஸ் காலகட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தன் கையாலேயே உதவிகளை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கி மகிழ்ந்தார். ஒரு சில நபர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு தாமதமாக வந்தாலும் அவர்களையும் இன்முகத்தோடு உணவு வழங்கி உதவிகள் செய்ததில் ஆர்வம் காட்டியிருந்தார். பெறுவதை விட கொடுப்பதில் இன்பம் அடைந்தார். இவ்வாறு ஏழைகளுக்கு இறைவனாகவே நமது ஆயர் செயல்பட்டிருந்தார்.

ஆயர் அவர்கள் பல்வேறு உதவிகளை பிறருக்குச் செய்தாலும் உயர்கல்விக்கு உதவி பெற்ற நபர்கள் ஏராளமானவர்கள் இவரது பெருங்கொடையால் முன்னேற்றத்திற்கு வந்துள்ளனர். கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக அருட்தந்தை ஒருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இந்த அருட்தந்தை உதவித்தொகை வாங்குபவர்களின் தொடர் படிப்பு எவ்வாறு அமைகிறது என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் கட்டாயமாக இருந்தார். கல்வி உதவித்தொகை இரண்டு விதங்களிலாக வழங்கப்பட்டு வந்தன. சின்னஞ்சிறு உதவியாக வருடத்திற்கு இருமுறை அவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு ஆயரகத்தில் வைத்து அவரால் சின்னஞ்சிறு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்துடன் வருடம் தோறும் பல நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான பேருதவிகளையும் அவர் வழங்கியுள்ளார். இவ்வாறு படித்து உயர்ந்த பலர் ஆயர் அவர்களை நேரடியாக சந்தித்து நன்றியும் கூறியுள்ளனர். இப்போதும் அவரை தங்கள் வாழ்வில் நன்றியோடு நினைவு கூறுகின்றனர்.

அண்மையில் நாவல்காடு பங்கில் அவரது உதவியால் படித்து உயர்ந்த சகோதரி ஒருவர் வெளிநாட்டில் பணிபுரிகின்ற போது தனது மகனது முதல் திருவிருந்து விழாவுக்கு அவரை அழைத்து நன்றி கூறி பேசிய தருணம் அனைவருடைய மனதையும் தொட்டது. கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு சலுகைத் தொகை வழங்குவதற்கும் மலங்கரை மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட தொகை வழங்குவதற்கும் வழிமுறைகளை உருவாக்கினார்.

வீடில்லாத நபர்களுக்கு மறைமாவட்டத்திலிருந்து பல்வேறு திட்டங்கள் மூலமாக வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கும் வீடுகளை பராமரிப்பதற்கும் பல உதவிகளை செய்து வந்தார்.

நலவாழ்வு பணியகத்தின் பொறுப்பாளரான அருட்தந்தை மரிய அற்புதம் அவர்களோடு இணைந்து மூன்று எம் அதாவது “Triple M” என்ற திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. மார்த்தாண்டம் மெடிக்கல் மிஷன் என்பது இதன் விரிவாக்கமாகும். நோயாளர்களுக்கு சரியான சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டிகளாக செயல்படுதல். ஒவ்வொருவருடைய நோய்க்குத் தகுந்தாற்போல  சரியான மருத்துவரை கண்டு சிகிச்சை மேற்கொள்ள உதவுதல், மற்றும் சூழலுக்கு ஏற்ப மருத்துவ உதவிகளையும் வழங்குதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய கொள்கையாகும்

 

10.   சிறந்த நிர்வாகி

 

ஆயர் அவர்களுடைய நிர்வாகத்தில் உடன் பயணித்தவர்கள் அவரிடமிருந்து பல்வேறு நிர்வாக நுணுக்கங்களை கற்று அறிந்தனர் என்பதனை எப்போதும் எடுத்துக் கூறுவர். முதலில் பேரருட்தந்தை ஜோசப் பிலாங்காலை அவர்கள் குருகுல முதல்வராக நியமிக்கப்பட்டார். அவர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னர் பேரருட்தந்தை மரியதாஸ் அவர்கள் குருகுல முதல்வராக இணைந்து பணியாற்றினார்.

அருட்தந்தை செலஸ்டின் அவர்கள் முதலில் மறைமாவட்ட தலைமைச் செயலராகவும் பின்னர் அருட்தந்தை எஸ் ஜாண் அவர்கள் தலைமைச் செயலராகவும் இணைந்து பணியாற்றினர். மறைமாவட்ட பொருளாளராக அருட்தந்தை எஸ் வர்கீஸ் அவர்களும் தொடர்ந்து அருட்தந்தை மரிய ஜாண் அவர்களும் பணியாற்றினர்.

அருட்தந்தை இறாபின்சன்,  அருட்தந்தை பத்றோஸ், அருட்தந்தை மரிய ஜாண் மற்றும் அருட்தந்தை ஜோஸ்பின் ராஜ் ஆகியோர் அவரது தனிச்செயலர்களாக அலுவலக மற்றும்ம் திருவழிபாட்டுப் பணிகளுக்கு உதவினர். தனிச்செயலர்களாக இருந்தவர்கள் அஃதுடன் இரண்டு அல்லது மூன்று பங்குகளிலும் பங்குத்தந்தையாக பணியாற்றினர்.

 

கூரியாவின் உறுதி மொழி ஏற்பு

அருட்சகோதரி அனிலா கிறிஸ்டி அவர்கள் திருஅவையின் திருச்சட்டங்களை கற்றறிந்து முனைவர் பட்டத்தோடு வந்தபோது, நமது மறைமாவட்ட ஆயரகத்திலும் அவரது பணிகளை செய்வதற்காக தலைமைச் செயலர் அலுவலகத்தில் பணியமர்த்தினார். அதைத் தொடர்ந்து இப்போதும் அருட்சகோதரிகள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் திரு வில்லியம் அவர்கள் ஆயரின் தனிச்செயலராகவும் மறைமாவட்ட கணக்குகளை நிர்வகிப்பவராகவும் பணியாற்றினார். இவர் மூன்று ஆயர்களின் காலத்தில் மறைமாவட்டப்பணிகளை நம்பிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் செய்து வந்தார். திரு. ஜோய் அவர்கள் ஆயரின் வாகன ஓட்டுனராக அன்று முதல் இன்று வரை நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனாக பணியாற்றி வருகிறார்.

மேலும் கிளீற்றஸ், சுகி, சாபு, நோபர்ட், இரதீஷ் மற்றும் மகேஷ் ஆகியோர் ஆயரகத்தின் பல துறைகளில் இணைந்து பணியாற்றினார்.

மரியாவின் புதல்வியர் துறவு சமூகத்தை சார்ந்த அருட்சகோதரிகள் ஆயரக உணவறை பொறுப்பாக பணிக்கப்பட்டிருந்தனர். அருட்சகோதரி. லூயிஸ் மரியா, அருட்சகோதரி. செலின்மேரி, லீனா மாத்யூ, அருட்சகோதரி. டோம்சி, அருட்சகோதரி. மரிய டொமினிக், அருட்சகோதரி. பிரான்சி, அருட்சகோதரி. ஜெரின் பிரான்சிஸ், அருட்சகோதரி. ட்ரீசா ஜார்ஜ், அருட்சகோதரி. திவ்யா ஜார்ஜ், அருட்சகோதரி. ஆல்ஃபி றோஸ் மற்றும் அருட்சகோதரி. நித்யா ஆகியோர் ஆயருக்கு பேருதவியாக பணியாற்றினர்.

மேலும் மார்த்தாண்டத்தைச் சார்ந்த திருமதி. சாந்தா மற்றும் சாந்த குமாரி அவர்கள் நீண்ட காலமாக தூய்மைப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

அருட்சகோதரிகள் ஒரு தாயாக சகோதரியாக குருத்துவ பயிற்சியக வாழ்வில் விளங்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் குருத்துவ பயிற்சியக சமையலறையில் உணவு தயாரிக்க பணியமர்த்தப்பட்டிருந்தனர். இத்தகைய அருட்சகோதரிகள் பணிச்சுமை காரணமாக பல்வேறு மன உளைச்சலுக்கு உட்பட்டிருந்தனர். அடிக்கடி அவர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி அருட்சகோதரர்களின் பயிற்சியில் எவ்வாறு அவர்கள் பங்கு கொண்டுள்ளார்கள் என்ற தன்னம்பிக்கையை வழங்கி வந்தார்.

இளங்குருத்துவ பயிற்சியக மாணவர்களை அடிக்கடி சந்தித்து அறிவுரை கூறவும், பயிற்சி வாழ்வில் இறைஉறவில் நிலைத்திருக்கவும் செய்தார். உயர் குருத்துவ பயிற்சியக மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கோடைகால விடுமுறைக்கு வருகின்ற போது ஆயரகத்தில் அவர்களை இணைந்து சந்திக்கவும் அவர்களது பயிற்சியக வாழ்வை குறைத்த நிகழ்வுகளை கேட்டு அறியவும் ஆர்வம் கொண்டிருந்தார்.

கிறிஸ்துமஸ் காலங்களில் குமரி மாவட்ட முக்கிய அரசு உயர் அதிகாரிகளுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் இனிப்பு வழங்கும் நிகழ்வினை செய்திருந்தார். மறைமாவட்ட நன்மைக்காக அரசியல் பிரமுகர்களை அடிக்கடி சந்திப்பதற்கு ஆர்வம் காட்டவும் ஒத்துழைப்பு நல்கவும் செய்தார். வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் மறைமாவட்ட நன்மைக்காக அவர்களிடம் கோரிக்கைகளை சமர்ப்பிக்கவும் செய்தார்.

 

திருமதி. கனிமொழி சந்திப்பு

 

ஒவ்வொரு காரியங்களையும் சிறப்பாக ஆய்ந்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி நிலையை கண்டறிந்த பின்னர் மட்டுமே அதனைப் பற்றி வெளிப்படுத்துவார்.

நிறுவனங்களுக்காக பல வேளைகளிலும் மறைமாவட்டத்திலிருந்து பண உதவிகளை வழங்கியதுண்டு. இத்தகைய தொகைகள் அனைத்தையும் கடனாக மட்டுமே வழங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். பிற்காலங்களில் நிறுவனங்களில் இருந்து மறைமாவட்டத்திற்கு திருப்பி இந்த பணத்தொகையை வாங்குகின்ற போது தணிக்கை செய்வதில் எளிதாக இருக்கும் என்பதற்காகவே இந்த வழிமுறையை பின்பற்றினார். மறைமாவட்ட தேவைகளுக்காக வங்கிகளில் இருந்து கடன் வாங்கிய சூழலில் வாங்கிய கடனை சீக்கிரமாக திருப்பி அடைத்து முடிக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தினார். அதிக வட்டி செலுத்த வேண்டி இருப்பதனால் பல நபர்களிடமிருந்து வட்டி இல்லா கடன் வாங்கி வங்கிக்கடனை தீர்த்து வைக்க அறிவுரை கூறினார்.

நிறுவனங்களுக்கு இடையே கடன் வாங்குவதும் கடன் கொடுப்பதும் எவ்வாறு செயல்பட வேண்டும், அதற்கான வழிமுறைகள் என்ன, அவை எவ்வாறு தணிக்கை செய்ய எழுதப்பட வேண்டும் என்பதை வல்லுநர்களிடம் கேட்டு அறிந்து அதை செய்யப் பணித்தார்.

இயக்கங்கள் மற்றும் நிறுவனங்களில் கணக்கு தணிக்கை செய்து ஆண்டுதோறும் தன்னிடம் வழங்க வேண்டும் என்பதில் கட்டாயமாக இருந்தார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வங்கிக் கடன் வாங்குவதற்கு முன்னால் தணிக்கை அறிக்கையை அவர் பெற்றுக் கொண்டு அந்நிறுவனத்தின் தற்போதைய கணக்கு நிலை என்ன என்பதை அறிந்து தீர்மானங்களை எடுத்து வந்தார். வளர்ச்சிப் பணிகளுக்கான தேவைகள் வருகின்ற போது சரியான தீர்மானத்தை திட்டமிட்டு எதிர்கால நன்மையை கருத்திற்கொண்டு கூறி வந்தார்.

பங்குகளிலிருந்து ஆண்டு இறுதி கணக்கு செலுத்த வேண்டும் என்பதில் கட்டாயமாய் இருந்தார். அவ்வாறு அனைத்து புது மற்றும் குறு மறைப்பணித்தலங்களிலிருந்தும் ஆலயங்களிலிருந்தும் ஆண்டிறுதிக் கணக்குகளை பங்கின் செயற்குழுவினர் சமர்ப்பித்து வந்தனர். தேவைக்கேற்ப எழுத்து மூலமாக தாமதாக கணக்கு ஒப்படைக்க விதிவிலக்கு வழங்கியிருந்தார்.

மாதத்தின் முதல் நாளில் மறைமாவட்டத்தின் கணக்கு அறிக்கையை தவறாமல் மறைமாவட்ட பொருளரும் கணக்கு எழுதுபவரும் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும். எழுதப்பட்ட தொகைகளுக்கு விளக்கம் சொல்லியே ஆக வேண்டும். சில பணிகளை தொடர்ந்து செய்திடவும் தடை விதித்திருந்தார். செய்யப்பட்ட சில பணிகளை ஊக்குவித்திருந்தார். அனைத்தும் சரியாக கூர்ந்து கவனித்த பின்னர் மட்டுமே அடுத்த மாதத்தில் செய்ய வேண்டிய பணிகளை கூறியிருந்தார். அவரது முன் அனுமதியின்றி எப்பணியையும் செய்ய வேண்டாம் எனப் பணித்திருந்தார். மறைமாவட்ட நிதி நிலை பற்றி அவர் தெளிவாக இருந்தார்.

நிலங்கள் தொடர்புடைய வரிகளை அரசுக்கு வழங்குவது குறித்த பணிகளை எப்போதும் ஊக்குவித்திருந்தார். அதற்காக கோயிக்கத்தோப்பைச் சார்ந்த திரு. இராகவன் அவர்கள்  உதவி புரிந்தார். நீதிமன்ற வழக்குகளையும் இவரே ஆயரின் வழிகாட்டலுக்கேற்ப செய்திட உதவி புரிந்தார். மார்த்தாண்டத்தைச் சார்ந்த திரு. நோபர்ட் அவர்களும் இதற்கு உதவி புரிந்தார்.

 

11.   மறைமாவட்டத்தோடு அன்பு

 

யாரிடமும் முன்கூட்டி சொல்லாமலேயே அடிக்கடி பல பங்குகளையும் பங்குத்தந்தையர்களையும் சென்று எதிர்பாராத விதமாக சந்தித்து நலம் விசாரிப்பார். எப்போது வேண்டுமென்றாலும் ஆயர் அவர்கள் எங்களை சந்திக்க வருவார் என்ற எதிர்பார்ப்பு பங்கு மக்களிடையேயும் அருட்தந்தையர்களிடமும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவராகவே ஏதேனும் மறைபணித் தளங்களில் உள்ள சிறு மிஷன்களை தானே முன் வந்து திருப்பலி ஒப்புக்கொடுத்து பங்கு மக்களை சந்தித்து உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வு இறைமக்களுக்கு ஆயர் அவர்களோடு நெருங்கிய உறவு ஏற்படுத்த வழிவகுத்தது. சிறிது பெரிது என்ற ஆலய பாகுபாடு இல்லாமல் புனித வாரம் மற்றும் கிறிஸ்துமஸ் தின நிகழ்வுகளை குறைந்த இறைமக்கள் எண்ணிக்கையை கொண்ட ஆலயங்களிலும் நடத்தி மக்களோடு இணைந்து பயணித்தார். வெளிநாடுகளில் செல்கின்ற போது மார்த்தாண்டம் மறைமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் நம்பிக்கை வாழ்வில் உயரச் செய்யவும் தேவையான பொருளாதார வசதி வேண்டும் என்ற கோரிக்கையை நன்மனம் கொண்டவரிடம் சமர்ப்பித்து மறைமாவட்ட மக்களுக்காக நன்கொடைகளை வாங்கி செயல்படுத்தி வந்தார்.

புனித அல்போன்சா புனிதை நிலைக்கு உயர்த்தப்பட்ட பின்னர் நமது மறைமாவட்டத்திலும் அவரது பெயரில் ஒரு ஆலயம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் கடுவாக்குழியில் அப்போது கட்டப்பட்ட ஆலயத்திற்கு புனித அல்போன்சாவை பங்கின் பாதுகாவலியாக அறிவித்தார்

நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் மறைமாவட்டத்திற்கு சொந்தமான ஒவ்வொரு நிலங்களையும், எஸ்டேட்டுகளையும் சந்தித்து அங்கிருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி அதனை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அறிவுரை வழங்கி வந்தார். அவ்வாறே ஒவ்வொரு எஸ்டேட்டுக்கும் தனித்தனியாக பெயரிட்டு அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அருட்தந்தையர்களுக்கு பொறுப்பு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். எதிர்பாராத நேரங்களில் முக்கம்பாலை போன்ற இரப்பர் தோட்டங்களுக்கு அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கும் உதவிகள் பல செய்து வந்தார்.

எப்போதும் அவர் தம் வாழ்வில் மறைமாவட்ட நிகழ்வுகளை எப்படி வழிநடத்தலாம் எப்படி மறைமாவட்டத்திற்கு பெருமை சேர்க்கலாம் என்ற எண்ணமே எப்போதும் இருந்தது. புதிய காரியங்களை செயல்படுத்த திட்டமிடும்போது வல்லுனர்களை கலந்தாலோசித்து செயல்படுத்துவார். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. மலங்கரை கத்தோலிக்க சங்கம நிகழ்வு நடந்தபோது மார்த்தாண்டம் மறைமாவட்டத்தில் வைத்து முதல் முறையாக நடத்துகின்ற காரணத்தினால், மாவேலிக்கரை ஆயர் ஜோஷ்வா மார் இக்னாத்தியோஸ் அவர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகிக்கவும், சிறப்பு கருத்துக்களை வழங்கவும், ஆலோசனைகளுக்கு துணை நிற்கவும் செய்தார். இவ்வாறாக அன்று நடந்த மலங்கரை சங்கமம் மலங்கரை கத்தோலிக்க திருஅவையிலேயே நீங்காத பெயரும் புகழும் பெற்ற ஒன்றாக அமைந்தது.

புது ஆயர்கள் மலங்கரை கத்தோலிக்க திருஅவையில் அறிவிக்கப்படுகின்ற போது அவர்களை ஒவ்வொருவராக அழைத்து மறைமாவட்ட மேய்ப்புப்பணி அறிவுரை குழுவினருக்கு அறிமுகப்படுத்தியும், வாழ்த்துக்கள் பரிமாறியும் தனது உடன்இருப்பையும், மார்த்தாண்டம் மாவட்டத்தின் உடன் இருப்பையும் அவர்களோடு பகிர்ந்து வந்தார்.

மார்த்தாண்டம் மறைமாவட்டம் உருவாகி  பத்து ஆண்டுகள் நிறைவுற்றபோது பல்வேறு நற்பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தினார். சமூக சேவை நிறுவனம் மட்டுமல்ல, ஆயரகத்தில் இருந்தும் ஏராளமான நலப் பணிகளை செய்து வந்தார். ஆலயங்கள் புதிதாக கட்டப்பட்ட போது அவற்றை சரியாக கண்காணிக்கும் பொருட்டு அதற்கென்றே ஒரு துறையும் அருட்தந்தை அவர்களும் நியமிக்கப்பட்டிருந்தார்.

நம் மறைமாவட்டத்திற்கு எதிர்கால சேமிப்பாக பொருளாதார நெருக்கடி இருந்தபோது மறைமாவட்டத்திற்கு என்றும் மறைமாவட்ட வளர்ச்சிக்கென்றும் சென்னையில் மிகப் பெரிய நிலப்பரப்பு ஒன்றை வாங்கி வருங்கால தலைமுறையினருக்கு மிகப்பெரிய ஒரு சேமிப்பாக வைத்திருந்தார். இந்நிலப்பகுதி எக்காலமும் மார்த்தாண்டம் மறைமாவட்டத்திற்கென்றே இருக்கும் என்பதை ஆயர் மாமன்றத்தில் விவாதித்திருந்தார். இவ்வாறு அவரது திட்டங்கள் ஒவ்வொன்றையும் எதிர்கால சூழலை கருத்தில் கொண்டே செய்து வந்தார்.

அருளடையாளங்கள், திருப்பலி நூல் மற்றும் பாசுர மாலை போன்ற தமிழ் திருவழிபாட்டு நூல்களை அருட்தந்தை ஜார்ஜ் தாவரத்தில் அவர்களின் உதவியால் மொழிபெயர்த்து வெளியிடச் செய்தார். அத்தோடு மட்டுமல்ல இந்த பாடல்களை சரியான இராகத்தில் சரியான முறையில் பாடுவதற்கு வசதியாக பாடல்களை தகுந்த பாடகர்களால் ஒலிப்பதிவு செய்து வெளியிடவும் வழிகாட்டினார்.

ஆயர் அவர்களோடு நெருங்கிய உறவில் இருந்த அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிறப்பு விருந்தினர்கள் அடிக்கடி ஆயரகத்திற்கு வருவது வழக்கம். இத்தகைய விருந்தினர்களுக்கு அவர்கள் வாழ்ந்த நாட்டில் உள்ள அதே நிலையிலான தங்கும் வசதி என்பதை விட நம்மிடையே உள்ள எளிய தங்கும் வசதியை அமைத்துக் கொடுத்தால் போதும் என்று அவர் திட்டவட்டமாக இருந்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு சுற்றுலாத் தலங்களை காண்பிப்பதாக மட்டுமல்லாமல் மறைமாவட்ட பிறரன்புப் பணிகளையும் மறைமாவட்டத்தில் உள்ள ஏழை மக்களின் நிலைகளையும் இத்தகைய சிறப்பு விருந்தினர்களுக்கு அவர் காண்பித்துக் கொண்டிருந்தார்.

வெளிநாட்டு விருந்தினர்கள் வருகின்ற போது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உணவுப் பொருள்கள் என்னென்ன என்பதை ஆயர் அவர்களே தீர்மானித்து வைத்திருந்தார்.  ஆயரகத்தில் மேய்ப்புப் பணி அறிவுரைக் குழு போன்ற கூட்டங்கள் நடைபெறுகின்ற வேளையில் ஆயர் அவர்கள் விரும்பிய ஒரு உணவு வகை தான் பீஃப் உலத்தியது. மிகவும் சுவையான இந்த உணவு வகையை நம் மறைமாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தியவர் ஆயர் அவர்களே அவர்.

ஆயர் அவர்கள் அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணிபுரிந்த போது சொந்தமாகவே சமையல் செய்திருந்தார். அருட்கன்னியர்கள் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளுக்கும் உணவு நல்ல முறையில் சமைத்து பரிமாறிய பின்னர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சமையலறை சென்று ஒவ்வொரு உணவுப் பொருளும் சுவையாக அமைந்திருந்தது என்று உற்சாகப்படுத்துவார். ஒருமுறை ஆயர் அவர்கள் கூறிய வழிகாட்டுதலுக்கு ஏற்ப சமைக்க தவறியபோது சமையலறைக்கு நேராக சென்று காய்கறி ஒன்றையும் அதனை வெட்டுவதற்கு கத்தி ஒன்றையும் கேட்டார். சமையலறையில் பணிபுரிந்தவர்கள் சற்று தயக்கத்துடன் நின்றார்கள். திகைத்து நின்றார்கள். காய்கறிகளை கத்தியால் தானாகவே வெட்ட ஆரம்பித்தார். நீங்கள் இதனை இவ்வாறு வெட்டுகின்ற போது தான் சீராக எளிதாக அமையும் என்று கற்பித்தார்.

நமது மறைமாவட்டத்தை நன்முறையில் வளர்ச்சியின் பாதையில் வழிநடத்திய ஆயர் அவர்கள் பத்தனம்திட்டை மறைமாவட்டத்திற்கு மாற்றலாகி செல்கின்ற வேளையில் கூட்டப்பட்ட ஆயர் மாமன்றத்திற்கு முந்தைய நாளில் என்னை அழைத்து கூறிய வார்த்தைகள் இப்போதும் மனதில் நிலைத்திருக்கிறது. ‘அருட்தந்தை அவர்களே, நான் உங்களோடு சேர்ந்து, இந்த மார்த்தாண்டம் மண்ணில் இறக்கும் வரை வாழ்வதற்கும், இங்கேயே துயில்கொள்வதற்கும் தான் விரும்புகின்றேன். ஆனால் ஆயர் மாமன்றத்தின் தீர்மானம் எதுவோ அதற்கு நான் கட்டுப்பட வேண்டிய சூழலும் உள்ளது. எனவே ஒரு வேளை பணியிட மாற்றம் வருகிறது என்றால் நீங்கள் யாரும் கலக்கமடைய வேண்டாம். உங்களை இறைவன் வழிநடத்துவார். எல்லாம் நன்மைக்கே’ என்று கூறினார். ஏதோ அந்த வார்த்தைகளைக் கேட்ட உடனடியாக கண்ணீர் வந்தது. ஆனால் பின்னர் அந்த கண்ணீரின் அர்த்தம் நன்றியாக உருமாற்றம் அடைந்ததை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

 

12.   என் வாழ்வில்

 

1994 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று பட்டம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இளங்குருத்துவ பயிற்சியகத்தில் முதலாமாண்டு கற்கின்ற போது காலை நேரங்களில் தியான பயிற்சிகள் பல நிகழ்த்தி ஆன்மீக வளர்ச்சிக்கு வித்திட்ட மிகப்பெரிய மாமேதை தான் அவர். 1998-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக மேதகு ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் அவர்கள் அறிவிக்கப்பட்ட போது மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி தென்பட்டது. மார்த்தாண்டம் மறைமாவட்டத்திலேயே பலருக்கும் பழக்கமில்லாத முகம் ஏதோ எனக்கு பரிச்சயமாக இருந்தது என்பதை எண்ணி மகிழ்ந்தேன். அன்று முதலே அவரோடு ஒரு தந்தைக்குரிய பாசத்தை மனதிற்குள்ளே வளர்த்தி வந்தேன்.

குருத்துவ பயிற்சியக வாழ்வின் விடுமுறைக் காலங்களில் ஆயரை சந்திக்கின்ற போது, அவர் கூறுகின்ற ஒவ்வொரு அறிவுரைகள் மற்றும் அவரது  வாழ்க்கையின் அனுபவப் பகிர்வுகள் எல்லாமே எனது மனதில் ஏதோ பசுமரத்தாணி போல ஆழமாக பதிந்து கொண்டே இருந்தன.

எனது தகப்பனார் அன்று மார்த்தாண்டம் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமீசியத்தின் தலைவராக இருந்து பணிபுரிந்ததனால் அவர் என்னை அதிகமாக அறிந்திருந்தார். ஆலய மற்றும்  மறைமாவட்ட நிகழ்வுகளில் எனது தகப்பனாரை ஆயர் அவர்கள் சந்திக்கின்ற போது என்னை பற்றி நலம் விசாரிப்பதும், என்னை சந்திக்கின்ற போது அப்பாவை பற்றி நலம்  விசாரிப்பதும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். என் உள்ளத்தில் அவரோடுள்ள அன்பை தந்தை மகனுக்குரிய பாசமாக வளர்த்து வந்தேன்.

 

சமறோனோ கோறூயோ பட்டம்

 

2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி கோயிக்கத்தோப்பு ஆலயத்தில் வைத்து வகுப்புத் தோழரான அருட்தந்தை பெர்னார்ட் அவர்களையும் என்னையும் குருவானவராக அருட்பொழிவு செய்தார். அன்றைய அருட்பொழிவு நிகழ்வுகளும் ஆயர் அவர்கள் அன்று அறிவுரை கூறுவது போன்று நிகழ்த்திய மறையுரையும் திருச்சடங்குகளும் இப்போதும் மனக்கண்முன் தெளிவாக நிற்கின்றன. இரு தினங்களுக்குப் பின்னர் 29ஆம் தேதி எனது சொந்த பங்கு ஆலயமான நடைக்காவில் வைத்து நான் முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்த போது ஆயர் அவர்களும் உடன் இருந்தார். வாழ்த்துக்களோடு மறையுரையும் நிகழ்த்தினார்.

இரண்டு வார இடைவெளிக்கு பின்னர் கன்னியாகுமரியில் ஒரு சில வாரங்கள் தங்கி இருக்க வேண்டும். களப்பணி ஆற்ற வேண்டும் என்று என்னை அனுப்பினார்கள். கன்னியாகுமரியில் ஓரிரு வாரங்கள் தங்கிய பின்னர் நேரடியாக ஆயர் அவர்களின் செயலராக நியமித்த ஆணை வழங்கப்பட்டது. உடனடியாக பணிகளை துவங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. அஃதுடன் மங்காடு மற்றும் ஆதிச்சவிளாகம் ஆகிய இரண்டு பங்குகளின் பங்குத்தந்தையாகவும் செயல்படப் பணித்தார். மங்காடு ஆலயம் மிகவும் சிறிய ஆலயமாக இருந்ததனால் இறைமக்களின் வேண்டுகோளுக்கிணங்க விரிவாக்கம் செய்து புது ஆலயமாக ஆயர் அவர்களால் கட்டித் தரப்பட்டது. அடிக்கடி வந்து பணிகளை பார்வையிட்டு நலம் விசாரிப்பார்.

மங்காடு ஆலய அர்ச்சிப்பு

ஆதிச்சவிளாகம், மங்காடு, அடைக்காகுழி, மீனச்சல், கீழ்மாங்கோடு, சேனம்விளை, மாத்தூர்க்கோணம், மந்தாரம்புதூர், கன்னியாகுமரி, குமாரபுரம், குலசேகரம் மற்றும் பேச்சிப்பாறை பங்குகளில் பணியாற்ற ஆயர் அவர்கள் என்னை நியமித்திருந்தார்.

பகல் வேலைகளில் ஆயரகப் பணிகளும், மாலை வேலைகளில் பங்குகளின் வீடுகளை சந்தித்தல் மற்றும் நோயாளிகளை சந்தித்தல் போன்ற பணிகளும் நடந்து வந்தன. மாலை ஆயர் இரவு உணவு அருந்திய பின்னர் மீண்டும் அலுவலகப் பணிகளைச் செய்வது வழக்கம். அப்போதுதான் முக்கியமான கடிதங்கள் மற்றும் பணி சார்ந்த நிகழ்வுகளை செய்வதற்கு பணித்தார். ஏற்கனவே அவர் வாசித்திருந்த கடிதங்களை மீண்டும் வாசித்து அதற்கு பதில் அனுப்புவதற்குத் தேவையான கருத்துக்களை தேடிக் கண்டுபிடித்து வழங்குவது தான் முக்கியப் பணியாக இருந்தது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் கிழக்குத் திருஅவைகளுக்கான சட்டத் தொகுப்பு முழுவதும் மீண்டும் மீண்டும் புரட்டி அறிந்து கொள்ள முடிந்தது.

ஆயரகத்தில் தங்கியிருந்தபோது மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று அவர் என்னோடு கேட்டார். ஏதேனும் நிறுவனங்களில் தங்கியிருந்து கற்பது என்பது எனக்கு ஆகாது என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். தொலைவழிக்கல்வி அல்லது இணைய வழிக்கல்வியில் விருப்பம் உள்ளதை எடுத்துரைத்தேன். மறைப்பணிகளோடு இணைந்து கல்வி கற்பது என்பதில் நிலைத்திருந்தேன்.  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலிருந்து கல்வி கற்பதற்கான பாடப்பிரிவுகளின் பட்டியலைக் கொண்டு வருமாறு கூறினார். அவர் அதிலிருந்து பொது நிர்வாகம் என்ற எம் ஏ பட்டப்படிப்பை கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இளங் குருத்துவ பயிற்சியகத்தில் திருவிவிலியத்தை பற்றி கற்பிப்பதற்காக பணித்திருந்தார். சாந்தோம் திருப்பணிப்பொருட்கள் நிலையத்தின் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. மறைமாவட்டத்திலிருந்து கல்வி உதவித்தொகை பெறுவோரை கண்காணிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. ஆயரகத்தின் (House Minister) உள்துறை பொறுப்பில் செயல்பட வேண்டியிருந்தது. செங்கோட்டை எஸ்டேட்டின் பொறுப்பாகவும் செயல்பட வேண்டியிருந்தது.

முக்கியமாக அவருடன் இரண்டு ஆண்டுகள் ஆயரின் செயலராகவும் ஐந்து ஆண்டுகள் மறைமாவட்ட பொருளராகவும் இணைந்து பணிபுரிய இறைவன் அளித்த பெரும் பேற்றை எண்ணி மகிழ்கிறேன். இளம் வயதிலேயே அவர் எனக்கு வழங்கிய இவ்விரு பணிப்பொறுப்புக்களும் என்னை வெகுவாக வளர்த்தின.

 

நீர் வாழ்க!

உம் பணி எங்கும் சிறந்து ஓங்கட்டும்!

வளர்க உம் பணி!

நீடுழி காலம் வாழ்க!

 

 

 

 

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு – 1944 மேய் 19

 

துவக்க கல்வி – வலியந்தி

 

உயர்நிலைப்பள்ளி கல்வி – கடம்மனிட்ட

 

இளம் குருத்துவ பயிற்சியகம் – பட்டம் திருவனந்தபுரம்

 

உயர் குருத்துவ பயிற்சியகம் – திருச்சிராப்பள்ளி

 

குருத்து அருட்பொழிவு – 1973 மேய் 5

 

துவக்கக் கால மறைபணித்தலங்கள் – வெண்ணியூர், சொவ்வர, முல்லூர், விழிஞ்ஞம், பிரப்பன்கோடு

 

அமெரிக்காவில் பணிவாழ்வு – 1985 -1998

 

ஆயர் அருட்பொழிவு – 1998 ஜூன் 29

 

மார்த்தாண்டம் மறைமாவட்ட பொறுப்பேற்பு – 1998 ஜூலை 1

 

பத்தனந்திட்டை மறைமாவட்ட பொறுப்பேற்பு – 2010 மாரச்சு 20

 

குருத்துவ மற்றும் ஆயர் அருட்பொழிவின் ஜுபிலி – 2023

 

 

 

துணை நின்றவை

1.        ஸ்வர்ண நிலாவு, பீட்டர் சி. ஆபிரகாம், பத்தனம்திட்டை

2.        ஏழாண்டு கால உடன்பயணத்தில் நானனுபவித்த வாழ்க்கைப் பாடங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இருபது ஆண்டுகள் பணிவாழ்வில் தொகுத்தவை

1.   அறிவோம் திருச்சபையை (2015)

2.   திருச்சபைச் சுவடுகள் (2019)

3.   மலங்கரையின் பிறமொழிச் சொற்கள் (2020)

4.   மரியாவைக் கொண்டாடுவோம் (2021)

5.   மலங்கரை துளிகள் (2021)

6.   மலங்கரை திருப்பலிப் பாடல்களின் அட்டவணை (2021)

7.   மலங்கரை இசையில் சிலுவைப்பாதை (2017)

8.   மலங்கரை இசையில் திருசெபமாலை (2020)

9.   என் ஊர் நடைக்காவு (2021)

10. திருவிவிலிய நூல்களின் கோடிட்ட இடங்கள் (PDF) (2021)

11. மறைக்கல்வி மூன்றாம் வகுப்பு வினா விடைகள் (2017)

12. மறைக்கல்வி நான்காம் வகுப்பு வினா விடைகள் (2017)

13. மறைக்கல்வி ஐந்தாம் வகுப்பு வினா விடைகள் (2018)

14. மறைக்கல்வி ஆறாம் வகுப்பு வினா விடைகள் (2018)

15. மறைக்கல்வி ஏழாம் வகுப்பு வினா விடைகள் (2021)

16. மறைக்கல்வி எட்டாம் வகுப்பு வினா விடைகள் (2019)

17. மறைக்கல்வி ஒன்பதாம் வகுப்பு வினா விடைகள் (2021)

18. மறைக்கல்வி பத்தாம் வகுப்பு வினா விடைகள் (2021)

19. திருச்சபை சார்ந்த இணைய வழி வினாடி வினா போட்டிகள் (2018)

20. மறைக்கல்வி பாடங்கள் வாரியாக Online வினாடி வினா தேர்வுகள் (2021)

21. மறைக்கல்வி பாடங்களின் 154 யூட்யூப் வீடியோக்கள் (2017)

22. திருவழிபாட்டு பாடல்களின் 163 யூட்யூப் வீடியோக்கள் (2019)

23. மார்த்தாண்டத்தின் மாமேதை - ஆயர் இலாறன்ஸ் மார் எஃப்ரேம் பற்றிய குறு வினா விடைகள் (2023)

24. நானறிந்த தலைமைக்குரு - ஆயர் யூஹானோன் மார் கிறிஸோஸ்டம் (2023)

25. இறச்சகுளம் திருத்தல வரலாறு (2023)

வரமருளிய இறைவா உமக்கு நன்றி!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை