தேவ நற்கருணையின் பெனடிக்டீனியர்கள் பகுதி 1
தேவ நற்கருணையின் பெனடிக்டீனியர்கள்
1987 ஆம் ஆண்டிலேயே முக்கடல் மலைச்சாரலில் எளிமையான ஒரு ஆசிரமமாக சாந்தி ஆசிரமம்
கிறிஸ்பின் ஆச்சாரியா அவர்களால் துவங்கப்பட்டது. மத்தேயு 25 ; 40 என்ற
இறைவார்த்தைக்கு ஏற்ப வாகமண் குருசுமலை ஆசிரமத்தில் இருந்து முக்கடல் நோக்கி அருட்சகோதரர்
கிறிஸ்பின் அவர்கள் தனது பயணத்தை மேற்கொண்டு பணித்தளத்தை ஆரம்பித்தார்.
பூதப்பாண்டியில் வாடகை வீடு ஒன்றில் தனது பணிகளை ஆரம்பித்தார்.
துறவு வாழ்வின் மேன்மையை உணர்ந்த அருட்சகோதரர்
கிறிஸ்பின் அவர்களுக்கு இணைப் பணியாளர்களாக சுவாமி சச்சிதானந்தா மற்றும் சுவாமி
செபஸ்டியான் ஆகியோரும் உடன் இருந்தனர். இவர்களுடைய இணைந்த பயணம் ஆசிரமத்தை
வளர்ச்சியின் பாதையில் முன்னோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆசிரமத்தின் பணிகளை செவ்வனே செய்து வந்த
ஆசிரமவாசிகள் இல்லத்தின் வளர்ச்சிப்பணிகளை முன்னோக்கி கொண்டு செல்ல மிகுந்த ஆர்வம்
கொண்டவராக இருந்தனர்.
பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸின் வழிநடத்துதலில்
ஒரு குருவானவராக மாற வேண்டும் என்ற நல் எண்ணத்தில் புனித மரியன்னை நாலாஞ்சிறை உயர்
குருத்துவ பயிற்சியகத்தில் பயிற்சியை மேற்கொண்டார். பயிற்சியை முடித்த பின்னர் 1994 ஆம்
ஆண்டு மே 12 ஆம் தேதி குருவானவராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
மேதகு பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ்
ஆண்டகை அவர்கள் அருட்தந்தை கிறிஸ்பின் ஆச்சாரியா அவர்களை தனது திருக்கைகளால்
குருத்துவ அருட்பொழிவு வழங்கிய நாளிலிருந்து இறையருள் அவர் மீதும் அவர் துவங்கிய
இல்லத்தின் மீதும் இறையாசீர் அருள் மழையாய் பொழிந்தவாறு காணப்பட்டது.
திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயரான இலாறன்ஸ்
மார் எப்ஃரேம் ஆண்டகை அவர்கள் குடிசையாய் உருவாக்கப்பட்ட ஆசிரமத்தின் முதல் குடிலை
அர்ச்சித்து உலகிற்கு அர்ப்பணித்தார்கள். தொடர்ந்து முதியோரை பராமரிக்கும் இல்லம்
ஒன்றும் ஆசிரமக் குடிலின் அருகிலேயே நிறுவப்பட்டது.
1988 பிப்ரவரி மாதம் இரண்டாம் நாள் அன்று சாந்தி ஆசிரமம் ஆடம்பரமாக துவங்கப்பட்டது.
இவ்வாறு துவங்கப்பட்ட ஆசிரமத்தின் முக்கிய பணியாக ஆதரவற்றோர்களான முதியோர்களுக்கான
இல்லம் நிறுவப்பட்டு அவர்களுக்குத் தேவையான பராமரிப்பு வழங்கப்பட்டு வந்தது.
முதியோர்களுக்கான உணவு பரிமாறத் தேவையான
காய்கறி தோட்டம் மற்றும் பால் மற்றும் பால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை
பயன்படுத்துவதற்காக உருவாக்குவதற்கான பண்ணை ஒன்றும் அன்றே ஆரம்பிக்கப்பட்டு இன்றும்
செயல்பட்டு வருகிறது.
சாந்தி ஆசிரமத்தின் வெள்ளி விழா நிகழ்வுகள் 2012 ஆம்
ஆண்டு நிறைவடைவதை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு
செயல்படுத்தப்பட்டன.
அருட்தந்தை கிறிஸ்பின் அவர்களால்
ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆசிரமம் தற்போது ஒரு துறவு சபை ஆசிரமாக பிபிஎஸ் என்ற பெயரில்
அதாவது “பெனடிக்டைன்ஸ் ஆஃப் தி பிளசெட் சாக்ரமண்ட்” அல்லது “தேவ நற்கருணையின்
பெனடிக்கீனியர்கள்” என்ற பெயரில் துறவு சபை இல்லமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
தொடர்ந்து ஆசிரமம் செயல்பட்டு வரும்
இடத்திலேயே மறைப்பணித் தளமாகவும் ஒரு இறைச் சமூகத்தை உருவாக்குவதற்கான அனுமதியை
பெற்றுக் கொண்டார்.
மலங்கரை திருவழிபாட்டு முறையில் திருப்பலி
ஒப்புக்கொடுத்து ஆசிரமத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றார்.
இந்த நற்கருணையின் பிரசன்னமும் உடன்
இருப்பும் அதிலிருந்து பெற்றுக் கொள்கின்ற இறையருளுமே இந்த ஆசிரமம் நிலைத்து
நிற்பதற்கு உந்து சக்தியாகவும் வலிமைக்கு முக்கிய காரணியாகவும் விளங்கி வருகிறது.
அவரது பணியால் மத்தியாஸ் நகர், பூதப்பாண்டி
மற்றும் ஞானதாசபுரம் ஆகிய இடங்களில் புதிய மறைப்பணித்தளங்கள் உருவாக்கப்பட்டன.
மறைமாவட்ட உதவியுடன் ஆலயங்களும் நிறுவப்பட்டன. மேற்குறிப்பிட்ட ஆலய சமூகங்களை
உருவாக்குவதற்கு அருட்சகோதரி சிசிலி ஜான் டி எம் அவர்கள் அருள் தந்தை அவர்களுக்கு
பக்கத்துணையாக இருந்து செயல்பட்டு வந்தார். இவ்வாறு மரியாவின் புதல்வியர் துறவு
சபையினரின் இல்லம் ஒன்று மத்தியாஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று பூதப்பாண்டியை
மையமாக்க்கொண்டு பல்வேறு இறைச் சமூகங்களை கொண்ட சிறப்புற்ற பகுதியாக விளங்கி
வருகிறது.
இப்பகுதி மக்கள் முழுவதும் அருட்தந்தை
கிறிஸ்பின் அவர்களை கிறிஸ்பின் குரு எனவே அழைத்து வந்தார்கள் அனைவருக்கும்
எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்கின்ற ஒருவராக அனைத்து நபர்களும் கண்டபடியால்
கிறிஸ்துவை வாழ்கின்ற ஒரு மனிதர் என்றே சுற்று பகுதி மக்கள் அவரை அழைத்து வந்தனர்.
ஏராளமான நபர்கள் ஆற்றுப்படுத்தலுக்காக
தினந்தோறும் சாந்தி ஆசிரமத்தை நோக்கி குவிந்த வண்ணம் இருந்தனர். அருட்தந்தை
அவர்களோடு இணைந்து ஜெபிப்பதற்கும் வந்த நபர்கள் அனைவரும் இறையருளை சாந்தி
ஆசிரமத்தில் இருந்து நிச்சயமாக பெற்றுக் கொண்ட பின்னரே மன நிம்மதியோடு சென்று
கொண்டிருந்தனர்.
அருட்தந்தை அவர்களோடு இணைந்து ஜெபித்ததன்
காரணத்தினால் ஏராளமான தம்பதியர்கள் குழந்தைப் பாக்கியத்தை பெற்றுக் கொண்டனர் என சாட்சி
பகர்ந்துள்ளனர். குழந்தை வரம் பெற்றுக்கொண்ட பல நபர்களும் தங்களுடைய குழந்தைச்
செல்வத்திற்கு ஆண் பிள்ளைகளுக்கு கிறிஸ்பின் எனவே பெயர் வைத்து அவரை மதித்து
வருகின்றனர். நாவல்காடு பங்கு மக்களிடையே கிறிஸ்பின் என்னும் பெயர் பலரால் இவ்வாறு
மதிக்கப்பட்டு வருகிறது.
இந்த துறவு சபை ஆசிரமமானது
அங்கீகரிக்கப்பட்ட துறவு சபையாக மாற்றப்பட வேண்டும் என்ற ஜெப நிகழ்வுகள் புனித யோசேப்போடு
பரிந்துரையை மன்றாட்டுக்களும் ஆரம்பிக்கப்பட்டன.
அருட்தந்தை கிறிஸ்பின் குரு அவர்களுடைய
சீடத்துவம் பெற்றுக்கொள்ள பல நபர்கள் அவரை நாடி வந்து கொண்டே இருந்தனர்.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் நாளில் தூய இறை அன்னையின் தூய்மைத் திருநாளன்று
மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்கள் மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் உயர் பக்திய
சங்கமாக அங்கீகரித்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் தலைவராக அருட்தந்தை கிறிஸ்பின்
குரு நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் கிறிஸ்பின் ஆச்சாரியா எனவும் அழைக்கப்பட்டார்.
தரம் உயர்த்தப்பட்டதன் விளைவாக பல்வேறு
முக்கிய தனிப் பணிகள் ஆசிரமத்தில் துவங்கப்பட்டன. சட்ட ஒழுக்கங்களுக்கு உட்பட்டு
அருட்சகோதரர் பால்சன் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
2023 உயர் பக்திய சங்கம் என்ற நிலையில் இருந்து இதனை துறவு சபை அங்கீகாரத்திற்கு
உயர்த்தப்படுவதற்கான காரியங்களை மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ்
அவர்கள் துவங்கினார். சாந்தி ஆசிரமத்தை துறவு சபையாக உயர்த்தப்பட்டதன் விவரத்தை அடங்கிய
அறிவிப்புப் பலகையை ஆச்சாரியா அவர்களிடம் ஒப்படைக்கவும் செய்தார்.
இவ்வாறு இந்த சாந்தி ஆசிரமம் அன்று முதல் “தேவ
நற்கருணையின் பெனடிக்டீனியர்கள்” என்ற துறவு சபையாக அறியப்படத் துவங்கியது.
குருசுமலை ஆசிரமத்தில் மடாதிபராக இருந்த
பிரான்சிஸ் ஆச்சாரியாவில் இருந்து தான் புனித பெனடிக் அவர்களைப் பற்றிய துறவு
வாழ்வின் ஆன்மீகத்தைப் பற்றிய ஆழமான அறிவை அருட்தந்தை கிறிஸ்பின் பெற்றுக்
கொண்டார்.
2018 ஜூலை 11 ஆம் நாள் புனித பெனடிக்ட் அவர்களின் திருநாளன்று அருட்சகோதரர் போல்சன் அவர்கள்
நொவீசியேட் எனப்படும் துறவு பயிற்சியகத்திற்குள் நுழைந்தார். அருட்சகோதரர் போல்சன்
அவர்கள் இறுதி அர்ப்பணத்தையும் 2022 ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் நாளில்
நிறைவேற்றினார்.
2021 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் நாள் அன்று சீடத்துவ வாழ்வில் நிலைத்திருந்த துறவி செபாஸ்டின் அவர்களுடைய
மரணம் மிகப்பெரிய துக்கத்தை ஆசிரமவாசிகளிடையே உருவாக்கியது.
சாந்தி ஆசிரமத்தின் தனித்துவம் எனப்படுவது
அன்று முதல் இன்று வரை நடைபெறுகின்ற 13 மணி நேர நற்கருணை
ஆராதனையாகும்.
பல்வேறு அருட்தந்தையர்களும் அருட்சகோதரர்களும்
அருட்கன்னியர்களும் இவ்வாசிரமத்தில் தியானத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர்.

Comments
Post a Comment