மறுஒன்றிப்பின் துவக்கக்காலத்தில் நடைபெற்ற சிரிப்பூட்டும் சில நிகழ்வுகள்

 

மறுஒன்றிப்பின் துவக்கக்காலத்தில் நடைபெற்ற சிரிப்பூட்டும் சில நிகழ்வுகள்

மறுஒன்றிப்பு இயக்கத்தின் துவக்கக் காலங்களில் நிகழ்ந்த சில சுவாரசியமான நிகழ்வுகள் இந்த அதிகாரத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அந்நிகழ்வுகளோடு தொடர்புடைய இடங்களும் நபர்களின் பெயர்களும் இந்நூலில் சேர்ப்பது பொருத்தமற்றது என்பதனால் அவை தவிர்க்கப்படுகின்றன.

சவப்பெட்டியை சுற்றி வருதல்

நம் பேராயரை அதிகமாக அன்பு செய்த இறைமக்கள் வாழ்கின்ற ஒரு பங்கு சமூகத்தில் இந்த நிகழ்வு நடந்தது. ஆலயத்தில் துக்க மணி ஒலிக்கிறது. என்ன நிகழ்ந்தது? இறந்தது யார்? என அறிந்திட பல ஓடி வந்தடைந்தபோது அசாதாரணமான ஒரு காட்சியை அனைவரும் கண்டனர். நால்வர் சவப்பெட்டியை தூக்கிச் சென்றனர். அதன் மேல் பகுதியில் பேராயர் மார் இவானியோஸ் என சுண்ணாம்பினால் எழுதப்பட்டிருந்தது. அடக்கத் திருச்சடங்கின் போது பாடுகின்ற “கருணை நிறைந்தவரே .................” என்ற பாடல் பாடியவாறு சிலர் சவப்பெட்டியை சுற்றி நிற்கின்றனர். என்ன இதனுள் இருக்கிறது என வந்தவர்கள் கேட்டார்கள். யாருடையவும் பூதவுடல் இதனுள் இல்லை. ஐந்து அடி நீளம் கொண்ட வாழைத்தண்டு தான் உள்ளே இருக்கிறது என பதில் கிடைத்தது.

சவப்பெட்டியை சுமந்த ஊர்வலம் முன்னோக்கி நகர்ந்தது. பேராயர் மார் இவானியோஸ் வாழ்த்துக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவ்வழியே செல்வார் என்பதை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னரே அறிந்திருந்தனர். அவர் செல்லும் வழியில் அவரை வெளிப்படையாக அவமானப்படுத்த வேண்டும் என்பதே அவர்களது திட்டமாக இருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களின் இத்திட்டத்தை முன்னரே அறிந்திருந்த பேராயர் மாற்று வழியில் அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைந்தார். பாடல்களை பாடியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிது தூரம் சவப்பெட்டியை சுமந்து சென்று நீண்ட நேரம் பாடல்கள் பாடி சோர்வடைந்த போது பேராயரை அவ்வழியே காண முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். ஏமாற்றத்துடன் சவப்பெட்டியை அங்கே எறிந்து விட்டு நாங்கள் எதுவும் காணவில்லையே என்றவாறு தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

இந்த ஊர்வலத்தை திட்டமிட்டு வழிநடத்திய தலைவர்களுள் ஒருவன் இன்னொரு நபருடன் சண்டையிட்டு கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். மறுநாள் காலையில் பிரேத பரிசோதனை நடைபெற்ற பின்னர் எந்த வழியாக பேராயரை அவமதிப்பதற்காக சவப்பெட்டி ஊர்வலம் நடத்தினரோ அதே பகுதியில் அந்த நபரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாலை வழியாக கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஏறக்குறைய ஒரு வாரத்திற்குப் பின்னர் இறந்த அந்நபரின் வீட்டிற்கு முன்னால் பேராயரின் கார் வந்து நின்று ஒலி எழுப்பியது. இறந்தவரின் மனைவியும் இரு குழந்தைகளும் வீட்டிலிருந்து வெளியே வந்தனர். பேராயர் அவர்கள் காரில் இருந்து வெளியேறி விதவைப் பெண்மணிக்கும் அனாதைக் குழந்தைகளுக்கும் தனது இரங்கல் செய்தியை தெரிவித்து தனது பையிலிருந்து குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு வழங்கி ஆறுதல் கூறினார். பேராயரின் இச்செயலை அறிந்த ஊராருக்கு  அவர் மீது ஆழ்ந்த பக்தியும் மரியாதையும் பத்து மடங்கு அதிகரிக்கச் செய்தது.

Go Back பிரச்சாரம்

இந்த நிகழ்வு அச்சன்கோவில் என்னும் ஆற்றங்கரையோர படகுத் துறை அருகே உள்ள சாலையில் வைத்து நடைபெற்றது. அச்சன் கோவில் பகுதியிலுள்ள ஒரு மறைப்பணித்தளத்திற்கு ஒரு சில நபர்களை கத்தோலிக்க திருச்சபையோடு ஒன்றிப்படையச் செய்திட பேராயர் அவர்கள் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்ததை அறிந்திருந்த அவ்வூரில் வாழும் ஒரு சில நபர்கள் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி வெளிப்படையாக ஏளனப்படுத்த வேண்டும் என திட்டமிட்டிருந்தனர். பேராயர் வருகின்ற நேரத்தில் படகை ஆற்றின் மறுகரையில் கொண்டு செல்லுமாறு படகோட்டியோடு அறிவுறுத்தனர். பேராயர் வருகின்றபோது கருப்புக் கொடிகளை உயர்த்தி “ஆர்ச் பிஷப் கோ பேக்” என்ற சொற்களை உரத்த குரலில் ஒலிக்கச் செய்வதற்கு சில சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. சிறுவர்களும் சிறுமிகளும் இவ்வாறு சாலையின் இருபுறமும் கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு வரிசையாக நின்றிருந்தனர். அப்போது ஒரு காரின் ஹாரன் ஒலி முழங்கியது. கார் ஆற்றங்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டது. சிறுவர்களும் சிறுமிகளும் தங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதைப் போன்று “ஆர்ச் பிஷப் கோ பேக்”  என உரத்த குரலில் முழங்கினர். காவி உடை அணிந்த டிஎஸ்பி கடுவா சுப்பிரமணியம் என்பவர் காரிலிருந்து வெளியே வந்தார்.

அவர் இப்போராட்டம் நடைபெறுவதற்கு திட்டமிட்ட நபர்களை அழைத்து காரணத்தை வினவினார். அவர்கள் அவரிடம் உண்மையை எடுத்துரைத்தனர். இதைக் கேட்ட டிஎஸ்பி உரத்த குரலில் சிரித்தார். குழந்தைகளோடு அமைதியாக நிற்கும் படி கூறினார்.

ஒரு சில நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஹாரன் ஒலி எழுப்பப்பட்ட கார் வந்து நின்றது. அதிலிருந்து பேராயர் மார் இவானியோஸ் வெளியே வந்தார். தனது நண்பராகிய சுப்பிரமணியத்தை கண்டவுடன் ஓடிச் சென்று அவருடைய கரங்களைப் பற்றி ஒரு சில நிமிடங்கள் தோழமை உரையாடல்களை நிகழ்த்தினார். அங்கு நடந்த நிகழ்வுகளை டிஎஸ்பி பேராயரிடம் தெரிவித்தார். இருவரும் ஒரு சில நிமிடங்கள் உரத்த குரலில் சிரித்தனர். இதற்கிடையே டிஎஸ்பியின் காரை ஆற்றின் மறுகரைக்கு கொண்டு செல்வதற்கு படகோட்டி தனது படகை கொண்டு வந்தார். டிஎஸ்பி இவ்வாறு கூறினார், “ஆயரின் காரை முதலில் அக்கரைக்கு கொண்டு செல்லவும். அதன் பின்னர் நான் எனது காரை கொண்டு செல்லலாம்.” அப்போது பேராயர் கூறினார், “உங்களது கார் தானே முதலில் வந்தது.” “உங்களது காரை கொண்டு சென்ற பின்னர் எனது காரை கொண்டு சென்றால் போதும்.” டிஎஸ்பி இவ்வாறு கூறினார். என்னை விடவும் மிக முக்கியமான நிகழ்வுக்கு நீங்கள் செல்ல வேண்டிய தேவை இருப்பதனால் நீங்கள் முதலில் செல்லுங்கள். நீண்ட நேர உரையாடலுக்குப் பின்னர் பேராயரின் கார் முதலில் படகில் ஆற்றின் மறுகரைக்கு புறப்பட்டுச் சென்றது.

“றீத்து வருதே றீத்து”

மார் இவானியோஸ் அவர்களின் தீவிர முயற்சியின் பலனாக கத்தோலிக்க திருச்சபையில் மலங்கரை திருவழிபாடு புதிதாக அனுமதித்ததன் வழியாக இப்பேறு கிடைத்தவர்களை திருவழிபாட்டினர் என அர்த்தம் கொண்ட “றீத்துக்காரர்கள்” என எதிரிகள் அழைக்கத் துவங்கினர். கத்தோலிக்க திருச்சபையில் 20க்கும் மேற்பட்ட திருவழிபாடுகள் உள்ளன. மலங்கரை திருவழிபாட்டை கடைபிடிப்பவர்களை கத்தோலிக்கர்களும் கத்தோலிக்கரல்லாதவர்களும் அன்று முதல் றீத்துகாரர்கள் என அழைத்து வந்தனர். “றீத்து திருப்பலி, “றீத்து ஆலயம்” மற்றும் “றீத்துகாரர்கள்” என்ற சொற்கள் பரவலாக மலங்கரை கத்தோலிக்க திருச்சபையினருக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

மறுஒன்றிப்பின் துவக்கக் காலத்தில் ஒரு நகரத்தில் வைத்து நடந்த நிகழ்வு பின்வருமாறு:

பெதனி ஆசிரமத்தைச் சார்ந்த இரண்டு அருள் தந்தையர்கள் மறைப்பணித்தளம் சென்ற பின்னர் சோர்வுடன் தங்களது ஆசிரமத்திற்கு ஒரு நகரம் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தனர். நகரத்தின் வாழும் ஒரு சில நபர்கள் அவர்களை வெளிப்படையாக வழிநெடுகே கேவலப்படுத்துவதற்காக தீர்மானித்து இரும்பு பெட்டி ஒன்றை சில சிறுவர்களிடம் கொடுத்தனுப்பினர். அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஆசிரமத்தவர்களின் முன்னர் இரும்பு பெட்டியில் அடித்து ஒலி எழுப்பி “றீத்து வருதே றீத்து” என ஏளன வார்த்தைகளை உரத்த குரலில் சொல்ல வேண்டும் என அவர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டிருந்தது. குழந்தைகள் ஆசிரமத்தவர்களின் முன்னர் அந்த இரும்பு பாத்திரங்களையும் ஒலித்தவாறு ஏளன வார்த்தைகளையும் எழுப்பி முன்னோக்கி நடந்தனர். இதனைக் காண்பதற்கு தெருவோரங்களில் ஏராளமான நபர்கள் இரு பகுதிகளாக நின்றனர். ஏறக்குறைய ஒரு மைல் தூரம் சிறுவர்களின் அட்டகாசத்தை பொறுத்துக் கொண்ட ஆசிரமத்தவர்கள் நடந்து கொண்டே இருந்தனர். இறுதியில் சோர்வுற்ற அச்சிறுவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். ஆசிரமத்தவர்களோ தங்களுக்கு ஏற்பட்ட ஏளனங்களை நகரத்தின் கத்தோலிக்கரல்லாத சகோதரர்களின் மறுஒன்றிப்புக்காக இறைவனின் முன்னிலையில் சமர்ப்பித்து மகிழ்வுடன் ஜெபத்துடன் ஆசிரமத்தைச் சென்றடைந்தனர். அத்தகைய ஏளன நிகழ்வு வழியாக கத்தோலிக்கர்களே வாழ்ந்திராத அந்த நகரில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கத்தோலிக்க குடும்பங்கள் மறுஒன்றிப்படைந்தன என்பது மிகமுக்கியமானதாகும்.

உயிருடன் கல்லறையில்

துவக்கக் காலங்களில் கல்லறைத் தோட்டங்களில் அடக்கம் செய்ய வசதி இல்லாமல் மறுஒன்றிப்படைந்த பல இறைமக்கள் துயரத்தில் ஆழ்ந்திருந்தனர். அரசின் அனுமதியின்றி பொது கல்லறைத் தோட்டங்கள் நிறுவவோ அன்று சாத்தியமில்லாமல் இருந்தது. புதிதாக கல்லறை தோட்டம் அமைப்பதற்கு அரசிடமிருந்து அனுமதிக்காக மனு அனுப்புகின்ற போது அதற்கான அனுமதி வழங்குவதற்கு பல எதிரிகள் அன்று தங்களது எதிர்மறை கருத்துக்களை எடுத்துரைப்பதும் வழக்கமாக இருந்தது. பக்கத்தில் ஏதேனும் கல்வி நிலையம் இருக்கிறது. இல்லை எனில் குடியிருப்புகள் உள்ளன. இல்லையெனில் பக்கத்து கிணற்றில் குடிநீர் தூய்மையற்றதாக விடும். இவ்வாறு ஏதேனும் ஒரு காரணத்தை எடுத்துக் கூறி அனுமதி மறுப்பது வழக்கமாக இருந்தது. கல்லறை தோட்டத்திற்கான கோரிக்கை மனுக்கள் வழங்கியவற்றுள் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் அனுமதி மறுத்த கடிதங்களே கிடைத்தன. இதனால் கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்பபடைவதற்கு தயாராக இருந்த பல சகோதரர்களும் தங்களுடைய தீர்மானத்திலிருந்து விலகிச் சென்றனர். இவ்வாறு மறுஒன்றிப்படைந்த ஒரு நபரின் கல்லறை அடக்க திருச்சடங்கின்போது நடந்த நகைப்பூட்டும் நிகழ்வு இணைக்கப்படுகிறது.

மறுஒன்றிப்படைந்த ஒரு நபரின் பூதவுடல் புதிதாக வாங்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படுவதற்காக செபங்கள் நடத்தப்பட்டன. ஆயர் தியோஃபிலோஸ் மற்றும் சில குருக்களும் அங்கு உடன் இருந்தனர். அவ்விடத்தில் உடல் அடக்கம் செய்யாமல் இருப்பதற்கு ஒரு சில விஷமிகள் அவ்விடத்தில் குடியிருந்த புலையன் ஒருவரிடம் தங்களது சூழ்ச்சிகளை எடுத்துக்கூறினர். அந்த நபரும் அவ்வாறே செய்வதற்கு ஒப்புக் கொள்ளவும் செய்தார். இறந்தோருக்கான ஜெபங்கள் அனைத்தும் நடந்து முடிந்த பின்னர் இறந்தோரின் உடலை குழிக்குள் இறக்கத் துவங்கிய போது இங்கு பூதவுடலை அடக்க முடியாது என குடியிருப்புவாசியான மேற்குறிப்பிட்ட நபர் வந்து தனது கருத்தை வெளிப்படுத்தினார். யாருமே அவருடைய இந்த செயலுக்கு செவி கொடுக்காமல் பூதவுடலை குழிக்குள் இறக்குவதற்கு துவங்கினர். அப்போது அந்த நபர் உடனடியாக கல்லறைக்குள் இறங்கவும் அங்கே மலர்ந்து படுக்கவும் செய்தார். இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அனைவரும் கலக்கமுற்றனர். கூட்டத்திலிருந்து ஒருவர் இவ்வாறு உரக்கக் கூறினார். “அந்த மண்வெட்டியை தாருங்கள்! இவனை இங்கே உயிருடன் குழிகள் புதைக்க வேண்டும்.” உடனடியாக மண்வெட்டியை தனது கையில் வாங்கி மண்ணை அள்ளி அக்குழியினுள் போடுவதற்கு துவங்கியதும் குழியிலிருந்து உடனடியாக அந்த நபர் எழும்பி “ஐயோ! என்னை கொல்லாதீர்கள்!” என அழுத குரலில் தனது வீட்டுக்குள் ஓடிச் செல்லவும் செய்தான். இதை காணவும் கேட்கவும் செய்த அனைவரும் துயரமான ஒரு நிகழ்வில் கலந்து கொண்டாலும் ஆர்ப்பரித்து சிரித்தனர். அவ்வாறு வேறு எந்த விதமான பிரச்சினைகளும் இல்லாமல் உடல் அடக்க திருச்சடங்கு நன்முறையில் முடிந்து அனைவரும் திரும்பி சென்றனர்.

குரைக்கின்ற நாய்

“எவிடன்ஸ் கில்டு” என்ற பெயரில் திரு. பிலிப்போஸ் அவர்களுடைய தலைமையில் மறைப்பணிக்குழு ஒன்று திருவல்லா மறைமாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. கத்தோலிக்க நம்பிக்கை உண்மைகளை கத்தோலிக்கரல்லாத சகோதரர்களுக்கு எடுத்துரைப்பதற்காக பல்வேறு விதமான உரைகள் பல இடங்களில் வைத்து நடத்துவதற்காக கில்ட் பணியாளர்கள் பல்வேறு கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தனர். இத்தகைய உரைகளுக்கு தடைகளை ஏற்படுத்துவதற்கும் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் ஒரு சில எதிரிகள் சதித் திட்டங்களை தீட்டியிருந்தனர். அப்போது ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்வு பின்வருமாறு சேர்க்கப்படுகிறது.

கத்தோலிக்கரல்லாதவர்களின் மையமான ஒரு கிராமத்தில் பண்ணை வீடு ஒன்றில் கத்தோலிக்க நம்பிக்கை உண்மைகளை எடுத்துரைப்பதற்கு மறையுரைகள் நடத்துவதற்கு கில்டு பணியாளர்கள் விளம்பரங்கள் செய்திருந்தனர். எதிரிகள் இந்த உரைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என சதித்திட்டம் தீட்டினர். இதற்காக எப்பொழுதும் குரைத்துக் கொண்டிருக்கின்ற நாய் ஒன்றை மேடையின் முன்பகுதியில் கட்டுவதற்கு தீர்மானித்தனர். உரைகள் துவங்குவதற்கு சற்று முன்னர் நாய் ஒன்று மேடையின் முன் பகுதியில் கொண்டு வந்து கட்டப்பட்டது. உரைகள் ஆரம்பித்தன. கத்தோலிக்க நம்பிக்கைகளை கேட்டு அறிந்துணர்வதற்கு பலர் வந்து கூடினர். உரைகளும் ஆரம்பித்தன. அப்போது மழை பொழியத் துவங்கியதும் குளிர்ந்த காற்று வீசியது. அதனால் அந்த நாய் உடல் சோர்வடைந்து படுத்து தூங்க ஆரம்பித்தது. நாயைக் கொண்டு வந்து கட்டியவர் ஒரு குச்சியால் அந்த நாயை அடித்து அதனை குரைக்க வைக்க செய்கிறார். நாயோ குரைக்கவும் இல்லை. எழும்பவும் இல்லை. பந்தியில் அமர்ந்து உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இச்செயலைக் கண்டவாறு மெதுவாக சிரிக்கத் துவங்கினர். உரைகளுக்கு பங்கம் விளைவிக்க நாயை கொண்டு வந்தவன் வெட்கி தலை குனிந்து திரும்பிச் சென்றான்.

சவரம் செய்து முடிவு பெறாத நிலை

கத்தோலிக்க திருச்சபையைத் தழுவிய ஒருவர் சவரம் செய்வதற்கு முடிதிருத்தும் தொழிலாளியை தனது வீட்டு முன்னிலையில் அழைத்து அவருடைய பணியினை முழுவதும் செய்து முடிக்காமல் ஓட்டம் பிடித்த சூழலைப் பற்றி பார்ப்போம். மறுஒன்றிப்பின் துவக்கக் காலத்தில் மறுஒன்றிப்படைந்த கத்தோலிக்கர்களுக்கு சவரம் செய்தல், துணி மணிகளை சலவை செய்தல் மற்றும் அவர்களது வீடுகளின் முன் பகுதிகளை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளுக்கு யாரும் செய்து உதவுதல் கூடாது என திருச்சபை மேலதிகாரிகள் தொழிலாளிகளுக்கு தடை ஆணை பிறப்பித்திருந்தனர். ஒரு நாள் ஒரு சவரத் தொழிலாளி ஆசிரியர் ஒருவரின் தலை முடியை திருத்தம் செய்து சவரம் செய்வதற்கு அவருடைய வீட்டு முற்றத்தில் வைத்து பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற கத்தோலிக்கரல்லாதவர்களின் தலைவர் ஒருவர் தொழிலாளியை உடனடியாக இவ்விடத்திலிருந்து ஓடி விடு எனக் கடிந்து கொண்டார். உடனடியாக அவர் பாதியில் அத்தொழிலை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். பாதி தலைமுடி மட்டுமே திருத்தப்பட்ட நிலையில் அந்த ஆசிரியரோ ஒரு நாள் முழுவதும் அலங்கோலமான நிலையில் நேரத்தை செலவிட்டார். மறுநாள் வழக்கத்திற்கு மாறாக அதிக கூலி கொடுத்து தொலைதூரத்திலிருந்து சவரக்காரர் ஒருவரை வரவழைத்து எஞ்சிய பணியினை முழுமை செய்து கொண்டார்.

இந்த நிகழ்வு நடந்து ஒரு வாரத்திற்குப் பின்னர் அந்த இடத்திற்கு வந்த பேராயர் இந்த செய்தியை அறிந்து புன்சிரியோடு இவ்வாறு கூறினார். “ஐயோ பாவம்! ஆசிரியர் அன்றே எனக்கு தகவல் தெரிவித்திருந்தால் நானே சென்று அவருடைய மீதி தலை முடியை திருத்தம் செய்திருப்பேன்.”

நல்ல திருடனின் பரிசு

நமது கதாநாயகனின் மறுஒன்றிப்புக்குப் பின்னர் பல கத்தோலிக்க ஆலயங்களிலும் வைத்து ஆடம்பர வரவேற்புகளும் வாழ்த்துக் கூட்டங்களும் பரிசளிப்புகளும் வழங்கப்பட்டன. ஒரு பங்கில் வைத்து ஒரு நல்ல திருடனை சந்தித்த கதை தான் இது.

ஒரு பங்கில் வைத்து வாழ்த்துக் கூட்டத்தின் போது அப்பங்கைச் சார்ந்தவர்கள் பேராயர் அவர்களுக்கு தங்கத்தாலான சிலுவையும் கழுத்தில் அணிய மாலை ஒன்றையும் வழங்கினர். வாழ்த்துக் கூட்டத்திற்குப் பின்னர் தனக்காக தயாரிக்கப்பட்டிருந்த அறையில் ஓய்வெடுப்பதற்காக பேராயர் சென்றார். அப்போது அவ்வூரைச் சார்ந்த ஒருவன் ஆயரின் அறைக்குள் புகுந்து அவரது கரங்களை முத்தம் செய்து இவ்வாறு கூறினார். “ஆயரே நீங்கள் பெற்றுக் கொண்ட அந்த சிலுவையும் மாலையையும் நான் காணலாமா?”

அவனைப் பற்றி யாதொன்றும் அறிந்திராத பேராயர் அவனது கையில் அதனை கொடுத்தார். அந்த நபர் அதனை வாங்கி பார்த்துக் கொண்டிருக்கின்ற போது பேராயர் சற்று ஓய்வெடுப்பதற்காக கட்டிலில் படுத்தார். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அந்த சிலுவையும் தங்கச் சங்கிலியும் மேசையின் மீது காணவில்லை. அவன் பெரிய திருடனே என பேராயர் தீர்மானித்துக் கொண்டார். தனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றத்தை இருளில் கிடைத்த அடியைப் போன்று எவரோடும் பேசாமல் மறைமுகமாக வைத்திருந்தார்.

ஒரு மாதத்திற்குப் பின்னர் திருவல்லா திருமூலபுரத்தில் கதாநாயகன் வாழ்ந்து கொண்டிருந்த ஆயரகத்தில் ஒருவன் சென்று ஆயரின் கரங்களை முத்தம் செய்தான்.

பேராயர் : நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

அவன் : நான் (இந்த) இடத்திலிருந்து வருகிறேன். எங்களது பங்கில் நடந்த வாழ்த்துக் கூட்டத்தின் போது ஆயர் அவர்களுக்கு தங்கச் சிலுவையும் மாலையும் பரிசாக வழங்கியதை நீங்கள் நினைவு கூறுகிறீர்கள் அல்லவா!

பேராயர் : நான் அதனை மறக்கவில்லை. நான் நினைவில் கொண்டுள்ளேன். அதைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

அவன் : நான் தான் அன்று ஆயரின் அறையிலிருந்து அந்த மாலையையும் சிலுவையும் வாங்கியவன். நீங்கள் தூங்கத் துவங்கியதனால் உங்களை அழைத்து தொல்லை செய்ய வேண்டாம் என்று நான் அதனை எனது வீட்டிற்கு எடுத்துச் சென்றேன். நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள் என எனக்குத் தெரியும்.

பேராயர் : பரவாயில்லை உண்மை நிலை என்ன எனக்கூறு.

அவன்: விலை குறைந்த சிலுவையும் மாலையும் ஆயர் அவர்களுக்கு அன்று அன்பளிப்பாக எங்களது ஆலயத்திலிருந்து தந்ததை எண்ணி நான் வருந்தினேன். எனவே நான் எனது சொந்த செலவில் மீண்டும் அதன் இரு மடங்கு தங்கத்தை சேர்த்து புதிதாக செய்ய வைத்தேன். அதனை மீண்டும் செய்வதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது. நீங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இப்போது அந்த சிலுவையும் மாலையையும் நான் கொண்டு வந்துள்ளேன்.

இதை கூறி அவர் சிலுவையும் மாலையையும் பேராயரின் கழுத்தில் அவர் அணிவித்தார். இதனால் மகிழ்வுற்ற பேராயர் இவ்வாறு கூறினார். “நன்று நல்ல திருடனே! உன்னையும் உனது குடும்பத்தையும் உனது பங்கையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!

சிலுவையும் கிரீடமும்

மறுஒன்றிப்பு இயக்கத்தின் துவக்கக் காலத்தில் அதற்கு எதிரான பல கூட்டங்களும் உரைகளும் பல இடங்களில் வைத்து நடத்தப்பட்டன. அக்கூட்டத்தில் கத்தோலிக்கரல்லாதவர்களின் மையங்களில் வைத்து நடந்த கூட்டம் ஒன்றில் முக்கிய குரு ஒருவர் மறுஒன்றிப்பு இயக்கத்தை ஏளனப்படுத்தி ஒரு உரையை நிகழ்த்தினார். அதனால் மறுஒன்றிப்படைந்த பொதுநிலையினரோடு கீழ்க் குறிப்பிடும் வினாவை அவர் எடுத்துக் கூறினார்.

அன்புக்குரியவர்களே!

உரோமைத் திருச்சபையில் இணைகின்ற ஆயர்களுக்கு பிரம்மாண்டமான ஆயரகமும் அழகிய வாகனமும் அறுசுவை மிகுந்த உணவும் கிடைக்கும். அருள் தந்தையர்கள் இணைந்தால் மாதந்தோறும் திருப்பலிக்கான பணமும் ஊதியமும் கிடைக்கும். ஆனால் அய்யோ பாவமே பொதுநிலையினரே! நீங்கள் சேர்ந்தால் உங்களுக்கு என்ன கிடைக்கும்!

இந்த கேள்வியை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பொதுநிலையினர் சகோதரன் உடனடியாக கூட்டத்தில் எழும்பி நின்று தனது கழுத்தில் அணிந்திருந்த சிலுவையைப் பிடித்துக் கொண்டு உரத்தக் குரலில் இவ்வாறு கூறினார். அருட்தந்தை அவர்களே எங்களுக்கு ஒரு சிலுவை கிடைக்கும்.

இதைக் கேட்ட குருவானவர் சிறிது நேரம் மௌனமாக நின்ற பின்னர் தனது மறையுரையின் மையக்கருத்தை மாற்றியமைத்தார். சகோதரன் வழங்கிய பதிலின் அர்த்தத்தை அக்குருவானவரும் அவரது தோழர்களும் சரியாக உணர்ந்து கொண்டனர். கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்தால் இந்த உலக வாழ்வில் சிலுவையும் விண்ணுலகில் கிரீடமும் கிடைக்கும் என்பதே அந்த பொதுநிலையினர் சகோதரன் அன்று கூறியதன் அர்த்தம்.

யாக்கோபாயத் திருச்சபையின் சிறந்த மறையுரையாளரான அந்த குருவானவர் கத்தோலிக்க திருச்சபையை பற்றி சரியாக கற்றதன் வழியாக சில மாதங்களுக்குப் பின்னர் திருவனந்தபுரம் பேராயரகத்தில் வந்து பேராயர் முன்னிலையில் நம்பிக்கை உறுதிமொழியை எடுத்துரைத்து கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்தார்.

 


Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை