குருவானவர்கள் பலிபீடத்தை முத்தமிடுவது ஏன்?
குருவானவர்கள் பலிபீடத்தை முத்தமிடுவது ஏன்?
1. ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக உலக மதங்கள் ஒவ்வொன்றிலும் புனிதமான மற்றும் புனிதத்திற்குரிய பொருட்களை
முத்தமிடுதல் பழமையான ஒரு செயலாகும். பழங்கால கலாச்சாரத்தில் முத்தமிடுதல் என்பது
மதிப்பு வழங்குதல் மற்றும் வாழ்த்து கூறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. “தூய முத்தம்
கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு
வாழ்த்துக் கூறுகின்றன.” (உரோமையர் 16 :16)
2.
பலிபீடம்
கிறிஸ்துவின் உடனிருப்பின் அடையாளமாக உள்ளது. கத்தோலிக்க திருஅவையில் நற்கருணை
என்னும் தியாகப்பலியானது பலிபீடத்தில் நிறைவேற்றப்படுகிறது. பலிபீடம் கிறிஸ்துவின்
உடனிருப்பை எடுத்துக்காட்டுவதுடன் திருச்சபையின் மூலைக்கல்லாகவும் உள்ளது. “திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய்
இருக்கிறீர்கள்.” (எபேசியர் 2: 20)
3.
பலிபீடத்தை
முத்தமிடுவதன் மூலம் அத்தூய பகுதிக்கு நாம் பயபக்தியோடு மரியாதையை வெளிப்படுத்தும்
நிலையிலும் வணக்கத்தை செலுத்துவதற்கு அடையாளமாகவும் முத்தமிடுகிறோம்.
4.
பலிபீடங்களில்
புனிதர்களின் நினைவுச் சின்னங்களை நிறுவுவது வழக்கம். பலிபீடத்தை முத்தமிடுவதனால் அந்தப்
புனிதர்களை ஏற்றுக்கொள்ளவும் அவர்களுடைய பரிந்துரையை வேண்டவும் செய்கிறோம்.
5.
திருச்சபையின்
துவக்கத்தில் சித்திரவதை காலங்களில் காற்றக்கொம்பு (Catacomb)
எனப்படும் தரை தளத்திற்கு கீழ் பகுதியில் உள்ள மறைசாட்சிகளின் கல்லறைகளுக்குள்
திருப்பலி நடைபெற்றன. அடக்கம் செய்யப்பட்ட இத்தகைய நபர்களின் கல்லறைகளின் மேலே
வைக்கப்பட்ட கற்களின் மேல் வைத்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அந்த மறைசாட்சிகளைகளை
நினைவுகூர்வதன் அடையாளமாக பலிபீடத்தையும் முத்தம் செய்கிறோம்.
6.
இது
கீழ்ப்படிதல் மற்றும் பணிவின் அடையாளமாகும். கிறிஸ்துவுக்கு முழுமையாக
கீழ்படிவதாகவும் அவருடைய முன்னிலையில் பணிவாக சரணாகதி அடைவதாகவும் புரிந்து கொள்ள
வேண்டும். இதனில் கிறிஸ்து பலிப் பொருளாகவும் பலியாகவும் மாறுகின்றார். “அச்சத்தோடு
ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்!
அவர்முன் அக மகிழுங்கள்! (திருப்பாடல் 2 : 11 – 12)
7.
இது ஒரு
அன்பின் அடையாளம். மேற்கு நாடுகளில் திருமணத்தின்போது மணமகனும் மணமகளும் ஒருவரை ஒருவர்
முத்தமிடும் வழக்கம் உள்ளது. அவ்வாறு முத்தமிடுதலுக்கு தன்னையே கொடையாக வழங்குதல்,
தன்னையே தானமாக வழங்குதல் மற்றும் தன்னையே வெறுமையாக்குதல் என்ற அர்த்தங்கள்
உள்ளன. இந்த கருத்து அடிப்படையில் பலிபீடத்தில் தன்னையே ஒப்புக்கொடுத்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவையும் நாம் முத்தமிடுகிறோம்.

Comments
Post a Comment