மதர் மேரி கல்லறய்க்கல் DM மொழிந்தவை - 99

 

தர் மேரி கல்லறய்க்கல் DM மொழிந்தவை


 

1.        கிறிஸ்துவின் மீட்புத் திட்டத்தில் பங்கு பெறும் பணிக்காக அழைக்கப்பட்டிருக்கும் சிறு சமூகமே மேரிமக்கள் துறவு சபை.

2.        வாய்ப்புள்ள போதெல்லாம் எந்த நபரிடமும் இறைவனைப் பற்றிக் கூறும் பழக்கம் நமக்கு வேண்டும்.

3.        கத்தோலிக்கத் திருச்சபையில் மீட்புப்பணியைத்  தொடர நாமே இன்னொரு கிறிஸ்துவாக மாற வேண்டும்.

4.        'நான் ஒரு மிஷனறி' என்ற விழிப்புணர்வோடு நம்முடன் தொடர்புகொள்வோரை இறைவன்பால் இணைப்பதே மறைப் பணியின் நோக்கம்

5.        கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள தனிப்பட்ட அன்பே நம் மறைப்பணியை அளவிடும் அளவுகோல்.

6.        இறைவனோடு தனிமையில் உறவாடாமல் நாம் ஒருபோதும் வெற்றிவாகை சூடுதல் இயலாது.

7.        தியானம் செய்ய வேண்டுமெனின் உடலாலும் உள்ளத்தாலும் மௌனம் கடைபிடிக்கவேண்டும்.

8.        பிறரன்பில் வளரவும் மெசியாவின் மறையுடலை வளர்க்கவுமே இறைவன் நம்மை மறைப்பணிக்காக அழைத்துள்ளார்.

9.        வீடுகளை சந்திப்பதன் வழியாக செய்யும் நற்செய்தி அறிவிப்பே மேரிமக்களின் முக்கிய மறைப்பணி.

10.   இறையன்னையைப் போன்றே அருட்சகோதரிகளும் ஒவ்வொரு நற்கருணைப் பேழையாகத் திகழவேண்டும்.

11.   ஏழைகள் நம்மிடம் வரட்டும் என காத்திராமல் அவர்களைத் தேடிச் சென்று  அன்பும் ஆர்வமும் வெளிக்காட்ட வேண்டும்.

12.   சூரியகோளத்தைச் சுற்றிப் பூமி சுழல்வது போல நற்கருணை நாதரை மையமாக்கி அன்பின் செபங்கள் உருவாக வேண்டும்.

13.   காலையில் கட்டிலில் தீப்பற்றி எரிந்தாற் போன்று, விரைவில் இறைவன் என்னை அழைக்கின்றார் என்ற எண்ணத்தோடு எழல் வேண்டும்.

14.   திருப்பலியை விடச் சிறந்தது இவ்வுலகில் வேறில்லை. திருப்பலிக்காக தன்னையேத் தயாரித்தல்  மெசியாவின் மணமகளுக்கு கட்டாயம் ஆகும்.

15.   செபத்திற்கு முக்கியத்துவம் வழங்காத துறவு வாழ்வு கரையோரத்தில்  வீசப்பட்ட மீனுக்கு ஒப்பாகும்.

16.   நன்முறையில் தியானம் செய்ய நல்வாழ்வு வாழல்வேண்டும்.

17.   திருப்பலிக்குப் பின்னர் மதியம் வரை நன்றியறிவித்தலாகவும், மறுநாள் காலை வரை நற்கருணை உட்கொள்ள தயாரிப்பு நேரமாகவும் வேண்டும்.

18.   செபிக்கும் போது நாம் இறைவனோடு பேசுகிறோம். ஆன்மீக நூல்களை வாசிக்கும்போது இறைவன் நம்மோடு பேசுகிறார்.

19.   மரியா, முதல் நற்செய்தி அறிவிப்பாளர் (missionary) ஆவார். அவ்வாறே மேரிமக்கள் நற்செய்தி அறிவித்தலுக்கு முதன்மை வழங்க வேண்டும்.

20.   கரடுமுரடான வாழ்வில் இயேசுவின் மணமகளாகிய அருட்கன்னியர்கள் மணமகனைப்போன்றே சிலுவையில் அறையப்படவேண்டியவள்.

21.   சட்டங்களையும் ஒழுங்குகளையும், அதிகாரிகளையும் கடைபிடித்து மணமகனின் விருப்பம் அறிந்து மணமகள் வாழல் வேண்டும்.

22.   தலைமைக்குக் கீழ்ப்படிதலும், இறைவிருப்பம் நிறைவேற்றுவதும், மனதைக் கட்டுப்படுத்துவதும், எளிய வாழ்வுமே உண்மை பக்தி

23.   துறவி பற்றின்மை கொள்ளல் வேண்டும்.  பொருள்களோடு அதிக நாட்டம் அனைத்து பாவங்களுக்கும் அடிப்படையே ஆகும்.

24.   கயிறால் கட்டப்பட்டப் பறவை  பறக்க இயலாததைப் போல, சிறு பொருட்களை மிதமிஞ்சி விரும்புதல் புண்ணியத்திற்குத் தடையாகும்.

25.   உடல், உள்ளத் தூய்மையைப் பாதுகாக்க அருளடையாளங்களில், திருப்பலியில் பங்குகொள். இடைவிடாமல் வேண்டுதல் செய்வாய்.

26.   புனிதர்களாகிய மரியா, யோசேப்பு இவர்களோடு பரிந்துரை வேண்டலும் திருப்பாடுகளோடு பக்தியும் தூய்மையோடு வாழ்ந்து வளரச் செய்யும்.

27.   கற்புநெறி வாழ்வு நமது உடல் உள்ளத் திறமைகளை முழுவதுமாய்  இறைவனுக்கும் திருஅவைக்கும் அர்ப்பணிக்க உதவும்.

28.   பிறரன்பு நமது இல்லங்களில் நிலைத்து நிற்கும்போது மட்டுமே கற்பு முழுமையாக கட்டிக்காக்கப்படும்.

29.   இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்தவர் இயேசுவை அன்றி, வேறு எவரையும் சொந்தமாக்குவதில்லை; எவருக்கும் சொந்தமாவதும் இல்லை;

30.   ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதலே துறவு வாழ்வுக்குத் தேவை. இல்லையெனில் சிதறச் செய்யும்; இருந்தால் ஒன்றிணைக்கும்.

31.   துறவற வாழ்க்கையில் காணப்படும் இதய ஒற்றுமை நம்மை விண்ணரசின் இறைதூதர்களுக்கு நிகராக்குகிறது.

32.   பிறருக்கு தீங்கு விளைவித்தால், அன்று இரவே தூங்கும் முன்னரே அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

33.   உனது சிலுவையை எவருக்கும் தெரியாமல் நீயே சுமந்து கொள்வாய். அதன் கொடிய வேதனை நீ மட்டும் அறிந்து கொள்வாய்.

34.   தியாகமும் சகிப்புத்தன்மையும், வாழ்வின் இணை பிரியா இரு அம்சங்கள். அவையே இறையழைத்தலின் அம்சங்களும்.

35.   நமது இல்லங்களில் ஒலியாகும் செபங்கள் நம்மை கிறிஸ்துவில் மறுவுருவாக்க வேண்டும்.

36.   தேவையற்ற பயணங்களையும் விழாக்கால இரவுகளையும் விவேகத்தோடு கட்டுப்படுத்துவோம்.  

37.   புனித பிரான்சிஸின் இறை நம்பிக்கையும் எளிய வாழ்வும் வறியோர் மீது கொண்ட அன்புமே மேரிமக்கள் துறவு சபையின் உயிர்நாடி.

38.   நம்மைச் சார்ந்த வறியோர், துயரப்படுவோர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரிடம் நாம் தனிப்பட்ட அன்பு காட்டவேண்டும்.

39.   புதிய மறைப்ணித் தளங்களிலும் புதிய மடங்கள் துவங்கும் போதும் முதலில் கல்வியறிவு இல்லாதோரையும் வறியோரையும் தேடிச் செல்லவேண்டும்.

40.   ஏழைகளுக்கும் துன்ப துயரங்களால் வாடுவோருக்கும் மேரிமக்கள் என்றும் முன்னுரிமை வழங்கவேண்டும்.

41.   பணியாளர்களோடு நீதியும் இரக்கமும் காட்ட வேண்டும். அவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்கவும் வேண்டும்.

42.   ஆதரவற்றவர்களையும் முதியோர்களையும் அன்போடு பாதுகாக்க வேண்டும்.

43.   ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைந்திட வழிகாட்ட வேண்டும்.

44.   நோயால் அவதிப்படுவோருக்கு நல்ல மருத்துவ உதவி கிடைக்க உதவ வேண்டும்.

45.   அமைதியான வாழ்வு நிலையற்றோருக்கு அமைதியின் வழி காட்டுதல் வேண்டும்.

46.   மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் நாம் கடந்து சென்று மக்களுக்குத் தேவையான வகையில் ஆறுதல் வழங்க வேண்டும்.

47.   நமது உடன் பணியாளர்களுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுக்கவும் இரு வாரங்களுக்கொரு முறை அரைமணி நேர வகுப்பும், ஆண்டுக்கு ஒருமுறை வாரத்தியானம் நடத்துதல்

48.   திருமணத்திற்காக வீட்டிற்குச் செல்லும் உடன் பணியாளர்களுக்கு இல்லற வாழ்க்கை பற்றி வகுப்புகள் நடத்தி தயார்படுத்தவேண்டும்.

49.   நமது உடன் பணியாளர்களுக்கு ஏதேனும் ஒர்  கைத்தொழில் கற்றுக்கொடுத்தல் வேண்டும்.

50.   பாலர் பவனில் பிள்ளைகளை அவர்களது குற்றங்குறைகள் மற்றும் தவறுகள் பாராமல் அன்போடு அரவணைக்க வேண்டும்.

51.   பாலர் பவனில் பிள்ளைகளை அன்பும் விருப்பமும் வெளிக்காட்டுவது, கிறிஸ்துவோடுள்ள உறுதியான உறவிலிருந்து ஆகும்.

52.   ஏழை எளியோர்களின் கபடற்ற உள்ளங்களில் இடம்பிடிக்க இயலாதவாறு இடைவெளி உருவாக்கும் எச்செயல்களும் நம்மிடையே இருத்தலாகாது.

53.   இறையரசின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி பணியாற்ற  ஆர்வமுடைய  மேரிமக்களே நாமாக  இருத்தல் வேண்டும்.

54.   மனிதனுள் இறைவார்த்தையை விதைத்து, தியாகம், செபம் எனும் நீர்ப் பாய்ச்சி, அருளடையாளங்கள் எனும் உரமிட்டு வளர வைப்போர் மறைப்பணியாளர்களே ஆவர்.

55.   அசிசியின் புனித பிரான்சிசைப் போல தியாகம் பரிகாரச் செயல்கள் மற்றும்  ஏழ்மை எனும் வாழ்க்கைச்சான்றால் மறையுரையாற்றும் மறை பரப்பாளர்களாக மேரிமக்கள் திகழவேண்டும்.

56.    கன்னியர் மடங்கள் அனைத்தும் ஆன்மீகத்தின் விளைச்சல் நிலமாக இருத்தல் வேண்டும்

57.   தூய இறையன்னையின் மக்களாகிய நாம் குழந்தைகளின் மனநிலையோடு ஒவ்வொரு நாளும் நோக்கத்தோடும் செபம் செய்யவேண்டும்.

58.   எப்போதும் சிறு செபங்கள் சொல்லிக் கொண்டே நடக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இறைவனின் உடனிருப்பில் வாழலாம்.

 

59.   திருப்பலி, சிலுவைப்பலி என்பது பற்றியும் அதற்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் திரு உடைகளின் பொருள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.

60.   தியான நிலையில் செபம் செய்து, இறைவிருப்பம் அறிந்து, அவரோடு அன்புறவு கொண்டு, அதன் பிரதிபலிப்பாக தம்மைத்தாமே இறைமக்களுக்கு அர்ப்பணம் செய்யத் துடிக்கும் நல்ல உள்ளமும் ஆர்வமும் சகோதரிகள் உருவாக்க வேண்டும்.

61.   நாம் செய்யும் செபங்கள் திருச்சடங்குகள் அன்புச் செயல்கள் போன்றவற்றால் மறு உருபெற்று, 'வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார்' என்ற வகையில் நமது வாழ்க்கை அமைய வேண்டும்.

62.   நாம் கிறிஸ்துவைப் போல் உருமாறி, பிறருக்கு கிறிஸ்துவை வழங்க வேண்டும்.

63.   நமது ஒவ்வொரு நாள் செயல்களும் தேவ நற்கருணையை மையமாகக் கொண்டு அமைய வேண்டும்.

64.   அனைவரும் செபமாலை அணியவேண்டும்; நாள்தோறும் இணைந்து ஜெபமாலை ஒப்புக்கொடுக்கவேண்டும்

65.   செபமாலை செபிக்கும் போது மரியாவின் தாழ்ச்சி, பிறரன்பு, ஏழ்மை, சகிப்புத்தன்மை, சாந்தம் போன்ற நற்பண்புகள் தமதாக்கிக்கொள்ள முடியும்.

66.   பயண வேளைகளிலும் செபமாலை செபிப்போம்.

67.   "இதோ நான் ஆண்டவரின் அடிமை" என்ற மனநிலையோடு அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவும் துன்ப துயரங்களை பொறுமையோடு சந்திக்கவும் வலிமையுடையவராக வேண்டும்.

68.   இறையன்னையின் மேலுள்ள பக்தி நம்மை இயேசுவோடு இணைக்கிறது.

69.   மரியன்னையின் அனைத்து திருவிழாக்களும், நோன்பு, உபவாசம், ஒறுத்தல்கள் என்றிவற்றைக் கடைப்பிடித்து சிறந்த முறையில் நல்ல ஆயத்தத்தோடு கொண்டாட வேண்டும்.

70.   நமது தனிப்பட்ட வாழ்க்கையில் தூய கன்னிமரியைப் பின்பற்றுவதால் சமூக வாழ்க்கையிலும் மறைபரப்புத்தளங்களிலும் மக்களை இயன்றவரை மரியன்னை பக்தியில் வளரச்செய்ய வேண்டும்.

71.   அருட்சகோதரி கிறிஸ்துவின் மணமகளே ஆவார்.

72.   கரடுமுரடான இவ்வாழ்வில் கிறிஸ்துவின் மணமகள் கிறிஸ்துவைப்போன்று சிலுவையில் அறையப்பட வேண்டும்.

73.   சட்டங்களும் அதிகாரிகளின் ஆணைகளும் வாயிலாக தமது மணமகனின் விருப்பம் மணமகள் புரிந்து கொண்டு வாழவேண்டும்.

74.   எத்தகைய வறுமையிருந்தாலும் இறை பராமரிப்பில் நம்பிக்கை வைக்கும் மனநிலை அருட்சகோதரிகளிடம் அமையவேண்டும்.

75.   ஏனோ தானோ என்ற மனநிலை துறவியருக்கு தகுந்ததல்ல. சிறிய காரியங்களிலும் இறைவிருப்பம் கண்டு அதற்கு கீழ்ப்படிந்து அருட்சகோதரிகள் செய்ய வேண்டும்

76.   இரவு சுயசோதனைக்குப் பிறகு காலை திருப்பலி முடியும் வரை இறை ஒன்றிப்பின் நிமிடங்கள் என்பதால் அனைவரும் மவுனத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும்.

77.   அனைத்து காரியங்களிலும் பொறுப்பாளர்களிடம் அனுமதி கேட்ட பிறகு தான் செய்யவேண்டும்.

78.   திருச்சபைத் தலைவர்கள், முதியோர்கள், குருவானவர்கள் இவர்களோடு மதிப்பும், கீழ்ப்படிதலும் இருத்தல் வேண்டும்.

79.   சரியான கீழ்ப்படிதலுக்கு கீழ்ப்படிதல் முழுமையானதாக இருத்தல் வேண்டும்.

80.   சரியான கீழ்ப்படிதலுக்கு கால தாமதம் இருத்தலாகாது.

81.   சரியான கீழ்ப்படிதலுக்கு மகிழ்ச்சியோடு கீழ்ப்படிய வேண்டும்.

82.   சரியான கீழ்ப்படிதலுக்கு நிலையானதாக இருத்தல் வேண்டும்.

83.   சரியான கீழ்ப்படிதலுக்கு நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும்.

84.   துறவி தமது உள்ளத்தில் இறைவனுக்கு மட்டும் இடம் கொடுத்து சுதந்திரமாக வாழவேண்டும்.

85.   கற்பை பாதுகாப்பதற்கு ஐம்புலன்களை அடக்கி வாழ்வது மிக அவசியம்.

86.   ஒன்றும் இல்லாத நமது நிலையைப்பற்றி புரிந்து கொண்டு, இறைவனில் முற்றிலும் அடைக்கலம் வைப்பவரே ஏழையரின் உள்ளத்தோர்.

87.   இறையன்பின் முழுமையிலேயே ஏழ்மை என்னும் வார்த்தைப்பாடு நிறைவேற்றப்படுகின்றது.

88.   எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இறைபராமரிப்பில் நம்பிக்கை வைத்து, தனிப்பட்ட முறையிலும், சமூகமாகவும் உள்ளத்தில் நாம் மகிழ வேண்டும்.

89.   ஒவ்வொரு அருட்சகோதரியும் அயராது உழைப்பதில் மகிழவேண்டும்.

90.   புனித பிரான்சிஸ் அசிசியாரைப் போல் நாமும் ஏழ்மையைக் கடைபிடிப்பதில் ஆர்வம் காட்டவேண்டும்.

91.   கிடைப்பதெல்லாம் சேமித்து வைக்காமல், "இது எனக்கு தேவையா? இது இல்லாமல் எனக்கு வாழ இயலுமா?" என்று நம்மோடு நாமே கேட்கவேண்டும்.

92.   நமக்கு பயன்படுத்த கொடுக்கப்பட்டுள்ள பொது பொருட்களைக் கவனமாக பயன்படுத்தவேண்டும்; பாதுகாக்க வேண்டும்.

93.   பல விதமான பொருட்கள் இருந்தால் "அவை பிறருக்கு நல்லது” என்ற மனநிலை கொள்ள வேண்டும்.

94.   ஒருவரோடு ஒருவர் அன்பில் ஒன்றிப்புடன் வாழ நாம் குழந்தை மனம் பெற்றிருத்தல் வேண்டும்.

95.   அனைவரையும், அவர்கள் எந்த நிலையில் உள்ளார்களோ அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும். 'இது என் குடும்பம்' என்ற மனநிலையோடு அனைவரும் செயல்பட வேண்டும்.

96.   'நான் அன்பு செய்கின்ற இயேசு அனைவரிலும் வசிக்கின்றார்' என்ற உணர்வுடன் பிறரை மதித்து அன்போடு உதவ வேண்டும்.

97.   துன்பங்களும் துயரங்களும் வேதனைகளுமே நம்மை விரைவில் இறைவனோடு இணையத் தூண்டுகின்றன.  

98.   சகிப்புத்தனமையும் தொண்டாற்றும் எண்ணமும் துறவியின் வாழ்வில் இல்லையெனில் அது துறவறமே அல்ல.

99.    பிறரது ஆளுமைகளை மதித்து அவர்களது தவறுகளை மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும், வேண்டும்.

 

 

 

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை