கண்ணீர் அஞ்சலி

 


மொழியறியா

இடமறியா நாட்டுக்கு

புலம் பெயர்ந்து வாழ்கையில்

எனைப் பெறாத் தாயாய்

ஏற்றுக்கொண்டாய்!

 

ஈரிரு அகவையில் நற்றாயை

நான் இழக்கையில்

யான் பெறா அன்னைப் பாசத்தை

உன்னுள் கண்டேன்.

வியந்துணர்ந்தறிந்தேன்.

 

என்னே உன் பாசம்!

என்னே உன் அரவணைப்பு!

என்னே உன் கரிசனை!

என்னே உன் வழிகாட்டுதல்கள்!

 

உன்னை யென்னன்னையாய்

என்னை யுன்புதல்வனாய்

கொண்டதுவே பாசப் பிணைப்பு

 

பிறப்புக்கொரு நேரம்!

இறப்புக்கொரு நேரம்!

கூடுகைக்கொரு நேரம்!

பிரிவுக்கொரு நேரம்!

உறவுக்கொரு நேரம்!

பூசலுக்கொரு நேரம்!

அன்புக்கொரு நேரம்!

பகைமைக்கொரு நேரம்!

 

பாசமிகு உரையாடல்கள்

எழுதிய சொற்கள்

தயாரித்த உரைகள்

ஊட்டிய உணவுகள்

வழங்கிய உதவிகள்

உடன் பயணங்கள்

யாவுமே என் நெஞ்சில்

பசுமரத்தாணியாய் பதிந்தனவே!

 

என் திருப்பணிகளில்

இணைந்து பணியாற்றிட

விரும்பினாயே!

நீ முன்மொழிந்த சொற்றுருக்கள்

என்னுரைகளில்

கரவொலிக்குத் தூண்டின.

 

நான் சுட்டியப் பாக்களை

தெளிவாய் இசையோடு

இனிமையாய் சூழலுக்கொத்து

அரங்கேற்றினாயே!

 

என் பதில் மொழிகளுக்காய்

பலமுறை காத்திருந்தாயே!

மண்ணில் நீ அணையின்

விண்ணில் சுடர்வாய்

என்பது திண்ணம்.

 

உன்னன்புகளுக்குக்

கைமாறாய் யானென் செய்வேன்?

நன்றிக்கடனாய் யானென் செய்வேன்?

உன்னான்மா இறைபதம் அடைய

வேண்டுவதன்றி வேறேதும் உளவோ?

 

நீத்தோராகுமுன்

ஒருமுறையேனும்

சந்திக்கக் கெஞ்சிய  

உன் பேரவாவை

என்னால் நிறைவுறச்

செய்ய முடியவில்லையே

எனக் கண்ணீர்த் துளிகளை

வார்த்து வருந்துகிறேன்.

 

உனைச் சந்திக்க

முயற்சிகள் மேற்கொண்டும்

தடையாயின நெருப்புக்கள் பல.

அந்நெருப்புக்களின் தாகம் தணிய

இறைவனை மன்றாடுகிறேன்.

 

உன்னிமைகள் மூடுமுன்

உனைக் காணா என் விழிகள்

விண்ணில் உன்னைக் கண்டு

நால்விழிகளும் கூடி

மகிழ்வதே என் எதிர்பார்ப்பு!

 

 

 

மரிய அருளன்

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை